Thursday, December 29, 2011

விபூதியின் பெருமை

விபூதியின் பெருமை

சிவபெருமானை வழிபடும் சைவர்களுக்கு சிவச் சின்னமானதாகவும், முக்கியமானதாகவும் அமைவது விபூதி.

பஸ்மம், ரக்ஷை, திருநீறு என்று பல்வேறு பெயர்களால் போற்றப்படுவது விபூதி.

விபூதி என்பதற்கு மொழியியல்படி, பல்வேறு அர்த்தங்கள் உண்டு.

இறையருள் பெற்றது, உயர்விலும் உயர்வானது, முழுமையானது, எங்கும் நிறைந்திருப்பது, உள்ளத்தை தூய்மைப்படுத்துவது, வணங்கத்தக்கது, செழுமை நிறைந்தது, வளங்களைத் தரக்கூடியது, சித்திகளைத் தருவது, வேண்டும் வரங்களைத் தருவது, அலங்கரிப்பது.

சிவபெருமானின் திருமேனி முழுவது அலங்கரிக்கக் கூடிய ஒரே பொருள் விபூதி மட்டுமே. பொன்னார் மேனியனின் திருமேனியில் மேவியிருப்பதால், விபூதி பொன்னிறமாக, தங்கத் துகள்களாக மின்னுகின்றதாம் (பஸ்மோத்தூளித விக்ரஹாய நம: - ஸ்ரீ சிவாஷ்டோத்தரம்)

விபூதி காட்டும் தத்துவங்கள் எண்ணற்றவை.

இறந்தபின் அனைவரும் சாம்பலாகத் தான் வேண்டும் என்பதைக் காட்டுகின்றது. ஆகையால், இறைவன் முன் அனைவரும் சமம் தான் என்பதையும் சுட்டுகின்றது.

உலகம் அக்னியால் தூய்மையடைவது போல விபூதியால் ஆன்மாக்கள் தூய்மையடைகின்றது.

வேதங்களும், உபநிஷதங்களும், புராணங்களும், தமிழ்த் திருமுறைகளும் விபூதியின் மகிமையைப் போற்றிப் பறைசாற்றுகின்றன.

ஒரு சமயம், வித்துன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும் மூன்று அரக்கர்கள் பறக்கும் தன்மை கொண்ட பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கொண்டு, தேவர்களை வருத்தினர்.

அரக்கர்களின் தொல்லை தாங்காத தேவர்கள் பிரம்மா, விஷ்ணுவிடம் முறையிட, இவர்களை அழித்து சாம்பலாக்க, சிவபெருமானால் மட்டுமே முடியும் என்று அறிந்து, சிவனை நோக்கி பிரார்த்தனை செய்தனர்.

பிரம்மா தனது மனதிற்குப் பிடித்தமானதும், அவர் தோற்றுவித்தத்தும் ஆகிய மானச சரோவர் என்னுமிடத்திலும்,

மஹா விஷ்ணு தான் பள்ளி கொண்டிருக்கும், பாற்கடலில் சேரும் நதியாகிய விரஜா எனும் நதியின் கரையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமிருந்து யாகம் செய்தனர்.

யாகத்தின் பஸ்மம் (சாம்பல்) போல அரக்கர்கள் அழிய பிரார்த்தனை செய்தனர்.

மஹாவிஷ்ணு, சிறப்பான மந்திரங்களால் யாகம் செய்தார். அது வேதங்களில், விபூதியைப் போற்றக் கூடிய, மஹாநாராயண உபநிஷத் எனும் மந்திரமாக அமைந்தது.

பொதுவாக சிவாலயங்களில், விபூதியை அபிஷேகம் செய்யும்போது இந்த மந்திரங்களைத் தான் சொல்வது மரபு. (ஆத்மாமே சுத்யந்தாம் ஜ்யோதிரஹம் விரஜா விபாப்மா பூயாஸம் ஸ்வாஹா)

இந்த மந்திரம் - உடல், மனது, வாக்கு, ஆத்மா, அந்தராத்மா என அனைத்தையும் தியாகம் செய்தால், நமது ஜீவனை சிவபெருமான் தன் உடலில் சாம்பல் போல பூசிக்கொள்வார் என்கின்றது (மஹா நாராயண உபநிஷத்தின் முழுமையான அர்த்தம் - மிகவும் அற்புதமானது.)

பிரம்மா, விஷ்ணு - இருவரின் தவத்திற்கு இணங்கி, சிவபெருமான் மூன்று அரக்கர்களையும், தன் மந்தகாசப் புன்னகையால் மட்டுமே எரித்து சாம்பலாக்கினார். தேவர்கள் மகிழ்ந்தனர்.

(ஒரு உபரி தகவல் : முப்புரங்களை எரித்தபொழுது, அக்கோட்டைகளின் ஒரு பாகம் மட்டும் முழுதும் எரியாமல் (வேகாமல்) பூமியில் விழுந்தது. அந்த இடம் வேகாக்கொல்லை என்று அழைக்கப்படுகின்றது.

இவ்விடம், தமிழகம், கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு அருகாமையில் உள்ளது. இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்படும் மண் செங்கல் அமைக்க உதவினாலும், இந்த ஊர் மண் மட்டும் செங்கல் சுடுவதற்கு பயன்படாது. வேகாத மண் கொண்ட நிலம் என்பதால் வேகாக் கொல்லை என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் அருமையான சிவஸ்தலம் உள்ளது)

சிவபெருமான் உடல் முழுவதும் பரவியிருக்கும் விபூதியை, சிவச் சின்னமாக, புனிதமான பொருளாக சைவர்கள் மதிக்கின்றார்கள்.

விபூதி தயாரிக்கும் முறையை சாஸ்திரங்கள் அற்புதமாக விளக்கியுள்ளன.

காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து, அதன் கோமயத்தால் ஈரமாக்கி, உருண்டைகள் பிடித்து காய வைக்க வேண்டும்.

அதை, திரிபுர ஸம்ஹார காலம் என்று வர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத பெளர்ணமியும், கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத் திருநாளில், எரியூட்ட வேண்டும். (சில ஆன்மீகர்கள் அன்று ஏற்றப்படும், சொக்கப்பனையில் தான் எரிக்கப்பட வேண்டும் என்பர்)

அது திறந்த வெளியில் தானாகவே ஆறவேண்டும். மார்கழி மாதம் முழுவதும் - பனி பொழிந்து, அந்த சாணச் சாம்பல் சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும். தை மாதம் முழுவதும் அச்சாம்பலை கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். பனி பெய்ய பெய்ய சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.

மாசி மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில் அச்சாம்பலை எடுத்து, வஸ்திரகாயம் செய்ய வேண்டும். (வஸ்திரகாயம் - ஒரு பானையின் வாயில் தூய்மையான துணியைக் கட்டி, சாம்பலை எடுத்து, துணியின் மேல் கையால் தேய்க்க தேய்க்க, மென்மையான துகள்கள் பூசிக்கொள்ளத் தகுந்த விபூதியாக பானையினுள் சேரும்).

அதை, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பிறகு, சிவபக்தர்கள் தரிக்க வேண்டும்.

மேலே சொன்ன முறை மிக மேன்மையான முறை. மற்றும் சில முறைகளும் உள்ளன. (சாந்திகபஸ்மம், காமதபஸ்மம், பெளஷ்டிகபஸ்மம்)

பரமசிவனின் ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் தன்மையை விபூதி கொண்டிருக்கின்றது.

விபூதியை அனைத்து நிலையிலிருப்பவரும் பூசிக்கொள்ளலாம் என்று ஸூதஸம்ஹிதை வலியுறுத்துகின்றது. (பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம்)

சிவாலயங்களில், விபூதியை பிரஸாதமாக வலது உள்ளங்கையில் மட்டுமேதான் வாங்க வேண்டும். (உள்ளங்கை பிரம்ம & விஷ்ணு பாகமாகக் கருதப்படுகின்றது. பிரம்மா, விஷ்ணு தவமிருந்து பெற்றதால் - அவர்களின் பாகமாகிய உள்ளங்கையில்தான் பெற வேண்டும்)

ஆண்கள் விபூதியை திரிபுண்டரமாகவும் (விபூதியைத் தண்ணீரில் குழைத்து நெற்றியில் மூன்று கிடைக்கோடுகளாகவும்), உத்தூளனமாகவும் (தண்ணீரில்லாமல் வெறும் விபூதியை) அணிந்து கொள்ளலாம் என்றும்,

பெண்கள் - தண்ணீர் குழைக்காமல் மட்டுமே இட்டுக்கொள்ள வேண்டும் (உத்தூளனமாக) என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

பெண்கள் - ஆட்காட்டி விரல் அல்லது மோதிர விரலால் விபூதியை எடுத்து, நெற்றியில் ஒற்றைக் கோடாக மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். (சிவ தீட்சை பெற்ற பெண்கள் மூன்று கோடுகளாக அணியலாம்)

விபூதிப் பூசிக்கொள்ளும் போது, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தையோ அல்லது சிவசிவ என்றோ சொல்லிக்கொண்டேதான் தரிக்க வேண்டும்.

ஆண்கள் - விபூதியை தண்ணீரில் குழைத்து, ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் கொண்டு மூன்று கிடைக்கோடுகளாக,

நெற்றியிலும், மார்பிலும், தொப்புளுக்கு மேலும், முழங்கால்கள் இரண்டிலும், இரு தோள்களிலும், இரு முழங்கைகளிலும், மணிக்கட்டுகள் இரண்டிலும், இரு விலாப் புறங்களிலும், கழுத்திலும் தரிக்க வேண்டும். (சிலர் இரு காதுகளிலும், சிலர் மேல் முதுகிலும், பின்கழுத்திலும் தரிப்பார்கள்)

காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும், பூஜை காலங்களிலும் மிக நிச்சயம் விபூதி தரிக்க வேண்டும்.

பஸ்மாபிஷேகம் - பல்வேறு தீட்டுக்களை அகற்றவல்லது. குளிக்கும் நீரில் விபூதியைத் தூவி விட்டு, அந்த விபூதி கலந்த தண்ணீரில் தலை முழுக எவ்விதமான தீட்டுக்களும் அகன்றுவிடும்.

பயம் நீங்கவும், ஜுரம் நீங்கவும், உடல் உபாதைகள் நீங்கவும் விபூதி பயன்பட்டிருக்கின்றது.

விபூதி இட்டுக்கொண்டிருப்பவரை சிவ அம்சமாகவேக் கருதி வழிபடும் வழக்கம் உண்டு.

விபூதியின் புனிதத்தையும் அதன் மேன்மையையும் பல்வேறு புராணங்களிலும், திருமுறைகளில் பல்வேறு இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்னிரு திருமுறைகளில் குறிப்பிடப்படும் சில சம்பவங்களை மட்டும் இங்கே காண்போம்.

சூலை (தாங்காத வயிற்று வலி) நோயால் துடிதுடித்த அப்பர் சுவாமிகள், தனது தமக்கையார் கையால் விபூதி பெற்றவுடன், வலி நீங்கப் பெற்று சைவத்திற்கு பெரும் தொண்டாற்றினார்.

சமண சமயத்தைச் சார்ந்திருந்த கூன் பாண்டியன் எனும் மன்னன் மதுரையை அரசாண்டு கொண்டிருந்தான். அவனுக்கு தீராத வெப்ப நோய் இருந்தது. அதை நீக்க அவன் மனைவி மங்கையர்க்கரசியார் சிவபெருமானை வேண்டினாள். அவள் கனவில் சிவன் வந்து திருஞான சம்பந்தரைக் கண்டு வந்தால் நோய் நீங்கும் என்றார். மங்கையர்க்கரசியாரும், அதன்படியே, திருஞான சம்பந்தரை தரிசித்து, தன் குறையைச் சொல்ல, அவர் 'மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு' எனத் தொடங்கும் 'திருநீற்றுப் பதிகம்' பாடி விபூதியை, கூன் பாண்டியனின் உடலில் பூசியவுடன், பாண்டியனின் நோய் நீங்கியது. கூன் பாண்டியன் சைவத் தொண்டு ஆற்றினான்.

சிவச்சிந்தனையில் சிறந்து விளங்கிய சேரமான் பெருமான், அரசு தாங்கி, ஒரு சமயம், பட்டத்து யானை மீது அமர்ந்து நகர்வலம் வருகின்றார்.

அப்பொழுது, துணிகளை வெளுக்கும் தொழிலாளர், உழமண் எனும் வெள்ளை நிற மண்ணைக் கூடையில் சுமந்து வர, நீரில் நனைந்த அந்த மண் அவரின் மேனி முழுவதும் வழிந்து, விபூதி பூசியது போல தோற்றம் தரச் செய்தது.

பட்டத்து யானையிலிருந்து, சலவைத் தொழிலாளியின் உடல் முழுவதும் திருநீறு பூசியிருப்பதைக் கண்ட சேரமான் பெருமான், யானையிலிருந்து உடன் இறங்கி, அவர் பெரும் சிவத்தொண்டர் போலும் என்று எண்ணி, சலவைத் தொழிலாளியை வணங்கினார்.

அரசன் தன்னைக் கண்டு வணங்கியதால், அச்சமுற்ற சலவைத் தொழிலாளி தன் நிலையை உணர்த்த, வெள்ளை உழமண் விபூதியை நினைவு படுத்திய காரணத்தினாலேயே, அவரை வணங்க முற்பட்டதை சேரன் விளக்கி, பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார்.

சிவபக்தியில் சிறந்த ஒரு புகழ்ச்சோழ மன்னர், தனக்குக் கப்பம் கட்டாத மன்னன் மீது படையெடுத்து வர ஆணையிட, படைகளும் எதிரி நாட்டை வென்று, தோல்வி கண்ட வீரர்களின் தலைகளைக் கொண்டு வந்து, சோழனிடம் வெற்றிப் பரிசாக அளிக்க, அதைக் கண்டுகொண்டு வந்த மன்னன், அந்த வீரர்களின் தலைகளுள் - ஒரு தலை மட்டும் குடுமி கொண்டு, சிவச்சின்னமாகிய விபூதி அணிந்திருப்பது கண்டு அதிர்ந்து, ஒரு சிவனடியாரைக் கொல்லக் காரணமாகிவிட்டோமே என்று மனம் நொந்து, சோழன் அக்னியை மூட்டி அதனுள் விழுந்தான்.

சிவபெருமானிடம் அதீத பக்தி கொண்ட ஏனாதிநாதனார் என்பவர், படைகளுக்கு வாள் பயிற்சி அளிப்பவர். அவருடன் பல முறை போராடி தோல்வியுற்ற ஒருவன் அவரை வீழ்த்த, ஒரு உபாயம் செய்தான்.

அவன் ஏனாதிநாதரைத் தனிமையில் சமர் செய்ய அழைத்து, அச்சமயம் இவன் சிவச்சின்னமாகிய விபூதியைத் தரித்துக்கொண்டு, அதை கேடயத்தால் மறைத்துக் கொண்டு, போரிட வந்து, ஏனாதிநாதர் அருகில் வந்ததும், கேடயத்தை நீக்க, ஏனாதிநாதர் எதிரியாயிருப்பவன், தன்னைக் கொல்லவந்தவன் திருநீறு அணிந்திருப்பது கண்டு, அவனை சிவ அம்சமாகவேக் கண்டு, சண்டை செய்யாமல் பணிந்து மடிந்து சிவலோகம் அடைந்தார்.

மெய்ப்பொருள் எனும் அரசன் சிவபக்தி நிரம்பி, தனது அரசை நீதிமுறை தவறாது ஆட்சி செய்து வந்தார். சிவ தத்துவங்களில் மெய்யான உண்மைகளை மக்களுக்கு அறிவிப்பதில் தேர்ந்தவராக இருந்ததால் மெய்ப்பொருள் என்று போற்றப்பட்டார்.

இவரின் எதிரி தேசத்து அரசன், தமது வலிமையால் இவரை வெல்லமுடியாது என எண்ணி, சிவச் சின்னமாகிய விபூதி தரித்து, ஓலைச் சுவடிகளுடன், சிவனடியார் வேடத்தில் வந்து, அரசனிடம் ஆகம உட்ப்பொருள் உணர்த்த வந்தேன் எனக் கூறினான்.

மெய்ப்பொருள் அதைக் கேட்க ஆவலாகக் கண் மூடி அமர, அச்சமயம் ஓலைச்சுவடிகளுள் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மெய்ப்பொருளை வெட்டினான்.

சத்தம் கேட்டு வந்த மெய்க்காப்பாளன், எதிரியை வெட்டக் கையை ஓங்க, ரத்தம் சிந்திக் கொண்டு, மரணத்தின் தறுவாயில் இருந்தபோதும், மெய்ப்பொருள், இவர் எதிரியாக இருந்தாலும், சிவனடியார் கோலத்தில் இருப்பதால், இவரும் சிவாம்சமே, ஆகவே, இவருக்கு எவ்வித தொல்லையுல் இல்லாமல் எல்லை வரை பத்திரமாகக் கொண்டு விடக் கட்டளையிட்டான்.

அவ்வண்ணமே மெய்க்காப்பாளன் செய்தைக் கூற, மெய்ப்பொருள் அதன் பிறகு உயிரைவிட்டு சிவபதம் அடைந்தார்.

விபூதி நோய்களை நீக்கும் அருமருந்தாகவும், சிவத்தொண்டிற்கு வழிகாட்டியாகவும், சிவசிந்தனை மேலிடுவதற்கு உதவும் சாதனமாகவும் விளங்குகின்றது.

விபூதீரைச்வர்யம் - என்ற சொல் - விபூதி ஐஸ்வர்யங்களைத் தரவல்லது - என்ற அர்த்தம் கொண்டது.

விபூதி அணிவோம் ! விதியை வெல்வோம் !!

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

- Mobile : 94434 79572 & 93626 09299

- Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com

- www.facebook.com/deekshidhar

Monday, December 26, 2011

ருத்ராக்ஷ மகிமை


ருத்ராக்ஷ மகிமை

சிவபெருமானை அரும்பெரும் தெய்வமாக வழிபடும் வகை சைவம் என்றழைக்கப்படும். சைவ வழிபாடு செய்பவர்கள் சைவர்கள் என்று போற்றப்படுவார்கள்.

சைவர்களின் இன்றியமையாத மூன்று கடமைகளாக சைவ புராணங்கள் கூறுபவை :

1. எப்பொழுதும் சிவ நாமத்தினையும், பஞ்சாக்ஷரத்தையும் ஜபித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.

2. சிவன் தன் மேனியின் மீது பூசிக்கொண்டிருக்கும் விபூதியை சைவர்கள் எப்பொழுதும் தரித்திருக்க வேண்டும்.

3. சிவாம்சமாக உள்ள ருத்ராக்ஷம் அணிந்து கொண்டிருக்க வேண்டும்.

இதில், ருத்ராக்ஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் சிறப்புகளைக் காண்போம்.

ருத்ராக்ஷம் :

ருத்ராக்ஷம் பற்றி புராணங்கள் பல்வேறு தகவல்களைத் தருகின்றன.

சிவபெருமான், தேவர்களை வருத்திக்கொண்டிருந்த மூன்று அசுரர்களை அழிக்க வேண்டி, திரிபுர ஸம்ஹாரம் செய்த போது, சிவனின் (ருத்ரன்) கண்(அக்ஷம்)களிலிருந்து புறப்பட்ட நீர்த்திவலைகள் பூமியில் விழ அதிலிருந்து ருத்ராக்ஷம் தோன்றியது எனவும்,

ஒரு சமயம், உலகம் உய்ய பல்லாயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்ய, தவம் முடிந்து கண் விழித்த சமயம், கண்களிலிருந்து தோன்றிய நீரிலிருந்து தோன்றியது ருத்ராக்ஷம் எனவும்,

நெற்றிக்கண்ணின் மணியிலிருந்து சிவபெருமானால் தனது அம்சமாக தோற்றுவிக்கப்பட்டது ருத்ராக்ஷம் எனவும் சைவ புராணங்கள் பகர்கின்றன.

