Tuesday, March 9, 2010

நவாவரண பூஜைநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை

ஸ்ரீ சக்ர நாயகி, அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாக விளங்குபவள், வேதங்கள் போற்றும் வேதநாயகி, அனைத்துலகையும் ஈன்றவள், அனைத்து உயிரினங்களுக்கும் அன்னையாக விளங்குபவள், மஹா மஹா சக்ரவர்த்தினியாக ஈரேழு பதினான்கு லோகங்களையும் அரசாட்சி புரிபவள் - ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை.
அம்பிகையே அனைத்திற்கும் காரணியாக எண்ணிப் போற்றி வழிபடும் சாக்த வழிபாடு எனும் முறைப்படி செய்யப்படும் பூஜைகளில் முதன்மையானதாகவும், மிக மேன்மையானதாகவும் விளங்குவது ஸ்ரீ நவாவரண பூஜையாகும்.
ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை, க்ஷ£ர சாகரம் எனும் அலகிலாத (infinite) எல்லைகளுடைய பாற்கடலின் நடுவே, ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ சக்ரத்தின் நடுவே கற்பக விருட்சங்கள் நிறைந்ததும், சிந்தாமணி எனும், கேட்டவுடன் வரமளிக்கக் கூடிய கற்களால் ஆன கருவறையில், மந்த்ரிணி, வாராஹி, அச்வாரூடா எனும் தனது சக்தி பரிவாரங்களுடன் மஹா ராஜ ராஜேஸ்வரியாக, திரிபுர சுந்தரியாக, பஞ்ச ப்ரஹ்ம ஆசனத்தில் அமர்ந்து அகிலங்கள் அனைத்தையும் பரிபாலனம் செய்து வருகின்றாள்.
ஸ்ரீ நகரம் அல்லது ஸ்ரீ சக்ரம் ஸ்ரீ நகரம் அல்லது ஸ்ரீ சக்கரம் அல்லது ஸ்ரீ யந்திரம் என்பது பொன்னாலும், ரத்தினங்களாலும் இழைக்கப்பட்ட ஒரு அற்புதமான கோட்டை. அந்தக் கோட்டையினுள் ஒன்பது பிரகாரங்களின் வாசல்கள் உண்டு. ஒன்பது பிரகாரங்களுக்கும் மத்தியில் அம்பிகை கொலுவீற்றிருக்கின்றாள்.
ஸ்ரீ யந்திரத்தில் நாற்பத்து மூன்று முக்கோணங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு முக்கோணத்திலும் ஒவ்வொரு அம்பிகை ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகைக்கு சேவை புரிவார்கள். அம்பிகையின் குதிரைப் படையை அச்வாரூடா, யானைப் படையை கஜமுகி, மந்திரியாக மந்த்ரிணீ போன்ற அம்பிகைகள் பரிபாலனம் செய்கின்றார்கள்.
ஸ்ரீ நகரத்தின் நடுவே, கோடி சூர்ய பிரகாசத்துடனும், கோடி சந்திரர்களின் குளிர்ச்சியுடனும், பக்தர்களை எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கும் - இமை மூடாத மீனைப் போன்ற கண்களுடனும், மாதுளைம்பூவை ஒத்த நிறத்துடனும், பொன்னும், வைரமும், ரத்தினங்களும் இழைக்கப்பட்ட கிரீடத்துடனும், அனைவருக்கும் அபயம் எனும் வகையில் காக்கும் கரமும், ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை அழிக்கும் வகையில் பாசமும் அங்குசமும் கொண்டு, வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை அருளும் வகையில் அமைந்து ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை அருள்பாலிக்கின்றாள்.
ஸ்ரீ நவாவரண பூஜை ஸ்ரீ சக்ரத்தினுள்ளே இருக்கும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மற்றும் நடுநாயகமாக விளங்கும் ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகைக்கும் அனைத்து பூஜை அம்சங்களும் இணைந்த வகையில் செய்யப்படுவது ஸ்ரீ நவாவரண பூஜை ஆகும்.
நவ (ஒன்பது) ஆவரணங்களில் (வரிசையில்) உள்ள தெய்வங்களுக்கான பூஜை, அர்ச்சனை, தர்ப்பணம் போன்ற பூஜைகள் நடத்தப்படும். ஒவ்வொரு ஆவரணத்திற்கும் உரிய பூஜை முடிந்ததும் ஒரு தீபாராதனை நடத்தப்படும். ஒன்பது தீபாராதனைகளுக்குப் பிறகு சுவாஸினி பூஜை, கன்யா பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும்.
புரஸ்சரணை என்பது உடனடி பலன் தரும் பூஜா முறையாகும். அதில் பூஜை, அர்ச்சனை, ஹோமம், தர்ப்பணம், பலி, போஜனம் எனும் வரிசை கிரமமாக அமைந்தது. புரஸ்சரணையை ஒத்தது ஸ்ரீ நவாவரண பூஜை. இதில் யாகம் ஒன்று என்பது நேரடியாக இல்லாவிட்டாலும், பூஜை செய்யும் சாதகன் தன்னைத்தானே பூஜை முறையால் ஹோமாக்னி போல் இருப்பதே இதன் சிறப்பம்சம்.
பூஜையும், தர்ப்பணமும் ஒரே நேரத்தில் இணைந்து செய்யப்படும் பூஜை, நவாவரண பூஜை தவிர வேறு எந்த வகையிலான பூஜையிலும் கிடையாது. பூஜைக்கு மலரும், தர்ப்பணத்திற்கு இஞ்சி (ginger) துண்டத்தில் நனைத்த பாலையும் ஒரு சேர அர்ச்சிப்பது (பூஜயாமி தர்ப்பயாமி நம:) இந்த பூஜையில் மிக மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த பூஜை குரு ஸ்துதியில் ஆரம்பித்து குரு வந்தனத்தோடு முடிவதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
ஸ்ரீ நவாவரண பூஜையில் உள்ள பூஜைகள் :
மண்டப ப்ரவேச பூஜை, பூத சுத்தி, ஸங்கல்பம், குரு ஸ்தோத்ரம், அமரும் ஆசனத்திற்குரிய பூஜை, பூஜகர் தன்னைத்தானே மந்திர மண்டலத்திற்குள் உட்படுத்திக்கொள்ளும் பூஜை, திக் பந்தனம், ப்ராண ப்ரதிஷ்டை, ஸ்ரீ நகரத்திற்குரிய பூஜை, ஸகலவிதமான நியாஸ பூஜைகள், கலச பூஜை, சங்குக்குரிய பூஜை, விசேஷ அர்க்கியம் எனும் பிரஸாதமாகத் தரக்கூடிய, அஷ்டகந்தம் எனும் வாசனை திரவியங்கள் கலந்த பாலுக்கு உரிய பூஜை, ஆவாஹன உபசார பூஜை, மங்களாராத்ரிகம் எனும் பூஜை (சத்துமாவை விளக்காகக் கொண்டு தீபாராதனை செய்வது), சதுராயதனம் எனும் சிறப்பு பூஜை, குரு மண்டல பூஜை, அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆவரணங்களுக்கான, ஒன்பது வரிசைகளுக்கான பூஜை, பஞ்ச பஞ்சிகா பூஜை எனும் பஞ்ச ப்ரஹ்மாசனத்திற்குரிய பூஜை, ஸ்ரீ மாதா புவனேஸ்வரிக்கு சிறப்பு பூஜை, தூப தீப நிவேதன பூஜை, பலிதானம், குரு வந்தனம், ஸ¤வாஸினி பூஜை, கன்யா பூஜை, வேதார்ப்பணம் (வேதகோஷம்), நிருத்யார்ப்பணம் (நாட்டியம்), கானார்ப்பணம் (பாடல்) என்று மிக அழகியதொரு வரிசையில் ஸ்ரீ நவாவரண பூஜை அமைகின்றது.
