Tuesday, August 31, 2010

விநாயகர் சதுர்த்தி


விநாயகர் சதுர்த்தி - 02.09.2019 - திங்கட் கிழமை


ஸ்ரீ விநாயக மூர்த்தி :
அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் என்று வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.

பிள்ளையார் சுழி :
எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார். ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் - O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் - இணைந்து "உ" எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.

பிள்ளையார் குட்டிக்கொள்ளுதலும், தோப்புக் கரணமும்
எந்த ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது. புராண காலத்தில் ஒரு சமயம் அகத்தியர் பொதிகை மலை வந்து, தவத்திலிருக்க, உலக நன்மைக்காக விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தை உருட்ட, அந்தக் கமண்டலத்திலிருக்கும் நீர் பெருக்காக எடுத்து காவிரி ஆறாக பிரவாகித்தது. தவம் நீங்கிய அகத்தியர், கமண்டலத்தை உருட்டிய காகத்தைக்காண, அது ஒரு சிறுவன் வடிவாக நிற்க, கோபத்தில் அகத்தியர் அச்சிறுவனின் தலையில் குட்டினார். அதன் பின், கோபம் மறைந்து தனது ஞானக் கண் திறக்க அங்கே ஸ்ரீ விநாயகர் நிற்பதைக் கண்டு மனம் பதைத்து மன்றாடினார். தலையில் ஒரு முறை குட்டியதற்கு பிராயச்சித்தமாக தனது இரு கைகளாலும் குட்டிக்கொண்டு, நமஸ்காரம் செய்யும் பாவனையில் தனது இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு அமர்ந்து எழுந்தார். இச்செய்கையில் மனம் மகிழ்ந்த விநாயகர் அவருக்கு பல வரங்கள் தந்து அருளினார். இந்த புராண சம்பவத்தை மையமாகக் கொண்டே பிள்ளையார் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது என்பது விநாயகர் வழிபாட்டுக்கு முக்கியமானதாகின்றது.

ஸ்ரீ விநாயகரை வலம் வருதல்
அன்னை தந்தையான சிவ பார்வதியை வலம் (சுற்றி) வந்ததாலேயே உலகம் முழுமையும் சுற்றிய பெருமை கிடைத்ததால் ஞானப் பழத்தினை மிக சுலபமாகப் பெற்றவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். அந்த விநாயகரையே வலம் வந்தால், ஞானம் எனும் கல்வியறிவு, பழம் எனும் முயற்சியில் வெற்றி, எளிமையான முறையில் தடங்கல்கள் ஏதுமின்றி, வலம் வரும்போது எண்ணிய காரியம் எல்லாவற்றையும் வெற்றிகரமாக அமைய அருள்பாலிப்பவர் ஆகின்றார்.

ஸ்ரீ கணபதி ஹோமம்
பிள்ளையார் சுழி என்பது எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக அமைந்தது போல, யாகம் எனும் ஹோமம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் முதலாக அமைவது ஸ்ரீ கணபதி ஹோமம் ஆகும். ஸ்ரீ கணபதி ஹோமம், நாம் தொடங்கக் கூடிய அனைத்து காரியங்களையும் சுபமாக நிறைவேற்ற வல்லது, வாழ்வில் வசந்தத்தை அளிக்க வல்லது. ஆகையினால் தான் ஒரு புதிய தொழில் தொடங்கும்போதும், கிரஹப்ரவேசம் செய்யும்போதும், அந்த இடத்தில் லாபமும், செல்வமும் அதிகரிக்க கணபதி ஹோமம் செய்யும் வழக்கம் இருக்கின்றது.

ஸ்ரீ விநாயகர் தோற்றம் :
ஸ்ரீ விநாயகரின் தோற்றத்தினை பல விதமான புராணங்கள் பகர்கின்றன.

சிவனும், சக்தியும் ஒரு சமயம் மந்திரசாலா எனும் மண்டபத்திற்கு சென்றார்கள். அங்கு பதிந்திருந்த ஓங்கார வடிவம் சிவன் மற்றும் சக்தியின் பார்வையால் ஓம் எனும் ஓங்காரம் அகரம் மகரம் எனும் இரு பிரிவாகப் பிரிந்தது. அகரம் சிவ வடிவாகவும், மகரம் சக்தி வடிவாகவும் பிரிந்தது. அவ்விரு சக்திகளும் இணைந்து ஒரு புதிய சக்தியை உருவாக்கின. அந்த ஓங்கார பிரணவ வடிவம் தான் ஓங்கார நாயகனாகிய ஸ்ரீ விக்னேஸ்வரர்.
- காஞ்சி புராணம்-

உமையம்பிகையும், சிவபெருமானும் உய்யான வனத்தினில் யானை உருக்கொண்டு காதல் கொண்டனர். அந்தக் காதலின் பரிசாக உருவானர் யானை உருக்கொண்ட ஸ்ரீ கணேசர். (காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன் - திருஞான சம்பந்தர்) - சுப்ரபேதம்

