Tuesday, March 17, 2015

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மஹா ஸம்ப்ரோக்‌ஷண மஹா கும்பாபிஷேக பத்திரிகை



ஸ்ரீ சிவகாம ஸுந்தரி ஸமேத ஸ்ரீமன் ஆனந்த நடராஜராஜ மூர்த்தி ஸஹாயம்
திருச்சிற்றம்பலம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜ ராஜர் ஆலய மஹா ஸம்ப்ரோக்ஷண
மஹா கும்பாபிஷேக பத்திரிகை

நாள் : ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம், சித்திரை மாதம் 18ம் தேதி, 01.05.2015, வெள்ளிக் கிழமை
நேரம் : காலை 07.00 முதல் 08.30 வரை ரிஷப லக்னம்

न॑म॒: शंक॒रा॑य॒ च मयस्क॒रा॒य च॒ न॑म॒: शि॒वा॑य॒ च शि॒व॑त॒राय च ॥
ग॑छ॒ त्वै भ॑गवा॒न पु॑न॒रा॑ग॒मनाय पु॑न॒र्दर्सनाय॒ स॑ह॒देव्याय॒ स॑ह॒वृषाय॒ स॑ह॒गनाय॒  स॑ह॒पार्ष॒दा॑य॒ य॑था॒हुताय॒ न॑मो॒नमाय॒ न॑म॒: शिवाय॒  न॑म॒स्ते अस्तु॒ मा॑ मा॒ हिँसी: ।।
- சுக்ல யஜுர் வேத மைத்ராயிணி சாகை ஸ்ரீ ருத்ரம்

ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்சுகடகம்
பதஞ்சலி த்ருகஞ்சஞ்சமசஞ்சலபதம் ஜனன பஞ்சன கரம் கதம்பருசிமம் பரவஸம் பரமமம்புத கதம்பக விடம்பககலம்
சிதம்புதி மணிம்புத ஹ்ருதம்புஜ ரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||
- பதஞ்சலி ரிஷி

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
-         சேக்கிழார்

அன்புடையீர்,
கோயில் என்றாலே பொருள்படும் சிதம்பரத்தில் அனுதினமும் ஆடல்காட்சியை நல்கி ஆனந்தத்தை அளித்திடும் ஆடல்வல்லப் பெருமானாகிய ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்திக்கு மஹா ஸம்ப்ரோக்‌ஷண மஹா கும்பாபிஷேக வைபவம் மேற்கண்ட தேதியில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றாலும் சிறப்புற்ற தலம் - சிதம்பரம். சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த தலம். உலக புருஷனின் இதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்),  தரிசிக்க முக்தி தரும், சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த,  பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த, வேண்டுவதை உடன் அருளும், மரண பயம் போக்கும் ஸ்தலம்.
சிதம்பர ரகசிய ஸ்தானம் அமைந்த புண்யதலம். காலத்தால் மிக முந்தைய சிவத்தலம். தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என சுந்தர மூர்த்தி சுவாமிகளால் புகழப்பெற்ற தில்லை மூவாயிரவர் எனப் போற்றப்படும் தீக்‌ஷிதர்களால் வேதவழி பூஜைகள் சிறப்புற நடைபெறும் அருட்தலம். ஆன்மீகத்தின் அனைத்து கலைகளிலும் முன்னோடியாக திகழும் திருத்தலம். பற்பல அருளாளர்களால் பாடப் பெற்ற சைவத்தலம். தமிழ் திருமுறைகள் கண்டெடுக்கப்பட்ட தவத்தலம்.
சிவகங்கை எனும் தீர்த்தம் (குளம்) கோயிலினுள் அமைந்து கங்கைக்கு மேலான பலன்களை வழங்குகின்றது.

ஸ்ரீ நடராஜ ராஜர் - அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர். வேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள் போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.

