Friday, November 26, 2010

சங்காபிஷேகம்
சங்காபிஷேகம்

ஒவ்வொரு வருட கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும்.

சங்கு.
கடலில் இருந்து கிடைக்கும அரிய தெய்வீகப் பொருள்.
சங்கிற்கு பவித்ர (புனிதமான) பாத்திரம் எனப் பெயருண்டு. அதில் விடப்படும் தீர்த்தம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
சங்கு பஞ்சபூதங்களாலும் மாறுபடாதது.
நீரில் கிடைப்பது. நெருப்பால் உரு மாறாதது. இதிலுள்ள துவாரத்தினில் காற்றைச் செலுத்தினால் சுநாதமான ஒலியை வழங்குவது.
பவழம், முத்து மற்றும் பாண லிங்கம், சாளகிராமம் ஆகியவை உயிரினங்களிலிருந்து கிடைத்து பூஜைக்குரிய பொருட்களாக விளங்குவதுபோல் சங்கும் கடலில் கிடக்கப்பெறும் பூச்சியினத்தின் மேல் ஓடு. இதுவே பூஜைப் பொருளாகக் கருதப் படுகிறது.
பொதுவாக சங்குகள் இரண்டு வகைப்படும்.
1. வலம்புரி சங்கு, 2. இடம்புரி சங்கு.
இதை எளிதாக அடையாளம் காண இடது கையால் பிடித்துக் கொண்டு ஊதுவதற்கு வசதியாக அமைந்திருப்பது வலம்புரி சங்கு கும்.
வலது கையால் பிடித்து ஊதும் அமைப்பில் உள்ளது இடம்புரி சங்கு.
லட்சம் இடம்புரி சங்குகள் கிடைத்தால் ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும். மிக அரிதாக வலம்புரி சங்கு கிடைக்கிறது.

மனிதன் பிறந்தவுடன் சங்கில் பால், மருந்து முதலியவைகளை ஊட்டுவதே மரபாகும். இறந்த பிறகு சங்கு ஊதுவதன் மூலம் இறந்தவரின் ஆத்மா ஸ்வர்க்கம் அடையும் என்றும் நம்பப்படுகின்றது.
சங்கிலிருந்து எழும் ஒலி பிரணவமாகிய ஓங்கார ஒலி.
மருத்துவத் துறையிலும் சங்கை இழைத்து தேன் முதலியவற்றுடன்,  ளிக்க பல நோய்களை தீர்க்கும் என்கின்றது வைத்ய சாஸ்திரம்.
சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டிற்கு அருகாமையில் உள்ள திருக்கழுக்குன்றம் எனும் ஸ்தலத்தில் உள்ள சங்கு தீர்த்தம் எனும் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு கிடைப்பதாகவும், அவற்றை ஆலயத்தில் சேகரித்து வைப்பதாகவும் ஆலயக் குறிப்புகள் தெரியப்படுத்துகின்றன. (கடலில் சங்கு கிடைப்பது வழக்கம். ஆனால், குளத்தில் சங்கு கிடைப்பது அரிதிலும் அரிதானது)
***
நவக்ரஹ நாயகர்களில் ஒருவரான சந்திரன் மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாகவும் (சந்த்ரமா மனஸோ ஜாத: - புருஷ ஸூக்தம்), பாற்கடல் கடைந்த போது தோன்றியதாகவும் (சந்த்ர ஸஹோதரி ஹேமமயே - பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மியுடன் பிறந்தவர் - லக்ஷ்மி ஸ்தோத்ரம்) அறியமுடிகின்றது.
பெரும் தவம் செய்து கிரஹ பதவி பெற்றவர் சந்திர பகவான்.
சந்திரனுக்கு, தக்ஷ பிரஜாபதி எனும் மஹரிஷி, தன் குழந்தைகளான நக்ஷத்திர பதவி பெற்ற அஸ்வினி முதல் ரேவதி வரையிலான - 27 பேரையும் மணம் முடித்து வைத்தார்.
சந்திரன், 27 நக்ஷத்திர பெண்களில் கிருத்திகை மற்றும் ரோஹிணி மங்கையர்களிடம் மட்டும் அதிக அன்பு பாராட்டுவதைப் பொறுக்காத மற்ற நக்ஷத்திர பெண்கள், தந்தையாகிய தக்ஷ பிரஜாபதியிடம் முறையிட, கோபம் கொண்ட தக்ஷன் தன் தவ வலிமையை உபயோகித்து, சந்திரன் ஒவ்வொரு நாளும் தேயட்டும் என்று சாபமிட்டார்.
அவ்வாறே சந்திரனும் முழுமையாக தேய்ந்து போனான். (அ - இல்லை, மா - சந்திரன், வஸ்யை - இருப்பது ; சந்திரன் இருப்பது இல்லை, சந்திரன் இல்லாத தினமே அமாவாஸ்யை).
தன் ஒளி முற்றிலும் குன்றிய சந்திரன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ய, சந்திரனின் தவத்திற்கு மனமிரங்கிய சிவன், அவனைத் தன் சடாமுடியில் வைத்து ஆறுதல் கூறினார். (மாகேஸ்வர மூர்த்தங்கள் எனும் சிவபெருமானின் 25 வடிவங்களில் ஒன்று சந்திரசேகர மூர்த்தி).
சந்திரன் தனது குளிர்ந்த தன்மையினால், தன்னிடமிருந்து பெருகும் அமிர்த தாரையினால் சிவனுக்கு அபிஷேகம் செய்தான். இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான் அவனை வாழ்த்தி, நாளும் நீ வளர்ந்து பூரணமாவாய் என்று வரம் அளித்தார். (பூரணம் - முழுமை. பூர்ணிமா - பௌர்ணமி - முழு சந்திரன் உள்ள நாள்).
(சந்திரகாந்தக் கல் - இந்தக் கல்லில் இருந்து தானாகவே நீர் சுரக்கும். இதுவும் சந்திரனின் அம்சமாகவே கொண்டாடப்படுகின்றது. ஆனால், கிடைப்பதற்கு மிக மிக அரிதானது)
ஆக, சந்திரன் சிவபெருமானை வழிபட்டே வளர்ச்சி பெற்றான்.

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம்.
சூர்யாக்னி, கார்த்திகை அக்னி, அங்காரக அக்னி மூன்றும் சேர்ந்த நாளில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகின்றது. (இதற்கு முந்தைய பதிவான கார்த்திகை தீபம் * சொக்கப்பனை காணவும். அல்லது இங்கே க்ளிக் செய்யவும்).
கார்த்திகை மாதம் முழுக்க சிவபெருமானை தீப ஒளியாலேயே குளிப்பாட்ட வேண்டும் என்று சிவாகம சாஸ்திரங்கள் கூறுகின்றன (ஒவ்வொரு மாத சிவ அபிஷேகம் பற்றி காண அன்னாபிஷேகம் பதிவைக் காணவும் அல்லது இங்கே க்ளிக் செய்யவும்).

