Wednesday, June 22, 2011

நடராஜ சதகம்

நடராஜ சதகம்

தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று சதகம். சதகம் என்பது நூறு பாடல்களில் அமையக்கூடியது.

தமிழின் மூத்த சதக வகைகள் சங்க கால இலக்கியத்தில் காணப்படுகின்றன. பதிற்றுப் பத்து, ஐங்குறுநூறு போன்ற சங்க இலக்கியங்கள் நூறு பாடல்களைக் கொண்டுள்ளன.

அடுத்து, அந்தாதி எனப்படும் வகைகளும் நூறு பாடல்களைக் கொண்டுள்ளன. அவை ஒரு பாடலின் கடைசி வார்த்தையை, அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகக் கொண்டிருக்கும். இவையும் சதக வகையில் உட்பட்டதுதான்.

காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி சங்க இலக்கியத்திற்குப் பிற்பட்ட முதல் சதக அமைப்பாகும். முதல் மூன்று ஆழ்வார்கள் இயற்றிய -சதக அமைப்பைச் சார்ந்த - திருவந்தாதியும் வைணவ உலகால் மிகவும் போற்றப்படுவது.

மாணிக்கவாசகர் இயற்றியது திருச்சதகம் நூறு பாடல்களைக் கொண்டது.

அம்பிகையைப் போற்றிச் சொல்லக் கூடிய அபிராமி அந்தாதியும் நூறு பாடல்களைக் கொண்டது தான்.

பிற்காலத்தில் சதக இலக்கியங்கள் நிறைய எழுதப்பட்டன.

அறப்பளீசுர சதகம், குமரேச சதகம் போன்ற சதக இலக்கியங்கள் பெருமை வாய்ந்தன.

இத்தகு பெருமை வாய்ந்த பிற்கால சதக இலக்கியங்கள், பல அரும் பெரும் தகவல்களை தந்திருக்கின்றன.

வானவியல் ஜோதிட சம்பந்தமான விளக்கங்கள் கைலாசநாதர் சதகம் எனும் நூலில் அமைந்துள்ளன. (கால கணிதம் எனும் தலைப்பிலான பதிவினைக் காணவும்).

நூறு பாடல்களைக் கொண்டு, பாட்டுடைத் தலைவனைப் போற்றும் பிற்கால சதக இலக்கியங்களுள் மிகவும் சிறப்புற்று விளங்குவது நடராஜ சதகம் ஆகும்.

தில்லையில் திருநடம்புரியும் நடராஜப் பெருமானைப் போற்றும் வகையில் அமைந்தது நடராஜ சதகம்.

தமிழ் சைவ உலகில், தமிழ் பக்தியையும், பக்தித் தமிழையும் ஒருங்கே வளர்த்துக் கொண்டிருக்கக் கூடிய உன்னதமான சேவையை செய்து கொண்டிருக்கும், உயரிய சைவ ஆதீனமாகிய, தருமபுரம் ஆதீனத்தின் மடாதிபதியாக விளங்கிய ‘சிதம்பரநாத முனிவர்’ என்பவரால் இயற்றப்பட்டது நடராஜ சதகம்.

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சிதம்பரநாத மாமுனிவர்.

தருமபுர ஆதீனத்தின் எட்டாவது மடாதிபதியாக விளங்கி பெரும் சைவத் தொண்டு ஆற்றியவர். இவரின் குரு ஏழாவது மடாதிபதி திருவாரூர் செட்டித்தெரு ஞானபிரகாசர்.

தமிழ் மூவர் எனப் போற்றப்படக் கூடியவர்களில் ஒருவரான அருணாசலக் கவிராயரும், சிதம்பரநாத முனிவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.

அருணாசலக் கவிராயரின் மொழியாளுமையை அறிந்து, அவரை ஆதரித்து பல தமிழ் நூல்களை வெளிவரச்செய்து, தமிழுலகுக்குப் பெருமை சேர்த்தவர்.

தமிழையும், வடமொழியையும் கற்றுச் சிறந்தவர்.

சிதம்பரநாத முனிவர் இயற்றிய நடராஜ சதகம் சைவ அன்பர்களால் பெரிதும் போற்றப்படக்கூடியது.

