Monday, July 25, 2011

தில்லையில் விளங்கும் தச தீர்த்தங்கள்

தில்லையில் விளங்கும் தச தீர்த்தங்கள்
நீரின்றி அமையாது உலகு - உலகப் பொதுமறையாம் திருக்குறளில் திருவள்ளுவர் கூறியது.
தண்ணீரிலிருந்து தான் பூவுலகிலுள்ள உயிரினங்கள் தோன்றின - வேதவாக்கு. (ஆகாசாத் வாயு; வாயோர் அக்நி: அக்நிர் ஆப: அத்ப்ய: ப்ருதிவீ - யஜுர் வேத தைத்ரீய உபநிஷத்).
தண்ணீரிலிருந்து தான் ஒரு செல் கொண்ட உயிரினமான அமீபா முதல் தோன்றி பரிணாம வளர்ச்சியடைந்து தற்போது மனிதன் வரையிலான உயிர்கள் தோன்றின என்கின்றது விஞ்ஞானம்.
மஹாவிஷ்ணுவின் தசாவதாரத் தோற்றங்கள் - மனிதன் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியைக் காட்டுவதேயாகும். (விஷ்ணுவின் முதல் அவதாரம் தண்ணீரில் தோன்றிய மத்ஸ்யாவதாரம்)
தண்ணீர்தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவாதாரமாகத் திகழ்வது.
ஆன்மீகம் தண்ணீரை - தீர்த்தம் - என்று மிக உயர்வாகக் கொண்டாடுகின்றது. நீரில்லாத எவ்வித ஆன்மீக வைபவமும் இல்லை.
தண்ணீர் பிரவாகமெடுத்துவரும் நதிகளை - வெறும் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல் அவற்றை - தெய்வமாகவேக் கருதி வழிபடும் வழக்கம், பன்னெடுங்காலம் தொட்டு வழங்கிவருகின்றது.
தண்ணீர் கொண்டு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்படும். அந்த தண்ணீரே தெய்வத்தன்மை வாய்ந்த தீர்த்தமாகக் கருதப்பட்டு உட்கொள்ளப்படுவதும் உண்டு.
பஞ்சபூதங்களாகிய - ஆகாயம், தண்ணீர், நெருப்பு, காற்று, மண் - இவற்றில் தண்ணீருக்கு மட்டுமே ஒரு சிறப்பு உண்டு.
நாம் எந்தப் பாத்திரத்தில் தண்ணீரை விடுகின்றோமோ, அந்தப் பாத்திரத்தின் வடிவத்தையேச் சார்ந்துவிடும். குடத்திலிட்டால், அந்தக் குடத்தின் வடிவத்திலேயே தண்ணீரும் அமைந்துவிடும். பானையிலிட்டால், பானையின் வடிவத்தையே அடைந்துவிடும்.
ஆகையால் தான், தண்ணீரைக் கொண்டு, வழிபடு வைபவங்கள் நடத்தப்படுகின்றன.
தெய்வங்களை ஆவாஹனம் செய்யும் குடங்களில் நாம் பிரார்த்தனை செய்யும் கடவுள் அந்த நீரின் வடிவிலே அதாவது நமது எண்ணத்தின் படியே அமைந்துவிடுகின்றது. குடத்தின் வடிவத்திலேயே தண்ணீர் அமைகின்றதோ அதே போல நமது பிரார்த்தனை தெய்வம் நமது எண்ணத்தின் படியே அமைகின்றது.
பாரதத்தின் வடபுறத்தில் ஆலயங்களை விட நீர்நிலைகளான தீர்த்தங்களாகிய, நதிகளே பிரதான வழிபடும் இடங்களாக அமைந்துள்ளன. கங்கோத்ரி, யமுனோத்ரி, மானச சரோவர் போன்ற
இடங்கள் பெரிதும் போற்றக்கூடிய இடங்களாக அமைந்துள்ளன.
புண்ணிய நதிகள் பாய்வதால் பூமியே புனிதமானதாக மாறிய ஒரே இடம் பாரதம் மட்டுமே.
கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள் பெருமை வாய்ந்தன.
கங்கை - சிவபெருமானின் ஜடாமுடியிலிருந்து பகீரதனின் பெரும் பிரயத்தினத்தினால், பூமியில் பாய்ந்து, பாகீரதி என்று பெயர் பெற்று புனிதத்திலும் புனித நதியாக விளங்குகின்றது.
பாரதத்தின் புண்ய நதியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு நதி - யமுனை. கடலில் கலக்காத ஒரே புனித நதி.
சரஸ்வதி - வேதங்களில் கூறப்பட்டுள்ள நதி. அந்தர்வாஹினியாக, தரைமட்டத்தின் கீழே ஓடுவதாகக் கருதப்படுவது.
பாரத தேசத்தில் ஓடும் ஒவ்வொரு நதியும் புனிதம் நிறைந்தவை. ஒவ்வொன்றிற்கு ஒரு சிறப்புத்தன்மை உண்டு.
நமது முன்னோர்கள் ஆலயத்தினை, வழிபாட்டு தலமாக மட்டுமல்லாம் பல்நோக்கு கொண்டு, தண்ணீர் நிறைந்த குளம் (மழைநீர் சேகரிப்பு), நந்தவனம், ஸ்தல விருஷம் (காடு வளர்ப்பு) போன்ற இயற்கையோடு இயைந்த வழிபாட்டு முறையை இணைத்திருக்கின்றார்கள்.
வட இந்தியாவில் நதிகளால் ஆலயங்கள் பெருமையடைந்தது போல, தென்னிந்தியாவில் ஆலயங்களால் அதனைச் சார்ந்த தீர்த்த நிலைகள் பெருமையடைகின்றன.
ஆலயம் - புனிதமும் மேன்மையும் கொண்டிருப்பதென்றால், அவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் பெருமை பெற்றிருக்க வேண்டும்.
அவ்வகையில், கோயில் என்ற ஒரு சொல் - சிதம்பரத்தையே குறிக்கும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் பெருமை கொள்ளும் ஸ்தலம்.
சிதம்பரம் தலத்தினுள் இருக்கும் சிவகங்கை ஆலய தீர்த்தத்தோடு சேர்த்து பத்து நீர்நிலைகள் தச தீர்த்தங்களாக அமைந்து, ஆலயத்திற்குப் புனிதம் சேர்க்கின்றன.
சிதம்பர ஆலயத்தின் பெருமை மிகுந்த, ஸ்தல புராணங்களில் சொல்லப்பட்ட, புனிதம் வாய்ந்த பத்து நீர்நிலைகளை (தச தீர்த்தம்) இப்பதிவில் காண்போம்.
1. சிவகங்கை
'தீர்த்தம் என்பது சிவகங்கையே' என்று குமரகுருபரரால் போற்றப்பட்ட தீர்த்தம். ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் தங்க மேனியில் தவழ்ந்த அபிஷேக தீர்த்தம் சிவகங்கையில் தான் கலக்கின்றது. ஆகையால் தான் சிவகங்கையே பொற்குளம் போல் காட்சியளிக்கின்றது.

ஒரு சமயம், ஆதிசேஷனின் அரவணையில் துயில் கொண்ட மஹாவிஷ்ணு, திடீரென தனது யோக நித்திரை களைந்து, களிப்புற்றார். அனுதினமும், ஹரியைத் தாங்குகின்ற பாம்பு வடிவனான ஆதிசேஷன், மஹாவிஷ்ணுவின் திடீர் மாற்றத்திற்கு காரணம் கேட்க, முன்னொரு சமயம் ஸ்ரீ நடராஜர் ஆடிய ஆனந்த நடனத்தை நினைக்கையிலேயே ஆனந்தம் பொங்குகின்றது, அவ்வானந்தமே அரிதுயிலை நீக்கச் செய்தது என்க, ஆர்வ மிகுதியில், ஆதிசேஷன், ஆனந்த நடனத்தை அடியேனும் காண வேண்டும் என வரம் கேட்க, விஷ்ணு வரம் அளிக்கின்றார். பூவுலகத்தில், தில்லை மரங்கள் சூழ்ந்த, சிவகங்கை எனும் தடாகத்தின் அருகில், தில்லை வனத்தில், சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அங்கே சென்று தவமியற்றி, ஆடல்வல்லானின் ஆனந்த நடனத்தைக் காணலாம் என்றும் வழிகாட்டுகின்றார்.
ஆதிசேஷனும், பதஞ்சலி முனிவராகப் பிறப்பெடுத்து, தில்லை வனத்தில் தவமியற்றுகின்ற புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதருடன் சேர்ந்து பூஜைகள் புரிந்து, ஆடல்வல்லானின் ஆனந்த திருநடனக்காட்சியைப் பெறுகின்றனர்.
