நால்வர் காட்டிய நல்வழி :
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நான்கு பேரும் தமிழ் சைவ வழிபாட்டுக்கு மிகப் பெரும் தொண்டாற்றிய அருளாளர்கள். இவர்கள் தம் தமிழ்ப்பாசுரங்களால் மக்களைத் தன்வயப்படுத்தி, சைவ நெறியில் திகழச்செய்து, சைவ மேன்மைக்கு வழிகோலினார்கள்.
அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூன்று பேரும் எழுதியவை அனைத்தும் தேவாரம் ஆகவும், மாணிக்கவாசகர் எழுதியது திருவாசகம் எனவும் பன்னிரு திருமுறைகளினுள் தொகுக்கப்பட்டுள்ளது.
கோயில் என்றாலே பொருள் படும் சிதம்பரம் - தமிழ் திருமறைகளை வெளிக்கொணர்ந்த ஸ்தலம்.
பாணர்கள் (அரசவையில் பாடல்கள் பாடிப் பரிசு பெறுவோர்) ராஜராஜசோழனிடம் சில பாடல்களைப் பாடிக்காட்ட, அந்தப் பாடல்களைக் கேட்ட அரசன் அதன் அருமை பெருமைகளில் பெரிதும் மனமகிழ்ந்து, மேலும் பல பாடல்களைக் கேட்க விரும்ப, அவர்கள் எங்களிடம் சில பாடல்களே உள்ளன என்றும் அவை சிதம்பரத்தின் மேற்கு கோபுரத்தின் கீழ் கிடந்தவை என்றும் மேலும் பல அங்கு கிடைக்கலாம் என்றும் சொல்ல, உடன் சோழன் சிதம்பரம் வந்து, அந்த பாடல்களைத் தேடிவந்து, விநாயகரைப் பணிய, விநாயகர் ஓலைகளை உள்ள திசையைக் காட்டியருள, [அந்த விநாயகரே திருமுறைகாட்டிய விநாயகர் - மேற்கு கோபரத்தின் எதிரே உள்ள சந்நிதி], மேற்கு கோபுரத்தின் குகை போன்ற பகுதியில் காலம் காலமாக இருந்த திருமுறை ஓலைகளை, ராஜராஜசோழன் பக்தி பரவசம் பெருக கண்டு வெளியெடுத்தான்.
நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு பாசுரங்களைத் தொகுத்தான்.
தில்லைத் திருச்சிற்றம்பலத்திலிருந்து பாடல்கள் பெறப்பட்டதால், இனி எங்கு திருமுறைகள் பாடப்பட்டாலும் "திருச்சிற்றம்பலம்" என்று ஆரம்பித்து, பாடல்கள் முடிந்த பிறகு "திருச்சிற்றம்பலம்" என்று முடிக்க வேண்டும் என்ற நியதியைக் கொணர்ந்தான்.ராஜராஜசோழன் மிகப் பெரும் சிவபக்தன்.
இவன் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. வைணவக் கோயில்களின் திருவிண்ணகரங்களையும் புதுப்பித்தான். இந்து சமயம் பெரும் வளர்ச்சியடைந்தது. ராஜராஜசோழன் காலமே தமிழகத்தின் பொற்காலம் எனப் பெருமையடைந்தது. தக்ஷ¢ண மேரு என்று புகழப்பெறும் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி, வரலாற்றின் பொன்னேட்டில் இடம்பெற்றான். நடராஜர் மீது கொண்ட அளப்பரிய பக்தியால், அளவை (measuring) அலகுகளுக்கு (units) கடவுளர்களின் பெயரையே வைத்தான்.ராஜராஜ சோழன் சைவ வைணவ ஒற்றுமையைப் போற்றியவன். தன்னாட்சியில் நீட்டலளவைக்கு 'உலகளந்தான்' என திருமால் பெயரையும், முகத்தலளவையாகிய மரக்காலுக்கு 'ஆடல் வல்லான்' என்றும் பெயரிட்டான்.
ராஜராஜனின் நடராஜ பக்திக்குச் சான்றாக, அவனின் மகன் ராஜேந்திர சோழன் மார்கழித் திருவாதிரையில் பிறந்தான். ராஜேந்திரனும் நடராஜர் மீது பெரும்பக்தி கொண்டு, கடல் கடந்த நாடுகளையும் வென்று, பெரும் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தான். கங்கை கொண்ட சோழபுரம் கட்டி, பக்தியைக் காட்டினான்.
திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பாடல்கள் தேவாரமாகத் தொகுக்கப்பட்டது. மணிவாசகரின் திருவாசகம் தனி திருமுறையாகத் தொகுக்கப்பட்டது.
நால்வர்களின் பாடல்களாலும் சைவம் தழைத்தோங்கியது. அவை, பல தமிழகக் கோயில்களை வளம்பெறச் செய்தன. தமிழ்ப்பாடல்களுக்கு தெய்வீக சக்தி உண்டு என்ற கருத்தை நிலைநிறுத்தின. தமிழும் சைவமும் பெரும் வளர்ச்சி பெற்றன. தமிழ் சமுதாயத்தில், இந்த நால்வர்கள் விதைத்த விதை, பெரும் பக்தி இயக்கமாக மாறியது. இவர்களின் பாடல்கள் அன்றைய ஆட்சி செய்வோரின் மனதிலும் பதிந்தது. கோயில்கள், விண்ணகரங்கள் பல செழுமை பெற்றன. புதிதாக பல கற்றளிகள் கட்டப்பட்டன. விளைநிலங்கள் நிவந்தங்களாக மானியங்களாக வழங்கப்பட்டன. மொத்தத்தில் இந்துக் கோயில்கள் மிகப் பெரும் வளர்ச்சியடைந்தன.
திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பாடல்கள் தேவாரமாகத் தொகுக்கப்பட்டது. மணிவாசகரின் திருவாசகம் தனி திருமுறையாகத் தொகுக்கப்பட்டது.
நால்வர்களின் பாடல்களாலும் சைவம் தழைத்தோங்கியது. அவை, பல தமிழகக் கோயில்களை வளம்பெறச் செய்தன. தமிழ்ப்பாடல்களுக்கு தெய்வீக சக்தி உண்டு என்ற கருத்தை நிலைநிறுத்தின. தமிழும் சைவமும் பெரும் வளர்ச்சி பெற்றன. தமிழ் சமுதாயத்தில், இந்த நால்வர்கள் விதைத்த விதை, பெரும் பக்தி இயக்கமாக மாறியது. இவர்களின் பாடல்கள் அன்றைய ஆட்சி செய்வோரின் மனதிலும் பதிந்தது. கோயில்கள், விண்ணகரங்கள் பல செழுமை பெற்றன. புதிதாக பல கற்றளிகள் கட்டப்பட்டன. விளைநிலங்கள் நிவந்தங்களாக மானியங்களாக வழங்கப்பட்டன. மொத்தத்தில் இந்துக் கோயில்கள் மிகப் பெரும் வளர்ச்சியடைந்தன.
அவர்களின் பண்ணோடு இசைந்த பாடல்கள் புத்துணர்ச்சி தருவதாக இருந்தன. பக்தியை மிக எளிமையாக்கின. இவர்கள் காலத்திற்கு முன்னெல்லாம், இறைவனை அடைய ஆண்டாண்டுகளாய் தவம் இருக்க வேண்டும் என்ற நினைப்பை மாற்றி தூய பக்தியொன்றே இறையருளை அடையும் வழி என்றன. பல பழைய மரபுகளை உடைத்தன. பக்தியை ஊட்டின. வேறு மதங்களைச் சார்ந்து உறங்கிக்கிடந்தவர்களை தம் தமிழ்ப்பாடல்களால் தட்டி எழுப்பின. ஆன்மீக புரட்சியே எழுந்தது.
சங்க காலத்தில் பக்தி இலக்கியம் குறைவுதான் என்றாலும், நன்மறைகளை போதித்தன. ஆயினும் இடைக்காலத்தில் இவர்களின் வரவு தமிழ் பக்தி இயக்கத்திற்கு மிகப் பெரும் பக்கபலமாக விளங்கியது. மக்களும் தமிழ்ப்பாசுரங்களை பாடலாயினர். சமீப காலம் வரை தமிழ்ப்பாசுரங்களை பாடியபிறகுதான் மதிய உணவு என்ற கொள்கை கொண்டு, பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு தமிழ் ஞானத்தை வளர்த்தனர்.
