Thursday, May 26, 2011

ஸஹஸ்ரநாம ஸம்மேளனம்


ஸஹஸ்ரநாம ஸம்மேளனம்

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் & நடராஜ ஸஹஸ்ரநாமம் – ஓர் ஒப்பீடு.

இதற்கு முந்தைய கட்டுரையாகிய லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம் எனும் பதிவைப் படித்து, பிறகு இந்தப் பதிவைப் படிக்கக் கோருகின்றேன். (இங்கே க்ளிக் செய்து படிக்கவும்)

இந்தப் பதிவில் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திலும், ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்திலும் அமைந்திருக்கும் ஒற்றுமைகளைக் கலந்து (MIXTURE – ஸம்மேளனம்) காண்போம்.
ப்ரஹ்மஸ்ரீ க. பரமேஸ்வர தீக்ஷிதரின் ரம்யமான குரலில் அமைந்த ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்தினை மேலே உள்ள Barல் Play Button அழுத்திக் கேட்கலாம்.

உலகத்தின் மிகப் பழமையான மதம் இந்து மதம்.
அந்த இந்து மதத்தின் மிகப் பழமையான வழிபாடு சிவ வழிபாடு.
ஹரப்பா & மொகஞ்சதாரோ நாகரீக உலக அகழ்வாய்வில் சிவ லிங்கத்தின் வழிபாட்டிற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.
அது தவிர, உலகமெங்கும் சிவ வழிபாட்டிற்கானச் சின்னங்களைக் கண்டறிந்திருக்கின்றார்கள்.

சிவம் – நிலைத்த சக்தி (STATIC ENERGY).
சக்தி – இயங்கு சக்தி. (DYNAMIC ENERGY)
ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.
இந்த இரண்டும் இணைந்ததினால் மட்டுமே உலகம் உயிர்பெற்றது. அதன் ஆயுள் நீண்டு கொண்டே இருக்கின்றது. (E = MC2) அதாவது, இந்த பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கின்றது.

ஒரு அணைக்கட்டில் தேங்கி இருக்கும் நீர் – சிவம் (நிலையானது).
அதே நீர் அணைக்கட்டின் மதகுகள் திறக்கப்பட்டால், பெருக்கெட்டுது வரும் நீர் - அந்த இயக்கம் - சக்தி.
ஆக, சிவசக்தி இணைவு மட்டுமே பேராற்றலைத் தரக்கூடியது.

சற்று நேரம் அமைதியாக - நிலைத்து இருக்கச் சொல்லும் வகையில் அமைந்த சொல்லாடல் : ‘சற்று நேரம் சிவமாக இரு’.
இதில் வரும் ‘சிவமாக’ எனும் வார்த்தையே நாளடைவில் ‘சும்மா’ என்று அர்த்தமற்ற வார்த்தையாகத் திரிந்தது. (‘சற்று நேரம் சும்மா இரு’)

இறைவழிபாட்டிலும் பெரும் அருட்சக்தியைத் தரக்கூடியது சிவசக்தி வழிபாடு.
முன்னர் சொன்னது போல, மிகப் பழமையான வழிபாடாகிய, சிவலிங்க வழிபாடு அதாவது சிவசக்தி வழிபாடு மிகப் பெரும் பேரருளைத் தரக்கூடியது.

