Sunday, March 1, 2015

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பாலாலய வைபவம் &
நெருங்கி வரும் நடராஜர்அண்டசராசரம் அனைத்தையும் ஆட்டுவித்து, ஆடலை நிகழ்த்திடும், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் பஞ்சக்ருத்யங்கள் செய்து பரமானந்த நடனம் ஆடிடும், அகிலம் அனைத்திலும் உள்ள தெய்வ சக்திகள் அனைத்தையும் தன்னுள் கொண்டு, அனுதினமும் ஆடல்காட்சியை அன்பர்களுக்கு வழங்கிடும், சிதம்பரம் ஸ்ரீ நடராஜ ராஜப் பெருமானுக்கு எதிர்வரும் 01.05.2015 அன்று மஹா கும்பாபிஷேக மஹா ஸம்ப்ரோக்‌ஷண மஹா வைபவம் – இந்த நூற்றாண்டின் பெரிய நிகழ்வாக நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்திற்கு முந்தையதான பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் அல்லது தருணாலயம் எனும் நிகழ்வு எதிர்வரும் 02.03.2015 முதல் 08.03.2015 வரை நடைபெற உள்ளது.

பாலாலயம் என்பது தற்போது தெய்வங்கள் குடிகொண்டுள்ள கருவறையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திருப்பணிகள் செய்ய வேண்டியிருப்பின், தெய்வ ஸாந்நித்யத்தை (அருள்புரி ஆற்றலை) அத்தி மரத்தில் செய்யப்பட்ட அருட்பலகையில், வேதங்கள், பூஜா ஸூக்தங்கள், ஆலய பூஜை முறைகள் காட்டிய வழியின்படி நடத்தப்படும். கும்பாபிஷேக யாகசாலை தொடங்கும்போது அந்த அத்திமரப் பலகையில் உள்ள தெய்வ சக்திகளை கும்பாபிஷேக குடங்களில் சக்தியேற்றம் செய்து, அதனை குறிப்பிட்ட காலங்கள்  ஹோம பூஜைகள் செய்து, மறுபடியும் அந்த தெய்வசக்தி நிறைந்த தீர்த்தத்தை – அந்தந்த தெய்வங்களூக்கே அபிஷேகம் செய்து மேலும் அருட்சக்தி பெருக ஏற்றவகையில் செய்யப்படும் மஹா வைபவம் தான் மஹா கும்பாபிஷேகம்.

அந்த வகையில், பாலாலய பூஜைகளின் நிகழ்ச்சி நிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
02.03.2015 - அனுக்ஞை பூஜை, கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம்
03.03.2015 & 04.03.2015 – காலை மாலை – விசேஷ பூஜைகள், மந்த்ர ஜபம்
05.03.2015 – காலை ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமான் சித்ஸபை எனும் கருவறையிலிருந்து பாலாலய பூஜைகளுக்காக தேவஸபைக்கு எழுந்தருளும் காணுதற்கரிய காட்சி.
அன்று மாலை முதல், 11 குண்டங்கள், 6 காலங்கள் கொண்ட மிகச்சிறப்பான பாலாலய யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
யாகசாலை காலங்கள் : 05.03.2015 – 07.03.2015 வரை
08.03.2015 – அன்று காலை பாலாலயத்திற்கான அத்திமரத்தில் அமைந்த அருட்பலகைகளுக்கு ஸம்ப்ரோக்‌ஷணம்.

நெருங்கி வரும் நடராஜர் :
சிதம்பரத்தின் மூலவரும், உத்ஸவரும் ஆகிய ஆனந்தமா நடராஜபெருமான் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே (ஆனித் திருமஞ்சனம் & மார்கழி ஆருத்ரா தரிசனம்) கருவறையிலிருந்து, வெளி பிரகாரங்களுக்கு வெளிவரும் அற்புத நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்வைக் காணவே லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

ஆனால், 05.03.2015 அன்று காலை - கும்பாபிஷேகத்திற்கு என்றே பிரத்யேகமாக தனது இருப்பிடமாகிய சித்ஸபையிலிருந்து, தேவஸபை எனும் மற்றொரு ஸபைக்கு எழுந்தருளும் காணுதற்கரிய மிகப் பெரும் அரிய நிகழ்வாக நடைபெற உள்ளது.
அன்று முதல் கும்பாபிஷேக கால பூஜைகள் வரை நித்ய பூஜைகள் தேவஸபையில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

இந்த அரிய நிகழ்வு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு நடைபெறும்.  இதைப் போன்றதொரு அதிஅற்புத வைபவம் அடுத்த கும்பாபிஷேக சமயத்தில் மட்டுமே நடைபெறும். (கடந்த 1987 கும்பாபிஷேகத்திற்குப் பிறகு தற்போது 2015 ஆண்டுவரை, ஏறத்தாழ 28 ஆண்டுகளில் எவரும் காணாத மஹோன்னத வைபவம்)

தேவஸபை – தற்போது நடராஜர் இருப்பிடமாகிய சித்ஸபையிலிருந்து கிழக்கு நோக்கிய பிரகாரத்தில் மிக அருகில் அமைந்துள்ளது.

பக்தர்களுக்கு விரைவில்  தரிசனம் தந்து அருள் புரியும் வகையில், கோயிலின் கிழக்கு நுழைவாயிலாகிய 21 படி வாசலுக்கு மிக அருகாமையில் தேவஸபையில் - ஆனந்த திருநடனத்தைக் காண்பிக்கவே, நெருங்கி வருகின்றார்.

நெருங்கி வந்த நடராஜரை நெஞ்சம் நிறைய தரிசிக்க, தேவஸபையில், திருநடனம் புரியும் ஞானமா நடராஜப் பெருமானைக் கண்ணாரக் கண்டு களிக்க அனைவரையும் வரவேற்கின்றோம்.

சிறப்பு மிக்க வகையில் அமைந்த பாலாலய ஹோம பூஜைகளை தரிசிக்கவும், வேண்டிய வரங்களை விரைந்து அருளிடும், வேதநாயகர், தமிழ் மறைகள் போற்றும் தன்னிகரற்றவர், இசைக்கலைகள் இயம்பும் ஈஸ்வரர், பரதம் போற்றும் பரமேஸ்வரர், ஞாலம் போற்றும் ஞானமா நடராஜ ராஜப் பெருமானை – ஒரு புதிய இடத்தில் – தரிசித்து, பேரருள் பெறக் கோருகின்றோம்.


-         நி. த. நடராஜ தீக்‌ஷிதர்
-         சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜை
-         Mobile : 94434 79572, 93626 09299.

-         www.facebook.com/deekshidhar

3 comments:

Marutha Chalam said...

Thank you for the explanation! Sivayanama!

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான விழா தகவல்களுக்கு நன்றி...

Geetha Sambasivam said...

விழா சிறப்பாக நடைபெறும். நடராஜர் இதற்கு முந்தைய கும்பாபிஷேஹத்தின்போதும் தேவசபைக்குத் தான் மாற்றாப்பட்டாரா?