உலகமாதாவாகிய உமையம்மைக்கு தாம் கொஞ்சி மகிழ்ந்து விளையாட (பார்வதி ப்ரிய நந்தநாய - விநாயகர் அஷ்டோத்திரம்) மகன் வேண்டும் எனும் எண்ணம் உண்டாயிற்று. அந்தக் குழந்தையும் முழுமையாகத் தாமே உயிர்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மண்ணில் ஒரு குழந்தை வடிவு செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அக்குழந்தையை உமையம்மைக் கொஞ்சி குலாவிக் கொண்டிருப்பதைப் பார்த்த சிவபெருமான், அக்குழந்தையைக் காண தேவர்கள் அனைவரையும் அழைத்தார். அக்குழந்தையைக் காண சனீஸ்வர பகவானும் வந்தார். சனி பகவானின் பார்வை பெற்றதால், குழந்தையின் தலை அறுபட்டது. மனம் வெதும்பிய பார்வதியை சமாதானப்படுத்திய சிவபெருமான், தன் சிவகணங்களை எட்டு திசைகளுக்கும் அனுப்பி வடக்கே தலை வைத்து உறங்கும் ஏதேனும் ஒரு உயிரினத்தின் தலையைக் கொண்டு வாருங்கள் எனக் கட்டளை பிறப்பித்தார். அந்த ஆணையை ஏற்ற சிவகணங்கள், ஒரு யானை வடக்கு திசைநோக்கி தலை வைத்து உறங்க அதன் தலையை மட்டும் எடுத்து சிவபெருமானிடம் சேர்த்தனர். சிவபெருமான், யானையின் தலையை உமையம்மையின் குழந்தையின் கழுத்தில் பொருத்தி மறு உயிர்க்கொடுத்தார். அது முதல், அக்குழந்தை மஹா பலம் பொருந்தியவர் ஆனார். அவர், சிவகணங்களுக்கெல்லாம் தலைவனாக, கணாதிபதியாக போற்றி வழிபாடு செய்யப்பட்டார்.- சிவபுராணம்

ஸ்ரீ விநாயகர் புராணம்
விநாயகப் பெருமானுடைய சிறப்பினை உணர்த்த, விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாகத் தாம் உணர்ந்த விநாயக புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிருகு முனிவருக்கு உபதேசிக்க அவர் −ப்புராணத்தை 250 பிரிவுகளையுடைய உபாசனா காண்டம், லீலா காண்டம் என இரு காண்டங்களாக அமைத்துப் பன்னிரெண்டாயிரம் சுலோகங்களாக "ஸ்ரீ விநாயகர் புராணம்" பாடினார்.
விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப் பெருமான் எடுத்த பன்னிரண்டு அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன.
அந்த அவதாரங்களில் அவர், வக்கிரதுண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மயூரேசர், பாலசந்திரர், தூமகேது, கணேசர், கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது.

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி வழிபாடு :
பார்வதி தேவி மண்ணால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து ஸ்ரீ விநாயகராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம்.

மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபாடு செய்துவருகின்றோம்.

ஆலய வழிபாட்டில் அன்றைய தினம் பெருமளவு திரவியங்கள் கொண்டு சிறப்பானதொரு அபிஷேக ஆராதனை நடக்கும்.

விநாயக சதுர்த்தி வழிபாட்டினால் கிடைக்கும் 21 விதமான பேறுகள் :
1. தர்மம், 2. பொருள், 3. இன்பம், 4. செளபாக்கியம், 5. கல்வி, 6. பெருந்தன்மை, 7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,8. முக லக்ஷணம், 9. வீரம், 10. வெற்றி, 11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல், 12. நல்ல சந்ததி, 13. நல்ல குடும்பம், 14. நுண்ணறிவு, 15. நற்புகழ், 16. சோகம் இல்லாமை, 17. அசுபங்கள் அகலும், 18. வாக்கு சித்தி, 19. சாந்தம், 20. பில்லி சூனியம் நீங்குதல், 21. அடக்கம்,

விநாயகப்பெருமானையே தங்கள் வழிபடு கடவுளாகக் கொண்டு வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுகியவர்களின் வாழ்க்கையில் அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள் எண்ணிலடங்காது. அகத்திய முனி மூலம் காவிரி தந்தமையும், நம்பியாண்டார் நம்பி மூலம் அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் - மூவர் தேவாரங்களை உலகுக்கு கொடுத்து சைவ சமயத்தையே காப்பாற்றிய பெருமையும், யாவரும் அறிந்ததே.

இன்னும் எண்ணிலடங்காத அற்புதங்களையும் நிகழ்த்திவரும் விநாயகப்பெருமான் தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் கருணைத் திறன் அளவிடற்கரியது. விநாயகப்பெருமான் திருத்தாள் பணிந்து அவர் அருளாலே அவன் தாள் வணங்கி உய்வோமாக.
*************************************************************
நெய்வேலி ஸத்சங்கம் - மணித்வீபம்,
ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஆலயம்
49வது லக்ஷார்ச்சனை மஹோத்ஸவம்
16.08.2016 முதல் 25.08.2017 வரை
நெய்வேலி, ஸத்சங்கம் - மணித்வீபம் வளாகத்தில், ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
நெய்வேலி நகரத்தின் பழமையான கோயில்களில் ஒன்று ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஆலயம். காஞ்சி மஹா பெரியவரின் அருட்கரங்களில் தவழ்ந்தது இந்த விநாயகர் விக்ரஹம். அவர் கூறிய ஆலோசனைகளின் படியே ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஸ்தாபிதம் செய்யப்பட்டார்.
விநாயகர் ஆலயத்தைத் தாங்கும் நான்கு தூண்களிலும் (ஒவ்வொரு தூணிலும் நான்கு விநாயகர் என) விநாயகரின் பதினாறு வடிவங்கள் (ஷோடச கணபதி) அமைந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த ஆலயமே விநாயக மண்டலமாக அமைந்திருக்கின்றது.
வேதங்கள் காட்டும் வழியாகிய வைதீக முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த ஆலயத்தில் தினந்தோறும் அதிகாலையில் முதல் பூஜையாக "ஸ்ரீ கணபதி ஹோமம்" முதற்கண் செய்யப்பட்டு, அந்த ஹோமத்தில் அமைந்த புனித நீர்க்குடத்திலிருக்கும் தீர்த்தம் கொண்டு ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. அன்பர்கள் பலர், இந்த ஹோமத்தில் பெருமளவு பங்கு கொண்டு, தத்தமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

