Thursday, April 22, 2010

கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை)


கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை)
இந்தப் பதிவைப் படிக்கும் முன்பு சற்றே ஒரு முறை இதற்கு முந்தைய இரு பதிவுகளையும் படிப்பது உத்தமம்.
கால கணிதம் - 1 (எதிர்காலத்தை எழுதினோம்)
இந்தப் பதிவில் எதிர்வரும் நாட்களை மிகத் துல்லியமாக கணித்திட உதவும் ஒரு சமன்பாட்டினைக் கண்டோம். ("எதிர்காலத்தை எழுதினோம்" - future & past கலந்த கலவையை கவனியுங்கள்)
கடந்த காலத்துக்குச் செல்ல கணித வகையின் கூற்றினைப் பார்த்தோம். தற்போதைக்குச் சாத்தியமில்லை எனினும் கணிதக் கூறு உண்மைதான். ("கடந்த காலத்துக்குப் போவோமா" - past & future tense கொண்ட முரண்பட்ட வாக்கியத்தைக் கவனியுங்கள்)
கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை)
கடந்த காலம் கடந்தே போனது. எதிர்காலம் எப்படியோ? இரண்டும் கடவுள் ஒருவர் மட்டுமே அறிய முடிந்தவை. ஆயினும், மானுட ஜன்மத்தில் நிகழ்காலத்தில் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்தக் கணத்தை உணர முடிகின்றது. நிகழ்காலமே நிதர்சனம்.
நிகழ்காலத்தில், நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியிலும், நாம் செய்கின்ற அனைத்து செயல்களிலும் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதமாகவே செய்ய உறுதி மேற்கொள்வோம்.
ஆன்மீகம் காட்டும் பாதை அறப்பாதை. அந்த ஆன்மீக வழியில் நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் அன்பு செலுத்தி நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம்.
ஆன்மீக பிரார்த்தனைகள், க்ரியைகள் எனும் செயல்கள், பூஜைகள் மற்றும் பிற காரியங்கள் அனைத்திற்கும் ஸங்கல்பம் எனும் ஸ்லோகம் முதலாவதாகச் சொல்லியே செய்யப்படுகின்றது.
அந்த ஸ்லோகம் நிகழ்கால நிகழ்வை எடுத்துக் காட்டுகின்றது.
உதாரணமாக, ஒருவர் கணபதி ஹோமம் செய்ய இருக்கின்றார் என்றால், அந்த செயலின் முதல் பூஜையாக ஸங்கல்பம் என்பது அமையும். ஸங்கல்பம் என்பது இறைவனிடம் இந்த கணபதி ஹோமம் வாயிலாக பலனை அடையக் கேட்கப்படும் மந்திரமாக அமைகின்றது.
அந்த மந்திரம், விக்னங்கள் எனும் வினைகளை நீக்கும் விநாயகரை வழிபடும் ஸ்லோகமாகிய "ஓம் சுக்லாம் பரதம் ..... சாந்தயே" என்ற மந்திரத்தோடு ஆரம்பித்து,
"சுபாப்யாம் சுபேசோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண:த்வீதிய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்த்ரே அஷ்டாசாவிகும்சதி தமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்புத்வீபே பாரத வருஷே பரத கண்டே மேரோ: தக்ஷ’ணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே பிரபவாதீனாம் சஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே ..... நாம ஸம்வத்ஸரே (உத்தர/தக்ஷ¢ண) அயனே (வஸந்த/ க்ரீஷ்ம/ வருஷ/ சரத்/ ஹேமந்த/ சிசிர்) ருதௌ ...... மாஸே (சுக்ல/ கிருஷ்ண) ப§க்ஷ ......சுபதிதௌ வாஸர: (பானு/ இந்து/பௌம/ ஸெளம்ய / குரு/ ப்ருகு/ ஸ்திர) வாஸர யுக்தாயாம் ....... நக்ஷத்ர ஸம்யுக்தாயாம் சுப நக்ஷத்ர சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷெண வசிஷ்டாயாம் அஸ்யாம்"
என்று முடிந்து, யார் இந்த கணபதி ஹோமத்தைச் செய்கின்றார்களோ அவர்களின் பெயர் நக்ஷத்திரங்கள் சொல்லப்பட்டு, அந்த ஹோமத்தினால் கிடைக்கும் பலன்களை வேண்டுவதாக முடியும்.

