Monday, March 1, 2010

திருப்பல்லாண்டு

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு
(திருப்பல்லாண்டின் ஒன்பதாவது பாடலுக்கான ஆடியோவை கீழே உள்ள ஆடியோ BARல் ப்ளே பட்டனை அழுத்திக் கேட்கலாம். அற்புதமான ஆகிரி ராகத்தில் இப்பாடலைப் பாடியிருப்பவர் ப்ரம்மஸ்ரீ ஸோமநாக தேவ தீக்ஷிதர்)சேந்தனார் :
சீர்காழிக்குஅருகிலான, திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது திருநாங்கூர் திருத்தலம். இத்திருத்தலத்திலே பிறந்தவர் சேந்தன்.
பட்டினத்தாரின் தலைமைக் கணக்கராக இருந்தவர்.
பட்டினத்தாரின் விருப்பப்படி, அவரின் சொத்துக்களையெல்லாம் மக்களுக்கு தானம் செய்ய வேண்டி, பட்டினத்தாரின் கருவூலத்தை திறந்து, அனைவரும் செல்வங்களை விரும்பியவண்ணம் பெறச்செய்தார்.
இச்செயலைக் கண்ட பட்டினத்தடிகளின் உறவினர்கள் சோழ மன்னரிடம் புகார் செய்தார்கள். விபரம் அறியாத மன்னன் சேந்தனாரை சிறையில் அடைத்தான்.
பட்டினத்தடிகள் நிலைமையை உணர்ந்து சோழனிடம் விளக்கம் சொல்ல, விபரம் அறிந்த மன்னன் சேந்தனாரை விடுதலை செய்தான்.
பிறகு, சேந்தனார் சிதம்பரம் வந்து வாழலானார். தினமும் விறகு வெட்டி வந்து, விற்ற பணத்தில் தினமும் ஒரு சிவனடியார்க்கு உணவு அளித்துப் பின்பு தான் உணவருந்துவார்.
சேந்தனாரிடம் திருநடப்பெருமான் திருவிளையாடல் செய்து, அவரின் சிவபக்தியை உலகுக்குக் காட்ட விரும்பினார்.
சேந்தனார் ஒரு நாள் விறகு விட்ட கிளம்பினார். நாள் முழுக்க மழை பெய்தது. விறகுகள் அனைத்தும் ஈரமாகின. ஈர விறகுகளை யார் வாங்குவார்? ஆகையால், பணம் ஈட்ட முடியவில்லை. மிகவும் மனம் வருந்தியவாறு, இரவு இல்லம் வந்து, களியைத் (மாவைக் களைந்து செய்யப்படும் ஒரு உணவு) தயாரித்து, அதையாவது ஒரு சிவனடியாருக்குக் கொடுக்க வேண்டி காத்திருந்தார். நள்ளிரவில், சிவனடியார் வேடத்தில் நடராஜப் பெருமான் சேந்தனாரின் வீட்டிற்குச் சென்றார். அடியாரைக் கண்ட சேந்தன் மனமகிழ்ந்து வரவேற்று, களியை அடியாருக்கு அளித்தார்.
ஆலகால விஷம் உண்ட அம்பலவாணன், அந்தக் களியை களிப்போடு பெற்று, அமுது போல் உண்டு களித்தார். (களி = மகிழ்ச்சி) பக்தி சுவையும் கலந்த களியின் சுவையில் மயங்கிய ஆடலரசன் அடுத்த வேளைக்கும் எடுத்துக்கொண்டார்.
அடுத்த நாள் அதிகாலையில், ஆலயக் கதவைத் திறந்து பார்க்கையில் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அம்பலத்தாடும் அண்ணலின் மேனியில் களி சிந்தியிருப்பதைக் கண்டார்கள். ஏதோ தெய்வக் குற்றம் நடந்ததோ என மனம் பதைத்தனர். இந்நிகழ்வை அரசருக்குத் அறிவித்தனர். மனம் கலங்கினான் மன்னன். அன்று இரவு அரசனின் கனவில் சேந்தனார் அளித்த களிதான் தன் மேனியில் சிந்தியது என ஈசன் உரைத்தார். திடுக்கிட்டு விழித்த மன்னன், சேந்தனாரின் பக்தியை வியந்தான். அவரைக் காண ஆவலாக இருந்தான். அமைச்சர்களும் பணியாளர்களும் சேந்தனாரைத் தேடிக்கொண்டிருந்தனர்.
அச்சயமயம் சிதம்பரத்தில் மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவத்தின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. மன்னன் உட்பட அனைவரும் தேர் திருவிழாவில் பங்குகொண்டனர். சேந்தனாரின் சிவபக்தியை உலகுக்கு உணர்த்த, திருத்தேரினை தரையில் அழுந்தச் செய்தார் எம்பெருமான். ஏதேதோ முயற்சிகள் செய்தும் தேர் தரையை விட்டு எழாமையைக் கண்டு மன்னன் உட்பட அனைவரும் பரமனைப் பணிந்தார்கள். அச்சமயம் அசரீரீயானது "சேந்தன் பாட தேர் கிளம்பும்" என்றது. ஒரு ஓரத்தில் நின்று நம்பெருமானை தரிசித்துக் கொண்டிருந்த சேந்தனாருக்குத் திகைப்பாக இருந்து. தான் எப்படிப் பாடுவது என்று ஆற்றாமையால் அரற்றினார். சேந்தனுக்கு அருள்பாலித்தார் ஈசன். உடனே "மன்னுக தில்லை.... பல்லாண்டு கூறுதுமே" என்ற பாடலோடு பதின்மூன்று பாடல்களைப் பாடினார். தேர் தானாகவே நகர்ந்து வலம் வந்து நிலையை அடைந்தது. அனைவரும் வியந்து போயினர்.
