Friday, March 6, 2015

வந்தாடினார்! நெஞ்சில் நின்றாடினார் !

வந்தாடினார்! நெஞ்சில் நின்றாடினார் !

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சித்ஸபையிலிருந்து தேவஸபை எழுந்தருளினார்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மஹா கும்பாபிஷேக மஹா ஸம்ப்ரோக்‌ஷண மஹா வைபவம் 01.05.2015 அன்று நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக, நடராஜர் ஆலய பாலாலய வைபவம் 02.03.15 - 08.03.2015 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிகழ்வின் மிக முக்கிய வைபவம் - சிதம்பரம் நடராஜர் சித்ஸபை எனும் கருவறையிலிருந்து, அங்கு நடைபெற உள்ள திருப்பணிகள் காரணமாக, சிதம்பர ஆலயத்தில் உள்ள பஞச ஸபைகளில் (1.சித்ஸபை, 2. கனகசபை, 3. தேவஸபை, 4. நிருத்தஸபை &  5.ராஜஸபை)  ஒன்றான தேவஸபைக்கு கண்கொள்ளாக் காட்சியாக, அரிதிலும் அரிதான பெருநிகழ்வாக 05.03.2015 அன்று காலை 09.00 மணியளவில் எழுந்தருளினார்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பொது தீக்‌ஷிதர்களின் சீரிய வழிகாட்டுதல் மற்றும் சிறப்பான ஏற்பாடுகளின்படி, 05.03.2015 - அன்று வேதபாராயணங்களுடன் கூடிய மஹா ஜபங்களும், அதிகாலை 03.00 மணி முதலாக தெய்வக் கலைகளை திருக்குடங்களில் சக்தியேற்றம் செய்வதான கலாகர்ஷண நிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கியது.

சித்ஸபை எனும் பொன்னம்பலத்திற்கான கலசங்கள், கனகசபைக்கான கலசங்கள், சிதம்பர ரகசியத்திற்கான கலசங்கள் என மூன்று அமைப்புகளுக்கான  கலாகர்ஷண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து, சித்ஸபை எனும் பொன்னம்பலத்தில் இருக்கும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அணையாத தீபம் - பசுமாடு கன்றுடன் புறப்பாடு செய்யப்பட்டு, அடுத்ததாக சித்ஸபையில் அமைந்துள்ள ஸ்ரீ பாதுகை ஸ்வாமி, ஸ்ரீ சந்திரசேகரர், ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர், ஸ்ரீ ஸ்படிக லிங்கம், ஸ்ரீ ரத்ன ஸபாபதி - முதலான தெய்வங்கள் மஞ்சங்களில் அமைத்து புறப்பாடு, தொடர்ந்து பள்ளியறையில் உள்ள அம்பிகை - ஆகிய தெய்வங்கள் தேவஸபைக்கு எழுந்தருளச் செய்யப்பட்டது.

அடுத்ததாக, ஆனி மற்றும் மார்கழி உத்ஸவங்களில் மட்டுமே வெளி பிரகாரம் வரும் ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ மூர்த்தி - இன்று கும்பாபிஷேக மஹா வைபவத்திற்காக - பிரத்யேகமாக - தனிச் சிறப்பான புறப்பாடாக - சித்ஸபையிலிருந்து புறப்பாடு செய்யப்பட்டு, கொடிமரம் பிரகாரம் வந்து, உத்ஸவ யாகசாலையில் மஹா தீபாராதனையைத் தொடர்ந்து, தேவஸபை எனும் தனது புதிய தற்காலிக இருப்பிடத்திற்கு எழுந்தருளி அனைவருக்கும் காணுதற்கரிய காட்சி அளித்து, மட்டற்ற மகிழ்வை அளித்தார்.


வலம் வந்தாடினார்! நெஞ்சில் நின்றாடினார் !!
நாதஸ்வர இன்னிசையும், வேத விற்பன்னர்களின் கோஷமும், திருமுறைவாணர்களின் பாடல்களும், ஹரஹரசிவ சிவ, நடராஜா நடராஜா என பக்தர்களின் அறைகூவலும் காதுகளை நிரப்ப, 16 கலை தீவர்த்தி முன்வர, முகத்தில் என்றும் மாறாத புன்னகையுடன், அன்பர்களுக்கு என்றும் அபயம் எனும் திருக்கோலத்துடன், சிறப்பு வகை மாலைகளும், கண்ணைப் பறிக்கும் நகைகளுடன், சக்ரவர்த்தி கோலத்தில், அம்பிகையுடன் ஒன்றிணைந்து வந்தும், சமயத்தில் முன்னும் பின்னும் நடனமாடியும் - பிரகார வலம் வந்த காட்சி - வாழ்வில் நாம் பெற்ற பிறவிப் பயனைத் தந்தது.

இந்தக் காட்சியைக் கண்டவர்கள் - நெஞ்சில் என்றும் நீங்காத நினைவலைகளை நீண்டகாலம் நினைவில் கொள்வார்கள்.

தஹர வித்யா எனும் உபாஸனையின் (இதயத்தில் என்றும் நீங்காத வண்ணம், இறைவனை இதயத்துடன் இணைந்து காணும் யோக உபாஸனை) நாயகனாக விளங்கும் நடராஜப் பெருமானை - இக்காட்சியைக் கண்டவர்கள், காட்சியைக் கண்டவர்களிடம் கேட்டவர்கள், இதனை மனதாலே நினைந்தவர்கள் என அனைவருக்கும் - அருளை வாரி வழங்குவார்.

தேவஸபையில் நாம் தற்போது காணும் அரிதற்கரிதான சிவகாம சுந்தரி ஸமேதராக நடராஜர் விளங்கும் காட்சி - கும்பாபிஷேகத்தின் முதல் நாள் வரை அதாவது 30.04.2015 வரை தரிசிக்க முடியும்.

ஆதிநடனமாகிய தேவர்களுக்காக ஆனந்த நடனம்  ஆடியதை தற்போது தேவஸபையில் அன்பர்களுக்கு ஆடியருள்கின்றார். 

சிறப்புடனும், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், யாகசாலை கால நிகழ்வுகளில், ஒவ்வொரு கால ஹோமமும்அதிவிசேஷமாக, ஸ்படிக லிங்க அபிஷேகமும், கலசத்தில் செய்யப்படும் சிதம்பர ரஹஸ்ய பூஜையும், இரவு அர்த்தஜாம பூஜையும் (யாகசாலையிலேயே பள்ளியறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது)- காணக் கண் கோடி வேண்டும்.

எதிர்வரும்  08.03.2015 அன்று பாலாலய ஸம்ப்ரோக்‌ஷணம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

பக்தர்கள் தரிசித்து அருள் பெறுங்கள் !
 - நி.த. நடராஜ தீக்‌ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
செல் : 94434 79572, 93626 09299
http://natarajadeekshidhar.blogspot.in
yanthralaya@gmail.com



No comments: