Saturday, December 26, 2009

மார்கழி மஹோத்ஸவம் @ சிதம்பரம் ஸ்ரீ நட்ராஜர் ஆலயம்

மார்கழி மஹோத்ஸவம் @ சிதம்பரம் ஸ்ரீ நட்ராஜர் ஆலயம்
சிதம்பரம் - ஸ்ரீ நடராஜ ராஜர் என்றும், எப்பொழுதும் திருநடனம் புரிந்துகொண்டிருப்பதால், தினம் தினம் திருநாள் தான், தினம் ஒரு உத்ஸவம் தான். சிதம்பரத்தின் மஹோத்ஸவங்களில் மிக முக்கியமானதும், மணி மகுடம் போன்றதும் விளங்குவது மார்கழி ஆருத்ரா தரிசனம். கைலாய மலை பனி படர்ந்தது. அங்கு வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு உகந்த, பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள் மஹா உத்ஸவத்தின் உச்சகட்ட நிகழ்வு. மார்கழி ஆருத்ரா தரிசன தினத்தின் மதியப் பொழுதில் (ஸ்ரீ நடராஜ ராஜர் - பகல் வேளையில் தான் தன் கணங்கள் அனைத்தோடும் வந்திறங்கினார்) சித்ஸபா பிரவேசம் எனும் பொன்னம்பலம் புக்கும் காட்சியே - பெரும் புண்யங்களை அளிக்க வல்லது.

மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் - கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி (24.12.2017 - 8.00 am - 9.00 am) அதைத் தொடர்ந்து, உத்ஸவ யாகசாலையில் காலை மாலை இரு வேளைகளிலும், மிகச் சிறப்பு வாய்ந்த ஹோமங்கள் செய்து, ஒவ்வொரு நாள் இரவிலும் மற்றும் காலையிலும், உத்ஸவ நாயகர்களாகிய ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - நாதஸ்வர இசை முழங்க, வேத பாராயணம் முழங்கிட வீதி வலம் வந்து காட்சி நல்குவார்கள். ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி சிறப்பு வாய்ந்த வாகனங்களில் வலம் வருவார்.

தங்கத்தினாலான மஞ்சம் (24.12.2017),
சந்திர பிரபை (25.12.2017),
சூர்ய பிரபை (26.12.2017),
பூத வாகனம் (27.12.2017),
ஸகோபுரம் எனும் தெருவடைச்சான் என்று அழைக்கப்படக்கூடிய ரதம் (கோபுர வடிவத்திலான, தெரு முழுவதும் அடைத்து வரக்கூடிய விதத்தில் அமைந்தது) (28.12.2017),
யானை வாகனம் (29.12.2017),
தங்க கைலாய மலையெடுத்த வெள்ளி ராவணன் வாகனம் (மிக அற்புதமான அமைப்பு, ராவணன் உருவம் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒன்பது தலைகளும், கையில் ஒரு தலையை வீணையின் தலைப்பாகமாக அமைத்து காம்போதி ராகம் மீட்டும் வகையில் அமைந்தது) (30.12.2017) என்று முறையே வலம் வந்து அருள்பாலிப்பார்.
எட்டாம் திருநாளில் (31.12.2017) பிக்ஷாடனராக வலம் வருவார்.
ஒன்பதாம் திருநாள் (01.01.2018) - தேர் உத்ஸவம்.
பத்தாம் திருநாள் (02.01.2018) - ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம்.
மறுநாள் (03.01.2018) - முத்துப்பல்லக்கில் வீதியுலா.

மாணிக்க வாசகர் தரிசனம் :

சமய நால்வர்களில் முக்கியமானவர், காலத்தால் முந்தையவர் ஸ்ரீ மாணிக்கவாசகர். பாண்டிய மன்னரின் மந்திரியாக பதவி வகித்து, கல்லால மரத்தின் கீழ் வீற்றிருந்த ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியால் ஆட்கொள்ளப்பட்டு, பெரும் சிவத் தொண்டு ஆற்றியவர்.
இவருக்காகவே, சிவபெருமான் நரிதனை பரியாக்கி, வைகையை பெருக்கச் செய்து, பிட்டுக்கு மண் சுமந்து - போன்ற திருவிளையாடல்களை நிகழ்த்தியவர்.
இறைவனாலேயே மணிவாசகர் என்று போற்றப்பட்டவர். தில்லையின் அம்பலத்தினுள்ளே இரண்டறக் கலந்தவர்.
இவரின் திருவாசகத்துக்கு உருகாதவர் யாருமில்லை. திருவாசகம் - நெஞ்சை நெக்குருகச் செய்யும் விதத்தில், ஒவ்வொரு வாசகமும் மாணிக்கம் போன்ற அழகுற அமைந்தமையால், மாணிக்கவாசகர் என்று போற்றப்படுபவர். இவர் எழுதிய திருவெம்பாவை - மார்கழி மாதத்தில் மிகச் சிறப்பாக பாடப்பெறும்.
சிதம்பரத்தில், மாணிக்கவாசரின் தனிச்சிறப்பு மிக்க விக்ரஹத்திற்கு இந்த மஹோத்ஸவ காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
இங்கு மட்டுமே மாணிக்க வாசகரின் - கைகள் மற்ற ஆலயங்களில் உள்ளது போல் அல்லாமல், தெய்வங்களுக்கு உரிய சின் முத்திரையோடு அமைந்திருக்கும். இங்கு மட்டுமே மாணிக்கவாசகர் தெய்வத்திற்கு நிகராக கருதப்பட்டு, வழிபாடு செய்யப்படுகிறார்.
மார்கழி மஹோத்ஸவத்தின் பத்து தினங்களிலும், மாணிக்க வாசகர் தனி மஞ்சத்தில் எழுந்தருளிச் செய்து, பொன்னம்பலத்திற்கு அடுத்த கனகசபையின் வாசலில், ஸ்ரீ நடராஜருக்கு எதிரே நிற்கச் செய்து, மிக சிறப்பான வழிபாடுகள் செய்யப்படும்.
மாலை வேளை சாயரக்ஷை எனும் ஸாயங்கால கால பூஜை முடிந்த பிறகு, மாணிக்க வாசகருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படும். அவருடைய திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு, ஒவ்வொரு பாடல் முடிவிலும் சிறப்பு நிவேதனங்கள் நைவேத்யம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெறும். இருபத்தோரு தீபாராதனைகளோடு நடைபெறும் இக்காட்சி மாணிக்கவாசகர் தீபாராதனை என அழைக்கப்படும். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த பூஜையைக் காண எண்ணற்ற பக்தர்கள் பார்த்து மகிழ்வார்கள்.
மறுநாள் காலை பஞ்சமூர்த்திகள் (ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர்) திருவீதி வலம் வரும்போது, மாணிக்க வாசகர் ஸ்ரீ ஸோமாஸ்கந்தரை வணங்கியவாறே பின் நோக்கி வலம் வரும் காட்சி மிகவும் அற்புதமானது.


தேர்த் திருநாளின் (04.01.2015) அதிகாலை 05.00 மணியிலிருந்து 05.30 மணிக்குள் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ ராஜர் அழகுமிகு அரிய அணிமணிகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட திருக்கோலத்தோடு யாத்ராதான நிகழ்ச்சியாக - சித்ஸபையின் கனகசபையிலிருந்து தேருக்குப் புறப்படும் திருக்காட்சி நடைபெறும்.

