Thursday, April 15, 2010

கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?)

கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?)

காலத்தை நமது ஆன்றோர்கள் மிகக் குறைந்த நேரம் முதற்கொண்டு மிகப் பெரும் அளவுள்ள நேரம் வரை பகுத்திருக்கின்றார்கள்.
காலக் கோட்பாட்டினை இரு விதமாக விஞ்ஞானிகள் பகுக்கின்றனர்.
ஒன்று சுழற்சி முறை (WHEEL OF TIME). (சூர்யனை கோள்கள் சுழலும் காலம் கொண்டு கணிப்பது. பூமி 365.25 நாட்களில் ஒரு முறை சூர்யனைச் சுற்றிவருகின்றது. இதே போல் மற்ற கிரஹங்களுக்கும் சூர்யனைச் சுற்றி வரக் கூடிய காலத்தைக் கணித்திருக்கின்றார்கள்.)
மற்றொன்று அம்பு முறை (ARROW OF TIME). அதாவது சூர்யனிடமிருந்து ஒரு அம்பு புறப்பட்டால் எப்படி முடிவின்றி பயணிக்குமோ அதைப் போல ஒரு கணித முறை. ஐன்ஸ்டீனின் E = MC2 ஒத்தது. அதாவது பிரபஞ்சம் நீண்டுகொண்டே இருக்கின்றது.
காலம் என்று சொல்லும் போதே நமக்கு மூன்று காலங்கள் புலப்படுகின்றது. கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்.
கடந்த காலத்துக்குப் போவோமா?
எந்த வித மந்திர தந்திரங்களும், தவப் பயனும் இன்றி கடந்த காலத்துக்குச் செல்ல முடியும் என்பது இயற்பியலாளர்களின் கணிப்பு.
குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க கி.மீ./மணி என்பது நம் வழக்கத்தில் உள்ளது. உதாரணமாக நெய்வேலியிலிருந்து சென்னைக்கு 200 கி.மீ. செல்ல 5 மணி நேரம் ஆகும் என்பது.
மிக நீண்ட பயணத்தை கணக்கிட ஒளி ஆண்டு என்பார்கள். அதாவது ஒளி (LIGHT) ஒரு ஆண்டு பயணித்தால் ஆகும் தூரமே ஒரு ஒளி ஆண்டு.
(ஒரு ஒளி ஆண்டு = 9,500,000,000,000 KILOMETERS)

