Sunday, February 10, 2019

சிதம்பரம் வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவி ஆலய கும்பாபிஷேகம், 11.02.2019, காலை 09.00 மணி - 10.00 மணி


சிதம்பரத்தில் முப்பெரும் விழா 
(11.02.2019, காலை 09.00 10.00 மணி)1. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய வளாகத்தினுள் அமைந்தருளும் ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பிகை ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம். (மேற்கொண்டு விபரங்களுக்கு கீழ்க்கண்ட லிங்க் செல்லுங்கள் : http://natarajadeekshidhar.blogspot.com/2019/01/28-11.html  )

2. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய வளாகத்தினுள், மேற்கு கோபுரத்தில் அமைந்தருளும் ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத செல்வ முத்துக் குமார ஸ்வாமி ஆலய அஷ்டபந்தன  மஹா கும்பாபிஷேகம்  (மேற்கொண்டு விபரங்களுக்கு கீழ்க்கண்ட லிங்க் செல்லுங்கள் : http://natarajadeekshidhar.blogspot.com/2019/02/11012019-09-10.html )

3. சிதம்பரம் நகரம், மேற்கு வீதி & வடக்கு வீதி சேருமிடதிற்கு அருகில் இருக்கும் வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம். (11.02.2019, காலை 09.00 மணி 10.00 மணி)
சிதம்பரம் ஸ்தலம் : ஸ்ரீ ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தி நிதமும் நாட்டியக் காட்சியை நல்கி, அருளை வாரிவழங்கும் திருத்தலம். கோயிலால் தான் ஊருக்கே பெருமை என்பது சாலப் பொருந்தும். நடராஜர் ஆலய பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். பெருமை மிகுந்தது. அருமை வாய்ந்தது.
நடராஜர் கோயிலைச் சுற்றி பல்வேறு சிறப்பான ஆலயங்கள் அமைந்துள்ளன.
அவற்றுள், மிகச் சிறப்பு வாய்ந்ததாகவும், வேறு எங்கிலும் காணப் பெறாத வகையிலும் மிக மிக அழகானத் திருக்கோலம் கொண்டு, தனியொரு ஆலயம் கொண்டு, பரிவார தெய்வங்களுடன் அருள்பாலிக்கும் வேதமாதா காயத்ரி தேவி  ஆலயம், மேற்கு வீதியும் வடக்கு வீதியும் சேரும் இடமாகிய கஞ்சித் தொட்டிக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.
இக்கோயில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது, தில்லை வாழந்தணர்கள் எனும் தீக்ஷிதப் பெருமக்களால் அனுதினமும் பூஜைகள் ஏற்பது என பல்வேறு சிறப்புகள் கொண்டது.
காயத்ரி தேவி :
வேத மந்திரங்களுக்கெல்லாம் மூச்சுக் காற்றாக விளங்குவது காயத்ரி மந்திரம். அந்த காயத்ரி மந்திரத்திற்கான வடிவாகவும், படைப்புக் கடவுளாம் பிரம்ம தேவனின் சக்தியாகவும், லோக நாயகனான சூர்ய பகவானுக்கு ஒளியை அளிப்பவளாகவும், விஸ்வாமித்ர மகரிஷிக்கு பெருமந்திரத்தை அளித்தவளாகவும், காயத்ரி தேவியைப் புராணங்கள் போற்றுகின்றன.
அதிலும், இவ்வாலயத்தில் அம்பிகை காயத்ரி தேவி ஐந்து முகங்கள் கொண்ட அற்புதக் காட்சி தந்து அருளுகிறாள்.
இக்கோயில், சிறிய அழகிய ராஜ கோபுரம் கடந்து உள்ளே செல்ல, கோஷ்டத்தில் சரஸ்வதி, அமிர்தகலசம் ஏந்திய மகாலட்சுமி, அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர் அருள்கிறார்கள். கருவறையில் அன்னை காயத்ரி தேவி மேற்கு நோக்கி அருள்கிறாள். ஐந்து திருமுகங்கள், கருணை பொழியும் கண்களுடன் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். அன்னையின் பாதமருகே ஸ்ரீசக்ரம் உள்ளது. காலையில் காயத்ரியாகவும் மதியம் சாவித்திரியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் அருளும் அம்பிகை.
