Tuesday, August 31, 2010

விநாயகர் சதுர்த்தி


விநாயகர் சதுர்த்தி - 25.08.2017 - வெள்ளிக் கிழமை


ஸ்ரீ விநாயக மூர்த்தி :
அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் என்று வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.

பிள்ளையார் சுழி :
எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார். ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் - O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் - இணைந்து "உ" எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.

பிள்ளையார் குட்டிக்கொள்ளுதலும், தோப்புக் கரணமும்
எந்த ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது. புராண காலத்தில் ஒரு சமயம் அகத்தியர் பொதிகை மலை வந்து, தவத்திலிருக்க, உலக நன்மைக்காக விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தை உருட்ட, அந்தக் கமண்டலத்திலிருக்கும் நீர் பெருக்காக எடுத்து காவிரி ஆறாக பிரவாகித்தது. தவம் நீங்கிய அகத்தியர், கமண்டலத்தை உருட்டிய காகத்தைக்காண, அது ஒரு சிறுவன் வடிவாக நிற்க, கோபத்தில் அகத்தியர் அச்சிறுவனின் தலையில் குட்டினார். அதன் பின், கோபம் மறைந்து தனது ஞானக் கண் திறக்க அங்கே ஸ்ரீ விநாயகர் நிற்பதைக் கண்டு மனம் பதைத்து மன்றாடினார். தலையில் ஒரு முறை குட்டியதற்கு பிராயச்சித்தமாக தனது இரு கைகளாலும் குட்டிக்கொண்டு, நமஸ்காரம் செய்யும் பாவனையில் தனது இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு அமர்ந்து எழுந்தார். இச்செய்கையில் மனம் மகிழ்ந்த விநாயகர் அவருக்கு பல வரங்கள் தந்து அருளினார். இந்த புராண சம்பவத்தை மையமாகக் கொண்டே பிள்ளையார் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது என்பது விநாயகர் வழிபாட்டுக்கு முக்கியமானதாகின்றது.

ஸ்ரீ விநாயகரை வலம் வருதல்
அன்னை தந்தையான சிவ பார்வதியை வலம் (சுற்றி) வந்ததாலேயே உலகம் முழுமையும் சுற்றிய பெருமை கிடைத்ததால் ஞானப் பழத்தினை மிக சுலபமாகப் பெற்றவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். அந்த விநாயகரையே வலம் வந்தால், ஞானம் எனும் கல்வியறிவு, பழம் எனும் முயற்சியில் வெற்றி, எளிமையான முறையில் தடங்கல்கள் ஏதுமின்றி, வலம் வரும்போது எண்ணிய காரியம் எல்லாவற்றையும் வெற்றிகரமாக அமைய அருள்பாலிப்பவர் ஆகின்றார்.

ஸ்ரீ கணபதி ஹோமம்
பிள்ளையார் சுழி என்பது எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக அமைந்தது போல, யாகம் எனும் ஹோமம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் முதலாக அமைவது ஸ்ரீ கணபதி ஹோமம் ஆகும். ஸ்ரீ கணபதி ஹோமம், நாம் தொடங்கக் கூடிய அனைத்து காரியங்களையும் சுபமாக நிறைவேற்ற வல்லது, வாழ்வில் வசந்தத்தை அளிக்க வல்லது. ஆகையினால் தான் ஒரு புதிய தொழில் தொடங்கும்போதும், கிரஹப்ரவேசம் செய்யும்போதும், அந்த இடத்தில் லாபமும், செல்வமும் அதிகரிக்க கணபதி ஹோமம் செய்யும் வழக்கம் இருக்கின்றது.

ஸ்ரீ விநாயகர் தோற்றம் :
ஸ்ரீ விநாயகரின் தோற்றத்தினை பல விதமான புராணங்கள் பகர்கின்றன.

சிவனும், சக்தியும் ஒரு சமயம் மந்திரசாலா எனும் மண்டபத்திற்கு சென்றார்கள். அங்கு பதிந்திருந்த ஓங்கார வடிவம் சிவன் மற்றும் சக்தியின் பார்வையால் ஓம் எனும் ஓங்காரம் அகரம் மகரம் எனும் இரு பிரிவாகப் பிரிந்தது. அகரம் சிவ வடிவாகவும், மகரம் சக்தி வடிவாகவும் பிரிந்தது. அவ்விரு சக்திகளும் இணைந்து ஒரு புதிய சக்தியை உருவாக்கின. அந்த ஓங்கார பிரணவ வடிவம் தான் ஓங்கார நாயகனாகிய ஸ்ரீ விக்னேஸ்வரர்.
- காஞ்சி புராணம்-

உமையம்பிகையும், சிவபெருமானும் உய்யான வனத்தினில் யானை உருக்கொண்டு காதல் கொண்டனர். அந்தக் காதலின் பரிசாக உருவானர் யானை உருக்கொண்ட ஸ்ரீ கணேசர். (காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன் - திருஞான சம்பந்தர்) - சுப்ரபேதம்

உலகமாதாவாகிய உமையம்மைக்கு தாம் கொஞ்சி மகிழ்ந்து விளையாட (பார்வதி ப்ரிய நந்தநாய - விநாயகர் அஷ்டோத்திரம்) மகன் வேண்டும் எனும் எண்ணம் உண்டாயிற்று. அந்தக் குழந்தையும் முழுமையாகத் தாமே உயிர்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மண்ணில் ஒரு குழந்தை வடிவு செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அக்குழந்தையை உமையம்மைக் கொஞ்சி குலாவிக் கொண்டிருப்பதைப் பார்த்த சிவபெருமான், அக்குழந்தையைக் காண தேவர்கள் அனைவரையும் அழைத்தார். அக்குழந்தையைக் காண சனீஸ்வர பகவானும் வந்தார். சனி பகவானின் பார்வை பெற்றதால், குழந்தையின் தலை அறுபட்டது. மனம் வெதும்பிய பார்வதியை சமாதானப்படுத்திய சிவபெருமான், தன் சிவகணங்களை எட்டு திசைகளுக்கும் அனுப்பி வடக்கே தலை வைத்து உறங்கும் ஏதேனும் ஒரு உயிரினத்தின் தலையைக் கொண்டு வாருங்கள் எனக் கட்டளை பிறப்பித்தார். அந்த ஆணையை ஏற்ற சிவகணங்கள், ஒரு யானை வடக்கு திசைநோக்கி தலை வைத்து உறங்க அதன் தலையை மட்டும் எடுத்து சிவபெருமானிடம் சேர்த்தனர். சிவபெருமான், யானையின் தலையை உமையம்மையின் குழந்தையின் கழுத்தில் பொருத்தி மறு உயிர்க்கொடுத்தார். அது முதல், அக்குழந்தை மஹா பலம் பொருந்தியவர் ஆனார். அவர், சிவகணங்களுக்கெல்லாம் தலைவனாக, கணாதிபதியாக போற்றி வழிபாடு செய்யப்பட்டார்.- சிவபுராணம்

ஸ்ரீ விநாயகர் புராணம்
விநாயகப் பெருமானுடைய சிறப்பினை உணர்த்த, விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாகத் தாம் உணர்ந்த விநாயக புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிருகு முனிவருக்கு உபதேசிக்க அவர் −ப்புராணத்தை 250 பிரிவுகளையுடைய உபாசனா காண்டம், லீலா காண்டம் என இரு காண்டங்களாக அமைத்துப் பன்னிரெண்டாயிரம் சுலோகங்களாக "ஸ்ரீ விநாயகர் புராணம்" பாடினார்.
விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப் பெருமான் எடுத்த பன்னிரண்டு அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன.
அந்த அவதாரங்களில் அவர், வக்கிரதுண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மயூரேசர், பாலசந்திரர், தூமகேது, கணேசர், கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது.

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி வழிபாடு :
பார்வதி தேவி மண்ணால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து ஸ்ரீ விநாயகராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம்.

மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபாடு செய்துவருகின்றோம்.

ஆலய வழிபாட்டில் அன்றைய தினம் பெருமளவு திரவியங்கள் கொண்டு சிறப்பானதொரு அபிஷேக ஆராதனை நடக்கும்.

விநாயக சதுர்த்தி வழிபாட்டினால் கிடைக்கும் 21 விதமான பேறுகள் :
1. தர்மம், 2. பொருள், 3. இன்பம், 4. செளபாக்கியம், 5. கல்வி, 6. பெருந்தன்மை, 7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,8. முக லக்ஷணம், 9. வீரம், 10. வெற்றி, 11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல், 12. நல்ல சந்ததி, 13. நல்ல குடும்பம், 14. நுண்ணறிவு, 15. நற்புகழ், 16. சோகம் இல்லாமை, 17. அசுபங்கள் அகலும், 18. வாக்கு சித்தி, 19. சாந்தம், 20. பில்லி சூனியம் நீங்குதல், 21. அடக்கம்,

விநாயகப்பெருமானையே தங்கள் வழிபடு கடவுளாகக் கொண்டு வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுகியவர்களின் வாழ்க்கையில் அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள் எண்ணிலடங்காது. அகத்திய முனி மூலம் காவிரி தந்தமையும், நம்பியாண்டார் நம்பி மூலம் அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் - மூவர் தேவாரங்களை உலகுக்கு கொடுத்து சைவ சமயத்தையே காப்பாற்றிய பெருமையும், யாவரும் அறிந்ததே.

