Saturday, April 3, 2010

கதம்பம்

கதம்பம்
ஆன்மீகம். ஆன்மாவை ஏகப்படுத்துவது. ஆன்மாவை ஒரு நிலைப்படுத்தும் ஒரு அற்புதமான முறை. ஆன்மீகத்திற்கான பாதை எல்லாம் வல்ல இறைவனை அடைவது தான். இறைவனை அடைய பல வழிகள் இந்து மதத்தில் உள்ளது. ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தது.
நதிகள் எப்படி பல்வேறு இடங்களில் தோன்றி, பல்வேறு பாதைகளில் பயணித்து இறுதியில் கடலைச் சென்றடைகிறதோ அது போல, ஒவ்வொரு ஆன்மீகப் பாதையும் இறுதியில் இறைவனைச் சென்றடைவதாகவே இருக்கின்றது.
இந்த ப்ளாக் ஆன்மீகத்தின் பல பாதைகளிலும் பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே எழுதப்படுகின்றது. அரும்புகள் ஒன்று சேர்ந்து மாலையாவது போல இந்த ப்ளாக் பதிவுகள் அரும்புகளாக அமைந்து ஆரமாக (மாலையாக) இறைவனுக்கு அர்ப்பணிக்கும் உணர்வுடன் எழுதப்படுகின்றது.
இந்த பதிவு மணக்க பலரும் துணை நின்றுள்ளார்கள். முதற்கண் ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவரின் தக்க வழிகாட்டுதலில் இந்த ப்ளாக் மேலும் மணம் வீசுகின்றது.
பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் பலரும் தொடர்புகொண்டு அவர்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களின் கேள்விகள் பல புதிய பரிமாணங்களைத் தேடச் செய்தது. பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
இதுவரை வெளிவந்த பதிவுகளின் தலைப்புகள் (hyperlink) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவுகளின் தலைப்புகளை க்ளிக் செய்தால் விபரம் அறிய முடியும். அந்தப் பதிவுகளின் மேலதிகத் தகவல்கள் சில கொடுக்கப்பட்டுள்ளன.
இனி வாரம் ஒரு முறை (இயன்றவரை) ஒரு பதிவு என வெளிவர உள்ளது. ஆதரித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து தொடர்பு கொண்டு பதிவுகள் சிறக்கக் கோருகின்றேன்.

