Monday, May 3, 2010

கலிதோஷத்தினை நீக்கிய கணிதம் (கால கணிதம் - 4)

கால கணிதத்தின்படி இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது கலியுகம்.
கலியுகம் என்பதைவிட கல்வி யுகம் என்றே சொல்லலாம். வித்தைகளிலும், கல்வியிலும் தேர்ச்சி பெற்றவர்களே இந்த யுகத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளார்கள்.
ஆகவே இது கல்வி யுகம். கற்ற கல்வி முன்னேற்றத்தைத் தரும் யுகம். ஆகவே கல்வியில் கவனம் செலுத்தினாலே கலி யுகத்தில் சாதனை செய்ய முடியும் என்பதே இதுவரை நடந்திருக்கின்றது.
வாழ்வின் அடிமட்டத்தில் வறுமையில் இருப்பவர்கூட கல்வியில் சிறந்தால், உயர்மட்டத்திற்கு செல்லமுடியும்.
அதற்கு பலரும் எடுத்துக் காட்டாக அமைந்திருக்கின்றார்கள்.
கல்வியில் கணிதம் ஒரு முக்கியமான அங்கம். கணிதம் வாழ்வை சிறக்கச் செய்யக் கூடியது. இப்பொழுது ஆதிக்கம் செலுத்தி வரும் கணிணி துறைகூட மிக அடிப்படையில் கணிதத்தின் சமன்பாடுகளையே கொண்டது (binary).
கணிதத்தில் சிறந்தவர், கணிணி துறையில் சிறப்பார்கள். வாழ்வை வெல்வார்கள். இதைக் கண்கூடாக நாம் காணமுடிகின்றது.
சிறப்புப் பெற்ற கணிதத்தை அறிந்து கொண்டதால் வாழ்வில் சிறந்த ஒரு காவிய நாயகனின் வரலாற்றில் நடந்த சம்பவத்தை இங்கு காணவிருக்கின்றோம்.

கணிதம் கற்றதால், கலி விலகியது !
மஹா பாரதம் - பாரத இதிகாசங்களில் ஒன்று.
இதில் தருமர் சகுனியிடம் சூதாட்டத்தில் தோற்கின்றார் (சதுரங்க விளையாட்டும் ஒரு கணிதமே - கணிதத் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே வெல்ல முடியும்.) ராஜ்யம், மனைவி அனைத்தையும் இழந்து துயரமே வடிவாக நிற்கின்றார்.
அப்பொழுது, வியாச மஹரிஷி, தருமரைத் தேற்றுவதற்காக ஒரு அருமையான காவியத்தைச் சொல்கின்றார்.
அக்காவியத்தைக் கேட்டபின் தர்மர் தைரியம் பெறுகின்றார்.
அதுவே நைஷதம் (நைடதம்) என்று பெயர் பெறுகின்றது. வடமொழியில் அமைந்த நைடதத்தை தமிழில் புகழேந்திப் புலவர் "நளவெண்பா" எனும் அருமையான நூலாக அமைத்தார்.

சுருக்கமாக நள சரித்திரம் :
நிடதம் எனும் நாட்டினை அரசோச்சுபவன் நளன், ஒரு நாள் வனத்தினில் அழகிய அன்னத்தைக் (சவம்) கண்டு, அதன் அழகில் மயங்கி அதைப் பிடிக்கின்றான். பயந்த அன்னம் என்னை விட்டுவிடு என்று பேசியது. உடன் அதை விடுவிக்கின்றான். செய்நன்றி மறவாத அன்னம், அவனுக்கு நன்மையளிக்க வேண்டி, தமயந்தி எனும் அரசகுமாரியின் அழகை விவரிக்கின்றது. தமயந்தியின் அழகில் மயங்கிய நளன், தன் காதலின் தூதாக அந்த அன்னத்தையே விடுக்கின்றான். அன்னம் தமயந்தியிடம் வந்து நளனின் அழகு, வீரம் முதலியவற்றைச் சொல்கின்றது. தமயந்தியும், தான் நேரில் பார்க்காவிட்டாலும் அன்னத்தின் வாயிலாக அறிந்த நளன் மீது மையல் கொள்கின்றாள். தமயந்தியின் தந்தை சுயம்வரம் அமைக்கின்றார். தேவர் முதலானவர்கள் சுயம்வரத்திற்கு வந்தாலும், அவர்களையெல்லாம் விடுத்து தன் காதல் மன்னனாகிய நளனுக்கே மாலை சூட்டுகின்றாள். காலம் கடக்கின்றது. ஒரு சமயம், நளன் செய்தத் தவறினால், கலிபுருஷன் நளனைப் பிடிக்கின்றான். கலி புருஷன் (கலி பீடித்தல் - சனி பீடித்தமைக்கு சமம்) பீடித்ததால், சூதாட்டத்தில் நாட்டம் போன்ற கெட்ட நடவடிக்கைகளால் நளன் ஆட்படுகின்றான். புஷ்கரன் எனும் சூதில் வல்ல மன்னனுடன் சூதாட்டம் ஆடுகின்றான். நளன் புஷ்கரனிடம் தோற்று, ராஜ்யம் இழந்து, காட்டிற்குப் போகின்றான். உடன் தமயந்தியும் வருகின்றாள். தமயந்தி காட்டில் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி அவளைத் தனியே விட்டுச் செல்கின்றான். கணவனைக் காணாது கலங்கிய தமயந்தி தனது தந்தை வீடு செல்கின்றாள். கலி பீடித்தக் காரணத்தால், பல இன்னல்களை சந்திக்கின்றான் நளன். கார்க்கோடகன் எனும் பாம்பு இவனைத் தீண்டியதால், அவன் அழகுமிகு உருவம் மாறி அருவருக்கத்தக்க உருவம் (வாகுகன் என்ற பெயர்) கொண்டான். நடுவே, தமயந்தியின் தந்தை நளனை எங்கு தேடியும் கிடைக்காமையால், அவளின் நல்வாழ்வுக்காக, மறு சுயம்வரம் நடத்த நாள் குறிக்கின்றான். நளன் பல இடங்களுக்குச் சென்று பின், ரிதுபர்ணன் எனும் அரசனிடம் தேரோட்டியாக "வாகுகன்" என்ற பெயரில் சேர்கின்றான்.ரிதுபர்ணன் தமயந்தியின் மறு சுயம்வரத்திற்குச் செல்ல விழைகின்றான். அது சமயம் நளன் தேரோட்டியாக அமைகின்றான்.
நளனுக்கு அச்வ (குதிரை) சாஸ்திரம் நன்கு தெரியும். ஆகையால் குதிரைகளின் காதில் மந்திரம் ஓதினான். தன் மனைவியின் சுயம்வரத்திற்காக மற்றொருவனை தேரில் ஏற்றி மாமன்னனாகிய நளன், ரதத்தைச் செலுத்துகின்றான். வாயு வேகத்தில் தேர் பறக்கின்றது. ரிதுபர்ணன் இதுவரை காணாத வேகத்தைக் காண்கின்றான். அரசனின் உத்தரீயம் எனும் மேல் துண்டு ரதத்தின் வேகத்தால் பறந்து விழுகின்றது.
ரிதுபர்ணன் ரதசாரதியாகிய நளனாகிய வாகுகனைக் கூப்பிட்டு, "துண்டு விழுந்துவிட்டது, எடுக்க வேண்டும்" என்று கூறுகின்றான். இதைக் கூறி முடிக்கும் முன்பே ரதம், விந்தை மிகு வேகத்தால், பல காதம் (பல கிலோமீட்டர்கள்) கடந்துவிட்டது. ஆச்சர்யம் அடைந்த அரசன் தன் தேரோட்டி சாதாரணன் அல்ல, அவனிடம் வித்தை இருக்கின்றது எண்ணி, வாகுகனைப் பணிந்து வணங்கி, தேரினை வேகமாக செலுத்த உதவும் அஸ்வ சாஸ்திரத்தைப் போதிக்கக் கேட்கின்றான். அதற்குப் பதிலாக தான் வல்லமை பெற்ற விருக்ஷ (மரம்) சாஸ்திரம் என்ற கணித சாஸ்திரத்தை நளனுக்கு அறிவிக்கின்றான்.
விருக்ஷ சாஸ்திரம் என்பது ஒரு மரத்தைப் பார்த்த உடனேயே அதில் எத்தனை இலைகள், கிளைகள், காய்கள், கனிகள், பூக்கள் என்பனவற்றை உடனடியாக அறியும் ஒரு அற்புதக் கணிதக் கலை.
(முந்தைய பதிவில், தற்காலத்தில் மரத்தின் வயது காண உதவும் கணித கலையையும், பலாப்பழத்தைப் பிளக்காமலேயே அதில் உள்ள சுளைகள் எண்ணும் விந்தையான கணிதத்தையும் காணுங்கள்)
கலி புருஷன் பீடித்தமையால் அனேக துன்பங்கள் அனுபவித்து வந்தான் நளன். கலி புருஷன் நீங்குவதற்கு ஒரே வழி கணித கலையை அறிவது தான்.
கணிதத்தை அறிந்தால் உடனே கலி விலகும் என்பது கலி புருஷனின் லக்ஷணம்.
நளன் ரிதுபர்ணனிடமிருந்து கணித கலையை அறிந்த உடனேயே கலி அவனை விட்டு நீங்குகின்றது.
வாகுகன் என்ற அருவருக்கத்தக்க நிலையில் இருந்தவன் அழகுமிக்க நளன் ஆக மாறுகின்றான்.
நளனைக் கண்டு அதிர்ந்த ரிதுபர்ணன், அவனை தமயந்தி அரசவை கொண்டு சேர்க்கின்றான்.
பல சம்பவங்களுக்குப் பிறகு நளனும் தமயந்தியும் இணைந்து நீண்ட காலம் வாழ்கின்றார்கள்.
இந்தக் காவியத்தைக் கேட்டாலே கலி தோஷம் நீங்கும் என்கிறார் நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர்.
என்காலத் துன்சரிதம் கேட்டாரை யானடையேன்
மின்கால் அயில்வேலாய்! மெய், என்று - நன்காலி
மட்டிறைக்கும் சோலை வளநாடன் முன்னின்று
கட்டுரைத்துப் போனான் கலி. (401)
(கலி புருஷன், நளனைப் பார்த்துச் சொன்னது யாதெனில், என் காலத்து (கலியுகத்தில்) உன் சரித்திரத்தை எவர் ஒருவர் கேட்கின்றாரோ அவரை அடைந்து துன்பம் விளைவிக்க மாட்டேன் என்று உறுதி கூறுகின்றேன்.)
{கலி தோஷத்தினை நீக்கும் ஸ்லோகம் :
ஓம் கார்க்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா: நளஸ்யச ரிதுபர்ணஸ்ய ராஜரிஷி: கீர்த்தனம் கலி நாசனம்
கார்கோடகன் (எனும் பாம்பு) நளனைத் தீண்டியது தான் அவனுக்கு கலி விலக உதவியது. ரிதுபர்ணனிடம் இருந்து விருட்ச (மரங்களைப் பற்றிய அரிய வகை) கணிதம் கற்றதால் கலி விலகியது.ஆகவே, கலி தோஷம் நீங்க - கார்க்கோடகன், நளன், தமயந்தி, ரிதுபர்ணன் ஆகிய நான்கு பேரையும் சொன்னாலே கலி விலகும் என்கின்றது மேற்கண்ட ஸ்லோகம்.}
கணிதம் கற்றால் காலத்தை வெல்லலாம் என்பதற்கு ஒரு சிறு எடுத்துக் காட்டுதான் இந்தக் காவியம்.