நால்வர் - ஈசன் - ஆட்கொள்ளல் :
நால்வர் - ஈசன் - ஆட்கொள்ளல் :
நஞ்சுண்ட நாயகனாகிய ஈசனை ஞானசம்பந்தர் கொஞ்சியும், திருநாவுக்கரசர் அஞ்சியும், மணிவாசகர் கெஞ்சியும், சுந்தரர் விஞ்சியும் பதிகங்கள் பாடியுள்ளனர்.
ஞானசம்பந்தரை பாலைக் காட்டியும், திருநாவுக்கரசருக்கு சூலை (நோய்) காட்டியும், மணிவாசகருக்கு காலை காட்டியும், சுந்தரரை ஓலை காட்டியும் ஈசன் தடுத்தாட்கொண்டார்.
நால்வரும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்மறைகளின் வழி நின்று பாடி அருள்பெற்றனர்.
சிதம்பரம் தில்லைக் கோயிலுக்கு நான்கு வேதங்களே நான்கு கோபுரங்களாக அமைந்துள்ளன.
நான்கு கோபுர வழியாகவும் மேற்கண்ட நால்வரும் வழிவந்து வழிபாடாற்றியுள்ளனர்.
கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்க வாசகரும், தெற்கு கோபுரம் வழியாக திருஞானசம்பந்தரும், மேற்கு கோபுரம் வழியாக திருநாவுக்கரசரும், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரரும் வந்து நடராஜப் பெருமானை தரிசித்து பேறுபெற்றனர்.
நடராஜப் பெருமான் ஏன் அவர்களின் மனதில் இந்த குறிப்பிட்ட வாசல் வழியாகத் தான் வரவேண்டும் என்று பணித்தார்? அதற்கு அழகான பதிலை ஆன்றோர்கள் தந்தருளியுள்ளனர்.
திருஞான சம்பந்தர், சீர்காழி தோணியப்பரின் அருளால் உமையம்மையின் திருஞானப்பால் குடித்த, குழந்தை வடிவினர். பெரியவர்கள் குழந்தைகளைக் கொஞ்சுவது போல, குழந்தையே தெய்வத்தைக் கொஞ்சும் விதத்தில் பாடல்களைப் பாடியுள்ளவர். குழந்தை நம்மைத் தேடி வரும்போது, நாமே அந்தக் குழந்தையை நோக்கிச் சென்று கொஞ்ச விழைவது போல, தாமே முன்னோக்கிச் சென்று (நடராஜப் பெருமான் தெற்கு நோக்கி காட்சியருளுபவர்) குழந்தையை வரவேற்பது போல, நடராஜப் பெருமான் சம்பந்தரை தெற்கு கோபுரம் வழியாக வரச் செய்து அருள்பாலித்தார்.
திருநாவுக்கரசர் மிகவும் பணிவானர். உழவாரப் பணி செய்தவர். மகேஸ்வரனின் அருள் பெற மிகவும் கெஞ்சிப் பாடியவர். திருநீறு பூசிய பின் சூலை எனும் வயிற்று வலி நோய் தீர்ந்து சிவனை நெக்குருகப் பாடியவர். அவருக்காக, அருள்தரும் அபய ஹஸ்தத்தினால் (நடராஜரின் வலக்கை மேற்கு நோக்கி நீண்டிருக்கும்) அருள, அப்பர் சுவாமிகளை மேற்கு கோபுர வாயில் வழியாக வரச் செய்து அருள்பாலித்தார்.