தில்லை நடராஜரைப் போற்றி அமைவதோடு நில்லாமல், ஆலய வழிபாட்டு முறைகள், பக்தர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் போன்றவற்றை, ஸூத ஸம்ஹிதை போன்ற புராணக் கருத்துக்களைத் தழுவியும், வேத, புராண கருத்துக்களை ஒட்டியும், சிவாகம நெறிமுறைகளை பின்பற்றியும் எழுதப்பட்டிருக்கின்றது நடராஜ சதகம்.

வடமொழிச் சொல் பயன்பாடு நேரடியாகவே எடுத்தாளப்பட்டிருக்கின்றது.

ஆனால், செய்யுளின் தன்மை மாறாமல் நயத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. பதினான்குசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எனும் செய்யுள் முறைப்படி அமைந்துள்ளது.

ஒவ்வொரு பாடலின் முடிவிலும் “சிவ சிதம்பரவாச சிவகாமி உமை நேச செகதீச நடராஜனே” என்று அழகுற செய்யுள் நயத்துடன் அமைந்துள்ளது பெரிதும் பாராட்டத்தக்கது.

சிதம்பரநாத முனிவரின் நடராஜ சதகம் பற்பல நற்கருத்துக்களை எடுத்து இயம்பியிருந்தாலும், அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

முதல் பாடல் சிதம்பரத்தின் பெருமைகளையும், இரண்டாம் பாடல் அதன் அருமைகளையும், மூன்றாம் பாடல் சிதம்பரத்தில் பூஜை செய்து வரும் தீக்ஷிதர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் சுட்டுகின்றது.

அடுத்து வரும் பாடல்களிலிருந்து கீழ்க்கண்ட விபரங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சிவபெருமான் 25 விதமான வடிவங்களைக் கொண்டவர் ( 1.உமா மகேஸ்வரர், 2. ரிஷபாரூடர், 3.நடராஜர், 4. கல்யாண சுந்தரர், 5. பிட்சாடனர், 6. காமாந்தகர், 7. காலஸம்ஹாரர், 8. சலந்தரஹரர், 9. நீலகண்டர், 10.அர்த்தநாரீஸ்வரர், 11. கஜஸம்ஹாரர், 12.திரிபுராந்தகர்,13. வீரபத்திரர், 14. அரியார்த்தர், 15. கிராதர், 16.கங்காளர், 17. சண்டேச அனுகிரகர், 18.சக்ரதானர், 19. கணேசானுகிரகமூர்த்தி, 20, சோமாஸ்கந்தர், 21, ஏகபாதர், 22.சுகாசனர், 23, தட்சிணாமூர்த்தி, 24. லிங்கோத்பவர், 25. சந்திரசேகரர்.)

மூன்று வேளைகளிலும் சிவ தரிசனம் செய்வது இம்மையிலும் மறுமையிலும் வாழ்வு தரக்கூடியது.

பஞ்சபூத ஸ்தலங்கள் :

நீர் – திருவானைக்காவல்

நெருப்பு – திருவண்ணாமலை

நிலம் – காஞ்சிபுரம்

காற்று – காளஹஸ்தி

ஆகாயம் – சிதம்பரம்


உளியால் செதுக்கப்படாத ஸப்த விடங்க ஸ்தலங்கள் :

1. திருநள்ளாறு

2. திருநாகைக்காரோணம்

3. திருவாரூர்

4. திருக்காராவில்

5. திருக்கோளிலி

6. திருவாய்மூர்

7. திருமறைக்காடு


அட்டவீரட்ட தலங்கள் :

1. திருக்கண்டியூர்,

2. திருக்கடவூர்,

3. திருவதிகை,

4. திருவழுவூர்,

5. திருப்பறியலூர்,

6. திருக்கோவலூர்,

7. திருக்குறுக்கை,

8. திருவிற்குடி


பூஜைக்கால சிவாலய தரிசன பலன் :

காலசந்தி – நோய்கள் நீங்கும்

மத்தியானம் – செல்வம் பெருகும்

ஸாயங்காலம் – பாபங்கள் நீக்கும்

அர்த்தசாமம் – முக்தி கிடைக்கும்.


ஒவ்வொரு கால பூஜையிலும் சாற்றப்படவேண்டிய மலர்கள் :

காலை : தாமரைப் பூ, பூவரசம்பூ, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, செண்பகம், புன்னை, தாழை

மதியம் : வெண்தாமரை, அரளி, பூவரசம்பூ, நெய்தல், வில்வம், சங்கு புஷ்பம், மருதாணிப்பூ, கோவிதாரம், ஓரிதழ்த் தாமரை.

மாலை : செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிப்பூ, முல்லை, மருக்கொழுந்து, வெட்டி வேர், கஜகர்ணிகை, வில்வம்.


நடராஜப் பெருமானுக்குரிய அஷ்ட புஷ்பங்கள் :

வெள்ளெருக்கம்பூ, செண்பகம், புன்னை, நந்தியாவட்டை, பாதிரி, நீலோத்பலம், அரளி மற்றும் தும்பை.


நடராஜப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி செய்வதற்கு சிறப்பு வாய்ந்த புஷ்பங்கள் :

மந்தாரை, ஜாதிப்பூ, புன்னை, நந்தியாவட்டை, மல்லிகை, தும்பைப்பூ, முல்லைப்பூ, அலரி, கொக்கிறகு, வெள்ளெருக்கம்பூ, கொன்றை, ஆவாரம்பூ, கடம்பு, பாதிரி.


ஒவ்வொரு மாத சிவாலய அபிஷேகம் பற்றியும் அதற்கான பலன்களையும் அன்னாபிஷேகம் எனும் தலைப்பில் காணலாம்.


ஒவ்வொரு மாத பௌளர்ணமியிலும் சாற்ற வேண்டிய மலர்கள் :

சித்திரை : முல்லை, மருக்கொழுந்து

வைகாசி : அலரி, நெய்தல், செம்பருத்தி, செந்தாமரை, பாதிரி

ஆனி : தாமரை, செண்பகம்

ஆடி : ஊமத்தை, கருநெய்தல்

ஆவணி : விஷ்ணு கரந்தை, மல்லிகை, புன்னை

புரட்டாசி : வெள்ளருகு, தாமரை

ஐப்பசி : சங்குப்பூ, வில்வப்பூ, கொன்றை, மகிழம்பூ, மல்லிகை

கார்த்திகை : மல்லிகை, பாக்குப்பூ

மார்கழி : வெண்தாமரை, செந்தாமரை

தை : நந்தியாவட்டை, தாமரை

மாசி : மகிழம்பூ, மருதாணி, மல்லிகை

பங்குனி : கொக்கிறகு, தாமரை, காசித் தும்பை.

சிவாலய அபிஷேக திரவியங்களின் பலன்கள் :

சுத்தமான நீர் - சாந்தம்

தைலம் - இன்பம்

பஞ்சாமிருதம் - முக்தி

பால் - நீண்ட ஆயுள்

தயிர் - குழந்தைப் பேறு

அரிசி மாவு - கடன் நீங்கும்

மஞ்சள் - ராஜ வசியம்

கரும்புச் சாறு - ஆரோக்கியம்

எலுமிச்சை - எம பயம் நீக்கும்

அன்னாபிஷேகம் - விவசாயம் செழிக்கும்

தர்பை கலந்த தீர்த்தம் - ஞானம்

விபூதி - ஸகல ஐஸ்வர்யம்

சந்தனம் - பெரும் செல்வம்

சங்காபிஷேகம் - ஸகல பாபங்களும் நீங்கும்.

வில்வ அர்ச்சனையின் பலன் :

மூன்று ஜன்மங்களிலும் செய்த பாபங்கள் நீங்கும், சிவபதம் கிடைக்கச் செய்யும்.

வில்வம் பறிக்கக் கூடாத நாட்கள் :

மாதப்பிறப்பு, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌளர்ணமி, திங்கட்கிழமை.

