Sunday, September 1, 2019

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தினுள் அமைந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ தக்‌ஷிணாமூர்த்தி, ஸ்ரீ வல்லப விநாயகர், ஸ்ரீ ஜகன்மோகன கணபதி, ஸ்ரீ பல்லிகேஸ்வரர், ஸ்ரீ சாஸ்தா (ஐயப்பன்), ஸ்ரீ மூல விநாயகர், ஸ்ரீ மீனாக்‌ஷி சுந்தரேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன, ரஜத பந்தன மஹா கும்பாபிஷேகம்


சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலினுள்
ஒரே நாளில் எட்டு ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தினுள் அமைந்து அருள்பாலித்துவரும்
ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ வல்லப விநாயகர்,               ஸ்ரீ ஜகன்மோகன கணபதி, ஸ்ரீ பல்லிகேஸ்வரர், ஸ்ரீ சாஸ்தா (ஐயப்பன்),  ஸ்ரீ மூல விநாயகர், ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலய        அஷ்டபந்தன, ரஜத பந்தன மஹா கும்பாபிஷேகம்
*********
நாள் : விகாரி வருஷம், ஆவணி மாதம் 25ம் தேதி, புதன் கிழமை, 11.09.2019, வளர்பிறை திரயோதசி, திருவோண நக்ஷத்திரம்,
நேரம் : காலை 6.00 மணிக்கு மேல் 07.15 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம்.
*******(http://natarajadeekshidhar.blogspot.com)
நிகழ்ச்சி நிரல்
08.09.2019 மாலை முதல் கால யாகம்,
09.09.2019 காலை இரண்டாம் காலம் & மாலை மூன்றாம் கால யாகம், 
10.09.2019 காலை, மதியம், மாலை முறையே நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் கால யாகம்.
11.09.2019 காலை 06.00 மணிக்கு மேல் 07.15 மணிக்குள், கன்யா லக்னத்தில் மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறும்.
மாலை 07.00 மணிக்கு மஹாபிஷேகமும், இரவு வீதியுலாவும் நடைபெறும். (http://natarajadeekshidhar.blogspot.com)

மேற்கண்ட ஒவ்வொரு நிகழ்விலும் வேதபாராயணங்களும், திருமுறை பாராயணங்களும், பிரஸாத விநியோகங்களும், அன்னதானமும் மிகச் சிறப்பாக நடைபெறும். (http://natarajadeekshidhar.blogspot.com)

யாகசாலை விபரம் :
கிழக்கு கோபுரத்திற்கும், சிவகங்கைக் குளத்திற்கும் இடையே இரண்டு பிரம்மாண்டமான யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ மீனாக்‌ஷி சுந்தரேஸ்வரருக்கு பஞ்சகுண்ட பக்‌ஷமும், ஸ்ரீமூல விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு இரண்டு குண்டங்கள் என மொத்தம் ஏழு யாக குண்டங்கள் கொண்ட அழகியதொரு யாகசாலை.
ஸ்ரீ தக்‌ஷிணாமூர்த்தி ஸ்வாமிக்கு பஞ்சகுண்ட பக்‌ஷமும், ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பல்லிகேஸ்வரர், ஸ்ரீ வல்லப விநாயகர், ஸ்ரீ ஜகன்மோகன கணபதி தெய்வங்களுக்காக நான்கு யாக குண்டங்களும் ஆக மொத்தம் ஒன்பது யாக குண்டங்களும் கொண்ட அற்புதமானதொரு யாகசாலை.
ஸ்ரீ சாஸ்தா தெய்வத்திற்கு உத்ஸவ யாகசாலையில் ஒரு குண்டம் கொண்ட வழிபாட்டில் யாகபூஜைகள் நடைபெறவுள்ளது.

சிதம்பரம்.

கோயில் என்றாலே பொருள்படுவது. ஆனந்த நடராஜராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது. சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தரும் ஸ்தலம். சிதம்பர ரகசியம் விளங்குவது. அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்றும் தலமாக விளங்குவது. (http://natarajadeekshidhar.blogspot.com)

வெளியூர்களில் புகழ்கொண்ட தெய்வங்கள் இந்த ஆலயத்தில் குடிகொண்டதாக சிதம்பர புராணங்கள் பகர்கின்றன. காசி அன்னபூரணி முதற்கொண்டு, சபரிமலை சாஸ்தா, திருக்கடையூர் காலஸம்ஹார மூர்த்தி  என பல தெய்வங்களின் சிலா ரூபங்கள் இங்கே அமையப் பெற்றிருக்கின்றன.
ஒரு தினத்தின் ஆறாவது காலமாகிய, இரவு 10 மணிக்கு நடைபெறும் அர்த்தஜாம காலப் பொழுதில், அனைத்து தெய்வங்களின் தெய்வக்கலைகளும், சிதம்பர அம்பலவாணரிடம் சேர்ந்து, பிறகு காலை அங்கிருந்து செல்கின்றன என்று சிதம்பர புராணத்தினைப் புகழும் குஞ்சிதாங்கிரிஸ்தவம் எனும் நூலின் 175வது ஸ்லோகம் விவரிக்கின்றது. (ஆஸேதோ ... பஜேஹம்). (http://natarajadeekshidhar.blogspot.com)
ஆகவே, பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தெய்வ வடிவங்கள் சிதம்பர ஆலயத்தில் காணப் பெறலாம்.
அவ்வகையில், சிறப்புப் பெற்ற வகையில் அமைந்திட்ட மேற்கண்ட ஆலயங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், தில்லை வாழந்தணர்கள் என போற்றப்படும் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்ஷிதர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
உலகம் செழுமை பெறும் வகையிலும், ஒற்றுமை ஓங்கி, மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்திடவும் வேண்டுதல்கள் செய்யப்பட உள்ளது.

