Tuesday, September 20, 2011

தில்லையில் திகழும் தசதீர்த்தங்கள் (பகுதி - 2)

தில்லையில் திகழும் தசதீர்த்தங்கள் (பகுதி - 2)

இந்தப் பதிவைப் படிக்கும் முன் தயவுசெய்து இதற்கு முந்தைய தில்லையில் விளங்கும் தச தீர்த்தங்கள் (பகுதி - 1)ஐ இங்கே க்ளிக் செய்து படிக்கக் கோருகின்றேன்.


6. பிரமதீர்த்தம் (வாஸிஷ்ட தீர்த்தம்)
கௌடதேசத்து அரசனாகிய ஐந்தாம் மனுவின் குமரனாகிய சிம்மவர்மன், தன் தோல் நோய்கள் நீங்க, பதஞ்சலி வியாக்ரபாதர்களின் ஆலோசனைக்கேற்ப, சிவகங்கை தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, தன் உடல்நோய்கள் நீங்கி, ஹிரண்யவர்மனாக (தங்க மேனியனாக) எழுந்தான்.
கௌட தேசத்தின் இளவரசனாக சிம்மவர்மன் முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்டாலும், தன் உடல் நோய் காரணமாக, சிம்ம வர்மன், தன் சகோதரர்களாகிய வேதவன்மன் மற்றும் சுமதி ஆகியோரிடம் யுவராஜ்ய பரிபாலனத்தைக் கொடுத்து விட்டு, நோய் நீங்க தீர்த்த யாத்திரை மேற்கொண்டான்.
சிதம்பரத்தில் வந்து நோய் நீங்கிய சமயம், கௌடதேசத்தின் அரசனாகிய சிம்மவர்மனின் தந்தை உயிரிழக்க, இவனின் சகோதரர்களும், மூத்தவனாகிய சிம்மவர்மன் தான் அரசனாக வேண்டும் என்க, நாட்டில் குழப்பம் ஏற்பட்டது.
இக்குழப்பத்தை நீக்க, கௌடதேசத்து ராஜ குருவாகிய வசிஷ்டர், தான் சென்று சிம்மவர்மனை அழைத்துவருவதாகக் கூறி, தென்புலத்திற்கு தன் குடும்பத்துடன் வந்தார்.
வசிஷ்டர் மிகச் சிறந்த சிவபக்தர். சிதம்பரம் தலத்திற்கு வந்து, கோயிலின் வடமேற்கு திசையில், திருக்களாஞ்செடிகள் சூழ்ந்த இடத்தில், ஆசிரமம் அமைத்துக் கொண்டு, சிவ வழிபாடு செய்துவந்தார்.
பிரம்ம ஞானத்தை தரும் வகையில், அங்கு பிரம்மபுரீசுவர் எனும் சிவலிங்கத்தை ஸ்தாபித்து பூஜைகள் செய்து வந்தார்.
அது சமயம், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத ரிஷிகள் வசிஷ்டரை முறைப்படி வணங்கி, வந்த காரணம் கேட்க, ஹிரண்யவர்மனாகிய சிம்மவர்மனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்யவேண்டிய கட்டாயத்தினை எடுத்துரைக்கின்றார். இதைக் கேட்டு மனம் மகிழ்ந்த இருவரும், சிதம்பரத்திலேயே ஹிரண்யவர்மனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்துவைக்கின்றனர்.
ராஜ்யபரிபாலனம் மேற்கொண்ட ஹிரண்யவர்மன், கௌடதேசம் சென்று, முறைப்படி அரசனாக முடிசூடிக்கொண்டு, தன் படைகளையும், செல்வங்களையும் எடுத்துவந்து, சிதம்பரம் கோயிலை விரிவுபடுத்தினான்.
வசிஷ்டர் திருக்களாஞ்செடிகள் சூழ்ந்த இடத்தில் அமைத்த பிரம்மபுரீசுவரர் ஆலயத்தில், தினமும் பத்தாயிரம் முறை பஞ்சாக்ஷர மந்திரத்தையும், ஸ்ரீ வித்யையும் ஜபம் செய்து, புரஸ்சரணை முறைப்படி, அதற்குண்டான ஹோமங்களும், தர்ப்பணங்களும் செய்துவந்தார். ரிஷி பத்னியாகிய அருந்ததி அருகில் ஒரு தீர்த்தத்தை உண்டுபண்ணி, அபிஷேக ஆராதனைகளுக்கு கணவருக்கு உதவியாக இருந்தாள்.
அந்த அருமையான தீர்த்தமே பிரமதீர்த்தம் அல்லது வாஸிஷ்ட தீர்த்தம் என்று பெருமையாகப் போற்றப்படுகின்றது. அழகுமிகுந்த தோப்புக்குள் அமையப் பெற்றதால் அந்த இடம் சிங்காரத்தோப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. பிரம்மபுரீசுவரர் ஆலயத்திற்கான தீர்த்தம் என்பதால் அது பிரம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.