சேந்தனாரின் பக்தியைக் கண்ட மன்னர் உள்ளிட்ட மக்கள் பரவசம் அடைந்து, அவரைப் போற்றிப் பணிந்தனர்.
பிறகு சேந்தனார், திருக்கடையூருக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி எனும் முருகனுடைய தலத்திற்கு வந்து வாழ்க்கை நடத்தினார். அந்த தலத்திலேயே ஒரு மடத்தை ஸ்தாபித்தார். இவரின் பெருமைகளைக் கண்ட மன்னன் அவருக்கு நிலம் அளித்து அனேக உதவிகள் செய்தான். அந்தப் பகுதி தற்போது "சேந்தன் மங்கலம்" அல்லது "சேந்தமங்கலம்" என்று அழைக்கப்படுகிறது. (வேதம் வளர்க்க மன்னர்கள் அந்தணர்களுக்கு, நிலம் கொடுத்து உதவினர். அதற்கு சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றது. சேந்தனாருக்குக் கொடுத்ததால் அது சேந்தமங்கலம் ஆனது.)
இவரது திருப்பல்லாண்டு திருப்பதிகம் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது.
திருப்பல்லாண்டு என்பது இறைவனையே வாழ்த்தும் ஒரு பிரபந்த வகையைச் சேர்ந்தது.
பொதுவாக வைணவ பிரபந்தங்களில் மஹா விஷ்ணுவைப் பல்லாண்டு வாழ்த்தும் பாடல்கள் மிக முக்கிய இடம் பெறும்.
வைணவத் தலமாகிய திருநாங்கூரில் சேந்தன் பிறந்தமையால், வைணவத்துக்கு உண்டான பல்லாண்டு பாடும் வழக்கத்தை, சைவத்திற்காக சிவபெருமானுக்குப் பாடினரோ என்ற எண்ணம் எழுகின்றது.
சேந்தனார் எழுதிய திருப்பல்லாண்டு மொத்தம் 13 பாடல்கள் மட்டுமே. சிதம்பரம் ஸ்தலத்தைப் புகழ்ந்து பாடுவதாக அமைந்தது.
பன்னிரு திருமுறைகளில் இடம்பெற்றதில் மிகக் குறைந்த பாடல்கள் கொண்ட தொகுப்பு இது மட்டுமே. எண்ணிக்கைதான் குறைவே தவிர, எண்ணற்ற அர்த்தங்கள் கொண்டது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
சிவ ஸ்தலங்களில் கால பூஜைகளின் இடையில் தீபாராதனைக்கு முன்னதாக, தமிழ் வேதமாகிய பன்னிரு திருமுறைகளிலுருந்து பாடல்களைத் தொகுத்து, பஞ்சபுராணம் (1. தேவாரம், 2. திருவாசகம், 3.திருவிசைப்பா, 4. திருப்பல்லாண்டு, 5. பெரிய புராணம் ஆகிய தொகுதிகளிலிருந்து பெறப்பட்ட பாடல்களை) எனும் ஐந்து பாசுரங்களைப் பாடுவார்கள்.
மிகக் குறைந்த பாடல்கள் கொண்டதாக இருந்தாலும், பஞ்சபுராணத்தில் திருப்பல்லாண்டு மிக முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
தில்லைக் கூத்தனை உளம் உருக நினைந்து சிவன் அடியார்களின் நலனுக்காக இறைவனுக்குப் பல்லாண்டு கூறி இப்பதிகம் பாடப் பெற்றிருக்கிறது.
இன்றைக்கும் சயாம் நாட்டில் அரச குடும்பத்து நிகழ்ச்சிகளில் இப்பதிகம் பாடப்பெற்று வருவதாகக் கூறப்பெறுகிறது.
இத்திருப்பதிகத்தில் சிவவரலாறும், அடியார்கள் வரலாறும், திருநீற்றின் சிறப்புகளும் இடம் பெற்றுள்ளன.
சிதம்பரத்தின் தேர் உத்ஸவத்தின் போது ஓதுவார் பெருமக்கள் ஆகிரி ராகத்தில் திருப்பல்லாண்டு பாடுவதைக் கேட்பது மிகவும் புண்ணியம் வாய்ந்ததாகும்.
பல்லாண்டு வாழ வகைசெய்யும் பரமனைப் பல்லாண்டு பாடி வாழ்த்தி பல்லாண்டு வாழ்வோம்.
****************************************************************
"பஞ்சபுராணத் தொகுப்பு" எனும் அரிய தொகுப்பினை என் தந்தையார் அமரர் நி. தண்டபாணி ஸ்வாமி தீக்ஷிதர் அவர்கள் கடந்த 2003ம் ஆண்டு வெளியிட்டார்.
அதன் சிறப்பம்சம், திருப்பல்லாண்டில் உள்ள பாடலுக்கு ஏற்ப, தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, பெரிய புராணம் ஆகியவற்றில் உள்ள பாடல்களில் எதுகை மோனையாக வருவனற்றை தொகுத்து அளித்தார். உதாரணமாக "மன்னுக தில்லை" எனும் திருப்பல்லாண்டு பாடலுக்கு ஏற்ப, தேவாரத்தில் "அன்னம் பாலிக்கும்.."
திருவாசகத்தில் "மு‎ன்னானை மூவர்க்கு"
திருவிசைப்பாவில் "பின்னு செஞ்சடையும்"
பெரியபுராணத்தில் "ம‎ன்னுகோயிலை" எனத் தொடங்கும் பாடல்களைத் தொகுத்ததோடு மட்டுமல்லாமல்,