(கோயில் அமைவிடம், புராணம், வரலாறு, தரிசன பலன்)

1. ஸ்ரீ கற்பக விநாயகர் :

(அபிராமி அந்தாதியின் ஆதி (வி)நாயகர் எனும் தலைப்பிலான கட்டுரைக்கான லிங்க் : http://natarajadeekshidhar.blogspot.com/2012/03/blog-post.html இதில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் பற்றிய மேல் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.) (http://natarajadeekshidhar.blogspot.com)

அமைவிடம் :
எந்தவொருச் செயலைத் தொடங்கும் முன்னும் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குவது போல, ஆலய தரிசனம் செய்யும் முன்னும், விநாயகரை வழிபடவேண்டும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
நான்கு கோபுரங்களின் வழியேயும் வருகை தரும்போது, முதற்கண், முழுமுதற் கடவுளாகிய கணபதியை வழிபட வகை அமைந்த ஒரு அற்புதத் தலம் சிதம்பரம். (http://natarajadeekshidhar.blogspot.com)
மேற்கு கோபுரம் வழியே நடராஜரை தரிசனம் செய்ய வருபவர்கள் முதலில், கற்பக கணபதியை வழிபட வேண்டும்.
மேற்கு கோபுரத்தின் கல்ஹாரம் எனும் கருங்கல் பீட அமைப்பில், மேற்கு நோக்கியவராக, புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பவர் ஸ்ரீ கற்பக கணபதி.
சிற்பியின் கற்பனைத் திறனும், கலை நுணுக்கமும் நிறைந்திட்டதோர் அழகிய அற்புத வடிவம். இவரை மையமாகக் கொண்டு ஆலயம் அமைந்திருப்பது அதிசிறப்பானது. (http://natarajadeekshidhar.blogspot.com)

புராணம் :
ஒரு சமயம், துர்வாசர் எனும் மஹரிஷி நடராஜப் பெருமானை தரிசிக்க தனது சீடர்களுடன் சிதம்பரம் வந்தார். கோபவசப்படுபவரும், சாபம் கொடுப்பதிலும் பெயர் பெற்றவர் இந்த ரிஷி. இவர் வரும் நேரம் இரவு அர்த்த ஜாம பூஜை நிறைவடைந்து சன்னதி மூடப்பட்டுவிட்டது. அந்த நேரம் பார்த்து வந்த ரிஷியைக் கண்டு அனைவரும் அஞ்சினர். நடராஜ தரிசனத்தைக் காணாமல் ஊருக்கு சாபம் அளித்துவிடுவாரோ என அஞ்சி, விநாயகரைப் பணிந்தனர். அஞ்சுபவருக்கு அஞ்சேல் என அபயக் குரல் கொடுக்கும் ஆனைமுகத்தோன், துர்வாசரின் தரிசன விருப்பத்தை மனதில் கொண்டு, தன் தந்தையாகிய நடராஜப் பெருமான், எப்படி ஆனந்த நடனக் காட்சியை நல்கினார் என்பதை, தனது பெருத்த உடலோடு, விடைத்த பெரிய காதுகளோடு, சலங்கை ஒலிக்க, அங்கங்கள் குலுங்க, துர்வாசருக்கும் சீடர்களுக்கும் நடனமாடிக் காட்டுகின்றார்.
இதைக் கண்ட அனைவரும், ஐங்கரனின் ஆட்டத்தில் மனம் குலுங்கி சிரித்து மகிழ்கின்றனர். இத்தாண்டவத்தைக் கண்ட அனைவரும் நடராஜப் பெருமானின் திருக்கோலத்தை நினைந்து மனம் குளிர்கின்றனர்.
துர்வாசரும், கண்ணால் கற்பக கணபதி தந்த காட்சியைக் கண்டு, உள்ளம் குளிர்ந்து, உவகை கொண்டு, நடராஜ நடனத்தை தரிசித்த திருப்தியுடன், உலக மக்கள் அனைவரும் உமது நடனக் காட்சியைக் காண வேண்டும் என்று வரம் வேண்டிக்கொண்டு தனது ஆசிரமம் திரும்புகின்றார். அனைவர் மனதிலும் பயம் விலகி இன்பமயம் பொங்கச் செல்கின்றனர். (http://natarajadeekshidhar.blogspot.com)
ஸ்ரீ கற்பக கணபதியே சிதம்பரம் ஆலயத்தின் ஸ்தல விநாயகராக கொண்டாடப் படுகின்றார்.
பொதுவாக விநாயகர் ஆலயத்தில் மூஞ்சூறு எனும் எலி வாகனம் தான் விநாயகர் எதிரில் அமைந்திருக்கும். ஆனால், கற்பக கணபதி ஆலயத்தில், நடேச அம்சமாக நாட்டியம் ஆடியவருக்கு எதிரில் நந்தி வாகனம் அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.