இங்கு ஸ்னானம் செய்வதால் பிரம்மஞானம் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
7. திருப்பாற்கடல் :
வசிஷ்டர் தன் குடும்பத்துடன் திருக்களாஞ்செடிகள் சூழ்ந்த சிங்காரத்தோப்பில், தவம் செய்து கொண்டிருக்கின்றார்.
தம்மை வந்து தரிசித்த பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளைக் கண்டு மகிழ்ந்தார்.
வியாக்ரபாதரின் தவ சிரேஷ்டத்தைக் கண்டு வியப்புற்று, தன்னுடன் அழைத்து வந்திருந்த தன் தங்கையை, வியாக்ரபாதருக்கு மணம் முடித்து வைத்தார்.
வசிஷ்டரின் தங்கையும், வியாக்ரபாதரும் - தம்பதி சமேதராக நடராஜப் பெருமானை வழிபட்டுவந்தனர். இருவரின் குடும்ப வாழ்க்கைக்குச் சான்றாக சூரியனையொத்த பிரகாசத்துடன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு உபமன்யு என்று பெயரிட்டனர்.
உபமன்யு, வசிஷ்டரின் ஆசிரமத்தில், அருந்ததியின் அரவணைப்பில், தெய்வப்பசுவாகிய காமதேனுவின் பால் அருந்திக் கொண்டு, வனப்புடன் வளர்ந்துவந்தான்.
சில காலம் சென்று, உபமன்யுவையும் அவன் தாயையும் அருந்ததி, வியாக்ரபாதரின் இல்லம் கொண்டு சேர்ப்பிக்கின்றாள்.
இங்கு வந்த குழைந்தைக்கு வியாக்ரபாதர் தனது ஆசிரமத்திலிருந்த பசுவின் பால் தர, தெய்வப்பசுவாகிய காமதேனுவின் சுவைமிக்க பால் அருந்திய அந்த பாலகன், வியாக்ரபாதர் தந்த பாலைத் துப்பிவிட்டு, காமதேனுவின் பால் தான் வேண்டும் என அடம்பிடித்து, பசியால் துடிக்க, செய்வதறியாது திகைத்த வியாக்ரபாதர் நடராஜரை வேண்ட, தன் பக்தனின் துயர் துடைக்க, குழந்தை குடிப்பதற்காக பால் அலையென அடித்துவரும் வகையில் பாற்கடலையே உண்டாக்கினார். அதை உண்ட உபமன்யு, திருப்தியடைந்து, தந்தையிடம் பாடங்கள் பயின்று பெரும் ஞானியானார்.
உபமன்யு, கிருஷ்ணருக்கு பஞ்சாக்ஷர உபதேசம் செய்வித்து, கிருஷ்ணருக்கு ஏற்பட்ட தோஷங்களை நீங்கச் செய்தார். இவரின் சரிதத்தை சிவரஹஸ்யம் மிக விரிவாக விளக்குகின்றது.
பாலுக்குப் பாலகன் வேண்டியதிடப் பாற்கடல் ஈந்த பிரான் - என்று திருப்பல்லாண்டிலும், அப்பர் தேவாரத்திலும் இச்சம்பவம் இடம்பெறுகின்றது.
நடராஜரால் ஏற்படுத்தப்பட்ட திருப்பாற்கடல், கோயில் வடதிசையில் அமைந்திருக்கின்றது.
8. அனந்த தீர்த்தம் (அனந்தேஸ்வரம்) :
ஸ்ரீ பதஞ்சலி ரிஷி தனது ஆத்மார்த்த பூஜைக்காக, ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபாடு ஆற்றிவந்தார். அது சிதம்பரத்திற்கு தெற்கு திசையில் அமைந்துள்ளது. அனந்தன் என்றால் ஆதிசேஷனைக் குறிக்கும். ஆதிசேஷனின் அம்சமாக அமையப்பெற்ற பதஞ்சலியால் ஏற்பட்ட ஈஸ்வர ஆலயம் ஆகையால் அது அனந்தேஸ்வரம் என்று போற்றப்படுகின்றது. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஆலயத்திற்குள் அமைந்த குளம் அனந்த தீர்த்தம். இதில் ஸ்நானம் செய்தால் ஸஞ்சித பாபங்கள் (வினைகள்) அனைத்தும் நீங்கும் என்கின்றது கோயில் புராணம்.