கார்த்திகை மாதத்தில் தீப ஒளியால் ஏற்படும் வெப்பத்தை சமன் செய்யவும், சிவரூபத்தை குளிர வைக்கவும் சங்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.

கடலில் இருந்து கிடைக்கும் சங்கு, பாற்கடலில் இருந்து தோன்றிய சந்திரனின் அம்சமாகப் போற்றப்படுகின்றது.
சங்கினில் நிரப்படும் தீர்த்தம் மேலும் குளிர்ந்து, அதைக் கொண்டு அபிஷேகம் செய்கையில் சிவபெருமான் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு வரம் அளித்ததைப் போல, பக்தர்களுக்கு என்றும் வளமான வாழ்க்கையை அளிப்பார் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமை சந்திர பகவானுக்கு மிக உரியது.

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம் என அழைக்கப்படும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக (பலமிழந்து) அமைவார்.

கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து
சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய
ஸோமவாரம் எனும் திங்கட்கிழமைகளில்,
சந்திர அம்சமான சங்குகளுக்கு பூஜை செய்து,
சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது,
சந்திரன் பலம் பெற்று வளர்ந்ததைப் போல,
நம் வாழ்க்கையையும் நல்வளங்கள் அனைத்தும் பெருகும்.

சந்திரன் இன்பங்களுக்கு அதிபதியாக விளங்குபவர். ஸோமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர். ஔஷதம் எனும் மருந்துப் பொருட்களுக்கும், மூலிகைகளுக்கும் அதிபதியாக விளங்குபவர்.

சந்திர அம்சமான சங்கு கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் அதைக் காண்பதும், எல்லையற்ற இன்பங்களையும், நோயற்ற நல்வாழ்க்கையையும் அருளும்.

சந்திரனுக்கு சுய ஒளி இல்லை என்றும் சூரியனின் யிரக்கணக்கான கிரணங்களுள் ஒன்றான சுஷ்முனா அல்லது சுஷ்மா எனும் ஒளிக்கீற்றினால் சந்திரன் ஒளிபெறுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆகையினால், சந்திர அம்சம் கொண்ட சங்கிற்கு, பூஜைகளின் போது, சூர்யனின் காயத்ரி மந்திரத்தையேச் சொல்லி பூஜிக்க வேண்டும் என்ற நியதியையும் சாஸ்திரங்கள் வகுக்கின்றன.

சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்து ஸோமவாரம் எனும் கார்த்திகை மாதத் திங்கட் கிழமைகளிலும், சங்கு அபிஷேகம் காணப் பெறுவது பெரும் பேற்றினை அருளக் கூடியது.
சங்கு அபிஷேகம் காண்போம் ! சங்கடங்கள் நீங்கப் பெறுவோம் !!- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் நடராஜர் லய டிரஸ்டி & பூஜை
- mail : yanthralaya@yahoo.co.in, yanthralaya@gmail.com
- cell : 94434 79572.