விநாயக வழிபாட்டின் மிக முக்கிய அம்சமாகிய விநாயகர் சதுர்த்தி வழிபாடு இவ்வாலயத்தில் இவ்வாண்டு 48 ஆவது ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது.

விநாயக சதுர்த்தி மஹோத்ஸவம் பத்து நாட்கள் வழிபாடுகள் நடத்தப்படும்
ஒவ்வொரு நாள் மாலை 06.30மணிக்கு வேதகோஷங்களுடன் அபிஷேகங்கள், அலங்காரம், மிகவும் சிறப்பு வாய்ந்த 'க'கார ஸஹஸ்ரநாம அர்ச்சனை (ஒவ்வொரு நாமாவளியும், வடமொழியின் மூன்றாவது க என்னும் எழுத்தில் மட்டுமே ஆரம்பித்து விநாயகரைப் போற்றுவதாக அமையும்), மஹா தீபாராதனை என்கிற வரிசைப்படி வழிபாடுகள் அமையும்.
விநாயகர் சதுர்த்தி அன்று  மதியம் 2.00 மணி முதல் மஹந்யாஸ பூர்வக ஏகாதச ருத்ர ஜப பாராயணம், விசேஷ ஸகல திரவிய மஹாபிஷேகம், லக்ஷார்ச்சனை பூர்த்தி, மஹா தீபாராதனை நடைபெறும்.
பெயருக்கு ஏற்றார் போல, வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக விளங்குபவர் வரசித்தி சக்தி விநாயகர். வேண்டும் வரங்களை உடனடியாக சித்திக்க (கிடைக்க) வழிகோலுபவர். அருட்சக்தி நிறைந்தவர்.
இந்த ஆலயத்தில், ஷோடச (16) கணபதிகள் அமைந்த தூண்களுக்கு நடுநாயகமாக அமைந்த ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகரின் அருள் அளவிடமுடியாதது.
தமது பெயருக்கு ஏற்றார்போல, ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர், தன்னை நாடிவரும் அன்பர்களின் வேண்டுகோள்கள் அனைத்தையும் மிக விரைவில் நல்குபவராக, வாஞ்சாகல்ப கணபதியாக - மேலான வரங்களைத் தருபவராக, மிகுந்த சக்தி வாய்ந்தவராக விளங்குகின்றார்.
ஔவையார் இயற்றிய "விநாயகர் அகவல்" (சீதக் களபச் செந்தாமரை..) போல, நக்கீரர் எழுதிய விநாயகர் அகவல் உள்ளது. பதிவின் நீளம் கருதி அதை வெளியிட இயலவில்லை. தேவைப்படுவோர் மின்னஞ்சல் அனுப்பிப் பெற்றுக் கொள்ளுங்கள்.
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி &  பூஜகர்
www.facebook.com/deekshidhar
94434 79572 & 93626 09299.

Saturday, August 21, 2010

மஹா சங்கடஹர சதுர்த்தி

மஹா சங்கடஹர சதுர்த்தி
(19.08.2019 -  திங்கட் கிழமை)

அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.
யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர்.
வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.
ஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக மிக முக்கியமானது.

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு :
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.
சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.
சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.
வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வாங்கு வாழ சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு மிக முக்கியமானதாகின்றது.
மற்றுமொரு புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் வானில் நிலவைப் பார்த்ததால், ஒரு பெரும் அபவாதம் கிடைக்கப் பெற்றார். சியமந்தக மணி எனும் கல்லினால் பெரும் கெட்டபெயர் ஏற்பட்டது. (சத்ராஜித், சூரியன், பாமா, பிரசேனன், ஜாம்பவான், ஜாம்பவதி, அக்ரூரர் என்பவர்களால் - சம்பவங்கள் நிறைந்த பெரும் கதை - ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:- சியமந்தக உபாக்யானம்) சியமந்தக மணியைப் பற்றி மேலும் விபரம் அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
வளர்பிறை சதுர்த்தி தினத்தில் சந்திரனைப் பார்த்ததால், கெட்ட பெயர் ஏற்பட்டு, அதை நீக்க வேண்டி, ஸ்ரீ விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தி தினத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், பூஜையைச் செய்தார். விநாயகர் அவருடைய அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்து, கெட்ட பெயர் நீக்கிக்கொண்டு நற்பெயர் பெற்றதை நினைவு கூறும் வகையிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு முக்கியமானதாகின்றது.
ஸ்ரீ விநாயகருக்கு முப்பத்திரண்டு வடிவங்கள் உண்டு. இவற்றை மூர்த்தி பேதங்கள் என்று கூறுவார்கள். அவற்றில் பதினாறு மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சங்கடநாஸன கணபதியாகும்.
ஒவ்வொரு வகையான பலனைப் பெறவேண்டி ஒவ்வொரு வகையான விநாயக வடிவங்களை வணங்குவதுண்டு. கடன் நீங்க ருணமோசன கணபதியையும் பணம் வேண்டி லட்சுமி கணபதியையும் வழிபடுவதுண்டு. அந்தந்த வழிபாட்டிற்கு உரிய தனிப்பட்ட மந்திரங்களும் முறைகளும் உண்டு.
சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் தரிசிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.
சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம்.
சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். விநாயகரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்கலன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு அங்காரகச் சதுர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.
சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களும் (கலௌ சண்ட விநாயக: - புராண வாக்கியம்) நீங்குகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.
சங்கட ஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் உண்டு.
விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மஹா சங்கட ஹர சதுர்த்தி என்று பெயர்.
வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வது கிடைக்கப் பெறும்.
சங்கட ஹர சதுர்த்தி வழிபாட்டினால் கிடைக்கப் பெறும் பலன்கள் :
கோசாரப் பலன்களை அருளும் சந்திர பகவான் விநாயகரின் அருள்பெற்றதால், சந்திர பகவானின் நற்பலனாக, நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.
செவ்வாய் பகவான் வழிபட்டதால், அங்காரக (செவ்வாய்) தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும்.
சனி பகவானின் தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.
நெய்வேலி, ஸத்சங்கம் - மணித்வீபம் வளாகத்தில், ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
நெய்வேலி நகரத்தின் பழமையான கோயில்களில் ஒன்று ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஆலயம். காஞ்சி மஹா பெரியவரின் அருட்கரங்களில் தவழ்ந்தது இந்த விநாயகர் விக்ரஹம். அவர் கூறிய ஆலோசனைகளின் படியே ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஸ்தாபிதம் செய்யப்பட்டார்.
பெயருக்கு ஏற்றார் போல, வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக விளங்குபவர் வரசித்தி சக்தி விநாயகர்.
வேண்டும் வரங்களை உடனடியாக சித்திக்க (கிடைக்க) வழிகோலுபவர். அருட்சக்தி நிறைந்தவர்.
ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகருக்கு ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியிலும் மிக விசேஷமான வழிபாடுகள் நடைபெறும்.
சங்கடஹர சதுர்த்தியின் மாலை நேரத்தில், விநாயகருக்கு ஸகல திரவிய அபிஷேகங்கள் வேதகோஷங்களோடு செய்யப்படும்.
பலன்களை வெகு விரைவில் அருளும் "ஸ்ரீ விநாயகர் திரிசதி (300 நாமாவளிகள்) கொண்டு அர்ச்சனை செய்யப்படும். பிறகு மஹா தீபாராதனை நடைபெறும்.

கஷ்டங்களை நீக்கும் கணநாயகாஷ்டகம் :
'முதாகராத்த மோதகம்' எனத் தொடங்கும் கணேச பஞ்சரத்னம் (5 பாடல்கள்) போல, கணநாயக அஷ்டகம் (எட்டு பாடல்கள்) சிறப்பு வாய்ந்த ஒன்று. விநாயகரை வழிபடும்போது இந்த கணநாயகாஷ்டகத்தைச் சொல்வது அனைத்து பாபங்களையும் அழித்து, நற்கதி அடைய வழிசெய்யும்.

ஸ்ரீ கணநாயகாஷ்டகம்
ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் I
லம்போதரம் விசா'லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம் I
பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் I
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் I
சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
கஜவக்த்ரம் ஸுரச்'ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம் I
பாசா'ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே I
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா I
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம் I
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர: I
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி II

விநாயகரைப் பணிவோம் ! வினைகள் நீங்கப் பெறுவோம் !!

அடுத்த பதிவில் விநாயகர் தோற்றம், விநாயகர் சதுர்த்தி வழிபாடு, நக்கீரர் எழுதிய விநாயகர் அகவல் - காண்போம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்
- 94434 79572, 93626 09299. 
www.facebook.com/deekshidhar

Friday, August 6, 2010

ஆடிப் பூரம் - வளையல் அலங்காரம்

ஆடிப் பூரம் - வளையல் அலங்காரம்
(13.08.2018 -  திங்கட் கிழமை)ஆடி மாதம் - புண்ணிய காலம். வானியல் கணிதப்படி, சூரியன், ஆடி மாதத் தொடக்கத்தில் தான், தனது பாதையை தெற்கு நோக்கி (தக்ஷிணம்) செலுத்தும் (அயனம்) காலம். ஆகவே இது தக்ஷிணாயன புண்ணிய காலம் என்றழைக்கப்படுகின்றது. (தை மாதம் சூர்யன் வடக்கு (உத்தரம்) நோக்கி செலுத்துவதால் உத்தராயண புண்ணிய காலம் ஆகும்.)


ஆடி மாதம் - அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம்.
ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. (ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு).
ஆடி மாதம் - கோயில் திருவிழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்களின் துவக்க காலம். ஆடி மாதத்திற்குப் பிறகு வரிசையாக பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் நிறைந்திருக்கும். (ஆவணி - விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி - நவராத்திரி, ஐப்பசி - தீபாவளி, கார்த்திகை - மஹாதீபம், ......).


