Friday, January 29, 2010

கவிக்கோ(ர்) காளமேகம்

கவிக்கோ(ர்) காளமேகம்


தமிழ்ப் புலவர்களின் வரிசையில் காளமேகம் ஒரு அற்புதமானவர். ஆசுகவி (நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்), சிலேடை கவி (ஒரே பாடல் இரு பொருள்), நிந்தா ஸ்துதி கவி (வசை பாடுவது போல் இருக்கும் ஆனால் உட்பொருள் போற்றுவது இருக்கும்) போன்ற கவி வகைகளில் சிறந்து விளங்கியவர்.

இவரின் தனிப் பாடல்களைப் பார்க்கையில், இவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர், உல்லாச விரும்பி என்று அறிய முடிகிறது. தமிழிலக்கணத்தின் பலரும் தொட்டுப் பார்க்காத வகைகளை மிக அழகாகக் கையாண்டவர்.
வரதன் என இயற்பெயர் கொண்டவர். கோயில் பரிசாரகராக (உதவியாளராக) இருந்தவர். மோகனாங்கி என்பவளிடம் அன்பு கொண்டு சைவ சமயம் சேர்ந்தவர். அம்பிகையின் அருளால் கவித்திறன் பெற்றவர். திருவானைக்கா உலா, மூவர் அம்மானை, சித்திர மடல், பரப்பிரம்ம விளக்கம் போன்ற பாடல் தொகுப்பை எழுதியவர்.
மற்றவர்கள் கொடுக்கும் குறிப்புகளுக்கேற்ப, வெண்பாக்களை நொடிப்பொழுதில் பாடி அசத்திக் காட்டுவார். அப்படி ஒருவர், "குடத்திலே கங்கை அடங்கும்" என்று வரும்படி பாடலைச் சொல்லக் கேட்கிறார். குடமோ சிறியது, கங்கையோ பிரவாகமெடுத்து அகிலத்தையை விழுங்க வருவது; எப்படி குடத்திலே கங்கை அடங்கும்? கவி காளமேகம் நொடிப் பொழுதில் பாடுகிறார்.
விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கை அடங்கும்.
வெண்பா எப்படி அமைகின்றது பாருங்கள். ஈற்றடியாகிய கடைசி அடியினைக் கண்டால் "குடத்திலே கங்கை அடங்கும்" என்பது எப்படிப் பொருத்தமாக அமைகின்றது?!