சிறப்பு மிக்க காயத்ரி தேவி சரஸ்வதி தேவி, பார்வதி தேவி, மகேஸ்வரி, லக்ஷ்மி, மனோன்மணி வடிவங்கள் உள்ளடக்கிய ஐந்து முகங்கள் கொண்ட அம்பிகை.
பவழ நிறம், பொன்னிறம், நீல நிறம், வெண்ணிறம், முத்தொளி வீசும் நிறம் என ஐந்து முகங்களும் ஐந்து வித நிறங்கள் கொண்டதாகும்.
அம்பிகையை வேண்டிக்கொண்டால், அறிவுக் கூர்மை பெருகும். அச்ச உணர்வு அகலும், தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.  உள்ளுக்குள் ஆன்ம பலம் பெருகும். அறிவார்ந்த தோற்றம் கிடைக்கப் பெறும்.
இவ்வாலய பூஜகரான சிவ. ராஜ சேகர தீக்‌ஷிதர் (த.பெ. - சி. சிவராஜ தீக்‌ஷிதர்) செல் : 9444849501, 9443326272 அவர்களின் பெருமுயற்சியாலும், அன்பர்களின் பேராதரவோடும், பக்தர்களின் பெரும் பங்களிப்பினாலும், கருவறை, அர்த்த மண்டபம், மஹா மண்டபம், ராஜ கோபுரம், சுற்று பிரகாரம் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, கருங்கல் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, தற்போது இவ்வாலயத்திற்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மேற்கண்ட தேதியில் நடத்தப்படவுள்ளது.
ஆன்மீக அன்பர்கள் அனைவரும் இந்த மாபெரும் வைபவத்தில் பங்கு கொண்டு வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவியின் பரிபூரணமான அருளைப் பெற வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

-     நி.த. நடராஜ தீக்‌ஷிதர்
-     சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்
-     செல் : 9443479572, 9362609299
-     www.facebook.com/deekshidhar


Monday, February 4, 2019

சிதம்பரம் குமரக்கோயில் கும்பாபிஷேகம் - 11.01.2019, காலை 09-10 மணிசிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய வளாகத்தினுள்,
மேற்கு கோபுரத்தில் அமைந்தருளும், குமரக்கோட்டம்
ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸ்ரீ செல்வமுத்துக்குமார ஸ்வாமி
ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
நாள் : ஸ்வஸ்தி ஸ்ரீ விளம்பி வருஷம், தை மாதம் 28ம் தேதி,                          திங்கட் கிழமை, 11.02.2019
நேரம் : காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள், மீன லக்னம்
(மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

முருகன். அழகன். தமிழ்க் கடவுள். குமரன். ஸ்கந்தன். ஆறுமுகன்.
முருகனையே முழு முதற்கடவுளாக வணங்க செய்யும் வகை கெளமாரம் ஆகும். (http://natarajadeekshidhar.blogspot.com)
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை அக்னி பகவான் கங்கையில் விட, கங்கை சரவணப்பொய்கையில் விட, அந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக, அவர்களுக்கு கிருத்திகை முதலான நக்ஷத்ர தேவதைகள் பாலூட்ட, பார்வதி தேவியானவள் அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஸ்கந்தர் ஆக்கினாள். (ஸ்கந்தம் என்பதற்கு சேர்த்தல் என்று பொருள்). (http://natarajadeekshidhar.blogspot.com)
முருகப்பெருமான் ஆறுமுகமும், பன்னிரு தோள்களும் கொண்டு, படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாவிடம் பிரணவத்திற்குப் பொருள் கேட்க, அவர் அதை அறியாததால், பிரம்மாவை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார்.