பதஞ்சலி நாக உருக்கொண்டு, கைலாயத்திலிருந்து சிதம்பரத்திற்கு வந்து பூமிக்கடியிலேயே பயணித்துவந்து, சிதம்பரத்தினருகே ஒரு துவாரத்தின் வழியே எழுந்த இடம் தான் நாகசேரி. தான் எழுந்த இடத்திற்கு சற்று தொலைவிலேயே தனக்கான ஆத்மார்த்த பூஜைக்கான கோயில் அமைத்தார் பதஞ்சலி.
9. வியாக்ரபாத தீர்த்தம் (இளமையாக்கினார் கோயில்)
பதஞ்சலி மஹரிஷியைப் போன்று, அவருடன் நடராஜரை அனுதினமும் வழிபாடாற்றிய வியாக்ரபாத முனிவரும் தனது ஆத்மார்த்த பூஜைக்கென ஒரு ஆலயம் அமைத்தார். அது புலிக்கால் முனியான வியாக்ரபாதர் அமைத்ததால், அது திருப்புலீசுவரம் என்று அழைக்கப்பட்டது. அக்கோயிலுக்கு எதிரில் அமைந்த ஒரு பெரிய குளம் - வியாக்ரபாத தீர்த்தம் - என்று போற்றப்படுகின்றது.
63 நாயன்மார்களில் ஒருவர் திருநீலகண்ட நாயனார். இவர் தம் மனைவி ஒரு சமயம் இவர் மீது கோபம் கொண்டு, என்னை எப்பொழுதும் தீண்டக்கூடாது என்று திருநீலகண்டத்தை உடைய சிவபெருமான் மீது ஆணை எனக் கூற, அதன் படி, திருநீலகண்டரும் மனைவியைத் தொடாது குடும்பம் நடத்திவந்தனர். காலம் கடந்தது. முதுமை அடைந்தனர். சிவபெருமானின் திருவிளையாட்டால், முதுமை பெற்ற தம்பதியினர், இக்குளத்தில் ஒரு சேர மூழ்கி எழ, இதனைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் அதிர்ந்தனர். இக்குளத்திலிருந்து எழுந்த இருவரும் முதுமை நீங்கி இளமையுருவம் கொண்டனர். (திருநீலகண்டர் வரலாற்றை இங்கே
க்ளிக் செய்து காணவும்)
ஆகவே இக்குளம் இளமையாக்கினார் குளம் என்று பெயர் பெற்றது. நோயற்ற நீடித்த நல்வாழ்வு வாழ இக்குளம் வரம் அருளுகின்றது.
10. குய்ய தீர்த்தம் (பாசமறுத்த துறை - கிள்ளை)
வருண பகவான் தண்ணீருக்கு அதிபதியாக விளங்கக் கூடியவர். ஒரு சமயம் இவர் தமது எதிரி ஒருவனை வெல்ல ஒரு மந்திராஸ்திரத்தைக் கற்றுக்கொள்ள எண்ணி தமது இடத்திற்கு அஸ்திர (அம்பு) சாஸ்திரம் அறிந்த ஒருவரை, குருவாக ஏற்று வரவழைக்கின்றார். மாலை நேரத்து இருள் கவியும் நேரத்தில், செடிகள் சூழ்ந்த வருணன் வசிக்கும் இடத்திற்கு, வருணனுக்கு அம்பு சாஸ்திரம் கற்றுத்தர குரு வருகை தர, வருணன் தனது பகைவன் தான் தன்னைக் கொல்ல வருகின்றான் என்று தவறாக எண்ணி, ஒரு அம்பினைப் போடுகின்றான். அந்த அஸ்திரம் குருவைக் கொன்றுவிடுகின்றது. குருவைக் கொன்ற பாபம், பிரம்மஹத்தி தோஷமாக வருணனைப் பீடிக்கின்றது. அச்சமயம் ஒரு பூதம் ஒன்று தோன்றி, குருவைக் கொன்றதால் வருணனுக்குத் தண்டனையாக, வருணனின் கை, கால், கழுத்து இவை அனைத்தையும் ஒரு சேர பாசக்கயிற்றினால் கட்டி, கடலில் போட்டுவிடுகின்றது.
வருணன் இல்லாததால் வறண்டன நிலங்கள்.
