Friday, January 29, 2010

கவிக்கோ(ர்) காளமேகம்

கவிக்கோ(ர்) காளமேகம்


தமிழ்ப் புலவர்களின் வரிசையில் காளமேகம் ஒரு அற்புதமானவர். ஆசுகவி (நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்), சிலேடை கவி (ஒரே பாடல் இரு பொருள்), நிந்தா ஸ்துதி கவி (வசை பாடுவது போல் இருக்கும் ஆனால் உட்பொருள் போற்றுவது இருக்கும்) போன்ற கவி வகைகளில் சிறந்து விளங்கியவர்.

இவரின் தனிப் பாடல்களைப் பார்க்கையில், இவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர், உல்லாச விரும்பி என்று அறிய முடிகிறது. தமிழிலக்கணத்தின் பலரும் தொட்டுப் பார்க்காத வகைகளை மிக அழகாகக் கையாண்டவர்.
வரதன் என இயற்பெயர் கொண்டவர். கோயில் பரிசாரகராக (உதவியாளராக) இருந்தவர். மோகனாங்கி என்பவளிடம் அன்பு கொண்டு சைவ சமயம் சேர்ந்தவர். அம்பிகையின் அருளால் கவித்திறன் பெற்றவர். திருவானைக்கா உலா, மூவர் அம்மானை, சித்திர மடல், பரப்பிரம்ம விளக்கம் போன்ற பாடல் தொகுப்பை எழுதியவர்.
மற்றவர்கள் கொடுக்கும் குறிப்புகளுக்கேற்ப, வெண்பாக்களை நொடிப்பொழுதில் பாடி அசத்திக் காட்டுவார். அப்படி ஒருவர், "குடத்திலே கங்கை அடங்கும்" என்று வரும்படி பாடலைச் சொல்லக் கேட்கிறார். குடமோ சிறியது, கங்கையோ பிரவாகமெடுத்து அகிலத்தையை விழுங்க வருவது; எப்படி குடத்திலே கங்கை அடங்கும்? கவி காளமேகம் நொடிப் பொழுதில் பாடுகிறார்.
விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கை அடங்கும்.
வெண்பா எப்படி அமைகின்றது பாருங்கள். ஈற்றடியாகிய கடைசி அடியினைக் கண்டால் "குடத்திலே கங்கை அடங்கும்" என்பது எப்படிப் பொருத்தமாக அமைகின்றது?!

கங்கை நதியானது பகீரதனின் முயற்சியால், வானுக்கும் கட்டுக்கடங்காமல், வெற்பு எனும் இமய மலைக்கும் அடங்காமல், பூமியின் மேடு பள்ளங்களுக்கும் அடங்காமல் வந்தாலும், பெண்ணை (உமா தேவியை) இடப் பாகத்திலே வைத்த ஈசனின் சடாமகுடத்தில் (கங்காவதரணம் - சிவமஹா புராணம் - கங்கையானவள் கட்டுக்கடங்காமல் பூமியை நோக்கிவர, அந்த வேகத்தை பூமி தாங்காது என்றெண்ணிய தேவர்கள் ஈசனை வேண்ட, சிவபெருமான் கங்கையை தனது சடையின் ஓரத்தில் சேர்க்க, கங்கையானவள் ஆர்ப்பரித்து வந்தவள், ஈசனின் சடையில்) அடங்கினாள்.
இவரின் மிக முக்கியமான, மிக அழகிய, நயமிக்க பாடல் சிலவற்றைக் காண்போம்.
தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).
அதே போல 'த' எனும் எழுத்து மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார். கார்மேகமானது கொட்டும் மழையைப் போல பாடலைக் கொட்டுகின்றார் காளமேகம்.
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?) என்னே அழகிய விதத்தில் பாடியுள்ளார்?!
இதே போல், கசடதபற (வல்லினம்) மட்டுமே, ஙஞணநமன (மெல்லினம்) மட்டுமே, இடையினம் (யரலவழள) மட்டுமே கொண்ட பாடல்களையும் அழகுற அமைத்திருக்கின்றார்.
கவி காளமேகம் சிதம்பரம் நடராஜர் மேல் பெரும் பக்தி கொண்டவர். பல பாடல்களை சிதம்பரத்தில் பாடியுள்ளார்.
ஒருவர், சிதம்பர ஆலயத்தின் தனித்துவம் மிக்க அம்சங்களை மட்டும் கொண்டு பாடல் இயற்றுங்கள் எனக் கேட்க,
ஞான சபைக னகசபைசிற் றம்பலபே
ரானந்தக் கூடந் திருமூலட் - டானம்பே
ரம்பலம்பஞ் சாவரண நாற்கோபுரம் பொற்செய்
கம்பமண்ட பஞ்சிவகங் கை.
(ஞான சபை - நடராஜர் நடமிடும் பொன்னம்பலம். கனகசபை - சந்திரமௌலீஸ்வரர் எனும் ஸ்படிக லிங்க அபிஷேக பூஜை நடக்கும் சபை. பேரம்பலம் - உத்ஸவ விக்ரஹங்கள் அமைந்த சபை. திருமூலட்டானம் - ஆதி மூலவர் அமைந்த சபை. பஞ்சாவரணம் - அன்னமயம், மனோமயம், ப்ராணமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்று சொல்லக்கூடிய ஐந்து கோசங்களே ஐந்து பிரகாரங்களாக அமைந்த ஆலயம் சிதம்பரம். வேதங்கள் நான்கின் வடிவாகிய நான்கு கோபுரங்கள். கம்பமண்டபம் - ஆயிரங்கால் மண்டபம். சிவகங்கை தீர்த்தக் குளம்.)
இதே போல திருவாரூர் மற்றும் கும்பகோணத்துச் சின்னங்கள் பற்றியும் பாடல்களையும் பாடியுள்ளார்.
சிலேடைக்கவி என்றே பெயர் பெற்றவர் காளமேகம். ஒரே பாடலில் இரு வேறு அர்த்தங்களோடு அமைப்பதில் வல்லவர் காளமேகம்.
சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் ஒரே பாடலில் குறிப்பிடுகிறார்.
சாரங்க பாணியா ரஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த உகிர்வாளர் - பாரெங்கும்
ஏத்திடுமை யாக ரினதா யிவரும்மைக்
காத்திடுவ ரெப்போதும் காண்.
சிவபிரான் : சாரங்கம் - மானைக் கையில் ஏந்தியவர், ஐந்து அக்கரத்தார் (பஞ்சாக்ஷரர்), கஞ்சனை - பிரமனின் தலையைக் கொய்தவர், உமை பாகர் - உமையம்மையை ஒரு பாகமுடையவர்.
மஹா விஷ்ணு : சாரங்கம் எனும் வில்லினை ஏந்தியவர், அஞ்சக்கரத்தர் - அழகிய சக்கரம் கொண்டவர், கம்சனைக் கொன்றவர், மையாகர் - கருமை நிறத்தினுடையவர்.
இதே போல பல பாடல்கள் உள்ளன.
தெய்வ பக்தியும், கவிநயமும், உலகியலும் இணைந்த பல பாடல்களையும் பாடியுள்ளார்.
வில்லா லடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லா லெறிய பிரம்பா லடிக்கவிக் காசினியில்
அல்லார் பொழிற்றில்லை யம்பல வாணற்கோ ரன்னைபிதா
இல்லாத தாழ்வல்ல வோவிங்ங னேயெளி தானதுவே?
மரங்கள் நிறைந்ததால் இருள் கவிழ்ந்திருக்கும் (அல்லார் பொழில் தில்லை) தில்லையில் உறையும் அம்பலத்தாடும் நடராஜருக்கு ஒரு அன்னை பிதா இல்லாததால் தான், ஒருவன் வில்லால் அடித்தான் (அர்ஜுனன்), ஒருவன் செருப்பால் உதைத்தான் (கண்ணப்ப நாயனார்), ஒருவன் கல் கொண்டு எறிந்தான் (சாக்கிய நாயனார்), ஒருவன் பிரம்பால் அடித்தான் (பிட்டுக்கு மண் சுமந்த படலத்தின் போது, பாண்டிய மன்னன் பிரம்பால் அடித்தது). அம்மையப்பனாக விளங்கும் அரனுக்கு அம்மையப்பன் இல்லாததாலேயே இங்ஙனம் நிகழ்ந்தது என்பதை மிக அழகாக இணைக்கின்றார். கவிநயமும், பக்தியும் செறிந்த பாடல்.
காளமேகம் ஒரு முன்கோபியும் கூட. விஸ்வாமித்திரர் போல மிக விரைவில் கோபம் வந்துவிடும். விஸ்வாமித்திரர் கோபத்தால் சாபம் கொடுப்பார், காளமேகமோ சாடி (வசை பாடுதல்) விடுவார்.
திருமலைராயன்பட்டிணம் எனும் ஊர் வந்து அரசவைக் கவியாகிய அதிமதுரகவி என்பவரிடம் போட்டியிட்டு பாடி வென்றார் காளமேகம். ஆயினும், அரசன் பரிசு தராமல் ஏளனம் செய்தான். வெகுண்ட காளமேகம் 'விண்மாரியற்று .... மண் மாரி பெய்க' என்ற பாடலைப் பாடினார். உடன் அந்த ஊரே மண்மழை பெய்து, மண்ணால் மூடப்பட்டதாம்.
நாகப்பட்டினத்தில் உள்ள அன்னசத்திரத்திற்கு பசியோடு செல்கிறார் காளமேகம். நெடுநேரமாகியும் உணவு கிடைக்கவில்லை. உடன் இகழ்கிறார்.
"கத்துக் கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி உலையிலிட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும்."
(சத்திரத்தில் பொழுது போன பின் தான் அரிசி வரும், உலையில் இடும்போது ஊரே அடங்கிவிடும் நேரம் வந்துவிடும், ஒரு கரண்டி சாதம் இலையில் இவர்கள் அன்னமிடும் போது பொழுது விடிந்துவிடும்.)
கயற்றாரு எனும் ஊரில் உத்ஸவம் நடந்துகொண்டிருக்கின்றது. காளமேகம் விழாவினை விரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். கோயில் காரர்கள் சுவாமியைத் தூக்க ஒரு ஆள் குறைவது கண்டு, காளமேகத்தை வற்புறுத்தி அழைக்கின்றனர். இவரோ மெலிந்த தேகத்தினர். சுவாமி தூக்குவதில் பழக்கமில்லாதவர். ஆகையால் உடலும் உள்ளமும் நொந்து பாடுகின்றார்.
"பாளைமணம் கமழுகின்ற கயற்றாற்றுப் பெருமானே பழிகாராகேள்வேளையென்றால் இவ்வேளை பதினாறு நாழிகைக்கு மேலாயிற்று என்தோளை முறித்ததும் அன்றி நம்பியானையும் கூட சுமக்கச் செய்தாய்நாளை இனியார் சுமப்பார் என் நாளும் உன் கோயில் நாசம் தானே."
பெருமானே! பதினாறு நாழிகைக்கும் மேலாயிற்று நேரம். உன்னையும் உன் வாகனத்தையும் சுமந்ததோடு அல்லாமல் உன் நம்பியானையும் சேர்த்துச் சுமக்க வைத்து தோளை முறித்து விட்டாய், நாளை இனி யார் சுமப்பார் என்ற பொருளில் பாடியுள்ளார். அது முதல் நெடுங்காலம் கயற்றாரில் திருவிழா நின்றுவிட்டது என்றும், கவிசாபம் என்றும் கூறுவர்.
நகைச்சுவை உணர்வு மிக்கவர். ஏமிராவோரி எனும் பாடல் நகைச்சுவை ததும்ப பாடியுள்ளார்.
இவரின் பாடல்கள் கருத்தாழம் மிக்கவை. அருமையானவை. ஆழமானவை. புராணங்களை தம் பாடல்களில் மிக அழகாக செருகி, கேட்போர் அனைவரையும் கவர்ந்துவிடும் தன்மை கொண்டவர் கவி காளமேகம்.
இவரின் தமிழ் கவித்திறனை கேள்வியுற்ற இரட்டைப் புலவர்கள் (இளஞ்சூரியர் - கண் தெரியாதவர், முதுசூரியர் - கால் நடக்க முடியாதவர், இவர்களைப் பற்றி தனியே ஒரு பதிவில் காண்போம்) எனும் இருவர் காளமேகத்தைக் காண ஆவலாயிருந்தனர். இரட்டைப் புலவரில் ஒருவர் ஒரு வரி எழுத மற்றவர் அதே இலக்கண நயத்தோடு அடுத்த வரி எழுத பாடலை அழகுற அமைப்பார்கள். தில்லைக் கலம்பகம் போன்று பல கலம்பகங்களை அற்புதமாக எழுதியுள்ளனர்.
ஒரு சமயம், திருவாரூர் தலத்தில் இருந்தபோது, இருவரும் சேர்ந்து ஒரு பாடலை எழுத விழைய இரண்டு அடிகள் மட்டுமே எழுத முடிந்தது. ஆனால் அடுத்த இரு வரிகளை எழுத ஏனோ இயலவில்லை. அதை அப்படியே அங்கே இருந்த கோயிலின் மதில் சுவற்றில் பதித்துச் சென்றனர். சில காலம் கழிந்து அங்கே அவர்கள் வர, மீதி இரண்டு வரிகளும் மிக அருமையாக அமைந்திருக்கக் கண்டு (பாணமோ மண் தின்ற பாணம்...), விசாரிக்க அதைக் காளமேகம் தான் எழுதினார் என்று அறிந்து, மிக ஆவலோடு இருவரும் அவரைக் காண விரைய, அங்கே காளமேகம் உயிரற்று போனது கண்டு நெஞ்சம் பதைத்தனர்.
:( :( :(
சிலேடை என்பது ஒரே பாடல் இரு வேறு அர்த்தங்கள் கொண்டது.
ஒரே பாடலை இடமிருந்து வலமாகப் படித்தாலும், வலமிருந்து இடமாகப் படித்தாலும் ஒரே பொருளை (விகடகவி - palindrome) தரக் கூடிய திருஞானசம்பந்தரின் மாலை மாற்று பதிகத்தினையும்,
ஒரே செய்யுள் இடமிருந்து வலமாகப் படித்தால் ஒரு அர்த்தமும், அதே செய்யுளை வலமிருந்து இடமாகப் படித்தால் வேறொரு அர்த்தமும் கிடைக்கும் அற்புதச் செய்யுள் பற்றியும், இவற்றின் சிறப்புகள் பற்றியும் அடுத்த பதிவில் காண்போம்.
நி.த. நடராஜ தீக்ஷிதர்
yanthralaya@yahoo.co.in
94434 79572

Saturday, January 23, 2010

சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்

சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்
சக்ரதாரிக்கே சக்ரதானம்
ராஜராஜசோழ‎ன்‎ அமைத்த தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள வெற்றிவேல் முருக‎‎ன் சன்னிதியில் உள்ள தூணில், நடராஜர் சிற்பம் - கைகளில் உடுக்கை, தீயகலுக்குப் பதிலாக சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியுள்ளதாக அமைந்துள்ளது. மிக அரிய சிற்பம். சிவ வைணவ ஒற்றுமையைப் பேணக்கூடியது. பாம்பின் மீது தாண்டவம் ஆடுவது போல் அமைந்துள்ளது.
மகேஸ்வரனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை ஸத்யோஜாதம், அகோரம், வாமதேவம், தத்புருஷம் மற்றும் ஈசானம்.

ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து சிவ வடிவங்கள் தோன்றின. 5 x 5 = 25 மூர்த்திகள் - மாகேஸ்வர வடிவங்கள் என்று அழைக்கப்படும்.

(1. சந்திரசேகரர் 2. திரிபுரஸம்ஹாரர் 3. ஜலந்தரஹரர், 4. கஜஸம்ஹாரர், 5. நீலகண்டர் 6. சக்ரதானர் 7. விக்னேஸ்வர அனுக்ரஹர் 8. ஸோமாஸ்கந்தர் 9. ஏகபாதர் 10. காலஸம்ஹாரர், 11. உமா மகேசர் 12. ரிஷபாரூடர் 13. தக்ஷ¢ணாமூர்த்தி, 14. கிராதர் 15. பிக்ஷ¡டனர், 16. கல்யாண சுந்தரர் 17. காமஹரர் 18. கங்காளர் 19. சண்டேசானுக்ரஹர் 20. வீரபத்ரர் 21. அர்த்த நாரீஸ்வரர் 22. சங்கர நாராயணர், 23. சுகாசனர் 24.லிங்கோத்பவர் 25. நடராஜர்)
அந்த மாகேஸ்வர வடிவங்கள் இருபத்து ஐந்தினுள் ஒன்று சக்ரதான மூர்த்தி. மஹாவிஷ்ணுவுக்கு சுதர்சனம் எனும் சக்ரத்தை அருளியவர் சக்ரதான மூர்த்தி.
மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். அவர் பரமசிவனிடம், சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள் அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார். விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார். இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்கராயுதத்தை கொடுத்தருளினார். (திருவீழிமிழலை புராணம்)
சிந்தை மகிழ்ந்து சிவ பூஜையில் பங்கெடுப்போம். சிறப்பான வாழ்வைப் பெறுவோம்.

Saturday, January 16, 2010

நால்வர் காட்டிய நல்வழி


நால்வர் காட்டிய நல்வழி :



அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நான்கு பேரும் தமிழ் சைவ வழிபாட்டுக்கு மிகப் பெரும் தொண்டாற்றிய அருளாளர்கள். இவர்கள் தம் தமிழ்ப்பாசுரங்களால் மக்களைத் தன்வயப்படுத்தி, சைவ நெறியில் திகழச்செய்து, சைவ மேன்மைக்கு வழிகோலினார்கள்.
அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூன்று பேரும் எழுதியவை அனைத்தும் தேவாரம் ஆகவும், மாணிக்கவாசகர் எழுதியது திருவாசகம் எனவும் பன்னிரு திருமுறைகளினுள் தொகுக்கப்பட்டுள்ளது.
கோயில் என்றாலே பொருள் படும் சிதம்பரம் - தமிழ் திருமறைகளை வெளிக்கொணர்ந்த ஸ்தலம்.
பாணர்கள் (அரசவையில் பாடல்கள் பாடிப் பரிசு பெறுவோர்) ராஜராஜசோழனிடம் சில பாடல்களைப் பாடிக்காட்ட, அந்தப் பாடல்களைக் கேட்ட அரசன் அதன் அருமை பெருமைகளில் பெரிதும் மனமகிழ்ந்து, மேலும் பல பாடல்களைக் கேட்க விரும்ப, அவர்கள் எங்களிடம் சில பாடல்களே உள்ளன என்றும் அவை சிதம்பரத்தின் மேற்கு கோபுரத்தின் கீழ் கிடந்தவை என்றும் மேலும் பல அங்கு கிடைக்கலாம் என்றும் சொல்ல, உடன் சோழன் சிதம்பரம் வந்து, அந்த பாடல்களைத் தேடிவந்து, விநாயகரைப் பணிய, விநாயகர் ஓலைகளை உள்ள திசையைக் காட்டியருள, [அந்த விநாயகரே திருமுறைகாட்டிய விநாயகர் - மேற்கு கோபரத்தின் எதிரே உள்ள சந்நிதி], மேற்கு கோபுரத்தின் குகை போன்ற பகுதியில் காலம் காலமாக இருந்த திருமுறை ஓலைகளை, ராஜராஜசோழன் பக்தி பரவசம் பெருக கண்டு வெளியெடுத்தான்.
நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு பாசுரங்களைத் தொகுத்தான்.
தில்லைத் திருச்சிற்றம்பலத்திலிருந்து பாடல்கள் பெறப்பட்டதால், இனி எங்கு திருமுறைகள் பாடப்பட்டாலும் "திருச்சிற்றம்பலம்" என்று ஆரம்பித்து, பாடல்கள் முடிந்த பிறகு "திருச்சிற்றம்பலம்" என்று முடிக்க வேண்டும் என்ற நியதியைக் கொணர்ந்தான்.ராஜராஜசோழன் மிகப் பெரும் சிவபக்தன்.
இவன் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. வைணவக் கோயில்களின் திருவிண்ணகரங்களையும் புதுப்பித்தான். இந்து சமயம் பெரும் வளர்ச்சியடைந்தது. ராஜராஜசோழன் காலமே தமிழகத்தின் பொற்காலம் எனப் பெருமையடைந்தது. தக்ஷ¢ண மேரு என்று புகழப்பெறும் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி, வரலாற்றின் பொன்னேட்டில் இடம்பெற்றான். நடராஜர் மீது கொண்ட அளப்பரிய பக்தியால், அளவை (measuring) அலகுகளுக்கு (units) கடவுளர்களின் பெயரையே வைத்தான்.ராஜராஜ சோழன் சைவ வைணவ ஒற்றுமையைப் போற்றியவன். தன்னாட்சியில் நீட்டலளவைக்கு 'உலகளந்தான்' என திருமால் பெயரையும், முகத்தலளவையாகிய மரக்காலுக்கு 'ஆடல் வல்லான்' என்றும் பெயரிட்டான்.
ராஜராஜனின் நடராஜ பக்திக்குச் சான்றாக, அவனின் மகன் ராஜேந்திர சோழன் மார்கழித் திருவாதிரையில் பிறந்தான். ராஜேந்திரனும் நடராஜர் மீது பெரும்பக்தி கொண்டு, கடல் கடந்த நாடுகளையும் வென்று, பெரும் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தான். கங்கை கொண்ட சோழபுரம் கட்டி, பக்தியைக் காட்டினான்.
திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பாடல்கள் தேவாரமாகத் தொகுக்கப்பட்டது. மணிவாசகரின் திருவாசகம் தனி திருமுறையாகத் தொகுக்கப்பட்டது.
நால்வர்களின் பாடல்களாலும் சைவம் தழைத்தோங்கியது. அவை, பல தமிழகக் கோயில்களை வளம்பெறச் செய்தன. தமிழ்ப்பாடல்களுக்கு தெய்வீக சக்தி உண்டு என்ற கருத்தை நிலைநிறுத்தின. தமிழும் சைவமும் பெரும் வளர்ச்சி பெற்றன. தமிழ் சமுதாயத்தில், இந்த நால்வர்கள் விதைத்த விதை, பெரும் பக்தி இயக்கமாக மாறியது. இவர்களின் பாடல்கள் அன்றைய ஆட்சி செய்வோரின் மனதிலும் பதிந்தது. கோயில்கள், விண்ணகரங்கள் பல செழுமை பெற்றன. புதிதாக பல கற்றளிகள் கட்டப்பட்டன. விளைநிலங்கள் நிவந்தங்களாக மானியங்களாக வழங்கப்பட்டன. மொத்தத்தில் இந்துக் கோயில்கள் மிகப் பெரும் வளர்ச்சியடைந்தன.
அவர்களின் பண்ணோடு இசைந்த பாடல்கள் புத்துணர்ச்சி தருவதாக இருந்தன. பக்தியை மிக எளிமையாக்கின. இவர்கள் காலத்திற்கு முன்னெல்லாம், இறைவனை அடைய ஆண்டாண்டுகளாய் தவம் இருக்க வேண்டும் என்ற நினைப்பை மாற்றி தூய பக்தியொன்றே இறையருளை அடையும் வழி என்றன. பல பழைய மரபுகளை உடைத்தன. பக்தியை ஊட்டின. வேறு மதங்களைச் சார்ந்து உறங்கிக்கிடந்தவர்களை தம் தமிழ்ப்பாடல்களால் தட்டி எழுப்பின. ஆன்மீக புரட்சியே எழுந்தது.
சங்க காலத்தில் பக்தி இலக்கியம் குறைவுதான் என்றாலும், நன்மறைகளை போதித்தன. ஆயினும் இடைக்காலத்தில் இவர்களின் வரவு தமிழ் பக்தி இயக்கத்திற்கு மிகப் பெரும் பக்கபலமாக விளங்கியது. மக்களும் தமிழ்ப்பாசுரங்களை பாடலாயினர். சமீப காலம் வரை தமிழ்ப்பாசுரங்களை பாடியபிறகுதான் மதிய உணவு என்ற கொள்கை கொண்டு, பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு தமிழ் ஞானத்தை வளர்த்தனர்.
நால்வர் - ஈசன் - ஆட்கொள்ளல் :
நஞ்சுண்ட நாயகனாகிய ஈசனை ஞானசம்பந்தர் கொஞ்சியும், திருநாவுக்கரசர் அஞ்சியும், மணிவாசகர் கெஞ்சியும், சுந்தரர் விஞ்சியும் பதிகங்கள் பாடியுள்ளனர்.
ஞானசம்பந்தரை பாலைக் காட்டியும், திருநாவுக்கரசருக்கு சூலை (நோய்) காட்டியும், மணிவாசகருக்கு காலை காட்டியும், சுந்தரரை ஓலை காட்டியும் ஈசன் தடுத்தாட்கொண்டார்.
நால்வரும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்மறைகளின் வழி நின்று பாடி அருள்பெற்றனர்.
சிதம்பரம் தில்லைக் கோயிலுக்கு நான்கு வேதங்களே நான்கு கோபுரங்களாக அமைந்துள்ளன.
நான்கு கோபுர வழியாகவும் மேற்கண்ட நால்வரும் வழிவந்து வழிபாடாற்றியுள்ளனர்.
கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்க வாசகரும், தெற்கு கோபுரம் வழியாக திருஞானசம்பந்தரும், மேற்கு கோபுரம் வழியாக திருநாவுக்கரசரும், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரரும் வந்து நடராஜப் பெருமானை தரிசித்து பேறுபெற்றனர்.
நடராஜப் பெருமான் ஏன் அவர்களின் மனதில் இந்த குறிப்பிட்ட வாசல் வழியாகத் தான் வரவேண்டும் என்று பணித்தார்? அதற்கு அழகான பதிலை ஆன்றோர்கள் தந்தருளியுள்ளனர்.
திருஞான சம்பந்தர், சீர்காழி தோணியப்பரின் அருளால் உமையம்மையின் திருஞானப்பால் குடித்த, குழந்தை வடிவினர். பெரியவர்கள் குழந்தைகளைக் கொஞ்சுவது போல, குழந்தையே தெய்வத்தைக் கொஞ்சும் விதத்தில் பாடல்களைப் பாடியுள்ளவர். குழந்தை நம்மைத் தேடி வரும்போது, நாமே அந்தக் குழந்தையை நோக்கிச் சென்று கொஞ்ச விழைவது போல, தாமே முன்னோக்கிச் சென்று (நடராஜப் பெருமான் தெற்கு நோக்கி காட்சியருளுபவர்) குழந்தையை வரவேற்பது போல, நடராஜப் பெருமான் சம்பந்தரை தெற்கு கோபுரம் வழியாக வரச் செய்து அருள்பாலித்தார்.
திருநாவுக்கரசர் மிகவும் பணிவானர். உழவாரப் பணி செய்தவர். மகேஸ்வரனின் அருள் பெற மிகவும் கெஞ்சிப் பாடியவர். திருநீறு பூசிய பின் சூலை எனும் வயிற்று வலி நோய் தீர்ந்து சிவனை நெக்குருகப் பாடியவர். அவருக்காக, அருள்தரும் அபய ஹஸ்தத்தினால் (நடராஜரின் வலக்கை மேற்கு நோக்கி நீண்டிருக்கும்) அருள, அப்பர் சுவாமிகளை மேற்கு கோபுர வாயில் வழியாக வரச் செய்து அருள்பாலித்தார்.
சுந்தரர் - வன் தொண்டர். ஓலையைக் காட்டி சுந்தரன் தன் அடிமை என திருவிளையாடல் செய்து, சுந்தரரை ஈசன் ஆட்கொண்டருளினார். ஈசனை ஒரு நண்பன் போல நினைத்தவர். விஞ்சிப் பாடியவர். பரமேசனையே தன் காதலிக்காக தூது போகச் சொல்லியவர். ஒரு நண்பனானவர் எப்படி தன் நண்பரின் பின்பக்கத்திலிருந்து வந்து தோள் மேல் கை போட்டு நட்பு கொண்டாடுவாரோ அதே போல, சுந்தரர் நடராஜப் பெருமானை (நடராஜரின் பின் பக்கமாகிய வடக்கு) வந்தடைந்தார். சுந்தரரை வடக்கு கோபுர வாயில் வழியாக வரச் செய்து அருள்பாலித்தார்.
மாணிக்கவாசகர் - இவர் பாடல்களின் வாசகங்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல மதிப்புடையதாக இருந்ததால், இறைவனாலேயே மாணிக்கவாசகர் என போற்றப்பட்டவர். திருப்பெருந்துறையில் கல்லால மரத்தடியின் கீழ் யோகநிலையில் அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தியின் இடது புறத் திருவடியின் திருவொளி கண்டு ஞான மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தவர். ஆகையால், அவரை (நடராஜப் பெருமானின் இடது புறமாகிய) கிழக்கு கோபுரம் வழியாக வரச் செய்து அவருக்கு அருள்பாலித்தார்.நால்வர்கள் காட்டிய ந(நா)ல்வழியே சென்று, அவர்கள் காட்டிய அறநெறியைப் பின்பற்றி, அவர்களின் பாடல்களை பக்தியோடு பாடி, பரமனின் அருளைப் பெறுவோம்.

Sunday, January 10, 2010

கூடாரைவல்லி

கூடாரைவல்லி

மார்கழி 27 - 11.01.2023 - புதன்  கிழமை

ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிநந்தன யோக த்ருச்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே - கோதா ஸ்துதி.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற் கென்னை விதியென்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.
- உய்யக்கொண்டார் பாடல்.