சுந்தரர் - வன் தொண்டர். ஓலையைக் காட்டி சுந்தரன் தன் அடிமை என திருவிளையாடல் செய்து, சுந்தரரை ஈசன் ஆட்கொண்டருளினார். ஈசனை ஒரு நண்பன் போல நினைத்தவர். விஞ்சிப் பாடியவர். பரமேசனையே தன் காதலிக்காக தூது போகச் சொல்லியவர். ஒரு நண்பனானவர் எப்படி தன் நண்பரின் பின்பக்கத்திலிருந்து வந்து தோள் மேல் கை போட்டு நட்பு கொண்டாடுவாரோ அதே போல, சுந்தரர் நடராஜப் பெருமானை (நடராஜரின் பின் பக்கமாகிய வடக்கு) வந்தடைந்தார். சுந்தரரை வடக்கு கோபுர வாயில் வழியாக வரச் செய்து அருள்பாலித்தார்.
மாணிக்கவாசகர் - இவர் பாடல்களின் வாசகங்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல மதிப்புடையதாக இருந்ததால், இறைவனாலேயே மாணிக்கவாசகர் என போற்றப்பட்டவர். திருப்பெருந்துறையில் கல்லால மரத்தடியின் கீழ் யோகநிலையில் அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தியின் இடது புறத் திருவடியின் திருவொளி கண்டு ஞான மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தவர். ஆகையால், அவரை (நடராஜப் பெருமானின் இடது புறமாகிய) கிழக்கு கோபுரம் வழியாக வரச் செய்து அவருக்கு அருள்பாலித்தார்.நால்வர்கள் காட்டிய ந(நா)ல்வழியே சென்று, அவர்கள் காட்டிய அறநெறியைப் பின்பற்றி, அவர்களின் பாடல்களை பக்தியோடு பாடி, பரமனின் அருளைப் பெறுவோம்.
15 comments:
கோபுர வாசல்களும் நால்வரும் என்று விளக்கியது ஒரு வியத்தகு விடய்ம் எனக்கு. என்னைப்போல பலருக்கும் இது புதிது.
//கோயில்கள், விண்ணகரங்கள் பல செழுமை பெற்றன. புதிதாக பல கற்றளிகள் கட்டப்பட்டன. விளைநிலங்கள் நிவந்தங்களாக மானியங்களாக வழங்கப்பட்டன//
இச்சொல்லின் பொருள் எனக்குப்புலனாகவில்லை.
இது கோபுரத்தைக் குறிக்குமா? அல்ல, ஊரைக்குறிக்குமா?
‘கற்றளிகள்’ என்றால் என்ன?
‘நிவந்தங்கள்’ என்றால் என்ன?
//நடராஜர் மீது கொண்ட அளப்பரிய பக்தியால், அளவை (measuring) அலகுகளுக்கு (units) கடவுளர்களின் பெயரையே வைத்தான்.ராஜராஜ சோழன் சைவ வைணவ ஒற்றுமையைப் போற்றியவன். தன்னாட்சியில் நீட்டலளவைக்கு 'உலகளந்தான்' என திருமால் பெயரையும், முகத்தலளவையாகிய மரக்காலுக்கு 'ஆடல் வல்லான்' என்றும் பெயரிட்டான்//
Wow....! Great Information Mr Natarajan.
இதையெல்லாம் நான் கேள்விப்பட்டதேயில்லை. நீங்கள் நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.
//இச்சொல்லின் பொருள் எனக்குப்புலனாகவில்லை.//
’விண்ணகரம்’ என்ற சொல்.
நால்வரைப்பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் பலபல வியத்தகு விடயங்களுடன். அவர்கள் சைவத்திற்கு செய்த தொண்டு இன்று அது தமிழரிடையே நின்று நிலவச் செய்து வருகிறது.
Congrats and thanks.
சித்தர்களைப்பற்றி இனி எழுதுங்கள்.
{//கோயில்கள், விண்ணகரங்கள் பல செழுமை பெற்றன. புதிதாக பல கற்றளிகள் கட்டப்பட்டன. விளைநிலங்கள் நிவந்தங்களாக மானியங்களாக வழங்கப்பட்டன//
இச்சொல்லின் பொருள் எனக்குப்புலனாகவில்லை.
இது கோபுரத்தைக் குறிக்குமா? அல்ல, ஊரைக்குறிக்குமா?
‘கற்றளிகள்’ என்றால் என்ன?