இதையறிந்த தேவர்கள், வியாக்ரபாதரிடம் முறையிட, அவர் வருணனை, நடராஜப் பெருமானை வேண்டச் சொல்ல, அவ்வகையில் வருணன் ஆனந்த நடராஜப் பெருமானை அனுதினமும் வேண்டிக்கொண்டிருக்க, மாசி மாதத்து, மகம் நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் வருணனுக்கு இடபாரூடராகக் காட்சி தந்து, பிரம்மஹத்தி தோஷம் நோக்கி, வருணன் கட்டப்பட்டிருந்த பாசக்கயிற்றையும் அறுத்து எறிந்தார்.
ஈசன் கிளர்ந்து (விரைந்து தோன்றிய) இடம் கிள்ளை. பாசக் கயிற்றினை அறுத்ததினால் அது பாசமறுத்த துறை.
வருணன் பிறகு தவமிருந்து வருணாஸ்திர தந்திரம் அறிந்துகொண்டு, பகைவனை வென்றார்.
கிள்ளை - சிதம்பரத்திற்கு வடகிழக்கில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. சுனாமி அலைகளைத் தடுக்கவல்ல மாங்குரோவ் காடுகள் நிறைந்த - சிறந்த சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது.
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில், சிதம்பரத்திலிருந்து கிள்ளைக்குச் செல்ல சிறந்த சாலை வசதி செய்யப்பட்டது. கடலாடு மண்டபமும் கட்டப்பட்டது.
மாசி மகத்தின் பொழுது, சிதம்பரத்தின் இடபாரூடராகத் தோன்றும் சந்திரசேகரர், கிள்ளை கடலாடு மண்டபத்தில் எழுந்தருளி, தீர்த்தம் கொடுத்து அருளுவார்.
மிகப் பழைய நூலாகிய சூத ஸம்ஹிதை - குய்ய தீர்த்தமாகிய பாசமறுத்த துறையைப் போற்றிப் பறை சாற்றுகின்றது (தீர்த்த மாஹாத்மியம்).
சிதம்பரத்தில் திகழும் தச (10) தீர்த்தங்களும் ஒவ்வொரு விதத்தில் புகழ் வாய்ந்தன, பெருமை வாய்ந்தன.
தை அமாவாசையில் தச தீர்த்தங்களிலும் ஒரே நாளில் ஸ்நானம் செய்பவர் சிவகதி அடைவார்கள் என கோயில் புராணம் பகர்கின்றது.
மாதந்தோறும் வரும் அமாவாசையிலும், வியதீபாதம் கரணம் நிகழும் நாளிலும், திருவாதிரை நக்ஷத்திரத்திலும் - தச தீர்த்தத்தில் எந்தவொரு தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்வதால் கிடைக்கும் பலன் அளவற்றது என்றும் சிவலோகத்தில் என்றும் இடம்பெறும் வாய்ப்பும் கிடைக்கப்பெறும் என்று க்ஷேத்ரபுராணம் அறுதியிடுகின்றது.
அருமையும், பெருமையும், புகழும், பழமையும் வாய்ந்த அந்த தீர்த்த நிலைகள் அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பதைப் போல, அம்பலவாணரின் அருட்கருணையால் அவையனைத்தும் அணைகள் போல, முழுதும் நிரம்பி, பக்தர்களுக்கு என்றும் வற்றாத கடல் போல அருளை வாரி வழங்க வேண்டும் என்றும் இறையவனை இடைவிடாது இறைஞ்சுவோம்.
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜை
cell : 94434 79572
mail : yanthralaya@yahoo.co.in
www.facebook.com/deekshidhar

