Sunday, January 19, 2020

சிதம்பரம் ஸ்ரீ மூலஸ்தான ஸ்ரீ மூலநாதர் ஆலய அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன மஹா கும்பாபிஷேகம்




திருச்சிற்றம்பலம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மூலஸ்தான கும்பாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் பிரகாரத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ உமையபார்வதி அம்பிகை ஸமேத 
ஸ்ரீமூலநாதர் ஆலய
அஷ்டபந்தன ஸ்வர்ணபந்தன 

மஹா கும்பாபிஷேகம்
**************
நாள் : ஸ்வஸ்திஸ்ரீ விகாரி வருஷம், தை மாதம் 22ம் தேதி, 05.02.2020, புதன் கிழமை
நேரம் : காலை 09.00 முதல் 10.00 மணி மீன லக்னம்
************************************************************
மானுட ராக்கைவடிவு சிவலிங்கம்
மானுட ராக்கைவடிவு சிதம்பரம்
மானுட ராக்கைவடிவு சதாசிவம்
மானுட ராக்கைவடிவு திருக்கூத்தே.
                            ---- திருமந்திரம், திருமூலர்
*********
பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார்
     பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்
இரும்புதலார் இரும்பூளை யுள்ளா ரேரார்
     இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்
கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்
     கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த
     வீழி மிழலையே மேவி னாரே.
                         ----   தேவாரம், அப்பர் சுவாமிகள்

ஞாலத்தாயிரங்கோடி நற்றான முளவவற்றின்
ஏலத்தானலமார விடங்கொண்ட வெழிற்றில்லை
மூலத்தானத் தொளியாய் முளைத்தெழுந்த சிவலிங்கக்
கோலத்தானின்பூசை கொள்வானென்றுரை செய்து
 -----  கோயிற்புராணம், உமாபதி சிவம்

அன்புடையீர்,

கோயில் என்றாலே பொருள்படுவது சிதம்பரம் திருத்தலம். இங்கு, ஆடல்வல்லப் பெருமானாகிய ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்தி அனுதினமும் ஆடல்காட்சியை நல்கி ஆனந்தத்தை அளித்திடுகிறார். இந்த ஆலயத்தின் இரண்டாம் பிரகாரம் அல்லது தக்‌ஷிணாமூர்த்தி பிரகாரம் என அழைக்கப் பெறும் இடத்தில், இத்தலத்தின் ஆதி நாதராக, பழம்பெரும் வடிவமாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமைந்தருளும்                                    ஸ்ரீ உமையபார்வதி அம்பிகை உடனாய ஸ்ரீமூலநாதர் ஆலயம் அமைந்துள்ளது.(http://natarajadeekshidhar.blogspot.com)

உயரிய பெருமைகள் வாய்ந்த இந்த ஆலயத்திற்கு அஷ்டபந்தன ஸ்வர்ணபந்தன மஹா கும்பாபிஷேக வைபவம் மேற்கண்ட தேதியில், சிதம்பரம் நடராஜர் கோயில் எனும் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்‌ஷிதர்களால், கடந்த 40 ஆண்டுகளில் காணாத வகையில், மிக பிரம்மாண்டமான யாகசாலை பூஜைகளுடன் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றாலும் சிறப்புற்ற தலம் - சிதம்பரம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்),  தரிசிக்க முக்தி தரும், வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். சிதம்பர ரகசிய ஸ்தானம் அமைந்த புண்யதலம். காலத்தால் மிக முந்தைய சிவத்தலம். தில்லை வாழ் அந்தணர் என புகழப்பெற்ற தீக்‌ஷிதர்களால் வேதவழி பூஜைகள் சிறப்புற நடைபெறும் வைதீகத்தலம். ஆன்மீகத்தின் அனைத்து கலைகளிலும் முன்னோடியாக திகழும் திருத்தலம். பற்பல அருளாளர்களால் பாடப் பெற்ற சைவத்தலம். தமிழ் திருமுறைகள் கண்டெடுக்கப்பட்ட தவத்தலம்.
சிவகங்கை எனும் தீர்த்தம் (திருக்குளம்) கோயிலினுள் அமைந்து கங்கைக்கு மேலான பலன்களை வழங்குகின்றது.