Tuesday, November 16, 2010

கார்த்திகை தீபம் * சொக்கப்பனை

கார்த்திகை தீபம் * சொக்கப்பனை * 

10.12.2019 *  திருவண்ணாமலை தீபம்
11.12.2019 *  ஸர்வ ஆலய தீபம்

உலகமும் உயிர்களும் தோன்ற முழு முதற்காரணம் அக்னி தான் என ஆன்மீகமும், விஞ்ஞானமும் ஒத்துக் கொள்கின்றது.
"அக்னிர் ஆப:" உபநிஷதங்கள் உரைக்கும் வார்த்தை. ஆகாசம் எனும் பரந்த பால் வெளியில் இருந்து அக்னி தோன்றிய பிறகு தான் நீர் தோன்றியது. நீரிலிருந்து தான் உயிர்கள் தோன்றின.
இதே கருத்தை விஞ்ஞானமும் ஏற்கின்றது.
பெருவெடிப்பு (big bang) நடந்த பிறகு, ஒரு விசையிலிருந்து வெளியேறிய வாயுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி (மைய ஈர்ப்பு & விலகல் விசையால்) நெருப்புக் கோளமாகி, காலப் போக்கில் குளிர்ந்து கோள்கள் ஆகின. குளிர்ந்ததால் ஏற்பட்ட நீரிலிருந்துதான் ஒரு செல் உயிரினம் தோன்றி, பரிணாம வளர்ச்சி அடைந்து தற்போது மனிதப் பிறவி வரை வந்திருக்கின்றது.
ஆக, ஆதி காரணம் அக்னி எனும் உஷ்ணம் தான். பெருவெடிப்பின் தாக்கம் ஒவ்வொரு அணுவிலும் உள்ளது. உயிர்கள் அனைத்தும் உஷ்ணத்தைத் தன்னுள் கொண்டிருக்கின்றது. அந்த உஷ்ணம் அணைந்தால் உயிர் மரிக்கின்றது.
அகச்சிவப்புக் கதிர் (infra red camera) காமிரா கொண்டு பார்த்தால், உயிருள்ளவை அனைத்தும் ஒளிர்ந்து தெரியும். ஏனெனில், ஒவ்வொரு உயிர் கொண்ட உடலில் இருந்தும் வெளியேறும் உஷ்ணம் தான் அகச்சிவப்புக் கதிர் காமிராவில் பதிவாகின்றது.
ஆதி மந்திரமும், பழமையான வேதமும் ஆகிய ரிக் வேதத்தின் முதல் வார்த்தையே அக்னி என்ற வார்த்தை கொண்டே ஆரம்பிக்கின்றது. "அக்னிமீளே புரோஹிதம்".
வேதங்கள் நான்கும் அக்னியை பெரும்பான்மையான மந்திரங்களால் போற்றுகின்றன. ஆதி மனிதனின் முதல் கண்டுபிடிப்பு wheel எனும் உருளை தான் என்றாலும், அக்னியை மனிதன் கையாளத் தெரிந்தபின் தான் மனித வாழ்க்கை மென்மேலும் மேம்பட்டது.
மனிதன் முதலில் கண்டு பயம் கொண்டது இயற்கை நிகழ்வுகளைப் பார்த்து தான். அக்னியைக் கண்டு பயந்து பிறகு அதை எப்படி உருவாக்குவது என்றும் கற்றுக் கொண்டான். நெருப்பைப் பாதுகாப்பதே அக்காலத்து மனிதர்களுக்கு பெரும் வேலையாக இருந்தது. அதையே ஆராதனையும் செய்து பெரும் மதிப்பும் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
அக்னி வழிபாடே ஆதி வழிபாடு. அக்னி சுத்தமானது.
ஹோம அக்னி சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யவும் கூடியது. காற்றிலிருக்கும் கெட்ட வாயுக்களை அகற்றக் கூடியது. ஹோமம் செய்வதால் உண்டாகும் அக்னி குளோரின் போன்ற கெட்ட வாயுக்களை மேல் தள்ளக் கூடியது.
ஒவ்வொரு மனிதருள்ளும் ஒரு அக்னி இருக்கின்றது. உயிரின் உள்ளுக்குள் இருக்கும் அக்னியை மென்மேலும் தூய்மையாக்கி இறைநிலை அடைய முடியும் என்று யோக சாஸ்திரங்கள் வழிகாட்டுகின்றன.
வாழ்வினங்களுக்கு அக்னியே உயிர் போன்றது போல, இந்து மதத்திற்கு உயிர் போன்றது அக்னி வழிபாடு.
ஆலயத்தில் தீபம் ஏற்றுவது, ஹோமம் செய்வது, தீமிதி செய்வது, தெய்வங்களுக்கான தீப ஆராதனை செய்வது என்று நமது ஆன்மீக வாழ்க்கையில் அக்னி மிக முக்கியம் இடம்பெறுகின்றது.
அக்னி வழிபாட்டை வேதங்கள் பல விதங்களில் போற்றுகின்றன.
அதே போல், பண்டைய தமிழ் இலக்கியங்களும் தீப வழிபாட்டினை போற்றுகின்றன.
தமிழ்த் திருமுறைகள் அனைத்தும் ஒரே ஒரு கருத்தை அடிக்கடி சொல்கின்றன. அது இறைவன் ஜோதி வடிவானவன். ('சொற்றுணை வேதியன் சோதி வடிவானவன்', 'அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்')
வைணவ பிரபந்தங்களும் தீப வழிபாட்டைப் போற்றுகின்றன. ('வையந்தகளியா வார்கடலே நெய்யாக')
அனைத்து தேவர்களும், ரிஷிகளும், உயிரினங்களும் தீப வடிவில் (ஷோடச உபசார தீபங்கள்) வழிபாடு செய்வதாகக் கருதிதான் தெய்வங்களுக்கான தீப ஆராதனை நடக்கின்றது.
அக்னி வழிபாட்டில் மிக எளிமையானதும், பெரும் புண்ணியம் தருவதும் ஆவது தீப வழிபாடு.
ஆகவே தான் ஆலயங்களில் தீபம் ஏற்றுவது பெரும் புண்ணியத்தினையும், முக்தியையும் நல்குவதாக புராணங்கள் பகர்கின்றன.
பிரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடி காண முடியாத ஒரு பெரும் சோதியைத் தேடியதாகவும், சிவபெருமான் - தானே அந்த ஜோதி என்று பிரம்ம விஷ்ணுக்களுக்கு காட்சி அளித்ததாகவும் லிங்க புராணம் கூறுகின்றது.
ஒரு சமயம், சிவாலயம் ஒன்றில், அங்குள்ள எலி ஒன்று தன்னையும் அறியாமல் அங்குள்ள தீபவிளக்கில் திரியை மேலும் தீண்டி ஜோதியைப் பெரிதாக்குகின்றது.
இதன் பயனாகத்தான், அந்த எலி அடுத்தப் பிறவியில் மஹா பலி சக்ரவர்த்தியானதாகவும், பெருமாளின் பாதத்தால் முக்தி அடைந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
தான் என்ன செய்கின்றோம் என்பதையே அறியாத எலி ஆலய தீபத்தைச் சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்ததால் முக்தி அடைந்தது என்றால், மனதில் தெய்வ நம்பிக்கையுடன் ஆலயத்தில் ஏற்றச் செய்யும் விளக்கிற்கு மனிதர்களுக்கு பெரும் பாக்கியத்தைத் தரக்கூடியதாகும்.
தீபம் ஏற்றுவதால் அக்ஞான இருள் நீங்கி, மெய்ஞான வெளிச்சம் கிடைக்கின்றது. இதுவே உயிர்களுக்குப் பேரானந்தத்தைத் தரக்கூடியது.
தீபவழிபாடு பற்றி சங்க இலக்கியங்களில் இருந்து திருஞான சம்பந்தர் தேவாரம் வரை பல குறிப்புகள் கிடைக்கின்றன.
"மைம்மிசை யின்றி மலைவிளக்குப் போலோங்கிசெம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள்" - என்று தொல்காப்பியம் புறத்திணையும்,
"வானம் ஊர்ந்த வளங்கொளி மண்டிலம்நெருப்பெனச்சிவந்த உருப்பு அவிர் அம்கட்டு - என்னும் ஒளவையார் கூற்றும் (அகநாநூறு),
'தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே' என்று, மாணிக்கவாசகரின் மணிவாசகமும்,
ஒளிவளர் விளக்கே எனும் ஒன்பதாம் திருமுறையும்,
'கார்த்திகை விளக்கீடு காணாதே போதியோ' என்று திருஞானசம்பந்தர் தேவாரமும் தீப வழிபாட்டினைப் போற்றுகின்றன.
தீப வழிபாடு தமிழர்களின் வழிபாடு. அது பண்டைய காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்றது.
கார்த்திகை மாதம், கார்த்திகை (பெளர்ணமி) நக்ஷத்திரம் கூடிய நன்னாளின் மாலை நேரத்தில் வீடுகளில் தீப விளக்குகள் வரிசையாக ஏற்றிக் கொண்டாடப்படும்.
இந்த நன்னாளின் முக்கியத்துவத்தைக் காண்போம்.

கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசிப்பார்.
சூர்யன் அக்னிக் கோளம்.
விருச்சிக ராசி செவ்வாய் பகவானுக்கு உரியது. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்.
கிருத்திகை நக்ஷத்திரத்திற்கு உரிய தெய்வம் தெய்வம் அக்னி பகவான்.
சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பஞ்சபூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலம். அந்த ஆலயத்தில் கார்த்திகை தீபம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் கொண்டாடப்படுகின்றது. (அன்றைய தினத்தில் திருவண்ணாமலை க்ஷேத்ரத்தில் சிவனும் சக்தியும் இணைந்த வடிவாகிய அர்த்தநாரீஸ்வரருக்கு தீபம் ஏற்றிய பிறகு தான் மலை மேல் தீபம் ஏற்றப்படும்).
ஏனைய சிவாலயங்களிலும், முருகப்பெருமான் குடிகொண்ட ஆலயங்களிலும் - அந்தந்த ஆலய ஆகம மற்றும் காலம் காலமாக கடைபிடிக்கும்  வரைமுறைப்படி - ஸர்வாலய தீபமாகக் கொண்டாடப்படுகின்றது.
கார்த்திகை தீபத்தினை ஏற்றுவதும், காண்பதும் நம் வாழ்வில் ஏற்படும் இருள் எனும் துன்பங்களை நீக்கி, மகிழ்ச்சி எனும் ஒளிவெள்ளத்தை அளிக்கும் என்பது திண்ணம்.

சொக்கப்பனை :
திருக்கார்த்திகை தினத்தில் சொக்கப்பனை ஏற்றுவது வழக்கம்.
சொக்கப்பனை என்பது சொர்க்கப் பனை, சுவர்க்கப் பனை, சொக்கர் (சிவபெருமான்) பனை என்பனவற்றின் திரிபாக அறிஞர்கள் கூறுவார்கள்.
திரிபுரஸம்ஹாரத்தினையும், அடிமுடி தெரியாவண்ணம் பிரம்ம விஷ்ணுக்களுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக நம்பப்படுகின்றது.
சொக்கப்பனை - பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது.

வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது.

பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.
நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை பற்றிய முந்தைய பதிவில் மேலும் பல விஷயங்கள் தெரிவிக்க உள்ளன என்றாலும், தீபத் திருநாள் சம்பந்தமாக ஒரு அருமையான கருத்து அதில் அமைந்துள்ளது.
கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரம் அன்று புதுமணமகளைக் கொண்டு, புது தீபம் ஏற்றச் சொல்வதும், பால் காய்ச்சச் செய்வதும், மணல் படாத கார் அரிசியைக் கொண்டு செய்யப்படும் அவல் - வெல்ல இனிப்பைச் செய்து நிவேதனம் செய்வதும், தீபங்களை வீடுகளிலும், தெருக்களிலும் ஏற்றச் செய்வதும் பற்றி அகச் செய்யுள்களில் நக்கீரனார் குறிப்பிடுகின்றார்.
கார்த்திகை தினத்தன்று அவல் பொரி இனிப்பு செய்து நிவேதனம் செய்வது காலகாலமாக நடந்துவருவதை இந்தப் பழங்காலச் செய்யுள் அறிவிக்கின்றது.
தீபம் ஏற்றி சிவபதம் அடைந்தவர்களை பெரியபுராணம் (கணம்புல்ல நாயனார்) அற்புதமாக விளக்குகின்றது.
தீபம் ஏற்றுவோம் ! தீவினைகள் நீங்கப் பெறுவோம் !!
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜை
- செல் : 94434 79572, 936260299
www.facebook.com/deekshidhar
http://natarajadeekshidhar.blogspot.com

Sunday, November 7, 2010

ஸ்கந்த சஷ்டி

திருமுருகாற்றுப்படை * ஸ்கந்த சஷ்டி (02.11.2019 - சனிக் கிழமை)


முருகன். அழகன். தமிழ்க் கடவுள். குமரன். ஆறுமுகன். ஸ்கந்தன்.
முருகனையே முழு முதற்கடவுளாக வணங்க செய்யும் வகை கௌமாரம் ஆகும்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை அக்னி பகவான் கங்கையில் விட, கங்கை சரவணப்பொய்கையில் விட, அந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக, அந்த ஆறு குழந்தைகளுக்கும் கிருத்திகை முதலான நக்ஷத்ர தேவதைகள் பாலூட்ட, பார்வதி தேவியானவள் அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஸ்கந்தர் ஆக்கினள். (ஸ்கந்தம் என்பதற்கு சேர்த்தல் என்று பொருள்).

முருகப்பெருமான் ஆறுமுகமும், பன்னிரு தோள்களும் கொண்டு, படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாவிடம் பிரணவத்திற்குப் பொருள் கேட்க, அவர் அதை அறியாததால், பிரம்மாவை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார்.

சிவபெருமான், முருகப் பெருமானிடம் பிரணவப் பொருள் கேட்டு உணர்ந்தார். பிரணவத்தை தந்தைக்கே உபதேசம் செய்தார். முருகப்பெருமான், அறிவிற்கும் - வயதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உலகிற்கு உணர்த்தியவர்.
வேத மந்திரங்களில் ஓம் எனத் தொடங்கி ஓம் என முடியுமாறு இரண்டு தெய்வங்களுக்கு மட்டுமே அமைந்துள்ளன.

ஒன்று, 'ஓம் ஈசான .... ஸதாசிவோம்' என்று அமைந்த, ஓங்காரத்தின் விளக்கத்தை முருகப் பெருமானிடமிருந்து கேட்டறிந்த சிவபெருமானுக்கு உரியது.
மற்றொன்று, 'ஓம் குமாரஸ்சித் பிதரம் .... ஸுப்ரஹ்மண்யோம்' என்று அமைந்த பிரணவத்தை உபதேசித்த முருகப் பெருமானுக்கு உரியது.
தேவர்களை வருத்திய சூரன் எனும் அரக்கனை தன் படைகள் கொண்டு வதம் செய்தவர். அதுவே சூரஸம்ஹாரம். ஐப்பசி மாத வளர்பிறை ஆறாவது தினமாகிய ஸ்கந்த சஷ்டி அன்று முருகப் பெருமானுக்கு மிக உகந்த நன்னாள். அசுரரை வதம் செய்த, எதிர்ப்புகளை நீக்கிய, மகிழ்வை அளித்த பொன்னாள். முருகனை வழிபட்டால் முன்வினைகள் நீங்கி முழுமையான வாழ்வு கிட்டும்.

தமிழ்க் கடவுளாக போற்றப்படுபவர் முருகப் பெருமான். தமிழ்ச் சங்கத்தினை காத்தருளிய கடவுள். காலக்கணக்கின் படி, நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் நூல்களை வகைப்படுத்திப் பார்த்தோமானால், சங்க இலக்கியங்களே முதல் வரிசையில் இருக்கின்றது. (சங்க இலக்கியங்களுக்கு முன்னதான - குமரிக்கண்டம், பஃறுளியாறு காலத்திய - இலக்கியங்கள் கடல் கொண்டதாக தமிழறிஞர்கள் கூறுகின்றனர்.)

சங்க இலக்கியங்களில் உள்ள அறநானூறு மற்றும் புறநானூறு போன்றவை காதல், வீரம், அறம் போன்றவற்றை இயம்பினாலும், தனிப்பட்ட முறையில் ஒரு தெய்வத்தினை போற்றி வழிபடும் வகையில் அமையவில்லை.

சங்க இலக்கியங்களுக்கு அடுத்தபடியாக, தமிழ் இலக்கிய கால வரிசையில் அமைவது பத்துப்பாட்டு எனும் தொகுப்பாகும்.
அவை,
1. திருமுருகாற்றுப்படை, 2.குறிஞ்சிப் பாட்டு, 3.மலைபடுகடாம், 4. மதுரைக் காஞ்சி, 5. முல்லைப்பாட்டு, 6. நெடுநல்வாடை, 7. பட்டினப் பாலை, 8. பெரும்பாணாற்றுப்படை, 9.பொருநராற்றுப்படை, 10.சிறுபாணாற்றுப்படை
தமிழன்னையின் நெற்றிப் பொட்டு போல அமைந்தது பத்துப்பாட்டில் முதன்மையானதாக அமைவது திருமுருகாற்றுப்படை ஆகும். இந்தப் பத்துப்பாட்டு தொகுப்பிற்கும் கடவுள் வாழ்த்து போலவும் அமைந்திருக்கின்றது.

நக்கீரர் இயற்றியது திருமுருகாற்றுப்படை. தமிழிலக்கியத்தின், முதல் தனிப்பட்ட தெய்வத்தினைப் போற்றி அமைந்த தன்னிகரற்ற திருமுருகாற்றுப்படை - முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளைப் போற்றிச் சொல்வதாக அமைந்தது.

தமிழிலக்கியத்தின் முதல் காவியமாக, தமிழ்க் கடவுளான முருகனைப் பற்றி அமைந்திருப்பது என்னே பொருத்தமாக அமைந்துள்ளது !