பூஜை பிரஸாதம் :
பூஜையின் நிறைவில் பிரஸாதமாக, ஸாமான்யர்க்கியம் எனும் வலம்புரிச் சங்கில் உள்ள பூஜை செய்யப்பட்ட தீர்த்தம் தெளிக்கப்படும்.
விசேஷ அர்க்கியம் எனும் பூஜை செய்யப்பட்ட பால் விநியோகிக்கப்படும்.
இவ்விரண்டையும் பெறுபவர்கள் அம்பிகையின் பரிபூரணமான அருளையும், நவாவரண பூஜையின் முழு பலனையும் பெறுவார்கள் என்று இந்த பூஜையின் பலஸ்துதியில் உள்ள ஸ்லோகம் கூறுகின்றது.
உடல் சுத்தத்திற்கு சங்கு தீர்த்தமும், உள்ளுறுப்புகளை (மனதை - உள்ளத்தை) சுத்தம் செய்ய பூஜிக்கப்பட்ட பாலும் கொடுக்கப்படுகிறது.
வேத புராண இதிகாசங்களில் ஸ்ரீ நவாவரண பூஜை :
இந்த பூஜையின் மகத்துவம் ஸ்ரீ ஸ¥க்தம், ஸ்ரீ தேவீ ஸ¥க்தம் போன்ற ச்ருதிகளிலும், தேவீ உபநிஷத், கேனோபநிஷத், பஹ்ருவ்ருசோபநிஷத், பாவனோபநிஷத் போன்ற உபநிஷதங்களிலும், பிரம்மாண்ட புராணம் (ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்) போன்ற புராணங்களிலும், துர்கா சப்த சதீயிலும், ராமாயணம், மஹா பாரதம் போன்ற இதிகாசங்களிலும் காணப்படுகிறது.
ஸ்ரீமத் பாகவதத்தில் ருக்மிணி விவாகத்திற்கு முன்னதாக தேவி வழிபாடு செய்ததாகவும், ராமாயணத்தில் ராமர் அம்பிகையை வழிபட்டே வெற்றி கொண்டதாகவும், மஹாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு துர்கை வழிபாட்டினை உபதேசம் செய்ததால் ஜெயம் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தேவிக்குரிய பூஜைகளை பல்வேறு ஆர்ணவங்கள், வேதங்கள், புராணங்கள் கூறுகின்றன.
பரமசிவன் பார்வதி தேவிக்கு பல்வேறு தந்திரங்களை உபதேசித்த பின்னர், தேவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து தந்திரங்களின் சாரமாக ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ தந்திரத்தை உபதேசம் செய்தார். இதுவே ஸ்ரீ புர உபாஸனை அல்லது ஸ்ரீ சக்ர உபாஸனை அல்லது ஸ்ரீ வித்யா உபாஸனை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்ரீ புர உபாஸனையை தத்தாத்ரேயர், தனது தத்த ஸம்ஹிதையில் த்ரிபுர உபாஸனை உட்பட அனைத்தையும் சுமார் 18000 ஸ்லோகங்களில் மிக விரிவாகக் கூறியுள்ளார். தத்தாத்ரேயரிடமிருந்து பரசுராமர் வித்தைகள் அனைத்தையும் கற்று சுமார் 6000 ஸ¥த்திரங்களாக சுருக்கி எழுதியுள்ளார். பரசுராமரின் சிஷ்யர் ஸ¤மேதஸ் என்பவர் மேலும் சுருக்கமாக தத்தருக்கும் ஸ்ரீ ராமபிரானுக்கும் இடையே நடைபெறும் சம்பாஷணை வடிவில் நூல் இயற்றினார். இதுவே பரசுராம மஹா கல்ப தந்திரம் அல்லது 'பரசுராம கல்ப சூத்திரம்' என்று அழைக்கப்படுகிறது.
தற்காலத்தில் செய்யப்படும் அம்பிகைக்குரிய அனைத்து பூஜை அம்சங்களும் இந்த பரசுராம தந்திரத்தை ஒட்டியே செய்யப்படுகிறது. ஸ்ரீ லலிதோபாக்யானம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி ஆகிய நூல்களில் தேவியினுடைய பூஜை மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ வித்யா உபாஸனை :
உபாஸனை என்றால் ஒரே தெய்வத்தை மனதில் மேன்மையானதாக இருத்திக்கொண்டு அந்த தெய்வத்தையே சதா சர்வ காலமும் நினைந்து போற்றி வழிபாடு செய்வதாகும். ஸ்ரீ வித்யா என்பது அம்பிகையின் மூல மந்திரங்களில் மிக மேன்மையானது. பதினாறு எழுத்துக்களைக் கொண்ட மந்திரம் ஸ்ரீ வித்யா எனப்படும். இந்த மந்திரம் அம்பிகையே அனைத்திற்கும் காரண காரணியாக விளங்குகின்றாள் என்பதை எடுத்துக்காட்டும் மிகச் சிறப்பு வாய்ந்த மந்திரம்.
ஸ்ரீ நவாவரண பூஜையை தகுந்த குருவிடம் ஸ்ரீ வித்யா உபதேசம் எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே செய்யவேண்டும்.
பூஜை செய்யும் போது பூஜகன் மந்திரங்களால் சூழப்பட்டு, அஹமேத்வம் எனும் சொல்லுக்கிணங்க பூஜகனே அம்பிகையாக மாறிச் செய்வது தான் இந்த பூஜையின் மிக முக்கியமான அம்சமாகும். பூஜகன் பூஜனை மந்திரத்தினால் மானஸீகமாக தன்னை பூஜையில் எரித்துக்கொள்வதே இந்த பூஜையின் யாகமாகக் கருதப்படுகிறது. ஆகையினாலேயே இந்த பூஜை "ஸ்ரீவித்யா மஹா யாக க்ரமம்" என்று போற்றி அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ என்றால் செல்வங்களை வாரிவழங்கும் லக்ஷ்மிக்குரிய அக்ஷரம். வித்யா என்றால் கலை. இந்த பூஜையைக் காண்பதால் வாழ்விற்குத் தேவையான செல்வம், புகழ் தரும் கலை எனும் வித்தை தன்னாலேயே உண்டாகும் என்பது மரபு.
ஸ்ரீ நவாவரண பூஜையில் முத்திரைகள் :
இந்த பூஜையில் முத்திரை மிக முக்கிய இடம் பெறுகிறது.
ஸ்ரீ தக்ஷ¢னாமூர்த்தியானவர் சனத்குமாரர்களுக்கு சின் முத்திரையின் (ஆட்காட்டி விரலும் கட்டை விரலையும் இணைப்பது) மூலமாக, பேசாமல் பேசி பொருளுணர்த்தி உபதேசம் செய்வது போல, இந்த பூஜையில் அம்பிகைக்கு முத்திரைகளால் பூஜைகளைச் செய்வது மிக மேன்மையானதாக அமைகின்றது. ஆகையினால்தான், நவாவரண பூஜை ஆரம்பித்தது முதல் இறுதி வரை பூஜகன் பூஜை மந்திரங்களைத் தவிர வேறேதுவும் பேசாமல் இருக்க வேண்டும் என்று இந்த பூஜை வரையறுக்கிறது.
ஸ்ரீ நவாவரண பூஜையை தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்


ஆவரணம்
1 நற்குழந்தைப் பேறு
2 அனைத்து தோஷங்களும் நீங்குதல்
3 குழந்தைகளின் கல்வி மேம்படுதல்
4 நல்ல இல்லற வாழ்க்கை
5 அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெறுதல்
6 உத்தியோகம், வியாபார அபிவிருத்தி
7 ஸகல நோய்களும் நீங்குதல்
8 வேண்டுவன அனைத்தும் பெறுதல்
9 ஆனந்தமான, வசதியான அமைதியான வாழ்வு
ஸ்ரீ நவாவரண பூஜை பரார்த்த பூஜை, பராபரா பூஜை, ஸபர்யா நியாஸ பூஜை, தக்ஷ¢ணாச்சாரம், வாமாசாரம் போன்ற பல்வேறு முறைகளில் பல்வேறு இடங்களில் செய்யப்படுகின்றது.
அனைத்து தெய்வங்களுக்கும் மேலான ஒரே தெய்வமான அம்பிகையை, ஏகாக்ரமாக (ஒரே மனதாக) பூஜையில் ஈடுபாடு கொண்டு செய்யப்படுவது,
இம்மை மறுமை இரண்டிலும் சுபம் அளிக்கவல்லது,
மனம், வாக்கு, காயம் (மூன்று) எனும் முப்பொறிகளாலும், ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை அறுக்கக்கூடியது,
பிரம்மச்சரியம், இல்வாழ்வு, வானப்ரஸ்தம், சன்னியாஸம் என்ற சதுர் (நான்கு) வர்ணத்திற்கும் பொதுவான பூஜை, சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுஜ்யம் எனும் நான்கு நற்பதவிகளைத் தருவது,
பஞ்ச (ஐந்து) தன்மாத்திரைகளாலும் (கண், காது, மூக்கு, வாக்கு, சருமம்) பூஜை செய்யப்படுவது, பஞ்ச (ஐந்து) யக்ஞத்தினால் (பிரம்ம யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், பிதுர் யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்) செய்யப்படும் பூஜையை விட மேலானது,
காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாத்சர்யம் எனும் ஆறுவகை பகைகளைக் களைவது, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா எனும் மனித உடலில் உள்ள ஆறுவகைச் சக்கரங்களை உயிர்ப்பித்துத் தூண்டி பூஜைகளைச் செய்யப்படுவது,
உலகம் ஏழுக்கும் (பூலோகம், புவலோகம், சுவலோகம், மஹாலோகம், சனலோகம், தவலோகம், சத்யலோகம்) அதிபதியாக விளங்குபவளும், காப்பவளும் பின் கரந்து விளையாடுபவளும் ஆகிய அம்பிகையைத் தொழுது பணிவது,
அஷ்ட - எட்டு - (தனம், தான்யம், நிதி, பசு, புத்திரர், வாகனம், ஆற்றல், தைரியம்) ஐஸ்வர்யங்களைத் தருவது, அஷ்டமா (எட்டு) சித்திகளை (அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிரார்த்தி, பிராகாம்யம், ஈசித்வம், வசித்வம்) அருளூவது,
குபேரனுக்கு நிகரான செல்வங்களை நிறைக்கும் நவ (ஒன்பது) நிதிகளை (சங்க நிதி, பதுமநிதி, மகா பதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்) தரவல்லது ஸ்ரீ நவ (ஒன்பது) ஆவரண (வரிசை) பூஜை.
ஆவரணம் என்பதற்கு வரிசை என்று ஒரு பொருளும், அடைப்பு அல்லது மறைப்பு என்று ஒரு பொருளும் உண்டு.
நம் மனதில் உள்ள அழுக்கான ஒன்பது திரைகளை, மறைப்புகளை விலக்கி நிர்மலமான பேரானந்தம் தரும் அம்பிகையின் ஸ்வரூபத்தை தரிசனம் செய்வது இந்த பூஜையின் மிக முக்கிய தாத்பர்யம்.
ஸ்ரீ நகரத்தின் மத்தியில் ஸ்ரீ அம்பிகை அமர்ந்திருப்பதை, நெய்வேலி நகரம், ஸத்சங்கம் - மணித்வீபம், ஸ்ரீ மாதா புவனேஸ்வரி ஆலயத்தில் கூர்மாசனத்தில் (ஆமை) உள்ள ஸ்ரீ நகர - ஸ்ரீ யந்திர - ஸ்ரீ மஹா மேரு - ஸ்ரீ சக்கரத்தை முழுமையாக தரிசனம் செய்து, ஸ்ரீ யந்திரத்தின் உச்சியில் ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அமர்ந்திருப்பதாக மனதில் இருத்தி தரிசனம் செய்பவர்களுக்கு எல்லையில்லா பேரருளை வாரிவாரி அம்பிகை வழங்குவாள் என்பது நிதர்சனமான உண்மை.
இந்த பூஜையை பார்ப்பவர்களும், கேட்பவர்களும், பூஜைக்கான பொருள் வழங்குபவர்களும், எங்கிருப்பினும் இந்த பூஜையை மனதால் நினைப்பவர்களுக்கும் ஸர்வ ரோக நிவாரணமும், ஸகல செல்வங்களையும் ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை அருளுவாள் என்பது சத்யபூர்வமான உண்மை.
- "ஸ்ரீ வித்யா உபாஸக"நி.த. நடராஜ தீக்ஷ¢தர்
நெய்வேலி ஸத்சங்கம் - மணித்வீபம்
ஸ்ரீ மாதா புவனேஸ்வரி ஆலய பூஜகர்
MAIL : yanthralaya@yahoo.co.inCELL : 94434 79572.


வசந்த நவராத்திரி

வசந்த நவராத்திரி (17.03.2018 - 26.03.2018)


சக்தி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும்.


சக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான். குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும், கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்னி புராணம் கூறும்.


அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே.

புரட்டாசி குளிர் கால ஆரம்ப மாதம். பங்குனி மாதம் கோடையின் துவக்க காலம். இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகள் நன்மை பயக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியனதான்.

பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள்.

நான்கு விதமான நவராத்திரிகள் : வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி.

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி.

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.

பெரும்பாலான இடங்களில் மிக பிரசித்தமாகக் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி எனும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியாகும்.


ஆலயங்களிலும், வீடுகளிலும் மிகவும் கொண்டாட்டமாக நடத்தப்படக் கூடியது சாரதா நவராத்திரி. வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம். இந்த சாரதா நவராத்திரி போக நவராத்திரி எனும் மகிழ்வைக் கொடுக்கக் கூடிய நவராத்திரியாகும்.

வசந்த நவராத்திரி :

வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள்.

இரண்டு இரண்டு மாதங்களாக ருதுக்கள் அமையும். அந்த ருதுக்களில் 'ரிதூநாம் குஸுமாகர:' என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்த ருது. பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. வஸந்த ருதுவே வசந்த காலம் . வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம்.

வசந்த நவராத்திரி - பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். மறுநாள் ஆகிய பிரதமை - தெலுங்கு வருடப்பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீ ராம நவமியுடன் முடியும்.
(நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில்,
வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும்,
ஒரு பட்ச்ம் நாட்கள் அதாவது 15 நாட்கள் (அமாவாசை - பெளர்ணமி வரை) கொண்டாடுதல் - வேண்டும் வரங்கள் கிடைக்கச் செய்யும் என்றும்,
மண்டல நாட்கள் அதாவது பங்குனி அமாவாசை முதல் சித்ரா பெளர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது ஸகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.)

பொதுவாக வட இந்தியாவிலும், தென் இந்தியாவில் சிற்சில கோயில்களில் மட்டுமே நடத்தப்படக் கூடியது. இந்த நவராத்திரி பொதுவாக ஆலயங்களில் மட்டுமே நடக்கக் கூடியது.


சாரதா நவராத்திரி போகம் எனும் மகிழ்வைத் தருவது,

வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது.


வசந்த நவராத்திரி நல் பக்தியையும், அந்த நல்பக்தியால் நல் வாழ்வையும் அளிக்கக் கூடியது.


வசந்த நவராத்திரி அம்பிகையின் வடிவமாகிய ராஜச்யாமளா அல்லது ராஜமாதங்கீஸ்வரி எனும் வடிவத்தைப் போற்றுவதாக அமையக் கூடியது.மதுரையில் உறையும் மீனாக்ஷி - ராஜசியாமளாவாக விளங்குகின்றாள். மதுரை ஆலயத்திலும் வசந்த நவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.


ஆலயங்களில் மேரு எனும் ஸ்ரீ சக்ர வடிவம் இருக்குமேயானால், அங்கு வஸந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும்.


அவ்வகையில், வைதீக பிரதிஷ்டையுடனான சாஸ்திரோக்தமான ஆலயமாகவும், அழகும் அருளும் வடிவான அம்பிகையான


ஸ்ரீ மாதா புவனேஸ்வரியும், ஸ்ரீ மஹா சக்ர மேருவும் அமைந்த ஆலயம் - ஸத்சங்கம் - மணித்வீபம் - நெய்வேலி ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் &

ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை ஆலயம்.


இந்த வசந்த காலத்தில், நெய்வேலி ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை ஆலயத்தில், வசந்த நவராத்திரி நடத்தப்படவுள்ளது.


ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப் பெறும். ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி நல்குவாள்.


மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீ நவாவரண பூஜையும், லலிதா சகஸ்ரநாம அர்சசனையும், கன்யா பூஜையும், ஸுவாஸினி பூஜையும் நடைபெறும்.


தேதி
கிழமை
அலங்காரம்
28.03.17
செவ்வாய்
  ஸ்ரீ காமாக்ஷி
29.03.17
புதன்
  ஸ்ரீ மீனாக்ஷி
30.03.17
வியாழன்
  ஸ்ரீ விசாலாக்ஷி
31.03.17
வெள்ளி
  ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்
01.04.17
சனி
  புஷ்ப அலங்காரம்
02.04.17
ஞாயிறு
  ஸ்ரீ மாரியம்மன்
03.04.17
திங்கள்
  ஸ்ரீ சரஸ்வதி  
04.04.17
செவ்வாய்
  ஸ்ரீ சாகம்பரி
05.04.17
புதன்
  ஸ்ரீ மஹாலக்ஷ்மி
06.04.17
வியாழன்
  ஸ்ரீ புவனேஸ்வரி
  ஊஞ்சல் உத்ஸவம்வசந்த நவராத்திரியின் பத்தாம் நாளாகிய வசந்த தசமி (06.04.2017) அன்று ஊஞ்சல் உத்ஸவமும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.


நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னியர்கள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.

வாழ்வில் வசந்தம் வீசச் செய்யக்கூடிய வசந்த நவராத்திரி காலத்தில் அம்பிகையை வழிபட்டு, அம்பிகையின் பரிபூரண அருளைப் பெறுவோம்.


- "ஸ்ரீ வித்யா உபாஸக" 
நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
cell : 94434 79572, 9362609299
www.facebook.com/deekshidhar
http://natarajadeekshidhar.blogspot.in

தனித்தனியாக கட்டுரைகளை வாசிக்க, கீழேயுள்ள லிங்க்-களை க்ளிக் செய்தும் படிக்கலாம்.

**************************************************
**************************************************
**************************************************

&
Friday, March 5, 2010

மஹா சிவராத்திரி


மஹா சிவராத்திரி -  24.02.2017 -  வெள்ளிக் கிழமை
சைவத்தின் பெருவிழாவாக, சிவ பெருமானுக்காக கொண்டாடப்படுவது சிவராத்திரி.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி சிவபெருமானுக்கு சிறப்புடையது. அன்றைய தினம் சிவராத்திரி என அனைவராலும் கொண்டாடப்படுகிற நாளாகும்.
சிவராத்திரியின் சிறப்புகள்:வில்வித்தையில் ஈடு இணையற்றவனான அர்ஜூனன் தவம் செய்து பாசுபதம் (பசுபதி என்பது சிவனுக்குரிய பெயர் - பசுபதி அளித்ததால் அது பாசுபதம்) அஸ்திரத்தை பெற்றதும்,
கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்திலிருந்து ரத்தம் வடிவதைக் கண்டு தன் கண்ணை பெயர்த்தெடுத்து வைத்து முக்தி அடைந்ததும்,
பகீரதன் மிகக் கடும் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்ததும்,
தன் மீது அளவிலா பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேயனுக்காக எமதர்மனையே சிவ பெருமான் சம்ஹாரம் செய்ததும்,
பார்வதி தேவி தவமிருந்து சிவனுக்கு இடப் புறம் இடம் பெற்று சிவனையே உமையொரு பாகனாகச் செய்ததும் இந்த புண்ணிய நாளில் நிகழ்ந்தது என்று சிவ மஹா புராணம் கூறுகின்றது.
பூஜைகள்:சிவராத்திரியன்று சிவத் தலங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
ஒரு வில்வ இலை கொண்டு சிவனுக்கு பூஜை செய்வது கோடிக்கணக்கான மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும்.
அன்று சாப்பிடாது விரதம் இருந்து கண் விழித்து சிவன் தோத்திரங்களை சொல்வது மிகவும் சிறந்தது.
தான தர்மங்கள் செய்வது, தெய்வத் திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வது, பல வகையான நோன்புகள் மேற்கொள்வது, விரதங்கள் இருப்பது போன்றவற்றால் ஏற்படும் நற்பலன்கள், புண்ணியங்கள் சிவனை சிவன் ராத்திரியன்று வழிபடுவதால் ஏற்படும் புண்ணியத்திற்கு நிகராகாது என வேதங்களும், புராணங்களும் கூறுகின்றன.
சிவராத்திரி இருவகைப்படும். ஒன்று மாத சிவராத்திரி. மற்றது மகா சிவராத்திரியாகும்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து (அனுஷ்டித்து) வருகின்றனர்.
மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி" ஆகும்.
வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.
மகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.
முதல் கால பூஜைஇந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாவது கால பூஜை
இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.
மூன்றாவது கால பூஜைஇந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும்.
இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.
இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காவது கால பூஜைஇந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.
மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!
சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும் சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.
விரத முறை :விரதம் அனுஷ்டிப்போர் முதல் ஒருநாள் ஒருபொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் இருந்து, காலை ஸ்நானம் செய்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து இரவு நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்.
அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாயலங்களில் நடைபெறும் நான்கு கால அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
புராண விளக்கம் 1 :ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அதை அனுஷ்டிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்றும் பிரார்த்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார்.
அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றனர்.