சிவபெருமான், முருகனிடம் பிரணவப் பொருள் கேட்டு உணர்ந்தார்.  பிரணவத்தை தந்தைக்கே உபதேசம் செய்த ஸ்வாமிநாதன். முருகப்பெருமான், அறிவிற்கும் - வயதிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உலகிற்கு உணர்த்தியவர்.
வேத மந்திரங்களில் ஓம் எனத் தொடங்கி ஓம் என முடியுமாறு இரண்டு தெய்வங்களுக்கு மட்டுமே அமைந்துள்ளன.
ஒன்று, 'ஓம் ஈசான .... ஸதாசிவோம்' என்று அமைந்த, ஓங்காரத்தின் விளக்கத்தை முருகப் பெருமானிடமிருந்து கேட்டறிந்த சிவபெருமானுக்கு உரியது. (http://natarajadeekshidhar.blogspot.com)
மற்றொன்று, 'ஓம் குமாரஸ்சித் பிதரம் .... ஸுப்ரஹ்மண்யோம்' என்று அமைந்த பிரணவத்தை உபதேசித்த முருகப் பெருமானுக்கு உரியது.
குமரப் பெருமான், தேவர்களை வருத்திய சூரன் எனும் அரக்கனை தன் படைகள் கொண்டு வதம் செய்தவர். அதுவே சூரஸம்ஹாரம். ஐப்பசி மாத வளர்பிறை ஆறாவது தினமாகிய ஸ்கந்த சஷ்டி அன்று முருகப் பெருமானுக்கு மிக உகந்த நன்னாள். அசுரரை வதம் செய்த, எதிர்ப்புகளை நீக்கிய, மகிழ்வை அளித்த பொன்னாள். முருகனை வழிபட்டால் முன்வினைகள் நீங்கி முழுமையான வாழ்வு கிட்டும்.
சிதம்பரம்.
கோயில் என்றாலே பொருள்படுவது. ஆனந்த நடராஜராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது. சிதம்பர ரகசியம் விளங்குவது. அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்றும் தலமாக விளங்குவது.
அனைத்து தெய்வங்களும் இந்த ஆலயத்தில் குடிகொண்டதாக சிதம்பர புராணங்கள் பகர்கின்றன. காசி அன்னபூரணி முதற்கொண்டு, சபரிமலை சாஸ்தா, திருக்கடையூர் காலஸம்ஹார மூர்த்தி  என பல தெய்வங்களின் சிலை ரூபங்கள் இங்கே அமையப் பெற்றிருக்கின்றன.
ஒரு தினத்தின் ஆறாவது காலமாகிய, இரவு 10 மணிக்கு நடைபெறும் அர்த்த ஜாம காலப் பொழுதில், அனைத்து தெய்வங்களின் தெய்வக்கலைகளும், சிதம்பர அம்பலவாணரிடம் சேர்ந்து, பிறகு காலை அங்கிருந்து செல்கின்றன என்று சிதம்பர புராணத்தினைப் புகழும் குஞ்சிதாங்கிரிஸ்தவம் எனும் நூலின் 175வது ஸ்லோகம் விவரிக்கின்றது. (ஆஸேதோ ... பஜேஹம்). (http://natarajadeekshidhar.blogspot.com)
ஆகவே, பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தெய்வ வடிவங்களை சிதம்பர ஆலயத்தில் காணப் பெறலாம்.
அவ்வகையில், சூர ஸம்ஹாரத்திற்கு சிறப்பு பெற்ற திருச்செந்தூர் முருகப் பெருமானின் திருவுருவைப் போற்றிப் பணிந்திடும்  வகையில் சிதம்பரத்தின் மேற்கு கோபுரத்தில் வள்ளி தெய்வானையோடு குமரப் பெருமான், புடைப்பு சிற்பமாக, கல்காரத்தில் இடம்பெற்றவராக குமர கோஷ்டம் கொண்டருளுகிறார்.