எனது முந்தைய பதிவுகள் :
தைப் பூச நடனம்,
தைப் பூசம் - வடலூரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. வாடிய பயரைக் கண்டபோதெல்லாம் வாடிய சிதம்பரம் ராமலிங்கம் எனும் வள்ளலார் இறையொளியில் கலந்த நாள். தான் கையொப்பம் இடும்போதெல்லாம் சிதம்பரம் ராமலிங்கம் என்றே எழுதியிருக்கின்றார். வருவான் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே என்று பாடியவர், இறை வழிபாட்டை நெறிப்படுத்தியவர் வள்ளலார். தீராப் பிணியாகிய பசி போக்க அரும்பாடு பட்டவர். தைப்பூசத்தன்று வடலூரில் மிகப் பெரிய அளவில் அன்னதானம் நடைபெறுகின்றது. தைப் பூசம் முருகப் பெருமானுக்கும் உகந்த நன்னாள். தைப் பூச அன்னதானத்தில் பங்கு பெறுவது தீரா துன்பத்தை நீக்கவல்லது.
வியதீபாத தரிசனம்,
வியதீபாத தினம் - மகேஸ்வரப் பெருமானும் மனோன்மனி எனும் சக்தியும் இணைந்த நாள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறைவனும் இறைவியும் இரண்டறக் கலந்த நன்னாளில் மனம் ஒன்றுபட்டு சிவபெருமானை வழிபடுவது நல் இல்லற வாழ்வை நல்கும்.
மார்கழி மஹோத்ஸவம்,
மார்கழி உத்ஸவத்தின் ஒவ்வொரு நாளிலும் தெய்வங்கள் வீதியுலா வருவது குறித்து ஒரு தனித்த தாத்பர்யமே உள்ளது. அது உலக பரிமாண வளர்ச்சியைக் குறிக்கக் கூடியது. மார்கழி ஆருத்ரா தரிசனம் மாபெரும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது. ஆனந்த நடனப் பெருமானின் ஆனந்த நடனக் காட்சியைக் காண ஆயிரம் கண்கள் இருந்தால் கூட போதாது.
காசி யாத்திரை,
காசி க்ஷேத்திரம் - மிக புனிதமான க்ஷேத்ரம். தன்னுள் பல அமானுஷ்யங்களைக் கொண்டது. பிறப்பறுக்கும் பெம்மானை காசியில் தரிசித்தால் பிறவிப் பயன் பெறுவதோடு, மறுபிறவி இல்லா மோக்ஷம் அளிக்க வல்லது. இந்தப் பதிவின் பின்னூட்டங்களை (comments) கள்ளபிரான் எழுதியவற்றையே ஒரு தனிப் பதிவாகவே எழுதலாம். அவ்வளவு விஷயங்களை எழுதியிருக்கின்றார்.
ஆழ்வார்கள் அருளிய அமுதம்,
ஸ்ரீ வைஷ்ணவம் எனப் போற்றப்படும் விஷ்ணுவை பெரும் தெய்வமாகக் கொண்டாடும் வழிபாட்டு முறையில் எண்ணற்றப் பெரியோர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் எழுதிய தமிழ், இடைக்காலத்தில் சற்றே தாழ்ந்திருந்த தமிழின் நிலையை மென்மேலும் தூக்கி நிறுத்தியது.
தியாகராஜர் ஆராதனை,
தியாகராஜர் தமிழ் நாட்டில்தான் வாழ்ந்தார் என்றாலும் தெலுங்கில் தான் பாடல்கள் இயற்றினார். பலரின் கேள்வி தமிழ்நாட்டில் வாழ்ந்து ஏன் அவர் தமிழில் பாடவில்லை என்பது. இது பற்றி பல தமிழ்ப் பெரியோர்களே (ராஜாஜி முதற்கொண்டு) பதிலிறுத்துள்ளார்கள். தியாகராஜர் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் அவரின் தாய் மொழி தெலுங்குதான். அவருணர்ந்த தாய் மொழியில் பாடியது தான் பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள். இந்திய தேசிய கீதத்தை ரபீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் தான் எழுதினார். ஏன் அவர் புலமை பெற்ற ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ எழுதவில்லை? தேசிய கீதம் கீதாஞ்சலி எனும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. (தாகூர் தேசிய கீதத்தை 1919ல் morning song of india என்று மொழிபெயர்த்திருக்கின்றார். இருப்பினும் எங்கும் பாடப்படுவது ஜனகனமண தான்.) இங்கு தேசிய ஒற்றுமைதான் முன்னிற்கிறதே தவிர மொழி அல்ல. அதுபோல தியாகராஜரின் பாடல்கள் பக்திபா(ba)வம் தான் வெளிப்படுகிறது.
சாளக்ராம வழிபாடு,
சாளக்ராமங்கள் சாபங்களைப் போக்கக் கூடியவை. நல்ல நிபுணர் துணைகொண்டு பெற்று பூஜிப்பது நல்லது. சாளக்ராமத்திற்கு பால் அபிஷேகம் செய்து அதை பிரஸாதமாக உட்கொள்வது பல்வேறு உடல் உபாதைகளை நீக்கக் கூடியது.
கூடாரைவல்லி,
ஆண்டாள் இயற்றிய பாடல்களைப் பற்றி பலரும் அலசியிருக்கிறார்கள். அவளின் பெண்மை சார்ந்த பாடல்கள் அனைவரையும் மயக்கக் கூடியவை. lateral thinking வகையைச் சேர்ந்தவை ஆண்டாளின் பாடல்கள்.