தேர் மிக அழகிய வடிவம் வாய்ந்தது. மிக உயர்ந்த தோற்றம். ரதலக்ஷணம் எனும் சாஸ்திர முறைப்படி சக்கரங்கள், ஆர் தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு, கிடுகு முதலியவற்றால் ஆனது. தேரிலுள்ள மர சிற்பங்கள் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டது. சிவலீலைகளின் காட்சிகள் மிக அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கும். தேரின் நடுவில் உள்ள ஊஞ்சலில் நடராஜர் அமர்த்தப்படுவார்.தேரில் அமர்த்தியபிறகு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற பிறகு, சேந்தனாரின் திருப்பல்லாண்டு பாடல்கள் இசைக்க, வேத கோஷங்கள் முழங்க, திருமுறைகள் ஓதப்பட, நாதஸ்வரம் இன்னிசைக்க, உற்சாக கோஷங்கள் நிரம்ப, உலுக்கும் மரம் எனும் நெம்புகோல் வடிவம் தேரை உந்தித் தள்ள, உத்ஸவத்தின் மிக முக்கிய கட்டம் இனிதே தொடங்கும்.
நடராஜரின் ஆட்டத்திற்கு தாளம் இசைப்பது போல தேரில் இருக்கும் மணிகள் ஒலியெழுப்பும். நடராஜரின் முன் தோற்றத்தை ரசிப்பவர்களைப் போல, அழகுமிகு பின் தோற்றத்தை கண்டு ரசிப்போரும் உண்டு. தேர் தரிசன உத்ஸவத்தில் மட்டுமே பின் தோற்றத்தை கண்டு ரசிக்கமுடியும்.
கருநிற இரண்டு (நடராஜர் & சிவகாமசுந்தரி) தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வருவது இரு யானைகள் அழகாக அசைந்து அசைந்து வருவதைப் போன்ற இக்காட்சியை காணும்போது, காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன் என்ற திருநாவுக்கரசர் கூறியதே நினைவுக்கு வருகின்றது.
பொதுவாக இலக்கியங்களில், தெய்வங்களை யானைக்கு ஒப்பிடுவது இயல்பானது. கம்பர் தனது ராமாயணத்தில், ராமரை அறிமுகப்படுத்தும் காட்சியில், யானையை உருவகப்படுத்துகின்றார்.
புலவர் கீரன் இதற்கு ஒரு அழகான விளக்கம் தருவார். யானையின் பலத்தையோ அல்லது நிறத்தையோ ஒப்பிடப்படுவதில்லையாம். யானையின் குணாதிசயத்தை விளக்குகின்றது என்பார் புலவர் கீரன். யானையின் காலைப் பிடித்தால் தான் அதன் உதவியோடு தலையில் ஏறமுடியும். அதுபோல தெய்வத்தின் காலடியில் சரணடைந்தால் மிக உயர்ந்த இடமாகிய மோட்சம் கிடைக்கும் என்பதை உணர்த்தவே தெய்வங்களை யானைக்கு உருவகப்படுதுகின்றனர்.
யானையின் வளைந்த காலைப் பிடித்து அதன் தலையில் ஏறுவதைப் போல, நடராஜரின் வளைந்த திருப்பாதமாகிய குஞ்சிதபாதத்தை சரணடைந்தால், மிக உயரிய பேறு கிடைக்கும் என்பது திண்ணம்.
மதியம் உச்சிகால பூஜை தேரிலேயே நடைபெற்று நிலைபெறும். சற்றே இடைவெளிக்குப் பிறகு, செம்படவர் மண்டகப்படி எனும் மீனவர்கள் எடுத்துவரும் மண்டகப்படி எனும் மரியாதைகளை நடராஜர் ஏற்று பிறகு தேர் மறுபடி கிளம்பி, ஈசான திசை திரும்பி, தேர் கிளம்பிய இடத்திற்கே வந்து நிலைபெறும்.
தேரிலேயே சாயரக்ஷை - மாணிக்கவாசகர் தீபாராதனை விசேஷ நிவேதனங்களுடன் நடைபெறும்.
தேரிலிருக்கும் தெய்வங்கள் கோயிலினுள்ளே ஆயிரங்கால் மண்டபத்தில் வரவழைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் நூறு தீக்ஷிதர்கள் நின்று, ஏக கால லக்ஷார்ச்சனை நடைபெறும்.

ஆயிரங்கால் மண்டபம் மிக பிரம்மாண்டமானது. ஆயிரம் தூண்கள் கொண்டது. மண்டபத்தினுள்ளே விதானம் எனும் மேற்கூரையில் உள்ள ஓவியங்கள் சிதம்பர புராணத்தைப் பகிரும் விதத்தில் வரையப்பட்டது. ஆடல்வல்லானின் அழகு மிகு நடனக் காட்சிகள், சித்தர் பீடங்கள் முதலான ஓவியங்களைக் காண கண்கள் கோடி வேண்டும். ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும்.


அதன் பின், ஆருத்ராபிஷேக ஹோம பூஜைகளுடன், மஹாபிஷேகம் நடைபெறும். அபிஷேக திரவிங்கள் பெருமளவில் சேகரிக்கப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் ஸகல திரவிய அபிஷேகமாக நடத்தப்படும். இறுதியில் புஷ்பாஞ்சலி எனும் பலவித மலர்களால் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
அரிய அணிமணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு அர்ச்சனை ஆராதனைகள் நடத்திய பிறகு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்தபிறகு, மதிய வேளையில், ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து சித்ஸபைக்கு அம்பிகையும், ஈசனும் திருநடனம் புரிந்துகொண்டே செல்லும் அற்புத காட்சிதான் ஆருத்ரா தரிசனம் ஆகும்.
இந்தக் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். தில்லையில் திருநடம்புரியம் சித்ஸபேசரின் திருநடன திருக்காட்சியைக் கண்டவர்கள் பெரும் பேறு பெற்றவர்களாவார்கள்.
வேண்டிய வரங்களும், நீடித்த ஆயுளும், பெரும் செல்வமும் அருளக்கூடிய தேர் தரிசனக் காட்சியை அனைவரும் கண்டுகளிப்போம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜை
Mobile : 94434 79572, 93626 09299.
Mail : yanthralaya@yahoo.co.in
yanthralaya@gmail.com
Pl. visit to : www.facebook.com/deekshidhar
http://natarajadeekshidhar.blogspot.in

தனித்தனியாக கட்டுரைகளை வாசிக்க, கீழேயுள்ள லிங்க்-களை க்ளிக் செய்தும் படிக்கலாம்.

**************************************************
**************************************************
**************************************************

&


Friday, December 18, 2009

வியதீபாத தரிசனம்


வளம் தரும் வியதீபாத தரிசனம்
(மார்கழி 10,  திங்கட் கிழமை,  25.12.2017, அதிகாலை 04.30 மணி)

சிதம்பரம்.
கோயில் என்றாலே பொருள்படுவது. ஆனந்த நடராஜராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது. சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தரும் ஸ்தலம். சிதம்பர ரகசியம் விளங்குவது. அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்றும் தலமாக விளங்குவது.

சிவபெருமானுக்கும் ஐந்து என்ற எண்ணுக்கும் அநேக தொடர்புகள் உள்ளன.
பஞ்சாக்ஷரம் ஐந்து எழுத்து. நடராஜராஜர் செய்யும் செயல்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல்,) பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாக அமந்த ஸ்தலங்கள் ஐந்து. மகேஸ்வரனின் சக்தி ரூபங்கள் ஐந்து. (ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி). சிதம்பர ஸ்தலத்தின் முக்கிய பிரகாரங்கள் ஐந்து. ஈஸ்வரனின் முகங்கள் ஐந்து. பரமேஸ்வரனின் முகங்கள் ஐந்து. சித்தாந்தக் கலைகளின் (சித்தாந்தம்) ஐந்திற்கும் நாயகராக விளங்குபவர்.

பஞ்சாங்கம் என்பது ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது. 1.திதி, 2.வாரம், 3. நக்ஷத்திரம், 4. யோகம், 5. கரணம்.
அண்டத்தின் பரம்பொருள் நடராஜப் பெருமான். அலகிலாத உருவம் உடையவர். அடிமுடி காணமுடியாதவர். அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருப்பவர். அவரன்றி அணுவும் அசையாது. இயங்கு சக்திகளை தாள கதியுடன் ஆட்டுவிப்பவர். அண்டத்தின் பால்வெளியில் அமைந்த நவக்ரஹங்களையே மாலையாக அணிந்தவர்.

சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் சன்னிதியில், பஞ்சாக்ஷர படிக்குக் கீழே, தினமும் பஞ்சாங்கம் படிக்கப்படுவது ஆண்டாண்டு காலம¡க நிகழ்ந்து வருவது.

நக்ஷத்திரங்களும், ராசி மண்டலங்களும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் கட்டளைக்கிணங்க இயங்குகின்றன.

1. திதி : திதிக்குக் காரணமாகிய சந்திரனை தலையில் சூடியவர்.
2. வாரம் : கிழமைகளுக்கு ந¡யகராகிய சூர்யனை குண்டலமாக அணிந்தவர்.
3. நக்ஷத்திரங்கள் : இவற்றை மாலையாக அணிந்தவர்
4. யோகம் : வேண்டுவோருக்கு வேண்டும் யோகங்களை அருள்பவர்.
5. கரணம் : கரணங்களை தன்னுள் கொண்டவர்.
மார்கழி மாதம் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக அமைகின்றது. ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், மார்கழியில், அதிகாலைப் பொழுதாகிய பிரம்ம முஹூர்த்த நேரத்தில், மிகச் சிறப்பாக திருப்பள்ளியெழுச்சி காலம் நடைபெறும்.