சித்ஸபை எனும் பொன்னம்பலத்தில் நடமிடும் நடராஜர் கருவறையில் ஒளிரும் தீப ஒளிக்கு மேலும் ஒளிதரும் அருள்முகம், திருமேனியில் அணிவிப்பதால் நகைகள் அழகுபெறும் திருக்கோலம், முகத்தில் என்றும் பூத்திருக்கும் புன்னகை, அருகிலிருக்கும் அம்பிகையை சற்றே திரும்பிப் பார்க்கும் பதிமுகம், அப்பர் சுவாமிகள் சொல்வது போல வருவோரைத் தனிப்பட்ட முறையில் கவனிப்பது போன்ற கருணை முகம், அண்டிவரும் அனைவரையும் அஞ்சல் வேண்டாம் எனக்கூறி அபயம் எனும் அருள்தரும் வலக்கை, இம்மையிலும், மறுமையிலும் வரம் தரும் தூக்கிய இடது திருவடி (குஞ்சிதபாதம்), பாபங்களைக் களையும் முயலகன் எனும் அரக்கனின் மேல் ஊன்றிய வலது திருவடி, தரிசனம் செய்தோர் திரும்பவும் தரிசிக்க ஈர்க்கும் காந்த வடிவம் கொண்டு - அன்பர்களுக்கு  என்றும் அருள்பாலிக்கின்றார்.

ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேதராக விளங்கும் ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்தி வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனே வரமளித்து, நற்குழந்தைப் பேறு, வம்ச அபிவிருத்தி, குழந்தைகளின் கல்வியில் மேன்மை, கற்ற கல்வியினால் நல்வேலை வாய்ப்பு, பதவிகளில் மென்மேலும் உயர்வு, நல்ல இல்லறத் துணை, எதிரிகளால் ஏற்படும் அனைத்து இடர்ப்பாடுகளையும் களைந்து நோய்கள் இல்லாத நீடித்த ஆனந்தமான நல்வாழ்வு என அனைத்தையும் அருளக்கூடியவர்.

உலக மக்கள் உய்யும் பொருட்டு, ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்காலத்தில் நாம் காண உள்ள மிகப் பெரும் பிரம்மாண்டமான வைபவமாகவும், புண்ணியங்களை ஒரு சேர நல்கும் நிகழ்வாகவும், பனிரண்டு கால யாக பூஜைகளுடனும், முப்பத்திரண்டு யாக குண்டங்களுடனும், பதஞ்சலி மஹரிஷி வகுத்த பூஜா ஸூக்தங்களின்படி, சதுர்வேத பாராயணங்களுடன், ஸூக்ஷ்ம வழிபாடுகளுடன், திருமுறை முற்றோதல்களுடன், தில்லை மூவாயிரவர் எனும் த்ரிஸஹஸ்ர முனீஸ்வரர்கள் என்றும் வைதீக வழியில் பூஜைகள் நடத்தும் - பொது தீக்‌ஷிதர்களால் - மஹா மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது.

யாகசாலை நிகழ்ச்சி நிரல்

22.04.2015, புதன் கிழமை, காலை கூஷ்மாண்ட ஹோமம், மஹா கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம்
23.04.2015 வியாழன் - காலை நாந்தி பூஜை, அனுக்ஞை, தன பூஜை, மாலை வாஸ்து சாந்தி ஹோமம்
24.04.2015 வெள்ளி - காலை ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரம், ப்ரதிஸரம், மதுபர்க்கம், ரக்‌ஷாபந்தனம்
25.04.2015 சனி - காலை மந்தரஜபம், கலாகர்ஷணம், கும்பஸ்தாபனம், விசேஷ ந்யாஸ அர்ச்சனை, தீபாராதனை.
மாலை முதல் கால யாக பூஜை
26.04.2015 ஞாயிறு - காலை & மாலை - இரண்டாம் & மூன்றாம் கால பூஜை
27.04.2015 திங்கள் - காலை & மாலை நான்காம் & ஐந்தாம் கால பூஜை
28.04.2015 செவ்வாய் - காலை & மாலை ஆறாம் & ஏழாம் கால பூஜை
29.04.2015 புதன் - காலை & மாலை எட்டாம் & ஒன்பதாம் கால பூஜை
30.04.2015 வியாழன் - காலை, மாலை & இரவு பத்தாம், பதினொன்றாம் & பனிரண்டாம் கால பூஜை
01.05.2015 வெள்ளிக் கிழமை காலை தம்பதி பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை, ஸுவாசினி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அச்வ பூஜை, கும்பங்களின் யாத்ரா தானம்.