சிவபூஜைக்கான - வார நாட்களுக்கான புஷ்பங்கள் :

ஞாயிறு : வில்வம்

திங்கள் : துளசிப்பூ

செவ்வாய் : விளா

புதன் : மாவிலங்கம் (மாம்பூ)

வியாழன் : மந்தாரை

வெள்ளி : நாவல் இலை

சனி : விஷ்ணு கரந்தை

தெய்வங்களுக்கு ஆகாத புஷ்பங்கள் :

சிவன் : தாழம்பூ,

பிரம்மா : தும்பை

துர்கை : அருகம்புல்

சூரியன் : வில்வம்

விநாயகர் : துளசி

விஷ்ணு : நந்தியாவட்டை (அக்ஷதை கொண்டு விஷ்ணுவை அர்ச்சிக்கக் கூடாது)

அம்பிகை : நெல்லி, பாதிரி

பைரவர் : மல்லிகைப் பூ (வாசனை புஷ்பங்கள்)


சிவபெருமானின் ஐந்து முகங்களுக்கான சிறப்பு நிவேதனங்கள் :

ஈசானம் : சுத்தான்னம்

தத்புருஷம் : சர்க்கரைப் பொங்கல்

அகோரம் : எள் சாதம்

வாமதேவம் : தயிர்சாதம்

ஸத்யோஜாதம் : பொங்கல்

(சிவலிங்கத்திற்கு மேற்கண்ட ஐந்து நிவேதனங்களையும் ஒருங்கே செய்தல் மிகவும் சிறப்பான பலன் தரக்கூடியது)

தீபாராதனை சமயத்தில் காட்டப்படும் சிறப்பு உபசார தீபங்களுக்கான தெய்வங்கள் :

தூபம் (ஊதுபத்தி) : அக்னி

நாக தீபம் : கேது

ரிஷப தீபம் : தர்ம தேவன்

மிருகதீபம் : விஷ்ணு

பூர்ணகும்பம் : ருத்திரன்

பஞ்சதீபம் (ஐந்து தீபங்கள்) : பஞ்ச ப்ரும்மாக்கள்

நக்ஷத்ர தீபம் : 27 நக்ஷத்திரங்கள்

மேரு தீபம் : 12 ஆதித்யர்கள்

விபூதி : சிவன்

கண்ணாடி : சூர்யன்

குடை : சந்திரன்

சாமரம் : மஹாலக்ஷ்மி

விசிறி : வாயு

சிவாலயங்களில் வாசிக்கப்படும் வாத்தியங்களுக்கான பலன்கள் :

மத்தளம் : சுகம்

தாளம் : துக்கம் நீங்கும்

படஹம் : பாபம் அகலும்

பேரி : சந்தோஷம்

டமருகம் : இன்பம்

சங்கு : விரோதம் நீங்கும்

நர்த்தனம் : தானிய அபிவிருத்தி

நாதஸ்வரம் : வம்ச அபிவிருத்தி

கடம் : மோக்ஷம்


தெய்வங்களை தரிசிக்கக் கூடாத தருணங்கள் :

கோயில் கதவு சார்த்தியிருக்கும் போதும், நிவேதன காலத்தில் திரையிட்டபோதும் தெய்வங்களை தரிசிக்கக் கூடாது.


பிரதக்ஷிண பலன் : (ஆலயம் வலம் வருதலின் பலன்)

காலை : நோய் நீங்கும்

மதியம் : வேண்டும் வரம் கிடைக்கும்

மாலை : பாபங்கள் அகலும்

இரவு : மோக்ஷம் கிடைக்கும்.

ஆலயத்தை வலம் வரக்கூடாத சமயங்கள் : திருக்கோயிலின் கதவுகள் சார்த்தியுள்ளபோதும், அபிஷேக காலத்திலும், கால பூஜைகள் நடக்கும்போதும், சுவாமி வீதியுலா வரும்போதும் பிரதக்ஷிணம் செய்யக் கூடாது. இரு கைகளையும் தொங்கப் போட்டுக்கொண்டு பிரதக்ஷிணம் செய்வதும் கூடாது.

விநாயகரை ஒரு முறையும்,

சூரியனை இரு முறைகளும்,

சிவனை மூன்று முறைகளும்,

அம்பிகையையும், விஷ்ணுவையும் நான்கு முறைகளும்,

அரச மரத்தை ஏழு முறைகளும் வலம் வர வேண்டும்.