இன்னும் எண்ணிலடங்காத அற்புதங்களையும் நிகழ்த்திவரும் விநாயகப்பெருமான் தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் கருணைத் திறன் அளவிடற்கரியது. விநாயகப்பெருமான் திருத்தாள் பணிந்து அவர் அருளாலே அவன் தாள் வணங்கி உய்வோமாக.
*************************************************************
நெய்வேலி ஸத்சங்கம் - மணித்வீபம்,
ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஆலயம்
49வது லக்ஷார்ச்சனை மஹோத்ஸவம்
16.08.2016 முதல் 25.08.2017 வரை
நெய்வேலி, ஸத்சங்கம் - மணித்வீபம் வளாகத்தில், ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
நெய்வேலி நகரத்தின் பழமையான கோயில்களில் ஒன்று ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஆலயம். காஞ்சி மஹா பெரியவரின் அருட்கரங்களில் தவழ்ந்தது இந்த விநாயகர் விக்ரஹம். அவர் கூறிய ஆலோசனைகளின் படியே ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஸ்தாபிதம் செய்யப்பட்டார்.
விநாயகர் ஆலயத்தைத் தாங்கும் நான்கு தூண்களிலும் (ஒவ்வொரு தூணிலும் நான்கு விநாயகர் என) விநாயகரின் பதினாறு வடிவங்கள் (ஷோடச கணபதி) அமைந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த ஆலயமே விநாயக மண்டலமாக அமைந்திருக்கின்றது.
வேதங்கள் காட்டும் வழியாகிய வைதீக முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த ஆலயத்தில் தினந்தோறும் அதிகாலையில் முதல் பூஜையாக "ஸ்ரீ கணபதி ஹோமம்" முதற்கண் செய்யப்பட்டு, அந்த ஹோமத்தில் அமைந்த புனித நீர்க்குடத்திலிருக்கும் தீர்த்தம் கொண்டு ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. அன்பர்கள் பலர், இந்த ஹோமத்தில் பெருமளவு பங்கு கொண்டு, தத்தமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

விநாயக வழிபாட்டின் மிக முக்கிய அம்சமாகிய விநாயகர் சதுர்த்தி வழிபாடு இவ்வாலயத்தில் இவ்வாண்டு 48 ஆவது ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது.

விநாயக சதுர்த்தி மஹோத்ஸவம் பத்து நாட்கள் வழிபாடுகள் நடத்தப்படும்
ஒவ்வொரு நாள் மாலை 06.30மணிக்கு வேதகோஷங்களுடன் அபிஷேகங்கள், அலங்காரம், மிகவும் சிறப்பு வாய்ந்த 'க'கார ஸஹஸ்ரநாம அர்ச்சனை (ஒவ்வொரு நாமாவளியும், வடமொழியின் மூன்றாவது க என்னும் எழுத்தில் மட்டுமே ஆரம்பித்து விநாயகரைப் போற்றுவதாக அமையும்), மஹா தீபாராதனை என்கிற வரிசைப்படி வழிபாடுகள் அமையும்.
விநாயகர் சதுர்த்தி அன்று  மதியம் 2.00 மணி முதல் மஹந்யாஸ பூர்வக ஏகாதச ருத்ர ஜப பாராயணம், விசேஷ ஸகல திரவிய மஹாபிஷேகம், லக்ஷார்ச்சனை பூர்த்தி, மஹா தீபாராதனை நடைபெறும்.
பெயருக்கு ஏற்றார் போல, வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக விளங்குபவர் வரசித்தி சக்தி விநாயகர். வேண்டும் வரங்களை உடனடியாக சித்திக்க (கிடைக்க) வழிகோலுபவர். அருட்சக்தி நிறைந்தவர்.
இந்த ஆலயத்தில், ஷோடச (16) கணபதிகள் அமைந்த தூண்களுக்கு நடுநாயகமாக அமைந்த ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகரின் அருள் அளவிடமுடியாதது.
தமது பெயருக்கு ஏற்றார்போல, ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர், தன்னை நாடிவரும் அன்பர்களின் வேண்டுகோள்கள் அனைத்தையும் மிக விரைவில் நல்குபவராக, வாஞ்சாகல்ப கணபதியாக - மேலான வரங்களைத் தருபவராக, மிகுந்த சக்தி வாய்ந்தவராக விளங்குகின்றார்.
ஔவையார் இயற்றிய "விநாயகர் அகவல்" (சீதக் களபச் செந்தாமரை..) போல, நக்கீரர் எழுதிய விநாயகர் அகவல் உள்ளது. பதிவின் நீளம் கருதி அதை வெளியிட இயலவில்லை. தேவைப்படுவோர் மின்னஞ்சல் அனுப்பிப் பெற்றுக் கொள்ளுங்கள்.
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி &  பூஜகர்
www.facebook.com/deekshidhar
94434 79572 & 93626 09299.