கங்கை நதியானது பகீரதனின் முயற்சியால், வானுக்கும் கட்டுக்கடங்காமல், வெற்பு எனும் இமய மலைக்கும் அடங்காமல், பூமியின் மேடு பள்ளங்களுக்கும் அடங்காமல் வந்தாலும், பெண்ணை (உமா தேவியை) இடப் பாகத்திலே வைத்த ஈசனின் சடாமகுடத்தில் (கங்காவதரணம் - சிவமஹா புராணம் - கங்கையானவள் கட்டுக்கடங்காமல் பூமியை நோக்கிவர, அந்த வேகத்தை பூமி தாங்காது என்றெண்ணிய தேவர்கள் ஈசனை வேண்ட, சிவபெருமான் கங்கையை தனது சடையின் ஓரத்தில் சேர்க்க, கங்கையானவள் ஆர்ப்பரித்து வந்தவள், ஈசனின் சடையில்) அடங்கினாள்.
இவரின் மிக முக்கியமான, மிக அழகிய, நயமிக்க பாடல் சிலவற்றைக் காண்போம்.
தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).
அதே போல 'த' எனும் எழுத்து மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார். கார்மேகமானது கொட்டும் மழையைப் போல பாடலைக் கொட்டுகின்றார் காளமேகம்.
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?) என்னே அழகிய விதத்தில் பாடியுள்ளார்?!
இதே போல், கசடதபற (வல்லினம்) மட்டுமே, ஙஞணநமன (மெல்லினம்) மட்டுமே, இடையினம் (யரலவழள) மட்டுமே கொண்ட பாடல்களையும் அழகுற அமைத்திருக்கின்றார்.
கவி காளமேகம் சிதம்பரம் நடராஜர் மேல் பெரும் பக்தி கொண்டவர். பல பாடல்களை சிதம்பரத்தில் பாடியுள்ளார்.
ஒருவர், சிதம்பர ஆலயத்தின் தனித்துவம் மிக்க அம்சங்களை மட்டும் கொண்டு பாடல் இயற்றுங்கள் எனக் கேட்க,
ஞான சபைக னகசபைசிற் றம்பலபே
ரானந்தக் கூடந் திருமூலட் - டானம்பே
ரம்பலம்பஞ் சாவரண நாற்கோபுரம் பொற்செய்
கம்பமண்ட பஞ்சிவகங் கை.
(ஞான சபை - நடராஜர் நடமிடும் பொன்னம்பலம். கனகசபை - சந்திரமௌலீஸ்வரர் எனும் ஸ்படிக லிங்க அபிஷேக பூஜை நடக்கும் சபை. பேரம்பலம் - உத்ஸவ விக்ரஹங்கள் அமைந்த சபை. திருமூலட்டானம் - ஆதி மூலவர் அமைந்த சபை. பஞ்சாவரணம் - அன்னமயம், மனோமயம், ப்ராணமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்று சொல்லக்கூடிய ஐந்து கோசங்களே ஐந்து பிரகாரங்களாக அமைந்த ஆலயம் சிதம்பரம். வேதங்கள் நான்கின் வடிவாகிய நான்கு கோபுரங்கள். கம்பமண்டபம் - ஆயிரங்கால் மண்டபம். சிவகங்கை தீர்த்தக் குளம்.)
இதே போல திருவாரூர் மற்றும் கும்பகோணத்துச் சின்னங்கள் பற்றியும் பாடல்களையும் பாடியுள்ளார்.
சிலேடைக்கவி என்றே பெயர் பெற்றவர் காளமேகம். ஒரே பாடலில் இரு வேறு அர்த்தங்களோடு அமைப்பதில் வல்லவர் காளமேகம்.
சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் ஒரே பாடலில் குறிப்பிடுகிறார்.
சாரங்க பாணியா ரஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த உகிர்வாளர் - பாரெங்கும்
ஏத்திடுமை யாக ரினதா யிவரும்மைக்
காத்திடுவ ரெப்போதும் காண்.
சிவபிரான் : சாரங்கம் - மானைக் கையில் ஏந்தியவர், ஐந்து அக்கரத்தார் (பஞ்சாக்ஷரர்), கஞ்சனை - பிரமனின் தலையைக் கொய்தவர், உமை பாகர் - உமையம்மையை ஒரு பாகமுடையவர்.
மஹா விஷ்ணு : சாரங்கம் எனும் வில்லினை ஏந்தியவர், அஞ்சக்கரத்தர் - அழகிய சக்கரம் கொண்டவர், கம்சனைக் கொன்றவர், மையாகர் - கருமை நிறத்தினுடையவர்.
இதே போல பல பாடல்கள் உள்ளன.
தெய்வ பக்தியும், கவிநயமும், உலகியலும் இணைந்த பல பாடல்களையும் பாடியுள்ளார்.
வில்லா லடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லா லெறிய பிரம்பா லடிக்கவிக் காசினியில்
அல்லார் பொழிற்றில்லை யம்பல வாணற்கோ ரன்னைபிதா
இல்லாத தாழ்வல்ல வோவிங்ங னேயெளி தானதுவே?
மரங்கள் நிறைந்ததால் இருள் கவிழ்ந்திருக்கும் (அல்லார் பொழில் தில்லை) தில்லையில் உறையும் அம்பலத்தாடும் நடராஜருக்கு ஒரு அன்னை பிதா இல்லாததால் தான், ஒருவன் வில்லால் அடித்தான் (அர்ஜுனன்), ஒருவன் செருப்பால் உதைத்தான் (கண்ணப்ப நாயனார்), ஒருவன் கல் கொண்டு எறிந்தான் (சாக்கிய நாயனார்), ஒருவன் பிரம்பால் அடித்தான் (பிட்டுக்கு மண் சுமந்த படலத்தின் போது, பாண்டிய மன்னன் பிரம்பால் அடித்தது). அம்மையப்பனாக விளங்கும் அரனுக்கு அம்மையப்பன் இல்லாததாலேயே இங்ஙனம் நிகழ்ந்தது என்பதை மிக அழகாக இணைக்கின்றார். கவிநயமும், பக்தியும் செறிந்த பாடல்.