காலை மணி 07.00 மணிக்கு மேல் 08.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில்,
சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் எனும் ஸ்ரீ சிவகாம ஸுந்தரி ஸமேத ஸ்ரீ மன் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தி சித்ஸபா ஸம்ப்ரோக்‌ஷண சித்விலாஸ மஹா கும்பாபிஷேகமும், அதே நேரத்தில் ராஜ ஸபை எனும் ஆயிரங்கால் மண்டபத்திற்கும், நான்கு ராஜ கோபுரங்களுக்கும்  மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறும்.


01.05.2015 ஸகோபுரம் எனும் சப்பரம் எனும் தெருவடைச்சானில் பஞ்சமூர்த்தி வீதியுலா.  





02.05.2015 சனிக்கிழமை காலை சித்ஸபையிலிருந்து தேருக்கு எழுந்தருள யாத்ராதானம், ரதோத்ஸவம் எனும் (மஹா கும்பாபிஷேகத்திற்கான பிரத்யேகமான) தேர்த் திருவிழா. இரவு ராஜ ஸபை எனும்ஆயிரங்கால் மண்டபத்தில் ஏககால லக்‌ஷார்ச்சனை







03.05.2015 ஞாயிறு அதிகாலை மஹாபிஷேகம்
மதியம் ராஜஸபையிலிருந்து சித்ஸபைக்கு அருளாடலுடன் எழுந்தருளும் ஞானாகாச சித்ஸபா ப்ரவேசம் எனும் மஹா மஹா தரிசனக் காட்சி.

04.05.2015 திங்கள் இரவு பஞ்சமூர்த்திகள் விசேஷ முத்துப் பல்லக்கில் வீதியுலா.

மஹா கும்பாபிஷேக யாகசாலை காலங்களின் பொழுது, வேத விற்பன்னர்களைக் கொண்டு ரிக், யஜுர், ஸாமம் & அதர்வண வேத பாராயணங்கள், தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு   நாதஸ்வர இன்னிசை, ஓதுவார் மூர்த்திகளின் பண்ணிசை கச்சேரிகள் & திருமுறை பாராயணங்கள், வாய்ப்பாட்டு, சிறப்பு இசைக் கருவிகளின் கச்சேரிகள், உபந்யாஸங்கள், நாமஸங்கீர்த்தனங்கள், பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சிறப்பு அன்னதானம் ஒவ்வொரு காலத்திலும் அளிக்கப்படும்.

மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் சிறப்பு யாக பூஜைகளுடனும், அபிஷேக ஆராதனைகளுடனும், ஸஹஸ்ர போஜனத்துடனும் சிறப்புற நடைபெறும்.

பக்தர்கள் அனைவரும் காணுதற்கரிய இந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்ரீ சிவகாம ஸுந்தரி ஸமேத ஸ்ரீமந் ஆனந்த நடராஜ  ராஜ மூர்த்தியின் பரிபூரண அருளைப் பெற வேண்டுகின்றோம்.

நி.த. நடராஜ தீக்‌ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜை
20/15, வடக்கு சன்னதி, சிதம்பரம் 608 001.
Mobile : 94434 79572, 93626 09299.








