Tuesday, June 22, 2010

காளியின் அருள் பெற்ற காளிதாசன் (பகுதி - 1)

காளியின் அருள் பெற்ற காளிதாசன் (பகுதி - 1)
கவிரத்ன காளிதாஸன்
காளிதாசன். நிகரற்ற ஒரு வடமொழிக் கவி. சிறந்த நாடகப் புலமை வாய்ந்தவர்.
ஷேக்ஸ்பியர், வேர்ட்ஸ்வொர்த் போன்ற தலைசிறந்த படைப்பாளிகளுக்கும் மேலானவர். கி.பி. 1600களிலேயே இவரின் படைப்புகள் ஜெர்மனி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.(சென்ற பதிவில் வரப்ரஸாதியாக விளங்கும் காளி தேவியைப் பற்றி பார்த்தோம். காளியின் அருள் பெற்ற பலரில் சிறந்தவராக விளங்கும் காளிதாசனைப் பற்றி காண்போம்.)
இவ்வளவு புகழ்வாய்ந்த காளிதாசன் ஆரம்பத்தில் ஒரு அறிவுத் திறன் இல்லாத மூடனாக இருந்து, பின் காளியின் அருளால் கவித் திறன் பெற்றவர்.
காளிதாசன் வாழ்க்கையே மிகவும் சுவாரசியம் வாய்ந்தது. அவரின் வாழ்க்கை வரலாற்றின் சில சுவாரசியமான சம்பவங்களைப் பார்ப்போம்.
இன்றைய நாட்களில் பாட்னா என்று அழைக்கப்படும் பாடலிபுத்ரா நகரத்தில் ஆடு மேய்க்கும் ஒரு தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
பிறந்ததில் இருந்தே அறிவுத்திறன் மிகவும் குறைவானவராகவே இருந்தார்.சிறுவனாக இருந்தபோது, ஒரு மரத்தின் கிளையின் கடைசியில் அமர்ந்து, கிளை ஆரம்பிக்கும் மரத்தின் பகுதியை வெட்டிக்கொண்டிருந்தார்.
அதாவது, நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார். இச்செயலைக் கண்ட அனைவரும் ஏளனமாகச் சிரித்தனர். ஏனெனில், மரம் வெட்டி முடிந்தால் கீழே விழுவானே என்ற ஏளனச் சிரிப்பு. அதன்படியே, காளிதாசன் மரத்தை வெட்டி முடித்ததும் பொதேர் என்று கீழே கிளையுடனே விழுந்தார். அனைவரும் சிரித்து விலகினர். வாலிப வயதை அடைந்தார்.
சந்தர்ப்பவசத்தால், ஒரு இளவரசியை மணக்க நேரிட்டது. இளவரசியோ அறிவுத் திறன் மிக்கவர். திருமணமான பிறகு இவரின் அறிவற்ற திறனைக் கண்டு மனம் வெதும்பிய இளவரசி, அறிவுச் செறிவுடன் வந்தால் மட்டுமே வாழ்க்கை நடத்தமுடியும் என்று பிரிந்து விட்டார்.
பிரிவுத் துயர் தாங்காத காளிதாசர் இளவரசியை நோக்கி, தான் அறிவு பெறச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டபோது, உஜ்ஜயினி மஹாகாளி தெய்வம் மட்டுமே தங்களுக்கு அறிவை வழங்க முடியும் என்று கூறி சென்றுவிட்டார்.
காளிதாசரும் காளியை அடைந்து அனுதினமும் அறிவுத் திறன் வேண்டி பிரார்த்தனை செய்வார். காளியும் அவரின் தூய்மையான பக்திக்கு இரங்கி, காளிதாசன் முன் தோன்றி, கையில் இரு கிண்ணங்களை வைத்துக்கொண்டு, காளிதாசனிடம் - ஒரு கிண்ணத்திலுள்ள பாயசத்தை அருந்தினால் அறிவு வரும், மற்றொரு கிண்ணத்திலுள்ள பாயசத்தை அருந்தினால் ஆற்றல் வரும், இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள் என்கிறாள். காளிதாசனோ, அறிவும் ஆற்றலும் இரண்டும் வேண்டும் என எண்ணிக்கொண்டு, காளியை நோக்கி, இரண்டில் எது நன்றாக இருக்கின்றதோ அதைக் குடிக்கின்றேன் என்று வெகுளியாகச் சொன்னார். மனமிரங்கிய காளி, காளிதாசனிடம் இரண்டு கிண்ணங்களையும் கொடுக்கிறாள். காளிதாசன் அந்த இரண்டு கிண்ணங்களில் இருந்த பாயசங்களையும் நொடிப்பொழுதில் குடித்துவிடுகின்றார். இப்பொழுது எனக்கு அறிவும் ஆற்றலும் வந்துவிடுமா என காளியை நோக்கிக் கேட்கிறார். சிரித்தபடியே காளியும், அவ்வண்ணமே நடக்கட்டும் என்று வரம் தந்து மறைகின்றாள்.(அம்பிகையின் அருளால் கவிநயம் பெற்ற காளமேகம் பற்றிக் காண இங்கே கிளிக் செய்யவும்.)அருமையான கவிகளை இயற்றும் திறன் பெற்று, மொழியை ஆளும் திறன் பெற்றார் காளிதாசர்.
காளிதாஸர் ஒரு வரகவி. காளிதாஸருக்கு மொழியின் மீதிருந்த ஆளுமை எல்லையில்லாதது. உவமைக்கொரு காளிதாஸன் (உபமா காளிதாஸஸ்ய ) என்பர்.
பல அற்புதக் காவியங்களை இயற்றினார். (ரகுவம்சம், குமாரசம்பவம், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், மேகசந்தேசம் போன்றவை..)
காளிதாசனின் அறிவில் மகிழ்வு கொண்ட உஜ்ஜயினையை ஆண்டுகொண்டிருந்த, அறிவிற்சிறந்த போஜராஜன் தனது அவைப் புலவர்களில் மேலானவராக அமைத்துக் கொண்டார்.
நவரத்தினங்கள் என புகழ் பெற்ற ஒன்பது புலவர்கள் போஜராஜனின் அரசவையை அலங்கரித்திருக்கின்றனர். ( 1.தன்வந்தரி, 2.க்ஷபனகர், 3.அமரசிம்ஹன், 4.ஷங்கு, 5.வேதாளபட்டர், 6.கடகார்ப்பரர், 7.காளிதாசர், 8.வராஹமிஹிரர், 9.வரருசி)

டாடம் டடம் டம் டடடம் ட டம் டா:
ஒருமுறை போஜ மஹாராஜா குளிப்பதற்காக செல்லும் போது அரண்மனையிலிருந்த ஒரு பெண் கையிலிருந்த குடத்தை ஓசையெழுப்ப தவற விட்டாள். இந்த சப்தத்தை கேட்ட ராஜா பிறகு அவையில் வீற்றிருக்கும் போது இந்த சப்தத்தை கடைசி அடியாக கொண்டு கவிதை எழுத வேண்டுமென்று போட்டியொன்றை அறிவித்தார்.
அனைவரின் அமைதிக்கு நடுவில் காளிதாசர் எழுந்து கவிதை பாடினாராம்
राजभिषेके जलमाहरन्त्याः
हस्ताच्च्युतो हेमघटो युवत्याः .
सोपान मार्गेण करोति शब्दं
ठाठं ठठं ठं ठठठं ठ ठं ठाः
ராஜபிஷேகே ஜலமாஹரன்த்யா:
ஹஸ்தாச்யுதோ ஹேமகடோயுவத்வா:
ஸோபான மார்கேண கரோதி சப்தம்
டாடம் டம் டடடம் ட டம் டா:


இன்னொரு சமயம் சம்ஸ்கிருத எழுத்துக்களான "க" வரிசையை ஒரே கவிதையில் கொணர முடியுமா என போஜராஜன் கேட்க எழுதியது தான் இது.
का त्वं बाले कान्चनमाला
कस्याः पुत्री कनकलतायाः .
हस्ते किं ते तालीपत्रं
कावा रेखा क ख ग घ
கா த்வம் பாலே காஞ்சனமாலா = யாரது குழந்தை? - காஞ்சனமாலா.
கஸ்யா புத்ரி கனகலதாயா: = யாரோட பெண்? - கனகலதாவின் பெண்.
ஹஸ்தே கிம் தே தாலிபத்ரம் = கையில் என்ன இருக்கின்றது? -
பனையோலை புத்தகம்.
காவா ரேகா க(1) க(2) க(3) க(4) =
அதில் என்ன எழுதியிருக்கிறது? - க(1) க(2) க(3) க(4).
எப்படி அழகாக முடித்திருக்கின்றார் பாருங்கள். இதிலிருந்தே அவரின் கவிதாவிலாசம் தெரிகின்றது அல்லவா?
நானே நீ!
அம்பிகையின் அருளை நேரடியாகப் பெற்றதால், காளிதாசன் அம்பிகையின் ரூபமாகவே கொண்டாடப்படுகின்றார். ஒரு முறை பவபூதி, தண்டி, காளிதாசர் ஆகிய பெரும் புலவர்களிடையே பெரும் போட்டி எழுந்தது. மூவருமே அம்பிகையின் அருள் பெற்றவர்கள். அம்பிகையையே முடிவு சொல்லட்டும் என்று அம்பிகையை மூவரும் அழைத்தனர். அம்பிகையும் தோன்றினாள். போட்டி மிகக் கடினமானது என்றாள். கவிக்கு ஓர் தண்டி, பண்டிதர்க்கு ஓர் பவபூதி என அறிவித்தாள் அம்பிகை. பின் தான் யார் என காளிதாசன் வினவ, காளி "த்வமேவாஹம், த்வமேவாஹம், த்வமேவாஹம் ந ஸம்சய:" என்றாள். நானேதான் நீ - சந்தேகமேயில்லை என்றாள் அம்பிகை. காளியின் அம்சமே என்று கொண்டாடப்படுபவர் காளிதாசன்.
ஸஸேமிரா, ஸேமிரா, மிரா, ரா.ஒரு சமயம் அரசவையில் அனைவரும் அமர்ந்து கொண்டு அளவளாவிக்கொண்டிருந்தபோது, வீரர்கள் சிலர் இளவரசனை அழைத்துவந்தனர்.
இளவரசனைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி. ஏனென்றால், இளவரசன் பிரமை பிடித்தவன் போல ஒரே திசையைப் பார்த்துக்கொண்டு ஸஸேமிரா, ஸஸேமிரா என்று பிதற்றிக் கொண்டேயிருந்தான். அதிர்ச்சி கொண்ட அரசன் என்னவாயிற்று எனக் கேட்க, வீரர்களோ, காட்டில் தனியே சுற்றிக் கொண்டிருந்தவரை அழைத்து வருகின்றோம். அங்கிருந்தே இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார் என கூறினர்.
அரசனுக்கோ பெரும் வருத்தம் உண்டாயிற்று. சிறு வயது முதலே வீரம் நிறைந்த தன் குமாரன் இப்படி பித்துப் பிடித்தவன் போலாகிவிட்டானே? அடுத்த ராஜாவாக வரவேண்டியவன் இப்படி பிதற்றுகின்றானே, வேட்டைக்குப் போய்வருகின்றேன் என்று சொல்லிச் சென்ற ராஜகுமாரன் இப்படி ஆகிவிட்டானே என்று மிகவும் மனம் வெதும்பினான்.
பலவிதமான மருத்துவங்களைச் செய்து பார்த்தும் தீர்வு இல்லை. காலம் கடந்தது. இதற்கு ஒரு சரியான தீர்வு தருபவர் காளிதாசனே என்று நினைந்து காளிதாசனை அழைத்து வந்து விபரம் கூறினான்.
காளிதாசன் இளவரசனைப் பார்த்தார்.
அவனோ, முன்னரைப் போலவே ஸஸேமிரா, ஸஸேமிரா என்றே பிதற்றிக் கொண்டிருக்கின்றான். வேறு எதுவும் அவன் பேசவில்லை. எதைப்பற்றி கேட்டாலும் ஸஸேமிரா என்றே சொல்லிக்கொண்டிருந்தான். ஸஸேமிரா என்றால் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்.
காளிதாசன் காளியை மனதில் நினைந்தார்.
பிறகு, இளவரசனைப் பார்த்து உனக்கு ஒரு கதை சொல்கின்றேன் கேள் என்றார்.
வடமொழி "ஸ" என்னும் எழுத்தில் ஆரம்பித்து இந்தக் கதையைச் சொல்கின்றார்.
ஒரு பெரும் அரசை ஆண்டுகொண்டிருந்த அரசனுக்கு அழகேயுருவான இளவரசன் பிறந்தான். அவனைச் சீருடன் சிறப்புடனும் அறிவும், போர்த்திறனும் இணைந்த ராஜகுமாரனாக அரசன் வளர்த்து வந்தான். அந்த இளவரசன் ஒரு நாள் காட்டுக்கு வீரர்களுடன் வேட்டையாடச் சென்றான். ஒரு சமயம் ஆர்வமிகுதியால், விரைவாக சென்றமையால், வீரர்களை விட்டுப் பிரிந்தான். தனியே சுற்றிக் கொண்டிருந்த இளவரசனை ஒரு பசித்த புலி பார்த்து விட்டது. அந்தப் புலி இளவரசனைக் கொல்ல அவனைத் துரத்தியது. இதனைக் கண்ட இளவரசன் ஓட்டமெடுத்தான்.
இதுவரை சொன்னதும் இளவரசனிடம் ஒரு மாற்றம். ஸஸேமிரா என்று சொல்லிக் கொண்டிருந்தவன் "ஸ" எனும் எழுத்தை விட்டுவிட்டு "ஸேமிரா, ஸேமிரா" என்று புலம்ப ஆரம்பித்தான்.
காளிதாசர், "ஸே" எனும் எழுத்தில் தொடங்கி, கதையைத் தொடர்கின்றார்.

இளவரசன் எங்கு ஓடினாலும், புலி அவனைத் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. இடையில் ஒரு மிகப் பெரும் மரத்தின் மீது ஏறிக் கொண்டான். மரம் ஏறத் தெரியாத புலி அவனை விட மனமில்லாமல் கீழேயே காத்திருந்தது. மரம் ஏறிக் கொண்டிருந்த இளவரசன் மரத்தின் மேலே கரடி ஒன்றைக் கண்டு பயந்தான். அந்தக் கரடியை நோக்கி என்னை ஒன்றும் செய்து விடாதே, உன்னை நாடி வந்துவிட்டேன் என்று கூறினான். கரடியும், என்னை நாடி அபயம் தேடி வந்து விட்டாய் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று உறுதி கூறியது. மனம் தெளிந்த இளவரசன் கரடியின் பாதுகாப்பில் இருந்தான். கீழே பார்த்தால், புலி இன்னமும் காத்துக் கொண்டேயிருக்கின்றது. நேரம் கடந்து கொண்டேயிருந்தது. இளவரசனுக்கோ களைப்பாக இருந்தது. கரடியைப் பார்த்து, நான் சற்று உறங்குகின்றேன், நான் கீழே விழுந்துவிடாமல் நீ பார்த்துக் கொள் என்று சொல்லித் தூங்கிவிட்டான்.


இப்பொழுது இளவரசனிடம் இன்னும் ஒரு மாற்றம். ஸஸேமிரா என்று சொல்லிக்கொண்டிருந்தவன், ஸ & ஸே என்பனவற்றை விட்டு வெறும் "மிரா மிரா" என்று கூற ஆரம்பித்துவிட்டான்.
அடுத்து, காளிதாசர் "மி" எனும் எழுத்தில் ஆரம்பித்து கதையை தொடர ஆரம்பிக்கின்றார்.

கீழேயிருந்த புலி, கரடியைப் பார்த்து, மனிதர்கள் நம் எதிரிகள், ஆகவே இளவரசனை என்னிடம் தள்ளிவிடு, நாம் இருவரும் பாதி பாதி எடுத்துக்கொள்வோம் என்றது. கரடியோ, என்னை அண்டி வந்துவிட்டவனை என்னால் கீழே தள்ள முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டது. நேரம் கடந்தாலும் புலி கீழேயே காத்திருந்தது. இளவரசனுக்கு முழிப்பு வந்தது. கரடிக்கோ களைப்பானது. கரடி இளவரசனை நோக்கி, நான் சற்று நேரம் தூங்குகின்றேன், என்னைப் பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டது. கீழே காத்திருந்த புலி இளவரசனை நோக்கி, எனக்கோ பசி மிகவும் அதிகமாகிவிட்டது. தூங்கிக்கொண்டிருக்கும் கரடியை நீ கீழே தள்ளிவிட்டால், கரடியை நான் சாப்பிட்டு, அதற்கு பதிலாக உன்னை விட்டுவிடுகின்றேன் என்று கூறியது. புலியின் வஞ்சக வார்த்தையில் மயங்கிய இளவரசன், தூங்கிக் கொண்டிருந்த கரடியை கீழே தள்ளிவிட்டான்.
இப்பொழுது இளவரசனிடம் இன்னும் ஒரு மாற்றம். கண்களில் கண்ணீர் வர இளவரசன், தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு ஸ, ஸே, மி எனும் எழுத்துக்களை விட்டு, "ரா, ரா, ரா," என்று பிதற்ற ஆரம்பித்துவிட்டான்.
காளிதாசர் "ரா" எனும் எழுத்தில் ஆரம்பித்து, மறுபடியும் கதையை ஆரம்பித்து, நன்றி செய்தலுக்கு நன்றி செய்யும் குணத்தைப் போற்றவும் செய்து, கூற ஆரம்பித்தார்.

கரடியின் கீழே விழுந்து கொண்டிருந்தபோது, அனிச்சை செயலாய், ஒரு கிளையில் கை பட்டு, அக்கிளையை பிடித்துக் கொண்டு கீழே விழாமல் தப்பித்தது. மேலே வந்து, இளவரசனிடம் உனக்கு உதவி செய்த எனக்கு நீ செய்யும் உதவி இதுதானா எனக் கோபமாகக் கேட்டு, நீ விலங்குகளை விட கேவலமானவன், சிந்திக்கும் செயல் இழந்து பைத்தியமாக ஆவாய் என சாபமிட்டுவிட்டது. சாப விமோசனமாக இன்று நடந்ததை யார் உனக்குச் சொல்கின்றாரோ, நன்றியின் பெருமையை நீ எப்போது உணர்கின்றாயோ அன்று நீ தெளிவடைவாய் என்றும் கூறியது. அது முதல் இளவரசன் ஸஸேமிரா, ஸஸேமிரா என்று சொல்லிக்கொண்டிருக்க ஆரம்பித்துவிட்டான். கீழே காத்திருந்த புலி பசிமிகுதியால் வேறு இடத்திற்குப் போய்விட்டது. கரடியோ இளவரசனை கீழே பத்திரமாக இறக்கிவிட்டு, வீரர்கள் இருந்த பகுதிக்கு கொண்டுவிட்டு சென்றுவிட்டது. வீரர்கள் இவனைப் பார்த்து என்ன நடந்தது எனக் கேட்க, பிரமைப் பிடித்தவனாக "ஒன்றும் இல்லை" என்று பொருள்பட ஸஸேமிரா என்று கூற ஆரம்பித்தான். ஸஸேமிரா ஸஸேமிரா என்று சொல்லிக்கொண்டிருந்த இளவரசனை வீரர்கள் அரசனிடம் சேர்ப்பித்தனர். (இந்தக் கதையின் ஆரம்பத்தை மீண்டும் படியுங்கள். அதில் வீரர்கள் இளவரசனை அரசனிடம் அழைத்துவரும் நிகழ்ச்சி வரும்.)

(நன்றி மறப்பது நன்றன்று - என்று ஐயன் திருவள்ளுவர் கூறிய குறள் தான் இங்கு நினைக்கத் தூண்டுகிறது. திருவள்ளுவரைப் பற்றி காண சென்ற பதிவுக்குச் செல்லவும்.)

இக்கதையைக் கேட்ட இளவரசனிடம் மேலும் நல்ல முன்னேற்றமான மாற்றம். இளவரசன் தன் பழைய நிலைக்கு வந்துவிடுகின்றான். ஸஸேமிரா என்று சொல்லாமல், கண்களில் கண்ணீருடன், நன்றி செய்தலின் அருமைகளை உணர்ந்து கொண்டு, தான் செய்த தவறுக்கு மனம் வருந்தி, காளிதாசனைக் கைகூப்பி வணங்கினான்.
மன்னனிடம் காளிதாசன், இக்கதையில் வரும் ராஜகுமாரன் வேறு யாரும் அல்ல, உன் குமாரனாகிய இந்த இளவரசன் தான் என்று கூறுகின்றார். ராஜகுமாரனின் பொலிவான நிலையில் பார்த்த மன்னன் மனம் மிக மகிழ்ந்து அளவற்ற பரிசுகளை காளிதாசனுக்கு வழங்குகின்றான்.

காளிதாசன் = ஜெயதேவர் - அஷ்டபதி - போஜசம்பு - ஆகியன சம்பந்தமாக படிக்க கீழ்க்கண்ட லிங்க் செல்லுங்கள்.
http://natarajadeekshidhar.blogspot.in/2010/07/2.html- நி.த. நடராஜ தீக்ஷ¢தர்-
செல் : 94434 79572-
எனது முந்தைய பதிவுகள் : தலைப்பின் மீது க்ளிக் செய்தால் விபரம் விரியும்.
தைப் பூச நடனம்,
மோட்சம் தரும் காட்சி (கால கணிதம் - 5 - மோட்ச தீபம்),

Thursday, June 10, 2010

திருவள்ளுவர் கண்ட திருநடனம்,

திருவள்ளுவர் கண்ட திருநடனம் &
திருவள்ளுவர் இயற்றிய மற்றும் ஒரு நூல்

திருக்குறள்.
உலகப் பொதுமறை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட, இரண்டு அடியில் சொல்லப்பட்ட திருக்குறளில் உலக நடப்புகள் அனைத்தையும் முக்காலத்திற்கும் தகுந்த முறையில் இயற்றப்பட்ட தமிழ் மொழியின் மணிமகுடத்தின் மாணிக்கம் போன்றது.
தமிழிலிருந்து அதிக முறை மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்.
மிக அதிகமான உரைகள் எழுதப்பட்டதும் திருக்குறளுக்குத் தான்.
நீதி நூலான திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்கள் ஏதுமில்லை.
பொதுவாக தமிழகத்தில் காலம் காலமாக பக்தி இலக்கியங்களே (தேவாரம் போன்றவை) எளிய மக்களிடம் எளிதாகச் சென்றடைந்துள்ளன.
நீதி நூல்களில் திருக்குறள் மட்டுமே மிக அதிக அளவில் மக்களைச் சென்றடைந்தமைக்கு அதன் எளிய வடிவமைப்பு, அளவிற்கடந்த பொருள் நயம் போன்றவை.
திருக்குறளின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவப் பெருந்தகை.
திருவள்ளுவரைப் பற்றி தமிழ் நாவலர் சரிதையிலும் மற்றும் பல நூல்களிலும் காணக் கிடைக்கப் பெறுகின்றது.
இவர் மயில் ஆர்க்கும் புரம் ஆகிய, அம்பிகை மயிலாக வந்து சிவபூஜை செய்த ஸ்தலமாகிய கபாலீஸ்வரர் ஆலயம் அமைந்த மைலாப்பூரில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது.
ஒரு சமயம், அம்பிகை சிவபெருமானின் ஆடல் திறனை முழுமையாகக் காண உள்ளார்ந்த மன விருப்பம் கொண்டு, அகில உலகும் அலகிலா நாயகனின் ஆடலைக் காணத் திருவுள்ளம் கொண்டு, போட்டி நடனம் ஆட, சிவபெருமானை அழைக்கின்றாள்.
ஆடல் கலைக்கே நாயகனாகிய ஈசன் அந்தப் போட்டியை மனம் விரும்பி ஏற்கின்றார். அம்பிகைக்கும், அரனுக்கும் போட்டி நடனம் தொடங்குகின்றது. ஜகன்மாதாவாகிய அம்பிகையும் ஆடல் கலைக்கே உரித்தானவள்.
தாண்டவம் என்றால் ஆண்கள் ஆடுவது. லாஸ்யம் என்றால் பெண்கள் ஆடுவது.
இருவரின் நடனமும் மிக மும்முரமாக நடக்கின்றது. ஈசனின் ஒவ்வொரு பா(ba)த்திற்கும் அம்பிகை பதில் பா(ba)வம் அளிக்கின்றாள். சரிசமமாக இருவரும் ஆடிக்கொண்டேயிருக்கின்றார்கள்.
இதற்கு ஒரு முடிவே இல்லையா என அனைவரும் ஐயுறும்போது, இந்தப் போட்டி நடனத்திற்கு முடிவாக, முடிவில்லா நாயகனின் காதில் உள்ள குண்டலம் (குழை) ஆட்ட வேகத்தில் கீழே விழுகின்றது.
அந்தக் குண்டலத்தை நாட்டியம் ஆடும் விதத்திலேயே வலது காலால் அந்தக் குண்டலத்தை கீழேயிருந்து எடுத்து, அதை தன் நாவினால் ஈரப்படுத்தி, அந்த வலது காலினாலேயே வலது காது வரை காலைக் கொண்டுவந்து, தன் வலது காதில் குண்டலத்தைப் பொருத்திக்கொள்கின்றார்.
லாஸ்ய நாட்டிய சாஸ்திரப்படி காலைத் தலை வரையில் கொண்டு வர இயலாத அம்பிகை, ஈசன் செய்தது போல் செய்யாமல், தன் தோல்வியை ஒப்புக்கொள்கின்றாள்.
ஈசன் ஆடிய இந்தத் திருநடனம் ஊர்த்வ தாண்டவம் எனப்படும். gymnastics போன்ற கடின பயிற்சி இருந்தால் மட்டுமே காலை காது வரை கொண்டு வர இயலும். இன்றளவும் ஊர்த்வ தாண்டவம் என்பது நாட்டியக் கலையின் உச்ச நிலை தாண்டவமாக இருக்கின்றது.
போட்டி நடந்த இடம், மயிலாப்பூர் அமைந்திருக்கும் சென்னைக்கு அருகாமையிலிருக்கும் திருவாலங்காடு எனும் ஸ்தலம். (காளிகா தாண்டவம்)
இந்தப் போட்டி நடனத்தை திருவள்ளுவரும், தேவர்களும் மற்றும் அனைவரும் கண்டிருந்திருக்கின்றார்கள்.
ஆயினும் இதன் விபரம் அறிய தேவர்கள் திருவள்ளுவரிடம் வந்து இந்த நாட்டியத்திற்கான காரணம் கேட்க, அதற்கு திருவள்ளுவர்,

"பூவிலயனும் புரந்தரனும் பூவுலகைத்
தாவியளந்தோனும் தாமிருக்க - நாவில்
இழை நக்கி நூல் நெருடும் ஏழை அறிவனோ
குழை நக்கும் பிஞ்ஞகன் தன் கூத்து"

என்கின்றார்.

பூவில் அமர்ந்திருக்கக் கூடிய பிரம்மாவும்,
தேவர்களுக்கு எல்லாம் அதிபதியாக விளங்கக் கூடிய இந்திரனும்,
மாபலிச் சக்ரவர்த்திக்காக ஒரு காலை புவியிலும், மற்றொரு காலை ஆகாயத்திலும் அமைத்த மஹாவிஷ்ணுவும்,
இந்தத் தாண்டவத்தைக் கண்டிருக்க,
நெசவுத் தொழிலை மேற்கொண்டிருக்கும் இந்தக் கடையேன் எளியேன் அறியமுடியுமோ,
குழை எனும் குண்டலத்தை நக்கி காதில் அணிந்த, பினாகம் எனும் நாகத்தை அணிந்த ஆடலரசனின் நாட்டியக் கோலத்தை?
என்று மிகவும் பணிவுடன் கூறுகின்றார்.
தேவர்களே வந்து சந்தேகம் கேட்கும் அளவிற்கு அறிவாற்றல் படைத்தவர் திருவள்ளுவர் என்பது இப்பாடல் மூலம் தெளிவாகின்றது.
இந்தப் பாடல்,
திருவள்ளுவர் இயற்றிய ஞான வெட்டியான் எனும் நூலில் காணப்பெறுகின்றது.
ஞானவெட்டியான் சுமார் 1500 பாடல்கள் கொண்டது. திருக்குறளைப் போல் இரண்டு அடியாக இல்லாமல் நான்கடி பாடல்களைக் கொண்டது.
திருவள்ளுவர் ஒரு புலவர் போல் அல்லாமல் சித்தர் வழியில் நின்று யோக சாஸ்திரத்தையும் உரைக்கும் நூலாக ஞானவெட்டியான் கருதப்படுகின்றது.
வெட்டியான் என்றால் காப்பவன், பாதுகாவலன் என்று பொருள்.
அருள் தரும் ஞானத்தை, வெளியேறாமல் காக்கக் கூடியது என்பது ஞானவெட்டியானின் உட்கருத்து.

திருவாலங்காட்டில் உள்ள ரத்ன சபையில் இந்தப் போட்டி நடனம் நடந்ததாக, அந்த ஸ்தல புராணம் கூறுகின்றது.
சிதம்பரத்திலும் இந்த நடனம் நடைபெற்றதாக தில்லை வன மஹாத்மியம் தெரிவிக்கின்றது.
ஒரு சமயம், கயிலையில் சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே உரையாடல் நடக்கும் போது, பொன்னார் மேனியனாக விளங்கும் வடகயிலைநாதன், தென்மதுரைவாழ் அம்பிகையை "காலீ" - கரிய நிறத்தினள் என்று கிண்டல் செய்கின்றார். கோபம் கொண்ட அம்பிகை அதே கரிய வடிவத்தோடு சிதம்பரம் வந்து தில்லை வனத்தைக் காளியாக நின்று காக்கின்றாள்.
தில்லை வனத்தைப் பாதுகாத்த அம்பிகையான காளியுடன் நடராஜர் போட்டி நடனமாடுகின்றார்.
காளி தான் தோற்றதால், வெகுண்டு, சிதம்பரத்தின் வட எல்லையில் கோபத்துடன் அமர, அக்கோலமே இப்பொழுதும் நாம் காணும் "தில்லைக் காளி" வடிவம்.
பிறகு பிரம்மா முதற்கொண்டு அனைவரும் காளியை சாந்தப்படுத்திய பின், அருள்தரும் வடிவமாக, வேதநாயகியாக, நான்கு தலைகளுடன், பொன்நிற தேகம் கொண்டு அமர்ந்த வடிவமே, அதே ஆலயத்தில் அமைந்திருக்கும் "பிரம்ம சாமுண்டி" எனும் "தில்லை அம்மன்" வடிவம்.

தில்லைக் காளியைப் பற்றி எழுத நிறைய இருக்கின்றது. வரப்ரஸாதியாக விளங்குபவள். கஷ்டங்களை நீக்குபவள். ஜெயத்தை வழங்குபவள்.

ஞானவெட்டியான் எனும் நூலில், திருவள்ளுவ நாயனாரின் சரித்திரச் சுருக்கத்தில், ஏலேலசிங்கர், வாசுகி போன்றவர்களுடன் திருவள்ளுவ நாயனார் நிகழ்த்திய அற்புதங்கள் உரைக்கப்படுகின்றது.
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- 94434 79572
- mailto:yanthralaya@yahoo.co.in
எனது முந்தைய பதிவுகள் : தலைப்பின் மீது க்ளிக் செய்தால் விபரம் விரியும்.
தைப் பூச நடனம்,
வியதீபாத தரிசனம்,
மார்கழி மஹோத்ஸவம்,
காசி யாத்திரை,
ஆழ்வார்கள் அருளிய அமுதம்,
தியாகராஜர் ஆராதனை,
சாளக்ராம வழிபாடு,
கூடாரைவல்லி,
நால்வர் காட்டிய நல்வழி,
சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்,
கவிக்கோ(ர்) காளமேகம்,
அதிசய அற்புத பாடல்கள்,
பாம்பு இயற்றிய பாடல்,
நடராஜ பத்து,
திருப்பல்லாண்டு,
மஹா சிவராத்திரி,
வசந்த நவராத்திரி,
நவாவரண பூஜை,
கதம்பம்,
கால கணிதம் - 1, கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?), கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை), கலிதோஷத்தினை நீக்கிய கணிதம் (கால கணிதம் - 4), மோட்சம் தரும் காட்சி (கால கணிதம் - 5 - மோட்ச தீபம்),
கால கணிதம் (1,2,3,4 & 5)

Tuesday, June 1, 2010

ஆனித் திருமஞ்சனம்சிதம்பரம்.
ஸ்ரீ நடராஜ ராஜர் என்றும், எப்பொழுதும் திருநடனம் புரிந்துகொண்டிருப்பதால், தினம் தினம் திருநாள் தான், தினம் ஒரு உத்ஸவம் தான்.
சிதம்பரத்தில் இரண்டு உத்ஸவங்கள் மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும்.
1. ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம்
2. மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் (விபரம் தெரிய இந்தத் தலைப்பைக் க்ளிக் செய்யவும்)

ஒரு வருடத்திற்கு இரண்டு அயனங்கள் உண்டு. ஒன்று தக்ஷிணாயணம் மற்றொன்று உத்தராயணம்.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜ ராஜர் இரண்டு அயனங்களிலும் திருவிழா காண்கிறார்.
(http://natarajadeekshidhar.blogspot.com)

ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம் - கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி (29.06.2019 - சனிக் கிழமை காலை 08.00 மணிக்கு மேல் 09.00 மணிக்குள், கடக லக்னத்தில் துவஜாரோஹணம்) அதை தொடர்ந்து, உத்ஸவ யாகசாலையில் காலை மாலை இரு வேளைகளிலும், மிகச் சிறப்பு வாய்ந்த ஹோமங்கள் செய்து, ஒவ்வொரு நாள் இரவிலும் மற்றும் காலையிலும், உத்ஸவ நாயகர்களாகிய ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - நாதஸ்வர இசை முழங்க வீதி வலம் வந்து காட்சி நல்குவார்கள்.

ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி சிறப்பு வாய்ந்த வாகனங்களில் வலம் வருவார்.

தங்கத்தினாலான மஞ்சம் (29.06.2019 -  சனிக் கிழமை),
வெள்ளி சந்திர பிரபை (30.06.2019 - ஞாயிற்றுக் கிழமை),
தங்க சூர்ய பிரபை (01.07.2019 - திங்கட் கிழமை),
வெள்ளி பூத வாகனம் (02.07.2019 - செவ்வாய்க் கிழமை),
ஸகோபுரம் எனும் தெருவடைச்சான் என்று அழைக்கப்படக்கூடிய ரதம் (கோபுர வடிவத்திலான, தெரு முழுவதும் அடைத்து வரக்கூடிய விதத்தில் அமைந்தது) (03.07.2019 - புதன் கிழமை),http://natarajadeekshidhar.blogspot.com
வெள்ளி யானை வாகனம் (04.07.2019 -  வியாழக்  கிழமை),
தங்க கைலாய மலையெடுத்த வெள்ளி ராவணன் வாகனம் (மிக அற்புதமான அமைப்பு, ராவணன் உருவம் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒன்பது தலைகளும், கையில் ஒரு தலையை வீணையின் தலைப்பாகமாக அமைத்து காம்போதி ராகம் மீட்டும் வகையில் அமைந்தது) (05.07.2019 - வெள்ளி) என்று முறையே வலம் வந்து அருள்பாலிப்பார்.
எட்டாம் திருநாளில் (06.07.2019 - சனிக் கிழமை) பிக்ஷாடனராக வலம் வருவார்.
ஒன்பதாம் திருநாள் (07.07.2019 - ஞாயிற்றுக் கிழமை) - தேர் உத்ஸவம்.
பத்தாம் திருநாள் (08.07.2019 - திங்கட் கிழமை) ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம்.
மறுநாள் (09.07.2019 - செவ்வாய்க் கிழமை) - முத்துப்பல்லக்கில் வீதியுலா.

தேர்த் திருநாளின், 07.07.2018, ஞாயிற்றுக் கிழமை,  அதிகாலை 05.00 மணியிலிருந்து 05.30 மணிக்குள்,  மிதுன லக்னத்தில், ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ ராஜர் அழகுமிகு அரிய அணிமணிகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட திருக்கோலத்தோடு யாத்ராதான நிகழ்ச்சியாக - சித்ஸபையின் கனகசபையிலிருந்து தேருக்குப் புறப்படும் திருக்காட்சி நடைபெறும்.
http://natarajadeekshidhar.blogspot.com

தேர் - மிக அழகிய வடிவம் வாய்ந்தது. மிக உயர்ந்த தோற்றம். ரதலக்ஷணம் எனும் சாஸ்திரப்படி சக்கரங்கள், ஆர், தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு, கிடுகு முதலிய உறுப்புகளால் ஆனது. தேரிலுள்ள மரசிற்பங்கள் மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டது. தேரின் நடுவில் உள்ள ஊஞ்சலில் ஸ்ரீ நடராஜர் அமர்த்தப்படுவார்.

தேரில் அமர்த்தியபிறகு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற பிறகு, சேந்தனாரின் திருப்பல்லாண்டு பாடல்கள் இசைக்க, வேத கோஷங்கள் முழங்க, திருமுறைகள் ஓதப்பட, நாதஸ்வரம் இன்னிசைக்க, உற்சாக கோஷங்கள் நிரம்ப, உலுக்கும் மரம் எனும் நெம்புகோல் வடிவம் தேரை உந்தித் தள்ள, உத்ஸவத்தின் மிக முக்கிய கட்டம் இனிதே தொடங்கும்.

நடராஜரின் ஆட்டத்திற்கு தாளம் இசைப்பது போல தேரில் இருக்கும் மணிகள் ஒலியெழுப்பும். நடராஜரின் முன் தோற்றத்தை ரசிப்பவர்களைப் போல, அழகுமிகு பின் தோற்றத்தை கண்டு ரசிப்போரும் உண்டு. தேர் தரிசன உத்ஸவத்தில் மட்டுமே பின் தோற்றத்தை கண்டு ரசிக்கமுடியும்.

கருநிற இரண்டு (நடராஜர் & சிவகாமசுந்தரி) தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வருவது இரு யானைகள் அழகாக அசைந்து அசைந்து வருவதைப் போன்ற இக்காட்சியை காணும்போது, "காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்" என்று திருநாவுக்கரசர் கூறியதே நினைவுக்கு வருகின்றது.

மதியம் உச்சிகால பூஜை தேரிலேயே நடைபெற்று நிலைபெறும். சற்றே இடைவெளிக்குப் பிறகு, செம்படவர் மண்டகப்படி எனும் மீனவர்கள் எடுத்துவரும் மண்டகப்படி எனும் மரியாதைகளை நடராஜர் ஏற்று பிறகு தேர் மறுபடி கிளம்பி, ஈசான திசை திரும்பி, தேர் கிளம்பிய இடத்திற்கே வந்து நிலைபெறும்.
தேரிலிருக்கும் தெய்வங்கள் கோயிலினுள்ளே ஆயிரங்கால் மண்டபத்தில் வரவழைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் நூறு தீக்ஷிதர்களால், ஏக கால லக்ஷார்ச்சனை நடைபெறும்.

ஆயிரங்கால் மண்டபம் மிக பிரம்மாண்டமானது. ஆயிரம் தூண்கள் கொண்டது. மண்டபத்தினுள்ளே விதானம் எனும் மேற்கூரையில் உள்ள ஓவியங்கள் சிதம்பர புராணத்தைப் பகிரும் விதத்தில் வரையப்பட்டது. ஆடல்வல்லானின் அழகு மிகு நடனக் காட்சிகள், சித்தர் பீடங்கள் முதலான ஓவியங்களைக் காண கண்கள் கோடி வேண்டும். ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும்.
அதன் பின், ருத்ராபிஷேக ஹோம பூஜைகளுடன், மஹாபிஷேகம் நடைபெறும். அபிஷேக திரவிங்கள் பெருமளவில் சேகரிக்கப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் ஸகல திரவிய அபிஷேகமாக நடத்தப்படும். இறுதியில் புஷ்பாஞ்சலி எனும் பலவித மலர்களால் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
அரிய அணிமணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு அர்ச்சனை ஆராதனைகள் நடத்திய பிறகு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்தபிறகு, மதிய வேளையில், ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து சித்ஸபைக்கு அம்பிகையும், ஈசனும் திருநடனம் புரிந்துகொண்டே செல்லும் அற்புத காட்சிதான் ஆனித் திருமஞ்சன மஹா தரிசனக் காட்சி ஆகும்.

இந்தக் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

தில்லையில் திருநடம்புரியும் சித்ஸபேசரின் திருநடன திருக்காட்சியைக் கண்டவர்கள் பெரும் பேறு பெற்றவர்களாவார்கள்.

வேண்டிய வரங்களும், நீடித்த ஆயுளும், பெரும் செல்வமும் அருளக்கூடிய தேர் தரிசனக் காட்சியை அனைவரும் கண்டுகளிப்போம்.

நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
cell : 94434 79572 &  93626 09299.
 yanthralaya@gmail.com
www.facebook.com/deekshidhar
http://natarajadeekshidhar.blogspot.com