(ஒரு சமயம், ராவணன் புஷ்பக விமானம் கொண்டு வரும் வழியில் கைலாய மலை எதிர்ப்பட, அதைத் தன் பாதையிலிருந்து அகற்ற - அகந்தையுடன் கைலயாத்தைப் பெயர்க்க முற்பட, ராவணனின் முயற்சியால் நடுங்கிய கைலாயத்திலிருந்த பார்வதி தேவி அச்சத்துடன் சிவபெருமானை ஆலிங்கனம் செய்ய, எதிர்பாராத தருணத்தில் அம்பிகை தழுவியதால் ஆனந்தம் அடைந்த சிவன், பார்வதியை நோக்கி அஞ்சவேண்டாம் என்று கூறி, தனது கால் கட்டை விரலால் மலையை அழுத்த, அந்த நேரம் ராவணனின் கைகள் மலைக்கும், பூமிக்கும் இடைப்பட்டு நசுங்க, அலறியழுத ராவணன் சாமகானம் மீட்ட, இறைவன் பார்வதி தேவியின் ஆலிங்கனத்திற்குக் காரணமாக இருந்த ராவணனுக்கு, சிவசக்தி ரூபமாய் விளங்கி – அவன் கேட்காமலேயே மூன்று கோடி நாள் ஆயுள், மிகுந்த பராக்கிரமம், வைரம் பாய்ந்த உடல், சந்திரஹாசம் எனும் வாள் என வரங்களை வாரி வாரி வழங்கியருளினார். ராவணன் சிவசக்தி ரூபத்தை போற்றியதால் மட்டுமே (அவன் எதுவும் கேட்காமலேயே) பற்பல வரங்களைப் பெற்றான்.)

சிவலிங்கத்தின் மேல் பாகம் - லிங்க பாகம் சிவமாகவும்,
கீழ்பாகம் – ஆவுடையார் பாகம் – சக்தியாகவும் விளங்குவதை லிங்கபுராணம் கூறும்.

சிவனையும், சக்தியையும் ஒருங்கே அல்லது ஸம்மேளனமாக (கலந்து) தரிசனம் செய்ய வழி செய்யும் இறைவடிவம் சிவலிங்க வடிவம்.

சிதம்பரம் – பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாச தலமாக விளங்குவது. சிதம்பர ரகசியம் விளங்கும் ஸ்தலம்.
சிதம்பர ரகசியத்தின் பல விளக்கங்களில் முக்கியமான ஒன்று :
சிதம்பர ரகசியம் அமைந்த அந்த அற்புதமான இடத்தில், சிவ யந்திர சக்ரமும், சக்தி யந்திர சக்கரமும் ஒருங்கே (ஸம்மேளனமாக) இணைந்துள்ளது.
ஆகாயம் எல்லையற்று விளங்குவதைக் குறிப்பது, இறைவனின் சக்தி எல்லையற்றது என்பதை தெளிவுபடுத்துவது, ஆகாயத்தின் முழுமை நம் கண்களுக்கு புலப்படாதது என்பதை உணர்த்துவது சிதம்பர ரகசிய தத்துவம். (யந்திர சக்கரம் – தெய்வத்திற்கான உயிர் போன்றது. உயிர் எப்படி நம் கண்களுக்குப் புலப்படுவது இல்லையோ அது போல யந்திர சக்கரங்கள் நம் கண்களுக்குப் புலப்படாமல் அமைக்கப்பட்டிருக்கும்.)

ஆக, சிதம்பர ரகசியத்தின் மிக முக்கிய கோட்பாடு – சிவசக்தி (ஸம்மேளனம்) இணைவே.

சிதம்பரத்தின் சித்ஸபையில் கண்களுக்குப் புலப்படாமல், சிவசக்தி இணைவு இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காகவே தங்க வில்வ மாலைகள் அந்த புனித இடத்தின் மேல் சாற்றப்பட்டிருக்கின்றன. அதனை தரிசனம் செய்வதே சிதம்பர ரகசிய தரிசனம். மிகப் புண்ணியம் தருவதும், மேலான வரங்களை உடனடியாக நல்குவதும் ஆகியது சிதம்பர ரகசிய தரிசனம்.

கண்ணுக்குப் புலப்படாத அந்த சிவசக்தி இணைவை, சிதம்பர ரகசிய தரிசனம் செய்து நகர்ந்தால், பொன்னம்பலத்தில், அதே சிவசக்தி – ஸ்ரீ நடராஜ மூர்த்தியாகவும், ஸ்ரீ சிவகாம சுந்தரியாகவும் நம் கண்களுக்கு அருள்தரும் காட்சியாக அமையும்.