Tuesday, March 10, 2015

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பாலாலய ஸம்ப்ரோக்‌ஷணம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பாலாலய ஸம்ப்ரோக்‌ஷணம்

நடராஜர் ஆலய மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, பாலாலய வைபவம் நேற்று, 08.03.2015 அன்று காலை 09 மணியளவில் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்‌ஷிதர்களின் ஏற்பாட்டின் படி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாலாலய வைபவம் மிக பிரம்மாண்டமான அளவிலும்,
ஒவ்வொரு யாக காலத்திலும்,
நாதஸ்வர இன்னிசையுடனும், 
ருக், யஜுர், ஸாமம், அதர்வண வேத கோஷங்களுடனும்,
18 புராணங்களின் பாராயணங்களுடனும்,
சிறப்பான மூல மந்திர ஜபங்களுடனும்,
ஸூத ஸம்ஹிதை போன்ற சிதம்பர புராணத்தைப் பகரும் ஸ்லோகங்களுடனும்,
திருமுறை முற்றோதல்களுடனும்,
தேவார பண்ணிசைகளுடனும்,
பதஞ்சலி பூஜா ஸூக்தங்களின்படி யாகசாலை ஹோம நிகழ்ச்சிகளுடனும்
செவ்வனே நடைபெற்றது.

நேற்று காலை 06 மணியளவில், 6 காலங்கள், 11 யாக குண்டங்கள் கொண்டு பூஜை செய்யப்பட்ட - புனித நீர்க்குடங்கள் - தேவஸபைக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, அத்தி மரப் பலகையில் அமைந்த பாலாலய பலகைகளுக்கு சக்தியேற்றம் செய்யப்பட்டு, பிறகு நித்தியப்படி ஆறு கால பூஜைகளில் அபிஷேகம் செய்யப்படும் ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் - ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பொது தீக்‌ஷிதர்களின் தலைமையில், பிரஸாத விநியோகம் செய்யப்பட்டது.

தினந்தோறும் ஆறுகால பூஜைகளும் தேவ ஸபையில் நடைபெறும்.

தேவஸபையில் - ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் (ஸ்படிக லிங்க) அபிஷேகமும், ரத்ன ஸபாபதி (மரகத நடராஜர்) அபிஷேகமும் - காண்பது பெரிதிலும் பெரிதான பலன்களைத் தரக்கூடியது.

பக்தர்கள் வந்து தரிசித்து பெருநட்னமிடும் பெம்மானின் பேரருளைப் பெறுவீர்களாக !

- நி.த.நடராஜ தீக்‌ஷிதர்
http://natarajadeekshidhar.blogspot.in
www.facebook.com/deekshidhar
Mobile : 94434 79572, 93626 09299.









Friday, March 6, 2015

வந்தாடினார்! நெஞ்சில் நின்றாடினார் !

வந்தாடினார்! நெஞ்சில் நின்றாடினார் !

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சித்ஸபையிலிருந்து தேவஸபை எழுந்தருளினார்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மஹா கும்பாபிஷேக மஹா ஸம்ப்ரோக்‌ஷண மஹா வைபவம் 01.05.2015 அன்று நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக, நடராஜர் ஆலய பாலாலய வைபவம் 02.03.15 - 08.03.2015 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிகழ்வின் மிக முக்கிய வைபவம் - சிதம்பரம் நடராஜர் சித்ஸபை எனும் கருவறையிலிருந்து, அங்கு நடைபெற உள்ள திருப்பணிகள் காரணமாக, சிதம்பர ஆலயத்தில் உள்ள பஞச ஸபைகளில் (1.சித்ஸபை, 2. கனகசபை, 3. தேவஸபை, 4. நிருத்தஸபை &  5.ராஜஸபை)  ஒன்றான தேவஸபைக்கு கண்கொள்ளாக் காட்சியாக, அரிதிலும் அரிதான பெருநிகழ்வாக 05.03.2015 அன்று காலை 09.00 மணியளவில் எழுந்தருளினார்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பொது தீக்‌ஷிதர்களின் சீரிய வழிகாட்டுதல் மற்றும் சிறப்பான ஏற்பாடுகளின்படி, 05.03.2015 - அன்று வேதபாராயணங்களுடன் கூடிய மஹா ஜபங்களும், அதிகாலை 03.00 மணி முதலாக தெய்வக் கலைகளை திருக்குடங்களில் சக்தியேற்றம் செய்வதான கலாகர்ஷண நிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கியது.

சித்ஸபை எனும் பொன்னம்பலத்திற்கான கலசங்கள், கனகசபைக்கான கலசங்கள், சிதம்பர ரகசியத்திற்கான கலசங்கள் என மூன்று அமைப்புகளுக்கான  கலாகர்ஷண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து, சித்ஸபை எனும் பொன்னம்பலத்தில் இருக்கும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அணையாத தீபம் - பசுமாடு கன்றுடன் புறப்பாடு செய்யப்பட்டு, அடுத்ததாக சித்ஸபையில் அமைந்துள்ள ஸ்ரீ பாதுகை ஸ்வாமி, ஸ்ரீ சந்திரசேகரர், ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர், ஸ்ரீ ஸ்படிக லிங்கம், ஸ்ரீ ரத்ன ஸபாபதி - முதலான தெய்வங்கள் மஞ்சங்களில் அமைத்து புறப்பாடு, தொடர்ந்து பள்ளியறையில் உள்ள அம்பிகை - ஆகிய தெய்வங்கள் தேவஸபைக்கு எழுந்தருளச் செய்யப்பட்டது.

அடுத்ததாக, ஆனி மற்றும் மார்கழி உத்ஸவங்களில் மட்டுமே வெளி பிரகாரம் வரும் ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ மூர்த்தி - இன்று கும்பாபிஷேக மஹா வைபவத்திற்காக - பிரத்யேகமாக - தனிச் சிறப்பான புறப்பாடாக - சித்ஸபையிலிருந்து புறப்பாடு செய்யப்பட்டு, கொடிமரம் பிரகாரம் வந்து, உத்ஸவ யாகசாலையில் மஹா தீபாராதனையைத் தொடர்ந்து, தேவஸபை எனும் தனது புதிய தற்காலிக இருப்பிடத்திற்கு எழுந்தருளி அனைவருக்கும் காணுதற்கரிய காட்சி அளித்து, மட்டற்ற மகிழ்வை அளித்தார்.


வலம் வந்தாடினார்! நெஞ்சில் நின்றாடினார் !!
நாதஸ்வர இன்னிசையும், வேத விற்பன்னர்களின் கோஷமும், திருமுறைவாணர்களின் பாடல்களும், ஹரஹரசிவ சிவ, நடராஜா நடராஜா என பக்தர்களின் அறைகூவலும் காதுகளை நிரப்ப, 16 கலை தீவர்த்தி முன்வர, முகத்தில் என்றும் மாறாத புன்னகையுடன், அன்பர்களுக்கு என்றும் அபயம் எனும் திருக்கோலத்துடன், சிறப்பு வகை மாலைகளும், கண்ணைப் பறிக்கும் நகைகளுடன், சக்ரவர்த்தி கோலத்தில், அம்பிகையுடன் ஒன்றிணைந்து வந்தும், சமயத்தில் முன்னும் பின்னும் நடனமாடியும் - பிரகார வலம் வந்த காட்சி - வாழ்வில் நாம் பெற்ற பிறவிப் பயனைத் தந்தது.

இந்தக் காட்சியைக் கண்டவர்கள் - நெஞ்சில் என்றும் நீங்காத நினைவலைகளை நீண்டகாலம் நினைவில் கொள்வார்கள்.

தஹர வித்யா எனும் உபாஸனையின் (இதயத்தில் என்றும் நீங்காத வண்ணம், இறைவனை இதயத்துடன் இணைந்து காணும் யோக உபாஸனை) நாயகனாக விளங்கும் நடராஜப் பெருமானை - இக்காட்சியைக் கண்டவர்கள், காட்சியைக் கண்டவர்களிடம் கேட்டவர்கள், இதனை மனதாலே நினைந்தவர்கள் என அனைவருக்கும் - அருளை வாரி வழங்குவார்.

தேவஸபையில் நாம் தற்போது காணும் அரிதற்கரிதான சிவகாம சுந்தரி ஸமேதராக நடராஜர் விளங்கும் காட்சி - கும்பாபிஷேகத்தின் முதல் நாள் வரை அதாவது 30.04.2015 வரை தரிசிக்க முடியும்.

ஆதிநடனமாகிய தேவர்களுக்காக ஆனந்த நடனம்  ஆடியதை தற்போது தேவஸபையில் அன்பர்களுக்கு ஆடியருள்கின்றார். 

சிறப்புடனும், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், யாகசாலை கால நிகழ்வுகளில், ஒவ்வொரு கால ஹோமமும்அதிவிசேஷமாக, ஸ்படிக லிங்க அபிஷேகமும், கலசத்தில் செய்யப்படும் சிதம்பர ரஹஸ்ய பூஜையும், இரவு அர்த்தஜாம பூஜையும் (யாகசாலையிலேயே பள்ளியறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது)- காணக் கண் கோடி வேண்டும்.

எதிர்வரும்  08.03.2015 அன்று பாலாலய ஸம்ப்ரோக்‌ஷணம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

பக்தர்கள் தரிசித்து அருள் பெறுங்கள் !
 - நி.த. நடராஜ தீக்‌ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
செல் : 94434 79572, 93626 09299
http://natarajadeekshidhar.blogspot.in
yanthralaya@gmail.com



Sunday, March 1, 2015

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பாலாலய வைபவம் &
நெருங்கி வரும் நடராஜர்



அண்டசராசரம் அனைத்தையும் ஆட்டுவித்து, ஆடலை நிகழ்த்திடும், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் பஞ்சக்ருத்யங்கள் செய்து பரமானந்த நடனம் ஆடிடும், அகிலம் அனைத்திலும் உள்ள தெய்வ சக்திகள் அனைத்தையும் தன்னுள் கொண்டு, அனுதினமும் ஆடல்காட்சியை அன்பர்களுக்கு வழங்கிடும், சிதம்பரம் ஸ்ரீ நடராஜ ராஜப் பெருமானுக்கு எதிர்வரும் 01.05.2015 அன்று மஹா கும்பாபிஷேக மஹா ஸம்ப்ரோக்‌ஷண மஹா வைபவம் – இந்த நூற்றாண்டின் பெரிய நிகழ்வாக நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்திற்கு முந்தையதான பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் அல்லது தருணாலயம் எனும் நிகழ்வு எதிர்வரும் 02.03.2015 முதல் 08.03.2015 வரை நடைபெற உள்ளது.

பாலாலயம் என்பது தற்போது தெய்வங்கள் குடிகொண்டுள்ள கருவறையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திருப்பணிகள் செய்ய வேண்டியிருப்பின், தெய்வ ஸாந்நித்யத்தை (அருள்புரி ஆற்றலை) அத்தி மரத்தில் செய்யப்பட்ட அருட்பலகையில், வேதங்கள், பூஜா ஸூக்தங்கள், ஆலய பூஜை முறைகள் காட்டிய வழியின்படி நடத்தப்படும். கும்பாபிஷேக யாகசாலை தொடங்கும்போது அந்த அத்திமரப் பலகையில் உள்ள தெய்வ சக்திகளை கும்பாபிஷேக குடங்களில் சக்தியேற்றம் செய்து, அதனை குறிப்பிட்ட காலங்கள்  ஹோம பூஜைகள் செய்து, மறுபடியும் அந்த தெய்வசக்தி நிறைந்த தீர்த்தத்தை – அந்தந்த தெய்வங்களூக்கே அபிஷேகம் செய்து மேலும் அருட்சக்தி பெருக ஏற்றவகையில் செய்யப்படும் மஹா வைபவம் தான் மஹா கும்பாபிஷேகம்.