காளமேகம் ஒரு முன்கோபியும் கூட. விஸ்வாமித்திரர் போல மிக விரைவில் கோபம் வந்துவிடும். விஸ்வாமித்திரர் கோபத்தால் சாபம் கொடுப்பார், காளமேகமோ சாடி (வசை பாடுதல்) விடுவார்.
திருமலைராயன்பட்டிணம் எனும் ஊர் வந்து அரசவைக் கவியாகிய அதிமதுரகவி என்பவரிடம் போட்டியிட்டு பாடி வென்றார் காளமேகம். ஆயினும், அரசன் பரிசு தராமல் ஏளனம் செய்தான். வெகுண்ட காளமேகம் 'விண்மாரியற்று .... மண் மாரி பெய்க' என்ற பாடலைப் பாடினார். உடன் அந்த ஊரே மண்மழை பெய்து, மண்ணால் மூடப்பட்டதாம்.
நாகப்பட்டினத்தில் உள்ள அன்னசத்திரத்திற்கு பசியோடு செல்கிறார் காளமேகம். நெடுநேரமாகியும் உணவு கிடைக்கவில்லை. உடன் இகழ்கிறார்.
"கத்துக் கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி உலையிலிட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும்."
(சத்திரத்தில் பொழுது போன பின் தான் அரிசி வரும், உலையில் இடும்போது ஊரே அடங்கிவிடும் நேரம் வந்துவிடும், ஒரு கரண்டி சாதம் இலையில் இவர்கள் அன்னமிடும் போது பொழுது விடிந்துவிடும்.)
கயற்றாரு எனும் ஊரில் உத்ஸவம் நடந்துகொண்டிருக்கின்றது. காளமேகம் விழாவினை விரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். கோயில் காரர்கள் சுவாமியைத் தூக்க ஒரு ஆள் குறைவது கண்டு, காளமேகத்தை வற்புறுத்தி அழைக்கின்றனர். இவரோ மெலிந்த தேகத்தினர். சுவாமி தூக்குவதில் பழக்கமில்லாதவர். ஆகையால் உடலும் உள்ளமும் நொந்து பாடுகின்றார்.
"பாளைமணம் கமழுகின்ற கயற்றாற்றுப் பெருமானே பழிகாராகேள்வேளையென்றால் இவ்வேளை பதினாறு நாழிகைக்கு மேலாயிற்று என்தோளை முறித்ததும் அன்றி நம்பியானையும் கூட சுமக்கச் செய்தாய்நாளை இனியார் சுமப்பார் என் நாளும் உன் கோயில் நாசம் தானே."
பெருமானே! பதினாறு நாழிகைக்கும் மேலாயிற்று நேரம். உன்னையும் உன் வாகனத்தையும் சுமந்ததோடு அல்லாமல் உன் நம்பியானையும் சேர்த்துச் சுமக்க வைத்து தோளை முறித்து விட்டாய், நாளை இனி யார் சுமப்பார் என்ற பொருளில் பாடியுள்ளார். அது முதல் நெடுங்காலம் கயற்றாரில் திருவிழா நின்றுவிட்டது என்றும், கவிசாபம் என்றும் கூறுவர்.
நகைச்சுவை உணர்வு மிக்கவர். ஏமிராவோரி எனும் பாடல் நகைச்சுவை ததும்ப பாடியுள்ளார்.
இவரின் பாடல்கள் கருத்தாழம் மிக்கவை. அருமையானவை. ஆழமானவை. புராணங்களை தம் பாடல்களில் மிக அழகாக செருகி, கேட்போர் அனைவரையும் கவர்ந்துவிடும் தன்மை கொண்டவர் கவி காளமேகம்.
இவரின் தமிழ் கவித்திறனை கேள்வியுற்ற இரட்டைப் புலவர்கள் (இளஞ்சூரியர் - கண் தெரியாதவர், முதுசூரியர் - கால் நடக்க முடியாதவர், இவர்களைப் பற்றி தனியே ஒரு பதிவில் காண்போம்) எனும் இருவர் காளமேகத்தைக் காண ஆவலாயிருந்தனர். இரட்டைப் புலவரில் ஒருவர் ஒரு வரி எழுத மற்றவர் அதே இலக்கண நயத்தோடு அடுத்த வரி எழுத பாடலை அழகுற அமைப்பார்கள். தில்லைக் கலம்பகம் போன்று பல கலம்பகங்களை அற்புதமாக எழுதியுள்ளனர்.
ஒரு சமயம், திருவாரூர் தலத்தில் இருந்தபோது, இருவரும் சேர்ந்து ஒரு பாடலை எழுத விழைய இரண்டு அடிகள் மட்டுமே எழுத முடிந்தது. ஆனால் அடுத்த இரு வரிகளை எழுத ஏனோ இயலவில்லை. அதை அப்படியே அங்கே இருந்த கோயிலின் மதில் சுவற்றில் பதித்துச் சென்றனர். சில காலம் கழிந்து அங்கே அவர்கள் வர, மீதி இரண்டு வரிகளும் மிக அருமையாக அமைந்திருக்கக் கண்டு (பாணமோ மண் தின்ற பாணம்...), விசாரிக்க அதைக் காளமேகம் தான் எழுதினார் என்று அறிந்து, மிக ஆவலோடு இருவரும் அவரைக் காண விரைய, அங்கே காளமேகம் உயிரற்று போனது கண்டு நெஞ்சம் பதைத்தனர்.
:( :( :(
சிலேடை என்பது ஒரே பாடல் இரு வேறு அர்த்தங்கள் கொண்டது.
ஒரே பாடலை இடமிருந்து வலமாகப் படித்தாலும், வலமிருந்து இடமாகப் படித்தாலும் ஒரே பொருளை (விகடகவி - palindrome) தரக் கூடிய திருஞானசம்பந்தரின் மாலை மாற்று பதிகத்தினையும்,
ஒரே செய்யுள் இடமிருந்து வலமாகப் படித்தால் ஒரு அர்த்தமும், அதே செய்யுளை வலமிருந்து இடமாகப் படித்தால் வேறொரு அர்த்தமும் கிடைக்கும் அற்புதச் செய்யுள் பற்றியும், இவற்றின் சிறப்புகள் பற்றியும் அடுத்த பதிவில் காண்போம்.
நி.த. நடராஜ தீக்ஷிதர்
yanthralaya@yahoo.co.in
94434 79572

8 comments:

n.puthiya raja said...

nanri natarajare! kavi kalamegathai arimugam seythamaikku. arumaiyana pathippu. innum ithuponra palaiya pokkisangalai ilaiya samuthaayathirgu arimugam seyvirgal enru nampukiren. vazhthukkal.

Anonymous said...

காளமேகம் எந்தவூர்க்காரர்?

தமிழில் சிலேடை வெண்பாவென்றால் இவர்தான் என்று நான் படித்த்துண்டு.

நான் சிலவற்றைப்படித்த்துண்டு. இங்கே நிறைய காணக்கிடைக்கிறது.

கவிஞர் ஒரு முன்கோபி என்று ஓபனாகச்சொல்லிவிட்டீர்கள். இதனாலேயே கவிஞருக்கு நிறைய எதிரிகள் அக்காலத்தில் உண்டு என்றும் படித்திருக்கிறேன்.

நல்ல பதிவு நிறைய விடயங்களுடன்.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

காளமேகத்தின் ஊர் - திருக்குடந்தை என்றும் திருமோகூர் என்றும் கூறுவார்கள். சிலேடை பாடல்கள் மேலும் சிலவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் போடவுள்ளேன். தாங்கள் யாரோ ?

தமிழநம்பி said...

ஆய்வாளர் திரு. இரா.நாகசாமி அவர்களின் கூற்றுப்படி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் கல்வெட்டுப் பாடல் காளமேகம் விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரத்தைச் சேர்ந்தவராவார்.

அந்தக் கல்வெட்டுப் பாடல்:

மண்ணில் இருவர் மணவாளர் மண்ணளந்த
கண்ண நவனிவந்பேர் காளமுகில் - கண்ண
னவனுக்கூ ரெண்ணி லணியரங்க மொன்றே
இவனுக்கூ ரெண்ணா யிரம்.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

காளமேகத்தின் ஊர் பற்றி ஆய்வாளர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது, எனினும், திரு. நாகசாமி அவர்கள் அகழ்ந்து ஆராய்ந்தது மிக நிச்சயம் சரியாகத்தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. நன்றி தமிழ்நம்பி.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

காளமேகம் மதுரைக்கருகே உள்ள திருமோகூர் என்பார்கள். ஆனாலும் திரு நாகசாமி சொல்வது என்பது சரியாய்த்தானிருக்கணும்.

செங்கோல் said...

ஆஹா அருமையான பதிவு தீக்ஷிதரே,
எனக்கும் இதுபோன்ற சிலேடை கவி ரசிக்க பிடிக்கும்.தொடருங்கள்.வாழ்த்துக்கள்

கார்த்திகேயன் பாண்டியன் said...

மிக்க நன்றி. காளமேகமெனும் கவிமேகத்தை உங்கள் சொல் மேகத்தால் பதிவேற்றியதற்கு....