இந்தக் கோயிலுக்கு,  தற்போது முகப்பு மண்டபம் அமைத்து, பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், தில்லை வாழந்தணர்கள் என சிறப்பிக்கப்படும்  தீக்‌ஷிதர்களால் நடத்தப்பட இருக்கிறது. (http://natarajadeekshidhar.blogspot.com)
குமரக் கோட்டம் :
கோட்டம் எனும் சொல்லுக்கு சிறு கோயில் என்ற பொருளும் உண்டு. அவ்வகையில், சிதம்பரம் நடராஜர் எனும் பேராலயத்தினுள் அமைந்திருக்கும் சிறு கோயிலாக, மேற்கு கோபுர கிழக்கு முகப்பில்,  முருகப் பெருமான்  அருளும் குமரக்கோட்டம் அமைந்துள்ளது.
மேற்கு கோபுரம் பற்பல சிறப்புகளைப் பெற்றது. திருமுறைகள் போற்றும் நால்வர் பெருமக்களில் அப்பர் சுவாமிகள் ஆகிய திருநாவுக்கரசர் இந்தக் கோபுர வாயில் வழியாக வந்தார் என வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோயில் (ஸ்தல) விநாயகர் என போற்றப்படும் கற்பக விநாயகர் கோபுரத்தில், மேற்கு திசை பார்த்து அருளுகிறார். இந்த விநாயகர் துர்வாச மகரிஷிக்காக நடனமாடிக் காட்டியவர்.
மேற்கு கோபுரம் குமரர் கோபுரம் என்றே போற்றலாம். இக்கோபுரத்தின் பல நிலைகளில் முருகப் பெருமான் நிறைந்து நின்று காட்சி அருள்கிறார். கிழக்கு நோக்கிய கல்கார கோபுரக் கட்டமைப்பில் இரு புறமும் குமரன் காட்சி தருகிறார். (http://natarajadeekshidhar.blogspot.com)
மேற்கு கோபுரத்தின், கிழக்கு நோக்கிய மண்டலத்தில், தென்புறம் வீர ஷண்முகராக ஆறுமுகம் கொண்டு வில்லேந்தி மூன்று அரக்கர்களை அழிப்பது போல் அற்புத சிலை அமைந்துள்ளது.
வடபுறம் வள்ளி தேவானை ஸமேதராக அருள் தரும் காட்சி கொடுப்பது தான் குமரக்கோட்டம் எனும் முருகப் பெருமானுக்குரிய தனியாலயம்.
வரலாற்றின்படி, மேற்கு கோபுரம் முதலாம் ஜடாவர்ம சுந்தரபாண்டியனால் கி.பி அல்லது பொ.யு. 1251ல் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறும் என்பதும், விக்ரம சோழன் தொடங்கிய இத்திருப்பணியை இரண்டாம் குலோத்துங்கன் நிறைவு செய்தான் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. (வரலாற்றில் சிதம்பரம் நடராஜர் கோயில் பக்கம் 75). ஆய்வுகளை ஒப்புநோங்குங்கால், இக்கோபுரம் ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்தது எனக் கருதலாம். (http://natarajadeekshidhar.blogspot.com)
குமரக் கோட்டம் பற்றிய சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
மேற்கு கோபுரத்தில் புடைப்புச் சிற்பமாக அமைந்த முருகப் பெருமானைக் கருவறையாகக் கொண்டு, பிற்காலத்தில் ஸ்கந்தாலயமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
மிக மிக அழகிய துவார பாலகர்கள் காவல் புரிகின்றார்கள்.
மிக சிறப்பம்சமாக முருகப் பெருமானுக்கு எதிரில் இரண்டு மயில்கள் அமைகின்றன. ஒன்று தேவேந்திரன் மயில் வாகனமாக வந்ததையும், மற்றொன்று சூரனை வென்று மயிலாகக் கொண்டதையும் கூறும் கந்த புராணக் கருத்துக்களுக்குச் சான்றாக அமைகின்றன.