வரலாறு : (http://natarajadeekshidhar.blogspot.com)
வரலாற்றின் அடிப்படையில் பார்த்தோமானால், கி.பி.1178 முதல் 1218 வரை தமிழகத்தை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கன், சிதம்பரம் ஆலயத்திற்கு பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளான்.
இந்த விநாயகரின் கீழ் 'குலோத்துங்கச் சோழ விநாயகர்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுக் குறிப்பு ஒன்று - இராஜாக்கள் தம்பிரான் திருமாளிகை மேலைத் திருமாளிகையில் நிலையெழு கோபுரத் திருவாசல் புறவாசல் தென்பக்கத்து எழுந்தருளியிருந்து பூசை கொண்டருளுகிற குலோத்துங்கச் சோழ விநாயகர் - என்று விவரிக்கின்றது. ஆக, மேற்கு கோபுரம், குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் உறுதிபடுத்துகின்றனர். (க. வெள்ளைவாரணார், தில்லைப் பெருங்கோயில் வரலாறு)
நாட்டியமாடும் கோலத்தில் அமைந்த முதல் விநாயகர் விக்ரஹம் என்ற பெருமையும் ஸ்ரீ கற்பக கணபதிக்கு உண்டு.
தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே  என்று அபிராம பட்டர் தனது அபிராமி அந்தாதியில், காப்புச் செய்யுளில் சிதம்பரத்தில் அமைந்து அருள்பாலிக்கும் - தில்லை ஸ்தல விநாயகராகிய ஸ்ரீ கற்பகக் கணபதியைத் தான் குறிப்பிடுகின்றார் என்பார்கள் அபிராமி அந்தாதியையும், சிதம்பரத்தையும் இணைந்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள். (http://natarajadeekshidhar.blogspot.com)

தரிசன பலன் : 
மேற்கு நோக்கிய ஸ்ரீ கற்பக கணபதி, செல்வங்களை வாரி வழங்குபவர், கடன் தொல்லைகளை நீக்குபவர், வாழ்க்கை இனிமையாக அமைய அருள்பவர். தொடங்கும் செயல்கள் அனைத்தையும் வெற்றியாக்குபவர்.

ஸ்ரீ தக்‌ஷிணாமூர்த்தி :

அமைவிடம் : (http://natarajadeekshidhar.blogspot.com)
ஸ்ரீ நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுரம் வழியே உள் சென்றோமானால், 21படி வாசல் கடந்து வரும் முதல் பிரகாரத்தின் வடக்கு திசையில் அமைந்த ஸ்ரீ மூலஸ்தானம் எனும் கோயிலின் பரிவார தெய்வமாக அமைந்துள்ளது.  கிழக்கு நோக்கிய சிவாலய (ஸ்ரீ ஆதி மூல நாதர்) அமைப்பில் தென் புற சுவற்றில் தென்முகப் பரமனாகிய                 தக்‌ஷிணாமூர்த்தி தெய்வத்தை அமைத்தல் மரபு. அதன்படியே, அழகு மிக்க விதத்திலும், அருள் பொங்கும் வடிவிலும், கோஷ்ட தெய்வமாக ஸ்ரீ தக்‌ஷிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

புராணம் : (http://natarajadeekshidhar.blogspot.com)
தக்ஷிணாமூர்த்தி வடிவம், சிவபெருமானின் ஐந்து தலைகளில் இருந்து தோன்றிய இருபத்து ஐந்து சிவ வடிவங்களாகிய மாகேசுவர வடிவங்கள் எனப் போற்றப்படும் இருபத்து ஐந்து தெய்வங்களுள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். கல்விக் கடவுளாக விளங்குபவர்.
ஆல மரத்தின் நிழலில், யோக வடிவில், ஒரு கால் கீழ்த்தொங்க, மறுகால் மற்றொரு தொடையின் மேல் அமைய ஏகாந்தமாக அமர்ந்த  நிலையில், அமைதியான கோலத்தில், ஆசிரியர்களுக்கெல்லம் பெரும் ஆசானாக, குரு நிலையின் மேலான வடிவத்தில்  தனது சீடர்களுக்கு கல்வியை போதிக்கும் அற்புதத் தெய்வமாக  விளங்குபவர்.
தமிழ் நால்வர்களில் ஒருவரான மாணிக்க வாசகருக்கு திருப்பாத தரிசனம் கொடுத்து ஆட்கொண்டவர்.

வரலாறு : (http://natarajadeekshidhar.blogspot.com)
இந்த தக்‌ஷிணாமூர்த்தி ஆலயம், ஸ்ரீ ஆதி மூல நாதரைக் கருவறையாகக் கொண்ட மிகவும் தொன்மையான மூலஸ்தானம் எனும் கோயிலின் தென்புறச் சுவற்றில் அமைந்துள்ளது.
இவ்வாலயம், வரலாற்றுக் குறிப்புகளின்படி இரண்டாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி. 1133 1150) அமைத்திட்ட குலோத்துங்கச் சோழன் திருமாளிகை எனும் பிரகாரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் இவ்வழியை தக்‌ஷிணாமூர்த்தி பிரகாரம் என்றே போற்றிடுவார்கள். ஆக, இந்த ஆலயம் இம்மன்னனின் ஆட்சிக் காலத்திற்கு முன்பே அமைந்திருக்க வேண்டும். மூலஸ்தான ஆலயம் மிகவும் பழமையானது ஆகும். அதற்கான சுவரும், தக்‌ஷிணாமூர்த்தி வடிவமும் மிக மிகப் பழமையானது என்றே கருத வேண்டும்.
இவ்வாலயத்திற்கு எதிர்ப்புறத்தில் உள்ள திருமதிலில் வரலாற்றை இயம்பும் பல கல்வெட்டுகள் உள்ளன. இவ்வாலயத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதைக் குறிக்கும் கல்வெட்டுகளும் உண்டு.