‘நிவந்தங்கள்’ என்றால் என்ன}
விண்ணகரம் என்பது பெரும்பாலும் பெருமாள் கோவில்களின் கோபுரத்தைக் குறிக்கும்.
கற்றளி என்பது கற்களாலேயே செய்யப்பட்ட கோவில் திருப்பணியைக் குறிக்கும்.மாமல்லபுரத்தின் ஐவர் கோவில்கள் கற்றளியானவை.
மகேந்திர,நரசிம்ம பல்லவர்கள் காலத்தில் ஆக்கம் பெறத் துவங்கிய சைவத்தின் வளர்ச்சி ராஜராஜனின் மற்றும் பின்வந்த குலோத்துங்கன் வரை உச்சத்தில் இருந்தது என்று சொல்லலாம்.
நிவந்தம் என்பது ஒரு கிராமம் அல்லது ஊரின் வரி வருவாய் முழுதும் கோவிலுக்கும் அதன் பராமரிப்புக்கும் செலவு செய்யப்பட வேணடும் என்று அரசானை மூலம் தெரிவிப்பது..இவ்வாறு பேணப்பட்ட பல கோவில்களுக்குரிய நிலங்கள இன்று அரசியல் வியாதிகளின் தடியடிக் குத்தகைக்குள் சிக்குண்டு கோவில்களில் ஒருவேளை பூசணைக்கும் வழியற்று தெய்வங்கள் நாதியற்று நிற்கும் நிலையில் முடிந்திருக்கின்றன...
அறிவன்,சிங்கை.
தீட்சிதர் சார்..
வொர்ட் வெரிபிகேஷனை எடுத்து விடுங்கள்...இருந்தால ஒருத்தரும் கமெண்ட் போட மாட்டாங்க..
அறிவன்,
சிங்கை.
sanagappalagai.blogspot.com
அனைவருக்கு அனேக நன்றீகள். கள்ளபிரானின் கேள்விகளுக்கு மிக அழகாக பதில் வந்திருக்கின்றது. மகிழ்ச்சியாக இருக்கின்றது.
சித்தர்கள் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. கோர்வையான பின் எழுதுகின்றேன்.
Sir,
Your works are highly appriciatable!
Your works are highly Knowledgeable!
Your works are highly Informatable!
அருமையான விளக்கங்கள்
ஞானசம்பந்தரை பாலைக் காட்டியும், திருநாவுக்கரசருக்கு சூலை (நோய்) காட்டியும், மணிவாசகருக்கு காலை காட்டியும், சுந்தரரை ஓலை காட்டியும் ஈசன் தடுத்தாட்கொண்டார்.
மிக்க நன்றி தீக்ஷிதர் ஐயா.
செய்திகள் அருமை.நன்றி
பாலையும் சூலையும் ஓலையும் காலையும் காட்டித் தடுத்தாண்டதால் கொஞ்சியும் அஞ்சியும் வெஞ்சியும் கெஞ்சியும் பாடினரே என்ற செய்தி படித்து மகிழ்ந்தேன். திருமுறை கண்ட புராணத்தில் கூறிய செய்தி தில்லைவாழந்தணராகிய உமாபதி சிவாச்சாரியார் கூறியதல்லவா? நீங்களும் தில்லைவாழந்தணரல்லவா?
இந்த விஷயத்தை அடிப்படியாகக் கொண்டு நால்வர் போன வழியில் நீயும் போ என்பது வழக்கில் உள்ளது.
இவன் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. வைணவக் கோயில்களின் திருவிண்ணகரங்களையும் புதுப்பித்தான். இந்து சமயம் பெரும் வளர்ச்சியடைந்தது.
இது மிகவும் தவறான தகவல்.
இந்து சமயம் என்ற சமயம் தமிழ் இலக்கியங்களில் கிடையவே கிடையாது.
திருத்திக் கொள்ள வேண்டுகின்றேன். இருப்பினும் தங்களது இந்த பணி மிகபாராட்டுக்குரியது. நன்றி! வாழ்த்துக்கள்!
நன்றிகள் கோடி... மிக அருமையான பதிவு ஐயா...
Post a Comment