Tuesday, May 11, 2010

மோட்சம் தரும் காட்சி (கால கணிதம் - 5 - மோட்ச தீபம்)

மோட்சம் தரும் காட்சி (கால கணிதம் - 5) (மோட்ச தீபம்)

ஆன்மீகம். ஆன்மாவை ஒருமுகப்படுத்தி இறைவனை நாடிடும் ஒரு அற்புதமான பாதை. ஆன்மீகப் பாதை அறப்பாதை. ஆன்மீகம் காட்டும் வழிகள் அனைத்தும் நல்வழிகளே.
பயிர் செழித்தால் நாடு செழிக்கும் என்பது போல ஆன்மீகம் செழித்தால், மக்கள் நலம் செழிக்கும். ஒற்றுமை உண்டாகும்.
ஆன்மீகப் பாதையில் இறைவனை வணங்கிடும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல்கள் இருக்கும். அவற்றை இறைவனை வழிபட்டு பேறு பெற ஆன்மீகத்தின் பாதைகள் வழிகாட்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல்கள் இருந்தாலும், ஒரு ஆன்மீகவாதியின் இறுதியான வேண்டுதல் என்னவாக இருக்க வேண்டும்?
அது மோட்சம் மட்டுமே. மோட்சம் அல்லது முக்தி என்பது மீண்டும் பிறவாத வரம் கேட்பதுதான் இறைவனிடம் வேண்டப்படும் கடைசி வேண்டுதல்.
தர்ம, அர்த்த, காம்ய, மோக்ஷ - அறம், பொருள், இன்பம், வீடுபேறு (முக்தி) - இந்த வார்த்தைகள் தான் எந்தவொரு ஆன்மீக வேண்டுதலிலும் அமையும்.
மனிதன் தான் செய்யும் கர்மாக்களுக்குத் தகுந்தாற்போல அடுத்தடுத்த பிறவிகள் அமையும் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்கின்றது.
ஒரு ஆன்மா, ஜீவாத்மாவாக - உயிர் கொண்டு பிறவி எடுத்தால், அது மீண்டும் இறைவனாகிய பரமாத்மாவிடம் கலப்பது தான் மோட்ச நிலை.

ஜீவாத்மா => பல பிறப்புகள் => பரமாத்மாவிடம் ஒன்று சேர்தல்.

த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற ஆன்மீகக் கொள்கைகள் பல வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டாலும், மேற்கண்ட வாக்கியத்தையே உறுதிப்படுத்துகின்றன.

கர்ம வினைகளுக்கு ஏற்ப பிறப்புகளின் எண்ணிக்கை மாறுபடும். (ஏழுகடல்களின் மணல்களைக் கூட எண்ணிவிடலாம். ஆனால், என் பிறப்புகளின் எண்ணிக்கையை அளவிட முடியாது என்கிறார் அருணகிரிநாதர்)
உள்ளத் தூய்மையுடன், உண்மையான பக்தியுடன், ஆன்மீகம் காட்டும் தூய அறப்பாதையில் இறைவழிபாட்டைச் செய்தால் பிறவாநிலை கிடைக்கும் என்கின்றன புராணங்கள் (பெரியபுராணம் - 63வர் வரலாறு)
உயர்ந்த பக்தியே உன்னத முக்திக்கு உண்டான வழி.

கலிகாலத்தில் வாழும் நாம் மோட்சத்தை அடைய என்னதான் வழி? பக்திநிலையை சரியாக பின்பற்ற முடியுமா? மோட்சத்தை அடைய எளிய வழி எது ?
இக்கேள்விகளுக்கும் ஆன்மீகம் விடைதருகின்றது.
க்ருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் போன்ற காலங்களில் எங்கும் கோயில்கள் கிடையாது. (துவாபர யுகத்தில் நடைபெற்ற பாகவதத்தில் சில கோயில்கள் இருந்ததாக (ருக்மி, ருக்மிணி, கிருஷ்ணன் - திருமணம்) - கூறப்படுகிறது.)
அப்பொழுதெல்லாம் கடும் தவம், பெரும் வேள்விகள், வடக்கிருத்தல் போன்றவையே மோட்சத்தைத் தரக் கூடியனவாக இருந்தன.
அந்த யுகங்கள் இறைவனே நேரில் நின்ற காலம்.