புராண விளக்கம் 2 :மற்றொரு கல்பத்தின் முடிவில் இன்னொரு பிரளயம் வந்தது. பிரபஞ்சம் நீரில் மூழ்கியது. திருமால் வராக உருவெடுத்தார். அவ்வராகம் நீரில் புகுந்து பிரபஞ்சத்தையெடுத்து வெளிக்கொணர்ந்து நிறுத்தியது. திருமால் செருக்கோடு தம் இடம் சென்றார். அதுவரை உறங்கிக்கிடந்த பிரமனும் விழித்தார். படைப்புத் தொழில் தொடங்கியது. அகந்தையால் பிரமன் தாமே கடவுள் என்றார். திருமால் தாமே கடவுள் என்றார். சர்ச்சை நீண்டது. அச்சமயத்தில் அவ்விருவருக்கும் நடுவில் ஓர் அக்கினிப்பிழம்பாய் அடிமுடி அயறியப்படாதவாறு கீழுமேலுமாய் நீண்டு நின்றார் சிவபெருமான். பிரமன் அன்னமும், விஷ்ணு வராகமுமாய் அப்பிழம்பின் அடிமுடியைக் காணச் சென்றனர். ஆதியும் அந்தமும் காணமுடியவில்லை. இருவரும் அகந்தை நீங்கி அப்பெருமானைத் துதித்தனர். அப்பெருமான் பிழம்பு வடிவான லிங்கத்திலிருந்து மகேசுரமூர்த்தியாய் வெளிப்பட்டார். அவ்வெளிப்பாட்டிற்கு லிங்கோத்பவரென்று பெயர். பிரம விஷ்ணுக்கள் அவரிடம் திருவருள் பெற்றுச் சென்றனர்.
இச்சரித்திரத்தை,
'யத் பாதாம்போருஹத்வம்த்வம் ம்ருக்யதே விஷ்ணுநா ஸஹ
ஸ்துத்வா ஸ்துத்யம் மஹேசாந மவாங்மநஸகோசரம்
பக்த்யாநம்ர தநோர் விஷ்ணோ: ப்ரஸாத மகரோத்விபு:"
(சிவபெருமான் முடியைத் தேடப்போன பிரம்மாவோடு கூட விஷ்ணுவினால் அவரது இரு திருவடித் தாமரையும் தேடப்படுகின்றன; வாக்கு மனசுக் கெட்டாத சிவபெருமானை துதித்துப் பக்தியினால் வணங்கினவராகிய விஷ்ணுக்குச் சிவபெருமான் அருள்பாலித்தார்) என வேத(சரப)மும் எடுத்துரைக்கிறது. இச்சம்பவமும் இரவில் நடந்தது. ஆகையால் அவ்விரவு சிவராத்திரி எனப்பட்டது.
'ச்யதி துக்காதிகமிதி சிவா' சிவ என்பதற்குத் துக்கங்களை அழிக்கின்றது என்று பொருள். 'ராதி சுகமிதி ராத்ரி' ராத்திரி என்பதற்குச் சுகத்தைச் செய்கின்றது என்று பொருள். ஆதலால் சிவராத்திரி என்பது துக்கங்களைப் போக்கிச் பக்தியைக் கொடுப்பது என்று பொருள்படும்.
திரயோதசி உமா ஸ்வரூபம். சதுர்த்தசி ஸ்வரூபம். அவ்விரண்டு திதியுங்கூடிய இரவு சிவலிங்க ஸ்வரூபம்.
புராண விளக்கம் 3:
ஒரு சமயம், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, மேரு மலையையே மத்தாகக் கொண்டு ஒரு புறம் அசுரர்களும், மறு புறம் தேவர்களும் நின்று பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்துதான், மஹா லக்ஷ்மியும், காமதேனு, குபேர சம்பத்துக்களும் கிடைத்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை எடுத்துக்கொண்டார்கள். இறுதியாக ஆலகால விஷம் தோன்றியது. அண்டசராசரங்களையும் அழிக்கும் வல்லமை வாய்ந்தது. அனைவருக்கும் அனுக்ரஹிக்கும் சிவபெருமான் அந்த விஷத்தை எடுத்துக்கொண்டார். விஷத்தை அருந்தினார். பயந்த பார்வதி சிவனின் தொண்டையோடு அந்த விஷத்தை நிறுத்தினார். விஷம் ஏறியவர்கள் உறங்கக் கூடாது என்பது வைத்ய விதி. அதற்கேற்ப அண்டசராசரங்கள் அனைத்தும் சிவபெருமானை இரவு முழுதும் சிவபெருமானைப் போற்றின. அந்த இரவு தான் சிவராத்திரி. சிவன் உலகைக் காத்த இரவு என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது சிவராத்திரி.
மற்றுமொரு புராண விளக்கம் :காட்டில் இரவில் மாட்டிக்கொண்ட ஒருவன் மிருகங்களுக்கு பயந்து, ஒரு மரத்தின் மேலேறி, பயத்தால் அம்மரத்தின் ஒவ்வொரு இலைகளையும் கீழே போட்டுக்கொண்டிருந்தான். அவனை சிவகணங்கள் வந்து வணங்கி வேண்டும் வரங்களை வழங்கின.
சிவகணங்கள் வந்த காரணமென்ன எனில், அவன் ஏறியது வில்வ மரம். வில்வ மரத்தின் கீழே சிவலிங்கம் இருந்தது. அந்த சிவலிங்கத்திற்குத் தான் வில்வ இலைகளை எறிந்திருக்கின்றான். சிவகணங்கள் சிவனுக்கு அர்ச்சனை செய்கின்றான் என எண்ணி அருள் பாலித்திருக்கின்றன.
அவன் இரவு முழுவதும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்திருக்கின்றான். அந்த இரவுதான் சிவராத்திரி என்றும் சில புராணங்கள் கூறும்.
எந்த ஒரு இறை சிந்தனையும் இல்லாமல், வெறும் வில்வ இலைகளை மட்டுமே அர்ச்சனை செய்ததாலேயே ஒருவனுக்கு சிவ அனுக்ரஹம் கிடைத்தது என்றால், சிவ சிந்தனையோடு, சிவனுக்கு உரிய பொருட்களை சிவலிங்கத்திற்கு பக்தி சிரத்தையோடு செய்தோமாகில் சிவ கடாட்சம் மிக நிச்சயம் கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
விரதமிருந்து பேறு பெற்றவர்கள் :சிவராத்திரி தலை சிறந்த சிவவிரதம்.
பிரமன் சிருஷ்டித் தொழிலையும்,
மஹாவிஷ்ணு காக்கும் தொழிலையும், லக்ஷ்மியையும், சக்ராயுதத்தையும்,
இந்திரன் விண்ணுலக அதிபதி பட்டத்தையும்,
குபேரன் அளவற்ற நிதியையும்,
குமரன் அழகான மேனியையும்,
கன்மாடபாதனென்னும் வேந்தன் பிரமகத்தி நீக்கத்தையும் பெற்றனர்.
*****************************************************************
கலியுகம் நாம ஸ்மரணைக்கு உகந்த யுகம். இறைவனின் நாமங்களைச் சொன்னாலே நற்கதி கிடைக்கக் கூடிய காலம். அந்த சிவ நாம ஸ்மரணையின் நற்பலன்களை மிக அழகாக பாடலாக இயற்றி, ராகம் அமைத்து, தேன்குரலில் பாடியவர் நெய்வேலி ஸ்ரீமதி பிருந்தா ஜெயந்தி (94436 66819) அவர்கள். அந்தப் பாடலை இங்கே ஆடியோவாகக் கேட்கலாம்.
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
MAIL : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com
CELL : 94434 79572.
Pl. visit : www.facebook.com/deekshidhar