ஒரு தோராயமான கணக்கு : இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்களில் ஒருவர் 30 வயதில் பூமியிலிருந்து குறிப்பிட்ட ஒளி ஆண்டு வேகத்தில் யுரேனசுக்குச் செல்கின்றார் எனில், அவர் 35 வது வயதில் யுரேனசை அடைந்து, திரும்ப அவர் 40 வயதில் பூமியை வந்தடைந்தார் என்றால், அவருடனே பிறந்த சகோதரனுக்கு 45 வயதாகியிருக்கும். (இங்கே குறிப்பிட்ட எண்ணிக்கைகள் அனைத்தும் எடுத்துக்காட்டிற்காக மட்டுமே. மிகத் துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனின் பதிவு மேலும் நீளும்.)
இது விஞ்ஞானக் கோட்பாட்டின்படி சரிதான்.
இதையே வேறுவிதமாக உபயோகித்தால் கடந்த காலத்துக்குச் செல்ல முடியும் என்பது விஞ்ஞானிகளால் ஏற்கப்பட்ட கோட்பாடு.
பூமியின் காலம் வேறு (சுழற்சி முறை). பூமியிலிருந்து அம்பு போல வேறொரு கிரஹம் செல்லும் காலம் வேறு. ஆனால் பயணிக்கும் காலம் மிக முக்கியம். ஒளி வேகம் அல்லது அதைத் தாண்டிய வேகம் இருப்பின் கடந்த காலம் செல்ல முடியும். (மேலும் விளக்கம் வேண்டுமெனில் ஒரு இயற்பியல் அறிஞரிடம் அறிந்து கொள்ளுங்கள். அல்லது ஃபோட்டான், சிங்குலாரிட்டி தத்துவம், பெருவெடிப்பு (BIG BANG), ஐன்ஸ்டீன் விதி, பிரபஞ்ச ஆரம்ப கணங்கள், 1D, 2D, 3D, 4D பற்றிய விபரங்களை நான் அறிந்த வரையில் அறிவிக்க வேண்டுமெனில் மெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தவரை விளக்கம் தருகின்றேன்.)
ஆனால், இன்றைய நடைமுறையில் இது சாத்தியமில்லைதான். ஏனெனில் மனிதன் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் (900 கிமீ/மணி) பயணிக்க முடியாது. அதற்கான தொழில்நுட்பம் தற்போது நம்மிடம் இல்லை.
அறிவியல் வழியில் காலத்தைப் பார்த்தோம்.
ஆன்மீக வழியில் பார்ப்போம். ஆன்மீகத்தில் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் குறித்து அனேக குறிப்புகள் உள்ளன. எதிர்காலத்தைக் கணக்கிட ஜோதிடவியல் உள்ளது. கடந்த காலத்தைக் கணிக்க ரிஷிகள் எழுதிய ஓலைகள் (நாடி ஜோதிடம்) உள்ளன. நிகழ்காலத்தில் தான் நாம் வாழ்கின்றோம்.
இந்த மூன்றிலும் பயணிப்பவர்கள் மஹரிஷிகள்.
திரிலோக சஞ்சாரி என்றும் திரிகால ஞானி என்றும் நாரதரை அழைப்பார்கள். அவர் முக்காலங்களிலும் பயணிக்க வல்லவர் என்று நாரத புராணம் கூறுகின்றது.
கால சக்ர ப்ரவர்த்திகா, கால நேமி, கால நேதா போன்ற நாமாவளிகள் தெய்வங்கள் காலம் எனும் சக்கரத்தைச் சுழற்றுவதாகக் கூறுகின்றன. அதாவது காலம் இறைவன் கையில் என்கின்றன.
தெய்வத்திற்கு மூன்று கண்கள் உண்டு என்கின்றன ஆன்மீகம்.
மூன்றாவது கண் தான் நான்காவது பரிமாணமாகிய காலத்தின் ஊடே பயணத்தைக் காண வல்லது.
ஒரு கண் இருந்தால் இரு பரிமாணங்களைப் பார்க்க இயலும். இரு கண்கள் இருந்தால் மூன்றாவது பரிமாணத்தைப் பார்க்க முடியும். மூன்றாவது கண் இருந்தால் நான்காவது பரிமாணமாகிய காலத்தைப் பார்க்க முடியும்.
ஒரு பரிமாணம் என்பது ஒரு பொருளின் நீளம். இரு பரிமாணம் என்பது அந்தப் பொருளில் அகலம்.
ஒரு காலண்டரை நாம் பார்க்கின்றபோது அதன் நீளம் மற்றும் அகலம் புலனாகின்றது.
உதாரணமாக, தொலைக் காட்சியிலோ அல்லது சினிமாவிலோ நாம் காணும் காட்சிகள் இரு பரிமாணம் கொண்டவை. அக்காட்சியின் நீளம் மற்றும் அகலம் மட்டுமே காணமுடியும்.
நம் எதிரில் ஒரு கார் நிற்கின்றது. அதன் நீளம் & அகலம் தெரிகின்றது. கூடுதலாக மூன்றாவது பரிமாணமாகிய கனபரிமாணம் அதாவது அதன் உயரம், கொள்ளளவு என்பது நமக்குத் தெரிகின்றது.
ஆக, இரு கண்கள் உள்ள நாம் மூன்று பரிமாணங்களைப் பார்க்க முடிகின்றது. அதைக் கையாள முடிகின்றது. நீள அகல உயரங்களிடையே நாம் செல்ல முடிகின்றது.
ரயிலில் பயணிக்கின்றோம். காலை 6 மணிக்குக் கிளம்புகின்றோம். 9 மணிக்கு பயணத்தை முடிக்கின்றோம். அந்த ரயில் 6, 7, 8, 9வது மணியில் எங்கெல்லாம் இருந்தது என்று சொல்ல முடிகின்றது.
அந்த பயண காலத்தை நம்மால் உபயோகப் படுத்த முடிவதில்லை. அதாவது, நாம் கிளம்பிய பிறகு ஒரு மணி நேரம் சென்று, திரும்பவும் கிளம்பிய நேரத்திற்குச் செல்ல முடிவதில்லை. அதாவது காலத்தை நம்மால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.மூன்றாவது கண் இருந்தால் மட்டுமே நான்காவது பரிமாணத்தின் ஊடே பயணிக்க முடியும்.
ஆகையால் தான் ஆன்மீகம், தெய்வங்கள் மனிதர்களை விட மேம்பட்ட குணத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன.
காலக் கணிதத்தினை எப்படியெல்லாம் நம் ஆன்றோர்கள் பகுத்திருக்கின்றார்கள் என்று பார்ப்போம்.