7 comments:

Geetha Sambasivam said...

ராஜ்யபரிபாலனம் மேற்கொண்ட ஹிரண்யவர்மன், கௌடதேசம் சென்று, முறைப்படி அரசனாக முடிசூடிக்கொண்டு, தன் படைகளையும், செல்வங்களையும் எடுத்துவந்து, சிதம்பரம் கோயிலை விரிவுபடுத்தினான்.//

நன்றி, இந்த சிம்மவர்மன் தான் பல்லவர்களின் முன்னோர் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

Geetha Sambasivam said...

தொடர

Astro வெங்கடேஷ் said...

பல புதிய தகவல்களை தெரிந்துகொண்டேன்.மிக்க நன்றி

hamaragana said...

அன்புடன் வணக்கம்
சிதம்பரம் தீர்த்த மகிமைகள் பற்றி அறிய ஸ்ரீ சிவகாமி சமேத ஸ்ரீ ஞாந மஹா நடராஜா பிரபுதான் வழி காட்டி உள்ளார்
எம்பிரான் பொந்தாமரை திருவடிக்கு ஆயிரம் நமஸ்காரம்,.
எடுத்து அழகான மலையாக கொடுத்த உங்களுக்கு நன்றிகள் பல
மேலும் கோயில் புராணம் பற்றி ஒரு தொடராக எழுதுங்கள் எங்கள் போன்றவர்க்கு பயன் படும்..
பணிவுடன் வணக்கம்

The King said...

Bhakthi Mala Part 2 Is Fine!
-Sriharshan

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

தச தீர்த்தங்களின் மிகப் பழமையானதும், பெருமை வாய்ந்ததும் ஆகிய திருப்பாற்கடல் குளம், இறையருளாலும், பக்தர்களின் அளப்பரிய தொண்டினாலும், பொது மக்களின் ஏகோபித்த ஆதரவினாலும், மடாதிபதிகளின் அருட்பார்வை பெற்றதாலும், தற்போது சிறப்பாக புனரமைக்கப்பட்டு, மிக மிக அழகிய கோலத்தில் காட்சி அளிக்கின்றது. இது போல் மற்ற குளங்களும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இறையருளே துணை.

Unknown said...

அற்புதமான தகவலை தெரிந்து கொண்டேன்
நன்றி 👍நமஸ்காரம் 🙏🙏🙏