திருக்கோவையாரில் "மன்னுந் திருவருந் தும்வரை"
அபிராமி அந்தாதியில் "சென்னியது உன்பொற் றிருவடித் தாமரை"
திருப்புகழில் "எ‎ன்னால் பிறக்கவும்"
தொகுத்து தமிழ் நேயர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
பஞ்சபுராணப் பாடல்கள் இங்ஙனம் எதுகை மோனையுடன் அமைந்ததால், எளிதில் மனனம் செய்ய வசதியாக உள்ளன என்று தமிழன்பர்கள் பாராட்டினர். ஓதுவார் பெருமக்களிடம் இத்தொகுப்பு மிக பிரபலமாக விளங்குகின்றது.
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
MAIL : yanthralaya@yahoo.co.in
CELL : 94434 79572.
சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு (பதின்மூன்று பாடல்கள்)
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலபொன்னின்செய்மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்கஅன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்துபின்னைப் பிறவியறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்துஅண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 2
நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்கள்சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3
சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்சில்லாண் டிற்சிறை யும்சில தேவர் சிறுநெறி சேராமேவில்லாண் டகன கத்திரன் மேரு விடங்கன் விடைப்பாகன்பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4
புரந்தரன் மாலயன் பூசலிட்(டு) ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட கோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்கரந்துங் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக்கடல்பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5
சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால் எங்கும்திசை திசையெனகூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாம்குழ மாய் நின்று கூத்தாடும்ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பமார்பாவிக்கும் பாவகத்(து) அப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 6
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில்?ஊரும் உலகும் கழற உளறி உமைமண வாளனுக்(கு)ஆம்பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே. 7
சேலுங் கயலும் திளைக்கும் கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம்போலும் பொடியணி மார்பிலங் குமென்று புண்ணியர் போற்றிசைப்பமாலும் அயனும் அறியா நெறி தந்துவந்தென் மனத்தகத்தேபாலும் அமுதமு ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 8
பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்ஆவிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனேபூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச்சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 10
குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகிவிழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின்மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்தபழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 11
ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்துபாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 12
எந்தை எந்தாய் சுற்றும் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்றுசிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறை அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகழ் தாண்டுகொண் டாருயிர்மேல்பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே. 13.