கௌளடதேசத்து அரசனாகிய சிம்மவர்மன் எனும் அரசன் தனது உடல் முழுதும் ஏற்பட்டிருக்கும் தோல்நோய்க்கு மருந்து தேடி உலகமெங்கும் சுற்றி வருகின்றான். அவன் பதஞ்சலி வியாக்ரபாதர்களை சந்தித்து தனது குறையைச் சொல்ல, அதற்கு அவர்கள் சிவகங்கை எனும் குளத்து நீரே உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் நீக்க வல்லது என்று வழிகாட்டி, அவ்வாறேச் செய்யச் செய்தனர். சிவகங்கையில் குளித்த சிம்மவர்மன், சிவபெருமானின் திருவருளால், பொன்னார்மேனியனின் மேனியில் தவழ்ந்த தண்ணீரால், தோல் நோய் அனைத்தும் நீங்கி, உடல் பொலிவு பெற்று, தங்கமேனியனாக, ஹிரண்யவர்மனாக எழுந்தான்.
ஆலயத்தைச் செப்பனிட்டு பொன்னார் மேனியனின் கருவறைக்குப் பொன்வேய்ந்தான்.
நோய்களை நீக்கவல்லதாக அமைவது சிவகங்கைத் தீர்த்தம்.
தைப்பூசம், கிரஹண காலங்கள் போன்ற விசேஷ வைபவங்களில் சிவகங்கையின் மேற்கு (வருண திசை) வாயிலில் ஸ்வாமி எழுந்தருளி அனைவருக்கும் அருளும் விதமாக தீர்த்தம் கொடுத்தருளுவார். அதன் பின்னே பக்தர்கள் அனைவரும் ஸ்நானம் செய்வார்கள்.
விக்கிரம சோழன் காலத்தில் சிவகங்கைக்கு கருங்கல்லினால் ஆன படிகள் அமைக்கப்பட்டன.
அதன் பின், அவன் வழி வந்த குலோத்துங்க சோழன் (கி.பி.1133-1150) காலத்தில், காலிங்கராயன் தலைமையில் நாற்புற மண்டபங்களும் அமைக்கப்பட்டன.
சிவகங்கை குளக்கரையில் பித்ருக்களுக்கு - முன்னோர்களுக்கு செய்யும் சிரார்த்தம் - மிகவும் புனிதமானது, எழுபிறப்பில் உண்டான தோஷங்களை நீக்குவது, முக்தியைத் தருவது என்று ஸ்தல புராணம் கூறுகின்றது.
சிவகங்கையில் ஸ்னானம் செய்வது சிறப்பு வாய்ந்தது.
சிவகங்கைக் கரை மண்டபச் சுவற்றில் எட்டாம் திருமுறையான திருவாசகமும், திருச்சிற்றம்பலக் கோவையும் பளிங்குக் கற்களில் பதிக்கப்பட்டு, பக்தர்கள் அனைவரும் பாராயணம் செய்ய வசதியாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதை அமைத்தவர் திருப்பனந்தாள் அருணந்தித் தம்பிரான் சுவாமிகள்.
2. பரமானந்த கூபம்
ஆனந்த நடராஜ மூர்த்தி பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க தாண்டவக் காட்சியளித்தார். பதஞ்சலியை நோக்கி ஆடல்வல்லான் உமது வேண்டுதல் யாது என்கின்றார். அதற்கு பதஞ்சலி, என்றும் சிதம்பரத்தில் பதஞ்சலியாமல், என்றும் நடனமாடிக்கொண்டிருக்க வேண்டும் என்று பெருவரம் கேட்டார். அவ்வண்ணமே, இன்றளவும் நடனம் இயற்றிக்கொண்டிருக்கின்றார் நட்டமாடும் நம்பெருமான். பதஞ்சலி ரிஷி, பாதஞ்சல பூஜா ஸூக்தம் என்ற சிறப்பு வாய்ந்த வைதீக பூஜை நெறியை இயற்றி அதன்படி நடராஜருக்கு பூஜை செய்யும் வழியை வகுத்தார்.
பூஜைக்கு அம்பலவாணருக்கு அபிஷேகம் செய்ய, அவர் ஆலயத்திற்கு அருகிலேயே, காசியிலுள்ள கங்கையையே அந்தர்வாஹினியாக - பூமிக்கு அடியில், காசியிலிருந்து சிதம்பரத்திற்கு வரவழைத்தார். அந்த இடத்திலிருந்து தான் தினமும் அபிஷேகத்திற்கான தீர்த்தம் எடுக்கப்படும். வருடத்தின் ஆறு அபிஷேகங்களுக்கும் காசிக்கும் சிதம்பரத்திற்கும் தொடர்பான அந்தக் கிணற்றிலிருந்த்து தான் தீர்த்தம் சேகரிக்கப்பட்டு, ஆடல்வல்லப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும். அந்த தீர்த்தம் பரமானந்த கூபம் எனப்படும்.அனுதினமும் ஆனந்த நடனம் ஆடுபவர் அல்லவா, அவருக்கு ஆனந்தமாக அபிஷேகம் செய்யப்பட பரம ஆனந்த கூபம் எனும் காசிக் கிணறு தீர்த்தம் அமைந்திருக்கின்றது.
பரமானந்த கூபத்திலிருந்து எடுக்கப்பட்ட தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட்ட பின்பு, அந்தத் தீர்த்தத்தை நமது சிரசில் தெளித்துக்கொள்வது என்றும் ஆனந்தத்தை வழங்கக்கூடியது.
அந்தக் காசிக் கிணற்றிலுள்ள தீர்த்தத்தை தரிசனம் செய்வது கங்கையை தரிசனம் செய்வதற்கு சமம் என்ற நம்பிக்கை உண்டு.
வற்றாத ஜீவ நதியாக விளங்கும் கங்கையைப் போன்று, இந்தக் கிணற்றில் எந்த நாளும் தண்ணீர் வற்றுவதில்லை.
3. புலிமடு (மத்யந்தினீஸ்வரம்)
மத்யந்தினர் எனும் மஹரிஷி சிவபெருமானை அனுதினமும் பிரார்த்தனை செய்துவந்தார்.
(மத்தியந்தினர் வழிபட்ட சிவலிங்கம் சிதம்பரம் ஆலயத்திலிருந்து தெற்கு புறத்தில் அம்மாப்பேட்டை செல்லும் வழியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கின்றது.)
மத்யந்தினர், சிவவரத்தினால் ஒரு மகவு பெற்றார்.
அவர் தன் மகனுக்கு நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் கற்றுணர்த்தினார்.
இவையனைத்தையும் கற்ற மகன், ஆத்ம ஞானம் பெற ஏது வழி என தந்தையைக் கேட்க, அதற்கு மத்யந்தினர், ஆத்ம ஞானம் பெற ஒரே வழி, தில்லை வனத்தில் உறையும் - அனாதியாக விளங்கும் - ஆதிமூலநாதரை - சிவலிங்கத்தினைக் காட்டி, வழிபாடாற்றச் செய்தார்.
மத்யந்தினரின் மகன் தந்தை சொல்படியே மனமார பூஜை செய்து வந்தார். ஆயினும் அவருக்கு ஒரு குறை இருந்தது. சிவபூஜைக்கான மலர்களை, தேனீக்கள் மலர்களிலுள்ள தேன் உண்ணும் முன்னரே பறிக்க ஆசைப்படுகின்றார். ஆயினும் தில்லை மரங்கள் சூழ்ந்திருக்கின்றபடியால் அதிகாலையில் இருள் கவியும் நேரத்தில், பனியால் நனைந்திருக்கும் மரத்திலிருந்து மலர் பறிக்க இயலவில்லையே என வருந்துகின்றார். ஆதிமூலநாதரை மனதாரப் பற்றுகின்றார். சிவபெருமான், மத்யந்தினரின் மகனுக்கு - இருளிலும் நல்ல பார்வை தெரிய ஒளி பொருந்திய கண்களையும், வழுக்கலான மரங்களின் மேலேற புலிநகங்கள் கொண்ட வலுவான பாதத்தினையும் அருளுகின்றார். புலியின் கால்களைப் பெற்றதால் வியாக்ர (புலி) பாதர் எனப் பெயர் பெற்றார். வரம் பெற்ற வியாக்ரபாதரைக் கண்டு மத்யந்தினர் மனமார மகிழ்கின்றார்.
மத்யந்தினர் பூஜை செய்த சிவலிங்க ஆலயத்தின் எதிரில் உள்ள தீர்த்தமே புலிமடு என பெயர் பெற்றது.


இந்தத் தீர்த்தக் கரையில் சுடலைமாடன் கோயில் உள்ளது.
இறந்தவர்கள் மோட்சம் பெறும் பொருட்டு, எலும்புகளைக் கரைக்க இங்கு வந்து தான் வழிபாடு செய்வார்கள்.
இந்தக் குளத்தின் மற்றும் ஒரு சிறப்பு அம்சம். இங்கு இடப்படும் எலும்புகள் கரைந்துவிடுகின்றன.
இனி மனிதப் பிறப்பு இல்லை எனும் நிலையான மோட்சத்தை அருளும் தீர்த்தம் புலிமடு தீர்த்தம்.
4. சிவப்ரியா (பிரம்ம தீர்த்தம் - தில்லைக் காளி கோயில்)சிதம்பர ஆலயத்தின் வடபால் அமைந்த தில்லைக் காளி அம்மன் ஆலயம் (சுமார் 2 கி.மீ.) - சிவப்ரியா எனும் தீர்த்தத்தின் கரையில் தான் அமைந்துள்ளது.
பதஞ்சலி, வியாக்ரபாதர்களின் பூஜைகளுக்கு இணங்க, தில்லை வனத்தில் ஆடல்வல்லான் ஆனந்தத் தாண்டவமாடினார்.
முன்பொரு சமயம் பெற்ற ஒரு வரத்தின் காரணமாக, சிவனுக்கு பிரியமான அம்பிகை பார்வதி, தில்லைவனத்திற்கு அதிபதியாக, கரிய நிறத்தினளாக 'காளி' என பெயர் பெற்று விளங்கினாள்.
நடனசபாபதியின் நாட்டியத்திறனை உலகுக்கு உணர்த்த, காளி தேவி, தில்லை வனத்தில் ஆனந்த நடனமாடிய நடராஜப் பெருமானை, நாட்டியப் போட்டிக்கு அழைத்தாள். இருவருக்குமிடையே போட்டி நடனம் பிரம்மாதமாக நடந்தேறியது. இவருவரும், ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் நாட்டியமாடினர். சிவபெருமான், போட்டி நடனத்திற்கு முடிவுகொண்டு வர சித்தம் கொண்டு, நாட்டியமாடும் போதே, தனது காதிலிருந்தத் தோடு ஒன்றினை தரையில் விழச் செய்தார். அந்தத் தோட்டினை, தனது கால் விரல்களாலேயே எடுத்து, தன் காதிலே பொருத்திக் கொண்டார். இந்த ஆடல் நிலையை ஆட இயலாத காளி தனது தோல்வியை ஒப்புக்கொண்டாள். தனது தோல்வியை நினைந்து சினம் கொண்டாள். பிரம்மா முதலான தேவர்கள் வந்து தேவியை சாந்தப்படுத்தினர். அந்த அம்பிகையே 'பிரம்ம சாமுண்டி' - தில்லையம்மனாக, தில்லை வனத்திற்கான காவல் தெய்வமாக தில்லையின் எல்லையில் அமர்ந்தாள்.
காளி கோயில் தீர்த்தமே - சிவப்ரியா தீர்த்தம்.
இங்கு ஸ்நானம் செய்வது - ஆத்ம சாந்தியை தரும்.
5. நாகசேரி :
ஆதிசேஷன், மஹா விஷ்ணுவிடம் வரம் பெற்று, கைலாசத்தை வந்தடைந்தார். ஆதிசேஷன், ஆனந்த நடனத்தைத் தானும் காண வேண்டும் என்ற பேராவலை பெருமானிடம் வைத்தார். அதற்கு கைலைநாதன், தென்புறத்தில் உள்ள தில்லை வனம் சென்று, அங்கிருக்கும் வியாக்ரபாத முனிவருடன் சேர்ந்து வழிபாடு செய்ய உத்தரவிட்டார். அதன்படியே, ஆதிசேஷன் பாம்பு வடிவம் கொண்டு, தென்புறத்திலுள்ள தில்லை வனத்தைச் சேர்ந்தார். தில்லைவனத்தின் ஒரு பிலத் துவாரத்தின் (hole) வழியே எழுந்தார்.

பதஞ்சலியாக உருமாறி வியாக்ரபாதருடன் ஆதிமூலநாதரைக் கண்டு தவமியற்றி, தாண்டவக்கோனின் ஆனந்த நடனத்தைக் கண்டு பேறு பெற்றார்.
இதுவே நாகன் (ஆதிசேஷன்) சேர்ந்த புரி - நாகசேரி தீர்த்தம் என்றழைக்கப்படுகின்றது.
சிதம்பர ஆலயத்தின் வடமேற்கே சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
மேலும் ஐந்து தீர்த்தங்களை அடுத்த பதிவில் காண்போம்.
தில்லையில் திகழும் தச தீர்த்தங்கள் பகுதி - 2 ஐ இங்கே க்ளிக் செய்து காணலாம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com
- Mobile : 94434 79572
- Pl. visit also : www.facebook.com/deekshidhar