சிதம்பர ஸ்தலத்தின், மிக முக்கியமான, மேன்மை பொருந்திய வழிபாட்டில் ஒன்றினை சிதம்பர ரகசிய கல்பம் விவரிக்கின்றது. அது ஸம்மேளன அர்ச்சனை.

ஸ்ரீ நடராஜ மூர்த்தியையும், சிவகாம சுந்தரியையும் ஒருங்கே வழிபாடு செய்வது ஸம்மேளன அர்ச்சனை. ஒரே நேரத்தில் இரு தெய்வங்களுக்கும் செய்யப்படும் அர்ச்சனை வழிபாடு. மிகவும் மேன்மையானது.

ஸ்ரீ ஆனந்த தாண்டவாயை நம: என்று முதலில் அம்பிகையையும்,
ஸ்ரீ ஆனந்த தாண்டவாய நம: என்று அடுத்து, நடராஜ மூர்த்தியையும் ஒரே நேரத்தில், ஒரே நாமாவளியை ஆண்பால் & பெண்பாலாகக் கொண்டு, அர்ச்சனை செய்யப்படுவது ஸம்மேளன அர்ச்சனை என்று போற்றப்படுகின்றது.
(பொதுவாக ஸம்மேளன அர்ச்சனை, குடும்ப நன்மை, தம்பதிகளிடையே ஒற்றுமை ஓங்குவதற்கு, விரைவில் திருமண பாக்கியம் கிடைப்பதற்கு, வம்ச அபிவிருத்தி – நற்குழந்தைப் பேறு போன்ற பொதுவான வேண்டுதல்களுக்கும், மேலான ஞான அருள் கிடைக்கவும் செய்யப்படும்.)

ஸம்மேளனம் என்றால் கலந்தது என்று பொருள்.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் பரமனைப் போற்றும் நாமாவளிகள் உள்ளன. ‘காமேச பத்த மாங்கல்ய சூத்ர சோபித கந்தரா’ – பரமேஸ்வரரால் கட்டப்பட்ட திருமாங்கல்ய கயிற்றினைக் கொண்டவள்.
சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணி – சிவனும் சக்தியும் இணைந்த ரூபத்தை லலிதா ஸஹஸ்ரநாமம் போற்றுகின்றது.
லலிதா ஸஹஸ்ரத்தைக் கொண்டு அர்ச்சித்தால் சிவ சக்தி இருவரையும் அர்ச்சித்த பலன் கிடைக்கின்றது.
அது போல நடராஜ ஸஹஸ்ரத்தை அர்ச்சித்தாலும் சிவசக்தி அருள் கிடைக்கும் என்கின்றது அதன் பலச்ருதி. (பார்வதியின் பார்வையால் மகிழ்வு கொள்பவர் சிவன்- சிச்சக்தி லோசனானந்த கந்தள:).

லலிதா ஸஹஸ்ரநாமம் சாக்தத்தின் உச்சநிலைக் கடவுளான லலிதா தேவிக்குரிய அர்ச்சனையாக அமைந்தது போல்,
சைவத்தின் மிக உச்ச நிலையில் அமைந்தவரும், உலக இயக்கத்திற்குக் காரணமாக விளங்குபவரும் ஆகிய ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் ஸஹஸ்ரநாமம் அமைந்திருக்கின்றது. ஆகவே, இது ‘ஸ்ரீ நடராஜ ராஜ ஸஹஸ்ரநாமம்’ என்றே போற்றபடுகின்றது.

இனி நடராஜ ஸஹஸ்ரநாமத்தைக் காண்போம்.