சங்க இலக்கியங்களில் மிக முக்கியமான இலக்கியமாக விளங்குவது ஆற்றுப்படை என்பதாகும். (ஆறு – வழி, படை - காட்டுதல் = தெய்வத்திடம் வழிகாட்டும் பாடல்கள், அதாவது தான் பெற்ற இன்பத்தை மற்றோரும் பெறச்செய்யல்).

தமிழ்க் கடவுளான முருகனின் அருள் பெற்ற ஒரு புலவன், கந்தனருள் பெற விரும்புபவருக்கு நல்வழி காட்டும் வகையில் அமைந்தது.

திருப்பரங்குன்றம், பழமுதிர்ச் சோலை தலங்களின் இயற்கை வளம், முருகன் உருவச் சிறப்பு, ஊர்திகள், மாலைகள், கொடிகள் பற்றிய செய்திகளுடன் அமைந்துள்ளது. திருமுருகாற்றுப்படை, சுவாமிமலை முருகன் ஆலயத்தில் அர்ச்சகர் ஈரமான ஆடையுடன் மிக ஆசாரமாக பூசைகள் புரியும், வரலாற்றுச் செய்திகளைக் கூறுகிறது.

இந்நூலின் சிறப்பை "பத்துப்பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவரோ, எத்துணையும் பொருட்கிசையும், இலக்கணமில் கற்பனையே" என மனோன்மணியமும், "மூத்தோர் பாடியருள் பத்துப்பாட்டு" என தமிழ் விடு தூதும் போற்றுகின்றன.

பண்டை இலக்கியமான இதில், திருவேரகம், பழமுதிர்ச்சோலை போன்ற இடங்களில் உள்ள ஆலயங்கள் போற்றப் படுகின்றன. தமிழர்களின் தொன்று தொட்ட ஆன்மீக உணர்வை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது.

பழங்கால இலக்கியப் புலவரான நக்கீரர் ஒரு சமயம் தவத்திலிருந்த போது, அருகிலிருக்கும் சுனையிலிருந்து சலசலப்பு எழுந்தது. தவம் கலைந்து பார்த்தபோது, சுனையில் ஒரு வித்தியாசமான படைப்பாக, பறவையும், மீனும் இணைந்த பிணைப்பாக உருவைக்கண்டார். மீன் தான் வாழ, பறவையை நீருக்குள் இழுத்தது; பறவையோ தான் வாழ வானில் பறக்க சிறகடித்தது. இரண்டும் வெவ்வேறு வாழ்விடங்களைக் கொண்டவை. ஒன்று வாழ இன்னொன்று மடிய வேண்டிய படைப்பை கடவுள் படைத்தானே என்று எண்ணி, தவத்தை சிறிது மறந்தார்.

உடனே ஒரு பூதம், இவர் முன் தோன்றி, "இதைப் படைத்தது நானே, சிவ வழிபாட்டில் மனம் வேறானவர்கள் ஆயிரம் பேர்களை சிறைப் பிடித்து பலி கொடுக்கும் முயற்சியில் நீங்கள் ஆயிரமாவது மனிதர்" எனக் கூறி, நக்கீரரை சிறையில் அடைத்தது.

நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாட, முருகனின் வேல் வந்து இவருடன் சிறையிலிருந்த தவஞானியரையும் விடுவித்தது என்று புறப்பாடல் ஒன்று திருமுருகாற்றுப்படை தோன்றிய வரலாறைக் குறிக்கிறது.

திருமுருகாற்றுப்படையை படிப்பதனால் அறுபடை வீடுகளிலுள்ள முருகப் பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும். (திருமுருகாற்றுப்படை படிக்கவும், அதன் அர்த்தம் தெரிய விரும்பவும் அன்பர்கள் கீழ்க்கண்ட லிங்க் சென்று அறிந்து கொள்ளலாம்.  http://kaumaram.com/tmpadai/tmpadai01u.html

முருகப் பெருமானின் முழு திருவிளையாடல்களையும் அறிவிப்பது கந்தபுராணம் ஆகும்.

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஆதிசைவ குலத் தென்றல் ஆகிய கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றியது.

சிவபெருமான் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு 'தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என்றும், 63 நாயன்மார்களின் வரலாற்றைப் புகழும் பெரியபுராணம் எழுத சேக்கிழாருக்கு 'உலகெலாம்' என்றும் முதல் அடியெடுத்துக் கொடுத்தது போல,
முருகப் பெருமான் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு 'திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்று முதல் அடி எடுத்துக் கொடுக்க, கந்தபுராணம் முழுதும் எழுதப்பட்டது.

கந்தபுராணத்தை அரங்கேற்றும் செய்யும் நேரத்தில், திகடசக்கரம் என்ற முதல் வார்த்தையே தவறானது என்று அரங்கில் உள்ள ஆன்றோர்கள் ஆட்சேபம் தெரிவிக்க, திகைத்த கச்சியப்பர், முருகப் பெருமானை உளமார பிரார்த்திக்க, முருகப் பெருமான் ஒரு வேதியவர் வடிவில் வந்து, வீரசோழியம் எனும் தமிழிலக்கண நூலில் இருந்து, திகடசக்கரம் எனும் வார்த்தைக்கு திகழ் + தச + கரம் என பொருள் உரைக்க கந்தபுராணம் அரங்கேற்றப்பட்டு, உலகம்  முழுவதும் பரவியது. (திகழ் தச கரம் கொண்டவர் சிவபெருமான். ஐந்து தலைகளும், பத்து கரங்களும் கொண்ட சிவபெருமானின் மைந்தனாம் கந்தனின் வரலாற்றை உரைப்பது கந்தபுராணம்)

முருகப் பெருமான் ஒரு வரப்ரஸாதி.

"சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்" எனும் வழக்கு மொழிக்கு - சஷ்டி தினத்தில் விரதம் இருந்து முருகனை வழிபடும் மங்கையருக்கு, அகப்பையாகிய கருப்பையில் கரு வளர்ந்து வம்சம் விளங்கும் என்பது தான் முழு அர்த்தமாக விளங்கும்.

காவடிச் சிந்து எனும் பாடல் வகை முருகப் பெருமானுக்காகவே அமைந்தது.
முருகனைத் துதித்த 'வள்ளி கணவன் பேரை' பாடலை https://www.youtube.com/watch?v=zdZiGrEcBq0 லிங்க் சென்று  கேட்கலாம்.

அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய அற்புதமான காவடி சிந்து ஆகிய சென்னிகுல நகர் வாசன் எனத் தொடங்கும் பாடலை https://www.youtube.com/watch?v=BOzaOxeRKdE லிங்க் சென்று கேட்கலாம்.

முருகனை தரிசித்தால் கிடைக்கும் பலனை விவரிக்கும், கவி குஞ்சரபாரதி இயற்றிய  வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீ முத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ் பாடலின் கடைசி பாடல் :

பங்கயம் திகழ் தகு சரவணைப் பொய்கை மூழ்கில் பவத்திருளை நீக்கி வைக்கும்
படியில் நின் கிரியை பிரதட்சிணம் செய்திடில் பாக்கியங்கள் வந்தடுக்கும்
துங்கமிகு நின் பாத சேவை செய்வோர் மனத்துயரங்கள் தனை அகற்றும்
துய்ய வெண்பொடி நுதலில் இட்டிடில் பிரபஞ்ச தோஷ சங்கைகள் பறக்கும்
தங்கு கிருத்திகை விரதம் உற்றவர்கள்பால் பிணிகள் சற்றும் அணுகாது காக்கும்
சஷ்டி விரதம் ஓம்பும் மலடிக்கு உன்னருள் புத்திர சந்ததி தனைக் கொடுக்கும்
மங்கல கல்யாண சுகுணங்கள் என் சொல்லுகேன் மோகவள்ளி குஞ்சரி மணாளா
வனசமலரயன் மதனையருள் சரச கோபால மருக சரவண முருகனே.
(இதன் ஆடியோ மிக விரைவில் இப்பக்கத்திலேயே வலையேற்ற உள்ளோம்.)

முருகன் திருவடியைப் போற்றுவோம்!

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
http://natarajadeekshidhar.blogsopt.in
- mail : yanthralaya@gmail.com
cell : 94434 79572, 93626 09299.
www.facebook.com/deekshidhar

Monday, November 1, 2010

அன்னதானம்

அன்னதானம்.
தானம்.
நம்மிடம் இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈந்து - கொடுப்பவரும், பெறுபவரும் மகிழ்ச்சி அடைவதால் ஏற்படும் - பெரும் புண்ணியம் பெறுவதற்கான புனிதச் செயல்.
தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம் என்று பொதுவாக மூன்று வகைப்படுத்தப்படுகின்ற தானங்களிலும்,
தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் சுமார் 42 வகை தானங்களிலும்,
மிக மிக உயர்ந்ததாகவும், உன்னதமானதாகவும், அனைவரும் செய்தே ஆகவேண்டிய தானமாகவும் கருதப்படுவது அன்னதானம் மட்டுமே ஆகும்.

உணவின்றி உயிரில்லை. உலகில்லை.
உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது.
வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும்.
மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும்.
ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும்.
ஆகையாலே பூரணமான தானம் - அன்னதானம் மட்டுமே ஆகும்.

எந்த ஒரு பெரும் வைபவத்திலும் இறுதியாக அமைவது அன்னதானம் மட்டுமே. வைபவத்தில், எந்த ஒரு குறையிருந்தாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் களைவது அன்னதானம் மட்டுமே ஆகும்.
உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.
அன்னதாதா சுகி பவ
(அன்னத்தை வழங்குபவர் சுகமாக வாழ்வார்) - என்ற மூதுரையும்,
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி
(திருக்குறள் - 226) என்ற திருக்குறளும் அன்னதானத்தின் அருமைகளை அறிவிக்கின்றன.
அன்னதானத்தின் பெருமைகளை அளவிடமுடியாது. அதைப்பற்றி அறிவிக்க அனேகம் உள்ளன.

தானம் செய்வதில் பெரும் பெயர் அடைந்தவன் - கர்ணன்.
மஹாபாரத இதிகாசத்தில் கர்ணன் - அவன் செய்த கொடையாலும், தர்மத்தாலும், தானத்தாலும் பெரும் பெயர் பெற்றான்.
கர்ணனுக்குப் பிறகு கொடையில்லை என்ற சொல்வழக்கே உண்டு. கர்ணனைப் போல் யாவரும் தானம் செய்தது கிடையாது. அவன் பெருமையை அனேக சம்பவங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.
ஒரு சமயம், கடும் மழையால் அகிலமே நனைந்திருக்கின்றது. அச்சமயம் பார்த்து வேதியர் ஒருவர் தான் செய்யவேண்டிய ஒரு பெரும் யாகத்திற்காக, காய்ந்த ஸமித்துகளும், மரங்களும் பெற வேண்டி, அனைவரிடமும் வேண்டுகின்றார். சமையலுக்குக் கூட விறகு இல்லாத நிலையில் அனைவரும் தங்களிடம் இல்லை என்று கைவிரித்து விடுகின்றனர். இறுதியாக கர்ணனிடம் வந்து யாசிக்கின்றார்.
அவர் கர்ணனிடமிருந்து பெரும் அளவில் காய்ந்த மரங்களை யாகங்களுக்காக மனமகிழ்வுடன் பெற்றுச் செல்கின்றார்.
எங்கிருந்து இந்த அளவுக்குக் காய்ந்த மரங்கள் கிடைத்தன என்று அனைவரும் வியந்தனர்.

அரண்மனையின் உள்ளே சென்று பார்த்தபோது தான் தெரிந்தது, தனது மணிமண்டபத்தினை இடித்து, மண்டபத்தினைத் தாங்கிக் கொண்டிருந்த உத்தரங்களையும், தூண்களையும் (மண்டபத்தின் உள்ளே இருக்கும் தூண்களும், உத்தரங்களும் காய்ந்துதானே இருக்கும்) வெட்டிக் கொடுத்திருக்கின்றான் கர்ணன்.
அந்த அளவுக்கு கொடுப்பதிலே வள்ளல் கர்ணன். வறுமைக்கே வறுமையை வைத்தவன். இடது கை கொடுப்பதை வலது கை அறியாவண்ணம் (இடக்கையில் இருப்பதை வலக்கையில் கொண்டு வரும் நேரம் கூட, தானத்தின் தன்மையை மாற்றிவிடும். ஆகையால், இடக்கையில் எடுத்ததை அக்கையாலேயே வழங்கும் தன்மை கொண்டவன்) கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரத்தை உடையவன்.

கர்ணனின் கொடைக்கு மற்றும் ஓர் உதாரணம்.
மஹாபாரதப் போரில் கர்ணனின் மார்பை அம்புகளால் துளைத்தெடுக்கின்றான் அர்ஜுனன். ஆயினும் கர்ணனின் உயிர் பிரியவில்லை. அவன் செய்த தர்மம் அவனின் தலையைக் காக்கின்றது. பகவான் கிருஷ்ணர் ஒரு வேதியர் வடிவம் கொண்டு கர்ணனிடம், இதுவரை கர்ணன் செய்த புண்ணியத்தை அனைத்தையும் தானமாக வேண்டுகின்றார்.
இதுவரை செய்த தானத்தைக் கொடுப்பதால் அதற்கென்று ஒரு புண்ணியம் வருமே! அந்தப் புண்ணியத்தையும் தானமாக கொடுக்கின்றார் கர்ணன்.
எப்படி?
வேதியர் வடிவம் கொண்ட கிருஷ்ணருக்கு 'இப்பிறப்பில் யான் செய்புண்ணியம் அனைத்தையும் தருகின்றேன்' என்று உரைக்கின்றார்.
செய்புண்ணியம் எனும் வார்த்தை - ஒரு வினைத் தொகை. வினைத் தொகை முக்காலத்தையும் குறிக்கக் கூடியது.
உதாரணமாக ஒரு வினைத்தொகை வார்த்தை : ஊறுகாய். ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறப்போகின்ற காய் என்று அர்த்தம் அமையும்.
அது போல - செய்புண்ணியம் எனும் வார்த்தை - இதுவரை செய்த புண்ணியம், இப்பொழுது செய்கின்ற புண்ணியம், எதிர்வரப் போகின்ற புண்ணியம் என அனைத்தையும் தானமாக கண்ணனுக்கு அளிக்கின்றான் கர்ணன்.
கர்ணனுக்கு அளப்பரிய வகையில் தானம் செய்த பெரும் பெயர் கிடைக்கின்றது. தானம் பெற்றவுடன் வேதியர், தன் சுய உருக்கொண்டு, கர்ணனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டுகின்றார்.
கர்ணன் மடிகின்றான்.
இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கின்றான் கர்ணன். எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்ற உணர்வே கிடையந்தாயிற்றே!
தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு தோன்றுகின்றார்.
கர்ணனிடம் நாரதர், பசி நீங்கவேண்டுமானால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் என்கிறார். அதன்படி, ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால், பசி நீங்குகின்றது. ஆனால், மறுபடிப் பசியெடுக்கின்றது.
மறுபடியும் நாரதரை கர்ணன் நினைக்க, அவர் தோன்றுகின்றார். அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும், ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார்.
அதற்கு, நாரதர் உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய், ஆனால், ஒரே ஒரு தானத்தைத் தவிர. அது அன்னதானம். அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால், இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது. உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் உன்னிடமிருந்து தானம் பெற்றவர் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்றிருக்கின்றாய். நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானத்திற்கான காரணியாக விளங்கிய உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது. ஆகையால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது, சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார்.
அன்னதானம் செய்யாமலேயே, அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால், அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும்.
கர்ணனுக்கு ஒரு எண்ணம் தோன்றுகின்றது. அன்னதானத்தையும் அளப்பரிய வகையில் செய்யத் தோன்றுகின்றது. பரம்பொருளிடம் தன் எண்ணத்தை முன்வைக்கின்றான் கர்ணன்.
....
கி.பி. எட்டாம் நூற்றாண்டு.
மாமல்லபுரத்தைக் கட்டிய நரசிம்ம பல்லவன் காலம்.
நரசிம்ம பல்லவனின் படைத்தளபதி பரஞ்சோதி. மகா வீரர்.
பரஞ்சோதி படைக் கலன்களைக் கையாள்வதில் பெரும் தேர்ச்சி பெற்றிருந்தார். அதேசமயம் சிவத் தொண்டிலும், சிவனடியார்க்குத் தொண்டு செய்வதிலும் மனம் அதிகமாகச் சென்றது.
நரசிம்ம பல்லவனுக்காக, வடபுலம் சென்று வாதாபி எனும் நகரைக் கொளுத்தி வெற்றி வாகை சூடி வருகின்றார்.
பரஞ்சோதி படைத் தளபதியாக இருந்தாலும், ஆழ்மனதில் சிவத்தொண்டு செய்யும் மனப்பாங்கே அதிகமாக இருந்தது.
வெற்றிச் செய்தியை நரசிம்ம பல்லவனுக்குச் சொல்லிய அதே நேரம் தன் உள்ளக் கிடக்கையாகிய சிவத்தொண்டு புரிவதே தன் விருப்பம் என்று சொல்கின்றார்.
மனம் மகிழ்ந்த பல்லவன் பரஞ்சோதியின் விருப்பத்திற்கிணங்க, அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தந்தான்.
திருவெண்காட்டு நங்கை எனும் தன் மனையாளுடன் இல்லறம் நடத்திவந்தார். சீராளன் எனும் செல்வ மகன் பிறந்தான். மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
சிவனடியார்களில் தான் ஒரு சிறு அடியவர் என அறிவித்துக் கொண்டமையால் அவர் சிறுத்தொண்டர் என அன்புடன் அழைக்கப்பட்டார்.
ஒவ்வொரு நாளும் சிவனடியாருக்கு அன்னதானம் இட்ட பிறகே உண்ணும் வழக்கம் கொண்டு, அந்த சிவப் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார். அப்பணியை குடும்பமே உவந்து செய்து வந்தது.
அவரின் சிவத்தொண்டினை உலகறியச் செய்ய சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.
ஒரு நாள், வைரவர் (வடதேசத்திலிருந்து வந்த காபாலிகர். சிவச் சின்னங்களோடு, கையில் மண்டையோடு, சூலாயுதம் தரித்து) வேடம் கொண்டு, சிறுத்தொண்டர் இல்லம் சென்றார்.
அச்சமயம், சிறுத்தொண்டர் சிவனடியார் எவரேனும் இருக்கின்றாரா என்று பார்த்து அழைத்து வர வெளியில் சென்றிருக்கின்றார்.
வைரவர் வேடம் கொண்ட சிவமூர்த்தியைக் கண்ட சிறுத்தொண்டரின் மனைவி ஆவலுடன் அன்னமிட அழைக்கின்றார்.
அவரோ, ஆண்கள் இல்லாத வீட்டில் நுழையமாட்டேன், அருகில் (உள்ள ஆலயமாகிய திருச்செங்காட்டங்குடியின் ஸ்தல விருக்ஷமாகிய) அத்தி மரத்தின் கீழ் அமர்கின்றேன், உன் கணவர் வந்தால் வரச்சொல் என்று சொல்லிச் சென்றுவிட்டார்.