ஆடி மாதம் - காவிரி போன்ற ஆறுகளில் புதுப்புனல் பிரவாகமெடுத்து பெருகும் காலம். பருவமழை தொடங்கி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் தேங்கி, புது வெள்ளம் பாயும் காலம்.

வயல் வெளிகளில் தண்ணீர் பாய்ச்சி, விதை விதைக்கத் தொடங்கும் (ஆடிப் பட்டம் தேடி விதை) காலமும் ஆடி மாதத்தில்தான். இக்காலத்தில் தான் அகில நாயகியே, பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக்கொள்ளும் காலம்.

ஆடி அமாவாசை - சூரியன், சந்திர பகவானுக்கு உரிய ராசியாகிய கடக ராசியில் பிரவேசிக்கும் காலம். பித்ரு காரகனாகிய சூரியன், மாத்ரு காரகனாகிய சந்திரனுக்கு உரிய கடக ராசி மண்டலத்தில், சந்திரனுக்கு நேராக ஒன்றிணையும் காலம் ஆடி அமாவாசை. ஆகையால் தான், இறந்துவிட்ட முன்னோர்களுக்கு உரிய காரியங்களை ஆடி அமாவாசையில் செய்வது, பித்ரு தோஷங்களை நீக்கியும், முன்னோர்களின் பூரண ஆசிகளையும் பெற்றுத் தரும்.
ஆடிப் பதினெட்டு - பதினெட்டாம் பெருக்கு - ஆடி மாதத்தின் பதினெட்டாவது தினத்தில் புது வெள்ளம் பூரணமாக பிரவாகமெடுத்து புகும் காலம். ஆடிப் பெருக்கு அன்று, கருக்கொண்ட பூமித் தாய்க்கு, நிலமும் நீரும் சேர்ந்த இடங்களில் (ஆற்றங்கரை, குளக்கரை) சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
தானிய அபிவிருத்தி (பயிர்கள் செழிக்க) அருளும் அம்பிகையை, பெண்கள் - வம்ச அபிவிருத்தி (நற்குழைந்தைப் பேறு) வேண்டி வழிபாடுகள் நடத்துவார்கள். குலம் விளங்க, நல்வாரிசுகள் அமைய அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தனை செய்வார்கள்.

கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்து, இல்லறம் நல்லறமாக விளங்க அம்பிகையை வேண்டிக்கொண்டு, மஞ்சள் கயிறு அணிவிப்பார்கள்.

திருமணமான பெண்ணுக்கு, தாலி கோர்த்துக் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாங்கல்யம் பெண்ணின் கழுத்தில் இணையும் சமயம், மூத்த சுமங்கலிகள், பெண்ணை,
இனி இக்கயிறு பிரியாமல் தீர்க்க சுமங்கலியாக வாழட்டும் என்றும்,
இழை பிரியாமல் இல்லறம் நல்லறமாகட்டும் என்றும்,
இணை (தம்பதிகள்) பிரியாமல் இருக்கட்டும் என்றும் வாழ்த்துவார்கள்.

லோகமாதாவான அம்பிகையே ஆடி மாதத்தில் கருவுற்றிருப்பதாக நினைந்து, ஆற்றங்கரைகளில், அகிலம் காக்கும் அம்பிகைக்கு தேங்காய், பழம், மங்கலப்பொருட்கள், காதோலைக் கருகமணி ஆகியவற்றைப் படைத்து மகிழ்வார்கள்.


கருவுற்ற பெண்கள் - மசக்கையால் - வகைவகையான உணவுகளை விரும்புவார்கள். அதை மனதில் கொண்டு, கருவுற்ற அம்பிகைக்கு, வகைவகையான வண்ண சாதங்களை (தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல்) ஆற்றங்கரைக்குக் கொண்டு வந்து, அம்பிகைக்கு படைத்துவிட்டு, குடும்பத்துடன் குதூகலமாக உண்டு களிப்பார்கள்.


ஆடிப் பூரம் - அம்பிகை கருவுற்று இருப்பதை - முளைப்பயிற்றை அம்பிகையின் வயிற்றில் பிணைத்து, கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி பிரார்த்தனை செய்வார்கள்.
முளைப்பயிறின் வடிவமும், நுண்ணோக்கியில் தெரியும் உயிரணுவின் வடிவமும் ஒன்று போலவே இருப்பதைக் காணுங்கள்.


ஆன்றோர்கள், இவற்றை அறிந்திருந்ததால், இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்திருபார்களோ?
நூற்றுக்கணக்கான முளைப் பயிற்றை ஒரு துணியில் கட்டி, அதை அம்பிகையின் வயிற்றில் பிணைப்பார்கள். முளைப் பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காகவும், நற்குழந்தைப் பேற்றுக்காகவும் கட்டப்படுவது ஆகும்.

கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு செய்வது வழக்கமல்லவா?
அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தியும் வழிபாடுகள் நடைபெறும்.அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில், பூரம் நக்ஷத்திரம் இணையும் நாள் ஆகும்.
வளைகாப்பு நிகழ்ச்சி என்பது கர்ப்பமான பெண்ணுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, உறவினர்கள் புடைசூழ வாழ்த்துவார்கள்.
கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு எவ்வித (உடல் & மனம்) கஷ்டங்களும் உண்டாகதவாறு பார்த்துக்கொள்வார்கள்.
கருக்கொண்ட காலம் பிள்ளைப் பேற்றுக்கு பூர்வ (முந்தைய) காலம். ஆடி மாதத்தில், பூர்வ பல்குனி எனும் பூரம் நக்ஷத்திரம் இணையும் நாள் ஆடிப் பூரம்.
இந்த ஆடிப் பூர தினத்தில் தான் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள்.
அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் - அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது, ஆனந்தத்தை வழங்கக்கூடியது, வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.

ஆடிப் பூர தினத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய தமிழை ஆண்ட கோதை ஆண்டாள் இந்த ஜகத்தில் துளசிச் செடியின் கீழ் உதித்தாள்.
ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் விதைத்த ஆன்மீக விதை, பிற்காலத்தில் சமயம் காக்கும் பெரும் விருக்ஷமாக வளர்ந்தது.
ஆண்டாள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஆடிப் பூர தினத்தில் அம்பிகையை தரிசனம் செய்வோம் !
ஆனந்தமான நல்வாழ்வு பெற்றிடுவோம் !!

நெய்வேலி நகரம், ஸத்சங்கம் - மணித்வீபம் வளாகத்தில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கக் கூடிய ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகைக்கு ஆடிப் பூர  தினத்தன்று - விசேஷ வழிபாடுகளும், வளையல் அலங்காரமும் நடைபெறும்.


- நி.த. நடராஜ தீக்ஷிதர்
-சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜை
- செல் : 94434 79572-
www.facebook.com/deekshidhar

Sunday, August 1, 2010

நமஸ்காரம் (இணக்கம் ஏற்படுத்தும் வணக்கம்)

நமஸ்காரம்
(இணக்கம் ஏற்படுத்தும் வணக்கம்)

நமஸ்காரம் எனும் சொல்லுக்கு வணக்கம் செலுத்துகின்றேன் என்று பொருள்.
வணக்கம் செலுத்துதல் மிக நாகரீகமான மரபு.
மாதா எனும் அன்னைக்கும், பிதா எனும் தந்தைக்கும் தினமும் பாத பூஜை செய்பவருக்கும், பாதத்தைத் தொட்டு வணங்குபவருக்கும் ஏழேழு ஜன்மங்களிலும் செய்த பாவம் தொலையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.
பாதத்தைத் தொட்டு வணங்குதலுக்கு உரியவர்கள் பெற்றவர்களே.
வித்யை எனும் கல்வியை வழங்கும் குருவுக்கு வணக்கம் செலுத்துவது இரு கைகளையும் நெற்றிக்கு நேராக கூப்பிய வண்ணம் செய்வது குருவருளை பெறத்தக்கது.
தெய்வங்களை வணங்குவது இரு கைகளையும் மேலே தூக்கி அஞ்சலி செய்வது தெய்வப்பலன்களைப் பெறக்கூடியது. இரு கைகளையும் தூக்கி வணக்கம் செய்வது சரணாகதி - தெய்வமே கதி என்பதைக் காட்டுகின்றது.
சக மனிதர்களுக்கும், இதயத்துக்கு இதமான நண்பர்களுக்கும் வணக்கம் செலுத்துவது - இரு கைகளையும் இருதயத்துக்கு நேராக கூப்புவது நலம் பயக்கும்.
மரியாதைக்கு உரியவர்களை, நம் முகத்துக்கு நேராக இரு கைகளையும் கூப்பிச் செய்வது - நல் அபிப்ராயத்தைப் பெற உதவும்.
வணக்கம் என்பது இணக்கம் ஏற்படுத்தக் கூடியது. நல்ல மதிப்பைப் பெறக் கூடியது.
வணக்கம் சொல்லி எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பிப்பது வெற்றியாக முடியும்.
பிரச்னைகளுக்குரிய இடத்தில் கூட, விரோதியாக இருப்பவருக்குக் கூட வணக்கம் செலுத்துவது சுணக்கத்தை நீக்கி இணக்கத்தைத் தரக்கூடியது.
நமஸ்கரிக்கும் வழக்கம் - தொன்று தொட்டு வரக்கூடியது. வேத காலத்திலிருந்தே நமஸ்கரிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது.
நான்கு வேதங்களில் இரண்டாவதாக இருக்கும், யஜுர் வேதத்தின் இருதயம் போன்று இருக்கும் ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த ஸ்ரீ ருத்ர மந்திரத்தின் சிறப்பு பகுதியாக விளங்குவது ருத்ரனை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்த பகுதி நமகம்."ருத்ராயா ததாவினே க்ஷேத்ராணாம் பதயே நமோ நமோ" (துன்பங்களைத் துடைப்பவரும், உலகைப் படைத்துக் காப்பவரும் ஆகிய ருத்ரனாகிய பரமேஸ்வரனுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்)
நமகம் எனும் மந்திரத்தை உள்ளடக்கிய ஸ்ரீ ருத்ரத்தைச் சொல்வதும், கேட்பதும் பரமேஸ்வரனையே ஆயிரத்து எட்டு முறை வலம் வந்து நமஸ்கரித்தலுக்கான பலன் கிடைக்கும்.
ஸ்ரீ ருத்ர மந்திரங்களால் மகேஸ்வரனை மானசீகமாக நமஸ்கரிப்பது மகத்தான பலனைத் தரக்கூடியது.
சைவ வேதம் என்று போற்றக் கூடிய பன்னிரு திருமுறைகளில், திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரத்தில், நின்ற திருத்தாண்டகம் எனும் பகுதி வடமொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரத்தின் தமிழின் நேர் வடிவம் என்று ஆய்வாளர்கள் மதிக்கின்றார்கள்.
நின்ற திருத்தாண்டகம் பாடும்போதும், கேட்கும்போதும் சிவனை நமஸ்கரிப்பது சிறந்த பலனைத் தரக்கூடியது.
"மாதா பிதாவாகி மக்க ளாகி மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்கோதா விரியாய்க் குமரி யாகிக்கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்போதாய மலர்கொண்டு போற்றி நின்றுபுனைவார் பிறப்பறுக்கும் புனித னாகியாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகிஅழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே." (நின்ற திருத்தாண்டகம்)

தெய்வங்களை வணங்கும் வகைகள் பற்றி சாஸ்திரங்கள் கூறுவதைப் பார்ப்போம்.
தெய்வ ஸன்னிதானத்திலுள்ள தெய்வங்கள் அனைத்தையும் வணங்கிவிட்டு, ஆலயத்தில் கொடிமரம் இருந்தால் - தெய்வத்திற்கும் கொடிமரத்தைக்கும் இடைப்பட்ட இடத்தில் இல்லாமல், கொடிமரத்திற்குப் பின்னே நமஸ்கரிக்க வேண்டும்.
கொடிமரத்திற்கும் தெய்வ ஸன்னிதானத்திற்கும் இடையில் நமஸ்கரிக்கக் கூடாது.
முதலில் ஆண்கள் செய்யக்கூடிய நமஸ்காரம் பற்றிக் காண்போம்.
அஷ்டாங்க நமஸ்காரம் ஆண்கள் செய்யக் கூடியதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
உடல் முழுவதும் முதலில் பூமியில் படும்படி பொருத்தி,
(1) வலது கையை முதலில் தலைக்கு நேரே தூக்கி பிறகு
(2) இடது கையை தலைக்கு நேரே தூக்கி அஞ்சலி (கூப்பிய கரம்) செய்யவேண்டும். முகத்தை நேராக தரையில் கொண்டு வந்து
(3) நெற்றியைத் தரையில் படச் செய்து, முன்னர் செய்தது போல வலக்கையை இடுப்புக்கு நேரே கொண்டுவந்து,
வலது புஜம் எனும் வலது தோள் (4) தரையில் படச்செய்து,
பிறகு இடது கையை இடுப்புக்குக் கொண்டு வந்து,
இடது (5) தோளைத் தரையில் படச்செய்ய வேண்டும்.
பின்னர், முதலில் வலது (6) காதையும் பிறகு
இடது (7) காதையும் தரையில் படச்செய்ய வேண்டும்.
பின்னர் மோவாய் (8) தரையில் பட வேண்டும்.
இதுவே ஸாஷ்டாங்க (எட்டு அங்கங்களும் - எட்டு உறுப்புகளும் தரையில்படக்கூடிய) நமஸ்காரம் எனப்படும். இறைவன் படைத்த உடல் இறைவனுக்கே அர்ப்பணம் எனும் செயலைக் காட்டுவதே அஷ்டாங்க (8 உடல் உறுப்புகள்) நமஸ்காரம். இந்த நமஸ்காரம் தெய்வீகப் பலனை வாரி வழங்கக் கூடியது.

பெண்கள் செய்யக் கூடியது பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும்.
பெண்கள் முதலில் இரண்டு (1,2) முழங்கால்களைத் தரையில் பொருந்தச் செய்து, முதுகை வளைத்து, பின் இரண்டு (3,4) கைகளையும் கூப்பியவாறு தரையில் படச் செய்து, பின் நெற்றியினை (5) தரையில் படச் செய்ய வேண்டும்.
இதுவே ஐந்து உடல் உறுப்புகள் தரையில் படச்செய்யும் பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். பெண்களுக்கு நல்வாழ்க்கையும், சுமங்கலிகளுக்கு நீடித்த மணவாழ்க்கையையும் அருளுவது பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும்.
பெண்களின் திருமாங்கல்யம் எந்நிலையிலும் தரையில் படக்கூடாது.
அங்கப்ரதக்ஷ¢ணம் : தெய்வங்களுக்கு அங்க பிரதக்ஷ¢ணம் செய்வது என்பது ஒரு விசேஷ வழிபாடு. உடலின் அனைத்து பாகங்களும் தரையில் படும்படி நமஸ்கரித்துக் கொண்டே ஆலயத்தை வலம் வருவது பெரும் புண்யங்களைத் தரக்கூடியது. பக்தர்கள், பெரியோர்கள், தவசீலர்கள் வலம் வந்த பாதையில் அவர்களின் பாதங்கள் பட்ட இடங்களையும் நமஸ்கரிப்பதால், அடியவர்க்கும் அடியவராக விளங்கக்கூடிய பெருமானின் பூரண அருளைத் தரக் கூடியது. 'நான்' என்ற அகந்தையை நீக்கக் கூடியது. இறைவன் ஒருவனைத் தவிர வேறு கதியில்லை என்ற செயலைக் காட்டுவது அங்க பிரதக்ஷ¢ணம் ஆகும்.

யாரை நமஸ்கரிக்கக் கூடாது ?
இறைவனை எண்ணிக்கொண்டு ஜெபம் செய்து கொண்டிருப்பவரையும், தானம் செய்து கொண்டிருப்பவரையும், தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருப்பவரையும், யாகங்கள் செய்து கொண்டிருப்பவரையும், தர்ப்பணம் செய்து கொண்டிருப்பவரையும், சிரார்த்தம் செய்பவரையும் நமஸ்கரிக்கக் கூடாது.
பெரும் புண்யம் நல்கும் நமஸ்காரம் :
பெரும் தவசீலர்கள் உள்ள சபையிலும், தெய்வங்கள் உறைந்திருக்கும் யாகசாலையிலும், ஆலயங்களிலும், புண்ய §க்ஷத்ரங்களிலும், புண்ய தீர்த்தங்களை நோக்கியும், வேத கோஷம் முழங்கும் இடங்களிலும் - செய்யக் கூடிய பிரத்யேக நமஸ்காரங்கள் பலமடங்கு புண்யங்களைத் தரக்கூடியது.

நமஸ்கரிக்கும் திசை :
நமஸ்கரிக்கும் போது நமது தலை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ அமையவேண்டும். தெற்கு நோக்கி நமஸ்கரித்தல் கூடாது.
புண்யங்கள் தரும் நமஸ்காரம் பற்றி அறிந்தோம்.
பெரும் புண்யத்தையும் தேக ஆரோக்கியத்தையும் நல்கக் கூடிது "சூர்ய நமஸ்காரம்" ஆகும்.
சூர்ய நமஸ்காரமும் வேத காலத்திய பழமை வாய்ந்தது.
சூர்ய நமஸ்காரம் பற்றி யோக சாஸ்திரங்கள் பல்வேறு விதமானப் புகழாரங்களைக் கூறுகின்றன.
வைதீக சம்பிரதாயங்களில் சூர்ய நமஸ்காரம் பிரதான இடம் பெறுகின்றது. வேதங்கள் போற்றும் வேதநாயகர் சூர்யபகவான்.
"நமஸ்கார ப்ரியோ பானு:" என்ற சொல்வழக்கப் படி, உலகை ஜீவிக்கக் கூடிய உலக நாயகனாகிய சூர்ய பகவானை வேத மந்திரங்கள் (அருண ப்ரச்னம்) சொல்லி வணங்குவது நல் தேக ஆரோக்கியத்தையும், தெளிவான கண் பார்வையையும், நீடித்த ஆயுளையும், நல்லறிவையும் நல்கக் கூடியது.
சூர்ய பகவான் ஸஹஸ்ர வியாகரண பண்டிதர் என்றும் அனைத்துக் கலைகளுக்கும் நாயகன் என்றும் லோக குரு என்றும் பத்ம புராணம் கூறுகின்றது.
கண்கண்ட தெய்வமான, லோக குருவான சூர்ய பகவானிடம் பாடம் கற்க விருப்பம் தெரிவிக்கின்றார் ஹனுமன். சூர்ய பகவான் தன்னால் ஒரு இடத்தில் நின்று பாடம் சொல்லித் தர இயலாது என்கின்றார். அதற்கு ஹனுமன் சூர்யன் சுற்றி வரும் பாதையிலேயே, அவரை நோக்கிய வண்ணம் பின்புறம் நடந்துகொண்டே, கைகள் கூப்பிய வண்ணம் பாடம் கற்கின்றார். அவரை "நவ வியாகரண பண்டிதர்" என்று புராணங்கள் புகழும். சூர்யனிடம் பாடம் கற்றதால் பெரும் அறிவாளியாகின்றார், ஆகையால் அவர் சொல்லின்செல்வர் என்று புகழப்படுகின்றார்.
சாக்த வழிபாடு என்பது சக்தியை அம்பிகையை வழிபடுவது. இந்த சாக்த வழிபாட்டின் உச்ச நிலை வழிபாடாகிய ஸ்ரீ துர்கா ஸப்தசதீ (சண்டி ஹோமத்தின் போது சொல்லப்படக் கூடிய எழுநூறு ஸ்லோகங்கள்) எனும் ஸ்லோகங்கள் அம்பிகையின் அருட்கடாட்சத்தை அருளக்கூடியது.
பதின்மூன்று அத்தியாயங்கள் கொண்ட துர்கா ஸப்தசதீயின் ஐந்தாவது அத்தியாயம் மிக முக்கியம் வாய்ந்தது. அருட்செயல்கள் புரிந்த தேவியை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்தது ஐந்தாவது அத்தியாயம் .
"யா தேவி ஸர்வபூதேஷ¤ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
(அனைத்துலகையும் ஈன்று எடுத்த அன்னை வடிவாகிய அம்பிகைக்கு வணக்கம். மீண்டும் வணக்கம். என்றென்றும் வணக்கம்)
இந்த அத்தியாயத்தில் வரும் மற்ற ஸ்லோகங்களிலும் வரும் "நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: " என்று சொல்லும்போதெல்லாம் அம்பிகையை நமஸ்கரிப்பது, வாழ்வில் ஏற்படக் கூடிய துன்பங்கள் அனைத்து அகற்றி, அளவற்ற அருளை பெறக் கூடியது.

நமஸ்கரிப்பதால் ஏற்படும் நற்பலன்களைப் பெறுவோம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- cell : 94434 79572