ஒரு சமயம், பார்வதி தேவியானவள் சிவனை நோக்கி தங்களை அர்ச்சித்து பாக்கியம் பெற ஸ்தோத்திரம் சொல்லியருளுங்கள் என வினவினாள்.
அப்பொழுது சிவபெருமான், ‘லக்ஷ்மி தேவியுடன் கூடிய மஹாவிஷ்ணு பன்னெடுங்காலம் காலம் சிவ பூஜை செய்ய, அவர்கள் வேண்டியதற்கு இணங்க, என்னால் சொல்லப்பட்ட ஸ்தோத்திரத்தை இப்பொழுது உனக்கு உபதேசிக்கின்றேன்’ என்றார். (கைலாஸ சிகரே ரம்யே – பூர்வ பாகம்)

லலிதா ஸஹஸ்ரநாமம் எப்படி அம்பிகையின் வாக்கினால் சொல்லப்பட்டதோ அதே போல, பரமேஸ்வரனே சொல்லி அருளியது நடராஜ ஸஹஸ்ரநாமம்.

நடராஜ ஸஹஸ்ரநாமம், சிவ ரஹஸ்யம் எனும் பேரிதிகாசத்தில் அமைந்த, ஆகாச பைரவ கல்பம் எனும் பெருந்தொகுப்பில், சிவ சக்தியினுடைய ஸம்பாஷணை (உரையாடல்) வடிவில் அமைந்த, உடனடியாக அருள் தரக் கூடிய பகுதியாகிய, சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து ஐந்தைந்து ரூபங்கள் தோன்றிய மாகேசுவர வடிவங்களாகிய 25 மூர்த்தங்களைப் பற்றிச் சொல்லக்கூடிய பகுதியில், 59வது அத்தியாத்தில் அமைந்தது.

நடராஜ ஸஹஸ்ரநாமம் – அரும்பொருளை உள்ளடக்கியது. கன கம்பீரமானது. வேத வாக்கியங்களும் இடம்பெறுவதால் வேதங்களுக்கு இணையான தோத்திரமாக விளங்குவது.

வேதங்கள் போன்றே, நடராஜ ஸஹஸ்ரநாமத்தின் பொருளை பரமேஸ்வரன் மட்டுமே அறிய முடியும். ஒவ்வொரு நாமாவளிக்கும் அனேக அர்த்தங்கள் உண்டு.
இதற்கான விளக்கத்தினை, சிந்தாமணி எனும் நடராஜ ஸஹஸ்ரநாம பாஷ்யம் எடுத்துரைக்கின்றது.

ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமம்,
‘ஸ்ரீ சிவ: ஸ்ரீ சிவா நாத: ஸ்ரீமாந் ஸ்ரீபதி பூஜித:’ என்று தொடங்கி
‘சிதேக ரஸ ஸம்பூர்ண ஸ்ரீ சிவ: ஸ்ரீ மஹேச்வர:’ என்று பூர்ணமாகின்றது.

ஸ்ரீ சிவ என்ற நாமாவளி தொடங்கி ஸ்ரீ சிவ ஸ்ரீ மஹேஸ்வர: என்று முடிவதால் சிவபெருமானின் பரிபூரணமான அருளைத் தரவல்லதாக அமைகின்றது.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரத்தில் அமைந்த
ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராக்ஞீ ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேச்வரீ – முதல் வரி போல்,
ஸ்ரீசிவ ஸ்ரீசிவாநாத ஸ்ரீமாந்ஸ்ரீபதிபூஜித: - ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்தின் முதல் வரியில், லக்ஷ்மி தேவிக்குரிய ஸ்ரீம் எனும் எழுத்தில் பொருந்தி அமைவது, இவற்றைப் பாராயணம் செய்பவர்களுக்கு கடன் தொல்லைகள் யாவும் நீங்கப் பெற்று, பெரும் செல்வம் அடையும் என்கின்றது இரண்டினுடைய விளக்கவுரைகளும்.

ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்திலும், எந்த ஒரு வார்த்தையும் மறு முறை வருவதில்லை. அதே போல அர்த்தமற்ற அசைச் சொற்களும் இடம்பெறவில்லை. முழுமையான இலக்கணப்படி அமைந்தது ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமம்.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒவ்வொரு ஸ்லோக வரியும் பதினாறு எழுத்துக்களைக் கொண்டது.
அதே போல நடராஜ ஸஹஸ்ரநாமமும் ஒவ்வொரு ஸ்லோக வரியும் பதினாறு எழுத்துக்களையேக் கொண்டுள்ளது – சிவ சக்தி – இருவரும் வேறல்ல என்பதை நிச்சயிக்கின்றது.

ஸ்ரீ மா தா ஸ்ரீ ம ஹா ரா க்ஞீ ஸ்ரீ மத் ஸி ம்ஹா ச னே ஸ்வ ரீ – 16 எழுத்துக்கள்

ஸ்ரீ சி வ: ஸ்ரீ சி வா நா த ஸ்ரீ மாந் ஸ்ரீ ப தி பூ ஜி த: - 16 எழுத்துக்கள்

ஒரு ஸ்லோகம் இரு வரிகளைக் கொண்டது. லலிதா & ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமம் இரண்டிலும் ஒரு ஸ்லோகமானது 32 எழுத்துக்களைக் கொண்டே தொடர்ந்து அமைகின்றது.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திலும், ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்திலும் ஒரே மாதிரியான நாமாவளிகள் 85 இடம்பெறுகின்றன.
இந்த 85 நாமாவளிகளும் ஒரே மாதிரியான எழுத்துக்களின் எண்ணிக்கையை கொண்டுள்ளன.
இவை, நடராஜ ஸஹஸ்ரநாமத்தில் ஆண் பாலாகவும், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் பெண்பாலாகவும் அமைந்திருக்கின்றன.

அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.

நடராஜ ஸஹஸ்ரநாமம் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்
1.ஸ்ரீ சிவ: - ஸ்ரீ சிவா
2.சிவங்கர: - சிவங்கரீ
3.காலஹந்தா – காலஹந்த்ரீ
4.காந்த: - காந்தா
5.காலகண்ட: - காலகண்டீ
6.க்ருதக்ஞா: - க்ருதக்ஞா
.
.
.
82.ஸர்வாதீத: - ஸர்வாதீதா
83. ஸர்வமய: - ஸர்வமயீ
84. கேவல: - கேவலா
85. ஸ்வப்ரகாச: - ஸ்வப்ரகாசா


ஒரே அர்த்தம் தரும் நாமாவளிகள் 336 அமைந்துள்ளன. பதங்கள் வேறாகியிருந்தாலும் பொருள் ஒன்றே.ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமம் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்
1. ஸ்ரீமான் - ஸ்ரீகரி (மாட்சிமை தாங்கியவர்கள்)
2. ஸ்ரீபதி பூஜித: - கமலாக்ஷ நிஷேவிதா (லக்ஷ்மீபதியாகிய, தாமரைக்கண் கொண்ட விஷ்ணுவால் போற்றப்பட்டவர்கள்)
3. பரமானந்த தாண்டவ: - லாஸ்யப்ரியா (ஆண்கள் ஆடும் நாட்டியம் – தாண்டவம், பெண்கள் ஆடுவது லாஸ்யம் – இருவருமே நடனத்தில் பிரியமுள்ளவர்கள்)
.
.
336. ஸ்ரீ மகேஸ்வர: - மஹேஸ்வரி (உயர்ந்த நிலையான பரப்ரம்ம நிலையை அருளுபவர்கள்)

ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்தின் உத்தர பாகத்தில், இதனை பாராயணம் செய்வதாலும், அர்ச்சிக்கச் செய்வதாலும் கிடைக்கும் நன்மைகள் மிக விரிவாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. (விரிவஞ்சி விடுத்தனம்)

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தின் முதல் பகுதியிலேயே ஹயக்ரீவர் பற்றிய விவரம் வருகின்றது. (அச்வாநந மஹாபுத்தே.. – அச்வாநநர் - ஹயக்ரீவர்)
ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்தின் இறுதி பகுதியாகிய பலச்ருதி பாகத்தின் இறுதியில், ஸ்ரீ ஹயக்ரீவர் போன்றவர்கள், நடராஜ ஸஹஸ்ரநாமத்தினைப் போற்றி, அற்புதமான பேறுகளைப் பெற்றார்கள் என்று அமைகின்றது. (யதிதம் முனயஸ்ஸர்வே ஹயக்ரீவாதய: புரா)

இரு ஸஹஸ்ரநாமங்களையும் கொண்டு, பாராயணம் செய்வது அல்லது செய்யச் செய்வது அல்லது அர்ச்சிக்கச் செய்வது – ஈடு இணையற்ற பெரும் புண்ணியங்களையும், வேண்டும் விருப்பங்கள் அனைத்தையும் மிக விரைவில் நல்க வல்லது.

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம் & ஸஹஸ்ரநாம ஸம்மேளனம் எனும் இரு கட்டுரைகளும்,
ஸ்ரீ கணேசய்யர் அவர்களால் எழுதப்பட்ட ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம உரையிலிருந்தும்,
பண்டித ப்ரவர ஸ்ரீ க.மீ. ராஜகணேச தீக்ஷிதர் அவர்கள் அருளிய ‘சிந்தாமணி’ எனும் ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாம பாஷ்யத்திலிருந்தும்,
அனேக விபரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.


ஸ்ரீ சிதம்பர ஸர்வஸ்வ மந்த்ர குருவர, சதுர்தச சாஸ்த்ர நிதர்சனாகர, கீர்வாண கவி ஸார்வபெளம, பண்டித ப்ரவர ப்ரஹ்மஸ்ரீ
க.மீ. ராஜ கணேச தீக்ஷிதர் (14.11.1902 – 08.10.1984):
தீக்ஷிதர் குலத் தென்றல். ராஜகுரு. தம் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீ நடராஜ ஸ்மரணையிலேயே திளைத்தவர். மஹா ஞானி. அவர்களிடமிருந்து ஞானவித்யை பெற்றவர்கள் பலர். பற்பல அரிய கிரந்தங்களை வெளியுலகுக்குக் கொணர்ந்தவர். பல ஆன்மீக சாதனைகளைச் செய்தவர். இவரைப் பற்றி எழுதப் போனால் ஒரு தனிப் பெருங்கட்டுரையே எழுத வேண்டியிருக்கும்.
இவரால் எழுதப்பட்ட ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஒரு அருள் பொக்கிஷம். ஞானக் கடல். விஷய ஸாகரம்.
இதுவரை எவரும் செய்யாத வகையில், ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமங்களுக்கான உரையினை - வேதங்கள், உபநிஷதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஸ்தல புராணங்கள், வியாகரணங்கள், கோசங்கள் இவற்றிலிருந்து மேற்கோள்களைக் கையாண்டு, தமக்கேயுரிய தனி நடையில் அதி அற்புதமாக அளித்தவர் ஸ்ரீ க.மீ.ராஜ கணேச தீக்ஷிதர்.
பாஸ்கர ராயர், தான் எழுதிய லலிதா ஸஹஸ்ரநாமத்தினை தனது பெயருக்கு ஏற்றார்போல் (முந்தைய பதிவைக் காணவும்) 12 பகுதிகளாகப் பிரித்து எழுதினாரோ அது போல,
க. மீ. ரா ஜ க ணே ச தீ க்ஷி தர், தனது பெயரிலுள்ள பத்து எழுத்துக்களுக்குத் தக்க வகையில், நடராஜ ஸஹஸ்ரநாம அர்ச்சனைக்கான உரையை பத்து சதகங்களாகப் (10X100) பிரித்து எழுதி அருளியுள்ளார்கள்.
இந்த ஸஹஸ்ரநாம பாஷ்யம் எனும் பெருங்கடலினுள் பல அரிய முத்துக்கள் பொதிந்திருக்கின்றன.
பஞ்ச பூதங்களுக்குமான ஸ்தலங்கள் போல், மஹேஸ்வரனுக்கு உரிய ஈசான, தத்புருஷ, அகோர, வாமதேவ, ஸத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களுக்குமான க்ஷேத்ரங்கள் பற்றிய குறிப்புகள்,
இருதயம், சிரசு, கவசம், நேத்ரம், அஸ்த்ரம் ஆகிய அங்கதேவதைகளுக்கான ஸ்தலங்கள் பற்றிய குறிப்புகள்,
சிதம்பரத்தின் சித்ஸபையாகிய பொற்சபையில் அமைந்துள்ள, ஒரு காலத்தில் பொன்னை வாரிவழங்கிய ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ ஸ்வாமியை எழுந்தருளச் செய்தவரின் விபரம்,
என அனேக விவரங்கள் விரவியிருக்கின்றன.
(வடமொழியில் அமைந்த சிந்தாமணி எனும் அரிய பொக்கிஷம் கிடைக்குமிடம் N.T. கணபதி தீக்ஷிதர், 17, கிழக்கு சன்னதி, சிதம்பரம் – 608 001. ஃபோன் : 04144 225215)

தச ஸஹஸ்ரநாமம் :
சிதம்பரத்தில் நடம்புரியும் ஆடல்வல்லானுக்கு ஆயிரம் அழுகுப் பெயர்கள் அமைந்ததைக் கண்டோம். தில்லையம்பலவாணன் – ஸ்ரீ நடராஜ ராஜர் என்று போற்றப்படுகின்றார். அவர் நடராஜ ராஜ சக்ரவர்த்தி அல்லவா?
அவருக்கு என்றே ஒரு அரிய, வேறு எந்த தெய்வத்திற்கும் அமைந்திராத வகையிலான ஒரு ஸ்தோத்திர நாமாவளி அமைந்திருக்கின்றது.
அது – ஸ்ரீ நடராஜ ராஜ தச ஸஹஸ்ரநாமம்.
பத்தாயிரம் (10,000) நாமாவளிகள் கொண்டு ஸ்ரீ நடராஜ ராஜரைத் துதிப்பதாக அமைந்தது.
அதன் நாமாவளிகள் ‘அ’ எனும் எழுத்தில் தொடங்கி, வடமொழியின் கடைசி எழுத்தாகிய ‘க்ஷ’ எனும் எழுத்தில் தொடங்கும் நாமாவளியோடு முடிகின்றது.
ஏன் 10,000 நாமாவளிகள் கொண்டு போற்றப்படவேண்டும் ?
இங்கும் ஸம்மேளன தத்துவமே அமைகின்றது.
மஹேஸ்வரனுக்கு ஐந்து முகங்கள் உண்டு எனப் பார்த்தோம். அந்த ஒவ்வொரு முகத்திற்கும் மற்றும் அதற்கு உரிய சக்தி தேவியைச் (ஈசான மூர்த்தி & ஈசான சக்தி...) சேர்த்து (5X2=10) ஸஹஸ்ரநாமாவளிகளாகக் கோர்த்தால், அது 10,000 நாமாவளிகாள அமையும். இதுவரை புத்தகமாக வெளிவராதது. உன்னதமானது.
இந்த தச ஸஹஸ்ரநாமாவளியை மேற்கண்ட பதிப்பகத்தாரே வெளியிட முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.

கலியுகத்தில் நேரும் கஷ்டங்களைக் களைய ஒரே வழி – நாம ஸங்கீர்த்தனம் மட்டுமே.

தெய்வ நாமாவளிகளைப் போற்றி - கஷ்டங்கள் களைந்து, நஷ்டங்கள் நீங்கி, செல்வங்கள் சேர்ந்து, வாழ்வாங்கு வாழ்வோம் !
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- Mobile : 94434 796572 & 93626 09299
- Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com
- Pl. visit also www.facebook.com/deekshidhar

9 comments:

Geetha Sambasivam said...

சிதம்பர ரகசியம் அமைந்த அந்த அற்புதமான இடத்தில், சிவ யந்திர சக்ரமும், சக்தி யந்திர சக்கரமும் ஒருங்கே (ஸம்மேளனமாக) இணைந்துள்ளது.//

முற்றிலும் புதிய விளக்கம். நன்றி.


நடராஜ ஸஹஸ்ரநாமம், சிவ ரஹஸ்யம் எனும் பேரிதிகாசத்தில் அமைந்த, ஆகாச பைரவ கல்பம் எனும் பெருந்தொகுப்பில்,//

நடராஜ ஸஹஸ்ரநாமம் பற்றிய குறிப்புக்கும் நன்றி. வடமொழியில் கிடைக்கிறது என்றிருக்கிறீர்கள். எல்லாருக்கும் வடமொழி தெரியாது. தமிழாக்கமும் கிடைத்தால் நல்லது.

Geetha Sambasivam said...

வழக்கம்போல் பதிவு பெரியது தான். :))))))))

என்றாலும் அடிக்கடி போடுவதில்லை என்பதால் அந்தக் குறை அடிபட்டுப் போய்விட்டது. இம்மாதிரியான அரிய தகவல்களை மேலும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நன்றி.

Chidambaram Venkatesa Deekshithar said...

மிகவும் அழகாக இருக்கிறது கட்டுரை இதன் மூலம் “சிவசத்தி ஐக்ய ஸ்வரூபிண்யை நமஹா “ என்கிற நாமாவளி எவ்வளவு சிறப்புடையது என்று எல்லோரும் புரிந்துகொள்ள முடிகிறது. நன்றி.

ANGOOR said...

அருமையான பதிவு .....உங்களின் அனைத்து பதிவுகளும் அருமையோ அருமை .....

M.Subramanian said...

As usual, an excellent article,composed with passion and dedication and containing minute & rare details.
I yearn for many more such master pieces.

Astro வெங்கடேஷ் said...

இப்படிப்பட்ட பொக்கிஷ தகவல்களை தங்களைத்தவிர வேறு யாரால் வழங்கமுடியும்!.மேலும் இதுபோன்ற நுணுக்கமான தகவல்களை எதிர்பார்க்கிறோம்,தங்களால் முடிந்தபோது பகிருங்கள்.நன்றி.
व्ययीकृते वर्धत एव विद्या

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் நி.த. நடராஜ தீக்ஷிதர் ஐயா,

ஆயிரத்தில் ஒருவனாக இருந்து
அருள் திருவிளையாடல் புரிந்துவரும்
அம்பலவாணனது பொற்சபையில்
அகம்குளிர வழிபாடு செய்துவரும்...

தங்களது வலைத்தளத்தை பார்வையிட வைத்த சிவகாம சுந்தரி சமேத ஆனந்தமா நடராஜப் பெருமானுடைய திருவடித் தாமரைகளை சிந்தித்துப் போற்றுகின்றேன்..

மெய்ஞானச் செய்திகளைப் பயில ஒரு நல்ல தளத்தை இறைவன் தந்துள்ளார்...

தொடர்ந்து வந்து சிக்கெனப் பிடிக்க தாங்களும் அருள வேண்டும்..

" சும்மா இரு " - பெரிய விசயம்..

இதுகுறித்து ஒரு ஆக்கம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை தங்களது " ஸஹஸ்ரநாம ஸம்மேளனம் " தந்துள்ளது.

திருவருளால் நன்றி...

Unknown said...

Excellent explanation and insights.
It gives immense pleasure to read this article.

Kaumaaram ST Iyer said...

Excellent explanation and insights.
It gives immense pleasure to read this article.