(திருக்கோவிலூர், ஞானானந்தா மிஷன், தபோவனத்திலிருந்து வெளிவரும் அருமையான ஆன்மீக இதழான ஞான ஒளி எனும் புத்தகத்தின் ஆசிரியர் மேன்மை மிகு ப்ரஹ்மஸ்ரீ ரங்கநாதன் அவர்கள் இதில் கீழ்காணும் கட்டுரையை மையமாகக் கொண்டும் மற்றும் பிற எழுத்தாளர்களின் ஆக்கங்களை துணை கொண்டும், தனக்கே உரித்தான ஆன்மீகத்தையும் அறிவியலையும் அணைந்து செல்லும் அழகிய நடையிலும் கூடாரை வல்லி எனும் இக்கட்டுரையை "பாவை நோன்பு நூற்போம்" எனும் தலைப்பில், மிக அற்புதமாக செறிவூட்டியுள்ளார். அக்கட்டுரையை படிக்க கீழே செல்லுங்கள். ப்ரஹ்மஸ்ரீ ரங்கநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.)

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை அருளிச் செய்தவள். அதில் 27ஆவது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' எனும் பாசுரத்தைப் பாடியதும் திருமால் அவளுக்குத் திருமணவரம் தந்ததாக ஐதீகம். இந்த கூடாரவல்லியன்று திருமால் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும், ஆண்டாளையும் தரிசிப்போருக்கு வாழ்வில் நல வளங்கள் சேரும்.

ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, 27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் பாடல் பாடி, "மூடநெய் பெய்து முழங்கை வழி வார" என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.

மார்கழி மாத 27ம் நாளே "கூடாரைவல்லி" நாளாக கொண்டாடப்படுகின்றது.

ஆண்டாளின் முப்பது பாடல்களிலும், தோழியரை அதிகாலைப் பொழுதில் எழச் செய்து கண்ணனைக் காண அழைக்கும் பாடல்களாகவும், பாவை நோன்பின் மாண்பினையும், நோன்பு இருந்தால் மாதம் மும்மாரியும், நல்வாழ்க்கையும் கிடைக்கும் என்பதும் விபரமாக இருக்கின்றது.

கூடாரை வல்லிக்குக் காரணமாகவிருந்த ஆண்டாளையும், அவள் எழுதிய திருப்பாவையையும் காண்போம்.

இந்து சனாதன மதத்தினுள், ஷண்மதங்களில் ஒன்றாகிய, ஸ்ரீ வைஷ்ணவம் - ஸ்ரீ மஹாவிஷ்ணுவைப் போற்றி வழிபாடு செய்யும் வகை ஆகும்.

வேதங்கள் போற்றும் வேதநாயகனாகிய ஸ்ரீ மஹா விஷ்ணுவை - தமிழில் பனிரண்டு ஆழ்வார் திருமக்கள் எழுதிய ஐந்தாம் வேதம் என்று போற்றப்படக்கூடிய "நாலாயிர திவ்ய பிரபந்தம்" (4000 பாடல்கள்) - போற்றி பறை சாற்றுகின்றன. (இந்தப் பதிவின் முன் பதிவாகிய 'ஆழ்வார்கள் அருளிய அமுதம்' காணுங்கள்). இப்பாடல்கள் அனைத்தும் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அனைத்து லீலைகளையும் பகர்கின்றது.

இடைக்காலத்தில் (பல்லவர்கள் காலத்திற்கு பிறகு) தமிழுக்கு ஏற்பட்ட தொய்வுக்கு, இப்பாடல்கள் அனைத்தும் தமிழை சீர்தூக்கி நிறுத்தின. கேட்க கேட்க தெவிட்டாத தமிழ்ப் பாடல்கள். தமிழன்னையின் அழகுக்கு மேலும் அழகூட்டின.

பனிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக விளங்கியவர் கோதை நாச்சியார் எனும் ஆண்டாள். இவள் எழுதிய பாடல்கள் தமிழன்னைக்கு சூடாமணியாக விளங்குகின்றன.

ஆண்டாள் :
பனிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் பெரியாழ்வார். அவர் தினமும் திருமாலுக்கு திருமாலைத் தொண்டு செய்துகொண்டிருந்தார்.

 ஸ்ரீ வில்லிப்புத்தூரில் அவரின் நந்தவனத்தில், "பஞ்சவர்ஷா திவ்ய ரூபா திவ்யாபரண பூஷிதா, நீலோத்பலதள ச்யாமா திவ்யாம்பர ஸமாவ்ரதா" என்ற ஸ்தலபுராணத்தின்படி, ஒளி வீசும் முகத்துடனும், அழகே உருவாக, திருத்துழாய் எனும் துளசிச் செடியின் கீழ் பூமா தேவியின் வடிவாக அவதரித்தாள்.

அக்குழந்தையை பெரியாழ்வார் கண்டெடுத்து, கோதை என பெயர் சூட்டி, (கோதை என்றால் தமிழில் மாலை என்றும் பொருளுண்டு) தமிழையும், கிருஷ்ண பக்தியையும் ஊட்டி, அருமையுடனும், பெருமையுடனும் திருமகள் போல (பெரியாழ்வார் திருமொழி 3) வளர்த்து வந்தார்.

குழந்தை முதலே கோதை கண்ணன் மீது பெரும் பக்தி கொண்டாள்.
அந்த பக்தி நாளாக நாளாக கண்ணன் மீது காதலாக மலர்ந்தது. எங்கு நோக்கிலும் கண்ணனின் திருவுரு தெரிவது போலவே மனம் மாறினாள்; விண்ணின் நீலம் கண்டால் அது கண்ணனின் நிறம் என்பாள்; அழகு மலரைக் கண்டால் அது கண்ணனின் கண் என்பாள். கண்ணனையை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்றே காலம் நகர்த்தினாள்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து என்ற பாடல் மூலம் ஆயிரம் யானைகள் சூழ, உறவினர்கள் புடை சூழ கண்ணனை திருமணம் புரிய வேண்டும் என்று கனவு காண்கின்றாள்.

பெரியாழ்வார் வீட்டில் இல்லாத சமயம், பெருமானுக்கு சார்த்துவதற்காக வைத்திருந்த மாலைகளை எடுத்து, தான் அணிந்து கொண்டு, கண்ணனுக்குத் தோதாக, கோதை தான் இருக்கின்றேனா என்று கிணற்று நீரின் நிழலில் (கண்ணாடியில் தெரிவது போன்ற) பிரதிபிம்பத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்வாள். (ஆண்டாளின் அழகைக் காட்டிய அந்தக் கிணறு இன்றும் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆலயத்தில் உள்ளது).

அதன் பின்னே மாலைகளை பெருமாளுக்குச் சூடக் கொடுப்பாள். ஆகையாலே ஆண்டாள், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியானாள்.

பெரியாழ்வார் மிகப் பெரும் தமிழ் ஆர்வலர்,  புலவர்.

அவரின் மகள் அவரைப் போலவே தமிழ்ப் பாக்கள் தொடுப்பதில் ஆர்வமாயிருந்தாள்.

ஆண்டாளின் பாடல்கள் இயற்றரவிணை கொச்சகக்கலிப்பா என்று சொல்கின்றார்கள். மிகக் கடினமான யாப்பு வகையைச் சேர்ந்தது. ஒரு பெண் அந்தக் காலத்தில் இப்படி யாத்தது மிகவும் ஆச்சர்யம் அளிக்கின்றது. ஆண்டாள் அருளியது திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி.

ஆண்டாளின் திருப்பாவையில் பெண்மையின் குணங்களும், மென்மையும், நளினமும் நிறைந்திருக்கிறது.

காக்கைப்பாடினியார், காரைக்காலம்மையார் போன்ற பெண் புலவர்கள் எழுதியது இலக்கியமும், பக்தியும் சேர்ந்தது.

ஆனால், ஆண்டாளின் பாடல்களின் கண்ணனை மட்டுமே அடைய வேண்டும் என்ற வேட்கையில் பாடும் பாடல்களில் காதலும் கவினுற சேர்கின்றது.

ஜெயதேவர் தன் அஷ்டபதியில் நாயகன் நாயகி பா(ba)வனையில் எழுதியிருந்தாலும், ஆண்டாள் - ஒரு பெண்ணின் கோணத்திலிருந்து பரமனைக் காதலால் பாடுவது அருமையாக அமைகின்றது.

திருப்பாவையில் பெண்மையின் - ஆசைகள், வேண்டுதல்கள், நோன்பு நோற்றல், அணிகலன்கள் அணிதல் - முதலானவை மிளிர்கின்றது.

பெண் தன்மை மட்டுமல்லாமல் ஆண்டாள் பல நோக்குடையவளாக இருந்திருக்க வேண்டும். விஞ்ஞானம் (கடல் நீர் ஆவியாகி மேகத்திலிருந்து மழை பொழிவது), வானவியல் (வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று - இந்த வரிகளைக் கொண்டே ஆண்டாளின் காலத்தை அறிஞர்கள் நிர்ணயித்திருக்கின்றார்கள்) போன்ற கலைகளையும் அறிந்திருக்கின்றாள் என்பது புலனாகின்றது.

இயற்கைக் காட்சிகளை வர்ணிக்கையில், முதன் முதலில் காட்சியைப் பார்க்கும், குழந்தையின் குதூகலம் தெரிகின்றது. பாக்களைப் பார்க்கையில் இலக்கண முதிர்ச்சி தெரிகின்றது. பரந்தாமன் மேல் கொண்ட அளவிற்கடந்த பக்தி தெரிகின்றது.

இனி ஆண்டாளிடம் வருவோம்.
தினமும் ஆண்டாள் செய்து வரும் 'மாலையைச் சூடிப் பின் அரங்கனுக்கு சூடக்கொடுப்பதை' ஒரு நாள் பெரியாழ்வார் கண்டு அதிர்ச்சி கொள்கிறார். கண்ணனே என் கணவன் ஆவான் என எண்ணம் கொண்டிருக்கும் ஆண்டாளைக் கண்ட பெரியாழ்வார்க்கு கவலை அதிகமாகிறது. அவரின் கவலையை நீக்கும் விதமாக ஆண்டாளை பங்குனி உத்திரத்தன்று ஏற்போம் என்கிறார் பரமன்.

பரந்தாமனிடம், பெரியாழ்வார் - ஆண்டாளை ஸ்ரீவில்லிப்புத்தூரில், ஊரார், உறவினர்கள் அனைவரையும் சாட்சியாக நிறுத்தி, தாங்கள் ஏற்க வேண்டும் என்று - ஒரு பெண்ணின் தந்தையின் ஸ்தானத்தில் நின்று வரம் கேட்கிறார். அவ்வண்ணமே "சொன்னவண்ணம் செய்யும் பெருமாள்" அருள்பாலிக்கின்றார்.

அந்த நாளும் வந்தது. ஊரார், உறவினர் அனைவரும், ஆண்டாளை அலங்கரித்து வந்து பெருமானிடம் சேர்க்க வருகின்றனர். நேரம் போய்க்கொண்டேயிருக்கின்றது, ஆனால் பெருமானைக் காணோம்.

இனியும் பொறுக்க மாட்டாத ஆண்டாள், கருடாழ்வாரை மனமுருக பிரார்த்தனை செய்து, 'பரந்தாமனை உடனே அழைத்துவந்தால், எங்கள் அருகிலிருக்கும் பாக்கியம் உங்களுக்கு உண்டு' என்று வேண்டுகிறார்.

கருடாழ்வார் மறுகணமே பெருமானிடம் சென்று, இனி ஒரு கணம் தாமதித்தாலும் ஆண்டாள் உயிர் பிரிவாள் என எடுத்துச் சொல்ல, பரந்தாமன் கையில் செங்கோல் ஏந்தி, ரங்கமன்னனாக, இன்முகத்துடன் ஆண்டாளை கரம் பிடிக்கின்றார். (ஸ்ரீ வில்லிப்புத்தூர் புராணம்)

கருடாழ்வார் உதவியதால், ஆண்டாளின் வாக்குப்படியே ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பெருமானுக்கு அருகிலிருக்கும் பாக்கியத்தை கருடாழ்வர் பெற்றார்.

இனி கூடாரைவல்லி :
மார்கழி மாதத்தில் தக்க கணவனை அடைய பாவை நோன்பு காப்பது பெண்களின் பழங்கால விரதங்களில் ஒன்று.

அதிகாலைப் பொழுதில் தோழியரை எழுப்பி பெருமானைக் காண அழைக்கின்றாள் ஆண்டாள். நோன்பு சமயத்தில் "நெய்யுண்ணோம், பாலுண்ணோம்", கண்களில் மையிடோம், மலரிட்டு முடியோம் என்று பெண்கள் தங்களை வருத்திக்கொண்டு இறைவனைப் பணிகின்றார்கள்.

மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில், விரதம் முடிக்கின்றார்கள். திருப்பாவையின் 27வது பாடல் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" என்று பாடி அக்காரவடிசல் எனும் உணவினை இறைவனுக்குப் படைத்து விரதம் முடிக்கிறார்கள். 27வது நாளிலே பரமந்தாமன் ஆண்டாளுக்கு திருமண வரம் அளித்த நன்னாள்.

ஆண்டாளின் பாசுரங்களில் ஆபரணங்கள் பூணுவதைச் சொல்கின்றாள். சூடகம் எனும் கையில் அணியும் வரிவளை எனும் வளையலைச் சொல்கின்றாள். பாடகம் எனும் காலில் அணியும் ஓசை எழுப்பாத கொலுசு பற்றி சொல்கின்றாள். செவிப்பூ, காறை என்று பல அணிகலன்களை அணிந்து மகிழ்வோம் என்கின்றாள். அவள் சொன்ன பல அணிகலங்கள் இன்று இல்லை. பாடகம் - சிலர் மட்டுமே விரும்பி அணிகின்றார்கள்.

ஆண்டாளுக்குப் பின் பிறந்தவர்; ஆனால் ஆண்டாளின் அண்ணன் ஆனார் :வைணவ ஆச்சார்யர்களுள் மிக முக்கியமானவராகப் போற்றப்படக்கூடியவர் ஸ்ரீ ராமானுஜர். வைணவத்தை மேலும் தமிழகத்தில் ஆழமாக பரப்பியவர். ஆண்டாளின் மீதும், அவளின் பாசுரங்களின் மீதும் பெரும் பக்தி கொண்டவர். "திருப்பாவை ஜீயர்" என்றே போற்றப்பட்டார்.

ராமானுஜர் திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயில்) ஆண்டாளின் பாடலில் உள்ள வேண்டுதலுக்கேற்ப,
"நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்; நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ"
நூறு தடா (தடா என்றால் பெரிய அடுக்கு அல்லது பெரிய குவளை அல்லது பெரிய அண்டா) முழுக்க அக்காரவடிசலும், வெண்ணையும் சேர்த்து நிவேதனம் செய்தார். ஆண்டாள் எண்ணிய செயலை இவர் செய்து காட்டினார்.

ஒவ்வொரு க்ஷேத்ரமாக சேவித்துக்கொண்டு, பிறகு ஸ்ரீ வில்லிப்புத்தூர் வந்து பெருமானை சேவிக்கவந்தார்.
கோயிலினுள் நுழைந்ததுமே, "வாரும் என் அண்ணலே" என்ற அழகிய பெண் குரல் ஒன்று இவரை நோக்கி அழைத்தது. சுற்று முற்றும் பார்த்தார். யாரும் இல்லை.
மீண்டும் மீண்டும் அந்த அழகிய குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. யாராக இருக்கும் என்று ஆவலுடன் பார்க்க, அங்கே கருவறையிலிருந்து ஆண்டாள் அழகாக அசைந்து வந்து, "வாருங்கள் என் அண்ணா" என்று அழைத்தாள்.
பக்தியுடன் பரவினார் ராமானுஜர். ஆண்டாளுக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்தவர் ராமானுஜர். தம்பி என்றல்லவோ ஆண்டாள் அழைக்க வேண்டும். ஏன் அண்ணன் என்று அழைத்தார்? அதற்கு பதிலும் அவளே சொல்கின்றாள்.
என் எண்ணத்தை (நூறு பெரிய அடுக்குகள் முழுக்க அக்காரவடிசல் நிவேதனம் செய்த) நிறைவேற்றுபவர் யாராக இருக்க முடியும்? எனக்கு அண்ணன் என்று ஒருவர் இருந்திருந்தால் அவரை நிறைவேற்றச் சொல்லியிருப்பேன். அண்ணனோடு பிறக்கவில்லை. ஆனாலும், என் விருப்பத்தை அண்ணன் ஸ்தானத்தில் நின்று நிறைவேற்றியவர் தாங்கள் தான். ஆகையாலேயே அண்ணா என்று அழைக்கின்றேன் என்றாள். ராமானுஜர் பூரித்து நின்றார்.

ஆண்டாள் திருப்பாவையின் பாடல்களின் தன்னை ஆண்டாள் என்றோ, பெரியாழ்வாரின் மகள் என்றோ நினைந்து பாடாமல், பிருந்தாவனத்தில் உள்ள கோபியரில் ஒருவராகவே கற்பனை செய்து கொண்டு பாடி மகிழ்ந்தாள். நிகழ்காலத்திலும் தன்னை ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தாள்.

அதே போல் ராமானுஜர் ஆண்டாளின் திருப்பாவையை பாடும்போதெல்லாம் தான் ஒரு ஆச்சார்யர் என்றோ, பாஷ்யங்கள் பல எழுதிய குரு ஸ்தானத்தில் இருப்பவர் என்றோ நினையாமல், ஆண்டாள் எண்ணியது போலவே, தானும் ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனையுலகில் சஞ்சரித்து, நிகழ்வுலகில் நடந்துகொள்வார்.

நம்பியின் பெண்ணா? நப்பின்னையா?   
இதே ராமானுஜர் ஒரு சமயம் ஆண்டாளின் பாடல்களைப் பாடிக்கொண்டே, திருக்கோட்டியூர் நம்பியின் (இவரும் ஒரு ஆச்சார்யர் தான்) வீட்டிற்குச் சென்றார். கதவு சார்த்தியிருந்தது.

"செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்" என்ற பாடலை பாடிநின்றார்.

பாசுர ஒலி கேட்டு, வீட்டின் உள்ளேயிருந்த திருக்கோட்டியூர் நம்பியின் பெண் ஆகிய தேவகி, அலங்கார ஆபரணங்கள் பூண்டு, வளையோசை எழும்ப, கதவைத் திறக்கிறார். ஆண்டாள் பாசுரத்தில் இதே போன்ற கட்டம் வரும்போது, ஆண்டாளுக்காக கண்ணனின் மனதுக்கினிய நப்பின்னை கதவைத் திறப்பாள். அவளை ஆண்டாளும் தோழியரும் பக்தியுடன் சேவிப்பார்கள்.

அதே போல இந்தப் பாடல் பாடி முடித்ததும், ராமானுஜருக்கு கதவைத் திறந்தது நம்பியின் பெண் என்று புலனாகாமல், ஆண்டாள் பாசுரங்களில் மூழ்கியிருந்ததால், கதவைத் திறந்த நம்பியின் பெண் "நப்பின்னையாகவே" கண்ணுக்குத் தெரிந்தாள். உடனே நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்து சேவித்தார். நம்பியின் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் ஒரு மஹாநுபாவர் நம் காலில் விழ வேண்டும் என்று பதறியபடியே உள்ளே வந்து தந்தையிடம் நடந்ததைச் சொல்ல, மேதாவிலாசம் கொண்ட அவரும் புன்சிரிப்போடு நடந்ததைப் புரிந்து கொண்டு, அவளிடம் நிலையை விளக்கினார்.

ஆண்டாளின் திருப்பாசுரங்கள் நம்மை ஆண்டுகொள்ளும். நம்மை தெய்வ ஸந்நிதானத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் அமைந்தது.

ஆண்டாள்,
தமிழிலக்கணத்தால் தமிழை ஆண்டாள்,
பக்தியால் பரமனை ஆண்டாள்,
நல்வழிகாட்டியதால் தோழியரை ஆண்டாள்,
ஆழ்வாரை (தந்தையை) ஆண்டாள்,
பரமனோடு கூடியதால், அவளை பக்தியால் பரவும் நம் அனைவரையும் ஆண்டாள்.

திருப்பாவையின் அனைத்து பாடல்களும் தேன் போன்று தெவிட்டாத சுவையுடையது. மார்கழி மாதத்தின் அதிகாலைப் பொழுதில் இதமான பனி உடலைக் குளிர்விக்க, திருப்பாவை பாடல்கள் உள்ளத்தை மிக நிச்சயமாகக் குளிர்விக்கும்.

கூடாரைவல்லி தினத்தன்று, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியுடன் கூடிய பெருமாளை சேவிப்போம். அக்காரவடிசல் அன்னதானத்தில் பங்குகொள்வோம். பக்தி செய்வோம். பயனுறுவோம்.


- நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
http://natarajadeekshidhar.blogspot.in
 yanthralaya@gmail.com
www.facebook.com/deekshidhar
Mobile : 94434 79572

உபரி தகவல் :
ஆண்டாள் இயற்றிய பாடல்களைப் பற்றி பலரும் அலசியிருக்கிறார்கள்.
அவளின் பெண்மை சார்ந்த பாடல்கள் அனைவரையும் மயக்கக் கூடியவை.
lateral thinking வகையைச் சேர்ந்தவை ஆண்டாளின் பாடல்கள்.
திருப்பாவையின் முதல் பாடல் "மார்கழித் திங்கள்... கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ... பாரோர் புகழ படிந்தேலோ ரெம்பாவாய்".
ஒவ்வொரு வார்த்தைக்கும் எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன.
"கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்" - ஆயர்குலத் தலைவராகிய நந்தகோபர் மிகவும் சாதுவாக விளங்கியவர்.
அவரை ஏன் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று ஆண்டாள் சொல்லவேண்டும்? நந்தகோபர் ஒரு எறும்பைக் கண்டால் கூட அதற்கு இம்சை தராமல் இருக்க விருப்பப்படுவாராம். அந்த பரமசாதுவான நந்தகோபர் கண்ணனைத் தூளியில் வைத்து ஆட்டும்போது, தந்தைப் பாசம் மிக்கவராய், ஒரு எறும்பு கூட கண்ணனைத் துன்புறுத்தக் கூடாது என நினைப்பாராம்.அதுவும் எப்படி, தூளியின் கீழே ஒரு எறும்பைக் கண்டால் கூட, அதை, சிங்கத்தை எதிர்க்கவல்ல கொடும் நுனியுள்ள கூரான வேல் கொண்டு, அந்த எறும்பை, தன்னை எதிர்க்க வரும் சிங்கத்துடன் எப்படிப் போராட முனைவாரோ அது போல எறும்பினை தாக்க விழைவாராம். எப்படிப்பட்ட கற்பனை?

அக்காரவடிசல் செய்யும் முறை :நன்றி : ஸ்ரீ தேசிகன்

தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 2 ஆழாக்கு
கடலைப் பருப்பு- 1/2 ஆழாக்கு
பயத்தம் பருப்பு- 1/2 ஆழாக்கு
நெய்- 1 கிலோ
கொதிக்கவைத்த பால்- 4 லிட்டர்
வெல்லம்- 1 கிலோ
முந்திரிப்பருப்பு- தேவையான அளவு
கிஸ்மிஸ்- தேவையான அளவு
ஜாதிபத்திரி- 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர்- அரிசியை வேகவைக்க
செய்முறை:
முதலில் அரிசியை 200 கிராம் நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அத்துடம் கொதிக்கும் நீர் மற்றும் பாலை சேர்க்கவும். அதே நேரத்தில் இன்னொரு வாணலியில் 1 ஆழாக்கு நெய்விட்டு இரண்டு பருப்புகளையும் வறுத்து அரிசிக் கலவையுடன் சேர்த்து வேகவைக்கவும். நன்கு வேகும்வரை அடிக்கடி அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும்.வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து வடிகட்டி வேகவைத்த கலவையுடன் சேர்த்துக் கிளறவும்.மிச்சமிருக்கும் நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொன்னிறமாக வறுக்கவும். ஜாதிபத்திரியையும் சேர்த்து வறுத்து சாதக் கலவையின் மேலே கொட்டிக் கலக்கவும். சூடாகப் பரிமாறவும். [இந்தச் செய்முறை ஸ்ரீ அஹோபில மடம் திருமடைப்பள்ளி தலைமைப் பரிசாரகர் திரு. அப்பு என்பவரால் வழங்கப்பட்டது. கல்யாணவரதன் என்ற பெயருடன் பிரபலமாக ‘அப்பு மாமா’ என்று அறியப்படும் இவர் அஹோபில மடத்தில் தன் 14வது வயதில் சேர்ந்தார். தற்சமயம் தன் எழுபதுகளில், அஹோபில மடத்தில் தலைமைப் பரிசாரகராக இருக்கும் இவர், சமையல் குறிப்புகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.]
kootaaraivalli, koodaraivalli, kudaraivalli, koodarai vellum, kootarai valli, koodaarai valli, koodarai valli, akkaravadisal, akkaraivadisal, akaravadisal, akkaraivadisal.



பாவை நோன்பு நூற்பொம்.
(ஞானஒளி ஆசிரியர் ஸ்ரீ ரங்கநாதன் அவர்கள் அளித்த கட்டுரை)

 ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
 ஸ்ரீரங்கராஜ ஹரிநந்தன யோக த்ருச்யாம்
 ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
 கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே - கோதா ஸ்துதி.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
 பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
 வேங்கடவற் கென்னை விதியென்ற இம்மாற்றம்
 நாங்கடவா வண்ணமே நல்கு. - உய்யக்கொண்டார் பாடல்.


ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் வராக க்ஷேத்திரத்தில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் அவதரித்தார்.  ஸ்ரீ வில்லிப்புத்தூரில் அவரின் நந்தவனத்தில், "பஞ்சவர்ஷா திவ்ய ரூபா திவ்யாபரண பூஷிதா, நீலோத்பலதள ச்யாமா திவ்யாம்பர ஸமாவ்ரதா" என்ற ஸ்தலபுராணத்தின்படி, ஒளி வீசும் முகத்துடனும், அழகே உருவாக, திருத்துழாய் எனும் துளசிச் செடியின் கீழ் பூமா தேவியின் வடிவாக அவதரித்தாள். நள வருஷம் ஆடி மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தசியில் பூரம் நக்ஷத்திரத்துடன் கூடிய செவ்வாய் கிழமை அன்று துளசி வனத்தில் உதித்த அவளுக்கு கோதை என்று பெயரிட்டார். கோதை என்றால் மாலை என்று பொருள்.

குழந்தை முதலே கோதை கண்ணன் மீது பெரும் பக்தி கொண்டாள். அந்த பக்தி நாளாக நாளாக கண்ணன் மீது காதலாக மலர்ந்தது. எங்கு நோக்கிலும் கண்ணனின் திருவுரு தெரிவது போலவே மனம் மாறினாள்; விண்ணின் நீலம் கண்டால் அது கண்ணனின் நிறம் என்பாள்; அழகு மலரைக் கண்டால் அது கண்ணனின் கண் என்பாள். கண்ணனையை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்றே காலம் நகர்த்தினாள். வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து என்ற பாடல் மூலம் ஆயிரம் யானைகள் சூழ, உறவினர்கள் புடை சூழ கண்ணனை திருமணம் புரிய வேண்டும் என்று கனவு காண்கின்றாள்.

பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுத்துக் கொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணடியில் அழகு பார்த்து, இது பெருமாளுக்கு உகந்ததாக இருக்கும் என்று தோன்றியபிறகுதான் மாலையைக் கொடுத்தனுப்புவாளாம். ஒரு நாள் இதை பெரியாழ்வார் பார்த்துவிட்டு மிகவும் வேதனையுற்று மாலையைத் தானே எடுத்துகொண்டு போனபோது பெருமாள் கோதை கொடுக்கும் மாலையைத்தான் அணிவேன் என்று கூறினார்.

பெரியாழ்வார் வியந்து, நம் பெண் மானிடப் பிறவி இல்லை; ஒருவேளை பூமித் தாயாராக இருக்கலாம் என்று எண்ணி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயரிட்டு அழைத்தார். அவளுக்கு மணப்பருவம் நெருங்க, நீ யாரை மணம் செய்துகொள்வாய் என்று தந்தை பெரியாழ்வார் வினவ, அவள்

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடர்வக் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே.

என்று சொல்லிவிட்டாள். ஸ்ரீ அரங்கனாதனைத்தான் மணம் புரிவேன் என்றாளாம். இது எப்படி சாத்தியம் என்று பெரியாழ்வார் நினைக்க பெருமாளே அவர் கனவில் வந்து கோதையைத்  திருவரங்கத்திற்கு அழைத்து வா என்று உத்திரவு இட்டார். ஆழ்வாரும் அப்படியே செய்ய, கோதை பகவானிடம் ஐக்கியமாகி மறைந்துவிட்டாள். இது நடந்தது பங்குனி உத்திரத்தன்று.

தெய்வத்தை மணக்கும் பெண் தெய்வீகம் பொருந்தியிருக்க வேண்டும். மானிடருக்குப் பிறந்தவளாக இருக்கக்கூடாது என்ற சீரிய எண்ணத்தில் ஜனக மஹாராஜா சீதையை பூமியில் கண்டெடுக்கப்பட்டதுபோல் கண்டெடுக்கப்படுகிறாள். நாச்சியார் திருமொழியில் வரும் பாடல்கள் அனைத்தும் திருமாலை விரும்பி அவருடன் ஐக்கியமாகிவிடும் இச்சையை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல்கள். எப்படியாவது என்னைத் திருமாலிடம் சேர்த்துவிடு என்று காமதேவனை வேண்டிக்கொண்டு நோன்பெடுக்கும் பாடல்களில் துவங்குகிறது நாச்சியார் திருமொழி. அதன்பின் கண்ணனின் லீலைகளில் திளைக்கும் பாடல்கள்; தரையில் வட்டம் வரைந்து அது கூடினால் கண்ணன் என்னுடன் கூடுவான் போன்ற கவிதைத்தனமான விருப்பங்கள்; மேகங்களையும் குயில்களையும் கார்கோடற் பூக்களையும் விளித்து திருமாலைப் பற்றி பேசுவது;வாரணமாயிரம் சூழ வலம் செய்யும் கல்யாணத்தைக் கனவு காண்பது; அவன் ஆடையைக் கொண்டு என்மேல் வீசுங்கள், அவன் திருத்துழாயை என் குழலில் சூட்டுங்கள், அவன் மாலையை என் மார்பில் புரட்டுங்கள், அவன் வாய் நீரைப் பருகக் கொடுங்கள், அவன் குழல் ஊதிய துளைவாய் நீரை என் முகத்தில் தடவுங்கள், அவன் அடிப்பொடியை என் மேல் பூசுங்கள்; இப்படி ஆண்டாள் பாசுரங்கள் அனைத்தும் அமைந்திருக்கிறது.

ஆண்டாளின் திருப்பாவையிலுள்ள முப்பது பாடல்களிலும், தோழியரை அதிகாலைப் பொழுதில் எழச் செய்து கண்ணனைக் காண அழைக்கும் பாடல்களாகவும், பாவை நோன்பின் மாண்பினையும், நோன்பு இருந்தால் மாதம் மும்மாரியும், நல்வாழ்க்கையும் கிடைக்கும் என்பதும் விபரமாக இருக்கிறது. ஆண்டாளின் பாடல்கள் இயற்றரவிணை கொச்சகக்கலிப்பா என்று சொல்கின்றார்கள். மிகக் கடினமான யாப்பு வகையைச் சேர்ந்தது. ஒரு பெண் அந்தக் காலத்தில் இப்படி யாத்தது மிகவும் ஆச்சர்யம் அளிக்கின்றது. ஆண்டாள் அருளியது திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி. ஆண்டாளின் திருப்பாவையில் பெண்மையின் குணங்களும், மென்மையும், நளினமும் நிறைந்திருக்கிறது. காக்கைப்பாடினியார், காரைக்காலம்மையார் போன்ற பெண் புலவர்கள் எழுதியது இலக்கியமும், பக்தியும் சேர்ந்தது. ஆனால், ஆண்டாளின் பாடல்களின் கண்ணனை மட்டுமே அடைய வேண்டும் என்ற காதல் வேட்கையில் பாடும் பாடல்களில் காதலும் கவினுற சேர்கின்றது.

ஜெயதேவர் தன் அஷ்டபதியில் நாயகன் நாயகி பா(ba)வனையில் எழுதியிருந்தாலும், ஆண்டாள் - ஒரு பெண்ணின் கோணத்திலிருந்து பரமனைக் காதலால் பாடுவது அருமையாகவும் இயற்கையாகவும் அமைகின்றது.

திருப்பாவை நமக்கு நினைவூட்டுவது மார்கழி மாதத்தில் வரும் பாவை நோன்பு . இளம் சிறுமியர், மார்கழி மாதம் விடியலுக்குமுன் எழுந்து, ஆற்றங்கரை சென்று, குளிர்ந்த ஆற்று நீரில் நீராடி, ஆற்று மணலில் பாவை எனும் பொம்மை செய்து, அதற்குப் பூச்சூட்டி  வழிபடுதல் பாவை நோன்பின் சிறப்பு அம்சம்.  இந்த மாதத்தின் முப்பது நாட்களில் செய்யும் நோன்பிற்குப் பின் சில அறிய கருத்துக்கள் புதைந்துள்ளன. சந்தோஷமும் வளமும் மிக்க வாழ்க்கையை வேண்டியும் பகவானிடம் சரணாகதி அடைந்து அவனைச் சேர்ந்தடைவதும் சிறுமியர்களின் பிரார்த்தனை.  எல்லோரும் இன்புற்று இருக்க வானம் மாதம் மும்மாறி பொழிய வேண்டும் என்ற பிரார்த்தனையும் செய்யப்படுகிறது..

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் " மாஸாநாம் மார்கசீர்ஷ:" என்று மாதங்களில் மார்கழி என் ஸ்வரூபம் சொல்லியுள்ளார். மாஹாபாரத காலத்தில் மார்கழிதான் முதல் மாதம்.
( அனு. பர்வம் 106,109), ஆகவே மாதங்களில் முதலானது இந்த மார்கழி மாதம்.  இந்த மாதத்தில் செய்யப்படும் விரதங்கள், ஹோமங்கள் எல்லாம் சிறந்த பலனளிக்கும் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.  ஸ்ரீ மத் பாகவத்தில் ஒரு ஸ்லோகம் :
" ஸூக்லே மார்கஸிரே பக்ஷே யோக்ஷித்பர்துரநுஜ்ஞயா
  ஆரபேத வ்ரதமிதம் ஸார்வகாமிகமாதித  ||  "
முதன் முதல் மார்கழி சுக்ல பக்ஷத்தில் தன் கணவன் அநுமதி பெற்றுக்கொண்டு மனைவி எல்லா விருப்பங்களையும் தரவல்ல விரதத்தை ஆரம்பிக்கவேண்டும் என்பது
பொருள். கோகுலத்தில், யமுனை நதிக்கரையில் காத்தியாயினி தேவியின் பாவை செய்து சிறுமிகள் நோன்பு நூற்றதாக பாகவதம் கூறுகிறது. கோபிகள் கண்ணனைத்
தன் கணவனாக அடைய ஏங்கினார்கள் என்று பாகவதம் கூறுகிறது.

தென்னாட்டில்,  கண்ணனை மையமாகக் கொண்டு சிறுமிகள் , குழந்தைப் பருவத்தில், நோன்பு கடைப்பிடிக்கிறார்கள். கண்ணனைப் பதியாக அடையவேண்டி இருக்கும் விரதமே இது. இன்னும் எத்தனைப் பிறவி எடுத்தாலும் கண்ணனையே கணவனாக அடையவேண்டும் என்று பாடுகிறார்கள். பரமாத்மாவையே கணவனாக
அடைய விரும்பும் சிறுமிகளின் ஆர்வமும் ஏக்கமும் தெளிவாகக் காணப்படுகிறது. ஜீவாத்மா-பரமாத்மா ஐக்கிய நிலையை அடைவதே மார்கழி நோன்பின் குறிக்கோள்
என்பது தத்துவார்த்தம் என்றாலும், இகத்தில் பெண்களின் இனிமையான கல்யாண வாழ்க்கை அமைவதற்கு திருப்பாவை ஓதுதலும், பாவை நோன்பும் அவசியம். இதைத்
தவிர, வரும் வருஷத்தில் மாதம் மும்மாறி மழை பெய்து, பயிற்களும் தாவர இனங்களும் வளர்ந்து பசு, மனிதன், மற்ற ஜீவர்களும் வளமுடன் வாழ கடவுளை
வேண்டிக்கொள்ளும் உயரிய நோக்கத்தைத் தன்னகத்தே கொண்டது இந்நோம்பு, " நாடெல்லாம் தீங்கு இன்றி இருக்கும்; மாதம் மும்மாறி பெய்யும் ;செந்நெல் சிறப்பாக
விளையும்; பசுக்கள் நிறைய பால் கறக்கும்; அங்கும் செல்வம் நிறையும் " என்று மூன்றாம் பாடல் சொல்கின்றது.

ஸத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் ஒரு தடவை திருப்பத்தூர் சென்றபோது கோமதி மார்கபந்து என்னும் பக்தை  "வாரணமாயிரம்" என்று தொடங்கும் ஆண்டாள் திருக்கல்யாண பாசுரங்களைப் பாடினார்.  ஸ்வாமிகள் மனமகிழ்ச்சி அடைந்து சொன்னதாவது :" இந்தப் பாசுரங்களை எல்லோரும் பாராயணம் செய்யலாம். முக்கியமாக, கன்னிப் பெண்கள் இதைப் பக்தியுடன் பாடினால், அவர்களுக்குக் கல்யாணப்ராப்தி கண்ணன் அருளால் கிடைக்கும் ". நாச்சியார் திருமொழியில்,
 வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான். 
கோவிந்தனாகிய காளைவரக் கனாக்கண்டேன்

என்று தொடங்கும் பாடல் பிரசித்தம்.


“நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்” என்ன பயன் என்று ஆரம்பித்திலேயே ஆண்டாள் தெரிவிக்கிறாள். அதன் பயன், “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்தல்” என்பதே. பாவை நோன்பிருந்தால் மாதம் மூன்று முறை மழை பொழியும்.

நான்காவது திருப்பாவையில் மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிப்பதை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
பாழியந்தோளுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

வருண தேவனே சிறிதும் கைகரவேல். சமுத்திரத்தினுள்ளே புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு இடிஇடித்து ஆகாயத்தில் ஏறி மாலின் திருமேனிபோல் கறுப்பாகி அழகான தோள் கொண்ட பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல மின்னலடித்து அவனுடைய சங்கம் போல அதிர்ந்து முழங்க அவனுடைய சக்கரத்தால் சிதறப்பட்ட சரங்கள் போல மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ நாங்களும் அந்த மழையில் நனையப் பொழிவாயாக. இது ஆண்டாளின் விஞ்ஞானப் பார்வை.

வசிஷ்டர், காஷ்யபர் போன்ற முனிவர்கள் சொன்ன ஒரு கருத்து, பின்னாளில், வராஹமிஹிரரால் மனித குலம் அறியும்வண்ணம் எழுதி வைக்கப்பட்ட ஒரு கருத்து-  மார்கழி மாதம் வைகறைப் பொழுது தொடங்கி காணப்படும் சில இயற்கைச் சூழ்நிலைகள், ஆறு மாதங்கள் கழித்து, வளமான மழைக்காலம் வருவதற்கு ஏதுவாகும் என்பது. இந்த இயற்கைச் சூழ்நிலைகள் உண்டாவதற்கு, ஆண்டாள் கூறுவது போன்ற ‘கீசு கீசு’ என்னும் ஆனைச் சாத்தான், சிலும்பும் புள்ளினங்கள், கொட்டில் விட்டு வெளி வரும் எருமைக் கன்றுகள் எழுப்பும் ஓசைகள் – அவை தவிர ஆற்று நீரில் கூக்குரலிட்டு நீராடி, பாவை விளையாடும் சிறுமியர் எழுப்பும் இனிய குரலோசை போன்றவை முக்கியத் தேவைகள்.

மூவகையில் கவனிக்கப்படும் இயற்கைச் சூழ்நிலையில், முதல் வகை மேலே கூறப்பட்ட வைகறைப் பொழுதின் சலசலப்புகள். நீர் சம்பந்தப்படும்படி, விடியலுக்கு முன்னரே வாசல் தெளித்துக் கோலமிடுவதும் இதில் அடக்கம். மக்கள் கூட்டத்தையும் சேர்த்து உயிரினங்கள் பலவும் வைகறைக் குளிரை வெப்பப்படுத்த வேண்டும். நடமாடுவதன் மூலமும் நீரை அளைப்பதன் மூலமும் ஓசையின் மூலமும் இது செய்யப்படுகிறது. மக்கள் தொகுதியைப் பொருத்த மட்டில், காவலும் கண்டிப்பும் இல்லாத நிலையில் கூவித் திரிந்து விளையாடும் இளம் சிறுமியரின் பொம்மை விளையாட்டும், மணல் விளையாட்டும், ஆற்று நீராட்டமும் இந்த இயற்கைச் சூழலுக்கு ஒத்துப் போகின்றன. இதனால்தான், பெண் குழந்தைகளை ஈடுபடுத்தும் வண்ணம் விளையாட்டாக இந்த நோன்பினை முனிவர்கள்அமைத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இரண்டாவது வகை, காற்று மண்டலம், மேகக்கூட்டம், வைகறையின் வண்ணங்கள் முதலியன. கீழ் வானம் வெள்ளென்று இருக்கும் நிலையை ஆண்டாள் சொல்வது,(பாசுரம் 8 ) முக்கிய இயற்கைக் குறிப்பு. மார்கழி மாதம், விடியல் நேரத்தில் வானம் வெண்ணிறமாக இருக்க வேண்டும், மாறாக சிவந்து இருந்தால் மாரிக் கால மழை ஓரளவேனும் அடிபடும் என்று அறியப்பட வேண்டும். சிவந்த விடியல் வானம் தை, மாசி மாதங்களில் நல்லது. ஆனால் மார்கழியில் வைகறை வானம் தூய்மையாய், வெண்ணிற மலர் போல இருக்க வேண்டும் என்பது முனிவர்கள் கருத்து. காற்று மெலிதாக வீச வேண்டும். மெல்லிய மேகக் கீறுகள் வானில் தென்பட வேண்டும். முக்கியமாக பனிப் படலம் கூடாது. தை பிறந்தபின் பனி வர வேண்டும். மார்கழியில் அல்ல. தற்சமயம், நம் நாட்டின் பல பகுதிகளில் பனிப் படலம் தென்படுவது, அடுத்த மழைக்காலம் குறைவுடையது என்பதை முன்கூட்டியே காட்டும் ஒருகாலம்- காட்டி.

மூன்றாவது வகை வான்வெளியில் உள்ள கிரக அமைப்புகள். ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ (பாசுரம் 13 ) என்று ஆண்டாள் கூறியது சாதாரணச் செய்தி அல்ல. மார்கழி மாத சூழ்நிலை வகை தெரிந்துதான் அவள் ஒவ்வொன்றையும் பாடியிருக்கிறாள். மார்கழி விடியல் நேரத்தில், ஒரு கிரகம் உதித்து, மற்றொரு கிரகம் அஸ்தமனம் அடைவது விண்வெளி குறித்த நல்ல காரணியாகும். வரப் போகும் மாரிக் காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இது ஒரு முன்-காட்டி. கிரகங்கள் நீச்சமடையாமல் இருப்பதும், கிரக யுத்தம் என்று சொல்லும்படி கிரகங்கள் கூடி இல்லாமல் இருப்பதும், கிரஹணங்கள் ஏற்படாமல் இருப்பதும், அடுத்த மாரியின் வளப்பமான பொழிதலை உறுதிப்படுத்துவது ஆகும்.

தற்சமயம் மார்கழியில் இருக்கும் இம்மூவகை நிலையை எண்ணிப்பார்த்தே, அடுத்த ஆண்டின் மழை எப்படி இருக்கும் என்று வாசகர்கள் கணித்துவிடலாம். இந்த் வகையில் கணித்தவர்கள்தான் நம் தமிழ் முன்னோர்.

பாவை நோன்புக்கும், மழைக்கும் உள்ள தொடர்பு அறிந்த நம் முன்னோர், சரியான காலத்தில், சரியான அளவில் மழைக் காலம் தொடங்கி விட்டது என்று திருப்திபடுவதுடன் அல்லாமல், அடுத்த மார்கழியையும் சரியாகவே வரவேற்போம் என்று வரவேற்றனர். பாவை நோன்பைப் பற்றி பரிபாடல் பாடியுள்ள ஆசிரியர் நல்லந்துவனார், ஆவணித் திங்கள் அவிட்ட நாளில் கோள்கள் நிலை சொல்லி, இவ்வாறு அமையப் பெறவே, சைய மலையின்கண் மழை துவங்கும் என்பது உறுதி என்னும் விதிப்படி, மழை பெய்யலாயிற்று என்றார். அதனுடன் நில்லாமல், அதற்கடுத்த மார்கழியில், எவ்வாறு மக்கள் ஆர்வத்துடன் பாவை நோன்பிருந்தனர் என்றும் விவரிக்கின்றார். ( தகவல் - ஜெயஸ்ரீ சாரநாதன் ,"தமிழ் ஹிந்து ")

5வது பாசுரத்தில் ஆண்டாள் சொல்கிறாள் - நம் பாவங்கள் எல்லாம் நெருப்பில் பட்ட பஞ்சு போல தூசாகும். 21வது பாசுரத்தில் விரோதிகள் பலமிழந்து உன்னைச் சரணடைகிறார்கள் என்பது நம்முள் உறைந்திருக்கும் காம்க்ரோத உட்பகையைக் குறிக்கின்றது. " எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்" என்ற 22வது பாடலில்
பாவங்களைப் போக்குமாறு வேண்டுகிறார்கள்.

பகவானின் அவதாரங்களை விவரிக்கும் பாசுரங்கள் - 1 (கண்ணன்), 6 ( நாராயணன்), 7 (கேசவன்), 9 ( மாதவன், வைகுந்தன்), 12 (ராமன்), 24 (வாமனர் ), 27 (கோவிந்தன்).

சூரியன் மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதத்தில் இருக்கும்போது மார்கழி மாதம் என்றும், உத்திராடம் 1ம் பாதத்தைக் கடந்து 2ம் பாதத்திற்கு செல்கின்றன நாள் மகர ஸங்கிரமனம் அல்லது உத்திராயனம் என்று அழைக்கிறோம்.  மார்கழி மாதத்தில்தான்  விஷ்ணு, சிவன் சம்பந்தமான பண்டிகைகள் வருகின்றன.  ஸ்ரீ தத்த ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், ஐயப்ப - சபரி மலை- விரதம் என்பவையெல்லாம் மார்கழியில்தான்.

சூரியன் மூலா நக்ஷத்திரத்தைக் கடப்பது வானியலில் (Astronomy ) ஒரு முக்கியமான உண்மையைச் சுட்டிகாட்டுகிறது. மூலம் star பால் வீதியின் மையத்தின் திசையில் உள்ளது ( Moolam star is in the direction of the centre of the  galaxy, the ksheera sagara or milky way ).  வைஷ்ணவர்கள் , ஸ்ரீ மஹா விஷ்ணு க்ஷீர சாகரத்தில் இருப்பதாலும் மூலா நக்ஷத்திரத்தில் இருக்கும் சூரியன் மஹா விஷ்ணு இருக்கும் திசையாகிய வைகுண்டத்தைக் காட்டுவதாலும், இந்த மாதத்தில் வரும் ஏகாதசியை முக்தி தரும் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

ஸ்கந்த புராணத்தில் ஆருத்ரா தரிசனத்தைப் பற்றிய விவரத்தைக் காணலாம். ஆருத்ரா நக்ஷத்திரத்திற்குத் தேவதை ஸ்ரீ ருத்ரன். பௌர்ணலியன்று சந்திரன் ஆருத்ரா நக்ஷத்திரத்தில் பிரவேசிக்க, சூரியன் தனுர் ராசியில் பிரகாசிக்கும்போது,  விடியற்காலையில், பூரண சந்திரன் இருக்கையில், சிவ தரிசனம் செய்வது ஆருத்ரா தரிசனம்.  வருஷத்தில் அன்றுதான் இரவு நேரம் அதிகம் ,

திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை விடியற்காலையில் பாடிக்கொண்டு பக்தர்கள் வீதிவீதியாகச் செல்வதற்குக் காரணம் இதுதானோ !. ஒலி அதிர்வுகளின் உபயோகத்தை நமது முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள். நமது சடங்குகள், சம்பிரதாயங்கள், வேத விதிகள் யாவற்றிலும் விஞ்ஞானம் புதைந்துள்ளது.


பாவை நோன்பு செய்யும் முறை

ஆண்டாளின் பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள்) எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைப்பிடிக்கக் கூடியவை

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

“நெய் கிடையாது, பால் கிடையாது, கண்ணுக்கு மை கிடையாது. கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்ய மாட்டோ ம், கோள் சொல்ல மாட்டோம் (குறளை), அதிகாலையில் (நாட்காலே) குளித்துவிட்டு தகுந்தவர்களுக்குப் பொருளும் பிச்சையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு (ஆந்தனையும்) கொடுப்போம். இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது எம் பாவை நோன்பு.”

அதற்காகத் தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாட சங்கதிகள் பல நம்மை பிரமிக்க வைக்கின்றன. இங்கு தியாகம்
வலியுறுத்தப்படுகிறது.  சிறு வயதிலேயே புலன்கள் அடக்கி, ஆண்டாள் சொன்னது போல, மை இடுதலையும், மலர் சூடுதலையும், தங்களை அழகுபடுத்திக் கொள்வதையும் விடுத்து, நெய் சோறும், பால் சோறும் விரும்பி உண்ணும் அந்தப் பருவத்தில் அவற்றையும் விட்டொழித்து, இனிய தூக்கத்தையும் கலைத்துக் கொண்டு, குளிரையும் பொருட்படுத்தாமல், சில்லிடும் ஆற்று நீரில் குளித்து நோன்பிருக்கிறார்களே, இதுவே தவம். தேவாதிதேவர்கள் உலாவி வரும் வேளையில் ஆண்டவனைத் துதித்துப்
பாடுவது நற்சிந்தனையைத் தரும்.

தவத்தினாலும், தியாகத்தினாலும் வரும் பலன்கள் ஸாஸ்வதமானவை; தவிர எது நிரந்தர சுகமோ அது கிடைக்கும். ஆண்டவனிடம் கலப்பதுவே அழியாத பேரின்பம்.

மார்கழி மாதம் பௌர்ணமியன்று பாவை நோன்பைத் தொடங்குவர். அன்று திருவாதிரை நட்சத்திரத்தில், நிலவு பூரணம் அடையும். ஆதி இறை என்பதாலும், திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி என்பதாலும், ஆதிரையான் என அழைக்கப்பட்ட முக்கண்ணன், திருவாதிரையன்று வணங்கப்படுபவன். அக்கடவுளே மழை பொழிய அருள்பவன். அதனால், திருவாதிரை நட்சத்திரத்தில், சந்திரனானது முழுமை அடையும் மார்கழி மாதப் பௌர்ணமியன்று, ஆற்றங்கரைதோறும் ஹோமத்தீ வளர்த்து, ஆதிரையானுக்கு பூசை செய்து, பாவை நோன்பினைத் துவக்குவர். அன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து, சூரியன் அதே ஆதிரை நட்சத்திரத்தில் நுழையும் போது இருக்கும் கால, நேரம், நாள்,ஹோரை ஆகியவற்றின் அடிப்படையில், மாரிக்காலம் எப்படி இருக்கும் என்று மீண்டும் கணிக்கப்பட்டு, உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில்தான் என்ன பயிரிடுவது, எப்பொழுது பயிரிடுவது என்று முடிவு செய்வர். பாவை நோன்பின் போது, சரிவர பூசனைகள் செய்வதாலும் நேர்த்தியாக நோன்பிருப்பதாலும் வரப்போகும் மாரிக்காலம் வளமாக இருக்கும் என்பது இந்த நோன்பில் பிணைந்துள்ள கருத்து.

அந்தப் பௌர்ணமியன்று ஆரம்பிக்கும் பாவை நோன்பு அன்றுடன் முடிவதில்லை. ஆண்டாள் கூறும் முறைப்படி, மார்கழி முழுவதும், ஆற்றங்கரையில் நோன்பிருக்கப்பட்டது. அது தை, மாசி மாதங்களிலும் தொடர்ந்திருக்கின்றது. பங்குனி நாள் வரை என்று நாச்சியார் திருமொழியில், இரண்டு இடங்களில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள். மழைத் தொடர்பு வகையில் பார்த்தால், மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் இருக்கும் மூன்று வகைப்பட்ட இயற்கைச் சூழ்நிலையைப் பொருத்தே, ஆவணி மாதம் தொடங்கி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை உட்பட நான்கு மாதங்களிலும் மழை இருக்கும். மார்கழி தொடங்கி நான்கு மாதங்களிலும், என்றெல்லாம் மூவகைச் சூழ்நிலைகள் நன்றாக இருந்தனவோ, அன்றிலிருந்து 195ஆம் நாள் நல்ல மழை பொழியும். இதன் அடிப்படையில், பங்குனி வரை நோன்பு தொடர்ந்திருக்க வேண்டும்.

பிறகு, பங்குனி உத்திரம் என்னும்  பங்குனி மாதப் பௌர்ணமி. அன்றுதான் காமன் பண்டிகை. காதலர்களை காமதேவன் சேர்த்து வைத்த நாள். அன்றுதான், யார் காரணமாக காமதேவன் மலர்க்கணை தொடுத்து, அதனால் சிவனால் எரிக்கப்பட்டு, அனங்கன் என்று ‘உருவம் இல்லாதவன்’ என்னும் பெயர் பெற்றானோ, அந்தப் பார்வதி, பரமசிவனை மணந்த நாள். அதுவே, ராமன் சீதையை மணந்த நாள். பாற்கடலில் ஸ்ரீதேவி தோன்றிய நாள், அது மட்டுமல்ல, அந்த நாராயணனையே மணந்த நாள். அரங்கநகர் பெருமான், தாயாரை மணந்த நாளும் அதுவே. அந்தப் பங்குனி உத்திரப் பெரு விழா ஸ்ரீரங்கத்தில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்திருக்கின்றது என்று அக நானுறும் பறை சாற்றும் திருநாள். அன்றுதான் ஆண்டாளும், அரங்கனை மணந்தாள். அந்நாளே சேர்த்தி – திருமணப் பிணைப்பில் சேர்த்து வைக்கும் நாள் எனப்படுகிறது.

ஹோலிப் பண்டிகையன்று கொண்டாடப்படும், பங்குனி உத்திரமே பாவை நோன்பின் முடிவு நாள். திருமணப் பருவத்தில் இருக்கும் கன்னியர் மார்கழியில் இந்த நோன்பை ஆரம்பிக்க, அடுத்த மூன்று மாதத்திற்குள் அவர்களுக்கு வரன் அமைந்து, பங்குனி உத்திரத்திற்குள் மண வாழ்கை அமைய முன்னேற்பாடுகள் நடந்து விடும். மார்கழி மாதத்திற்கு அடுத்ததாக வருவது தை மாதம். இதைத்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றனர் நம் முன்னோர்.

பாவை உருவம்

மணலில் பாவை என்னும் பொம்மை செய்வர் என்று பார்த்தோம். அது என்ன பொம்மை என்று வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தில், காத்தியாயினி என்னும் பெண் தெய்வத்தைப் பாவையாக வடிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. நம் தமிழ் நாட்டில் ஆண்டாள் என்ன செய்திருப்பாள் ?

அந்த உருவம் கொண்டவனே அவள் கணவனாவான் என்று ஒரு பிரார்த்தனை. இது பிறவி தோறும் பாவை நோன்பு நோற்பதனால் ஏற்படும் பயனைத் தெரிவிப்பதாக இருக்கின்றது. இப்பிறவியில்  வரப்போகும் கணவன், முன் பிறவியிலும், இவளுக்குக் கணவனாக இருந்திருக்கின்றான். இவளது ஆழ் மனதில் பதிந்துள்ள அவன் உருவத்தையே பாவை நோன்பின்போது, மணலில் பாவையாக வடித்துள்ளாள். அவள் கணவன் அவனே என்று அவள் உறுதியாக அவ்விடத்திலேயே இருந்ததை, அவள் நோன்பினை ஏற்றுக்கொண்ட ஆற்று நீர் அதை சிதறடிக்காமல் செல்கிறது.

இந்த வகையில் சிந்திக்கும் போது, ஆண்டாள் வடிவமைத்த பாவை நிச்சயமாக கண்ணன் அல்லது விஷ்ணுவின் அவதாரங்களாகவோதான் இருந்திருக்கவேண்டும். அவள்
இலக்குமி தேவியாதலால், மஹாவிஷ்னுவின் பாவையைத்தான் வடித்து வழிபட்டிருக்கவேண்டும். விஷ்ணுவின் அவதாரங்கள் சில திருப்பாவையில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும் கண்ணன் என்றே பல இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் கூறும் உலகம் என்று மட்டுமல்லாமல், யமுனைக் கரையிலும், இந்த நோன்பு செய்யப்பட்டது என்பதால், இது, மழையை நம்பி இருக்கும் எல்லா இடங்களிலும் பொதுநலம் கருதி, ஆன்மிகமும் இணைத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். மழைக்குக் காரணன் இந்திரன். மழையை நம்பி இருக்கும் நிலங்களில் அவனுக்குப் பெயர் உண்டு. பாகவதத்தில் வரும் ஒரு குறிப்பில், இமயமலைப் பகுதியில் யாரும் இந்திரனை நம்பி இல்லை. ஊற்று நீரும், பனி உருகிய நீருமே அவர்களுக்குப் போதும் என்று வருகிறது. அந்த இமயப் பகுதியில் சேடி நாட்டைச் சேர்ந்த புது மணத் தம்பதியர், காமன் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, புகார் நகரில் இந்திர விழா காணப் புறப்பட்டனர் என்று சிலப்பதிகாரம் கூறிகிறது.

பங்குனி உத்திரத்தில் வரும் காமன் பண்டிகை இமயத்தில் பிரசித்தமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை – அது பார்வதியின் பிறந்தகமாக இருக்கவே. தென் கோடியிலும் காமன் பண்டிகை, வட கோடியிலும் காமன் பண்டிகை. மனமொத்த மண வாழ்க்கையை விரும்பும் மக்கள், பாரதத்தில் எங்கிருந்தாலும், காமதேவனைக் குறித்து ஏதேனும் தவமோ நோன்போ இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்திர விழா என்பது மழையை எதிர் நோக்கி வாழும் தமிழ் பூமியில் நடந்திருக்கின்றது.

இந்திரனுக்கும் சேடி நாட்டுக்கும் ஒரு தொடர்புண்டு. இந்திரக் கொடியை நாராயணனிடமிருந்து இந்திரன் பெற்றுக் கொள்கிறான். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொடியை சேடி நாட்டவரிடம் இந்திரன் கொடுத்ததாக வராஹா மிஹிரர் கூறுகிறார்.

ஆண்டாளின் மஹிமை கீழ்கண்ட நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுகிறது.

ஆண்டாளுக்குப் பின் பிறந்தவர் ஆண்டாளின் அண்ணன் ஆன சம்பவம் இது. மிகவும் சுவையான சம்பவம்.  வைணவ ஆச்சார்யர்களுள் மிக முக்கியமானவராகப் போற்றப்படக்கூடியவர் ஸ்ரீ ராமானுஜர். வைணவத்தை மேலும் தமிழகத்தில் ஆழமாக பரப்பியவர். ஆண்டாளின் மீதும், அவளின் பாசுரங்களின் மீதும் பெரும் பக்தி கொண்டவர். "திருப்பாவை ஜீயர்" என்றே போற்றப்பட்டார்.

ராமானுஜர் திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயில்) ஆண்டாளின் பாடலில் உள்ள வேண்டுதலுக்கேற்ப,
 "நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
 நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ"
நூறு தடா (தடா என்றால் பெரிய அடுக்கு அல்லது பெரிய குவளை அல்லது பெரிய அண்டா) முழுக்க அக்காரவடிசலும், வெண்ணையும் சேர்த்து நிவேதனம் செய்தார். ஆண்டாள் எண்ணிய செயலை இவர் செய்து காட்டினார்.


ஒவ்வொரு க்ஷேத்ரமாக சேவித்துக்கொண்டு, பிறகு ஸ்ரீ வில்லிப்புத்தூர் வந்து பெருமானை சேவிக்கவந்தார். கோயிலினுள் நுழைந்ததுமே, "வாரும் என் அண்ணலே" என்ற அழகிய பெண் குரல் ஒன்று இவரை நோக்கி அழைத்தது. சுற்று முற்றும் பார்த்தார். யாரும் இல்லை. மீண்டும் மீண்டும் அந்த அழகிய குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. யாராக இருக்கும் என்று ஆவலுடன் பார்க்க, அங்கே கருவறையிலிருந்து ஆண்டாள் அழகாக அசைந்து வந்து, "வாருங்கள் என் அண்ணா" என்று அழைத்தாள்.
பக்தியுடன் பரவினார் ராமானுஜர். ஆண்டாளுக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்தவர் ராமானுஜர். தம்பி என்றல்லவோ ஆண்டாள் அழைக்க வேண்டும். ஏன் அண்ணன் என்று அழைத்தார்? அதற்கு பதிலும் அவளே சொல்கின்றாள்.  என் எண்ணத்தை ,நூறு பெரிய அடுக்குகள் முழுக்க அக்காரவடிசல் நிவேதனம் செய்த) நிறைவேற்றுபவர் யாராக இருக்க முடியும்? எனக்கு அண்ணன் என்று ஒருவர் இருந்திருந்தால் அவரை நிறைவேற்றச் சொல்லியிருப்பேன். அண்ணனோடு பிறக்கவில்லை. ஆனாலும், என் விருப்பத்தை அண்ணன் ஸ்தானத்தில் நின்று நிறைவேற்றியவர் தாங்கள்தான். ஆகையாலேயே அண்ணா என்று அழைக்கின்றேன் என்றாள். ராமானுஜர் பூரித்து நின்றார்.

ஆண்டாள் திருப்பாவையின் பாடல்களின் தன்னை ஆண்டாள் என்றோ, பெரியாழ்வாரின் மகள் என்றோ நினைந்து பாடாமல், பிருந்தாவனத்தில் உள்ள கோபியரில் ஒருவராகவே கற்பனை செய்து கொண்டு பாடி மகிழ்ந்தாள். நிகழ்காலத்திலும் தன்னை ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தாள்.

அதே போல் ராமானுஜர் ஆண்டாளின் திருப்பாவையை பாடும்போதெல்லாம் தான் ஒரு ஆச்சார்யர் என்றோ, பாஷ்யங்கள் பல எழுதிய குரு ஸ்தானத்தில் இருப்பவர் என்றோ நினையாமல், ஆண்டாள் எண்ணியது போலவே, தானும் ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனையுலகில் சஞ்சரித்து, நிகழ்வுலகில் நடந்துகொள்வார்.

நம்பியின் பெண்ணா? நப்பின்னையா?இதே ராமானுஜர் ஒரு சமயம் ஆண்டாளின் பாடல்களைப் பாடிக்கொண்டே, திருக்கோட்டியூர் நம்பியின் (இவரும் ஒரு ஆச்சார்யர்தான்) வீட்டிற்குச் சென்றார். கதவு சார்த்தியிருந்தது.

 "செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்" என்ற பாடலை பாடிநின்றார்.

பாசுர ஒலி கேட்டு, வீட்டின் உள்ளேயிருந்த திருக்கோட்டியூர் நம்பியின் பெண்ணாகிய தேவகி, அலங்கார ஆபரணங்கள் பூண்டு, வளையோசை எழும்ப, கதவைத் திறக்கிறார். ஆண்டாள் பாசுரத்தில் இதே போன்ற கட்டம் வரும்போது, ஆண்டாளுக்காக கண்ணனின் மனதுக்கினிய நப்பின்னை கதவைத் திறப்பாள். அவளை ஆண்டாளும் தோழியரும் பக்தியுடன் சேவிப்பார்கள்.

அதே போல இந்தப் பாடல் பாடி முடித்ததும், ராமானுஜருக்கு கதவைத் திறந்தது நம்பியின் பெண் என்று புலனாகாமல், ஆண்டாள் பாசுரங்களில் மூழ்கியிருந்ததால், கதவைத் திறந்த நம்பியின் பெண் "நப்பின்னையாகவே" கண்ணுக்குத் தெரிந்தாள். உடனே நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்து சேவித்தார். நம்பியின் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் ஒரு மஹாநுபாவர் நம் காலில் விழ வேண்டும் என்று பதறியபடியே உள்ளே வந்து தந்தையிடம் நடந்ததைச் சொல்ல, மேதாவிலாசம் கொண்ட அவரும் புன்சிரிப்போடு நடந்ததைப் புரிந்து கொண்டு, அவளிடம் நிலையை விளக்கினார்.

ஆண்டாள்,
தமிழிலக்கணத்தால் தமிழை ஆண்டாள்,
பக்தியால் பரமனை ஆண்டாள்,
நல்வழிகாட்டியதால் தோழியரை ஆண்டாள்,
ஆழ்வாரை (தந்தையை) ஆண்டாள்,

பரமனோடு கூடியதால், அவளை பக்தியால் பரவும் நம் அனைவரையும் ஆண்டாள்.



Thursday, January 7, 2010

சாளக்ராம வழிபாடு

சாபங்களை தீர்க்கும் சாளக்ராம வழிபாடு


சாளக்ராமம் என்பது முதுகில் கருங்கல் போன்ற பொருளுடன் பிறந்து, வளர்ந்து பெரிதாக உருவாகி தெய்வத்தன்மையுடன் கூடிய உயிரினம்.
இது நத்தை, சங்கு, பவழம், ஆகியன தன் உடலில் ஒரு கூட்டை உருவாக்குவது போல, தன் உடலில் உறுதியான கருங்கல்லை முதுகில் கொண்டு பெரிதாக வளர்ந்து உருவாவதாகும்.
பூக்களில் நாகலிங்க (நூற்றுக்கணக்கான நாகங்கள் லிங்கத்துக்கு குடைபிடிப்பது போல இருக்கும்) புஷ்பம் இயற்கையிலேயே தெய்வத்தன்மையுடன் விளைவதுபோல, தெய்வத்தன்மை கொண்ட உயிரினமான சாளக்ராமங்கள் மஹாவிஷ்ணுவின் அம்சமாக போற்றப்படுகின்றன. சைவ சமயத்தினரால் நர்மதை நதியில், பாணலிங்கம் தெய்வத்தன்மையுடன் உருவாதல் போல, கண்டகி நதியில் உற்பத்தியாகும் சாளக்கிராமங்கள் வைணவ சமயத்தினரால் தெய்வத்தன்மை கொண்டதாக வழிபாட்டுக்கு உகந்தவையாக போற்றப்படுகின்றன.
இவை இமயமலையில் கண்டகி நதியில், சாளக்ராமம் எனும் பகுதியில் தோன்றி உருவாவதால், இவைகளுக்கு "சாளக்ராமம்" என்றே பெயர் பெற்று விளங்குகிறது.
புராண விளக்கம் : சங்கசூடன் எனும் அசுரன் தேவர்களை வதைத்து வந்தான். அவனிடம் இருக்கும் கவசத்தை விஷ்ணு பெற்றதால், பலமிழந்த இவனை சிவன் கொன்றார். இவன் உடல் சிதறிய பாகங்களே சங்குகளாக விளைகின்றன.
சங்கசூடனின் மனைவி துலசி. மஹா தபஸ்வினி. கணவரைக் கொல்ல காரணமாயிருந்த விஷ்ணுவை "பாஷாணமாகுக" என சபித்தாள்.
அதற்கு மஹாவிஷ்ணு "உன் பூர்வ ஜன்ம பயனே நீ இந்த நிலை அடைந்தாய். உலக நன்மை பொருட்டு நான் பாஷாணமாகின்றேன். இனி நீ இந்த உடலை நீக்கி, உன் ஆத்மா கோலோகம் அடைவதாக. உன் உடல் 'கண்டகி' நதியாகவும், உனது ரோமங்கள் துளசி செடிகளாகவும் உருவாகி, துளசி மூன்று லோகங்களிலும் பூஜைக்குரியதாக தேவர்களாகலும், மனிதர்களாலும் தெய்வத்தன்மையுடைய மூலிகையாக சிறப்படையட்டும்" எனும் வரங்களை அளித்தார்.
துலசி கொடுத்த சாபத்தால், மஹா விஷ்ணு கண்டகி நதியில் சிலா ரூபமாக பல்கிப் பெருகி, விஷ்ணு அம்சமாக, சாளக்ராமங்களாக உருவெடுத்து அருள் செய்து வருகிறார். (புராண விளக்கத்தை சற்றே சுருக்கியிருக்கின்றேன்.)
சாளக்ராமம் என்பது நெல்லிக்கனி அளவு முதல் ஆறடிக்கு மேல் உயரம் கொண்டுள்ளதாக வளர்வதாகும்.
இந்தக் கல்லின் மேற்புறம் முதல் நடுப்பகுதி வரை ஒரு மெல்லிய துளை (ஈர்க்கு நுழையும் அளவு) இருக்கும்.
உட்புறம் சங்கு, சக்கரம், தாமரை, ஆகிய விஷ்ணுவின் சின்னங்களைக் கொண்டதாக இருக்கும்.
இதன் துவாரத்தின் மேற்புறம், விஷ்ணுவுக்கு வனமாலை இருப்பது போல, பந்தளவு உடைய சாளக்ரமாத்தின் மேல் தானாகவே மாலையைச் சார்த்தியது போல இருப்பது "லக்ஷ்மி நாராயண சாளக்ராமம்" எனப் பெயருடையதாகும்.


மேலே மாலையில்லாமல், வழவழப்புடன், உட்புறம் விஷ்ணுவின் சின்னங்களைக் கொண்டிருப்பது "லக்ஷ்மி ஜனார்த்தனம்" என்பதாகும்.
108 விஷ்ணு புராண திவ்ய தேச ஆலயங்களில் சிலவற்றில் சாளக்ராமங்களே மூலவர் மூர்த்தியாக சிலையாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
அந்தச் சிலையின் உச்சந்தலை முதல் நாபி வரை துளை உடையதாக இருக்கும்.
ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், பெருமாள், லக்ஷ்மி நரசிம்மர், திருமால் ஆகிய தெய்வச் சிலைகளை சாளக்ராம சிலைகளாக வடித்து ஆதிகாலத்திலேயே கோயில்களில் அமைந்துள்ளனர்.
சாளக்ராமத்தை, தமது ஜாதகப் பலன்படி, தக்க வகையில் வீட்டில் பூஜிப்பவர்கள் விரும்பும் பலன்கள் அனைத்தையும் பெற்று வருவது அனுபவ பூர்வமான உண்மை ஆகும்.
சாளக்ராம சிலைகள் மூலவராக அமையப்பெற்ற ஆலயங்கள், தரிசிக்கும் பக்தர்களுக்கு விரைவில் பலன் தரும் ஆலயங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.
உதாரணமாக, ப்ருந்தாவனத்தில் ஸ்ரீ க்ருஷ்ணரின் மூலவர் சிலை சாளக்ராமத்தால் ஆனது.

தஞ்சை மாரியம்மன் கோயில் எனும் ஊரில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் ஆலய மூலவர் சிலை (ஆறடி உயரம் உள்ளது) சாளக்ராமத்தினால் ஆனது.


முன்பு குறிப்பிட்டது போல், இந்த சிலையின் உச்சியில் ஒரு துளை உள்ளது. அந்தத் துளை சுமார் 3 1/2 அடி ஆழத்திற்கு, ஒரு ஈர்க்குச்சி மட்டுமே நுழையக் கூடியதாக உள்ளது. இது அனைவரும் தரிசிக்க வேண்டிய சாளக்ராம மூலவர் ஆலயம் ஆகும்.
இந்த சாளக்ராமத்தில் குறை உள்ளது அனேகம். தோஷங்கள் உள்ள சாளக்ராமங்களை - நல்ல குருவின் ஆலோசனை கொண்டு - நீக்கி, நல்லதைப் பெற்று, பூஜித்து அனைவரும் பலனடைய வேண்டும் என்பது தெய்வ ஸங்கல்பம் ஆகும்.
எவ்விடத்தில் சாளக்ராமம் பூஜிக்கப்படுகிறதோ அங்கு எல்லா தெய்வங்களும் தமது அருள் அனைத்தையும் அளிப்பார்கள் என விஷ்ணு புராணம் கூறுகிறது.

Monday, January 4, 2010

தியாகராஜர் ஆராதனை



தியாகராஜ ஆராதனை  (02.02.2021 -  செவ்வாய்க் கிழமை) 
&
ஸ்ரீ நடராஜர் பஞ்சரத்ன கீர்த்தனை

கர்நாடக சங்கீத உலகத்திற்கு அளப்பரிய கீர்த்தனைகளை அளித்தவர் திருவையாற்றில் வாழ்ந்த ஸ்ரீ தியாக ப்ரும்மம்.
ஸ்ரீ ராமனையே பதிபக்தியாக, ஸ்ரீ ராமனையே தன் அனைத்து சாகித்யங்களிலும் பாடிய, ஸ்ரீ ராமனின் உருவத்தையே அனைத்து தெய்வங்களிலும் பக்தியுடன் பரவிய ஸ்ரீ தியாகராஜரின் 174 வது ஆராதனை திருவையாற்றில் நடைபெறுகின்றது.
பா(ba)வங்கள் நிறைந்த அவரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பரந்த வெளியில் அனைவரும் அந்தப் பரமனையே மனதில் கொண்டு பாடி கானாஞ்சலி செய்வதைக் காண்பது மனதைக் கொள்ளை கொள்ளும் நிகழ்ச்சியாக இருக்கும்.
பஞ்சரத்ன கீர்த்தனைகளில் முதலாவதாக வருவது ஜகதானந்த காரக எனத் தொடங்கும் பாடல். அவரின் பாடல்கள் தெலுங்கில் இருந்தாலும், இந்த முதல் கீர்த்தனை மட்டும் மிக விசேஷம் வாய்ந்தது.
ஜகதானந்த காரக என்ற பாடலை ஸ்ரீ ராமரின் நூற்றியெட்டு (அஷ்டோத்தர சதநாமாவளியாக) நாமாவளியாகப் பிரித்து அர்ச்ச்னை செய்யும் வகையில் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

ஜகதானந்த காரகாவைக் கேட்க இந்த தளத்திற்குச் செல்லுங்கள் : http://www.youtube.com/watch?v=UNMAlFx-fDs

தியாகப்பிரம்ம ஸ்ரீராம அஷ்டோத்தர சதநாமாவளி :
ஓம் ஜகதானந்த காரகாய நம:
ஓம் ஜயஜானகீ ப்ராண நாயகாய நம:, ககனாதிபாய, ஸத்குலஜாய, ராஜராஜேஸ்வராய, ஸ¤குணாகராய, ஸுரஸேவ்யாய, பவ்யாய, தாயகாய, ஸதாஸகல அமர தாரகாய, நிசயாய, குமுதாய, ஹிதாய, பரிபூர்ணாய, அநகாய, ஸ¤ராஸ¤ர பூஜிதாய, பயோதிவாஸஹாரணாய, ஸுந்தராய, தராய, வதனஸ¤தாமயாய, வஸோ --, ப்ருந்தாய, கோவிந்தாஸனாய, ஆனந்தமயாய, அவராப்ஜராப்த சுபகராய, அனேக நிகமாய, நீரஜாய, அம்ருதஜாய, போஷ்காய, நிமிஷ வைரிவாரித மீரணாய, கக துரங்காய, ஸத்கவி ஹ்ருதாலயாய, கணித வானர அனங்க அங்கத ஆங்க்ரியுகாய, இந்திர நீலமணினே, ஸந்நிபா பகனாய,
சந்த்ர ஸ¥ர்ய நயனாய, அப்ரமேயாய, வாகீந்த்ராய, ஜனகஸகலேசாய, சுப்ராய, நாகேந்த்ர சயனாய, சமனவைரி ஸன்னுதாய, பாதவிஜிதாய, மௌனினே, சாப ஸவ பரிபாலகாய, வரமந்தர க்ரஹணாய, லோலாய, பரமசாந்தாய, ஸித்தாய, ஜனகஜாதிபாய, ஸரோஜாய, பவாய, வரதாய, அகிலாய, ஸ்ருஷ்டி ஸ்தித் அந்தகாரிணே, காமிதாய, காமத பலதாய, ஸமானாய, காத்ராய, சசீபதயே, அனுதாப்தினே, மதஹராய, அனுராகாய, ராகாய, ராஜிதாய, கதாஸாராய, ஹிதாய, ஸஜ்ஜன மானஸாய, ஆப்தினே, ஸ¤தாகராய ..............
ஸ¤தாகர குஸ¤ம விமான ஸ¤ர ஸா ரிபு கராப்ஜ லாலித சரணாவ குணா ஸ¤ரகண மதஹரண ஸனாதனா ஜனுத
ஓங்கார பஞ்சர கீர புரஹப்ஸரோஜ பவ கேசவாதிரூப வாஸ்வரிபு ஜனகாந்தக கலாதர கலாதராப்த க்ருணா கல சரணாகத ஜன பால ந ஸ¤மனோஹ ரமண நிர்விகார நிகமஸாரதர
கரக்ருத சரஜால அஸ¤ர மத அபஹரண ஆவனீ ஸ¤ராஸ¤ரவனகவீ நபில ஜ மௌனிக்ருத சரித்ர, ஸன்னித ஸ்ரீ த்யாகராஜ நுத
புராண புருஷ ந்ருவ ராத்த ஜாச் ரித பராதீனகர விராத ராவண விராவணா நக பராசர மனோஹரா விக்ருத த்யாகராஜ ஸன்னுத
அகணித குண கனக சேல ஸால விதள நாருணாபஸ மாந சரனா பார மஹிமாத்புத ஸ¤க விஜந ஹ்ருத் ஸதந ஸ¤ர முனி கண விஹித தகில ச நீர நிதிஜா ரமண பாப கஜ ந்ருஸிம்ம வர த்யாகராஜாதி நுத

கோபாலகிருஷ்ண பாரதி பஞ்சரத்ன கீர்த்தனைகள்:
சங்கீத மூவர் தியாகப்ரும்மம், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் என்பது போல தமிழ் மூவர் மிகவும் பிரபலம்.

அவர்கள் : கோபால கிருஷ்ணபாரதி, மாரிமுத்தாப் பிள்ளை மற்றும் அருணாசல கவியார்.

தமிழ் மூவரில் முதலாமவர் கோபாலகிருஷ்ண பாரதி. இவர் தியாக ப்ரும்மத்தோடு சமகாலத்தில் வாழ்ந்தவர்.
தியாகப்ரும்மம் ஸ்ரீ ராமரின் மேல் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடியதைக் கேட்டு, கோபால கிருஷ்ண பாரதி சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மேல் பஞ்சரத்ன கீர்த்தனைகளை எழுதியுள்ளார்.
ஸ்ரீ தியாகப்ரும்மம் பாடியது போலவே அதே ராகங்களோடு அமைந்தது கோபால கிருஷ்ண பாரதியின் பஞ்சரத்ன பாடல்கள்.
இருவரும் சந்தித்துக்கொண்ட நிகழ்ச்சிகள் பற்றியும், இருவரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பற்றியும் பிறகொரு பதிவில் எழுதுகின்றேன்.
*****

தமிழில் பஞ்சரத்ன கீர்த்தனை- கோபால கிருஷ்ண பாரதி
ராகம் : நாட்டை

ஹர ஹர சிவ சங்கர கருணாகர பரமேஸ்வரா
ஆனந்தத் தாண்டவராயா (ஹர ஹர)

புரஹர வ்ருஷ பத்வஜ பரிபூரண காமா (ஹர ஹர)

பரமானந்த கூபமும் பஞ்சாட்சர படியும் கோடியும்
வரமருள் சன்னிதியும் சிவகாமியும் மதிலும்
பரவிடும் கோபாலகிருஷ்ணன் பாடிய குஞ்சிதபாதமும்
தரிசனம் பண்ணித் தெளிந்திடாத ஜன்மம் மனித ஜென்மம் அல்ல (ஹர)

**************

ராகம் : கௌளை

சரணாகதியென்று நம்பிவந்தேன் - உன்றன்
சரணங்களையுன் தா

கருணாகடாட்சம் பண்ணவேணுந் தில்லைக்
கனக சபையில் ஆடும் பிரவுவல்லவோ
ஜனனாதி பயங்கள் அணுகாமல் உன்றன்
சிவசாயுஜ்ய பதம் தருதல் வேண்டும்
மனனாதிகள் அறியேன் தவம் புரியேன்
மாயன் கிருஷ்ணன் பணிந்திடும் உன் திருவடியைச் (சரணாகதியென்று)

****************

ராகம் : ஆரபி
பிறவாத வரந்தாரு என்னையா
பிறவாத வரந்தாரும்
அறிவுடையோர் தொழுதேத்திய தில்லைப்பொன்
னம்பலவா இன்னம்பல யோனியில் [பிறவா]
எண்பத்து நாலு லட்சம் ராசிகளில்
எடுத்தெ டுத்துப் பிறந் திறந்ததோ
புண்பட்டதுபோதும் போதும் இனிமேல் புத்தி வந்ததையா
நண்பற்றிடு மனைவி மக்கள் வாழிவினில்
நாள்க டோறும் மனவி லாசங்களில்
இன்பத்துடன் கோபால கிருஷ்ணன் தொழு
தேத்திய சக தீசனே நடராசனே.

*******************
ராகம் : வராளி

ஆடிய பாதமே கதியென் றெங்கும்
தேடியும் காண்கிலேன் பதி அவன்

நாடு புகழ்ந்திடும் தில்லைச் சிதம்பர
நாதன் சபை துலங்க வேதகீதம் முழங்க

பக்தியே அருளென்று வரும் தாசன் - கோ
பால கிருஷ்ணன் தொழும் நட ராசன்
சக்தி சிவகாமி மகிழ்நேசன் - சர்வ
சாட்சியாய் நிறைந்திடும் ஜகதீசன்
வெற்றி பெருகிய மதனை வென்றவன்
வேட னெச்சிலை வாரி யுண்டவன்
அத்திமா லையை மார் பிற் கொண்டவன்
அஞ்செழுத்துருவாகி நின்றவன்.

*****************
ராகம் : ஸ்ரீ ராகம்
மறவாமல் எப்படியும் நினை மனமே
மன்னும் பொன்னம்பல மன்றுள் நடனம்

பிறவாமல் எப்படியும் வரந்தருவார்
பிசகில்லை பேணித் தொழுது

விரிவாகிய மறையோதின போதிலும் – இந்த
விஷய சம்சாரவலை பொல்லாது
மருவாமல் விடாது பிடிபடாது
மாயமயக்கம் தெளியாது
திருவாதிரைத் திருநாளில் மகிழ்ந்து
வீதிவலம் வந்து தேவர் சபை சென்று உள்ளன்
புருவாகிய கனகசபையில் நின்றுபாடிக்
கோபால கிருஷ்ணன் பணியும் திருவடியை (மறவாமல்)

மேற்கண்ட பாடல்களின் ஸ்வரக் குறிப்புகள் தேவைப்படுவோர் ஸ்ரீ உமா மகேஸ்வரன் அவர்களைத் தொடர்பு கொண்டு, ரூ.10/= செலுத்தி, புத்தகம் பெறலாம். Mail : sumaheswaran@gmail.com

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- செல் : 94434 79572
- Mail : yanthralaya@yahoo.co.in
www.facebook.com/deekshidhar
-

ஆழ்வார்கள் அருளிய அமுதம்


ஆழ்வார்கள் அருளிய அமுதம்

ப‎ன்னிரு ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய ப‎ன்னிரண்டு பேர்களும் வைணவ சமயத்தி‎ன் ப‎‎ன்னிரு ஆழ்வார்கள் என போற்றப்படுகி‎ன்ற‎னர். ‏
இவர்கள் ‏இயற்றியது வைணவத் தமிழ் வேதம் என போற்றப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலாகும். ‏இவை திருவாய்மொழி எனவும் போற்றப்படும். வைணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல் பத்து போ‎ன்ற திருவிழாக்களில் எதிரெதிரே வரிசையாக அமர்ந்து திருவாய்மொழி பாடுவதைக் கேட்க இரு செவிகள் போதாது.

1.பொய்கையாழ்வார் : வைணவ சமயத்தார் கவிஞர் தலைவ‎ன் என பொய்கையாழ்வாரைப் போற்றுகி‎ன்றனர். பொய்கையாழ்வார் துவாபர யுகத்தில், ஐப்பசி மாதம் திருவோண நக்ஷத்ரத்தில், வளர்பிறை அஷ்டமியில் செவ்வாய்க் கிழமையில் காஞ்சிபுர ஆலயத்தில் "சொ‎ன்னவண்ணம் செய்தா‎ன்" ஸ‎ன்னிதி அருகில் உள்ள பொய்கையில் பொற்றாமரை மலரில் அவதரித்தவர். திருமாலி‎ன் பாஞ்சசன்யம் எனும் சங்கின் அம்சம். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் திருவந்தாதி என்னும் "வையந்தகளியா" எ‎னத்தொடங்கும் நூறு பாடல்களைப் பாடியவர்.

2.பூதத்தாழ்வார் : துவாபர யுகத்தில் சித்தார்த்தி வருஷம், ஐப்பசி மாத நவமி திதியில் அவிட்ட நக்ஷத்ரம் அ‎ன்று மஹாபலிபுரத்தில் நந்தவ‎னத்தில் இருந்த குருக்கத்தி மலரில் அவதரித்தவர். "அ‎ன்பே தகளியா" எனத்தொடங்கும் நூறு அந்தாதி பாடல்களை பாடியவர். ‏இவர் நந்தக அம்சம்.

3.பேயாழ்வார் : ந‎ந்தக அம்சம், இவர் துவாபர யுகம், சித்தார்த்தி வருஷம், ஐப்பசி தசமியில் வியாழக்கிழமை சதய நக்ஷத்ரத்தில் மயிலாப்பூர் கேசவப் பெருமாள் ச‎ன்னிதிக்கு அடுத்த புஷ்கரணியில் அல்லிப்பூவில் அவதரித்தவர். திருமாலை அனைவரும் ஞானக்கண்ணால் கண்டு உண‎ர்ந்து அருள்பெற வழியைக் கூறும் "திருக்கண்டே‎ன்" எனத்தொடங்கும் நூறு பாடல்களை மூ‎ன்றாம் திருவந்தாதியாகப் பாடினார்.

வைணவ சமயத்தில் தமிழ் வேதம் என போற்றப்படும் நாலாயிர திவ்யப் பிரப‎ந்தம், ப‎ன்னிரு ஆழ்வார்களும் திருமாலைப் பாடிய திருவாய் மொழி எனப் பெயர் பெற்றுள்ளது. நாலாயிரம் பாடல்களும் மகாவிஷ்ணுவி‎ன், தசாவதார அருளிச்செயல்களை விளக்குகி‎ன்றன.
தமிழ்வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்ட ப‎ன்னிரண்டு ஆழ்வார்களும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தினை, இ‏னிய, எளிய, தூய தமிழில் இயற்றியுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
(1) பொய்கையார், (2) பூதத்தார், (3) பேயார் ஆகிய முதல் மூ‎ன்று ஆழ்வார்கள் ஒவ்வொருவரும், நூறு வெண்பா பாடல்களைக் கொண்ட, மூ‎ன்று அந்தாதிகளும்,
(4) திருமழிசையாழ்வார் நா‎ன்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தமும்,
(5) நம்மாழ்வார் ருக்வேத சுருக்கமாக திருவிருத்தம்,
யஜுர்வேத சாரமாக திருவாசிரியம்,
ஸாமவேத விளக்கமாக திருவாய்மொழி,
அதர்வணவேத குறிப்புகளாக பெரிய அந்தாதி, ஆகிய நா‎ன்கையும்,
(6) மதுரகவியாழ்வார் கண்ணினுண் சிறுத்தாம்பும்,
(7) குலசேகர ஆழ்வார் திருமாலை பேரரசனாகப் போற்றும் பாசுரங்களும்,
(8) பெரியாழ்வார் திருப்பல்லாண்டும்,
(9) ஒரே பெண் ஆழ்வாராகிய, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனவும், நாச்சியார் எ‎ன்றும் போற்றப்படும், ஆண்டாள் திருப்பாவை மற்றும் பாசுரங்களும்,
(10) தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சியும்,
(11) திருப்பாணாழ்வார் அமலனாதிப்பிரான்‎ பாசுரங்களும்,
(12) திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல்
ஆகிய அனைத்தும் கூடிய பிரபந்தங்களே திருவாய்மொழி எனும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என வழங்கப்படுகிறது.

அடுத்த பதிவில் கூடாரைவல்லியைக் காண்போம்.