தரிசன பலன் : (http://natarajadeekshidhar.blogspot.com)
வியாழக் கிழமையில் வழிபடுவோருக்கும், அனுதினமும் தரிசிப்போருக்கும், கல்வியையும் ஞானத்தையும் தெளிவையும் ஒருங்கே தருகின்ற ஒப்பற்ற தெய்வம். நல்ல ஞாபக சக்தியும், தேர்வு எழுதும் மாணாக்கர்கள் நல்மதிப்பெண்கள் பெறவும், கற்ற கல்வியினால் பெரும் புகழும், நல்ல வேலை வாய்ப்பையும் தந்திடும் தன்னிகரற்ற தக்‌ஷிணாமூர்த்தி தெய்வம். இல்லங்களில் சுப நிகழ்ச்சிகள் நடந்திட அருளுபவர். புத்திக் கூர்மையைத் தந்திடுபவர். நெருக்கடியான நேரத்தில் நல்ல முடிவுகள் எடுக்க அருளுபவர். (http://natarajadeekshidhar.blogspot.com)


ஸ்ரீ பல்லீஸ்வரர் எனும் பல்லிகேஸ்வரர் :

அமைவிடம் :
இந்த தெய்வ வடிவம், தக்‌ஷிணாமூர்த்தி ஸ்வாமிக்கு சற்று இடைவெளி விட்டு, இடது புறத்தில் அமைந்ததோர் தென்முகம் கொண்ட அழகு தெய்வம். தனியொரு பீடம் கொண்டு தரிசிப்பவர்களுக்கு தகுந்த வரங்களை வாரி வழங்குபவர்.

புராணம் : (http://natarajadeekshidhar.blogspot.com)
கோதாவரி ஆற்றங்கரையில் பிறந்த ஜோதிடர் ஒருவர் மறு பிறவியில் சிதம்பரத்தில் ஒரு பல்லிக்கு மகனாகப் பிறந்தார். தனது பிறவிக்கு பயன் வேண்டும் என்பதற்காக தெய்வத்தை நாளும் நாத்தழும்பேற துதித்தார். அதன் பயனாக, ஈசனின் அருளாசியால் சிதம்பர க்‌ஷேத்திரத்திற்கான காவலாளியாக க்‌ஷேத்ரபாலகர் ஆக பொறுப்பேற்றார். இந்த க்‌ஷேத்ரபாலகரே அர்த்தஜாம அழகர் என பெயர் பெற்று  சிலா ரூபமாக அர்த்தஜாமத்தின் கடைசி தீபாராதனையைப் பெறுகின்றார். இதற்கான அத்தாட்சியாக, சித்ஸபையாகிய பொன்னம்பலத்தின் கிழக்கு புற கொடுங்கையில் (ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகில்) பல்லியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
பல்லிக்குப் பிறந்த மகனுக்கு அருளிய தெய்வ வடிவம் தான் பல்லீஸ்வரர் அல்லது பல்லிகேஸ்வரர் எனப் போற்றப்படுகிறார். (குஞ்சிதாங்கிரிஸ்தவம் 191) (http://natarajadeekshidhar.blogspot.com)

தரிசன பலன் :
இவரை தரிசித்தால் ஜோதிடத்தில் மேன்மை, வாக்கு பலிதம், பக்தியின் முழுமையான பலன், எண்ணிய செயல்கள் ஈடேறுவது என அனைத்து வரங்களையும் அருளுபவர்.

ஸ்ரீ வல்லப கணபதி :


அமைவிடம் :
பல்லிகேஸ்வரருக்கு இடது புறத்தில் அருகாமையில் அமைந்திருக்கும் அழகு மிக்கதோர் ஆனைமுகத்தோனின் அருள்வடிவம்.

புராணம் : (http://natarajadeekshidhar.blogspot.com)
வல்லபி எனும் அரக்கி தேவர்களை வருத்த, அவர்கள் கணபதியைப் பணிய, வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக நிறைவேற்றக் கூடிய வேழமுகத்தோன், அந்த அரக்கியை அடக்கி, தனது இடது  மடியில் ஏந்திக்கொண்டு காட்சி தரும் கலாவடிவம் தான் வல்லப கணபதி. விநாயகரின் மூல மந்திரங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது  வல்லப கணபதி மந்திரம். அதில் இருக்கும் ஒவ்வொரு அக்‌ஷரமும் மிக மிக வீரியம் வாய்ந்தது.
மந்திர உபதேசங்கள், கல்வி தொடக்கம், எழுத்தறிதல் போன்ற சடங்குகள் இவ்வாலயத்தின் முன்பாகத் தொடங்குவது பலருக்கும் வழக்கமாக இருக்கிறது.

தரிசன பலன் : (http://natarajadeekshidhar.blogspot.com)
உயர்ந்த கல்வி, நல்ல ஞாபக சக்தி, விரைவில் புரிந்து கொள்ளும் திறன், கல்வியினால் உயர் புகழ் என அனைத்தையும் வாரி வழங்குபவர் வல்லப கணபதி.

ஸ்ரீ ஜகன்மோகன கணபதி :

அமைவிடம் :
மேற்கண்ட வல்லப கணபதிக்கு இடது புறத்தில் அமைந்திருக்கும் பேரழகும், அற்புதக் கலை நயமும்  ஒருங்கே கொண்ட, பெயருக்கு ஏற்றார்ப்போல உலகத்தையே மயக்கும் வடிவம் கொண்டவர் ஜகன்மோகன கணபதி.
கணபதியை உபாஸனை செய்யும் காணாபத்தியர்கள் இந்த தெய்வத்தை உச்சிஷ்ட கணபதி என்று போற்றி வழிபடுவார்கள்.

புராணம் :
துராசதன் எனும் அசுரனுக்கு ஜகத்துக்கு அதாவது அகிலத்திற்கு அதிபதியாக விஸ்வரூபம் காட்டியருளிய வடிவம் ஜகன்மோகன கணபதி.
தரிசன பலன் :

எதிரிகளால் ஏற்படும் இன்னல்கள், பில்லி, சூனியம் போன்ற எதிர்ப்புகள் அனைத்தையும் அறவே அகற்றுபவர். சுப நிகழ்வுகளான திருமண யோகங்கள் போன்றவற்றை அருளுபவர். நல்ல வசீகரணத்தைக் கொடுக்கக் கூடியவர்.

ஸ்ரீ சாஸ்தா :

அமைவிடம் : (http://natarajadeekshidhar.blogspot.com)
இந்த ஜகன்மோகன கணபதிக்குச் சற்று தொலைவில் இதே பிரகாரத்தில் கிழக்கு திசையில், வடக்கு நோக்கிய நிலையில் அமையப் பெற்றவர் ஹரிஹரபுத்திரர் எனப் போற்றப்பெறும் ஸ்ரீ சாஸ்தா.

புராணம் :
கலியுகக் கடவுளாகவும், கண்கண்ட தெய்வமாகவும், சபரிகிரி வாசனாகவும், பக்தர்களுக்கு விரைந்து அருள்பாலிப்பவராகவும் போற்றப்படுபவர் ஐயப்பனாகிய சாஸ்தா.
மஹா விஷ்ணு பெண் வடிவமாக மோகினி அவதாரம் கொண்டபோது, ஈசனின் கூடலால் பிறந்த தெய்வக் குழந்தை சாஸ்தா. ஆகையால் ஹரி ஹர புத்திரன் எனப் பெயர் பெற்றவர். மிகச் சிறு வயதிலேயே வீரதீரச் செயல்களைப் புரிந்தவர். மகிஷி எனும் அரக்கியை வென்றவர்.  கேரளத்தின், சபரிமலையில் கோயில் கொண்டு, தவக் கோலத்தில் தரிசனம் தருபவர்.

வரலாறு : (http://natarajadeekshidhar.blogspot.com)
சிதம்பரத்தில் அஷ்ட சாஸ்தா எனும் எட்டுவித ஐயப்ப ஸ்வாமி கோயில் கொண்டு எண் திசையையும்  நோக்குகிறார் என்பார்கள். அதில் முதன்மையானவர் கோயிலின் உள்ளமைந்தம் தக்‌ஷிணாமூர்த்தி பிரகாரத்தில் அமைந்த ஒரே சாஸ்தா வடிவம்.
பேரம்பலம் எனும் தேவஸபையின் பின்புறச் சுவற்றில் கோஷ்ட தெய்வமாக அருளுகிறார். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேர மன்னராகிய சேரமான்பெருமான், சிதம்பரம் வந்து நடராஜப் பெருமானை வழிபட்டு பொன்வண்ணத்தந்தாதி பாடி அருள்பெற்றார். அவருக்கும் ஐயப்பனுக்கும் தொடர்பு உண்டு. சேர மன்னர்களின் வழிபடு தெய்வம் ஐயப்பன். சிதம்பரத்தில் இருக்கும் ஐயப்பனை சேர மன்னர் சேரமான் பெருமான் காலத்திலேயே வழிபட்டிருக்க வேண்டும்.
அதன் பயனாகத் தான், சேரமான் பெருமான் கயிலை செல்லும் வழியில் பாடிய திருக்கயிலாய ஞான உலாவினை உலகத்தினர் கேட்டு உய்யவேண்டும் என நினைந்து ஐயப்பனை வேண்டினார். ஐயப்பனும் பக்தனின் குரலுக்கு செவி சாய்த்து, வேறு எங்கும் காண இயலாத வகையில், கையில் ஓலைச் சுவடியுடன் திருப்பிடவூர் எனும் திருப்பட்டூருக்கு அருகில் அற்புதக் கோலம் கொண்டு ஞான உலாவை ஞாலத்திற்கு அறிமுகப்படுத்தினார். (இவ்வரலாறு பெரிய புராணத்தில் காண்பிக்கப்படுகிறது.) (http://natarajadeekshidhar.blogspot.com)
ஆக, சேரமானுக்கு அருளிய ஐயப்பன் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ளார்.
ஐயப்பனின் மீது பேரன்பு கொண்டு நடேஸ்வரப் பெருமான்,  காடுகள் எனும் அனைத்து வனங்களுக்கும் அதிபதியாக்கினார் எனும் செய்தியை குஞ்சிதாங்கிரிஸ்தவம்  188வது செய்யுள் உரைக்கின்றது.

தரிசன பலன் : குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை நீக்குபவர், குழந்தைகளின் கல்வி மேம்பட அருளுபவர், வாழ்வில் மங்கலங்களை தருபவர்.

ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயம் : சிதம்பரத்தில் மதுரை :


அமைவிடம் : (http://natarajadeekshidhar.blogspot.com)
சிதம்பர ஆலயத்தின் திருக்குளமான சிவகங்கைக் குளத்தின் மேற்கு மண்டபத்திற்கு அருகில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயம் கொண்டமைந்துள்ளார்.

புராணம் : (http://natarajadeekshidhar.blogspot.com)
சிதம்பரத்தில் தவம் செய்த பதஞ்சலி, வியாக்ரபாத மகரிஷிகளுக்கு, மீனாக்ஷி சுந்தரேஸ்வரராக திருமணக் கோலக் காட்சியினை சிவபெருமான் மதுரையில் அருளினார். (குஞ்தாங்கிரிஸ்தவம் 50)
திரும்பவும் அவர்கள் சிதம்பரம் வந்தாலும், நினைவு முழுக்க  மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரரை சுற்றியே இருந்தது. அவர்களின் வேண்டுதலைப் புரிந்துகொண்ட பரமேஸ்வரன், மீனாட்சி சொக்கநாதராக சிதம்பரத்திலும் காட்சி தந்தருளினார். அவ்வழகிய வடிவத்தினை சிதம்பரத்தின் மதுரையாக நாமும் தினமும் தரிசிக்க இயலும். மதுரையம்பதியானை தரிசித்த பலன் பெற வேண்டுமானால், இப்பெருமானை வணங்கினாலே போதுமானது என்பார்கள் ஆன்மீகர்கள்.

வரலாறு : (http://natarajadeekshidhar.blogspot.com)
மதுரையில் பாண்டிய மன்னனின் அரசவையில் இருந்தவர் மாணிக்கவாசகர். இவருக்காக ஈசன் நரிதனை பரியாக்கிய திருவிளையாடல்களைச் செய்தவர். திருவாசகம் எனும் தெவிட்டாதத் தேனைத் தந்தவர். இவர் பக்திப் பெருக்கில் திளைக்க மதுரையை விட்டு சிதம்பரம் வந்தார். பாண்டிய மன்னன் இவரது பிரிவைத் தாங்காமல், மாணிக்கவாசகரைக் காண சிதம்பரம் வந்தான். அவரை தரிசித்து இன்பம் கொண்டான். நீண்ட நாளாகப் புத்திரப் பேறு இல்லாதிருந்த மன்னனை நோக்கி மாணிக்க வாசகர் சிதம்பரத்தின் மதுரையாகிய ஸ்ரீ மீனாக்‌ஷி சுந்தரேஸ்வரர் ஆலயத்தைப் புதுப்பிக்கச் செய்தார். அதன்படியே, மன்னனும் மகிழ்ந்து, ஆலயத்தை செப்பனிட்டான். அதன் பெரும் பயனாக புத்திரப் பேறு அடைந்தான் என்று இவ்வாலய பழைய கும்பாபிஷேக பத்திரிகை அழகுறத் தெரிவிக்கின்றது.

வரலாறு : (http://natarajadeekshidhar.blogspot.com)
சோழர்களும், பாண்டியர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு சிதம்பரம் நடராஜர் மீது பெரும் பற்றுக் கொண்டு ஆலயத்தில் பல்வேறு அளப்பரிய திருப்பணிகள் செய்துள்ளனர்.
பொதுவாக பாண்டிய மன்னர்களுக்குக் குல தெய்வம் மதுரை மீனாக்‌ஷி சுந்தரேஸ்வரர் தான். இத்தெய்வத் திருமுன்பு தான் பட்டாபிஷேகம் செய்து கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள்.
அந்த வகையில், பாண்டிய வம்சத்தினனான சடையவர்மன் வீரபாண்டியன் 1267ல், இந்த மீனாக்‌ஷி சுந்தரேஸ்வரர் கோயிலைக் கட்டி, நூற்றுக்கால் மண்டப முகப்பாகிய வீரபாண்டிய மண்டபத்தில் விஜயாபிஷேகமும், வீராபிஷேகமும் செய்து கொண்டான். (தில்லைப் பெருங்கோயில் வரலாறு பக். 40)

தரிசன பலன் : (http://natarajadeekshidhar.blogspot.com)
நல்ல இல்லறத் துணை, மனதிற்கினிய துணை அமைந்த இல்லற வாழ்வு, நீடித்த மாங்கல்ய பலன், புத்திரப் பேறு, வம்ச அபிவிருத்தி, புகழ் கொண்ட வாழ்வு.

ஸ்ரீ மூல விநாயகர் :

அமைவிடம் :
சிவகங்கைக் குளத்தின் மேற்கு மண்டபத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கும் அழகுற அமைந்திருக்கும் அரிய வடிவத்திலான ஆலயம். (http://natarajadeekshidhar.blogspot.com)
ஒற்றைக் கால் பிள்ளையார், திருமூல விநாயகர்,  ஆதி மூல கணபதி எனப் போற்றப்படுவர் ஸ்ரீ மூல விநாயகர்.
அரிதிலும் அரிதாக இந்த விநாயகர் ஆலயம் ஒற்றைத் தூண் மட்டுமே கொண்டதாக அமைந்திருக்கின்றது. ஒரு தூணும் சுற்றிலும் சுவர் கொண்டு அமைந்தது. (http://natarajadeekshidhar.blogspot.com)
இவரே சிதம்பரத்தின் ஆதி கணபதி என்பாரும் உண்டு. கோயிலின் முதுகெலும்பு போல் இவ்விடம் அமைந்துள்ளது. முதுகுத் தண்டுவடத்தினை நினைவூட்டத்தான் ஒற்றைத் தூண் கொண்டு வழிபட்டிருக்கிறார்கள். ஆறாதாரத்தில் மூலாதாரமாக இங்கு விநாயகர் கோயில் கொண்டுள்ளார்.

புராணம் : (http://natarajadeekshidhar.blogspot.com)
ஆதியில் தில்லையில் திருமூலர் எனும் வழக்குச்சொற்படி, சித்தர்களுக்கு எல்லாம் முதன்மையானவரான திருமூலர் சிதம்பரத்தில் மூவாயிரம் ஆண்டுகள் உயிர்வாழ்ந்து, வருடத்திற்கு ஒரு பாடல் வீதம்  3000 பாடல்கள் கொண்ட திருமந்திரம் எனும் பாடல் தொகுப்பினை எழுதினார் என்பார்கள் ஆன்றோர்கள். திருமந்திரம் பாடல்கள் பல்வேறு பொக்கிஷங்களைத் தன்னுள்ளே கொண்டது. திருமூலர் வழிபட்ட விநாயகர் என்பதால் இவருக்குத் திருமூல விநாயகர் எனப் பெயர் வந்தது என்பார்கள்.
திருமூலர் நெஞ்சில் நிறைந்த தில்லைநாதனைப் பற்றி குஞ்சிதாங்கிரிஸ்தவம் 185வது பாடல் தெரிவிக்கிறது.

தரிசன பலன் : நல்ல யோகமான வாழ்வு, பக்தியின் முழு பயனும், உயர் நிலையும், முக்தியும் கிடைக்கப் பெறுதல். (http://natarajadeekshidhar.blogspot.com)

பக்தர்கள் யாவரும் இந்த மாபெரும் வைபவங்களில் பங்கு கொண்டு, நற்குழந்தைப் பேறு, வம்ச அபிவிருத்தி, குழந்தைகளின் கல்வியில் மேன்மை, கற்ற கல்வியினால் நல்வேலை வாய்ப்பு, பதவிகளில் மென்மேலும் உயர்வு, நல்ல இல்லறத் துணை, எதிரிகளால் ஏற்படும் அனைத்து இடர்ப்பாடுகளையும் களைந்து நோய்கள் இல்லாத நீடித்த ஆனந்தமான நல்வாழ்வு என அனைத்தையும் பெறுவதற்கு மேற்கண்ட தெய்வங்களை பிரார்த்தனை செய்து கொள்ளக் கோருகிறோம்.

மஹா கும்பாபிஷேக யாகசாலை காலங்களின் பொழுது, ரிக், யஜுர், ஸாமம் & அதர்வண வேத பாராயணங்கள், தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு   நாதஸ்வர இன்னிசை, ஓதுவார் மூர்த்திகளின் பண்ணிசை கச்சேரிகள் & திருமுறை பாராயணங்கள் நடைபெறும். (http://natarajadeekshidhar.blogspot.com)

சிறப்பு அன்னதானம் ஒவ்வொரு காலத்திலும் அளிக்கப்படும்.

மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்புற நடைபெறும்.
(http://natarajadeekshidhar.blogspot.com)


நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்
செல் : 9443479572, 9362609299
www.facebook.com/deekshidhar


Sunday, February 10, 2019

சிதம்பரம் வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவி ஆலய கும்பாபிஷேகம், 11.02.2019, காலை 09.00 மணி - 10.00 மணி


சிதம்பரத்தில் முப்பெரும் விழா 
(11.02.2019, காலை 09.00 10.00 மணி)1. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய வளாகத்தினுள் அமைந்தருளும் ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பிகை ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம். (மேற்கொண்டு விபரங்களுக்கு கீழ்க்கண்ட லிங்க் செல்லுங்கள் : http://natarajadeekshidhar.blogspot.com/2019/01/28-11.html  )

2. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய வளாகத்தினுள், மேற்கு கோபுரத்தில் அமைந்தருளும் ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத செல்வ முத்துக் குமார ஸ்வாமி ஆலய அஷ்டபந்தன  மஹா கும்பாபிஷேகம்  (மேற்கொண்டு விபரங்களுக்கு கீழ்க்கண்ட லிங்க் செல்லுங்கள் : http://natarajadeekshidhar.blogspot.com/2019/02/11012019-09-10.html )

3. சிதம்பரம் நகரம், மேற்கு வீதி & வடக்கு வீதி சேருமிடதிற்கு அருகில் இருக்கும் வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம். (11.02.2019, காலை 09.00 மணி 10.00 மணி)
சிதம்பரம் ஸ்தலம் : ஸ்ரீ ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தி நிதமும் நாட்டியக் காட்சியை நல்கி, அருளை வாரிவழங்கும் திருத்தலம். கோயிலால் தான் ஊருக்கே பெருமை என்பது சாலப் பொருந்தும். நடராஜர் ஆலய பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். பெருமை மிகுந்தது. அருமை வாய்ந்தது.
நடராஜர் கோயிலைச் சுற்றி பல்வேறு சிறப்பான ஆலயங்கள் அமைந்துள்ளன.
அவற்றுள், மிகச் சிறப்பு வாய்ந்ததாகவும், வேறு எங்கிலும் காணப் பெறாத வகையிலும் மிக மிக அழகானத் திருக்கோலம் கொண்டு, தனியொரு ஆலயம் கொண்டு, பரிவார தெய்வங்களுடன் அருள்பாலிக்கும் வேதமாதா காயத்ரி தேவி  ஆலயம், மேற்கு வீதியும் வடக்கு வீதியும் சேரும் இடமாகிய கஞ்சித் தொட்டிக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.
இக்கோயில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது, தில்லை வாழந்தணர்கள் எனும் தீக்ஷிதப் பெருமக்களால் அனுதினமும் பூஜைகள் ஏற்பது என பல்வேறு சிறப்புகள் கொண்டது.
காயத்ரி தேவி :
வேத மந்திரங்களுக்கெல்லாம் மூச்சுக் காற்றாக விளங்குவது காயத்ரி மந்திரம். அந்த காயத்ரி மந்திரத்திற்கான வடிவாகவும், படைப்புக் கடவுளாம் பிரம்ம தேவனின் சக்தியாகவும், லோக நாயகனான சூர்ய பகவானுக்கு ஒளியை அளிப்பவளாகவும், விஸ்வாமித்ர மகரிஷிக்கு பெருமந்திரத்தை அளித்தவளாகவும், காயத்ரி தேவியைப் புராணங்கள் போற்றுகின்றன.
அதிலும், இவ்வாலயத்தில் அம்பிகை காயத்ரி தேவி ஐந்து முகங்கள் கொண்ட அற்புதக் காட்சி தந்து அருளுகிறாள்.
இக்கோயில், சிறிய அழகிய ராஜ கோபுரம் கடந்து உள்ளே செல்ல, கோஷ்டத்தில் சரஸ்வதி, அமிர்தகலசம் ஏந்திய மகாலட்சுமி, அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர் அருள்கிறார்கள். கருவறையில் அன்னை காயத்ரி தேவி மேற்கு நோக்கி அருள்கிறாள். ஐந்து திருமுகங்கள், கருணை பொழியும் கண்களுடன் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். அன்னையின் பாதமருகே ஸ்ரீசக்ரம் உள்ளது. காலையில் காயத்ரியாகவும் மதியம் சாவித்திரியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் அருளும் அம்பிகை.
சிறப்பு மிக்க காயத்ரி தேவி சரஸ்வதி தேவி, பார்வதி தேவி, மகேஸ்வரி, லக்ஷ்மி, மனோன்மணி வடிவங்கள் உள்ளடக்கிய ஐந்து முகங்கள் கொண்ட அம்பிகை.
பவழ நிறம், பொன்னிறம், நீல நிறம், வெண்ணிறம், முத்தொளி வீசும் நிறம் என ஐந்து முகங்களும் ஐந்து வித நிறங்கள் கொண்டதாகும்.
அம்பிகையை வேண்டிக்கொண்டால், அறிவுக் கூர்மை பெருகும். அச்ச உணர்வு அகலும், தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.  உள்ளுக்குள் ஆன்ம பலம் பெருகும். அறிவார்ந்த தோற்றம் கிடைக்கப் பெறும்.
இவ்வாலய பூஜகரான சிவ. ராஜ சேகர தீக்‌ஷிதர் (த.பெ. - சி. சிவராஜ தீக்‌ஷிதர்) செல் : 9444849501, 9443326272 அவர்களின் பெருமுயற்சியாலும், அன்பர்களின் பேராதரவோடும், பக்தர்களின் பெரும் பங்களிப்பினாலும், கருவறை, அர்த்த மண்டபம், மஹா மண்டபம், ராஜ கோபுரம், சுற்று பிரகாரம் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, கருங்கல் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, தற்போது இவ்வாலயத்திற்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மேற்கண்ட தேதியில் நடத்தப்படவுள்ளது.
ஆன்மீக அன்பர்கள் அனைவரும் இந்த மாபெரும் வைபவத்தில் பங்கு கொண்டு வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவியின் பரிபூரணமான அருளைப் பெற வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

-     நி.த. நடராஜ தீக்‌ஷிதர்
-     சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்
-     செல் : 9443479572, 9362609299
-     www.facebook.com/deekshidhar