தற்காலத்தில் மைக்ரோசா•ப்ட் பில்கேட்ஸ், விப்ரோ (மைண்ட் ட்ரீ) ஆசிப் ப்ரேம்ஜி, இன்•போசிஸ் நாராயண மூர்த்தி போன்றோர்கள் பெரும் செல்வம் கொண்டமைக்கு ஒரு பெரும் காரணம், கணிதம் அறிந்தது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் கணிணியே காலத்தை வெல்லும் காரணியாக (கால கணிதத்தையும்) அறிந்து அதில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்கள்.
கணிதம் கற்போம் ! கலி விலகட்டும் !!

உபரி தகவல் :
சிதம்பரம் நடராஜருக்கு நளன் சாற்றிய பதக்கம் !
நளன், தமயந்தியிடம் மையல் கொண்ட காலத்தில், அவளை தனிமையில் காண விருப்பம் கொண்டான். ஒரு சக்கரவர்த்தி போன்றவன், மற்றுமொரு அரசனின் குமரியாகிய தமயந்தியை நேரில் காணுவதெல்லாம் நடக்க இயலாத ஒன்று என எண்ணி வருந்தினான்.
அச்சமயம் அங்கு வந்த நாரத மஹரிஷி, நளனின் வாட்டத்தைப் போக்க எண்ணி, சிதம்பரத்தில் பஞ்ச க்ருத்ய பரமானந்த நடனம் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) புரியும் நடராஜப் பெருமானின் திருவருளால், அவரின் திரோதானம் எனும் மறைத்தல் (invisible) செய்கைக்கு உரிய சக்தி தேவதைக்கு உரிய திரஸ்கரிணி எனும் மந்திரத்தை நளனுக்கு உபதேசித்தார்.
நளனும் அந்த மந்திர வித்தையை இடைவிடாது ஜபித்து, எவர் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்துலாவும் தன்மையை சிறிது நேரத்திற்கு பயன்படுத்தும் திறமை கொண்டான்.
அத்திறமை கொண்டு, தமயந்தியை தனியே காண பயன்படுத்திக் கொண்டான்.
அவளை மறைந்துலாவும் நிலையிலேயே கண்டுவிட்டு, தக்க நேரம் வந்தவுடன் அவளிடமிருந்து விலகிவிடுவான்.
தமயந்தி தினமும் மாலை (evening) வேளையில் ஒரு மாலை தொடுத்து, தன் காதல் மணாளனாகிய நளனை எண்ணிக் கொண்டு, தன் எதிரே நளன் நிற்பது போல பா(ba)வித்துக் கொண்டு மாலையைப் போடுவாள். அந்த மாலை கீழே விழுந்தது கண்டு, தன் நிலையை எண்ணி வெட்கி நகர்வாள்.
இது போன்ற செயல் தினமும் நடந்து கொண்டிருந்தது.
ஒரு நாள், தினமும் செய்வது போல, தமயந்தி மாலை எடுத்து வருகின்றாள். அச்சமயம் திரஸ்கரிணியின் உதவியால் நளன் தமயந்தியின் எதிரே வருகின்றான்.
என்றும் நடப்பது போல, தமயந்தி மாலையை, எதிரில் தான் நிற்கின்றான் என்று எண்ணி மாலையைப் போட்டாள். அந்த மாலை எவர் கண்ணுக்கும் தெரியாமல் நின்ற நளன் தோள் மீது விழுகின்றது.
தினமும் நடப்பது போலல்லாமல் அந்த மாலை அந்தரத்தில் நிற்பது கண்டு மயங்கி விழுகின்றாள்.
நளன் தமயந்தியைக் காண, திரஸ்கரிணி எனும் மந்திரத்தை சிதம்பர §க்ஷத்ர மந்திரங்களில் இருந்து நாரதரிடம் கற்றுக்கொண்டதால், நன்றி மறவாத நளன், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு ஒரு அழகிய பதக்கம் சாற்றி வழிபட்டான். (உமாபதி சிவம் எழுதிய குஞ்சிதாங்கிரிஸ்தவம் - பாடல் எண் - 187 - நளன் திரஸ்கரிணி கற்றதைக் குறிக்கின்றது)

அந்த அழகிய பதக்கம் இன்றளவும் ஆனித் திருமஞ்சன உத்ஸவத்திலும், மார்கழி ஆருத்ரா தரிசன உத்ஸவத்திலும் "நள சக்கரவர்த்தி பதக்கம்" எனப் போற்றப்பட்டு, ஸ்ரீமன் ஆனந்த நடராஜ மூர்த்திக்குச் சாற்றப்படுகிறது.
மிக அழகிய வேலைப்பாடுகளும், கண்களைக் கவரும் கற்கள் கொண்டும், மிக மிக அற்புதமாக இருக்கும் நள சக்கரவர்த்தி பதக்கம்.
அந்தப் பதக்கம் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு சாற்றப்பட்டவுடன், மேலும் அப்பதக்கம் அழகுபெறும்.
அடுத்த பதிவில், கால கணிதப் படி அமைந்த ஆலயத்தின், "மோட்சம் தரும் காட்சி"யைப் பற்றி காண்போம்.

- நி. த. நடராஜ தீக்ஷ¢தர்
- 94434 79572-
எனது முந்தைய பதிவுகள் : தலைப்பின் மீது க்ளிக் செய்தால் விபரம் விரியும்.
தைப் பூச நடனம், வியதீபாத தரிசனம், மார்கழி மஹோத்ஸவம், காசி யாத்திரை, ஆழ்வார்கள் அருளிய அமுதம், தியாகராஜர் ஆராதனை, சாளக்ராம வழிபாடு, கூடாரைவல்லி, நால்வர் காட்டிய நல்வழி, சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர், கவிக்கோ(ர்) காளமேகம், அதிசய அற்புத பாடல்கள், பாம்பு இயற்றிய பாடல், நடராஜ பத்து, திருப்பல்லாண்டு, மஹா சிவராத்திரி, வசந்த நவராத்திரி, நவாவரண பூஜை, கதம்பம், கால கணிதம் - 1, கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?), கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை)

4 comments:

Anonymous said...

Very fine.
Please inscribe the slogam " Karkodagasya nagasya....." in this blog.Please recall the recitation of the same by our Guru Patanjali.
Satya

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

நீங்கள் கூறிய ஸ்லோகத்தைச் சேர்த்துவிட்டேன் சத்யா, நன்றி.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

நளவெண்பாவில் உள்ள 401வது பாடல் -கலிதோஷத்தினை நீக்கும்- இணைத்துவிட்டேன். நன்றி மீண்டும் சத்யாவுக்கே.

Anonymous said...

very useful articles...