திருப்பாவையின் முதல் பாடல் "மார்கழித் திங்கள்... கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ... பாரோர் புகழ படிந்தேலோ ரெம்பாவாய்".
ஒவ்வொரு வார்த்தைக்கும் எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன.
"கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்" - ஆயர்குலத் தலைவராகிய நந்தகோபர் மிகவும் சாதுவாக விளங்கியவர். அவரை ஏன் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று ஆண்டாள் சொல்லவேண்டும்?
நந்தகோபர் ஒரு எறும்பைக் கண்டால் கூட அதற்கு இம்சை தராமல் இருக்க விருப்பப்படுவாராம். அந்த பரமசாதுவான நந்தகோபர் கண்ணனைத் தூளியில் வைத்து ஆட்டும்போது, தந்தைப் பாசம் மிக்கவராய், ஒரு எறும்பு கூட கண்ணனைத் துன்புறுத்தக் கூடாது என நினைப்பாராம்.
அதுவும் எப்படி, தூளியின் கீழே ஒரு எறும்பைக் கண்டால் கூட, அதை, சிங்கத்தை எதிர்க்கவல்ல கொடும் நுனியுள்ள கூரான வேல் கொண்டு, அந்த எறும்பை, தன்னை எதிர்க்க வரும் சிங்கத்துடன் எப்படிப் போராட முனைவாரோ அது போல எறும்பினை தாக்க விழைவாராம். எப்படிப்பட்ட கற்பனை?
நால்வர் காட்டிய நல்வழி,
நால்வர் பாடிய பாடல்கள் தமிழகத்தைச் செம்மைப்படுத்தின. பல அற்புதங்களை நிகழ்த்தின. தேவாரம், திருவாசகம் பாடல்பெற்ற தலங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நால்வரின் பாடல்கள் நன்கு பயன்பட்டது.
சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்,
சைவ வைணவ ஒற்றுமையை உணர்த்துவது சங்கர நாராயணர் வடிவம். இடைக்காலத்தில் ஏற்பட்டிருந்த சைவ வைணவப் போரை மட்டுப்படுத்தியது இந்த தெய்வீக வடிவங்கள். இதன் ஒரு அடையாளச் சின்னம் தான் சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர் அதிசய அரிய சிற்பம்.
கவிக்கோ(ர்) காளமேகம்,
காளமேகமும் இரட்டைப் புலவர்களும் சமகாலத்தவர்கள். இரட்டைப் புலவர்கள் காளமேகத்தைக் காண ஆவலாயிருந்தனர். ஒரு சமயம் திருவாரூரில் இருக்கும்போது "நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தான்" என்பதோடு நிறுத்திவிட்டார்கள். அதற்கு மேலே அவர்களால் எழுத இயலவில்லை. அதை அப்படியே கோயில் சுவரில் எழுதிச் சென்றார்கள்.
பிறகு பல ஊர்களுக்குச் சென்று திரும்பியபோது பாடல் "மண்தின்ற பாணமே - தாணுவே சீரார் மேவும் சிவனே நீர் எப்படியோ நேரார் புரம் எரித்த தேர்" என்று சந்தம் மாறாமல் முடிக்கப்பட்டிருந்தது. அதை எழுதியது காளமேகம் தான் என்று அறிந்து, அவரைக் காண விரைகிறார்கள்.
பாடலின் அர்த்தம் : சிவபெருமான் முப்புரம் எரிக்க பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களை சக்கரமாகவும், மேருமலையை வில்லாகவும், வாசுகி எனும் பாம்பை வில்லின் நாண் ஆகவும், விஷ்ணுவை அம்பாகவும் கொண்டு சென்றார் என்று சிவபுராணங்கள் பகரும்.
இதை எப்படி சிலேடையாக அமைக்கின்றார்.
நாண் - முப்புரம் எரிக்க எடுத்துச் சென்ற நாண் நஞ்சிருக்கின்றது. நைந்து இருக்கின்றது. மக்கியிருக்கின்றது. வில்லோ கல் போல (கற்சாபம்) கனமாக இருக்கின்றது. கல் வில்லை எப்படி வளைத்து அம்பெய்ய முடியும்? அம்போ மண் தின்ற பாணம். மண்ணால் அரிக்கப்பட்ட அம்பு. சிவபெருமானே, இவையெல்லாம் கொண்டு எப்படித்தான் முப்புரம் எரித்தீர்களோ என்று கேட்பது போல மேலோட்டமான அர்த்தம்.
உள்ளார்ந்து பார்த்தால், நஞ்சு எனும் விஷம் இருக்கும் வாசுகி எனும் பாம்பை நாணாகக் கொண்டும், நற்சாபம் கற்சாபம் - மேரு மலையே வில்லாகவும், மண் தின்ற பாணம் - கண்ணன் சிறு வயதில் மண் தின்றார். அந்த கண்ணணாகிய விஷ்ணுவை அம்பாகவும் கொண்டு முப்புரம் எரித்தார் என்று அர்த்தம் கிடைக்கின்றது. எப்படி அற்புதமாக எழுதியிருக்கின்றார்கள்.
அதிசய அற்புத பாடல்கள்,
பல்வேறு அதிசயப் பாடல்கள் கண்டோம். ஸ்ரீ ரமேஷ் என்பவர் அதிசயமான அற்புதப் பாடல் ஒன்றை மாணிக்க பந்தம் எனும் பாடலை அனுப்பியுள்ளார். மிக அழகாக அமைந்த பாடல். இதை இயற்றியவர் ஒரு முஸ்லிம் பெரியவர்.





பாம்பு இயற்றிய பாடல்,
ஆதிசேஷனின் வடிவாகிய பதஞ்சலி தன் சொந்த வழிபாட்டிற்காக உருவாக்கிய லிங்கம் சிதம்பரத்தின் மேற்கு திசையில் அமைந்த நாகசேரியில் (அனந்தீஸ்வரன் கோயில்) அமைந்துள்ளது. அது அனந்தேசுரம் என்றும் அழைக்கப்படுகிறது. (அனந்தன் - ஆதிசேஷனுக்கு மற்றும் ஒரு பெயர்)
நடராஜ பத்து,
பிற்காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய நடராஜர் பத்து பாடல்கள் மனதைக் கொள்ளைக் கொள்ளக் கூடியவை.
திருப்பல்லாண்டு,
திருவிசைப்பா எழுதியது ஜெயந்தன் என்ற பெயர் கொண்ட சேந்தன் என்பது சில தமிழறிஞர்களின் கூற்று. திருப்பல்லாண்டு பாடியவர் களி படைத்த சேந்தனார். பல மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் பக்தி சுவை மிகுந்த பாடல்களாக அமைந்தவை.
மஹா சிவராத்திரி,
இந்த வருடம் மட்டும் மிக அதிகமாக பேசப்பட்டது சிவராத்திரி நன்னாள். எந்த மாதத்தில் கொண்டாடவேண்டும் என்பது சிவத் தொண்டர்களுக்கு ஒரு பெரும் சந்தேகமே இருந்தது. இது பற்றி தனியே நீண்டதொரு விளக்கம் எழுத வேண்டியிருக்கின்றது. அதைப் பிறகு சமயம் கிடைக்கும்போது எழுதுகின்றேன். சிவனை இரவில் சிந்தையில் நிறுத்தும் எந்த நாளும் சிவராத்திரிதான்.
வசந்த நவராத்திரி,
வசந்த காலம் என்பது மகிழ்வைத் தருவது. உலகம் தன்னத் தானே புதுப்பித்துக் கொள்ளும் காலம். விவசாயம் செழித்து, அதன் வாயிலாக செல்வம் நிறைந்த காலம். அம்பிகைக்கு உரிய பூக்கள் பூத்துக் குலுங்கும் காலம். குதூகலம் பொங்கும் இந்த வசந்த காலத்தில் வரும் வசந்த நவராத்திரியில் அம்பிகையை வழிபடுவது வாழ்வில் வசந்தத்தை வீசச்செய்யக்கூடியது.
நவாவரண பூஜை,
நவாவரண பூஜை - பல்வேறு உள்ளர்த்தங்களைக் கொண்டது. உடலை மந்திரவயப்படுத்தி, உடலின் உள்ள ஆறு சக்கரங்களையும் உயிர்ப்பித்து, தூண்டி செய்யப்படக்கூடிய அற்புதமான பூஜை. மேலும் இதற்கான விளக்கங்கள் ஒரு தனி பதிவில் காண்போம்.
- நி.த. நடராஜ் தீக்ஷிதர்
- 94434 79572
- yanthralaya@yahoo.co.in
2010ம் வருடத் தொகுப்பு இங்கே க்ளிக் செய்யுங்கள்.

3 comments:

அண்ணாமலையான் said...

very useful post.. thank u

C.SELVAMANI said...

Sir,
After 50 days I have an opportunity to view your web site , now your presentation and explanation about the Spirituality , Sivarathiri and other presentation are in very clear Literary Tamil and also create to Read .Thank You, Please Continue your Presentation .
C.SELVAMANI
NEYVELI-3.

k.sdengottuvelan said...

Sir,

There are two RAJAS one is at CHIDAMBARAM NATARAJA and the other is THIRUVARUR THIYAGARAJA.

I request you to write the other RAJA also