மேலே சொல்லப்பட்ட "சுபே சோபனே ...... அஸ்யாம்" வரையில் நிகழ்கால கணிதத்தைச் சொல்ல விழையும் ஸ்லோகம் ஆகும்.

பரம்பொருளின் காலம் = 2 கல்பம்
60 தத்பராக்கள் = 1 பரா
60 பராக்கள் = 1 லிப்தம்
60 லிப்தம் = 1 விநாழிகை
60 விநாழிகை = 1 நாழிகை
60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள்
30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம்
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

த்விதீய பரார்த்தே - இரண்டாவது பரார்த்தம் - பிரம்மாவிலிருந்து தொடங்குகிறது கால கணக்கு. பிரம்மாவானவர் சிருஷ்டியைத் தொடங்கி பிறகு முடிப்பது வரை உள்ள காலக் கணக்கு மஹா கல்பம்.
நாம் வாழும் காலத்தைத் தொடங்கிய பிரம்மாவிற்கு முன் பல பிரம்மாக்கள் தங்கள் படைத்தல் - முடித்தல் காரியத்தை செய்து முடித்திருக்கிறார்கள்.
மஹா கல்ப காலத்தில் ஒரு பிரம்ம காலம் என்பது நூறு பிரம்ம வருடங்கள். அதில் பாதி (அர்த்தம்) ஐம்பது பிரம்ம வருடங்கள். (பிரம்ம வருடங்களைக் கணக்கிட முந்தைய பதிவைக் காணவும்.) ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மனுட வருடங்கள் (கணக்கதிகாரம்). இதில் பாதி முடிந்து விட்டது.
இப்பொழுது நடந்துகொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் - இரண்டாவது பரார்த்தம்.

ஸ்வேதவராஹ கல்பே - இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.

வைவஸ்வத மன்வந்தரே - நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது.
14 மன்வந்திரங்களாவன : 1.ஸ்வாயம்புவ மன்வந்திரம், 2.ஸ்வரோசிஷ மன்வந்திரம், 3.உத்தம மன்வந்திரம், 4.தாமச மன்வந்திரம், 5.ரைவத மன்வந்திரம், 6.சாக்ஷ¤ஷ மன்வந்திரம், 7.வைவஸ்வத மன்வந்திரம், 8.சாவர்ணிக மன்வந்திரம், 9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம், 10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம், 11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம், 12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம், 13.தேவ சாவர்ணிக மன்வந்திரம், 14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.
ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம்.

அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே - 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம். வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.

இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள். இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்.

ஜம்பூத்வீபே - பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன. (1. ஜம்பூ த்வீபம் (நாம் வசிப்பது - நீரால் சூழப்பட்டுள்ளது), 2. பிலக்ஷ த்வீபம், 3. சான்மலி த்வீபம், 4. குச த்வீபம், 5. க்ரௌஞ்ச த்வீபம், 6. சாக த்வீபம், 7. புஷ்கர த்வீபம்)

பாரத வர்ஷே - த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம். (1. பாரத வர்ஷம், 2.ஹேமகூட வர்ஷம், 3. நைஷத வர்ஷத்ம், 4.இளாவ்ருத வர்ஷம், 5. ரம்ய வர்ஷம், 6. ச்வேத வர்ஷம், 7. குரு வர்ஷம், 8. பத்ராச்வ வர்ஷம், 9.கந்தமாதன வர்ஷம்)

பரத கண்டே - பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. 1.பரதகண்டம், 2. கிம்புருகண்டம், 3. அரிவருடகண்டம், 4. இளாவிரதகண்டம், 5. இரமியகண்டம், 6. இரணியகண்டம், 7. குருகண்டம், 8. கேதுமாலகண்டம், 9.பத்திராசுவகண்டம இதில் நாம் பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.

மேரோர் தக்ஷ¢ணே பார்ச்வே - பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்.

மேற்கண்ட பிரம்ம காலம் தொடங்கி, பரத கண்டத்தின் தெற்கு புறத்திலிருக்கும், ஹோமத்தை செய்யும் கர்த்தாவானவர் 60 வருடங்கள் கொண்ட சுழற்சியில், தற்காலம் விக்ருதி எனும் பெயர் கொண்ட வருடத்தின் பனிரண்டு மாதங்கள் கொண்ட ஸம்வத்ஸரத்தில், உத்தராயணம் அல்லது தக்ஷ¢ணாயனம் எனும் இரு அயன காலத்தில் உத்தராயண காலத்தில், ஆறு ருதுக்கள் கொண்டவற்றில் வஸந்த ருதுவில், சித்திரை மாதத்தில், வளர்பிறை சதுர்த்தி தினத்தில், ஞாயிறு கிழமை, ரோகிணி நக்ஷத்ரம் (18.04.2010) இணைந்த சுபமுஹ¥ர்த்த சுப யோக தினத்தில் செய்யப்படும் கணபதி ஹோமம், கர்த்தாவின் பெயர் நக்ஷத்திரம் சொல்லப்பட்டு, அவர்களின் நல்வாழ்க்கைக்காக செய்யப்படுகின்றது என்பதே "சுபே சோபனே .... கரிஷ்யே" என்பது வரை சொல்லப்படும் ஸ்லோகத்தின் அர்த்தமாகின்றது.

எண்ணற்ற பிரம்மாக்களின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின் படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் (கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்) வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மேலே சொல்லப்பட்டுள்ள கணித வகைகள் தமிழின் தொல்லிய நூலாகிய காரி என்பவர் எழுதிய கணக்கதிகாரத்தை மையமாகவும் கொண்டு சொல்லப்பட்டுள்ளது.
கணக்கதிகாரம் மிக அற்புதமான நூல். கால கணிதம் மட்டுமன்றி, எடையறிதல், நீளமறிதல் போன்ற நுண்ணிய கணிதங்களைக் கொண்டது.

அதில் கிடைக்கும் ஒரு செய்யுளில் ஒரு பலாப் பழத்தைப் பார்த்தே, அதைப் பிளக்காமலே அதில் உள்ள பலாச் சுளைகளை அறிய ஒரு கணித சமன்பாடு இருக்கின்றது.
ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும். என்னே ஒரு கணிதம்!

ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுப்பட்ட பாகத்தில் உள்ள கோடுகளைக் கொண்டு மரத்தின் ஆயுளைக் கூறிவிட முடியும்.
இந்த கணித வகையை அறிந்து கொண்டதால் என்ன பலன்? (கலிதோஷம் நீங்கிய நாயகனின் காவியம்)
கால கணித வகைப் படி அமைந்த ஆலயத்தை தரிசனம் செய்வதால் கிடைக்கும் பயன் (மோக்ஷம் தரும் ஆலயம்)
மேற்கண்ட இரண்டையும் அடுத்த பதிவுகளில் காண்போம்.
- நி. த. நடராஜ தீக்ஷ¢தர்
94434 79572.
எனது முந்தைய பதிவுகள் : தலைப்பின் மீது க்ளிக் செய்தால் விபரம் விரியும்.
தைப் பூச நடனம், வியதீபாத தரிசனம், மார்கழி மஹோத்ஸவம், காசி யாத்திரை, ஆழ்வார்கள் அருளிய அமுதம், தியாகராஜர் ஆராதனை, சாளக்ராம வழிபாடு, கூடாரைவல்லி, நால்வர் காட்டிய நல்வழி, சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர், கவிக்கோ(ர்) காளமேகம், அதிசய அற்புத பாடல்கள், பாம்பு இயற்றிய பாடல், நடராஜ பத்து, திருப்பல்லாண்டு, மஹா சிவராத்திரி, வசந்த நவராத்திரி, நவாவரண பூஜை, கதம்பம், கால கணிதம் - 1, கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?)

3 comments:

Kailashi said...

அருமையான பல தகவல்களை அறிந்து கொண்டேன் நன்றி. தீக்ஷிதத் ஐயா. இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.

கீதா சாம்பசிவம் said...

இன்னிக்குத் தான் உங்க பதிவுகளை எல்லாம் படிக்க நேரம் கிடைச்சது. நல்ல பதிவு, அந்தப் பலாப்பழ விஷயம் ஏற்கெனவே பார்வமணி என்பவர் எங்க இல்லம் குழுமத்திலே போட்டிருக்கார். அவரும் இப்படி கணிதப்புதிர்களைக் கொடுத்து அவற்றை விளக்கிக் காட்டுவார். காயத்ரி மந்திரத்தைத் தலைகீழாய்ச் சொன்னால் பிரம்மாஸ்திர மந்திரம் என்றும் சொல்லி இருக்கிறார்.

கீதா சாம்பசிவம் said...

தொடர