ஆனால், கலியுகம் - இறைவனை ஆலயங்களில் தரிசித்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.
நமது ஆன்றோர்கள் சில ஆலயங்களை முக்தி தரும் ஆலயங்களாக வகுத்துள்ளார்கள். (சிவ மஹா புராணம்)

திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும்.
காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி கிடைக்கும்.
காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும்.
திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி கிடைக்கும்.
சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும்.


திருவாரூரிலே பிறத்தலும், காஞ்சியிலே வாழ்வதும், காசியில் இறப்பதும் அனைவருக்கும் கிடைப்பது அரிது.

சிதம்பரத்தை தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும்.

சிதம்பரத்தின் அருமை பெருமைகளை விளக்கும் நடேச தண்டகம் எனும் நூல் "சிதம்பரம்" என்று சொன்னாலே (நாம உச்சாரண மாத்ராத் முக்தி ப்ரதே - 19வது ஸ்லோகம்) முக்தி கிடைக்கும் என்கிறது.
மேற்கண்ட ஸ்தலங்களின் பெருமை அளவிடற்கரியது.

ஆயினும், தரிசித்தால் முக்தி என்பதை எப்படி சிதம்பரம் அளிக்கின்றது என்பதைக் காண்போம்.

சிதம்பரம் - ஆனந்தமாக நடராஜர் நடமிடும் ஸ்தலம்.
இந்த ஸ்தலத்தின் பூஜை பிரயோகங்களை வகுத்தவர் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனின் வடிவாகிய பதஞ்சலி மஹரிஷி.
ஆயிரம் தலைகளில் உள்ள ஆயிரம் நாக்குகளால் கூட சிதம்பரத்தின் பெருமைகளை சொல்லிமுடிக்க முடியவில்லை என்கிறார் ஆதிசேஷன்.

அப்படிப்பட்ட சிதம்பர க்ஷேத்ரம், நாம் வாழும் கால வெள்ளத்தின் கணக்குப் படியும், உடல் கணித படியும் அமைந்து தரிசித்தாலே முக்தியைத் தரவல்லது.

ஒரு சிறு காலக் கணக்கு :
நான்கு பொழுதுகள் = 1 நாள் (காலை, மதியம், சாயங்காலம், இரவு)
ஏழு நாட்கள் = ஒரு வாரம்
52 வாரங்கள் = ஒரு வருடம்
365 நாட்கள் = ஒரு வருடம்


சிதம்பரத்திற்கு நான்கு கோபுரங்கள் உண்டு. நான்கு கோபுரங்களும் நான்கு பொழுதுகள்.

ஒவ்வொரு கோபுரமும் ஏழு நிலைகளைக் (ஏழு மாடிகள் அல்லது ஏழு அடுக்குகள்)கொண்டது. ஏழு நிலைகளும் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன.

கோபுரத்தின் மேலே பதின்மூன்று கலசங்கள் உள்ளன.
நான்கு கோபுரங்களிலும் 4 X 13 = 52 கலசங்கள்.
இந்த 4 X 13 = 52 கலசங்களும் ஒரு வருடத்திற்குரிய 52 வாரங்களைக் குறிக்கின்றன.

நான்கு கோபுரங்களின் உச்சியில் 365 விளக்குகள் ஏற்ற வசதியாக பெரும் அகல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த 365ம் ஒரு வருடத்திலுள்ள நாட்களைக் குறிக்கின்றன.

மோக்ஷ தீபம் :
ஒருவர் இறந்துவிட்டால் அவர் மோக்ஷம் செல்ல வசதியாக வெளிச்சம் வேண்டும் என வேண்டிக்கொண்டு அவருக்காக அவருடைய உறவினர்களோ அல்லது நண்பர்களோ ஏற்றக் கூடியது மோக்ஷ தீபம்.

இந்த மோட்ச தீபம் மிகவும் புனிதமானது. ஆத்மாவுக்கு ஒரு நல்வழியைக் காட்டக் கூடியது.

ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்களும், இறந்துவிட்ட முன்னோர்கள் நல்லபடியாக மோட்சம் அடைய வேண்டியும், முன்னோர்களுக்கு நற்கதி ஏற்பட வேண்டியும் ஏற்றப்படும் மோட்ச தீபம் மிகவும் பலனளிக்கக் கூடியது.