Monday, March 1, 2010

திருப்பல்லாண்டு

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு
(திருப்பல்லாண்டின் ஒன்பதாவது பாடலுக்கான ஆடியோவை கீழே உள்ள ஆடியோ BARல் ப்ளே பட்டனை அழுத்திக் கேட்கலாம். அற்புதமான ஆகிரி ராகத்தில் இப்பாடலைப் பாடியிருப்பவர் ப்ரம்மஸ்ரீ ஸோமநாக தேவ தீக்ஷிதர்)சேந்தனார் :
சீர்காழிக்குஅருகிலான, திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது திருநாங்கூர் திருத்தலம். இத்திருத்தலத்திலே பிறந்தவர் சேந்தன்.
பட்டினத்தாரின் தலைமைக் கணக்கராக இருந்தவர்.
பட்டினத்தாரின் விருப்பப்படி, அவரின் சொத்துக்களையெல்லாம் மக்களுக்கு தானம் செய்ய வேண்டி, பட்டினத்தாரின் கருவூலத்தை திறந்து, அனைவரும் செல்வங்களை விரும்பியவண்ணம் பெறச்செய்தார்.
இச்செயலைக் கண்ட பட்டினத்தடிகளின் உறவினர்கள் சோழ மன்னரிடம் புகார் செய்தார்கள். விபரம் அறியாத மன்னன் சேந்தனாரை சிறையில் அடைத்தான்.
பட்டினத்தடிகள் நிலைமையை உணர்ந்து சோழனிடம் விளக்கம் சொல்ல, விபரம் அறிந்த மன்னன் சேந்தனாரை விடுதலை செய்தான்.
பிறகு, சேந்தனார் சிதம்பரம் வந்து வாழலானார். தினமும் விறகு வெட்டி வந்து, விற்ற பணத்தில் தினமும் ஒரு சிவனடியார்க்கு உணவு அளித்துப் பின்பு தான் உணவருந்துவார்.
சேந்தனாரிடம் திருநடப்பெருமான் திருவிளையாடல் செய்து, அவரின் சிவபக்தியை உலகுக்குக் காட்ட விரும்பினார்.
சேந்தனார் ஒரு நாள் விறகு விட்ட கிளம்பினார். நாள் முழுக்க மழை பெய்தது. விறகுகள் அனைத்தும் ஈரமாகின. ஈர விறகுகளை யார் வாங்குவார்? ஆகையால், பணம் ஈட்ட முடியவில்லை. மிகவும் மனம் வருந்தியவாறு, இரவு இல்லம் வந்து, களியைத் (மாவைக் களைந்து செய்யப்படும் ஒரு உணவு) தயாரித்து, அதையாவது ஒரு சிவனடியாருக்குக் கொடுக்க வேண்டி காத்திருந்தார். நள்ளிரவில், சிவனடியார் வேடத்தில் நடராஜப் பெருமான் சேந்தனாரின் வீட்டிற்குச் சென்றார். அடியாரைக் கண்ட சேந்தன் மனமகிழ்ந்து வரவேற்று, களியை அடியாருக்கு அளித்தார்.
ஆலகால விஷம் உண்ட அம்பலவாணன், அந்தக் களியை களிப்போடு பெற்று, அமுது போல் உண்டு களித்தார். (களி = மகிழ்ச்சி) பக்தி சுவையும் கலந்த களியின் சுவையில் மயங்கிய ஆடலரசன் அடுத்த வேளைக்கும் எடுத்துக்கொண்டார்.
அடுத்த நாள் அதிகாலையில், ஆலயக் கதவைத் திறந்து பார்க்கையில் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அம்பலத்தாடும் அண்ணலின் மேனியில் களி சிந்தியிருப்பதைக் கண்டார்கள். ஏதோ தெய்வக் குற்றம் நடந்ததோ என மனம் பதைத்தனர். இந்நிகழ்வை அரசருக்குத் அறிவித்தனர். மனம் கலங்கினான் மன்னன். அன்று இரவு அரசனின் கனவில் சேந்தனார் அளித்த களிதான் தன் மேனியில் சிந்தியது என ஈசன் உரைத்தார். திடுக்கிட்டு விழித்த மன்னன், சேந்தனாரின் பக்தியை வியந்தான். அவரைக் காண ஆவலாக இருந்தான். அமைச்சர்களும் பணியாளர்களும் சேந்தனாரைத் தேடிக்கொண்டிருந்தனர்.
அச்சயமயம் சிதம்பரத்தில் மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவத்தின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. மன்னன் உட்பட அனைவரும் தேர் திருவிழாவில் பங்குகொண்டனர். சேந்தனாரின் சிவபக்தியை உலகுக்கு உணர்த்த, திருத்தேரினை தரையில் அழுந்தச் செய்தார் எம்பெருமான். ஏதேதோ முயற்சிகள் செய்தும் தேர் தரையை விட்டு எழாமையைக் கண்டு மன்னன் உட்பட அனைவரும் பரமனைப் பணிந்தார்கள். அச்சமயம் அசரீரீயானது "சேந்தன் பாட தேர் கிளம்பும்" என்றது. ஒரு ஓரத்தில் நின்று நம்பெருமானை தரிசித்துக் கொண்டிருந்த சேந்தனாருக்குத் திகைப்பாக இருந்து. தான் எப்படிப் பாடுவது என்று ஆற்றாமையால் அரற்றினார். சேந்தனுக்கு அருள்பாலித்தார் ஈசன். உடனே "மன்னுக தில்லை.... பல்லாண்டு கூறுதுமே" என்ற பாடலோடு பதின்மூன்று பாடல்களைப் பாடினார். தேர் தானாகவே நகர்ந்து வலம் வந்து நிலையை அடைந்தது. அனைவரும் வியந்து போயினர்.
சேந்தனாரின் பக்தியைக் கண்ட மன்னர் உள்ளிட்ட மக்கள் பரவசம் அடைந்து, அவரைப் போற்றிப் பணிந்தனர்.
பிறகு சேந்தனார், திருக்கடையூருக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி எனும் முருகனுடைய தலத்திற்கு வந்து வாழ்க்கை நடத்தினார். அந்த தலத்திலேயே ஒரு மடத்தை ஸ்தாபித்தார். இவரின் பெருமைகளைக் கண்ட மன்னன் அவருக்கு நிலம் அளித்து அனேக உதவிகள் செய்தான். அந்தப் பகுதி தற்போது "சேந்தன் மங்கலம்" அல்லது "சேந்தமங்கலம்" என்று அழைக்கப்படுகிறது. (வேதம் வளர்க்க மன்னர்கள் அந்தணர்களுக்கு, நிலம் கொடுத்து உதவினர். அதற்கு சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றது. சேந்தனாருக்குக் கொடுத்ததால் அது சேந்தமங்கலம் ஆனது.)
இவரது திருப்பல்லாண்டு திருப்பதிகம் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது.
திருப்பல்லாண்டு என்பது இறைவனையே வாழ்த்தும் ஒரு பிரபந்த வகையைச் சேர்ந்தது.
பொதுவாக வைணவ பிரபந்தங்களில் மஹா விஷ்ணுவைப் பல்லாண்டு வாழ்த்தும் பாடல்கள் மிக முக்கிய இடம் பெறும்.
வைணவத் தலமாகிய திருநாங்கூரில் சேந்தன் பிறந்தமையால், வைணவத்துக்கு உண்டான பல்லாண்டு பாடும் வழக்கத்தை, சைவத்திற்காக சிவபெருமானுக்குப் பாடினரோ என்ற எண்ணம் எழுகின்றது.
சேந்தனார் எழுதிய திருப்பல்லாண்டு மொத்தம் 13 பாடல்கள் மட்டுமே. சிதம்பரம் ஸ்தலத்தைப் புகழ்ந்து பாடுவதாக அமைந்தது.
பன்னிரு திருமுறைகளில் இடம்பெற்றதில் மிகக் குறைந்த பாடல்கள் கொண்ட தொகுப்பு இது மட்டுமே. எண்ணிக்கைதான் குறைவே தவிர, எண்ணற்ற அர்த்தங்கள் கொண்டது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