ஸ்ரீ மூலநாதர் :
ஒரு சமயம், ஸ்ரீவைகுண்டத்தில் மஹா விஷ்ணு யோக நித்திரையில் ஆழ்ந்த பொழுது, தாம் முன்னர் கண்ட ஆனந்த நடராஜ மூர்த்தியின் ஆனந்த தாண்டவத்தினை மனதார மகிழ்ந்த தருணம் அவருக்கு  மெய் சிலிர்த்தது.  
அவரை அனுதினமும்  தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷன் எனும் நாகராஜன், மஹாவிஷ்ணுவின் மேனி மாற்றத்தை உணர்ந்து, பக்தியுடன், உடல் சிலிர்த்ததன் காரணத்தைக் கேட்க, மஹா விஷ்ணு விபரம் முழுவதும் சொன்னார். (http://natarajadeekshidhar.blogspot.com)

அதனைக் கேட்ட ஆதிசேஷனுக்கும் ஆனந்த நடனக் காட்சியைக் காணும் ஆவல் ஏற்பட்டது. இதனை விஷ்ணுவிடம் வரமாகக் கேட்க, பூலோகத்தின் தில்லை வனத்தில் (சிதம்பரம்) அமைந்திருக்கும் ஸ்ரீமூலநாதர் எனும் ஸ்வயம்பு லிங்கத்தை வழிபாடு செய்துவர ஆனந்தக் காட்சி கிடைக்கும் என மஹாவிஷ்ணு அருள்பாலித்தார்.

அதன்படியே, ஆதிசேஷன் பதஞ்சலி எனும் பெயரோடு பாம்பின் காலோடும் மனித உருவோடும், பூலோகத் தில்லை வனம் வந்து பல்லாண்டுகளாக, புலியின் கால்களைக் கொண்ட வியாக்ரபாத மஹரிஷியுடன் இணைந்து பூஜைகள் செய்துவந்தார்.

இவர்கள் பல்லாண்டுகள் இயற்றிய தவத்தின் விளைவாக, தை மாதத்தில் வியாழக் கிழமை இணைந்த பூச நக்ஷத்திரத்தில், ஸகல தேவகணங்களோடு ஆனந்த நடனக் காட்சியை அனைவருக்கும் நடராஜ மூர்த்தி அருளினார். 

நடனமாடிய நம்பெருமான் ரிஷிகளிடம் வரங்களைக் கேட்கச் சொல்ல, பதஞ்சலி மஹரிஷி 'பதம் சலியாமல் இங்கு ஆடல் காட்சி தர வேண்டும்' என்ற பெருவரம் கேட்க, அவ்வண்ணமே அம்பலவாணர் அருளினார். அந்த  நடராஜ வடிவத்தை தான் இன்றும் நாம் சித்ஸபை எனும் பொன்னம்பலத்தின் கீழே  தரிசனம் செய்கின்றோம்.

கெளட தேசத்தைச் சேர்ந்த ஸிம்ஹவர்மன் எனும் மன்னன் தனக்கு ஏற்பட்ட பெருநோயின் காரணமாக அரச பதவி தவிர்த்து, வழி நடையில் தில்லை வனம் வந்து சேர்ந்தான்.

பதஞ்சலி வியாக்ரபாத மகரிஷிகள் மன்னனைக் கண்டு பெருநோய் நீங்க ஒரே வழி சிவகங்கைக் குளத்தில் தீர்த்தமாடி, ஸ்ரீமூலநாதரை நாளும் வழிபாடு செய்வது தான் என அறிவுறுத்த, அதன்படியே மன்னவனும் செய்து, நோய் நீங்கி பொன்னிற மேனியனாக ஹிரண்யவர்மனாக புதிய தோற்றம் கொண்டான். (http://natarajadeekshidhar.blogspot.com)

மறுபடியும்  தமது தேசம் சென்று அரசபதவி ஏற்று, தில்லை சிதம்பரத்தில் பதஞ்சலி வியாக்ரபாத ரிஷிகள் கோரியபடி, ஸ்ரீ மூலட்டானத்து இறைவனுக்கும், தில்லையம்பலத்திற்கு பொன்வேய்ந்து, கோயில்களை மிக அற்புதமாக அருமையாகக் கட்டினான்.

உலகின் ஆதிவழிபாடு சிவலிங்க வழிபாடு. பூலோக ஆதி லிங்கம் சிதம்பரம் ஸ்ரீ மூலநாத லிங்கம். சிதம்பரத்தில் உருவமாக பொன்னம்பலத்தின் கீழ் நடராஜ மூர்த்தியையும், அருவமாக ரஹஸ்ய தரிசனமும், அருவுருமாக ஸ்ரீமூலநாத லிங்க மூர்த்தியும் அருளும் காட்சியைக் கண்ணாரக் காணலாம்.

சிதம்பரம் ஸ்ரீமூலநாதர் ஆலயம் :

ஸ்ரீ மூலநாதர் - மிகப் பெரும் சிவலிங்க வடிவம். ஆவுடையார் சதுரவடிவமாக அமைந்த அற்புதத் திருக்கோலம். உமையபார்வதி எனும் அம்பிகையோடு அருளும் ஸ்வரூபம். பதஞ்சலி, வியாக்ரபாதர், விநாயகர், முருகர், நந்தி, பலிபீடம், சண்டிகேஸ்வரரோடு கோயில் கொண்ட தன்னிகரற்ற தனியுருவம். பிரகாரத்தில் தக்‌ஷிணாமூர்த்தி, அறுபத்து மூன்று நாயன்மார்கள் எனக் கொண்ட நிகரற்ற நிலை. வேதங்களும், வடமொழிக் காப்பியங்களும், தேவாரத் திருமுறைகளும் போற்றிப்பணிந்த தனிச் சிறப்புற்ற தெய்வாம்சம். பிரதோஷ வழிபாடும், தைப்பூசத்திற்கு பத்து நாட்களும் உத்ஸவமும் ஏற்கும் ஸதாசிவ வடிவம்.
(http://natarajadeekshidhar.blogspot.com)
புராணங்களின்படி பார்த்தோமானால், சிதம்பரத்தின் முதல் கட்டுமானமாக ஸ்ரீமூலநாதர் ஆலயமும், பொன்னம்பலம் கொண்ட ஸ்ரீ நடராஜர் ஆலயமாகவும் அமைந்திருக்கக்கூடும்.

சிதம்பரம் தலத்தின் வரலாற்றுக் குறிப்புகள்,  இரண்டாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி. 1133  1150) குலோத்துங்கச் சோழன்  திருமாளிகை எனும் தக்‌ஷிணாமூர்த்தி பிரகாரத்தினை அமைத்தான் என்கின்றன.
இதனை ஒட்டியது தான் ஸ்ரீமூலஸ்தானம் ஆலயம். ஆக, இந்த ஆலயம் இம்மன்னனின் ஆட்சிக் காலத்திற்கு முன்பே அமைந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் பல்வேறு திருப்பணிகள் நிறைவுற்றிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

ஸ்ரீ மூலஸ்தான பிரகார மேற்கூரையின் கீழ்ப்பகுதியில், சிவமூர்த்தியின் 25 தோற்றங்களை விளக்கும் மாகேஸ்வர வடிவங்கள் ஓவியங்களாக அமைந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றன.(http://natarajadeekshidhar.blogspot.com)

ஆண்டுதோறும் தைப்பூச உத்ஸவம் பத்து தினங்கள் கொண்டாடப்படும். உத்ஸவத்தின் ஒவ்வொரு நாளும் இரவில், ரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்தமையை நினைவுகூறும் வகையில், பதஞ்சலி, வியாக்ரபாத திருவுருவங்கள் ஸ்ரீ ஆதிமூலநாதரின் எதிரில் எழுந்தருளச் செய்யப்பட்டு அற்புதமாக தீபாராதனை நடைபெறும்.

உலக மக்கள் உய்யும் பொருட்டு, ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்காலத்தில் நாம் காண உள்ள மிகப் பெரும் பிரம்மாண்டமான வைபவமாக, கடந்த 40 ஆண்டுகளில் காணாத மிகப் பெரும் நிகழ்வாக நடைபெறவுள்ளது.
ஸ்ரீமூலநாதருக்கு மட்டுமே உத்தமகுண்ட பக்‌ஷம் எனும் 33 யாக குண்டங்களும், ஸ்ரீ உமையபார்வதி அம்பிகைக்கு பஞ்சகுண்டபக்‌ஷம் எனும் 5 யாக குண்டங்களும், ஸ்ரீமூலநாதர் கோபுரத்திற்கு 1 யாக குண்டமும், ஸ்ரீ உமையபார்வதி அம்பிகை கோபுரத்திற்கு 1 யாக குண்டமும், ஸ்ரீ விநாயகர், முருகர், பதஞ்சலி, வியாக்ரபாதர், நந்தி, பலிபீடம் உள்ளிட்ட தெய்வங்களுக்கு 1 யாக குண்டமும், சண்டிகேஸ்வரருக்கு 1 யாக குண்டமும்,  ஆக மொத்தம் 42 யாக குண்டங்கள் கொண்ட மஹா யாகசாலை அமைகிறது.(http://natarajadeekshidhar.blogspot.com)

இங்கு,  எட்டு கால யாக பூஜைகளுடனும், பதஞ்சலி மஹரிஷி வகுத்த பூஜா ஸூக்தங்களின்படி, சதுர்வேத மற்றும் பன்னிரு திருமுறை பாராயணங்களுடன், நாதஸ்வர நல்லிசையுடன், தில்லை மூவாயிரவர் எனும் பொது தீக்‌ஷிதர்களால் ஸ்ரீ உமையபார்வதி உடனாய ஸ்ரீமூலநாதர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன ஸ்வர்ணபந்தன மஹா மஹா கும்பாபிஷேகம், நிகழும் விகாரி வருஷம், தை மாதம் 22ம் தேதி, புதன் கிழமை, 05.02.2020, சுக்லபக்‌ஷ ஏகாதசி, மிருகசீரிஷம் நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில், காலை மணி 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மீன லக்னத்தில் மிக மிக சிறப்பாக  நடத்தப்படவுள்ளது.

ஸ்ரீ உமையபார்வதி ஸமேத ஸ்ரீமூலநாதர் லிங்கம் வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனருளும் மஹாசிவலிங்கம், நற்குழந்தைப் பேறு நல்கும் தாயுமான லிங்கம், வம்ச அபிவிருத்தி வழங்கிடும் மஹேஸ்வர லிங்கம், குழந்தைகளின் கல்வியில் மேன்மை தந்திடும் வேதலிங்கம், கற்ற கல்வியினால் நல்வேலை வாய்ப்பு தந்திடும் விஸ்வேஸ்வர லிங்கம், பதவிகளில் மென்மேலும் உயர்வு தரும் உன்னத லிங்கம், நல்ல இல்லறத் துணை அருளும் சக்திலிங்கம், எதிரிகளால் ஏற்படும் அனைத்து இடர்ப்பாடுகளையும் நீக்கிடும் சங்கரலிங்கம்,  நோய்கள் இல்லாத நீடித்த ஆனந்தமான நல்வாழ்வு தந்திடும் வைத்யலிங்கம்.

யாகசாலை நிகழ்ச்சி நிரல்
29.01.2020, புதன் கிழமை - காலை கூஷ்மாண்ட ஹோமம், நாந்தி பூஜை, தேவதா அனுக்ஞை
30.01.2020 வியாழன் கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், இரவு வாஸ்து சாந்தி ஹோமம்
31.01.2020 வெள்ளி ஆச்சார்ய வர்ணம், ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரம், ப்ரதிஸரம், மதுபர்க்கம், ரக்‌ஷாபந்தனம்
01.02.2020 சனிக் கிழமை - காலை பிரசன்னாபிஷேகம், மந்தரஜபம், கலாகர்ஷணம், கும்பஸ்தாபனம், விசேஷ ந்யாஸ அர்ச்சனை, தீபாராதனை. மாலை முதல் கால யாக பூஜை
02.02.2020 ஞாயிறு - காலை & மாலை - இரண்டாம் & மூன்றாம் கால பூஜை
03.02.2020 திங்கள் - காலை & மாலை நான்காம் & ஐந்தாம் கால பூஜை
04.02.2020 செவ்வாய் காலை, மதியம் & இரவு ஆறாம், ஏழாம்  & எட்டாவது கால பூஜை
(http://natarajadeekshidhar.blogspot.com)
05.02.2020 புதன் - காலை கோபூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, கட யாத்ராதானம்.
காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் ஸ்ரீ உமையபார்வதி உடனாய ஸ்ரீமூலநாதர் ஆலய மஹா மஹா கும்பாபிஷேகம்.

மாலை விசேஷ யாக பூஜைகளுடன் மஹாபிஷேகம்
இரவு பஞ்சமூர்த்தி வீதியுலா.
சிறப்பு அன்னதானம் ஒவ்வொரு காலத்திலும் அளிக்கப்படும்.
மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் சிறப்பு யாக பூஜைகளுடனும், அபிஷேக ஆராதனைகளுடனும் சிறப்புற நடைபெறும்.
பக்தர்கள் அனைவரும் காணுதற்கரிய இந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்ரீ உமையபார்வதி உடனாய ஸ்ரீ மூலநாதர் மூர்த்தியின் பரிபூரண அருளைப் பெற வேண்டுகின்றோம்.

நி.த. நடராஜ தீக்‌ஷிதர்


சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜை
(http://natarajadeekshidhar.blogspot.com)
13/7, உமையாள் லேன், சிதம்பரம் 608 001.
Mobile : 9443479572, 9362609299

திருச்சிற்றம்பலம்.
சுபம்.
(http://natarajadeekshidhar.blogspot.com)