இறந்துவிட்ட முன்னோர்களுக்கான தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் போன்ற செயல்கள் செய்ய முடியாதவர்கள், அந்த ஆத்மா திருப்தி அடைய மோட்ச தீபம் ஏற்றப்படுகின்றது.

இதுவரை, கோயிலின் வெளிச்சுற்றில் அமைந்த கோபுரங்கள் காலக் கணக்கின் அடிப்படையைக் கொண்டது எனக் கண்டோம்.

அடுத்து உள் செல்வோம். இனி மனித உடல் கூறு கணிதம் இடம்பெறுகின்றது.

நமது உடல் பஞ்ச கோசங்களாகப் பகுப்பட்டிருக்கின்றது. (யோக சாஸ்திரம்).
அவை 1. அன்னமய கோசம், 2. பிராணமய கோசம், 3. மனோமய கோசம், 4. விஞ்ஞான மய கோசம், 5. ஆனந்தமய கோசம்.
1. அன்னமயகோசம் - உணவினால் வலுப்பெறும் உடல்
2. பிராணமயகோசம் - மூச்சுக் காற்றினால் வலுப்பெறும் உடல்
3. மனோமய கோசம் - பேச்சு, உணர்வுகள் கொண்ட உடல்
4. விஞ்ஞானமயகோசம் - புத்திக் கூர்மை (மூளை)
5. ஆனந்தமய கோசம் - இதுவே உயிர்நிலை. இதயத் துடிப்பு

மேற்கண்ட ஒவ்வொன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புகொண்டது.

1.உணவு எனும் சாப்பாடு நின்று போனால் வெளி உடல் இயக்கம் நின்றுபோகும். சுவாசம் குறையும்.
2.மூச்சுக்காற்று குறையும் போது உடலின் செயல்பாடுகள் குறையத் தொடங்கும்.
3.மூச்சு குறைந்தால் தொடுதல் போன்ற உணர்வுகள் மங்கும்.
4. உணர்வுகள் குறைந்தால் மூளை செயலிழக்கும்.
5. இறுதியாக, இதயத் துடிப்பு - இது நின்றால் உடலில் இருந்து உயிர் பிரிந்து ஆன்மாவாக மாறும்.

(உலகத்தின் இதயத் துடிப்பாக சிதம்பரம் விளங்குகின்றது. ஆகையால் சிதம்பரம் இருதய க்ஷேத்ரம் என்று கூறப்படுகின்றது. உலகிற்கு உண்டான ஆதாரத் துடிப்பு (dynamic) சிதம்பரம். அதுவே ஆனந்த நடனம். அதுவே உலகத்தையே செயலாற்றல் புரியவைக்கும் ஆதார விசை.

ஐந்து கோசங்களின் செயல்பாடுகள் குறைவதால், படிப்படியாக உயிர் பிரிகின்றது.

இதையே தலைகீழாகப் பார்த்தோமானால், உயிர் உருவாகி, மூளைத் திறன் அதிகரித்து, உணர்வுகள் பெற்று, நல் சுவாசம் கொண்டு, நல்ல உணவும் எடுத்துக்கொண்டால் தான் பூத உடல் வலுவாகின்றது.

மேற்கண்ட பஞ்ச கோசங்களே ஐந்து பிரகாரங்களாக சிதம்பரத்தில் அமைந்துள்ளது.
ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சித்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.
இந்த சித்ஸபையும் உடல் கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது.


பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை.
இந்த தங்க ஓடுகள் 72,000 தங்க ஆணிகள் கொண்டு இணைக்கப் பட்டுள்ளன. இந்த தங்க ஆணிகள் மனித உடலில் உள்ள நாடி நரம்புகளைக் குறிக்கக்கூடியது.
ஒன்பது கலசங்கள் பொற்கூரையின் மேல் உள்ளது.
இந்த ஒன்பது கலசங்களும் மனித உடலில் உள்ள ஒன்பது துவாரங்களைக் குறிக்கின்றது.

கால வெள்ளத்தின் நடுவே வாழ்கின்ற (காலக் கணக்கின்படி அமைந்த கோபுரங்களுக்கு உள்ளே நுழைந்து),
பஞ்சகோசங்களால் பகுக்கப்பட்ட (ஐந்து பிரகாரங்களையும் கடந்து)
உடல் - உயிர் கொண்ட ஆன்மா (சித்ஸபையில் நடமிடக்கூடிய) நடராஜப் பெருமானைக் காண்பதே மோட்சம் தரும் காட்சியாகும்.