சிவ ஸ்தலங்களில் கால பூஜைகளின் இடையில் தீபாராதனைக்கு முன்னதாக, தமிழ் வேதமாகிய பன்னிரு திருமுறைகளிலுருந்து பாடல்களைத் தொகுத்து, பஞ்சபுராணம் (1. தேவாரம், 2. திருவாசகம், 3.திருவிசைப்பா, 4. திருப்பல்லாண்டு, 5. பெரிய புராணம் ஆகிய தொகுதிகளிலிருந்து பெறப்பட்ட பாடல்களை) எனும் ஐந்து பாசுரங்களைப் பாடுவார்கள்.
மிகக் குறைந்த பாடல்கள் கொண்டதாக இருந்தாலும், பஞ்சபுராணத்தில் திருப்பல்லாண்டு மிக முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
தில்லைக் கூத்தனை உளம் உருக நினைந்து சிவன் அடியார்களின் நலனுக்காக இறைவனுக்குப் பல்லாண்டு கூறி இப்பதிகம் பாடப் பெற்றிருக்கிறது.
இன்றைக்கும் சயாம் நாட்டில் அரச குடும்பத்து நிகழ்ச்சிகளில் இப்பதிகம் பாடப்பெற்று வருவதாகக் கூறப்பெறுகிறது.
இத்திருப்பதிகத்தில் சிவவரலாறும், அடியார்கள் வரலாறும், திருநீற்றின் சிறப்புகளும் இடம் பெற்றுள்ளன.
சிதம்பரத்தின் தேர் உத்ஸவத்தின் போது ஓதுவார் பெருமக்கள் ஆகிரி ராகத்தில் திருப்பல்லாண்டு பாடுவதைக் கேட்பது மிகவும் புண்ணியம் வாய்ந்ததாகும்.
பல்லாண்டு வாழ வகைசெய்யும் பரமனைப் பல்லாண்டு பாடி வாழ்த்தி பல்லாண்டு வாழ்வோம்.
****************************************************************
"பஞ்சபுராணத் தொகுப்பு" எனும் அரிய தொகுப்பினை என் தந்தையார் அமரர் நி. தண்டபாணி ஸ்வாமி தீக்ஷிதர் அவர்கள் கடந்த 2003ம் ஆண்டு வெளியிட்டார்.
அதன் சிறப்பம்சம், திருப்பல்லாண்டில் உள்ள பாடலுக்கு ஏற்ப, தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, பெரிய புராணம் ஆகியவற்றில் உள்ள பாடல்களில் எதுகை மோனையாக வருவனற்றை தொகுத்து அளித்தார். உதாரணமாக "மன்னுக தில்லை" எனும் திருப்பல்லாண்டு பாடலுக்கு ஏற்ப, தேவாரத்தில் "அன்னம் பாலிக்கும்.."
திருவாசகத்தில் "மு‎ன்னானை மூவர்க்கு"
திருவிசைப்பாவில் "பின்னு செஞ்சடையும்"
பெரியபுராணத்தில் "ம‎ன்னுகோயிலை" எனத் தொடங்கும் பாடல்களைத் தொகுத்ததோடு மட்டுமல்லாமல்,
திருக்கோவையாரில் "மன்னுந் திருவருந் தும்வரை"
அபிராமி அந்தாதியில் "சென்னியது உன்பொற் றிருவடித் தாமரை"
திருப்புகழில் "எ‎ன்னால் பிறக்கவும்"
தொகுத்து தமிழ் நேயர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
பஞ்சபுராணப் பாடல்கள் இங்ஙனம் எதுகை மோனையுடன் அமைந்ததால், எளிதில் மனனம் செய்ய வசதியாக உள்ளன என்று தமிழன்பர்கள் பாராட்டினர். ஓதுவார் பெருமக்களிடம் இத்தொகுப்பு மிக பிரபலமாக விளங்குகின்றது.
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
MAIL : yanthralaya@yahoo.co.in
CELL : 94434 79572.
சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு (பதின்மூன்று பாடல்கள்)
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலபொன்னின்செய்மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்கஅன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்துபின்னைப் பிறவியறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்துஅண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 2
நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்கள்சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3
சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்சில்லாண் டிற்சிறை யும்சில தேவர் சிறுநெறி சேராமேவில்லாண் டகன கத்திரன் மேரு விடங்கன் விடைப்பாகன்பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4
புரந்தரன் மாலயன் பூசலிட்(டு) ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட கோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்கரந்துங் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக்கடல்பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5
சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால் எங்கும்திசை திசையெனகூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாம்குழ மாய் நின்று கூத்தாடும்ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பமார்பாவிக்கும் பாவகத்(து) அப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 6
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில்?ஊரும் உலகும் கழற உளறி உமைமண வாளனுக்(கு)ஆம்பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே. 7
சேலுங் கயலும் திளைக்கும் கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம்போலும் பொடியணி மார்பிலங் குமென்று புண்ணியர் போற்றிசைப்பமாலும் அயனும் அறியா நெறி தந்துவந்தென் மனத்தகத்தேபாலும் அமுதமு ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 8
பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்ஆவிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனேபூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச்சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 10
குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகிவிழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின்மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்தபழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 11
ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்துபாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 12
எந்தை எந்தாய் சுற்றும் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்றுசிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறை அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகழ் தாண்டுகொண் டாருயிர்மேல்பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே. 13.