சிங்கத்தினை வாகனமாகக் கொண்ட ஹேரம்ப கணபதி தொடங்கும் செயல்கள் அனைத்தையும் வெற்றியாக்க அருளுகின்றார்.
ஓம் எனும் பிரணவத்திற்கானப் பொருளை பிரம்மாவிடம் ஸ்கந்தப் பெருமான்  கேட்க, அர்த்தம் தெரியாத அவரை கர்வபங்கம் செய்யும் வகையில் சிறையில் அடைத்தமையை நினைவு கூறும் வகையில் படைப்புக் கடவுளுக்கான சிலை இவ்வாலயத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.
கல்விக் கலையை மேலோங்கச் செய்யும் சரஸ்வதியும் இவ்வாலயத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்பான ஒன்று. (http://natarajadeekshidhar.blogspot.com)
அதிசயம் மிக்க வகையில், அற்புதமாக, வேறேங்கிலும் எளிதில் காண இயலாத வகையில் மூன்று முகமும், ஆறு கரங்களும், ஏழு குதிரைகளும், அருணன் எனும் ரதசாரதியையும் கொண்ட சூரிய பகவான் அருள்பாலிக்கின்றார். (29.08.1986 தேதியிட்ட குமரக் கோட்ட குமார சுப்ரமண்யர் கோயில் கும்பாபிஷேக பத்திரிகை)
இவ்வாலயத்தில் சூர சம்ஹார விழா சிறப்புற நடைபெறுவதை அறிவிக்கும் வண்ணம், வாமை முதலிய சக்தி அம்சங்களின் கால் சிலம்புகளில் இருந்து தோன்றிய நவ வீரர்கள் (1,வீரவாகுதேவர், 2.வீரகேசரி, 3.வீரமகேந்திரன், 4.வீரமகேசன், 5.வீரபுரந்திரன், 6.வீரராக்ஷசன், 7.வீரமார்த்தாண்டன், 8.வீரராந்தகன், 9.வீரதீரன்) மிக கம்பீரமாக அணிவகுக்கின்றார்கள்.
முருகப் பெருமானின் பேரருள் பெற்றவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் அருணகிரி நாதர், தனக்கேயுரிய தனியொரு சந்த நடையில், இக்குமரப் பெருமானை ஆரத் தோடணி மார்பினை யானைகள்…….        வேதத்தோன் முதலாகிய தேவர்கள் பூசித்தே தொழ வாழ்புலி ஊரினில் மேலைக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே எனப் போற்றிப் பணிகின்றார். இவ்வழகிய பெருமானே அருணகிரிநாதருக்கு, நடராஜரின் ஆடலைப் போல் நடனமாடிக்காட்டியவர் என அருளாளர்கள் கூறுவார்கள்.
இவ்வாலய மிக முக்கிய திருவிழாவாகிய சூர ஸம்ஹாரம்  வைபவத்திற்கு, செங்குந்த மரபினர் மிகச் சிறப்பாக காலம் காலமாகச் தொண்டு செய்து வருகின்றார்கள்.
ஐப்பசி மாத சஷ்டியில், இக்கோயிலில் சூரஸம்ஹாரத் திருவிழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். ஆறு நாட்களிலும் வள்ளி தெய்வானை ஸமேத சிங்கார வேலருக்கு யாக வேள்விகளுடன் கூடிய அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, அரிய அணிமணிகளால் அலங்கரிக்கப்பட்டு ஆலய வலம் வரும் காட்சி கண்களையும், மனதையும் கொள்ளை கொள்ளும். (http://natarajadeekshidhar.blogspot.com)
விழாவின் சிறப்பு அம்சமான சூர ஸம்ஹார தினத்தன்று, செங்குந்த மரபில் வந்த முருக பக்தர்கள் நியம நிஷ்டையுடன் விரதம் இருந்து நவ வீரர்களாக வேடம் அணிந்து கம்பீரமாக, வலம் வருவார்கள்.