இந்த மார்கழி மாதத்தில் (பஞ்சாங்கத்தில் ஒரு அங்கமாகிய) வியதீபாதம் என்னும் யோகம் வரும் நாளில் ஸ்ரீ சித்ஸபேசரை தரிசனம் செய்வது ஸர்வ பாபங்களையும் நீக்கி, பெரும் புண்யங்களையும், அனைத்து செல்வங்களையும் தரவல்லது. மார்கழி மாதத்தின் அனைத்து தினங்களிலும் நடைபெறும் திருப்பள்ளியெழுச்சி கால தரிசனங்களின் பலன்கள் அனைத்தும், (தனுர்) வியதீபாத தினத்தில் தரிசனம் செய்தால் கிடைக்கும்.

பஞ்சாங்கத்தின் யோகம் என்பது சிறப்பு வாய்ந்த ஒரு அம்சம். சூர்யனுக்கும், சந்திரனுக்கு இடையே உள்ள தொடர்பை நிறுவும் அம்சம்.


யோகங்கள் என்பது மூன்று வகைப்படும்.

பிறக்கும்போது ஜாதகத்தில் கிரஹங்கள் இணைவதால் உண்டாகும் யோகம். (கஜகேசரி யோகம், சகடயோகம்)

நக்ஷத்திரமும், தினமும் இணைவதால் உண்டாகும் யோகம் (அமிர்த, சித்த மற்றும் மரண யோகம்). அஸ்வினி நக்ஷத்திரம் திங்கட்கிழமையில் அமைந்தால் அது சித்த யோகம்.

சூர்யனும், சந்திரனுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் யோகங்கள் 27. (விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை) இந்த 27 யே¡கங்களுள் ஒன்றுதான் வியதீபாத யோகம், யோக நாயகர்களுக்கு அதிபதியாக விளங்குவது.

மார்கழி மாதம் & வியதீபாத யோகம் இணையும் வேளையில் ஸ்ரீ நடராஜப் பெருமானை வழிபடுவது மிகுந்த யோகங்களைத் தரவல்லது.

வியதீபாத தினம் - மகேஸ்வரப் பெருமானும் மனோன்மனி எனும் சக்தியும் இணைந்த நாள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறைவனும் இறைவியும் இரண்டறக் கலந்த நன்னாளில் மனம் ஒன்றுபட்டு சிவபெருமானை வழிபடுவது நல் இல்லற வாழ்வை நல்கும்.


புராண விளக்கம் :ஒரு சமயம், சந்திரன் குரு பகவானின் மனைவியான தாரையின் அழகில் மயங்குகிறார். இதை அறிந்த சூர்ய பகவான், சந்திர பகவானிடம் இது தகாத செயல் என எச்சரிக்கிறார். அச்சமயம் இருவரின் பார்வைகளும் ஒன்று சேர, அந்த சக்தியிலிருந்து ஒரு மிகப் பெரும் வடிவம் எழுந்து, உலகத்தையே விழுங்கப் பார்த்தது. அந்த உருவத்தைச் சாந்தப்படுத்திய சூர்ய சந்திரர்கள், யோகங்களில் ஒருவராக, வியதீபாதம் என்று பெயர் அளித்து, யோகங்களுக்கு அதிபதியாக பதவி அளித்தனர். உலகை விழுங்க ஆசைப்பட்டு, சாந்தப்படுத்தியதால், பூலோக மக்கள் உன் யோகம் வரும் நாளில் எந்தப் புனித காரியத்தையும் செய்யமாட்டார்கள் எனவும் கூறினர்.

மக்கள் புனித செயல்கள் செய்யாத திதிகளான, அஷ்டமி, நவமி திதிகள் மஹாவிஷ்ணுவை வேண்டிக்கொண்டு, அவரின் அவதார தினப் பெருமையைப் பெற்றனர்.

அதுபோல, வியதீபாத யோகம், தன் நாட்களில் எந்தப் புனித காரியமும் செய்யாதிருக்கிறார்களே என்று எண்ணி, நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதத்தை (தூக்கிய திருவடியை) சரணடைய, பக்தர்களுக்கு வேண்டியதை உடனடியாக வரமளிக்கும் நடேசர், மார்கழி மாதமும், வியதீபாதம் யோகம் வரும் நாளில், திருப்பள்ளியெழுச்சியில் என்னைத் தரிசனம் செய்வே¡ருக்கு அனைத்துப் பலன்களும் கிடைக்கும் என்று, அந்த யோகத்திற்கு மகிழ்வையும், நற்பேற்றையும் அளித்தார்.

வல்லமை வாய்ந்த இந்த யோகத்தில் தரிசனம் செய்தால் பதினாறு பேறுகளும் கொண்ட பெரு வாழ்வினை சித்ஸபேசர் அருளுவார்.

வானவியல் சாஸ்திரப்படி, மார்கழி மாதம் தனுர் அல்லது தனுசு மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த ராசிக்கு அதிபதி குரு பகவான். இந்த ராசியில் சூர்யன் சஞ்சரிக்கும்போது, சந்திரன் சூர்யனுக்கு முன்பு வரும்போது, வியதீபாதம் யோகம் ஏற்படுகிறது.

ஸ்ரீ உமாபதி சிவம் அருளிய குஞ்சிதாங்கிரிஸ்தவம் எனும் நூலில் (வியதீபாத யோகம் தோன்றக் காரணமான) சந்திரன், குரு பகவானின் மனைவியான தாரையை மோகித்ததால் ஏற்பட்ட தோஷத்தினை சிதம்பரத்தில் நடராசரைப் பணிந்து தோஷ நிவர்த்தி செய்துகொண்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் தனது சிவார்ச்சனா சந்திரிகையில் (தந்த சுத்தி படலம்), வியதீபாத யோகம் வரும் நாளில் பிரம்ம முஹூர்த்தத்தில் சிவனை வழிபடவேண்டும் என வலியுறுத்துகிறார்.

வியதீபாத யோக நன்னாளில் நடராஜப் பெருமானை தரிசனம் செய்வோம், நல்யோகங்கள் மற்றும் வளங்கள் அனைத்தயும் பெறுவோம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்,
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
செல் : 94434 79572, 93626 90299.
Mail : yanthralaya@yahoo.co.in
yanthralaya@gmail.com
www.facebook.com/deekshidharதனித்தனியாக கட்டுரைகளை வாசிக்க, கீழேயுள்ள லிங்க்-களை க்ளிக் செய்தும் படிக்கலாம்.

**************************************************
**************************************************
**************************************************


&
தைப் பூச தாண்டவம்

தைப் பூச தாண்டவம்
ஆனந்த நடனம் காண்போம் ! ஆனந்தம் அடைவோம் !!
(சிதம்பரம் சித்ஸபையில் நடராஜர் நடனமாடிய நாள் - தை பூசம் - புதன் கிழமை - 31.01.2018)

ஓம் க்ருபா சமுத்ரம் சுமுகம் த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதி வாமபாகம்
சதாசிவம் ருத்ரம் அனந்த ரூபம் சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி

எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி
எங்குஞ் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாயிருத்தலால் எங்கெங்குந்
தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.
- திருமந்திரம்

பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் பெரும் தவம் செய்து வேண்டியதற்கு இணங்க, சிதம்பரத்தில் தை மாதம், பூச1 நட்சத்திரம், பௌர்ணமி, பகல் நேரம்2 கூடிய நன்னேரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் கொண்டருளினார்.

சிதம்பரம் - மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் - இம்மூன்றினாலும் சிறப்புற்ற ஸ்தலம்.

தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம். சிதம்பர க்ஷேத்ரத்தின் தச (10) தீர்த்தங்களுள் முக்கியமானது. காசியில் உள்ள கங்கையை விட மேலானது3. மிகவும் புனிதம் வாய்ந்தது. சிவசக்தி ரூபங்கள் இணைந்தது. ஸ்ரீ நடராஜப் பெருமானின் தங்க மேனியில் தவழ்ந்த அபிஷேக தீர்த்தம் சேரும் இடமாதலால், சிவகங்கையே பொற்குளம் போல் காட்சியளிக்கின்றது. இங்கு ஸ்நானம் செய்வதால் பொன்னார் மேனியனின் திருவருளால் தேகம் புனிதமடைகின்றது. கௌடதேசத்து சிம்மவர்மன் உடல் குறை நீங்க இங்கு ஸ்நானம் செய்து தங்க மேனியனாக ஹிரண்யவர்மனாக மாறினான்.
இக்குளத்தின் வருண (மேற்கு) திசை வாயிலில், ஸ்வாமி தீர்த்தம் கொடுப்பதே தைப் பூச தினத்தின் மிக முக்கிய நிகழ்வு.

ஸ்தலம் : சிதம்பரம். சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த ஸ்தலம். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள்4 உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது. சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம்.

மூர்த்தி : ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.
வேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள்5 போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.

புராண விளக்கம் :
ஒரு சமயம், மஹா விஷ்ணு யோக நித்திரையிலிருந்து பரவசத்துடன் எழ, அவரைத் தாங்கிய ஆதிசேஷன், திடீர் மகிழ்விற்கான காரணம் கேட்க, விஷ்ணு, சிவபெருமானின் ஆனந்தக் கூத்தினை அனுபூதியாக விளக்க, தானும் அக்காட்சியைக் கண்டுணர வேண்டும் என வரம் கேட்க, விஷ்ணு அருள்பாலிக்க, ஆதிசேஷன், அத்ரி ரிஷியின் பத்னியாகிய அநசூயயின் குவிந்த கைகளில் (அஞ்சலி -குவிந்த கரம்) நாகமாக வந்து, பாதங்களில் விழுந்ததால் பதஞ்சலி என பெயர் பெற்று, தில்லை ஸ்ரீ மூலநாதரை, மத்யந்தின மகரிஷியின் மகனாகிய ஸ்ரீ வியாக்ரபாதர் என்ற புலிக்கால் உடைய முனிவருடன் வழிபாடாற்றி வந்தார்.
தேவர்கள், ரிஷிகள், கணங்கள் வேண்டியதற்கு இணங்க, முன்னர் வரம் அளித்தபடி, சிவபெருமான் ஆனந்த நடனக் காட்சி நல்க பூலோகம் வரும் நேரம் வந்தது.
தை மாதம் - மகிழ்ச்சி பொங்கும் மாதம். சூரியன் தனது அயனத்தை (பாதையை) மாற்றும் மாதம். யோக குருவான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு உரிய நக்ஷத்திரம் பூசம்6. ஆடுவதும் (dynamic) அவரே, அமைதியும் அவரே (static) என்றுணர்த்தவே, ஆட்டமாடி ஆட்டுவிக்க, ஆடாமல் ஆட்டுவிக்கும் யோக தக்ஷிணாமூர்த்திக்குரிய நாள், நக்ஷத்திரம், பகல் நேரம் என உத்தமமான வேளை வந்தது.

தில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க, ஸகல தேவர்களும், அனைத்து கணங்களும் உடன் வர, இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.
அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.

காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னக பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய7, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவது பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.
இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார்8 என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.

ஆனந்த நடனமாடிய அம்பலவாணர், தவம் செய்த பதஞ்சலியை நோக்கி என்ன வரம் வேண்டும் என வினவ, பதஞ்சலியோ தாம் கண்ட இத்திருக்காட்சியை எதிர்காலத்தில் அனைவரும் காண வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில், நடராஜ ராஜர் பொன்னம்பலத்தின் எப்பொழுதும் பதஞ்சலியாமல் (பாதம் சலிப்படையாமல்) ஆடவேண்டும் என பெருவரம் கேட்டார். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றௌ உடன் அருளும் குஞ்சிதபாதர், பதஞ்சலிக்கு அவ்வண்ணமே அருள்பாலித்தார்.

நடராஜராஜரின் அற்புத ஆனந்த நடனம் இன்றும் என்றும் நடக்கிறது.

அண்டத்தின் அசைவைக் காட்டுவது ஆனந்த நடனம். இந்நடனத்தை வேதாந்த சித்தாந்தங்கள் மிக அற்புதமாக விளக்குகின்றன. உருவம் (ஸ்ரீ நடராஜர்), அருவம் (சிதம்பர ரகசியம்), அருவுருவம் (ஸ்படிக லிங்கம்) என மூன்று வடிவங்களிலும் அமைந்து, மும்மலங்களை (ஆணவம், கண்மம், மாயை) அகற்ற காட்சி தருகின்றார். அசைவதும், அசையாததும், இரவும், பகலும், ஒலியும், ஒளியும், வெம்மையும், குளிரும் அனைத்தும் அவரே.

அணுவுக்குள்ளும், அண்டசராசரமெங்கும் நடமிடுபவரும் அவரே. பக்தர்களின் வேண்டுதல்களை செவி கொடுத்துக் கேட்டு வரமருளும் தோடுடைய செவியன்9. எவரும் விரும்பாத ஊமத்தம்பூ, பாதி வளர்ந்த சந்திரன் போன்ற குறைகள் கொண்ட அனைத்தையும் தாம் ஏற்றுக் கொண்டு, தம்மை தரிசிப்பவர்களுக்கு அருளை நிரம்ப வாரி வழங்குபவர்.

தைப் பூச தினத்தில் பஞ்ச மூர்த்தி வீதியுலா வந்து, பகல் நேரத்தில், சிவகங்கைக் குளத்தின் மேற்கு வாசலில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி அருகிருக்க, ஸ்வாமி தீர்த்தவாரி (அனைவருக்கும் அருளுதல்) நடைபெறும். மதிய வேளையில் கனகசபையில் தரை முழுவதும் அன்னம் நிரப்பி, ஸ்ரீ நடராஜ ராஜருக்கு நிவேதனம் செய்து, அனைவருக்குமான அன்னதான நிகழ்ச்சி நடைபெறும்.

தைப்பூச அன்னதான பாவாடை ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகின்றது. எதிரிலிச் சோழன் குலோத்துங்கன் சிவபாதசேகரன் எனும் சோழ மன்னம் தைப்பூச அன்னப்பாவாடையை நிகழ்த்தினான் என்று பழங்கால செப்பேடு தெரிவிக்கின்றது.

தைப்பூச தினத்தில் சிவகங்கையில் ஸ்நானம் செய்வதால், ஸஞ்சித பாபங்கள் அனைத்தும் நீங்கி, பெரும் செல்வம் மற்றும் வேண்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன3.

தைப்பூச நன்னாளில் சிவகங்கையில் நீராடி, ஆனந்த நடனமிடக் காரணமாகிய ஸ்ரீ மூலநாதரையும், பொன்னம்பலத்தில் விளங்கும் ஸ்ரீ நடராஜ ராஜரையும் தரிசித்து பேரின்பப் பயன்பெறுவோம்.

குறிப்பெடுத்த நூல்கள் :
1. குஞ்சிதாங்கிரிஸ்தவம்
2. கோபால கிருஷ்ண பாரதி பாடல்
3. சிதம்பர ஸபாநாத புராணம்
4. சாந்தோக்ய உபநிஷத், கைவல்ய உபநிஷத்
5. சிலப்பதிகாரம் - ஸ்ரீ நடராஜரின் பாண்டரங்க, கொடுகட்டி நடனம்
6. ஜோதிட சிந்தாமணி
7. ஸ்ரீ நடராஜ தத்வம்
8. மாணிக்கவாசகர் - திருவாசகம்
9. தேவாரம் - திருஞான சம்பந்தர்


- நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பரம்பரை டிரஸ்டி, பூஜை & ஸ்தானிகம்
94434 79572, 93626 09299.
www.facebook.com/deekshidhar
Mail : yanthralaya@yahoo.co.in &  yanthralaya@gmail.com


thai pusam tai poosam natarajar diksidar deekshidhar chidambaram chitambaram citambaram chithambaram thillai natrajar deeksidar thai puusam
தைப் பூசம் தை பூசம்

தனித்தனியாக கட்டுரைகளை வாசிக்க, கீழேயுள்ள லிங்க்-களை க்ளிக் செய்தும் படிக்கலாம்.

**************************************************
**************************************************
**************************************************

&


thai pusam thai poosam chidambaram citambaram diksidhar dikshithar diksithar natarajar