அந்த வகையில், பாலாலய பூஜைகளின் நிகழ்ச்சி நிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
02.03.2015 - அனுக்ஞை பூஜை, கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம்
03.03.2015 & 04.03.2015 – காலை மாலை – விசேஷ பூஜைகள், மந்த்ர ஜபம்
05.03.2015 – காலை ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமான் சித்ஸபை எனும் கருவறையிலிருந்து பாலாலய பூஜைகளுக்காக தேவஸபைக்கு எழுந்தருளும் காணுதற்கரிய காட்சி.
அன்று மாலை முதல், 11 குண்டங்கள், 6 காலங்கள் கொண்ட மிகச்சிறப்பான பாலாலய யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
யாகசாலை காலங்கள் : 05.03.2015 – 07.03.2015 வரை
08.03.2015 – அன்று காலை பாலாலயத்திற்கான அத்திமரத்தில் அமைந்த அருட்பலகைகளுக்கு ஸம்ப்ரோக்‌ஷணம்.

நெருங்கி வரும் நடராஜர் :
சிதம்பரத்தின் மூலவரும், உத்ஸவரும் ஆகிய ஆனந்தமா நடராஜபெருமான் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே (ஆனித் திருமஞ்சனம் & மார்கழி ஆருத்ரா தரிசனம்) கருவறையிலிருந்து, வெளி பிரகாரங்களுக்கு வெளிவரும் அற்புத நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்வைக் காணவே லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

ஆனால், 05.03.2015 அன்று காலை - கும்பாபிஷேகத்திற்கு என்றே பிரத்யேகமாக தனது இருப்பிடமாகிய சித்ஸபையிலிருந்து, தேவஸபை எனும் மற்றொரு ஸபைக்கு எழுந்தருளும் காணுதற்கரிய மிகப் பெரும் அரிய நிகழ்வாக நடைபெற உள்ளது.
அன்று முதல் கும்பாபிஷேக கால பூஜைகள் வரை நித்ய பூஜைகள் தேவஸபையில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

இந்த அரிய நிகழ்வு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு நடைபெறும்.  இதைப் போன்றதொரு அதிஅற்புத வைபவம் அடுத்த கும்பாபிஷேக சமயத்தில் மட்டுமே நடைபெறும். (கடந்த 1987 கும்பாபிஷேகத்திற்குப் பிறகு தற்போது 2015 ஆண்டுவரை, ஏறத்தாழ 28 ஆண்டுகளில் எவரும் காணாத மஹோன்னத வைபவம்)

தேவஸபை – தற்போது நடராஜர் இருப்பிடமாகிய சித்ஸபையிலிருந்து கிழக்கு நோக்கிய பிரகாரத்தில் மிக அருகில் அமைந்துள்ளது.

பக்தர்களுக்கு விரைவில்  தரிசனம் தந்து அருள் புரியும் வகையில், கோயிலின் கிழக்கு நுழைவாயிலாகிய 21 படி வாசலுக்கு மிக அருகாமையில் தேவஸபையில் - ஆனந்த திருநடனத்தைக் காண்பிக்கவே, நெருங்கி வருகின்றார்.

நெருங்கி வந்த நடராஜரை நெஞ்சம் நிறைய தரிசிக்க, தேவஸபையில், திருநடனம் புரியும் ஞானமா நடராஜப் பெருமானைக் கண்ணாரக் கண்டு களிக்க அனைவரையும் வரவேற்கின்றோம்.

சிறப்பு மிக்க வகையில் அமைந்த பாலாலய ஹோம பூஜைகளை தரிசிக்கவும், வேண்டிய வரங்களை விரைந்து அருளிடும், வேதநாயகர், தமிழ் மறைகள் போற்றும் தன்னிகரற்றவர், இசைக்கலைகள் இயம்பும் ஈஸ்வரர், பரதம் போற்றும் பரமேஸ்வரர், ஞாலம் போற்றும் ஞானமா நடராஜ ராஜப் பெருமானை – ஒரு புதிய இடத்தில் – தரிசித்து, பேரருள் பெறக் கோருகின்றோம்.


-         நி. த. நடராஜ தீக்‌ஷிதர்
-         சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜை
-         Mobile : 94434 79572, 93626 09299.

-         www.facebook.com/deekshidhar