Wednesday, March 23, 2011

பார்வையற்றப் பாவலர்

பார்வையற்றப் பாவலர்
அந்தகக்கவி வீர ராகவ முதலியார்

இந்தப்பதிவுக்கு முந்தைய பதிவாகிய இணையில்லாத இணை – இரட்டைப் புலவர்கள் பதிவு கடந்த 15.03.2011 அன்று பதிவேற்றப்பட்டது.
அன்றைய தினம் உலக ஊனமுற்றோர் தினம்.
மாற்றுத் திறனாளிகள் கூட உலகை மாற்றியமைக்க முடியும் என்பதைக் காட்டவும், அவர்களுக்கு உற்சாகம் ஏற்றவும் இந்நாள் கொண்டாடப் படுகின்றது.
(பல அரிய கண்டுபிடிப்புகளைச் செய்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கும், இசைக் கலையில் பெரும் சாதனைகள் செய்த பீத்தோவனுக்கும் காது கேட்காது. இது போன்று பலர் அரிய சாதனைகள் செய்திருக்கின்றனர்.)
மாற்றுத் திறனாளிகளாக விளங்கிய இரட்டைப் புலவர்களைப் பற்றிய கட்டுரை இந்த ப்ளாக்கில், உலக ஊனமுற்றோர் தினத்தில் வெளிவந்ததை நெகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திய நிலாப்ரியன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.
இரட்டைப் புலவர்களைப் போல, தமிழாய்ந்த மற்றும் ஒரு மாற்றுத்திறன் கொண்ட ஒரு புலவரை தான் இங்கு காணவிருக்கின்றோம்.
இந்தப் புலவரைப் பற்றி, இரட்டைப் புலவர்கள் பதிவிலேயே ஒரே பதிவாக எழுத நினைத்திருந்தேன். நேரமின்மை காரணமாக பல நாட்கள் கழித்து பதிவிட வேண்டியதாகிவிட்டது.
பார்வையற்றப் பாவலர்
அந்தகக்கவி வீர ராகவ முதலியார்

ஞானம் பெற ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்தவர்கள் அனேகம். அவ்வகையில் பிறவியிலேயே இரு கண்களும் தெரியாத நிலைகொண்ட ஒரு கவிஞர், கடல் கடந்தும் பயணம் செய்து, பெரும் புகழ் கொண்டார்.

அவர், அந்தகக்கவி வீரராகவ முதலியார்.
அந்தகம் – கண் பார்வை இல்லாதிருத்தல்.
கவி – பாடல்கள் எழுதும் புலமை பெற்ற புலவர்.
கண்களில்லாக் கவிஞர்.

இவர், செங்கல்பட்டுக்கு அருகிலான பொன்விளைந்த களத்தூரில் சைவ வேளாளக் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்குப் பிறவியிலேயே கண்கள் தெரியவில்லை.
இருந்தபோதும் தனது அளவற்ற அறிவாற்றலால் தமிழைக் கற்றார். இளமையிலேயே அழகு தமிழில் கவி புனையும் திறனும் பெற்றார். இவரின் ஊனத்தைப் பெரிதாக எண்ணாமல், தமிழ் கற்றறிந்த பெண் ஒருவர், இவரைத் திருமணம் செய்துகொண்டார்.
பொருள் ஈட்ட வேண்டி, பல தேசங்களுக்கும் சென்று வர கிளம்பினார்.
அப்போது, தம் மனைவி தந்த கட்டுசாதக் கூடையை ஒரு இடத்தில் இருத்தி, உணவருந்த எண்ணி, கைகால் சுத்தம் செய்யும் போது, அங்கிருந்த நாய் ஒன்று சாதத்தினை எடுத்துச் சென்றது. இதை அவர் அறியவில்லை. அருகிலிருந்த ஒருவர் இந்நிகழ்ச்சியை எடுத்துச் சொல்ல, புலவர்களுக்கே உரிய நடையில், கவி ஒன்று பாடுகின்றார்.

சீராடையற்ற வயிரவன் வாகனஞ் சேரவந்து
பாராளும் நான்முகன் வாகனந்தன்னை முன்பற்றிக் கௌளவி
நாராயணணுயர் வாகனமாயிற்று நம்மை முகம்
பாரான் மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே.

வயிரவன் வாகனம் – நாய்.
நான்முகன் பிரம்மாவின் வாகனம் – அன்னம்.
நாய் வந்து அன்னத்தை எடுத்துச் சென்றது.

நாராயணனின் வாகனம் – வெள்ளைக் கருடன்.
பசியினால் முகம் சுருங்கி, வெளுத்துவிட்டது.

மை – ஆடு. ஆட்டினை வாகனமாகக் கொண்டவர் அக்னி பகவான். வயிற்றில் நெருப்புப் பற்றியது – பசி எடுத்தது.

இந்நிகழ்ச்சியை வாகனம் எனும் வார்த்தையைக் கொண்டு விளையாடியிருக்கின்றார்.

சோழநாடு வந்து பல நாட்கள் தங்கியிருந்துவிட்டு, ஈழ நாடு சென்றார்.
அப்போது இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்தவர் பரராஜசேகரன் எனும் தமிழ் மீது மிகவும் பற்றுக்கொண்ட மன்னவன். தமிழ்ப் பாவலர்களுக்குப் பரிசுகள் பல ஈந்தவன்.
பார்வையற்றிருந்தாலும் பா(pa)வன்மை கொண்ட புலவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த மன்னன் அரசவைக்கு வரச் செய்திருந்தான்.

அரசவையிலிருந்த மற்ற புலவர்கள் பொறாமை எண்ணம் கொண்டு அந்தகக்கவி வரும் சமயம், மன்னவன் புலவரைக் காண இயலாத வகையில் திரை ஒன்றை அமைத்தனர்.

திரை இருப்பதை கவியின் சீடன் ஒருவன் ‘சிதம்பரம்’ என்று குறிப்பால் உணர்த்தினான்.
பலருக்கும் முன்னே இவர் பார்வையற்றவர் என்பதைச் சொல்ல எண்ணாமல், மன்னவனுக்கும் புலவருக்கும் இடையே திரை ஒன்று இருப்பதைக் குறிப்பால் உணர்த்தினான்.
சிதம்பரம் ஸ்தலத்தில், சிதம்பர ரகசியத்தைக் காண வேண்டும் எனில் திரையை அகற்றினால் தான் காண முடியும், ஆகையால் திரை இல்லாமல் இருதால் அரசனைக் காணலாம் என்பதை அழகுற உணர்த்தினான்.
சிதம்பரம் என்று சீடன் சொல்லக் கேட்டதும், நடந்ததை அறிந்த புலவர், மனம் முழுக்க கடவுளை வேண்டி, “திருவண்ணாமலை” என்றார்.
திருவண்ணாமலை – பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி – நெருப்புக்கு உரிய ஸ்தலம்.
இவர் திருவண்ணாமலை என்றதும், திரைத் தீப்பற்றி எரிந்தது.

இவரின் தெய்வீகத் தமிழை மிக வியந்த மன்னன், அருகிலிருந்த வில்லினை எடுத்து நின்று, இக்கோலத்தைப் பாடுங்கள் என்றான்.

பார்வையற்றவர் எப்படி மன்னனைப் பார்க்க முடியும்? ஆயினும் தெய்வீகத் திறனால் அறிந்தார். உடன் மடை திறந்த வெள்ளம் போல், பாடலைக் கொட்டுகின்றார்.

வாழும் இலங்கைக் கோமானில்லை மானில்லை
ஏழு மராமரமோ வீங்கில்லை – ஆழி
அலையடைத்த செங்கை அபிராமா இன்று
சிலையெடுத்தவாறு எமக்குச் செப்பு.

மன்னன் வில்லோடு நின்ற கோலம் கொண்டதைக் காணும்போது, கோதண்டம் எனும் வில்லினை உடைய ராமரின் கோலத்தைக் கொண்டது போல் இருக்கின்றது என்று பாடுகின்றார்.

இலங்கைக் கோமானாகிய ராவணன் இல்லை ; வில்லையெடுப்பதற்கு
சுக்ரீவனுக்குத் தன் திறமையக் காட்ட வேண்டி, ஒரே அம்பில் ஏழி மரங்களைத் துளைத்தார் ராமர். அது போன்ற தருணம் இங்கில்லை ; வில்லையெடுப்பதற்கு,
ஆழி அலை – கடல் மேல் பாலம் அமைக்க கடல்வேந்தனிடம் கோரிக்கை வைக்கின்றார் ராமர். நேரம் கடந்துகொண்டே போகின்றது. கோபம் கொண்ட ராமர் கடல் மேல் அம்பைப் போட வில்லை எடுக்கின்றார். இந்தத் தருணமும் இப்பொழுது இங்கில்லை; வில்லை எடுப்பதற்கு,
பிறகு ஏன் வில்லை எடுத்தாய் சிவந்த கரங்களையுடைய (செங்கை) அழகிய தோற்றம் உடைய ராம பிரானே என்று கேட்கும் வகையில் பாடல் அமைகின்றது.

இந்தப் பாடலால், அவரின் முழுத் திறனையும் அறிந்த மன்னவன் பெரும் பரிசுகள் தருகின்றான்.

இவர் ஒரு சமயம் ‘ராமன்’ என்ற செல்வந்தரைப் பாடினார். அகமகிழ்ந்த ராமன், அந்தகக்கவிக்கு யானையைப் பரிசாக அளித்து கௌளரவித்தார்.

கவியோ ஏழை. பொருள் ஈட்ட வேண்டி பல இடங்களுக்குச் செல்பவர். இவர் ஒருவருக்கே உணவு கிடைக்கப் போராட வேண்டியிருக்கின்றது. யானைக்கு எங்கே தீனி போடுவது. இருந்தும், யானையைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். மனைவி மதிபெற்றவர். வீட்டிலும் ஏழ்மை தாண்டவமாடுகின்றது.
தமது வளமான வாழ்க்கைக்குக் கவி ஏதேனும் கொண்டு வருவார் எனக் காத்திருந்தார். கவி வருவதை பிறரால் அறிகின்றார்.
வீட்டினுள் சமையல் செய்து கொண்டிருந்தபடியே, வீட்டின் வெளியே இருந்த அந்தகக்கவியை நோக்கி, என்ன பரிசு பெற்றுவந்தீர்கள் என்று கேட்கின்றார். (வீட்டினுள் இருந்தபடியால் கவி வாங்கிய ‘யானை’ பரிசினை அறியவில்லை.
கவிக்கு, நேரடியாக மனைவியிடம் ‘வேறு எந்தப் பரிசும் இல்லை, யானை மட்டுமே பரிசாகக் கொடுத்தார்கள்’ என்று சொல்லி மனம் நோகச் செய்ய விருப்பம் இல்லை.
ஆகையால், வெளியில் இருந்தபடியே யானைக்கு உண்டான தமிழில் உள்ள பல்வேறு சொற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குகின்றார். அந்தச் சொல்லுக்கு மதிமிகு மனைவி வேறு பொருள் கொண்டு பதிலிறுக்கின்றார்.
இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன் பூசுமென்றாள்
மாதங்க மென்றேன் நாம் வாழ்ந்தேம் என்றாள்
பம்புசீர் வேழமென்றேன் தின்னும் என்றாள்
பகடென்றேன் உழும் என்றாள்
பழனம் தன்னை கம்பமா என்றேன் நல் களியாம் என்றாள்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே!"
***
கவி மனைவி : வள்ளல் ராமனைப் பாடி என்ன கொணர்ந்தீர்கள் ?
கவி : வம்பதாம் களபம் (சீதக்களப செந்தாமரை – விநாயகர் அகவல். களபம் என்றால் யானை)
கவி மனைவி : (களபம் – கந்தம் - சந்தனம் என்று பொருள் கொண்டு) மேனியில் பூசிக்கொள்ளுங்கள்
கவி : மாதங்கம் (யானை – இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்)
கவி மனைவி : பெரும் அளவிலான தங்க நகைகளோ ? (மா – பெரிய)
கவி : பம்புசீர் வேழம் (நற்குணமுடைய யானை)
கவி மனைவி : (கரும்பு என்று பொருள் கொண்டு) சாப்பிடுங்கள்
கவி : பகடு
கவி மனைவி : (எருமைக்கடா எனப் பொருள் கொண்டு) வயல்வெளிகளை வளம் செய்ய பயன்படுத்துவோம்
கவி : கம்ப மா (எப்பொழுதும் அசைந்து கொண்டேயிருக்கும் யானை)
கவி மனைவி : (கம்பு எனும் தானியத்தில் செய்யப்பட்ட மாவு எனப் பொருள் கொண்டு) களி செய்ய உதவும்
கவி : கைம்மா (தும்பிக்கை எனும் கையை உடைய விலங்கு)
கவி மனைவிக்கு இதற்கு மேல் உரைக்க வார்த்தை ஏதும் இல்லை. யானையைத் தான் கவி சொல்லுகின்றார் என்று அறிந்து கலங்கிவிட்டாள் என்று பாடல் விளக்குகின்றது.
இவர் பல சந்தர்ப்பங்களில் பாடிய பாடல்கள், இவரின் தமிழ் அறிவையும், புராணங்களில் உள்ள புலமையையும், நகைச்சுவை உணர்வையும் பறை சாற்றுகின்றன.
இவரைப் பற்றி சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் பலர் பாராட்டிப் பாடியிருக்கின்றார்கள்.
அவர்களில் ஒருவர், தமிழில் கந்தபுராணம் எழுதிய ‘கச்சியப்ப சிவாச்சாரியார்’
பொங்குதமிழ் ... ... இங்கொருவன் பலகலை மானெய்திடப்போய் கவியினால் இசை பெற்றானே
என்று பாராட்டியிருக்கின்றார்.
இவர் எழுதிய நூல்கள் : திருக்கழுக்குன்ற புராணம், சேயூர்க் கலம்பகம், திருவாரூர் உலா முதலானவை.
இவர் பல காலம் பா(pa)ரினில் வாழ்ந்து, பார்வையற்று இருந்தாலும், பாடல் திறமையால் பாராட்டுக்களைப் பெற்றார்.
இவர் சிவபதம் அடைந்ததைக் கேட்டு, அன்றைய கயிற்றாரு அரசன் முதல் பலர் இரங்கற்பா எழுதி அவரைச் சிறப்பித்துள்ளனர். (அபிதான சிந்தாமணி)
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்
Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com
Mobile : 94434 79572 & 93626 09299
www.facebook.com/deekshidhar
பி.கு. : சென்ற வருடத்தில் எழுதப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Tuesday, March 15, 2011

இணையில்லா இணை - இரட்டைப் புலவர்கள்

இணையில்லா இணை - இரட்டைப் புலவர்கள்

தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்கள் பலருள் இரட்டைப் புலவர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாவர்.

சோழநாட்டில் வாழ்ந்த ஒரு வேளாளர் தம்பதிக்கு, சிவபெருமானின் திருவருளால், அஸ்வினி தேவர்களின் (அஸ்வினி தேவர்கள் – இரட்டையர்களாக அமைந்த, நட்சத்திரப் பேறு பெற்றவர்கள். சூரியனுக்கும் துவஷ்டிராக்கும் பிறந்த புத்திரர்கள்) அம்சமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.
ஒருவர் பிறவியேலேயே கண் பார்க்க இயலாதவர்.
மற்றொருவர் கால் நடக்க இயலாதவர்.

இதனால் மனமுடைந்த தம்பதியர்க்கு,
‘ஊனம் இருந்தாலும்,
ஞானம் மிகப் பெற்று,
ஞாயிறு போன்று பிரகாசித்து,
ஞாலத்தை வலம் வருவார்கள்’
என்று பெரியோர்கள் வாழ்த்தினார்களாம்.

அதனாலேயே, முன்னவருக்கு (ஞாயிறு – சூரியன்) முதுசூரியர் என்றும், இளையவருக்கு இளஞ்சூரியர் என்றும் பெயரிட்டனர்.

(சோழநாட்டில், செங்குந்தர் மரபில் தோன்றினர் என்றும், இருவரும் உறவினர்கள் - அதாவது அத்தை மகன், மாமன் மகன் என்றும், இருவரும் நெருங்கிய பந்தம் கொண்டவர் ஆகையாலேயே இரட்டையர் எனப் பெயர் பெற்றனர் என்றும் கூறப்படுவது உண்டு.)

சிறு வயதிலேயே இருவரும் தமிழ்ப்பற்று மிகுந்து விளங்கினர். தமிழைக் களங்கமறக் கற்றுச் சிறந்தனர்.

இருவரும் மனமொத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.
கால் நடக்க இயலாதவர் முதல் இரண்டு வரிகளைப் பாட, செய்யுளின் தன்மை மாறாமல் அடுத்த இரண்டு வரிகளை கண் பார்க்க இயலாதவர் பாடுவாராம்.

பெரியோர்கள் வாழ்த்தியது போல, ஞாலத்தை (தேசங்களை) வலம் வர இரட்டையர்கள் கிளம்பினர்.
(பல சமஸ்தானங்கள் சென்று, பெரிய அளவு தொகை வாங்காமல் ஒரு பணம் மட்டுமே வாங்கி வாழலாயினர் என்றும் கூறப்படுவதுண்டு).

கண்பார்க்க இயலாதவர் நடக்க இயலும்.
கால் நடக்க இயலாதரால் கண் பார்க்க இயலும்.
ஆகையால் முன்னவர், பின்னவரைத் தன் தோளிலே சுமந்து கொள்ளச் செய்து, அவரின் வழிகாட்டுதலில் நடப்பார்.

இவர்கள் ஒவ்வொரு தேசமாகச் சென்று பாடல் பாடிவருகலாயினர்.

இவர்களுடைய பாடல்களில் சைவப்பற்று ஓங்கியிருந்தது. சிவாலயங்களுக்குச் சென்று அங்கிருக்கும் சிவனைப் பாடி மகிழ்ந்திருந்தனர்.

புராணங்களில் உள்ள மிக நுண்ணியக் கருத்துக்களைத் தம் பாடல்களால் வெளிக்கொணர்வதில் வல்லவர்களாக இருந்தனர்.
“கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்” எனும் தொடர் வாயிலாக கலம்பகம் எனும் தமிழ் வகைப்பாடல்கள் பாடுவதில் மிகவும் தேர்ந்தவர்களாக இருந்தனர்.

கலம்பகம் என்பது தமிழ் இலக்கண வகைப்படி, கதம்ப மலர் மாலையைப் போன்று, பதினெட்டு உறுப்புகள் அமையப் பலவகை பா விகற்பங்களால் பாடப்பெறுவதாகும்.

சிதம்பரம் நடராஜர் மேல் அதீத பற்றுக் கொண்டனர்.
தில்லை நடராஜர் மீது பாடல்கள் பாடியிருக்கின்றனர். அது தில்லைக் கலம்பகம் என்று அழைக்கப்படும்.

இவர்கள் இரட்டையர்கள் அல்லவா ?
இவர்கள் பாடிய தில்லைக் கலம்பகப் பாடல் ஒன்றில், இரண்டு (2) தொடர்ந்து வருவது போல் பாடுகின்றனர்.

காதில் இரண்டு பேர்; கண்டோர் இரண்டு பேர்;
ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்; பேதை முலை
உண்ணார் இரண்டு பேர்; ஓங்கு புலியூரருக்குப்
பெண்ணான பேர்இரண்டு பேர் !

சிவமஹா புராணத்தில் மிகச் சிறிய அளவில் இடம்பெறும் சம்பவம்.
நாக அம்சமாகப் பிறந்த இரண்டு பேர், சரஸ்வதி கடாட்சத்தினால் அருமையான இசைஞானத்தைப் பெற்றார்கள். இவர்கள் இருவரும் தங்களின் இசை வல்லமையை சிவபெருமானிடம் மட்டுமே சமர்ப்பணம் செய்யத் தவமிருந்தார்கள். தவத்திற்கு மெச்சிய சிவபெருமான், அவர்களின் வேண்டுதலின் படி, அவர்கள் இருவரையும் தன்னுடைய காதுத் தோடுகளாக அணிந்து கொண்டார். அந்த நாகர்கள் இரண்டு பேர் – கம்பளர் மற்றும் அசுவதரர்.
இந்த இருவரையும் தான், இரட்டைப் புலவர்கள் ‘காதில் இரண்டு பேர்’ என்கின்றனர்.

‘கண்டோர் இரண்டு பேர்’ – தில்லைச் சிதம்பரத்தில் ஆடல்நாயகனின் தாண்டவத்தைக் கண்டு பேறு பெற்றவர்கள் இரண்டு பேர். அவர்கள் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள்.

‘ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்’ – அடிமுடி தெரியாவண்ணம் ஜோதி ஸ்வரூபமாக நின்ற சிவபெருமானை - பிரம்மாவும் விஷ்ணுவும் தலை எங்கு, கால் எங்கு என்று தெரியாமல் - திகைத்தனர். ஆகையாலேயே பிரம்மாவும், விஷ்ணும் ‘காணோர் இரண்டு பேர்’.

‘பேதை முலை உண்ணார் இரண்டு பேர்’ – பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது மரபு. ஆனாலும், குழந்தையாய் இருந்தாலும் தாய்ப்பால் உண்ணாதவர்கள் இரண்டு பேர். ஒருவர் பார்வதி தேவிக்கு மகனாய்ப் பிறந்த விநாயகர் (மூத்த பிள்ளையார்).
மற்றொருவர் பார்வதி தேவியால் குழந்தையாக பா(ba)விக்கப்பட்டு ஞானப்பால் அருளப்பெற்றவர் திருஞானசம்பந்தர் (இளைய பிள்ளையார்).

‘ஓங்கு புலியூரருக்கு பெண்ணான பேர் இரண்டு பேர்’ – சிவபெருமான் கங்கை & உமாதேவி இருவரையும் பெண்டாளுவதைக் (மனைவியாக்கிக் கொண்டதை) குறிக்கின்றனர் இரட்டைப் புலவர்கள்.