முருகப் பெருமான், கோயிலின் சித்ஸபையில் நடராஜர் அருகிலிருக்கும் சிவகாம சுந்தரி அம்பிகையிடமிருந்து சக்திவேல் பெற்று, சூர ஸம்ஹாரம் செய்ய வீதி வலம் வருவார்,
தெற்கு ரத வீதியில் மிக அற்புதமாக சூர ஸம்ஹார வைபவம் நடைபெறும். கந்த புராணக் காட்சியினைக் கண்முன் கொணரும் வகையில் வர்ணனை செய்யப்படும்.
யானை முக அரக்கனையும், சிங்கமுகனையும், வதைத்துப் பின் தங்க ஞான சக்தி வேலால் சூரனை ஸம்ஹாரம் செய்யும் காட்சி பிறவாப் பெருமையைத்  தரக்கூடியது. வாழ்வில் ஆனந்தத்தையும், வெற்றிகளையும், மேன்மைகளையும் அருளவல்லது. மறுநாள் நடைபெறும்  திருக்கல்யாண உத்ஸவத்தை தரிசிப்பது வாழ்வில் மங்கலங்களைப் பெருக்கவல்லது. (http://natarajadeekshidhar.blogspot.com)
பெருமைகள் வாய்ந்த சிதம்பரம் மேற்கு கோபுரம் குமரகோட்டம், குமரக்கோயிலுக்கு, உலகம் செழுமை பெறும் வகையிலும், ஒற்றுமை ஓங்கி, மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டுதல்கள் செய்யப்பட்டு மிக சிறப்பாக, ஏழு யாக குண்டங்கள் கொண்ட, ஆறு கால யாக பூஜைகளுடன் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது.
அன்பர்கள் யாவரும் இந்த மஹா வைபவத்தில் பங்கு கொண்டு, நற்குழந்தைப் பேறு, வம்ச அபிவிருத்தி, குழந்தைகளின் கல்வியில் மேன்மை, கற்ற கல்வியினால் நல்வேலை வாய்ப்பு, பதவிகளில் மென்மேலும் உயர்வு, நல்ல இல்லறத் துணை, எதிரிகளால் ஏற்படும் அனைத்து இடர்ப்பாடுகளையும் களைந்து நோய்கள் இல்லாத நீடித்த ஆனந்தமான நல்வாழ்வு என அனைத்தையும் பெறுவதற்கு குமரக்கோட்ட ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸமேத ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமியை பிரார்த்தனை செய்து கொள்ளக் கோருகிறோம். (http://natarajadeekshidhar.blogspot.com)

மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்
04.02.2019 08.02.2019 காலை வரை பூர்வாங்க பூஜைகள்
08.02.2019 மாலை முதல் கால யாகம்
09.02.2019 காலை & மாலை இரண்டு & மூன்றாம் கால யாகம்
10.02.2019 காலை, மாலை & இரவு நான்கு, ஐந்து &
ஆறாம் கால யாகம்
11.02.2019 காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மீன லக்னத்தில் ஸ்ரீ வள்ளெ தேவஸேனா ஸமேத ஸ்ரீ செல்வமுத்துக்குமார ஸ்வாமிக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்  மிகச் சிறப்பாக நடைபெறும்.
இரவு : மஹாபிஷேகம் & ஸ்வாமி வீதியுலா.
மறுநாள் முதல் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும்.
மஹா கும்பாபிஷேக யாகசாலை காலங்களின் பொழுது, ரிக், யஜுர், ஸாமம் & அதர்வண வேத பாராயணங்கள், நாதஸ்வர இன்னிசை, ஓதுவார் மூர்த்திகளின் பண்ணிசை, திருப்புகழ் பாராயணம் முதலான நிகழ்ச்சிகள் நடைபெறும். (http://natarajadeekshidhar.blogspot.com)


நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்
செல் : 9443479572, 9362609299
www.facebook.com/deekshidhar