சிவனடியார் எவரையும் காணாமல் மனம் நொந்து வருகின்ற கணவரைக் கண்டு, அவரின் மனைவி நடந்ததைச் சொல்ல, சிறுத்தொண்டரோ மனம் மிக மகிழ்ந்து அத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருந்த வைரவர் கோலம் கொண்ட வடகயிலை நாதனின் பாதத்தில் விழுந்து, அன்புடன் அடியவன் இல்லம் வந்து அமுது கொண்டு, அருள்பாலிக்க அழைக்கின்றார்.
வைரவரோ, நான் கேட்கும் உணவை உன்னால் அளிக்க முடியாது. ஆகையால் உன் இல்லம் வரமுடியாது என்கின்றார்.
சிறுத்தொண்டர், தாங்கள் கேட்கும் உணவை மிக நிச்சயமாக அளிப்பேன் என்று வாக்குக் கொடுக்கின்றார்.
அனைவரும் அதிரும் வண்ணம், வைரவர், 'நான் ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் உணவு கொள்வேன். அந்த உணவு ஐந்து வயதுடைய, குடும்பத்திற்கு ஒரே வாரிசான ஆண் குழந்தையின் கறியை மட்டுமே சாப்பிடுவேன். அதுவும் அக்கறியை அக்குழந்தையின் அன்னை கால்களைப் பிடிக்க, தந்தை அரிவாளால் அரிந்து சமைக்க வேண்டும். இந்தச் செயலைச் செய்யும் போது எவர் கண்ணிலும் கண்ணீர் வரக்கூடாது. மனமகிழ்வுடன் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் தான் சாப்பிடுவேன்' என்கின்றார்.
எந்தக் குழந்தையின் தாய் தன் ஒரே மகனை வெட்டுப்படுவதைப் பார்க்க முடியும்? எந்தத் தந்தைதான் தன் ஒரே குழந்தையை வெட்ட முடியும்? அதுவும் அச்செயலை மனமகிழ்வுடன் எவர்தான் செய்ய முடியும்?
கலங்கிய நிலையில் வீட்டிற்கு வரும் கணவரை ஆவலுடன் கேட்கின்றார் அவரின் மனைவி. நடந்ததை விவரிக்கின்றார் சிறுத்தொண்டர். வேறு எவரிடமும் சென்று உங்கள் குழந்தையை வெட்டிக் கொடுங்கள் என்று கேட்க முடியாதே என்று வருந்துகின்றார்.
இருவரும் சேர்ந்து ஒரு முடிவெடுக்கின்றனர். தமது ஒரே குழந்தையை, ஆசையும் பாசமும் சேர்த்து வளர்த்துவரும், செல்வ மகனை, ஐந்து வயதுடைய சீராளனையே கறி சமைத்து அன்னமிட முடிவெடுக்கின்றனர்.
பாடசாலை சென்றிருந்த சீராளனை அழைத்துவருகின்றார் சிறுத்தொண்டர். ஏதுமறியாக் குழந்தை ஆசையுடன் தந்தையின் கழுத்தைக் கட்டி முத்தமிடுகின்றது. வீட்டிற்கு வந்தவுடன், குழந்தையைக் குளிப்பாட்டி, அழகு செய்து, அமரவைக்கின்றார் திருவெண்காட்டு நங்கை.
நங்கை கால் பிடிக்க, சிறுத்தொண்டர் குழந்தையை அரிவாளால் அரிந்து தர, குழந்தைக் கறி செய்கின்றனர்.
இதை அனைத்தையும் முடித்து வைரவரை அழைக்கின்றார்.
வைரவரும் சிறுத்தொண்டரின் இல்லம் வந்து அன்னமிடச் சொல்கின்றார். நங்கை அன்னத்துடன் குழந்தைக் கறியையும் கொண்டு வந்து பரிமாறுகின்றார்.
அப்போது வைரவர் தன்னுடன் அமர்ந்து சாப்பிட சிறுத்தொண்டரை அழைக்கின்றார். வைரவரின் மனம் கோணக் கூடாது என எண்ணி, அவர் அருகே அமர்கின்றார். சிறுத்தொண்டருக்கும் குழந்தைக் கறியுடன் உணவு பரிமாறப்படுகின்றது. தன் மகனின் கறியை தானே சாப்பிடவும் துணிகின்றார்.
வைரவர் மேற்கொண்டு, சிறுத்தொண்டரை நோக்கி, உனக்கு மகன் இருக்கின்றான் எனில் அவனையும் அழைத்து வந்து சாப்பிடச் சொல்லுங்கள் என்கின்றார்.
தன் மகனின் கறியைத் தான் சமைத்தோம் என்று சொன்னால், இறந்தவர் வீட்டில் வைரவர் சாப்பிட மாட்டாரோ என்று எண்ணி அஞ்சி, 'அவன் உதவான்' என்கின்றார்.
வைரவரோ, 'இல்லை இல்லை. அவன் வந்தால் தான் சாப்பிடுவேன்' என்கின்றார்.
மனம் கலங்கி நின்ற சிறுத்தொண்டரை நோக்கி, வைரவர், உங்கள் மகனை அழையுங்கள் என்கின்றார்.
நிலைதடுமாறி, வாசலில் நின்று 'சீராளா' என்கின்றார்.
மகன் எப்படி வரமுடியும்?
வைரவர் திருவெண்காட்டு நங்கையை நோக்கி, நீங்கள் சென்று அழையுங்கள் என்கின்றார்.
அவரும் தலைவாசல் வந்து 'சீராளா' என்கின்றார்.
அனைவரும் அதிசயக்கும் வகையில், சீராளன் பாடசாலையிலிருந்து வரும் நிலையில், 'அப்பா, அம்மா' என்று அழைத்தபடியே வர, பெற்றோர்கள் அவனை அப்படியே வாரியெடுத்து உச்சிமோர்ந்து, மகிழ்ந்து உள்ளே வர, அங்கே இருந்த உணவையும், வைரவரையும் காணவில்லை.
சிவனும் பார்வதியும் இடபாரூடராகக் காட்சி நல்கினார்கள்.
அனைவரும் நற்கதி பெற்றனர்.
.....
கர்ணனுக்கும், சிறுத்தொண்டருக்கும் என்ன சம்பந்தம்?
சொர்க்கத்திலும் பசியெடுத்த கர்ணன் பரம்பொருளிடம், தான் மறுபடியும் பூலோகத்தில் பிறந்து, கொடைக்கு ஒரு கர்ணன் என்று பெயர் எடுத்தது போல, அன்னதானத்திலும் தான் ஒரு பெரும் பெயரும் பேறும் பெற வேண்டும் என்று பெரும் தவம் செய்து வேண்டிக்கொண்டான்.
(கர்ணனின் முற்பிறப்பு ஸஹஸ்ர(1000)கவசன் என்றும், நரநாராயணர்களால் 999 கவசங்கள் அறுபட்டு, சூரியனிடம் அடைக்கலம் புகுந்தவன் என்றும், அவனே மறுபிறப்பில் ஒரே ஒரு கவசத்துடன் பிறந்த கர்ணன் என்றும் அபிதான சிந்தாமணி கூறுகின்றது.)
அந்தக் கர்ணனின், மறுபிறப்புதான் சிறுத்தொண்டர்.
எவரும் செய்யத் துணியாத வகையில் வைரவருக்கு அன்னமிட்டவர். சிவ பதவி அடைந்தவர். 63 நாயன்மார்களுள் ஒருவராகக் கொண்டாடப்படுபவர்.

அவரின் தூய்மையான பக்தியையும், இறைத் தொண்டினையும், ஆழ்ந்த நம்பிக்கையும், அன்னமிடுதலில் உள்ள அளவிலா அவாவினையும் இன்றளவும் உலகம் மெச்சுகின்றது.

கர்ணன் வேண்டி விரும்பிப் பெற்ற பிறவியே சிறுத்தொண்டர். முழுக்க முழுக்க அன்னதானத்திற்காகவே பிறப்பெடுத்தவர்.

அன்னதானமிட்டு அளப்பரிய பேறு பெற்றவர்.

அருந்தவம் செய்ததாலேயே அன்னதானம் செய்ய முடிந்தது.

அன்னதானம் செய்தால் அடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலைக்காக்கும் என்றும், சந்ததிகளை வளமாக வாழவைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அன்னதானம் செய்வதால் எல்லா விதமான பலன்களும், வேண்டுதல்களும் நிறைவேறும்.

அன்னதானம் செய்வோம் ! அளப்பரிய பலன் பெறுவோம் !!

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- செல் : 94434 79572
- mail : yanthralaya@yahoo.co.in, yanthralaya@gmail.com