சித்சபையில் மேலேற ஐந்தெழுத்தான நமசிவய எனும் மந்திரங்களே ஐந்து படிகளாக அமைந்துள்ளது.

அங்கிருந்து பார்த்தோமானால், இயற்கையான ஒளி வெள்ளத்தில், ஜ்வாஜ்ஜல்யமான காட்சி புலனாகின்றது.
24 தீ ஜ்வாலைகள் கொண்ட திருவாசி.
அந்தத் திருவாசியின் நடுவே நடராஜப் பெருமானின் ஆனந்த நடனக் கோலத்தைக் காண்கின்றோம்.


பனியால் நனைந்த ஜடை. கயிலை மலையிலிருந்து நேராக வந்தாரல்லவா? அந்தப் பனி இன்னும் காயக் கூட இல்லை. நனைந்தே இருப்பதால் பறக்கும் நடன இயக்கத்திலும் விரியாத செஞ்சடை கொண்டிருக்கின்றார்.
சடையில் கங்கையும், சந்திரகலாபரணமும் அலங்கரிக்கின்றார்கள்.
சந்திரனைப் பழிக்கும் வகையில் அமைந்த நெற்றி. அதன் நடுவே நெற்றிக்கண். பூவின் நடுவில் ஒரு பூப்பூத்தது போன்ற மலர்ந்த முகம். நன்றாக நாணேற்றப்பட்ட வில் போன்ற அழகுற அமைந்த புருவங்கள். செழுமையான கன்னங்கள். தரிசனம் செய்வோரைத் தனிப்பட்ட முறையில் பார்க்கின்றாரோ, நம்மை மட்டும்தான் பார்க்கின்றாரோ என்று எண்ணக் கூடிய வகையில் சற்றே சாய்ந்த தலை. புன்சிரிப்பு கொண்ட உதடுகள். உடுக்கை கொண்ட கையிலிருந்து தான் சத்தம் எழுகின்றதோ என உணரவைக்கும் வலக்கை. இடக்கையிலிருக்கும் தீயின் ஒளி மேலும் சித்சபையை பிரகாசமாக்குகின்றதோ என ஐயுறவைக்கும் தோற்றம். அழகான ஆபரணங்கள் அம்பலவாணனுக்குச் சாற்றப்பட்டதால் மேலும் அவை அழகுபெறுகின்றன. அதிலிருக்கும் பிரம்ம கபால மாலை எழில் கொஞ்சுகின்றது.
(இந்த பிரம்ம கபால மாலை - நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவின் தலைப் பாகம் மட்டுமே இருக்கும். மொத்தம் 32 முகங்கள் இருக்கும். புராணங்கள் கூற்றுப்படி, 32 பிரம்மாக்களே ஒவ்வொரு கல்பத்திலும் (காலக் கணக்கு) மீண்டும் மீண்டும் உயிர்பெறுவார்கள். நடராஜரின் தலையில் உள்ள சந்திரனிலிருந்து அமிர்த தாரை (அமுத நீர்த்துளி) பட்டு, ஒவ்வொரு பிரம்மாவாக உயிர்ப்பிக்கின்றது. ஒரு பிரம்மா இறக்க, அடுத்திருக்கும் பிரம்மா அமிர்த தாரையால் உயிர் பெற்று படைப்பைத் தொடங்குகிறார். இதுவே சுழற்சி முறையில் இயங்குகின்றது. - குஞ்சிதாங்கிரிஸ்தவம் - 130வது ஸ்லோகம்)
சூர்யனின் ஒளியையும் மிஞ்சும் தாடங்கம், காதுகளில் தோடுகள். (பக்தர்களின் வேண்டுதல்களைக் காது கொடுத்துக் கேட்பதால் அவர் தோடுடைய செவியன்)
மார்பகம் முழுக்க மறைக்கும்படியான சிவசிவ பதக்கம். நமசிவய பதக்கம். தங்க மேனியை விலை மதிப்பில்லா கற்கள் கொண்ட பதக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு அலங்கரிக்கின்றன.
முயலகன் எனும் அரக்கன் மேல் ஊன்றிய திருப்பாதம் நிலைகொள்கின்றது. வலிமை வாய்ந்த கால்களில் வீரகண்டாமணி எனும் அணி அழகு செய்கின்றது. அந்த அரக்கனும் ஆட்டத்தைக் காண முயல்கின்றானோ என்றே தோன்றுகிறது.
தூக்கிய திருவடி. குஞ்சிதபாதம். என்னே மென்மையான பாதம். வளைந்து நெளிந்து ஒரு குழைந்தையின் மென்மையான பாத ஸ்பரிசத்தை அத்திருப்பாதத்திலிருந்து கண்டு உணரமுடிகின்றது. தூக்கிய திருவடியில் அழகிய வைரங்களால் இழைக்கப்பட்ட மணி ஒன்று உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.
ஆஹா !
கண்டோம் காட்சியை ! பெற்றோம் மோட்சத்தை !!