புராணங்களின் கூற்றுப்படி கீழ்க்கண்ட கணக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
பரம்பொருளின் காலம் = 2 கல்பம்
60 தத்பராக்கள் = 1 பரா
60 பராக்கள் = 1 லிப்தம்
60 லிப்தம் = 1 விநாழிகை
60 விநாழிகை = 1 நாழிகை
60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள்
30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம்
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்
தமிழின் தொல்லிய நூலாகிய கணக்கதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரம்:
கண்ணிமை 2 = 1 கைந் நொடி
கைந் நொடி 2 = 1 மாத்திரை
மாத்திரை 2 = 1 குரு
குரு 2 = 1 உயிர்
உயிர் 9 = 1 க்ஷணிகம்
க்ஷணிகம் 12 = 1 விநாடி
விநாடி 60 = 1 நாழிகை
நாழிகை 7.5 = 1 சாமம்
சாமம் 4 = 1 பொழுது
பொழுது 2 = 1 நாள்
நாள் 30 = 1 மாதம்
மாதம் 12 = 1 வருடம் (1728000 வருடம் = கிருத யுகம், 129600 வருடம் = திரேதா யுகம், 8,64,00 வருடம் = துவாபரம் யுகம், 4,32,000 வருடம் = கலியுகம், இந்த நான்கும் சேர்த்து 43,20,000 வருடங்கள்)
43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம்
18 சதுர் யுகம் = 1 மனு
74 மனு = 1 இந்திர ராஜ்ய காலம்
270 இந்திர ராஜ்ய காலம் = 1 பிரம்ம நாள் (பிரம்மாவுக்கு ஒரு நாள்)
365X100 பிரம்ம நாள் = 1 பிரம்ம காலம் பூர்த்தி
360 பிரம்ம கால பூர்த்தி = 1 ஆதி பிரம்ம பிரளயம்
100 ஆதி பிரம்ம பிரளயம் = 1 விஷ்ணு கற்பம்
100 விஷ்ணு கற்பம் = ரோம ரிஷியின் 1 ரோம காலம் (உடலெல்லாம் ரோமங்கள் கொண்ட ஒரு மஹரிஷி. அவரின் உடலில் ஒரு ரோமம் உதிரும் காலமே 1 ரோம காலம்)
10 கோடி ரோம காலம் = மீனசமக ருஷியின் 1 செதில் காலம் (மீனைப் போன்ற செதில்களைக் கொண்டவர் மீனசமக ருஷி. அவரின் உடலில் ஒரு செதில் உதிரும் காலமே 1 செதில் காலம்)
1 கோடி செதில் காலம் = பரத்வாஜருக்கு 1 நிமிடம்
30 கோடி பரத்வாஜ நிமிடம் = 1 சக்தி காலம்
780 கோடி சக்தி காலம் = மகாசக்திக்கு 1 நிமிஷம்
மேற்கண்ட இரு கால அளவுகள் பற்றியும், ஸங்கல்பம் எனும் வேண்டுதல் நிகழ்ச்சியில் சொல்லக்கூடிய ஸ்லோகத்தின் அமையும் கால அளவைகள் பற்றியும் அடுத்த பதிவில் (கால கணிதம் - 3 ) காணவிருக்கின்றோம்.
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- 94434 79572-

ி.கு. : இந்தப் பதிவு மிக விரிவாக எழுத நினைத்து, ஆன்றோர்கள் கூறுவது போல 'விரிவஞ்சி விடுத்தனம்'. என்றாலும் காலத்தின் கோலத்தை மிக விரிவாக பிறிதொரு காலத்தில் கணக்கிடுவோம்.
எனது முந்தைய பதிவுகள் : தலைப்பின் மீது க்ளிக் செய்தால் விபரம் விரியும்.
தைப் பூச நடனம், வியதீபாத தரிசனம், மார்கழி மஹோத்ஸவம், காசி யாத்திரை, ஆழ்வார்கள் அருளிய அமுதம், தியாகராஜர் ஆராதனை, சாளக்ராம வழிபாடு, கூடாரைவல்லி, நால்வர் காட்டிய நல்வழி, சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர், கவிக்கோ(ர்) காளமேகம், அதிசய அற்புத பாடல்கள், பாம்பு இயற்றிய பாடல், நடராஜ பத்து, திருப்பல்லாண்டு, மஹா சிவராத்திரி, வசந்த நவராத்திரி, நவாவரண பூஜை, கதம்பம், கால கணிதம் - 1

4 comments:

gvsivam said...

இப்படிப்பட்ட நுணுக்கமான இடுகைக்கு பின்னூட்டம் வராதது காலத்தின் கோலமே.மிக அருமை என்று ஒரே வரியில் கூறிவிட முடியாது.

sundara raman s said...

நமஸ்காரஙகள். தஙளின் ஆந்மீகப்பணி சிறக்க இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.
தஙளின் காலகணிதம் கட்டுரைகளைப் படிக்க விழைந்தேன்.
காலகணிதம் 1க்கான இணைப்பு வேலை செய்ய்வில்லை. ஆகவே காலகணிதம் 1 கட்டுரையை மீண்டும் வெளியிடவும்.
கால கணிதம் பற்றிய எல்லாக் கட்டுரைகளையும் (3 அல்லது 4..?) ஒரே கட்டுரையாக மீண்டும் வெளியிட்டலும் மிகவும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். முடிந்தால் வேலியிட்டு உதவவும்.
நன்றி! நன்றி! நன்றி!!!
பணிவுடன்

சுந்தர ராமன்
ஸ்ரீரங்கம்
ஜ்ய வருஷம் ஆடி 1

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

@ சுந்தர ராமன், ஸ்ரீரங்கம் நன்றிகள் பல. கீழ்க்கண்ட இணைய முகவரிக்குச் சென்றால், மொத்த கால கணித (1.2.3.4 &5) கட்டுரைகளையும் படிக்க இயலும்.
நி.த. நடராஜ தீக்‌ஷிதர் http://natarajadeekshidhar.blogspot.in/2010/05/blog-post.html

Soundproofing Contractors High Point said...

Hi greeat reading your blog