6 comments:

அண்ணாமலையான் said...

மிக நல்ல பதிவு...

கள்ளபிரான் said...

பட்டிணத்தாரும் சேந்தனாரும் சமகாலத்தவர் என்று எனக்கு இப்போதுதான் தெரியும்.

பட்டிணத்தாரைப்பற்றி நிறைய படித்திருக்கிறேன். ஆனால் சேந்தனாரைப்பற்றி இப்போதுதான் தெரிகிறேன்.

சேந்தனார் பாடல்களை உங்கள் ப்திவில் இருந்து உரக்கப்பாடினேன். இசையுடன் வருகிறது.

....

சயாம் நாட்டின் இன்றைய பெயர் தாய்லாந்து. அதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். சோழர்கள் காலத்தில் அங்கு தமிழ் பரவியிருந்தது. சோழர்கள் அதை வென்றனர் என படித்திருக்கிறேன்.

நன்றி

Anonymous said...

Senthanar wrote "Thiruvisaippa" on Thiruvidaikazhi Murugan.It is " Aga Ilakkiam" variety. Please include the same in the article or write separately.
Valarga intha Ilakkia Pani.

Satya

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

சத்யா,
ஒன்பதாம் திருமுறையே ஒரு வித்தியாசமான தொகுப்பு. பன்னிரு திருமுறைகளின் மற்ற பாடல்கள் அனைத்தும், சிவபெருமானையே புகழ, சேந்தனாரின் மற்றொரு தொகுப்பாகிய தேனினும் இனிய திருவிசைப்பா - முருகனைப் புகழும் அக இலக்கிய வகையைச் சேர்ந்தது. பஞ்சபுராணம் எனும் ஐந்து பாடல்களில் ஒன்பதாம் திருமுறையிலேயே இரு பாடல்கள் எடுத்தாளப்படுகின்றன. (திருவிசைப்பா - திருப்பல்லாண்டு). சேந்தனார் பற்றிய கருத்துவேறுபாடுகள் சில தமிழ் ஆய்வாளர்களிடையே காணப்படுகின்றன. திருவிசைப்பா எழுதிய சேந்தனார் வேறு, திருப்பல்லாண்டு எழுதிய சேந்தனார் வேறு என்றும் கருத்து வேறுபாடு உள்ளது. ஆகவே, சேந்தனார் - திருப்பல்லாண்டு என்றே இந்த பதிவில் கண்டுள்ளோம். தமிழ்த் திருமுறைகள் ஒவ்வொன்றின் பெருமையைச் சொல்ல ஒரு பெரிய தொடரையே எழுதவேண்டும். ஆயினும், தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

கீதா சாம்பசிவம் said...

இரண்டு சேந்தனார் என்ற தகவல் புதிது. திருப்பல்லாண்டு பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இவர் திருவாதிரைக்களிக்கு உரிய சேந்தனார் அல்லவா?? நன்றி.

கீதா சாம்பசிவம் said...

தொடர