15 comments:

ர.செல்வராணி said...

பிள்ளயார் சுழி மற்றும் பிள்ளையாரை குட்டி கொள்ளுதலும், தோப்பு கரணமும் பற்றிய விளக்கங்கள் மிக அருமை. பிள்ளையாரை வலம் வருதல், யாகம், விநாயகர் தோற்றம், சதுர்த்தி வழிபாடு மற்றும் சதுர்த்தி வழி பாட்டால் கிடைக்கும் 21 விதமான பேறுகள் பற்றிய தகவல்கள் அனைத்துக்கும் நன்றிகள் பல.

கீதா சாம்பசிவம் said...

கணபதி அதர்வசீர்ஷம் பற்றிக் கொஞ்சம் எழுதவும், நன்றி.

கீதா சாம்பசிவம் said...

to continue

கீதா சாம்பசிவம் said...

நன்றி.

ஆகமக்கடல் said...

மிக்க பயனுள்ள தகவல்கள்.நன்றி.

Geetha Sambasivam said...

thank you for sharing.

Anonymous said...

Thanks a lot. Keep writing.

anandan vaidhyanathan said...

namaste guruji,
om nama sivahya!
your service is invaluable. thanks for making explanation of vinayagar chathurithi.In day to day life, we all live in hurry berry. But we should not forget one thing. Without god permission nothing moves. For everything there is beginning and ending. In between of those two terms, only our life is going. On going life, we should follow procedure how to pray god and get his blessing. In this aspect guruji, i humble request why don't you teach and preach practice of daily prayer to every human being. Only gifted person can have that opportunity. Joint prayer and sound of slogas from every devotee will have immeasurable power.

om santhi om

vaidhya

geethasmbsvm6 said...

thanks for sharing.

Anonymous said...

அருமையான பதிவு ., தகவல்கள் நன்றி கோடி ..,

ஐயா .,ககார கணபதி ஸஹஸ்ரநாமங்கள் இருந்தால் மின் அஞ்சல் மூலமாக அனுப்புங்கள் manoj.traderppp@gmail.com இல்லையேல் எங்கு கிடைக்கும் என்று தெரிவியுங்கள் ., நன்றி

Anonymous said...

க'கார துதிகளை அனுப்பியமைக்கு மிக்க நன்றி ஐயா ., தங்கள் சேவை தொடரட்டும் ..,

vijayakumar said...

SUPER SIR.

kindly tell us how to perform GANAPATHY HOMAM.- PREFERABLY BY A VIEDEO- SO THAT PEOPLE ALL OVER THE WORLD CAN BE BENEFITED BY THIS.

OR WHERE IS THIS AVAILABLE?

THANKS
VIJAYAKUMAR- CHENNAI 61

Kasthuri Subramani said...

Thank you sir,for sending this informative post.

rakini said...

உண்மை. இந்த விநாயகரின் மகிமையை கண்கூடாக உணர்ந்திருக்கிறேன்.
யாகங்களும் பூஜைகளும் நியம நிஷ்டையுடன் நடத்தப்படுவது பாராட்டுதலுக்குரியது.தொடர்க உங்கள் சேவை. நன்றி

rakini said...

உண்மை. இந்த விநாயகரின் மகிமையை கண்கூடாக உணர்ந்திருக்கிறேன்.
யாகங்களும் பூஜைகளும் நியம நிஷ்டையுடன் நடத்தப்படுவது பாராட்டுதலுக்குரியது.தொடர்க உங்கள் சேவை. நன்றி