ஆயினும், தத்வார்த்த ஆன்மீகர்கள், ருத்ராக்ஷம் என்பது சிவபெருமானின் கண்ணையொத்த சிறப்பு வாய்ந்தது எனவும், மேலும் சிறப்பாக, சிவபெருமானுக்கு (ருத்ரன்) உரிய மந்திரத்தை (அக்ஷம்) ஜபிக்க சிறந்தவொரு சாதனமாக கருதுகின்றார்கள். (எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - ஔவையார் வாக்கு - சிவ பஞ்சாக்ஷரம் எனும் ஐந்து எழுத்து மந்திரத்தை, எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு, ஜபிக்க, கண் போன்ற ருத்ராக்ஷமே உகந்தது.

எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு - திருவள்ளுவர்)

வடமொழியின் ஆரம்ப எழுத்து 'அ'. கடைசி எழுத்து 'க்ஷ'. இந்த 'அ'கார 'க்ஷ'கார எழுத்துக்களினுள்தான், வேத மந்திரங்களும், அனைத்து மந்திரங்களுக்கான எழுத்துக்களும் அடங்குகின்றன.

அதிலும், சிவபெருமானுக்கே உகந்த பஞ்சாக்ஷரம் வேத மந்திரங்களுக்கு நடுவாகவும், உயர்வானதாகவும் அமைந்துள்ளது.

இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தை, ருத்ராக்ஷம் என்பதைக் கொண்டு ஜபிக்கும்போது, சிவஸாரூபம், சிவஸாயுஜ்யம், சிவலோகம் எனும் முப்பெரும் பதவிகளையும், இம்மையில் (இந்த ஜன்மத்தில்) மென்மேலும் வளங்களையும், செல்வங்களையும், மறுமையில் (மரணத்திற்குப் பின்) முக்தியையும் தரவல்லது என்பது ஆன்மீக ஆன்றோர்களின் மேலான கருத்து.

மந்திர சித்தி பெற்றவர்கள், சித்தர்கள் போன்றவர்கள் தமது கண்களினாலேயே விஷத்தை முறிக்க விஷமுறிவு செய்வது போலவும்,

மீன் தனது முட்டைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே பொறிக்கச் செய்து மீன் உருவம் கிடைக்கச் செய்வது போலவும்,

ருத்ராக்ஷம் அணிந்தவர்க்கு, சிவபெருமான் தனது அக்ஷத்தினாலேயே (கண்களாலேயே) தீட்சை அளித்து, ஆன்மாக்களுக்கு முக்தி அளிப்பார் எனவும் புராணங்கள் கூறுகின்றன.

தற்போது நமக்குக் கிடைக்கும் ருத்ராக்ஷம், சிவனார் உறையும் இமயமலையைச் சார்ந்த பனிபடர்ந்த இடங்களில் விளையக்கூடிய ருத்ராக்ஷ மரங்களில் (Botanical Name : Elacocarpus Ganitrus Roxb) இருந்து கிடைக்கக் கூடியவை. கண்ணில் உள்ள மணியைப் போன்ற (pupil) சிறு உருண்டை வடிவத்திலும், நடுவில் இயற்கையாகவே துளையும் கொண்டதாக அமையும்.

ருத்ராக்ஷத்தின் தன்மைகளையும், அதன் சிறப்பம்சங்களையும் ஸூதஸம்ஹிதை உள்ளிட்ட பழைய புராணங்கள் தெரிவிக்கின்றன.

ருத்ராக்ஷம் சிகப்பு (காவி), வெள்ளை, கரிய நிறங்களில் கிடைக்கின்றன.

ருத்ராக்ஷத்தின் அளவு சிறிது சிறிதாக அதன் சிறப்பம்சம் பெரிதானதாகக் கருதப்படும். மிகச் சிறிய ருத்ராக்ஷம் அளப்பரிய பலன் தரக்கூடியதாகும்.

ருத்ராக்ஷத்தின் மேல் கோடுகளும், நடுவில் இயற்கையாகவே துளையும் இருக்கும்.

அந்தக் கோடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் தெய்வாம்சம் சிறப்புறக் கூறப்படுகின்றது.

ஒரு முகம் அதாவது ஒரே கோடுள்ள ருத்ராக்ஷம் - சிவாம்சம்,

இரு முகம் - சக்தி அம்சம்

மூன்று முகம் - பிரம்ம, விஷ்ணு, சிவ - திரிமூர்த்தி அம்சம்

நான்கு முகம் - பிரம்ம அம்சம்

ஐந்து முகம் - சதாசிவ அம்சம் (ஈசான, தத்புருஷ, அகோர, வாமதேவ, ஸத்யோஜாதம்)

ஆறுமுகம் - முருக அம்சம்

ஏழுமுகம் - ஸப்தமாதர்கள் அம்சம்

எட்டு முகம் - அஷ்ட வித்யேஸ்வரர்கள் அம்சம் (அனந்தர் - சிகண்டி)

ஒன்பது முகம் - நவதீர்த்தங்கள் (கங்கை-காவேரி, சோணநதி, துங்கபத்ரா) அம்சம்

பத்து முகம் - அஷ்ட திக் பாலர்கள் + ஆகாய, பாதாள திசைகள் அம்சம்

பதினோரு முகம் - ஏகாதச ருத்திர அம்சம்

பன்னிரு முகம் - விஷ்ணு மூர்த்தி அம்சம்

பதின்மூன்று முகம் - சத ருத்திரர்கள் அம்சம்

பதினான்கு முகம் - அசுவினி தேவர்கள் மற்றும் அஷ்ட வசுக்கள் அம்சம்

பதினைந்து முகம் - சந்திர அம்சம்

பதினாறு முகம் - முப்பத்து முக்கோடி தேவர்கள் அம்சம்

(உருத்திர கணிகையர் புராணம், 1907ம் வருட இலங்கை வெளியீடு)


இது தவிர, ஜாபால உபநிஷதம் ருத்ராக்ஷ அம்சத்தையும், அவற்றை அணிவதால் ஏற்படும் பலன்களையும் போற்றுகின்றது. (புருஷார்த்த ப்ரபோதம், 1911ம் வருட வெளியீடு)

ஒரு முகம் - பரமசிவ அம்சம் - பிரம்மஹத்தியை நீக்கும். (ஏக வக்த்ரம் சிவஸ்ஸாக்ஷாத் ப்ரஹ்மஹத்யாம் வ்யபோஹதி)

இரு முகம் - ஸ்ரீகண்ட பரமசிவம் - உயிரினங்களுக்கு செய்யும் பாபத்தினை நீக்கும் (கோவதநாச்யத்துவம்)

மூன்று முகம் - அக்னி - பெண்களால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் (ஸ்த்ரீஹத்யாந்தஹதிக்ஷணாது).

நான்கு முகம் - பிரம்மா - சக மனிதர்களால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் (நரஹத்யாம் வ்யபோஹதி)

ஐந்து முகம் - காலாக்னி ருத்திரர் - உணவுகளால் ஏற்படும் நோய்களை நீக்கும்

ஆறு முகம் - சுப்ரமணியர் - குரு துரோக பாவம் நீக்கும்

ஏழு முகம் - ஆதிசேஷன் - தானங்கள் வாங்கியதால் ஏற்படும் தோஷங்களை நீக்கும்

எட்டு முகம் - விநாயகர் - திருடு சம்பந்தமான தோஷங்களை நீக்கும்

ஒன்பது முகம் - பைரவர் - பில்லி, சூனியங்கள் நீங்கும்

பத்து முகம் - விஷ்ணு - நவக்ரஹ தோஷங்கள் நீங்கும்

பதினோரு முகம் - ஏகாதச ருத்திரர் - அசுவமேத யாகம் செய்த பலன்

பன்னிரு முகம் - துவாதச ஆதித்தர் - மேலான கல்வி கிடைக்கும்

பதின்மூன்று முகம் - சுப்ரமண்யர் - ஸகல கார்ய ஸித்தி

பதினான்கு முகம் - சிவசக்தி - தெய்வங்களின் அருள் எளிதில் கிட்ட அருளும்.

இது தவிர பல்வேறு புராணங்கள் ருத்ராக்ஷ முகங்களைப் பற்றியும், பலன்களைப் பற்றியும் பகர்கின்றன.

பொதுவாக, ஐந்து மற்றும் ஆறு கோடுகள் கொண்ட ருத்ராக்ஷங்களே அதிக புழக்கத்தில் உள்ளன.

ருத்ராக்ஷ கோடுகள் எத்தனையானாலும், அதை அணிவதும், அதற்குரிய புனிதத்தைக் காப்பதும் பற்பல பலன்களை வாரி வழங்கக்கூடியது.


ஒரு முக ருத்ராக்ஷம் மிகவும் போற்றப்படுகின்றது.

எளிதில் கிடைக்காது.

ஆயிரம் சாதாரண ருத்ராக்ஷங்களைக் குவித்து, அதனுள் ஏக முக ருத்ராக்ஷத்தை வைத்தால், அது தானாகவே மேலே ஏறிவரும் என்பது,

ஆயிரம் ருத்ராக்ஷத்தினைக் காட்டிலும், ஒரு முக ருத்ராக்ஷம் மிகவும் மேலானது என்பதைக் குறிப்பதற்காக மட்டுமே தான்.


இரண்டு ருத்ராக்ஷங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தது போல் சில ருத்ராக்ஷங்கள் கிடைப்பது உண்டு. அது கெளரிசங்கரம் என்று அழைக்கப்படும். சிவாலய பூஜை செய்பவர்களும், சிவ பூஜையை நித்தமும் செய்பவர்களும் - சிவசக்தி அம்சம் கொண்ட கெளரிசங்கரத்தை நிச்சயம் அணிய வேண்டும் என்று சிவபுராணங்கள் அறுதியிடுகின்றன.

ஆறுமுகம் கொண்ட ருத்திராக்ஷத்தை உடலின் வலது புறத்திலும், ஒன்பது முகம் கொண்ட ருத்திராக்ஷத்தை உடலின் இடது புறத்திலும், பதினோரு முகம் கொண்ட ருத்ராக்ஷத்தை தலையிலும், பன்னிரு முக மணி காதுகளிலும், எந்த முக மணியாகினும் கண்டம் எனும் கழுத்தில் அணிவது சிறந்த பலனைத் தரக்கூடியது.

மரங்களிலிருந்து கிடைத்த ருத்ராக்ஷத்தைக் காம்பை எடுத்து விட்டு, முதலில் சுத்த தண்ணீரில் ஒரு நாள் முழுக்க ஊற வைத்து,

பின் மறு நாள் முழுக்க காராம்பசுவின் பாலில் ஊறவைத்து,

பிறகு சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்து, (சிலர் எழுமிச்சம் பழச் சாறு கொண்டு சுத்தம் செய்வது உண்டு),

பிறகு விபூதியில் ஒரு நாள் முழுவதும் போட்டு வைத்து,

அடுத்த நாள் ஏதேனும் ஒரு சிவாலயத்தில் கொண்டு சென்று, தெய்வத்தின் பாதங்களில் சார்த்தி எடுத்து, குருவின் கரங்களால் (அல்லது பெரியோர்களின் கரங்களால்) அணிந்து கொள்ளவேண்டும்.

புண்ய நதிகளில் நீராடும் போதும், தானங்கள் கொடுக்கும்போதும், சிவமந்திரங்களை ஜபிக்கும் போதும், ஹோம பூஜைகளின் போதும், தெய்வங்களை ஆராதனை செய்யும்போதும் மிக நிச்சயமாக ருத்ராக்ஷம் அணிந்துகொள்ள வேண்டும் என ஜாபால உபநிஷத் உரைப்பதாக புருஷார்த்த ப்ரபோதம் கூறுகின்றது (ஸ்நானே தான ஜபே ஹோமே வைச்வதேவே ஸுரார்ச்சநே).

ஒரே ஒரு ருத்ராக்ஷம் மட்டும் கழுத்தில் அணிந்துகொண்டால், அதை எக்காலத்திலும் கழட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஒன்றுக்கு மேற்பட்ட ருத்ராக்ஷங்களை மாலையாகக் கோர்த்து அணிந்து கொண்டால், அதன் புனிதம் காக்க வேண்டி, தெய்வ பூஜை சார்ந்த நேரங்களில் மட்டும் அணிந்து கொள்ள வேண்டும்.

108 எண்ணிக்கையிலான ருத்ராக்ஷ மாலை அணிவதே உத்தமம். 52 அல்லது 27 எண்ணிக்கையிலான ருத்ராக்ஷ மாலையும் அணியலாம்.

ருத்ராக்ஷ மாலை கொண்டு, காலை வேளையில் முகத்திற்கு சமமாகவும், மதிய நேரத்தில் இதயத்திற்கு சமமாகவும், மாலை வேளையில் வயிற்றுக்கு சமமாகவும் கொண்டு ஜபிக்க வேண்டும்.

ருத்ராக்ஷ மாலையை பெருவிரல் அல்லது கட்டைவிரலால் நகர்த்தி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்.

ஆட்காட்டி விரலால் ஜபம் செய்தால் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.

நடுவிரல் கொண்டு ஜபம் செய்வது செல்வங்களை சேர்க்கும்.

மோதிர விரல் கொண்டு ஜபம் செய்யின் நல் ஆரோக்கியத் தரும்.

சுண்டு விரல் கொண்டு ஜபம் செய்வது தெய்வ அருளை விரைவில் வழங்கும்.


பெண்கள் ருத்ராக்ஷம் அணிவது பற்றி பல கருத்துக்கள் உள்ளன.

ருத்ராக்ஷம் புருஷ அம்சம் கொண்டது எனவும் அதனை ஆண்கள் மட்டுமே அணிய வேண்டும் என்றும்,

சிவாம்சமாக உள்ளது ருத்ராக்ஷம் - அதனை சிவ சிந்தனை உள்ள யாவரும் அணியத் தகுந்தது என்றும்,

சிவ தீட்சை பெற்ற பெண்கள் அணியலாம் என்றும்,

வயதில் மூத்த பெண்கள் மட்டும் அணியலாம் என்றும்,

விதவைகளும் ருத்ராக்ஷம் அணியலாம் என்றும் பல கருத்துக்கள் உள்ளன.

நேரடியாக சாஸ்திரங்களோ அல்லது ஆகமங்களோ பெண்கள் ருத்ராக்ஷத்தை அணிவதைப் பற்றி சொல்வதாக அறியமுடியவில்லை.

தேவி அல்லது சக்திக்குரிய புராணங்களில், அம்பிகையானவள் ருத்ராக்ஷ மாலை அணிந்து கொண்டிருப்பதாக, குறிப்பிடப்படுகின்றது.

ஜாபல உபநிஷதம் - பொதுவாக ருத்ராக்ஷ தாரண விதி என அதனை அணிந்து கொள்ளும் நியமங்களைக் கூறுகின்றது.

ஆகவே, சிவ சிந்தனை உள்ள யாவருமே அணியத் தகுந்தது என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதன் புனிதம் காக்கப்பட பல்வேறு விதிகளை சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

சிவாலயங்கள் சிலவற்றில் ருத்ராக்ஷங்களைக் கொண்டு, சிவலிங்கத்தின் மேல் ருத்ராக்ஷ பந்தல் அமைக்கின்றார்கள். இது மிகவும் விசேஷமானது என்றும், விரைவில் பலன் தரக்கூடியது என்றும் ஆன்மீகர்கள் கூறுவார்கள்.

ருத்ராக்ஷம் - மருத்துவ குணம் வாய்ந்தது. மஞ்சள் கிழங்கு - மங்கலமானதும், அதே போல் கிருமி நாசினியாகவும் பயன்படுகின்றதோ அது போல, ருத்ராக்ஷம் சிவாம்சம் கொண்டதாகவும், ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களை நீக்கக் கூடியது எனவும் நம்பப்படுகின்றது.

ஆக மொத்தத்தில் ருத்ராக்ஷம் - சிவ அம்சம் கொண்டது. மிகப் புனிதம் வாய்ந்தது. சிவ நாம ஜபம் செய்ய மிக மிக உகந்தது.

ருத்ராக்ஷம் அணிவோம் ! சிவ பலனை அடைவோம் !!

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

- Mobile : 94434 79572 & 93626 09299

- Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com

- www.facebook.com/deekshidhar

Sunday, November 27, 2011

பாம்பு இயற்றிய பாடல் - பதவுரை

பாம்பு இயற்றிய பாடல் - பதவுரை

பாம்பு இயற்றிய பாடல் பற்றிய மேல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

மிகச் சிறப்பு வாய்ந்த இந்த ஸ்லோகத்தினை youtube videoவாக இங்கு க்ளிக் செய்து காணலாம்.

மஹா விஷ்ணுவை அனுதினமும் தாங்கும் ஆதிசேஷன் ஆயிரம் தலைகள் கொண்ட நாக அம்சம். மஹாவிஷ்ணு தான் கண்ட நடராஜர் ஆடிய ஆனந்த நடனத்தினை ஆதிசேஷனிடம் விளக்க, அதைத் தானும் காண அனுமதி வேண்ட, அதன்படியே விஷ்ணு வரம் அளிக்க, ஆதிசேஷன் சிவபெருமான் உறையும் கைலாயம் சென்று, ஆனந்தத் தாண்டவ தரிசனம் காண வரம் வேண்ட, தென்புறத்தில், தில்லை மரங்கள் சூழ்ந்த இடத்தில் ஆனந்த நடனம் நிகழ்த்த உள்ளோம் என்றும் அங்கு சென்று தவமிருப்பாயாக என்றும் அருளினார்.

அதன்படியே கைலாயத்திலிருந்து, ஆதிசேஷன் பதஞ்சலி எனும் நாக அம்ச உருக்கொண்டு, தில்லை மரங்கள் சூழ்ந்ததால் தில்லை எனும் பெயர் பெற்ற இடத்தில், புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதருடன் தவம் செய்ய, தை மாதத்துப் பூச நக்ஷத்ரம் கூடிய தினத்தில்,

தில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க, ஸகல தேவர்களும், அனைத்து கணங்களும் உடன் வர, இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.

அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.

காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னக பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவதும் பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.

பதஞ்சலி, தான் கண்ட இத்திருக்கோலத்தை என்றும் எப்பொழுதும் அனைவரும் காணவேண்டும் என நினைந்து - நடராஜப் பெருமானை பதஞ்சலியாமல் தாண்டவம் தில்லையில் நிகழ்த்திக்கொண்டிருக்க வேண்டும் என - பெருநோக்கில் வரம் பெற்றார்.

ஆதிசேஷன் நாக அம்சம். அவருக்குக் (பாம்புக்கு) கொம்பும் காலும் கிடையாது. அது போலவே, அவர் எழுதிய ஒரு அற்புத ஸ்லோகத்திற்கு 'ஆ'காரம் எனும் கால் கொண்ட நெடில் எழுத்துக்களும், 'ஒ'காரம் எனும் கொம்பு கொண்ட எழுத்துக்களும் இல்லாததாய் அமைத்தார். அது 'ஸ்ரீ சரண ச்ருங்க ரஹித நடேச ஸ்தோத்ரம்' எனப் புகழ் வாய்ந்ததாய் அமைந்தது.

அதற்கான முழுமையான அர்த்தம் - நண்பர்கள் பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இதுவரை இணையத்தில் வெளிவராத விளக்கம் - இங்கு கொடுக்கப்படுகின்றது.

Photobucket

ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம்

(ஸ்ரீ பதஞ்சலி க்ருதம்)

1. ஸதஞ்சிதம் உஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்ஜு கடகம்

பதஞ்சலி த்ருகஞ்சனம் அனஞ்சனம் அசஞ்சலபதம் ஜனன பஞ்சனகரம்|

கதம்பருசிம் அம்பரவஸம் பரமம் அம்புத கதம்பகவிடம்பககலம்

சிதம்புதிமணிம் புதஹ்ருதம்புஜ ரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

உரை :

ஸதஞ்சிதம் - ஸாது ஜனங்களால் பூஜிக்கப்படுபவர்

உதஞ்சித - மேலான பூஜைகளை உடையவர்

நிகுஞ்சித - அழகான வளைத்த

பதம் - கால்களை கொண்டவர்

ஜலஞ்ஜலித - ஜல் ஜல் எனும் ஓசை கொண்ட

மஞ்சுகடகம் - அழகான கால் அணிகளை அணிந்த

நடராஜப் பெருமான், பதஞ்சலியின் இமையில்லாத கண்களுக்கு (பாம்புகளுக்கு இமை கிடையாது) இணையற்ற காட்சி தந்தவரும், தோஷங்களை அகற்றுபவரும், நிரந்தரமானவரும், மோக்ஷத்தை அளிப்பவரும், அன்றலர்ந்த புஷ்பம் போன்று பொலிவானவரும், சிதம்பரத்தில் என்றும் வசிப்பவரும், மழையை சூல்கொண்ட கருமேகம் போன்ற கழுத்தை உடையவரும், ஞானக்கடலில் கிடைக்கும் ரத்னம் போன்றவரும், யோகிகள் தமது இருதயத்தில் என்றும் நிறுத்திவைக்கும் கோடி சூர்ய பிரகாச உத்தமராக விளங்கும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.


2. ஹரம் த்ரிபுர பஞ்சனம் அனந்தக்ருத கங்கணம் அகண்டதயம் அந்தரஹிதம்

விரிஞ்சிஸுர ஸம்ஹதி புரந்தர விசிந்திதபதம் தருணசந்த்ர மகுடம்|

பரம் பத விகண்டித யமம் பஸித மண்டிததனும் மதன வஞ்சன பரம்

சிரந்தனம் அமும் ப்ரணத ஸஞ்சித நிதிம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

அனைத்துப் பாவங்களையும் நீக்குபவரும், திரிபுர ஸம்ஹாரம் செய்தவரும், பாம்புகளை நகைகளாக அணிந்தவரும், கருணைக் கடலும், தேவர்களால் பூஜனை செய்யப்பட்டவரும், சந்திரனைத் தலையில் சூடியவரும், அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவரும், யமனைக் காலால் உதைத்தவரும், விபூதியை மேனி முழுதும் தரித்திருப்பவரும், மன்மதனை விஞ்சுபவரும் (ஸம்ஸார ஸாகரம் எனும் பாசங்களை அகற்றுபவரும்), மோக்ஷத்தை அருளுபவரும், பக்தர்களின் இதயத்தில் என்றும் வாசம் செய்பவரும், அள்ள அள்ளக் குறையாத புதையல் போல வரங்களை வாரி வழங்குபவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

3. அவந்தம் அகிலம் ஜகத் அபங்க குணதுங்கம் அமதம் த்ருதவிதும் ஸூரஸரித்

தரங்க நிகுரும்ப த்ருதி லம்பட ஜடம் சமன டம்பர ஹரம் பவஹரம்|

சிவம் தச திகந்தர விஜ்ரும்பித கரம் கரலஸன் ம்ருகசிசும் பசுபதிம்|

ஹரம் சசி தனஞ்ஜய பதங்கநயனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

அகிலம் அனைத்தையும் காப்பவரும், மேலான குணங்களைக் கொண்டவரும், கடுந்தவத்தால் மட்டுமே காட்சி தருபவரும், சந்திரனைத் தலையில் சூடியவரும், ஆர்ப்பரித்து வரும் கங்கை பிரவாகத்தைத் தன் ஒற்றைச் சடையில் தாங்கிவரும், யமனை வெல்லக் கூடியவரும், இவ்வுலக பாசங்களை அறுப்பவரும், மங்கல குணங்களோடு, பத்து திசைகளிலும் வியாபித்து இருப்பவரும், அலைபாயும் மனதை ஒத்த மானைத் தன் கையால் அடக்கியவரும், அனைத்து ஜீவராசிகளுக்கும் நாயகரும், பாபங்களை தீய்ப்பவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் தன் கண்களாக உடையவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

4. அனந்த நவரத்ன விலஸத்கடக கிங்கிணி ஜலம்ஜலரவம்

முகுந்த விதி ஹஸ்தகத மத்தள லய த்வனி திமித்திமித நர்தன பதம்|

சகுந்தரத பர்ஹிரத நந்திமுக ப்ருங்கி ருஷி ஸங்க நிகடம்

ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

தாண்டவம் ஆடும்போது பொன்னார் மேனியில் மேலுள்ள மாணிக்கம், முத்து, பவழம், வைரம் ஆகிய நவரத்ன நகைகள் ஜல ஜல ஜல என ஓசை எழுப்பக் காரணமானவரும், மஹாவிஷ்ணுவின் மத்தளத்தின் திமி திமி என்ற சப்தத்திற்கு உரியவகையில் நடமிடுபவரும், ப்ரம்மா, நந்தி, முருகர், விநாயகர் ஆகியோர் உடனிருக்க ஆடியருளுபவரும், ஸனந்தர், ஸனகர், ஸனத்குமாரர் எனும் பிரம்ம புத்திரர்களால் என்றும் நினைவில் கொள்ளப்படுபவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

5. அனந்த மஹிமம் த்ரிதச வந்த்ய சரணம் முனி ஹ்ருதந்தர வஸந்தம் அமலம்

கபந்த வியதிந்த்வனி கந்தவஹ வந்ஹி மகபந்து ரவிமஞ்ஜு வபுஷம்|

அனந்த விபவம் த்ரிஜகதந்த ரமணிம் த்ரிநயனம் த்ரிபுர கண்டன பரம்

ஸனந்த முனி வந்திதபதம் ஸகருணம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

எல்லைகளற்ற மகிமையுடையவரும், தேவர்கள் நமஸ்கரிக்கும் பாதக் கமலங்களை உடையவரும், முனிவர்களின் இதயத்தில் இடம்பெறுபவரும், பரிசுத்தமானவரும், ஜலம், ஆகாசம், சந்திரன், பூமி, காற்று, அக்னி, யாகம் ஆகியவற்றில் நீக்கமற நிறைந்திருப்பவரும், செல்வங்களை வழங்குபவரும், மூன்று உலகங்களுக்கும் நாயகரானவரும், திரிபுர ஸம்ஹாரத்தில் ஜயித்தவரும், ஸனந்தர் முதலான ரிஷிகளால் பாதபூஜை செய்யப்பட்டவரும், இரக்க குணம் உடையவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

6. அசிந்த்யம் அலிப்ருந்த ருசிபந்துர கல ஸ்புரதி குந்த நிகுரும்ப தவலம்

முகுந்த ஸுரப்ருந்த பலஹந்த்ரு க்ருதவந்தன லஸந்தம் அஹிகுண்டல தரம்|

அகம்பம் அனுகம்பித ரதிம் ஸுஜன மங்கல நிதிம் கஜஹரம் பசுபதிம்

தனஞ்ஜய நுதம் ப்ரணத ரஞ்ஜனபரம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்பவரும், வண்டுகளின் கூட்டத்தினைப் போன்ற கரு நிறக் கழுத்தையுடையவரும், மலர்ந்த முல்லைமலர் போன்ற வெள்ளை நிற மேனியை உடையவரும், விஷ்ணு, தேவர்கள், தேவேந்திரன் போன்றவர்கள் நமஸ்கரிப்பதால் பிரகாசமான முகம் கொண்டவரும், காதுகளில் பாம்புகளால் ஆன ஆபரணம் தரித்தவரும், நிலைத்த தன்மையுடையவரும், ரதி தேவியினால் பூஜிக்கப்பட்டவரும், ஸாதுக்களின் இருப்பிடத்தில் வசிப்பவரும், கஜாஸுரன் எனும் அசுரனின் தோலை உரித்து ஆடையாகத் தரித்தவரும், எல்லா உயிர்களுக்கும் நாயகரும், அர்ஜுனனால் துதிக்கப்பட்டவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

7. பரம் ஸுரவரம் புரஹரம் பசுபதிம் ஜனித தந்திமுக ஷண்முக ம் அமும்

ம்ருடம் கனக பிங்கல ஜடம் ஸனக பங்கஜ ரவிம் ஸுமனஸம் ஹிமருசிம்|

அஸங்க மனஸம் ஜலதி ஜன்ம கரலம் கபலயந்தம் அதுலம் குணநிதிம்

ஸநந்தவரதம் சமிதம் இந்து வதனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

எங்கும் பரவியிருப்பவரும், தேவர்களுள் சிறந்தவரும், திரிபுர ஸம்ஹாரம் செய்தவரும், ரிஷப வாகனம் எனும் விடையேறியவரும், விநாயகர், முருகர் முதலானோர்க்கு தந்தையானவரும், எப்பொழுதும் அருகில் இருப்பவரும், சுகத்தை அருள்பவரும், தங்கத்தினைப் போன்ற மின்னும் ஜடாமுடியை உடையவரும், ஸநக ரிஷிக்கு அருளியவரும், தாமரைப் பூவில் இருப்பவரும், சூர்ய பிரகாசம் உடையவரும், பனியைப் போன்ற வெண்மை நிறம் உடையவரும், ஆசையற்ற மனம் கொண்ட யோகியர் போன்றவரும், பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்தியவரும், கண்களின் பார்வைப் புலனைவிட மேலான ஒளித்தோற்றத்தை உடையவரும், அனைத்து மங்கல குணங்களை உடையவரும், ஸனந்த மகரிஷியின் வேண்டுதலைப் பூர்த்தி செய்தவரும், சாந்தமான குணத்தை உடையவரும், சந்திரனைப் போன்ற முகத்தை உடையவரும், உத்தம உத்தமராக விளங்குபவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

8. அஜம் க்ஷிதிரதம் புஜங்கபுங்கவ குணம் கனக ச்ருங்கி தனுஷம் கரலஸத்

குரங்க ப்ருது டங்க பரசும் ருசிர குங்கும ருசிம் டமருகஞ் ச தததம்|

முகுந்த விசிகம் நமதவந்த்ய பலதம் நிகம ப்ருந்த துரகம் நிருபமம்

ஸ சண்டிகம் அமும் ஜடிதி ஸம்ஹ்ருதபுரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

பிறவாதத் தன்மை கொண்டவரும் (யாருக்கும் பிறவாதவரும்), உலகத்தையே தனது தேராகக் கொண்டவரும், பாம்பினை வில்லின் நாணாகக் கொண்டவரும், கைகளில் ஒளிபொங்கும் மான், பெரிய உளி, கோடாரி இவைகளைத் தரித்தவரும், டமருகம் எனும் வாத்தியத்தை வாசிப்பவரும், மஹாவிஷ்ணுவை அம்பாகக் கொண்டவரும் (திரிபுர ஸம்ஹாரத்திற்காக), தம்மை வணங்குபவர்களுக்கு தன்னிகரற்ற பலன்களை அருளுபவரும், வேதங்களைக் தன்னுடைய தேருக்கு குதிரைகளாகக் கொண்டவரும், உவமை இல்லாதவரும், உமையுடன் என்றும் கூடியவரும், திரிபுரங்களை ஒரு நொடியில் ஸம்ஹரித்தவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.


9. அனங்க பரிபந்தினம் அஜம் க்ஷிதி துரந்தரம் அலங்கருணயந்த ம் அகிலம்

ஜ்வலந்தம் அனலம் தததம் அந்தகரிபும் ஸததம் இந்த்ரஸுர வந்திதபதம்|

உதஞ்சத் அரவிந்தகுல பந்து சதபிம்ப ருசி ஸம்ஹதி ஸுகந்தி வபுஷம்

பதஞ்ஜலி நுதம் ப்ரணவ பஞ்ஜரசுகம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

மன்மதனை எரித்தவரும், பிறப்பில்லாதவரும், பூமியின் பாரத்தைத் தாங்குபவரும், அனைத்து ஜீவராசிகளையும் ரட்சிப்பவரும், தகிக்கும் அக்னியைக் கையில் ஏந்தியவரும், யமனுக்கு எதிரியாக இருப்பவரும், இந்திராதி தேவர்களால் நமஸ்கரிக்கப்படுபவரும், தாமரைப் பூக்களுக்கு அரசாகிய சூர்யனைப் போன்ற பிரகாசம் கொண்டவரும், நறுமணம் பொருந்திய தேகம் உடையவரும், பதஞ்சலியால் துதி செய்யப்பட்டவரும், ஓங்காரம் எனும் கூண்டினுள் உறையும் கிளியைப் போன்று - எங்கும் நிறைந்திருப்பவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

10. இதி ஸ்தவம் அமும் புஜக புங்கவ க்ருதம் ப்ரதிதினம் படதி ய: க்ருதமுக:

ஸத: ப்ரபு பதத்விதய தர்சனபதம் ஸூ லலிதம் சரண ச்ருங்க ரஹிதம்|

ஸர:ப்ரபவ ஸம்பவ ஹரித்பதி ஹரி ப்ரமுக திவ்யநுத சங்கர பதம்

ஸ கச்சதி பரம் ந து ஜனுர்ஜலநிதிம் பரம துக்க ஜனகம் துரிததம்||

|| இதி ஸ்ரீபதஞ்சலி மஹர்ஷிக்ருத ஸ்ரீசரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்||

இவ்விதம் பதஞ்சலி மஹரிஷியால் இயற்றப்பட்டதும், பொற்சபையில் என்றும் நடமிடும் நாயகரின் பாதக் கமலங்களைப் பார்க்க வழிசெய்யும் ஸ்தோத்திரமானதும், அர்த்தம் மற்றும் பதங்களில் மிக எளிமையானதாகவும், கால் மற்றும் கொம்பு எழுத்துக்கள் இல்லாததும் ஆகிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்பவர்கள், பிரம்மா, விஷ்ணு இந்திராதி தேவர்கள் கூட அடையாத சிவ பதத்தையும், மோக்ஷத்தையும் அடைவார்கள்.

(நன்றி : ஸ்ரீ நந்திகேஸ்வர ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் - புத்தகம். கிடைக்குமிடம் : N.T. கணபதி தீக்ஷிதர், 17, கீழ சன்னதி, சிதம்பரம் - 1. போன் : 04144 - 225215)

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

- செல் : 94434 79572

- mail : yanthralaya@yahoo.co.in &

yanthralaya@gmail.com

Friday, November 25, 2011

பிரதோஷ ஸ்தோத்ரம் & அஷ்டகம்

பிரதோஷ ஸ்தோத்ரம் & அஷ்டகம்

ஆதியும் அந்தமும் இல்லாத பெரும் பரம்பொருளாய் விளங்குபவர் சிவபெருமான். இவருக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. சிவ வழிபாட்டினைத் தான் சைவம் என்று போற்றுகின்றோம்.

உலகத்தின் மிகப் பழமையான வழிபாடும் சிவ வழிபாடுதான். பண்டைய கால நாகரீகமாக விளங்கிய ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ காலகட்டங்களில் சிவ வழிபாடு நடந்திருப்பது அகழ்வாராய்ச்சிகளில் மூலம் அறியமுடிகின்றது.

வேதங்கள் போற்றும் வேதநாயகனாக விளங்குபவர் சிவன். சுப மங்கலத்தை அருளுபவர்.

பரம்பொருளாகிய பரமேஸ்வரரின் மூச்சுக்காற்றிலிருந்தும், உடுக்கை ஒலியிலிருந்தும் சப்தங்கள் தோன்றி, வேத மந்திரங்களாகச் சிதறியிருந்ததை வியாச பகவான் ஒருங்கிணைத்து சதுர் (4) வேதங்களாகத் தொகுத்தார் (ருக், யஜுர், சாமம் & அதர்வணம்).

சிவபெருமானுக்கு பிறப்பில்லாத காரணத்தினால், சிற்ப சாஸ்திரங்களின்படி, சிவபெருமான் அம்சமுள்ள எந்தவொரு வடிவத்திற்கும் (நடராஜர், ஸோமாஸ்கந்தர்) கொப்பூழ் எனும் தொப்புள் அமைப்பதில்லை.

சிவன் எங்கும் நிறைந்திருப்பவர். திசைகள் அனைத்திலும் விளங்கும் திகம்பரர். ஸர்வ லோகங்களிலும் திகழும் சதாசிவர்.

மஹாவிஷ்ணு உலக மக்களைக் காக்க வேண்டி எடுப்பது அவதாரம். இந்த அவதாரத்தில் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு. (பகவான் கிருஷ்ணர் ஒரு வேடுவனின் அம்பினால் இறந்தார்).

சிவபெருமான் பக்தர்களைக் காக்க எடுப்பது அவஸரம். தக்க சமயம் வரும்போது தோன்றி, ரட்சித்துவிட்டு, மறைந்துவிடுதல்.

வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் வழங்குவதில் வல்லமை மிக்கவர் சிவபெருமான்.

சிவ வழிபாட்டில் பல்வேறு முறைகள் காணப்படுகின்றன. (காஷ்மீர சைவம், காபாலிக சைவம், சிவாகமம், சைவ சித்தாந்தம்)

சைவ வழிபாட்டு முறைகளில் மிகவும் பிரபலமாகவும், பலனளிக்கக் கூடியதாகவும், பக்தர்களின் வழிபாட்டில் மிக எளிமையாக விளங்குவதும் அமைவது பிரதோஷம்.

ஒரு மாதத்தில் இருமுறை வருவது பிரதோஷ பூஜை. ஒன்று வளர்பிறை திரயோதசி (அமாவாசையிலிருந்து 13ம் நாள்) மற்றொன்று தேய்பிறை திரயோதசி (பெளர்ணமியிலிருந்து 13ம் நாள்) தினம்.

ஒரு சமயம் வீதஹவ்யர் எனும் சிவபக்தர், சித்ரவதி எனும் தமது பத்தினியுடன், தமக்கு சிவாம்சமாக விளங்கக் கூடிய வகையில் மகவு வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, வேறு எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல், சிறு சிறு கற்களையே உணவாக உண்டு கடும் தவம் செய்தார்.

கற்களை மட்டுமே உண்டதனால் அவர் சிலாதர் எனப் போற்றப்பட்டார். சிலாதர் பூஜை செய்த திருத்தலம், வட நாட்டுப் பாடல் பெற்றத் தலமாக விளங்குவதும், பன்னிரு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்றும் ஆகிய ஸ்ரீ சைலம் எனும் திருத்தலம். (இதுவே நந்தி தேவர் பிறந்த தலமும் ஆகும். நந்தி தேவர் தவம் செய்த தலம் நந்தியால்)

கற்களை மட்டுமே உண்டு தவமியற்றிய சிலாதருக்கு மனமிரங்கிய சிவன், அவர் முன் தோன்றி, தனது அம்சமாக ஒரு குழந்தை உனக்குக் கிடைப்பான் என திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.

சிலாதர் யாகம் செய்வதற்காக, நிலத்தை உழுத போது, மாணிக்க வைடூர்யங்கள் இழைத்த ஒரு பொற்பெட்டியில் ஒரு குழந்தை கிடைக்க, அக்குழந்தைக்கு வீரகன் எனப் பெயரிட்டு, பெருமகிழ்வுடன், கல்வி கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தார்.

சில ஆண்டுகள் கழித்து, மித்ரன், வருணன் எனும் இரு தேவர்களும் வீதஹவ்யர் எனும் சிலாதர் முனிவரை பார்க்க வந்து, வீரகனுக்கு ஆயுள் சில காலம் தான் என்று கூறினர். இதைக் கேட்ட வீதஹவ்யர் மனமொடிந்து போக, வீரகன் தனது தந்தையைப் பார்த்து, நான் சிவபெருமான நோக்கி தவமிருந்து வரம் பெற்று வருகின்றேன் என கிளம்பினார்.

வீரகன், ஏழு கோடி முறை ஸ்ரீ ருத்ரம் மந்திரத்தை நாத்தழும்பேற ஜபிக்க, சிவபெருமான் வீரகனின் பக்திக்கு மனமிரங்கி, தனது கணங்களுக்கெல்லாம் தலைமை தாங்க, நந்தி எனப் பெயரிட்டு, தனக்கு வாகனமாகவும் ஏற்று, சாகாவரமும், என்றும் தன்னுடன் இருக்கவும், தனது வாயில் காப்பாளனாகவும் ஏற்று அருளினார்.

நந்தியையே தனது பிரதம சீடராக ஏற்று கலைகள் அனைத்தையும் கற்றுணர்த்தினார்.

(நந்தி = தலைமை. ஐந்து கரத்தனை ஆனை.... நந்தி மகன் தனை - என்று திருமூலர் விநாயகரைக் குறிப்பிடும்போது - நந்தி மகன் - என்பது, உலகமனைத்திற்கும் தலைமை தாங்கும் சிவபெருமானையே நந்தி எனக் குறிப்பிட்டு - அவர்தம் மகன் விநாயகர் என்கிறார்.)

சிவனிடமே பாடங்கள் கற்றமையால் சைலாதி எனப் புகழப்படும் நந்தி தேவர் ஞான ஆச்சார்யராக விளங்குபவர். விஷ்ணுவுக்கு சிவஞானம் பெற வழிகாட்டியவர். சிவ வழிபாட்டில் மிக முக்கியத்துவம் பெறுபவர். இன்றைக்கு இருக்கும் தருமபுரம், திருவாவடுதுறை போன்ற ஆதீனங்களுக்கு தலைமை குருவாக விளங்குபவர் நந்தி தேவர்தான்.

ஒரு சமயம், சாகாவரத்திற்கான அமிர்தம் பெறவேண்டி, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை, மேரு என்னும் மலையையே மத்தாகக் கொண்டு, வாசுகி எனும் பாம்பை கயிறாகக் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒரு புறமும் கடைய, வேகமும் அழுத்தமும் தாங்காத வாசுகி எனும் பாம்பு தனது விஷத்தன்மை கொண்ட பெருமூச்சினை விட, பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது.

அது, அகிலம் அனைத்தையும் அழிக்கவல்லதாக அச்சுறுத்தலாக இருந்தது. இதைக் கண்ட தேவர்கள் தலைதெறிக்க ஓட, எங்கெல்லாம் அவர்கள் செல்கின்றார்களோ அங்கெல்லாம் ஆலகால விஷமும் துரத்தியது.

இறுதியில், தேவர்கள் ஸர்வலோக வியாபியான சிவபெருமான் உறையும் கைலாயம் சென்றனர். சிவனை தரிசிக்க வேண்டி கைலாயத்தின் இடப்புறம் வழியாக சென்றால், வலப்புறமாக விஷம் வந்து வாட்டியது. வலப்புறம் வழியாக சென்றால் இடப்புறமாக வந்து இடைமறித்தது.. (ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் - இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. கீழே விபரம் உள்ளது.)

கைலாய நாதனை தேவர்கள் சரணடைய, சிவன் காட்சி தந்து அஞ்சேல் என்று அருளி, தனது மெய்க்காப்பாளனாகிய நந்தியை அழைத்து, அந்த விஷத்தை எடுத்து வரச் சொல்ல, அதன்படியே நந்தி எடுத்து வர, அந்த ஆலகால விஷத்தை, தனது வாயிலிட்டு விழுங்கும் போது, அந்த ஆலகால விஷத்தினால், தனது கணவருக்கு எந்த விதத்திலும் தீங்கு நேரக்கூடாது என்றெண்ணிய பார்வதி தேவி, அந்த விஷம் சிவனின் தொண்டைப் பகுதிக்கு வரும்போது, சிவனின் கண்டமாகிய கழுத்தைப் பிடிக்க, செம்பொன்னார் மேனியனாக விளங்கும் சிவனின் தொண்டையில் விஷம் கருநிறமாகத் தங்கியது.

அகிலம் ஆலகால விஷத்திலிருந்து தப்பியது. தேவர்கள் பயம் நீங்கினர். சிவபெருமானை நீலகண்டன் என போற்றினர்.

மறுபடியும் பாற்கடல் கடைய, அமிர்தம், லக்ஷ்மி தேவி, காமதேனு, உச்சைஸ்ரவம் எனும் குதிரை முதலான தோன்ற அனைவரும் மகிழ்வுற்றனர்.

(இந்தப் புராணத்திற்குள் அற்புதமான அறிவியல் தத்துவம் பொதிந்திருக்கின்றது. அதை விளக்க தனியொரு கட்டுரை எழுத வேண்டியிருக்கும். பிரபஞ்சம் தோன்றிய விதத்தை அறிவியல் விளக்கும் அம்சம் இந்தப் புராணத்தில் அடங்கியுள்ளது)

அச்சமயம், நந்தி தேவர் நாம் எடுத்து வந்த விஷம் அவ்வளவு வீரியம் வாய்ந்ததா என்று எண்ணி, உலகம் உய்ய ஒரு காரியத்தை, நான் செய்தேனே என்று செருக்குற்றார்.

அப்பொழுதுதான், அந்த விஷத்தின் வீரியம் நந்தி தேவரை வீழ்த்தியது.

மயக்கமுற்ற நந்தி தேவருக்கு, அகிலம் அனனத்திற்கும் படியளக்கும் அன்னபூரணியாக விளங்கும் பார்வதி தேவி, அரிசியும், வெல்லமும் கலந்த கலவையை நந்திக்கு மருந்தாகக் கொடுக்க, நந்தியின் தலைக்கு விஷத்தின் வீரியம் வராமலிருக்க சிவபெருமான் தனது பாதத்தை, நந்தியின் தலையில் இருத்தி, தாண்டத்தை நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நிகழ்த்த பிரதோஷ தாண்டவம் நிகழ்ந்தேறியது.

மயக்கமும் விஷமும் நீங்கிய நந்தி, தனது செருக்கு நீங்கி, சிவபெருமானை வணங்கி வழிபட்டார்.

விண்ணோர்கள் அனனவரும் அந்த அற்புதத் தாண்டவத்தைக் கண்டு களித்தனர்.

பாற்கடல் கடையத் தொடங்கியது தசமி தினம் என்றும், ஏகாதசி தினம் முழுவதும் உறக்கமின்றி கடைந்தது என்றும், திரயோதசி தினத்தின், மாலை வேளையில் (4.30 pm - 6.00 pm) தான் நந்தியின் சிரசில் நடனமாடியதாகவும் சிவபுராணங்கள் பகர்கின்றன. இந்த நேரத்தை ரஜனி முக காலம் என்று போற்றுவார்கள்.

திரயோதசி திதியின் மாலை வேளையைத் தான் பிரதோஷ வேளையாகக் வழிபட்டு மகிழ்கின்றோம்.

அரிசி வெல்லக் கலவை ஒரு அற்புதமான மருந்து. வெல்லத்தில் இருக்கும் க்ளுக்கோஸும் (glucose), அரிசியில் உள்ள அமைலோஸ் (amylase) எனும் ஸ்டார்ச் வகையைச் சேர்ந்த உப்பும் சேர்வது - உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்க வல்லது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு முதலுதவியாக ஜீனியும், உப்பும் கலந்த தண்ணீரைக் கொடுப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

அது போல, மாட்டிற்கு ஏதேனும் நோய் தாக்கியதாகத் தெரியவந்தால், முதலில் அரிசியும் வெல்லமும் கலந்த கலவையை உணவாகக் கொடுப்பார்கள்.

பிரதோஷ வேளையில் படைக்கப்படும் காப்பரிசி எனும் பிரஸாதம் - அரிசி மற்றும் வெல்லத்தினால் செய்யப்படுவது. அந்த பிரஸாதத்தை உட்கொண்டால், அது நம் உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கவல்லது.

சூரியன் அஸ்தமித்து, சந்திரன் உதிக்கும் நேரமாக அந்தி மாலை நேரம் விஷத்தன்மை கொண்டது என்றும், அவ்வேளையில் தீபம் ஏற்றி, வழிபாடுகள் செய்ய, புனிதமான நேரம் என்றும் சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

சாயங்கால வேளையில் சாப்பாடு கூடாது என்று பெரியோர்கள் கூறுவது இதன் அடிப்படையில் தான்.

மாலை வேளையில் தான், கர்வம் கொண்ட ஹிரண்யனை நரசிம்மர் வதம் செய்தார்.

பிரதோஷ வேளையில் சிவபெருமானை வணங்கினால் தலைக்கனம், கர்வம் போன்றவை நீங்கும் என்றும், ஆணவம், கண்மம், மாயை எனும் மும்மலங்களும் நீங்கி, சிவயோகம் கிடைக்கும் என்றும் சிவபுராணங்கள் வலியுறுத்துகின்றன.

நந்தி தேவருக்கு ஏற்பட்ட தலைக்கனத்தை (கர்வம்-செருக்கு) நீக்க அவரின் தலைமேல் தாண்டவமாடினார் சிவபெருமான்.

யமுனை நதியின் தலைவன் என கர்வம் கொண்ட காளிங்கன் எனும் நாகத்தின் தலை மீது தாண்டவமாடி தண்டித்தார் கிருஷ்ணன்.

நல்ல பக்தியும், நன்னெறியும், நல்லெண்ணமும், நன்னடத்தையும் கொண்டிருந்தால் மட்டுமே இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் என்பதற்கு உதாரண புராணங்களாக மேற்கண்டவை விளங்குகின்றன.
ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் :

தேவர்கள் ஆலகால விஷத்திற்கு அஞ்சி, கைலாய மலையை இங்கும் அங்கும் ஓடி, இறைவனைச் சரணடைந்து நற்கதியைப் பெற்ற வழிமுறைதான் - ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் என்று கூறப்படுகின்றது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் - ஸோம ஸூக்த பிரதக்ஷிண முறையைக் காட்டுகின்றது.

நிலையாக இருக்கும் சிவனை, நாம் வழிபடும் வலம் வரும் முறை, செயல் சக்தியாகச் செய்யும் போது, சக்தி தேவிக்குரிய திரிசூல வடிவம் வருவதைக் காணலாம். சிவனையும், சக்தியையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைக்கக் கூடிய அற்புதமான வழிபாட்டு முறை ஸோம ஸூக்த பிரதக்ஷிணம்.

பிரதோஷ வேளையில் ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் அளவற்ற பலனைத் தரும். ஸத்புத்ர சந்தானம் எனும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளமாகும்.

ஸோமஸூக்த பிரதக்ஷிணம் என்பதை மிக எளிய வகையில் செய்ய ஒரு உபாயம் உண்டு.

கோ

கோ

மேற்கண்ட குறியீடுகளை ஞாபகம் கொண்டு எளிதில் வலம் வரலாம்.

ந - நந்தி

ச - சண்டிகேஸ்வரர்

கோ - கோமுகி எனும் ஆலயக் கருவறையிலிருந்து அபிஷேகத்

தீர்த்தம் விழும் இடம்.


பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :

1. செல்வங்கள் பெருகும்.

2. கடன் தொல்லைகள் நீங்கும்,

3. நோய்கள் அகலும்

4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.

5. குழந்தைகளின் கல்வி மேம்படும்.

6. வேண்டிய வரம் கிட்டும்.

7. குழந்தைகள் எவ்விதமான கஷ்டமும் இன்றி உணவு எடுத்துக்கொள்ளும்.

8. நீடித்த ஆயுள் கிட்டும்.

9. சிவ சக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.


ஒவ்வொரு நாளும் மாலை 4.30 - 6.00 நேரம் நித்திய பிரதோஷம் எனவும்,

ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும், பெளர்ணமிக்கு முன்னரும் வரும் திரயோதசி திதி பட்ச பிரதோஷம் எனவும்,

சனிக் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது சனி மஹா பிரதோஷம் எனவும்,

திங்கட் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது ஸோம பிரதோஷம் எனவும் போற்றப்பட்டு, சிறப்பான வகையில் வழிபாடு செய்யப்படும்.


நந்தியம்பெருமானுக்கேயுரிய சில சிறப்பு தலங்கள் :

நந்தி கொம்பு ஒடிந்த ஸ்தலம் - திருவெண்பாக்கம்

ஈசனோடு நந்தி இணைந்த உருவ ஸ்தலம் - திருக்கூடலையாத்தூர், பவானி

நந்தி விலகிய ஸ்தலம் - திருப்புங்கூர், பட்டீஸ்வரம், திருப்பூவனம், திருப்பூந்துருத்தி

நந்தி நின்ற ஸ்தலம் - திருமால்பேரு

நந்தி திருமண ஸ்தலம் - திருமழபாடி

நந்தி பிரதோஷ ஸ்தலம் - திருஅரிசிலி

நந்தி சிவனைப் பார்க்க இல்லாமல், திரும்பியவாறு கோபுரம் நோக்கிய ஸ்தலம் - திருவோத்தூர், திருமுல்லைவாயில், பெண்ணாடம் மற்றும் சில தலங்கள்.

பிரதோஷ காலத்தில், பூஜைகள் நடைபெறும் சமயத்தில், பன்னிரு திருமுறைகளில் உள்ள, அமிர்தம் கடைதல் தொடர்பான, பதிகங்களை படித்தலும் கேட்டலும் பற்பல பலன்களை வாரி வழங்கக்கூடியது. குறிப்பாக, சிவபுராணத்தினை (நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க ..) வாசிப்பதும், கேட்பதும் நற்பலன்களை அளிக்கக் கூடியது.

பிரதோஷ காலத்தில் பாராயணம் செய்ய பிரதோஷ ஸ்தோத்திரம் மற்றும் பிரதோஷ அஷ்டகம் எனும் மிக அரிய - மிகப் பழமையான நூலாகிய ஸ்காந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட - சிறப்பு வாய்ந்த இரு ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கீழ்க்கண்ட ஸ்லோகங்கள், பிரதோஷ காலத்தில் படிக்க அல்லது கேட்கப்பெறுவது, மேலே கூறியுள்ள அனைத்து பலன்களையும் வாரி வழங்க வல்லது.

பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானை வணங்கி நலங்களை நாளும் பெறுவோம் !

******

ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்திரம்

ஸ்ரீ கணேசாய நம:

ஜய தேவ ஜகன்னாத ஜய சங்கர சாச்வத |

ஜய ஸர்வ ஸுராத்யக்ஷ ஜய ஸர்வ ஸுரார்ச்சித ||

ஜய ஸர்வ குணாதீத ஜய ஸர்வ வரப்ரத |

ஜய நித்ய நிராதார ஜய விச்வம்பராக்ய ||

ஜய விச்வ ஏக வந்த்யேச ஜய நாகேந்த்ர பூஷண |

ஜய கெளரிபதே சம்போ ஜய சந்த்ர அர்த்த சேகர ||

ஜய கோட்யர்க ஸங்காச ஜய ஆனந்த குணாச்ரய |

ஜய பத்ர விரூபாக்ஷ ஜயாசிந்த்ய நிரஞ்சன ||

ஜய நாத க்ருபாஸிந்தோ ஜய பக்தார்த்தி பஞ்சன |

ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகர உத்தாரண ப்ரபோ ||

ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்தஸ்ய ஸ்வித்யத: |

ஸர்வ பாப க்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேஸ்வர ||

மஹா தாரித்ர்யமக்நஸ்ய மஹாபாப ஹதஸ்ய ச |

மஹா சோக நிவிஷ்டஸ்ய மஹா ரோகாதுரஸ்ய ச ||

ருணபாரபரிதஸ்ய தஹ்ய மாநஸ்ய கர்மபி : |

க்ரஹை: ப்ரபீஜமாநஸ்ய ப்ரஸீத மம சங்கர ||

தரித்ர: ப்ரார்த்தயேத்தவம் ப்ரதோஷே கிரிஜாபதிம் |

அர்த்தாடோ வாத ராஜா வா ப்ரார்த்தயேத்தேவம் ஈச்வரம் ||

தீர்க்கமாயு: ஸதாரோக்யம் கோசவ்ருத்திர் பலோன்னதி : |

மமாஸ்து நித்யம் ஆனந்த: ப்ரஸாதாத்தவ சங்கரம் ||

சத்ரவ: ஸம்க்ஷயம் யாந்து ப்ரஸீதந்து மம ப்ரஜாபத : |

துர்பிக்ஷமரி ஸந்தாபா: சமம் யாந்து மஹீதலே ||

ஸர்வ ஸஸ்ய ஸம்ருத்திஸ்ச பூயாத்ஸுகமயா திச: |

ஏவம் ஆராதயேத்தவம் பூஜாந்தே கிரிஜாபதிம் ||

ப்ராஹ்மணான் போஜயேத் பஸ்சாத் தக்ஷிணாபிஸ்ச பூஜயேத் |

ஸர்வ பாப க்ஷயகரி ஸர்வ ரோக நிவாரணி ||

சிவபூஜா மயாக்யாதா ஸர்வாபீஷ்ட பலப்ரதா ||

********************************************

ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்ர அஷ்டகம்

ஸ்ரீ கணேசாய நம: |

ஸத்யம் ப்3ரவீமி பரலோக ஹிதம் ப்3ரவீமி

ஸாரம் ப்3ரவீம் உபநிஷத் த்4ருத3யம் ப்ரவீமி |

ஸம்ஸார முல்ப3ணம ஸாரமவாப்1ய ஜந்தோ:

ஸாரோSயம் ஈச்வர பதாம் ப்ருஹஸ்ய ஸேவா || 1 ||

யே நார்ச்சயந்தி கிரீசம் ஸமயே ப்ரதோஷே

யே நார்ச்சிதம் சிவமபி1 ப்ரணமந்தி சா1ன்யே |

ஏதத்கதா2ம் ச்ருதிபுடைர்ந பிப3ந்தி மூடா4ஸ்தே1

ஜன்மஜன்மஸ¤ ப4வந்தி நரா தரித்ரா : || 2 ||

யே வை ப்ரதோஷ ஸமயே பரமேஸ்வரஸ்ய

கர்விந்த்ய நந்ய மனஸோSங்கி4ரி ஸரோஜ பூஜாம் |

நித்யம் ப்ரவிருத்த4 தனதான்ய கலத்ரபுத்ர ஸெளபாக்ய

ஸம்பத3தி4 காஸ்த இஹைவ லோகே || 3 ||

கைலாஸசைல புவனே த்ரி ஜகஜ்ஜனித்ரிம் கௌரீம்

நிவேச்ய கனகா சிதரத்ன பீடே |

ந்ருத்யம் விதா4துமபி4 வாஞ்ச2தி சூலபாணௌ

தேவா: ப்ரதோஷ ஸமயே நு பஜந்தி ஸர்வே || 4 ||

வாக்3தேவீ த்4ருத வல்லகீ சதமகோ2 வேணும் த3த4த் பத்மஜ

ஸ்தாலோன்னித்3 கரோ ரமா ப4கவதீ கேய ப்ரயோகாந்விதா |

விஷ்ணு: ஸாந்த்ர ம்ருத3ங்க வாத3நபடுர்தே3வா: ஸமந்தாத்ஸ்தி2தா :

ஸேவந்தே தமநு ப்ரதோஷ ஸமயே தேவம் ம்ருடா3நிபதிம் || 5 ||

கந்தர்வ யக்ஷ பதகோரக ஸித்த3 ஸாத்4ய வித்யாதரா ரவராப்ஸரஸாம் க3ணாஞ்ச |

யேsன்யே த்ரிலோக நிலயா ஸஹபூ4தவர்கா: ப்ராப்தே பரதோஷ ஸமயே ஹரபார்ச்வ ஸம்ஸ்தா2 : || 6 ||

அத: ப்ரதோஷே சிவ ஏக ஏவ பூஜ்யோsத2 நான்யே ஹரி பத்மஜாத்தா4: |

தஸ்மிந் மஹேசே விதி4நேஜ்யமாநே ஸர்வே பரஸீதந்தி ஸ¤ராதி4நாதா2: || 7 ||

ஏஷ தே தநய: பூர்வஜன்மநி ப்ராஹ்மணோத்தம: |

ப்ரதி க்ரஹைர்வயோ நிந்யே ந தாநாத்தை: ஸ¤கர்மபி : || 8 ||

அதோ தாரித்3ரய மாபந்ந: புத்ரஸ்தே த்3விஜபா4மிநி |

தத்தோஷ பரிஹாரார்த்தம் சரணாம் யாது சங்கரம் ||

|| இதி ஸ்ரீ ஸ்காந்தோக்தம் ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம் ஸம்பூர்ணம் ||

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

செல் : 94434 79572

mail : yanthralaya@yahoo.co.in

yanthralaya@gmail.com

www.facebook.com/deekshidhar