தெய்வங்களுக்கான நமஸ்கார முறையை 'நமஸ்காரம்' எனும் பதிவில் விரிவாகக் காணலாம்.

விபூதி தரிக்கும் காலம் :

புனித நதியில் நீராடிய பின்னும், ஜபம் புரிதலின் முன்னும், ஹோமங்கள் செய்யும் போதும், விரத காலங்களிலும், தானம் கொடுக்கும் முன்பும், உபதேசம் பெறும் முன்னரும், தீட்சை பெறும் சமயத்திலும் மிக நிச்சயமாக சிவச் சின்னமான விபூதியைத் தரிக்க வேண்டும்.

சூதகம் எனும் தீட்டுக் காலங்களில் விபூதியைத் தரிக்கக் கூடாது.

கட்டைவிரல், நடுவிரல், மோதிர விரல் - இந்த மூன்று விரல்களாலும் விபூதியைத் தரிப்பது சிவபெருமானின் பேரருளை விரைவில் கிடைக்கச் செய்யும்.


சிவபெருமானின் கண் போன்ற ருத்ராக்ஷம்

ருத்ராக்ஷம் சிவாம்சம் கொண்டது. சிவபதவியைத் தரக்கூடியது.

ஒரு முகம் கொண்டது முதல் 13 முகங்கள் கொண்டது வரையிலான ருத்ராக்ஷத்திற்குரிய தெய்வங்கள் :

1 முகம் : சிவன்

2 முகம் : சிவன்

3 முகம் : அக்னி

4 முகம் : பிரம்மா

5 முகம் : ருத்திரன்

6 முகம் : முருகப் பெருமான்

7 முகம் : ஆதிசேஷன்

8 முகம் : கணபதி

9 முகம் : பைரவர்

10 முகம் : விஷ்ணு

11 முகம் : ஏகாதச ருத்திரர்கள்

12 முகம் : பன்னிரு ஆதித்யர்கள்

13 முகம் : முருகப்பெருமான்

மேற்கண்ட விபரங்களைத் தவிர மற்றும் பல அரிய விஷயங்கள் நடராஜர் சதகத்தில் அடங்கியுள்ளன.

ஆலய அமைப்புக்கான விபரங்கள், அஷ்டபந்தன மருந்து தயாரிக்கும் முறை, பிரதிஷ்டை செய்ய வேண்டிய முறைகள் மற்றும் சரியை, கிரியை, ஞானம், யோகம் ஆகியவற்றை விளக்கும் சைவ சித்தாந்த நெறிகளை போற்றும் வண்ணமும் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள விஷயங்களை ஆராய்ந்துகொண்டே போகலாம்.

நடராஜர் சதகம் - முதல் பாடல் :

சிதம்பர மான்மியம்

சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடி

தீர்த்தமங் கையர் படிந்து

தீமையுறு தம்பவம் ஒழித்திடும் காவிரித்

தெய்வமா நதியின் வடபால்

நீர்பெருகு நிவவென அடைந்தெல்லை யறுதலால்

நின்மலத் துவம ருள்தலம்

நிலைபெறு பகீரதி யணைந்துசிவ கங்கையென

நின்பெயர் அடைந்து யர்தலம்

எண்ணவிதி நண்ணவுரை பண்ணவுயர் போகம்வீடு

எளிதின் அருளிய நற்றலம்

சேர்அகில உயிரெலாம் சிவமாக நீநடம்

செய்பதிக் கிணைய துண்டோ

சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச

செகதீ சநட ராசனே.


அமிழ்தினும் இனிய தமிழ் மொழிதனில் அமைந்த நடராஜ சதகத்தைப் போற்றி நட்டமாடும் நம்பெருமானாகிய நடராஜப் பெருமானின் நல்லருளைப் பெறுவோம் !

(நடராஜ சதகம் - கிடைக்குமிடம் : மணிவாசகர் நூலகம், 12-B, மேல சன்னதி, சிதம்பரம்)

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

- MOBILE : 94434 79572

- MAIL : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com

www.facebook.com/deekshidhar