தில்லை நடராஜ மூர்த்தியின் தூக்கிய திருவடி குஞ்சிதபாதம் என்று அழைக்கப்படும். அந்தக் குஞ்சிதபாத தரிசனமே மோக்ஷத்தைத் தரவல்லது. அந்தப் பாதத்தைப் பாடிப் பரவுகின்றனர் இரட்டைப் புலவர்கள்,

தில்லை மூவாயிரவர் பூசை புரி பாதம்
தேவருடனே இருவர் தேடரிய பாதம்
வல்லமாகாளியுடனே வாதுபுரி பாதம்
மாமுனிவர்காய் யமனை மார்பில் உதைபாதம்
சொல்லவே பரவையிடம் தூது சென்ற பாதம்
தொல்புலி பதஞ்சலியும் தொண்டு செயும் பாதம்
அல்லலாம் ஏழ்பிறவி தீர நடமாடும்
ஆதிபுலி யூரர் திருவம்பலவர் பாதம்

(தில்லை வாழந்தணர்களாகிய தீக்ஷிதர்கள் தினந்தோறும் பூஜைகள் செய்கின்ற பாதம், அடிமுடி காண இயலாத போது தேவர்கள் காண இயலாத பாதம், காளியுடன் போட்டி நடனம் ஆடிய பாதம், மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்த பாதம், சுந்தரருக்காக பரவை நாச்சியாரிடம் தூது சென்ற பாதம், பதஞ்சலி & வியாக்ரபாத ரிஷிகள் கண்டு பேறு பெற்ற பாதம், ஏழு பிறவிகளை நீக்கி மோட்சத்தை அளிக்கும் பாதம் என்று நடராஜப் பெருமானின் தூக்கிய திருவடியைப் போற்றிப் பணிகின்றனர் இரட்டையர்கள்).

அம்மானை எனும் பாடல் வகை தமிழர்க்குச் சிறப்பு பெற்ற ஒன்று.
மூன்று பெண்கள் கூடி நின்று விளையாடுவது அம்மானை எனும் விளையாட்டு. அம்மானைக் காய்களை (சிறிய பந்து போன்றது) கைமாற்றி விளையாடிக்கொண்டே, ஒரு பெண் தெய்வத்தைப் புகழ்ந்து கூற, அடுத்த பெண் ஒரு கேள்வி கேட்க, மூன்றாவது பெண் பதில் சொல்ல வேண்டும். பந்தும் கீழே விழக்கூடாது. செய்யுள் நடையும் மாறக் கூடாது. தகுந்த பதிலும் அமையவேண்டும். கவனம் எனும் வகைப்படி, மூன்று வகைச் செயலையும் ஒரே நேரத்தில் செய்யவேண்டும். மிகக் கடினமான ஆனால் புத்திக் கூர்மை மிகுந்த விளையாட்டு.

மூன்று பெண்கள் அம்மானை விளையாடுவது போல் செய்யுள் ஒன்றை (சிலேடை நயத்துடன் – இருபொருள் தர) அமைக்கின்றனர் இரட்டையர்கள்.

தென்புலியூர் அம்பலவர் தில்லைச் சிதம்பரத்தே
வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுங்காண் அம்மானை !
வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுமேயாம் ஆகில்
அம்பலத்தை விட்டே அகலாதோ அம்மானை ?
ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை ?!

மேலோட்டமாகப் பார்த்தால் :
முதல் பெண் : தென்புலியூர் எனும் சிதம்பரத்தில் புலி ஒன்று காக்கின்றது.
2வது பெண் : அது எப்போது விலகும் ?
3வது பெண் : (தனது இரையான-உணவான) ஆடு இருக்கும் போது புலி எப்படி அகலும் ?!

உள்ளார்ந்து பார்த்தால் :
தென்புலியூர் எனும் சிதம்பரத்தில் புலிக்கால் கொண்ட முனிவர் வியாக்ரபாதர் அமைகின்றார். அவர் எப்படி விலகுவார்? ஆட்டத்தில் நாட்டம் கொண்டல்லவா நடனம் ஆடும் நடராஜரின் தாண்டவத்தைக் கண்டு கொண்டிருக்கின்றார். புலிக்கால் கொண்ட முனிவர் எந்நாளும் நடராஜரை விட்டு விலகமாட்டார்.
என்னே நயம் ?!

ஒரு சமயம், மதுரைக்குச் சென்று சொக்கநாதரை வழிபாடு செய்துகொண்டிருந்தனர்.
அப்பொழுது ஒரு நாள் பொற்றாமரைக்குளத்தில், கண் பார்க்க இயலாதவர் படியில் அமர்ந்து, துணி துவைத்துக் கொண்டு இருக்கையில், அவர் கை நழுவி, அந்தத் துணி சென்றுவிட்டது. அதைப் பார்க்க இயலாமல் தண்ணீரில் கைகளால் துணியைத் தேடித் துழாவிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த கால் முடியாதவர்,

'அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ'
என்றார். (அப்பு – தண்ணீர். தண்ணீரில் தினம் தினம் நாம் துணியினை தப்பினால் – தோய்த்தால், நம்மிடமிருந்து அந்தத் துணி தப்பியோட நினைக்காதோ என்கின்றார்).

அதற்கு கண் பார்க்க இயலாதவர், தம்மிடமிருந்து துணி போய்விட்டது என்றுணர்ந்து, அதைப் பெரிதாக எண்ணாமல், பதிலுரைக்கின்றார்.

‘ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ' (அந்தத் துணி கந்தலாகிவிட்டது. கிழிந்து விட்டது. கிழிந்த துணியிலும் ஆயிரம் ஓட்டைகள். துணி போனால் துயர் போனது என்று எடுத்துக்கொள்வோம்).

ஆனாலும் இந்தப் பதிலில் திருப்தி அடைவில்லை முதுசூரியர். மறு கேள்வி கேட்கின்றார்.
'கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?' (கந்தலாகிய துணி என்றாலும் குளிர் தாங்குமாறு உபயோகப்படுத்தலாமே?)

பதில் சொல்கின்றார் இளஞ்சூரியர்,
'எண்ணாதீர்,
இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை!'
(கலிங்கம் – துணி. இந்தத் துணி போனால் என்ன, லிங்க ஸ்வரூபமாக விளங்கும் மதுரையில் உறையும் சொக்கநாதரே துணை) என்று பக்தியுடன் பாடுகின்றார்.
அப்பொழுது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. மதுரைச் சொக்க நாதரின் அருளால், குளத்தின் நடுவே போன துணி புலவரின் கைகளிலே தானாகவே வந்து சேர்ந்தது.

ஒரு சமயம் திருவாமாத்தூர் சென்று சேவித்திருந்தனர். அந்த சமஸ்தானத்து அரசர் இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, கலம்பகம் பாடுவதில் சிறப்புற்றவர்கள் என்று அறிந்து, ‘ஆமாத்தூர் கலம்பகம்’ பாட இரட்டையரைக் கேட்டார்.

முதல் பாடலில் “ஆற்குழையோ.. .. .. மேற்கரை கோயில் கொண்டார் புரஞ்சீறிய வெங்கணைக்கே”.
கண்பார்க்க இயலாதவர், ஆமாத்தூர் வழியாக ஓடும் பம்பையாற்றுக்கு மேற்கே கோயில் அமைந்துள்ளது எனப் பாடிவிடுகின்றார்.

இதைக் கேட்ட அனைவரும் இரட்டையரை ஏளனம் செய்கின்றனர்.

ஏன் என்றால், பம்பையாற்றுக்குக் கிழக்கில் தான் கோயில் அமைந்திருந்தது.

ஆமாத்தூர் இறைவனை வேண்டிக்கொண்டு இல்லம் சேர்கின்றனர்.

அன்றிரவு பெருமழை கொட்டியது. பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பம்பையாற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டு, தடம் மாறியது.

விடிந்து மறுநாள் காலையில் பார்த்த அனைவருக்கும் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. இரட்டையர்கள் பாடியது போல, பெரும் வெள்ளத்தினால் பாதைய மாறிய ஆற்றிற்கு, மேற்கே கோயில் அமையப்பெற்றிருந்தது.
இன்றளவும் ஆற்றின் பழைய படுகையைக் காணமுடிகின்றது.
பக்தனின் பாடலுக்காக, பரமேஸ்வரன் ஆற்றின் பக்கம் மாறினார்.

ஒரு சமயம் காஞ்சிபுரம் வந்தனர்.
காஞ்சி சமஸ்தானத்து பல்லவராயன், காஞ்சிநாதரைப் புகழ்ந்து, ஏகாம்பரர் உலா பாடச் சொன்னான்.
முதல் பாடலிலேயே, விகடச்சக்கர விநாயகர், ஆயிரங்கால் மண்டம் என்றெல்லாம் பாடிவிடுகின்றனர்.
மன்னன் பாடலைக் கேட்டு, கோயிலில் இல்லாதனவற்றைப் பாடுகின்றீர்களே என்று சொல்ல, இரட்டையர்கள் அம்பிகையின் அருளாலே அப்பாடல் அமைந்தது அன்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிவித்தனர்.
சில நாட்கள் கழித்து, மன்னவன் கோபுரம் கட்டுவதற்காக, அங்கிருந்த மண் மேட்டை நீக்கியபோது, அதன் கீழ் விகடச்சக்கர விநாயகரையும், ஆயிரங்கால் மண்டபத்தினையும் கண்டு, இரட்டையரை மனமாரப் புகழ்ந்து, ஏகாம்பரர் உலாவிற்கு – தெய்வீக உலா எனப் பெயரிட்டு பெருமை சேர்த்தான்.

காளமேகமும் இரட்டைப் புலவர்களும் சமகாலத்தவர்கள். இரட்டைப் புலவர்கள் காளமேகத்தைக் காண ஆவலாயிருந்தனர்.
ஒரு சமயம் திருவாரூரில் இருக்கும்போது "நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தான்" என்பதோடு இரட்டையர்கள் நிறுத்திவிட்டார்கள். அதற்கு மேல ஏனோ அவர்களால் எழுத இயலவில்லை. அதை அப்படியே கோயில் சுவரில் எழுதிச் சென்றார்கள்.

பிறகு பல ஊர்களுக்குச் சென்று திரும்பியபோது பாடல் "மண்தின்ற பாணமே - தாணுவே சீரார் மேவும் சிவனே நீர் எப்படியோ நேரார் புரம் எரித்த தேர்" என்று சந்தம் மாறாமல் யாராலோ எழுதப்பட்டு அழகுற முடிக்கப்பட்டிருந்தது.

[பாடலின் அர்த்தம் : சிவபெருமான் முப்புரம் எரிக்க பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களை சக்கரமாகவும், மேருமலையை வில்லாகவும், வாசுகி எனும் பாம்பை வில்லின் நாண் ஆகவும், விஷ்ணுவை அம்பாகவும் கொண்டு சென்றார் என்று சிவபுராணங்கள் பகரும்.
இதை எப்படி சிலேடையாக அமைக்கின்றார்.
நாண் - முப்புரம் எரிக்க எடுத்துச் சென்ற நாண் நஞ்சிருக்கின்றது. நைந்து இருக்கின்றது. மக்கியிருக்கின்றது. வில்லோ கல் போல (கற்சாபம்) கனமாக இருக்கின்றது. கல் வில்லை எப்படி வளைத்து அம்பெய்ய முடியும்? அம்போ மண் தின்ற பாணம். மண்ணால் அரிக்கப்பட்ட அம்பு. சிவபெருமானே, இவையெல்லாம் கொண்டு எப்படித்தான் முப்புரம் எரித்தீர்களோ என்று கேட்பது போல மேலோட்டமான அர்த்தம்.
உள்ளார்ந்து பார்த்தால், நஞ்சு எனும் விஷம் இருக்கும் வாசுகி எனும் பாம்பை நாணாகக் கொண்டும், நற்சாபம் கற்சாபம் - மேரு மலையே வில்லாகவும், மண் தின்ற பாணம் - கண்ணன் சிறு வயதில் மண் தின்றார். அந்த கண்ணணாகிய விஷ்ணுவை அம்பாகவும் கொண்டு முப்புரம் எரித்தார் என்று அர்த்தம் கிடைக்கின்றது. எப்படி அற்புதமாக எழுதியிருக்கின்றார்கள்.]

அதை எழுதியது காளமேகம் தான் என்று அறிந்து, அவரைப் போற்றிப் புகழ்கின்றனர். (கவி காளமேகத்தைப் பற்றி மேலும் விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.)
'விண் தின்ற கீர்த்தி விளை காளமேகமே
மண்தின்ற பாணமென்று வாயினிக்கக் - கண்டொன்று
பாகொடு தேன் சீனியிடும் பாக்கியம் பெற்றோமிலையே
ஆகெடுவோ முக்கியங்கென்னாம்?'

அவரைக் காண அவரின் இருப்பிடத்துக்கு விரைகின்றார்கள்.
அச்சமயம், அங்கிருந்தவர்கள் ‘இப்பொழுது தான் அவர் உயிர் பிரிந்தது. அவர் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்’ என்கின்றார்கள்.
பெரும் அதிர்ச்சி கொண்ட இருவரும் இடுகாட்டிற்கு விரைகின்றார்கள்.
அங்கே, அவரின் உடலைத் தகனம் செய்யப்படுவதைக் காண்கின்றனர்.

பொங்கும் சோகத்தைக் கட்டுப்படுத்த இயலாமல், நெஞ்சம் விம்ம முதுசூரியர்,
ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே
- என கதறியழ, இளஞ்சூரியர் உள்ளம் குமுறி,
பூசுரா விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'
- எனப்பாடி அழுதார்.

இவர்களின் வாழ்வில் நடந்த மேலும் பல சுவைமிக்க சம்பவங்களை தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது. (அபி.சிந்.)

இவர்கள் இயற்றிய நூல்கள் : தில்லைக் கலம்பகம், கச்சியுலா, கச்சிக்கலம்பகம், திரு ஆமாத்தூர்க் கலம்பகம்.
இவர்கள் வாழ்ந்த காலம் கி.பி. பதினான்கு அல்லது பதினைந்தாம் நூற்றாண்டு என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

இவர்கள் பன்னெடுங்காலம் பா(pa)ரில் (உலகத்தில்) வாழ்ந்து, பாத்திறமையால் பரமேசனைப் பாடிப் பரவியிருந்தனர்.

இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் இறையடி சேர்ந்தார்கள் என்றும் ஆன்றோர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர்.

இரட்டைப்புலவர்களின் புகழ் இவ்வுலகம் இருக்கும் வரை ஈடு இணையற்று இருக்கும்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் டிரஸ்டி & பூஜை
- Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com
- Cell : 94434 79572 & 93626 09299
- www.faceboook.com/deekshidhar
பி.கு. : சென்ற வருடத்தில் எழுதப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Tuesday, March 1, 2011

ஆடல்வல்லானின் ஆனந்த நடனங்கள்


ஆடல்வல்லானின் ஆனந்த நடனங்கள்
(சனி பகவான் காண தனி நடனம்)

பிரபஞ்சத்தின் இயக்கத்தினைத் தொடங்கியது ஆதிப் பரம்பொருளாகிய சிவபெருமான் தான் என்று சிவ மஹா புராணங்கள் கூறுகின்றன.
நடனம் என்பது இயக்கத்தைக் குறிக்கக் கூடியது.
தன்னுள் ஒடுங்கியிருந்த அனைத்து உயிர்களையும் தன் ஆடலின் மூலம் உதிர்த்து உய்வித்தார்.
உலகம் உய்விக்க நடனமாடியருளியவர் சிவபெருமான்.
ஆடல் கலைக்கு நாயகனாக விளங்கக் கூடியவர்.

ஆனந்த நடனம் என்பது சிவபெருமான் தன் வலது காலை ஊன்றி நிறுத்தி,
இடது காலை வீசி ஆடியத் திருக்கோலம். தூக்கிய இடது காலே குஞ்சிதபாதம் ஆகும். அந்தக் களிப்பானக் காட்சியைப் பார்ப்பதே ஸஞ்சித பாபங்களை நீக்கி ஆனந்தம் தரும்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் எனும் ஐவகைத் தொழிலையும் செய்யும் ஆனந்தத் தாண்டவம் (பஞ்சக்ருத்ய பரமானந்த தாண்டவம்) மற்றனைத்துத் தாண்டவங்களிலும் மேலானது என மெச்சப்படுகின்றது.
ஆனந்தத் தாண்டவத்தை சிதம்பரத்தின் ஆனந்தமய கோசமாகிய பொன்னம்பலம் எனும் சித்ஸபையில் நடராஜர் என்றும் திருநடம்புரிகின்றார்.

சிவபெருமான் ஆடிய ஆனந்த நடனம் தான் உலக உற்பத்திக்கு ஆதாரமாகத் திகழ்கின்றது. அணுவிற்குள்ளும் (Tao of Physics), அண்டசராசரமெங்கும் (cosmic dance) ஆனந்தக் கூத்தினை புரிவது நடராஜ மூர்த்தி.

ஐந்தொழில் நடனம் என்று போற்றப்படுவதோடு, பஞ்சபூதங்களையும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) தன்னகத்தே கொண்டு ஆனந்த நடனம் ஆடுகின்றார்.
நிலத்தில் தான் தாண்டவம் நிகழ்கின்றது. தலையில் கங்கை (நீர்). இடது கையில் அக்னி (நெருப்பு), வீசி ஆடும் ஆட்டத்தில் இடுப்பில் இருக்கும் துணி – உதர பந்தம், காற்றில் பறக்கின்றது. தலை ஆகாசத்தைத் தொடுகின்றது.

நடராஜ மூர்த்தி :
அனைத்து தெய்வங்களும் தொழுது ஏற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர். வேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள் போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.


ஆடல் நாயகனின் அருளாடல்களை புராணங்கள் பலவகையில் புகழ்கின்றன.
Photobucket

பரதநாட்டியக் கலைக்கான 108 தாண்டவங்கள் எனவும், நவதாண்டவங்கள் எனவும், ஸப்த தாண்டவம் எனவும், பஞ்ச தாண்டவம் எனவும் ஆடல் நாயகனின் அருளாடல்களின் நிலைகளை புராணங்களில் காணமுடிகின்றது.

சிவபெருமானுக்கும் ஐந்து என்ற எண்ணுக்கும் அநேக தொடர்புகள் உள்ளன.

சிவபெருமானுக்குரிய பிரதான மந்திரமாகிய பஞ்சாக்ஷரம் ஐந்து எழுத்து.
நடராஜராஜர் செய்யும் செயல்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்).
பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாக அமைந்த ஸ்தலங்கள் ஐந்து.
பொற்சபை, வெள்ளிசபை, தாமிரசபை, ரத்னசபை & சித்திர சபை என்று ஐந்து மன்றங்களில் ஆடியருளியவர்.
மகேஸ்வரனின் சக்தி ரூபங்கள் ஐந்து (ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி).
சிதம்பர ஸ்தலத்தின் முக்கிய பிரகாரங்கள் ஐந்து.
ஈஸ்வரனின் முகங்கள் ஐந்து.
சித்தாந்தக் கலைகளின் ஐந்திற்கும் நாயகராக விளங்குபவர்.

ஆனந்த நடனக்காட்சியை ஐந்து தருணங்களில் ஆடியுள்ளதாக புராண விளக்கங்களில் அறியமுடிகின்றது.

ஆதியில் சிவபெருமான், உலகிலுள்ள அசையும் பொருள் அசையாப் பொருள், அதிலடங்கிய ஒவ்வொரு அணுவையும் கூட உய்விக்க ஆனந்த நடனம் ஆடினார். அதனால் உலகம் உருவாகி, அவ்வுயிர்கள் அனைத்தும் எல்லையில்லா மகிழ்ச்சிகொண்டு, இயங்க ஆரம்பித்தது. இதுவே ஆதி ஆனந்த தாண்டவம்.
***
பொன்னார் மேனியரான சிவபெருமான், உமை அம்பிகையை, ஊடலில் ஒரு சமயம், கரிய நிறத்தினள் எனபொருள் பொதிய காளி என அழைத்தார். அம்பிகையும் பின்னொரு சமயம் காளியுருவம் கொண்டு, சிவனின் ஆனந்த நடனத்தை மட்டுமல்லாமல், 108 கரணங்களையும் காண ஆசை கொண்டு, சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். போட்டியின் இறுதிக்கட்டத்தில் சிவன், ஊர்த்துவ தாண்டவம் என அழைக்கப்படும் தாண்டவத்தை (தன் காதிலுள்ள குண்டலத்தைக் கீழே விழச் செய்து, அதைத் தன் காலாலேயே, காதில் பொருத்திக் கொள்ளும்படியாக நடனம் அமைத்து) ஆடினார்.
பெண்ணாகிய அம்பிகை, காலைத் தன் தலை வரைத் தூக்கி நடனமாட வெட்கி, தான் தோற்றதை ஒப்புக் கொண்டு, தான் விரும்பிய ஆனந்த நடனத்தை சிவனை ஆடுமாறு வேண்டிக் கொண்டு கண்டுகளித்தாள். இதுவே காளிகானந்த தாண்டவம்.
***
வைகுண்டத்தில் ஒரு சமயம் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருந்த விஷ்ணு, ஆதியான ஆனந்த நடனத்தில் தானும் பங்கு கொண்டதை எண்ணிப் பெரும் பூரிப்பு அடைந்தார். அதை உணர்ந்த ஆதிசேஷன், தாங்கள் பூரிப்புக்குக் காரணம் கேட்க, விஷ்ணுவும் விளக்கிச் சொல்ல, ஆதிசேஷனும் தானும் அந்த நடனத்தை காண துடிக்கும் விருப்பத்தைச் சொல்லி வேண்ட விஷ்ணுவும், தில்லையில் (சிதம்பரம்) ஆனந்தக்கூத்தை நீ காண்பாய் என வரம் அளித்தார்.
பதஞ்சலியும் தில்லை வந்து, வியாக்ரபாதருடன் கடும் தவம் புரிந்து, அதன் பலனாக ஈசன் தை மாத வியாழனுடன் கூடிய பூச நட்சத்திரத்தில் ஆனந்த நடனம் ஆடினார். அச்சமயம் நீ வேண்டும் வரம் கேட்கலாம் எனக் கூற, பதம்சலிக்காமல் தாங்கள் எப்பொழுதும் தில்€லைப் பொன்னம்பலத்திலே ஆடி பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் எனக் கேட்டார். அந்த ஆனந்த நடனக் காட்சியே இப்பொழுதும், எப்பொழுதும் தில்லைப் பொன்னம்பலத்தில் நிகழ்துகொண்டிருக்கின்றது. இதுவே மஹானந்த தாண்டவம்.
***
தாருகாவனம் எனும் இடத்தில், ரிஷிகள் தாங்கள் கற்றுணர்ந்த வேதத்தையே தெய்வமாகக் கொண்டு அகந்தையில் இருந்தனர்.
கர்வ பங்கம் செய்ய ஈசன் பிச்சாடனர் வடிவமும், மகாவிஷ்ணு மோகினி வடிவமும் கொண்டு வனத்தில் எழுந்தருளினர். கோபம் கொண்ட ரிஷிகள், யாகத்திலிருந்து எழுப்பிய கொடும் பாம்பு, வன்புலி, முயலகன் எனும் அரக்கன் முதலானவற்றை ஈசனை நோக்கி ஏவினர்.
ஈசனும் அவற்றை தம் ஆபரணங்களாக்கி, ஆனந்தக் கூத்தாடி, ரிஷிகளின் கர்வ பங்கம் செயந்தார். இதுவே ரிஷி தாண்டவம்.
மெத்தப் படித்தால் மட்டும் போதாது. ஆழ்ந் இறை பக்தியுடனான புத்திதான் சித்தியடையும் என்ற நற்கருத்தை நமக்கு போதிப்பது இத்திருநடனம்.
***
சனிபகவானுக்காகத் தனியே ஒரு நடனம் :

சனிபகவான் சிவனின் தீவிர பக்தன். உலகைப் பன்னிரு பகுதிகளாக, ராசிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிற்கும் அதிபர்களாக நவக்கிரகங்களை நியமித்ததையும், மகரம் மற்றும் கும்பம் ஆகிய இரு ராசிகளுக்கு அதிபராக சனி பகவானைக் கொண்டதையும் ப்ருஹத் ஜாதகம் விளக்கமாகக் கூறும்.

அப்படிப் பிரித்ததில், கயிலையுடனான இமயமலை சனிபகவானுக்குச் சொந்தமானது. ஈசன் தான் தவமிருக்க, கயிலையைப் போன்ற ஓரிடம் தேர்வு செய்ய எண்ணியிருந்தார்.
இதை அறிந்த சனி பகவான், தனக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட, கயிலையில் தாங்கள் வாசம் புரிய வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக்கொண்டார்.

கயிலாயம், சனிபகவானின் இடம் என்பதால் முழுதும் பனி மூடிய நிலையில் எவருமே வசிக்க வசதியில்லாத இடமாகிற்று. அங்கு மாடமாளிகைகளோ அல்லது வேறெந்த வசதியும் இல்லாது போனது. இதனால், மனம் கலங்கிய சனிபகவான் சிவபெருமான் வேறெங்காவது சென்றுவிடுவாரோ என்று மனக்கலக்கமுற்றார்.

இதை அறிந்த சிவபெருமான், `தான் தவமியற்ற எவ்வித வசதிகளும் தேவையில்லை, எனக்காக ஒரு மாளிகையும் வசிப்பிடமும் தேவையில்லை. இங்கு இந்த நிலையில் எந்த ஒரு மாற்றத்தையும் நான் செய்யமாட்டேன், மாளிகையோ அல்லது அரண்மனையோ என்று எதுவும் கட்டமாட்டேன், அப்படி ஏதேனும் கட்டப்பட்டால் அதை நீயே இடித்துவிடலாம், உன் இடம் எப்பொழுதும் இப்படியே இருக்கட்டும், என் தவத்திற்கு கைலாயத்தைவிட மேலான இடம் வேறு எதுவும் இல்லை, வேறு எங்கும் போகமாட்டேன்’ என்று சனிபகவானிடம் உறுதி கூறுகின்றார்.

சனிபகவானுக்கோ மெத்த மகிழ்ச்சி. தமது இடத்தில் தவம் புரிகின்றாரே என்று எண்ணி பெரும் களிப்புற்றார்.

இதன் பிறகு, ஈசனுக்கும், தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பெற்றோர்கள் அளித்த ஸகலவிதமான சீர்வரிசைகளோடும், பெரும் செல்வங்களோடும் கைலாயத்தை அடைந்த பார்வதி தேவி அதிர்ச்சி அடைந்தாள். எங்கும் வெட்டவெளியாக இருக்கின்றது.
ஈஸ்வரன் வெளியில் சென்ற நேரமாகப் பார்த்து, தேவதச்சனை அழைத்து நொடிப்பொழுதில் வசந்த மாளிகையும், அரண்மணையும், அந்தப்புரமும் அமைக்கின்றாள்.
திரும்பவந்து பார்த்த ஈஸ்வரன் அரண்மனை அனைத்தையும் பார்த்து வியந்து, பின்னர் பார்வதிக்குத் தான் சனி பகவானுக்குக் கொடுத்த உறுதிமொழியைக் கூறினார்.
பார்வதி, தான் ஆசையாகக் கட்டிய மாளிகையை இழக்க மனம் இல்லாமல், `சனீஸ்வரனோ தங்களுடைய தீவிர பக்தன். தாங்கள் சொன்னால் இம்மளிகையை இடிக்கமாட்டான், இவ்விஷயத்தை அவனிடம் தெரிவித்து விடுங்கள்’ எனக் கூறினாள்.
சரியென்று கிளம்பிய ஈசனை பார்வதி தேவி தடுத்து, `அப்படி சனீஸ்வரன் இடிக்கத்தான் வேண்டும் என்றால் அங்கிருந்தே உடுக்கையொலி எழுப்புங்கள். நான் அமைத்த மாளிகையை நானே இடித்து விடுகிறேன்’ எனவும் கூறினாள்.
(இந்த சம்பவத்திற்குப் பிறகுதான், ஒரு செயல் முடிக்கக் கிளம்புபவரைத் தடுக்கக் கூடாது என்ற நியதி பிறந்தது.
பிற்சமயத்தில், சுக்ரீவனைக் கொல்ல வாலி கிளம்பியபோது, அவன் மனைவி தாரை தடுத்தாள். வாலி மாண்டான்,
மஹாபாரதத்தில், கர்ணனைத் தங்கள் அணியோடு சேர்க்கச் சொல்லி கிருஷ்ணரை தூது அனுப்பும் குந்தி தேவி, கிருஷ்ணர் கிளம்பும்போது தடுத்தாள். கிருஷ்ணர் சென்ற காரியம் கெட்டது. கர்ணன் செஞ்சோற்றுக் கடனுக்காக துரியோதனன் அணியிலே இருப்பேன் என்றும், பாண்வர்களிடம் அண்டமாட்டேன் என்று கூறியதும் நடந்தது.)

சனிபகவானின் இருப்பிடம் சென்ற ஈஸ்வரன், அவனின் அகமகிழ்ந்த வரவேற்பிலும், பூஜைகளினாலும் மனம் மகிழ்ந்தார்.
அப்போது,
சனி பகவான், சிவபெருமானிடம் “அடியவனின் இடம் தேடி வந்தீர்கள். அது என் பாக்கியம். ஆனாலும் ஒரு வேண்டுதல் உள்ளது.
ஒரு சமயம் அமிர்தம் கடைய, பாற்கடலில், மேருமலையையே மத்தாக ஆக்கி, வாசுகி எனும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் புறமும் கடைந்தார்கள். அச்சமயம், தேவர்கள் என்னையும் உடனாகக் கொண்டு கயிற்றை இழுத்தனர். இழுவையின் அளவு அதிகமாக அதிகமாக வாசுகி எனும் பாம்பு விஷத்தினைக் கக்கியது.
அப்பொழுது நீலநிறம் கொண்ட ஆலகால விஷம் தோன்ற, அது அனைத்து ஜீவராசிகளையும் துன்புறுத்த, அவ்விஷத்தை தாங்கள் அருந்தப் போக, அப்பொழுது பார்வதி தேவி தங்கள் கண்டத்தை விட்டுப் போகாமல் செய்ய, உங்கள் கழுத்தைப் பிடிக்க, அவ்விஷம் உங்கள் தொண்டையிலேயே தங்கியது. ஆகவே நீலகண்டர் ஆனீர்கள்.
இவ்விஷம் தோன்ற தேவர்கள் அனைவரும் சனியாகிய உன் பார்வையே காரணம் எனக்குற்றம் கூறினர்.
தாங்கள் ஆனந்த நடனம் ஆடும் சமயம், என்னைத் தேவர்கள் அனைவரும், நீ வந்து பார்த்தால், ஆனந்த நடனக் காட்சிக் கிடைக்காமல் போனாலும் போகலாம் என்று ஒரு குகையில் அடைத்தனர். ஆகையால் தங்கள் திருநடனக் காட்சியைப் பார்க்கமுடியாத பாவியாகிவிட்டேன்.
நீங்களே அடியவனின் இருப்பிடம் வந்திருக்கின்றீர்கள். இங்கு நானொருவன் மட்டுமே, உங்கள் ஆனந்த நடனக் காட்சியைக் காண அருளுங்கள்” என்று வேண்டினான்.

வேண்டுவோருக்கு வேண்டியதை உடனடியாக அருளுபவர் அல்லவா மகேசன்.
அப்படியே ஆகட்டும் என்று நடனமாட தாளத்திற்காக உடுக்கையின் ஒலியையேக் கொண்டார். அந்த உடுக்கை ஒலியின் லயத்திற்கேற்ப, ஆனந்த நடனக் காட்சியருளினார்.
இந்த ஆனந்த நடனக் காட்சியை பக்தி சிரத்தை மேலோங்க, கண்களில் கண்ணீர் மல்க, கைகள் இரண்டையும் தலை மேல் குவித்து சனி பகவான் காண்கின்றார். அவரின் வேண்டுதல் பூர்த்தியானது.

சனி பகவானின் இருப்பிடத்திலிருந்து, உடுக்கையின் ஒலிகேட்ட பார்வதி, அங்கு நடப்பதை அறியாமல், சனி பகவான், தான் மாளிகைக் கட்டியதை ஒப்புக்கொள்ளவில்லை போலிருக்கின்றது. தான் கட்டிய மாளிகையை யாரோ வந்து இடிப்பதைக் காண மனம் பொறுக்காத தேவி, நொடியில் தாம் கட்டச் செய்த அனைத்தையும் இடித்தாள்.

இவை அனைத்தையும் சிவபெருமான் புன்சிரிப்போடு கண்டு கொண்டிருந்தார்.
ஒரே நேரத்தில், தான் சனிபகவானுக்கு அளித்த வாக்குறுதியையும் காப்பாற்றியாகிவிட்டது,
பக்தனின் வேண்டுதலையும் நிறைவேற்றியாகிவிட்டது,
கணவனுக்குத் தெரியாமல் செய்த பார்வதி தேவியின் செயலுக்கும் பாடம் புகட்டியாகிவிட்டது.

இப்புராணம், உறுதிமொழியின், வாக்குறுதியின் மேன்மையையும், கடைபிடிப்பதையும் நமக்கு உணர்த்துகின்றது.

சனிபகவான் ஆனந்த நடனத்தைக் கண்டு பேறு பெற்றதனால், ஆனந்த நடனக்காட்சியைக் காணும் அனைவருக்கும் சனி பகவான் நல்லதே செய்வார்.

சனி பகவானால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி வளமான வாழ்வும், ஆயுள் காரகன் ஆகிய சனிபகவானால் நீடித்த ஆயுளும்,
ஆனந்த நடனத்தைத் தரிசிப்பவர்களுக்குக் கிடைக்கும்.

ஆனந்த நடனம் காண்போம் ! ஆனந்தம் அடைவோம் !!

பி.கு. 1 : பாகவதச் செம்மல் நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் அவர்கள் காளிங்க நடனம் & பிரதோஷ நடனம் இரண்டையும் ஒப்பிட்டுச் சொல்லும் போது, சனி பகவானுக்காக தனியாக நடனம் ஆடியதைக் கூறியிருப்பதாக அடியேனின் தந்தையார் அமரர் நி.தண்டபாணி ஸ்வாமி தீக்ஷிதர் அவர்கள் அடிக்கடிச் சொல்லக் கேட்டிருக்கின்றேன். சில வருடங்களுக்கு முன் ஒரு மாத இதழில், இக்கட்டுரை சம்பந்தமாக எழுதியபோது, அதற்கு, வாசகி ஒருவர் இந்தப் புராணத்தை சத்யசாய்பாபா அருளுரையில் தெரிவித்து இருப்பதாகக் கடிதம் எழுதினார்.

பி.கு. 2 : வலைப்பூவில் (blogspot) எழுத ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தியானதற்கு நேரிலும், கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் அனுப்பியும் வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்றென்றும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
கடந்த ஆண்டு எழுதிய அனைத்துப் பதிவுகளையும் புத்தகமாக்கியதைக் கண்டு வாழ்த்துக் கூறியவர்களுக்கும் என்றென்றும் நன்றிகள். (Special Thanks to Srikumaran, Australia).

பி.கு. 3 : அடுத்த பதிவு,
தமிழ்த் தாயின் அழகுக்கு அழகு சேர்த்த இரு புலவர்கள்.
ஒருவர் நடக்க இயலாதவர். மற்றொருவர் கண் பார்க்க இயலாதவர். ஆயினும் இயலாமையை இல்லாதாக்கி தமிழ்த் தொண்டு செய்த பாங்கு எத்தனை! எத்தனை !!
இவர்களின் தமிழ்ப்பாக்கள் தமிழன்னைக்கு ஆபரணமாக தகதகவென்று மின்னியது; தமிழமுதம் வெள்ளமாக சலசலவென்று பிரவாகித்தது.
(தகதக, சலசல – என்ன வகை இது?)

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- செல் : 94434 79572 & 93626 09299
- Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com
www.facebook.com/deekshidhar