பக்தியால் மெய்மறக்க, கண்கள் பணிக்க, உள்ளம் துள்ள, கைகள் பணிய, எந்த ஜென்மத்தில் செய்த பெரும் புண்ணியமோ, இந்த ஜன்மத்தில் நடராஜரைக் காண முடிந்தது !

ஆனந்த நடனமிடும் நடராஜப் பெருமானைக் காண்போம் !
ஆனந்த வாழ்வு பெற்றிடுவோம் !!
மீண்டும் பிறவாத நிலையான முக்தி எனும் மோட்ச நிலையைப் பெற்றிடுவோம் !!!

வேறு சில கூற்றுக்களின் படி,
நான்கு கோபுரங்களும் நான்கு யுகங்களாக அமைந்திருக்கின்றன.
கோபுரத்தின் ஏழு நிலைகளும் ஏழு பிறவிகளைக் குறிப்பன.
ஒரு ஆன்மா ஏழு பிறப்புகளுக்குப் பிறகுதான் மோட்சம் சென்றடையும் என்று புராணங்கள் கூறுகின்றன.
முதலாவது அல்லது மூன்றாவது என்று எந்தப் பிறப்பில் இருந்தாலும் சிதம்பரத்தை தரிசனம் செய்வதால் மீதம் இருக்கும் பிறப்புகள் பிறக்காமல் நேராக மோட்சத்தை அடையமுடியும்.

தமிழ் நால்வரில் ஒருவரான அப்பர் சுவாமிகள், சிதம்பரம் வந்து தரிசித்தால் மோட்சம் கிடைத்துவிடும் ஆகையால், நடராஜரின் திருவடி தரிசனத்தைக் காண வேண்டும் என்பதற்காகவே மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும் என்றே மன்றாடுகின்றார். (குனித்த புருவமும் .... மனித்தப் பிறவியும் வேண்டுவனே இம் மாநிலத்தே)

நடராஜப் பெருமானின் திருமுகம் மட்டுமே, விருந்தோம்பும் குணத்தோடு "என்று வந்தாய் எனும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே" - என்று வந்தாய், எப்படி இருக்கின்றாய் என்று உள்ளம் குழைய கேட்பது போல உள்ளது என்கின்றார்.
மோட்சம் தரும் காட்சியைக் கண்டு முக்தி நிலை பெறுவோம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- 94434 79572
- yanthralaya@yahoo.co.இன்
எனது முந்தைய பதிவுகள் : தலைப்பின் மீது க்ளிக் செய்தால் விபரம் விரியும்.
தைப் பூச நடனம், வியதீபாத தரிசனம், மார்கழி மஹோத்ஸவம், காசி யாத்திரை, ஆழ்வார்கள் அருளிய அமுதம், தியாகராஜர் ஆராதனை, சாளக்ராம வழிபாடு, கூடாரைவல்லி, நால்வர் காட்டிய நல்வழி, சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர், கவிக்கோ(ர்) காளமேகம், அதிசய அற்புத பாடல்கள், பாம்பு இயற்றிய பாடல், நடராஜ பத்து, திருப்பல்லாண்டு, மஹா சிவராத்திரி, வசந்த நவராத்திரி, நவாவரண பூஜை, கதம்பம், கால கணிதம் - 1, கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?), கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை), கலிதோஷத்தினை நீக்கிய கணிதம் (கால கணிதம் - 4)

No comments: