Monday, May 2, 2011

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம்

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம்
1. லகு
2. லலிதம்
3. லக்ஷணம்
4. லட்சியம்
5. லயம்

உலகத்தின் மிகப் பழமையான மதம் இந்து மதம்.
இந்து மதம் காட்டும் வாழ்க்கைப் பாதை அறப்பாதை. ஆன்மீகப் பாதை.
மக்களை வழிமுறைப்படுத்தி வாழ்வாங்கு வாழ வைக்கும் உன்னதமான மதம்.

வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்ற இந்து மதத்தின் கிளைகள் மக்களின் நல்வாழ்வுக்கு நல்வழிகாட்டுகின்றன.

அந்த இந்து சனாதன தர்ம மதம் – ஆறு உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சைவம், வைஷ்ணவம், சாக்தம், ஸௌரம், காணாபத்தியம், கௌமாரம்.

இதனுள் சாக்தம் என்பது, கடவுளை பெண்பால் வடிவத்தில் சக்தியாக வழிபடச்செய்வது.
அன்னைதான் உயிருக்குக் காரணியாக இருப்பது போல, அன்னை வடிவத்திலிருக்கும் தெய்வம் தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக விளங்குகின்றது என்பதை உணரவைப்பது சாக்தம் எனும் பிரிவு.

அன்னையை ஆதிபராசக்தியை வழிபாடு செய்ய வேதங்களும், உபநிஷதங்களும், புராணங்களும் பல வழிகளைக் காட்டுகின்றன.

அதில் மிகவும் மேன்மையானது, அன்னையின் அனைத்து லீலைகளையும் பகர்கின்ற லலிதா ஸஹஸ்ரநாமம் ஆகும்.

1.லகு :
இந்து தர்ம சாஸ்திரங்கள் சில மந்திரங்களை ஆண்கள் மட்டும், சில மந்திரங்களை பெண்கள் மட்டும் தான் சொல்ல வேண்டும் என்ற நியதிகளை வகுக்கின்றன.
ஆனால், லலிதா ஸஹஸ்ரநாமத்தினை ஆண், பெண் - எந்த நிலையிலிருந்தாலும் சொல்லப்படலாம் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன சாஸ்திரங்கள்.

(ஸ்ரீ ஹயக்ரீவரிடமிருந்து அகஸ்தியர் லலிதா ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டறிந்தார். அகஸ்தியரின் மனைவி லோபாமுத்திரை – அம்பாள் உபாஸகர்களில் மிக முதன்மையானவர். ஹாதி வித்யா என்ற ஸ்ரீ வித்யா உபாஸனையை மேற்கொண்டவர். கணவன் மனைவியாகிய அகஸ்தியரும் லோபாமுத்திரையும் தான் உலகத்திற்கு முதன் முதலில் ஸ்ரீ வித்யா உபாஸனை என்கின்ற அம்பாளின் மிக மேன்மையான மந்திரங்களைக் கேட்டறிந்தவர்கள். ஆகவே ஆண் & பெண் இருபாலாரும் மிக நிச்சயமாக இந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தைச் சொல்லி பேறு பெறலாம்.)

மிக எளிமையான வார்த்தைகள். அருமையான சொல்லாடல்கள். ஆழ்ந்த கருத்துக்கள். சிறந்த ஓசை நயம். இவையனைத்தையும் கொண்டது இந்த ஸஹஸ்ரநாமம். மிகவும் எளிமையாக இருப்பதால் லகுவான ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக அமைகின்றது.

பத்து ஸஹஸ்ரநாமங்களை சாக்த சாஸ்திரங்கள் மேலானவை என்கின்றன.

அவை, கங்கா, காயத்ரீ, ச்யாமளா, லக்ஷ்மீ, காளீ, பாலா, லலிதா, ராஜராஜேஸ்வரி, ஸரஸ்வதி, பவானீ.
அவற்றிலும் மேலான மேன்மை கொண்டது லலிதா ஸஹஸ்ரநாமம்.

2. லலிதம் :
லலிதம் எனும் வார்த்தைக்கு மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது என்று அர்த்தம். இதைப் பாராயணம் செய்வதால் மனம் லகுவாக, லேசாக, கனமற்றுப் போவதாலும், கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதாலும், சந்தோஷம் பெருகும் என்பதாலேயே லலிதா என்ற பெயர் வந்தது.

லலிதா எனும் பதத்திற்கு கொஞ்சி விளையாடுவது என்றும் அர்த்தம். அம்பிகையானவள் அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கைகளையும் ஒரு சிறு குழந்தை விளையாடுவது போல மிக எளிதாகச் செய்பவள் என்ற அர்த்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இதைப் பாராயணம் செய்யும் போது, அம்பிகையை பாலையாக, வாலைக் குமரியாக, பாலா திரிபுரசுந்தரியாக மனதில் தியானித்தால் - சிறு குழந்தைகளிடம் விளையாடும் போது, அந்தக் குழந்தைகளின் வயதுடையவராகவே நாமும் மாறுவது போல - அம்பிகையின் அருளாடல்களை எளிதில் உணரமுடியும்.

3. லக்ஷணம் :

அம்பிகையின் அனைத்து லீலைகளையும் பகர்கின்ற இந்த லலிதா ஸஹஸ்ரநாமம், பதினெட்டு புராணங்களின் ஒன்றானதும், இறுதியானதும் ஆகிய பிரம்மாண்ட புராணத்தினுள்,
ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் அகஸ்தியர் இருவருக்கிடையேயான ஸம்வாதம் (உரையாடல்) எனும் ஸம்பாஷணை வடிவிலான லலிதோபாக்கியானம் எனும் பகுதியில் அடங்கியுள்ளது.

லலிதோபாக்கியானம் – மந்த்ர கண்டம், நியாஸ கண்டம், பூஜா கண்டம், புரஸ்சரண கண்டம், ஹோம கண்டம், ரஹஸ்ய கண்டம், ஸ்தோத்திர கண்டம் எனும் பல்வேறு பிரிவுகளை உடையது.

இதில் ஸ்தோத்திர கண்டத்தினுள் அமைந்தது லலிதா ஸஹஸ்ரநாமம்.

வேதங்கள் – பரமேஸ்வரனுடைய உச்வாசம், நிச்வாசம் எனும் மூச்சுக் காற்றிலிருந்து தோன்றியவை. மிகவும் புனிதமானவை.

இந்த லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பிகையின் வாக்கிலிருந்து தோன்றியவை. வைகரீ, மத்யமா, பச்யந்தி ஆகிய அம்பிகையின் வாக்கு (சொற்களுக்கு உரிய) தேவதைகளால் சொல்லப்பட்டவை. அம்பிகையின் ஆணைப் படி வாக்கு தேவதைகளால் சொல்லப்பட்டவை.
(வைகரீ முதலான வாக் வசினி தேவதைகள் எட்டு பேர். ஒவ்வொருவரும் ஒரு ஸ்வரத்திற்கு அதிபதியானவர்கள். ஸ ரி க ம ப த நி என்ற ஏழு ஸ்வரங்களுக்கு ஏழு பேரும், அதற்கும் மேலான (அனு) ஸ்வர நிலையைக் கொண்ட (மனிதனின் கேட்கும் திறனான 50 Hz – 50000 Hz எல்லைகளுக்கு அப்பாற்பட்ட) சப்தத்திற்கு ஒருவரும் என எட்டு பேரும் சொல்லியருளியது.
இந்த லலிதா ஸஹஸ்ரநாமம் ஒரு தனிப்பட்ட நபர் எழுதியது அல்ல. தெய்வமே அனுக்ரஹித்தது.
வாக்கு தேவதைகள் அனுக்ரஹித்ததால் இது ரஹஸ்யநாம ஸஹஸ்ரம் என்றே கொண்டாடப்படுகின்றது. ரஹஸ்யம் என்றால் உள்ளுக்குள் புதைந்திருப்பது என்றும் அர்த்தம். அள்ளக் அள்ளக் குறையாத அற்புதப் புதையல் போன்றது லலிதா ஸஹஸ்ரநாமம். வற்றாத ஜீவ நதி போன்று, ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதியதாகப் படிப்பது போன்று தோன்றச் செய்யும்.

அம்பிகையின் வாக்கிலிருந்து வந்ததால், இது வேதத்திற்கு சமமாக மதிக்கப்படுகின்றது.

வேதங்களுக்கு அர்த்தம் அந்த வேதபிதாவான பரமேஸ்வரனுக்கு மட்டுமே அறியப்பட்டது.
அதேபோல லலிதா ஸஹஸ்ரநாமத்தின் முழுமையான அர்த்தம் ஜகன்மாதாவாகிய அம்பிகை மட்டுமே அறிந்தது.

இதற்கான விளக்கங்களை பற்பல ஆன்றோர்களும், அறிஞர்களும் அளித்திருக்கின்றார்கள். அவர்கள் கூட இதன் முழுமையான விளக்கத்தைத் தர முடியவில்லை என்றே கூறியிருக்கின்றனர்.

உதாரணமாக, அபர்ணா என்ற ஒரு பெயர் கொண்டு அம்பிகை போற்றப்படுகின்றாள்.
அபர்ணா என்றால் கடன் இல்லாதவள் என்று அர்த்தம். பக்தர்கள் கேட்கும் கோரிக்கையை நாளை அல்லது அடுத்த நாள் அல்லது வேறொரு நாளில் வரம் தந்து, பக்தர்களின் கோரிக்கையைக் கடனாகக் கொள்ளாதவள் அதாவது பக்தர்களின் கோரிக்கையை உடனடியாக அருளுபவள் என்று பொருள்.

அபர்ணா என்றால், அம்பிகை ஒரு சமயம் பரமேஸ்வரனைத் திருமணம் செய்து கொள்ளத் தவமாய்த் தவமிருந்தாள். தவம் செய்யும் போது, ரிஷிகள் போன்றோர் காட்டில் கிடைக்கக் கூடிய கிழங்குகள் அல்லது பழங்களை உணவாகக் கொள்வது வழக்கம். ஆனால், அம்பிகை இலையைக் கூட உண்ணாமல் (அதாவது உபவாசம் இருந்து – பட்டினியாய்க் கிடந்து) ஊசி மேல் தவம் இருந்ததாக புராணங்கள் கூறும்.

அபர்ணா என்றால் விழி மூடாதவள் (பர்ணம் – விழுதல். இமையைக் கூட விழாமல் – அதாவது கண்ணிமைக்காதவள்) விழி மூடும் சமயம் பக்தன் வந்து விட்டால், வரம் கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ணி, பக்தர்களுக்காக இமைக்காமல் இருப்பவள் என்று அர்த்தம்.
இது போன்று பல அர்த்தங்களை ஆன்றோர்கள் அமைக்கின்றார்கள்.

ஆகையினால், இதற்கான அர்த்தங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம். (லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி மற்றும் ஸௌந்தர்ய லஹரி – இந்த மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி எழுத எண்ணம் கொண்டிருக்கின்றேன். அம்பிகையின் அருளால் விரைவில் கைகூட பிரார்த்தனை செய்கின்றேன்)

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம் :

லக்ஷணம் என்றால் குறியீடு அல்லது இலக்கணம்.
ஸஹஸ்ரநாமம் – ஸஹஸ்ர (1000) + நாமம் (பெயர்கள்).
அம்பிகையை ஆயிரம் பெயர்களால் அழகுற துதிக்கச் செய்யும் மந்திரங்கள்.

பொதுவாக, ஸஹஸ்ரம் என்ற வார்த்தைக்கு வேத பாஷ்யங்கள் – எண்ணற்றது என்று அர்த்தம் தருகின்றன. (ஸஹ்ஸ்ரசீர்ஷா புருஷ: .. ஸஹஸ்ரபாத் – யஜுர் வேதம் - புருஷ ஸூக்தம் – இங்கு ஸஹஸ்ரம் என்ற வார்த்தைக்கு எண்ணிக்கையற்றது என்றே பொருள்.)

அதேபோல் ஸஹஸ்ரநாமம் என்றால் அம்பிகை எண்ணற்ற நாமங்களை, பெயர்களைக் கொண்டவள் என்று பொருள்.
நாமாவளி என்றால் பெயர்களை வரிசையாக அமைத்தல் என்று அர்த்தம். (தீபாவளி – தீபங்களை வரிசையாக அமைத்தல்)

ஸஹஸ்ரம் என்றால் ஆயிரம் (1000) என்றும் அர்த்தம் உண்டு. ஆகவே, அம்பிகைக்குரிய ஆயிரம் பெயர்களை வரிசையாக அமைத்து வழிபடும் பிரார்த்தனைக்கு ஸஹஸ்ரநாமாவளி என்று பெயர்.

ஸஹஸ்ரநாமம் என்றால் எப்படியெல்லாம் அமையவேண்டும் என்று இலக்கண சூத்திரங்கள் (formula) அறுதியிடுகின்றன.

சலாக்ஷ்ர சூத்திரம் என்பது வடமொழி இலக்கணத்தில் மிக முக்கியமான ஒன்று.
அது, ஸஹஸ்ரநாமம் எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று நியதிப்படுத்துகின்றன.
அந்த வகையில் எல்லா விதங்களிலும் பரிபூரணமாக, மிகப் பொருத்தமாக அமைந்தது லலிதா ஸஹஸ்ரநாமம்.

எளிமையாகவும் (லகு), இனிமையாகவும் (லலிதம்), இலக்கணத்தின் முழுமை பெற்ற (லக்ஷணம்) வடிவமாகவும் லலிதா ஸஹஸ்ரநாமம் அமைந்திருப்பதனால் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றது.

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணங்கள் பல உண்டு. அவற்றில், சிலவற்றை மட்டும் காண்போம்.

ஸஹஸ்ரநாமம் அமைய வேண்டும் என்றால் ஆயிரம் பெயர்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அவை அந்த தெய்வத்தின் புகழைக் கூறவேண்டும். அவற்றை இலக்கணப்படி ஸ்தோத்திரமாக்க வேண்டும். அப்படி ஸ்தோத்திரமாக ஆனது, சந்தஸ் எனும் சந்தம் அல்லது செய்யுள் தன்மை மாறாமல் அமைய வேண்டும்.

உதாரணமாக,
1. ஸ்ரீ மாத்ரே நம: (அன்னை வடிவான அம்பிகையை வணங்குகின்றோம்)
2. ஸ்ரீ மஹாராக்ஞ்யை நம: (அகில உலகிற்கும் மஹாராணியை வணங்குகின்றோம்.)
3. ஸ்ரீமத் ஸிம்ஹாஸநேஸ்வர்யை நம:

மேற்கண்ட மூன்று நாமாக்களையும் ஸ்தோத்திரமாக மாற்ற முடியவேண்டும்.
அது,
ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீமத் ஸிம்ஹாசனேஸ்வரீ

இப்படி ஸ்தோத்திரமாக மாற்றப்பட்டது எவ்விதத்திலும் சந்தங்களில் மாறாமல் அமைய வேண்டும்.
அதே போல மாற்றப்பட்ட ஸ்தோத்திரத்திலிருந்து நாமாவளிகாக மறுபடியும் பிரிக்க ஏதுவாக இருக்க வேண்டும்.

சில ஸஹஸ்ரநாமங்களில் ஸ்தோத்திரத்துனுள், சந்தங்களுக்கு, செய்யுள் தன்மைக்கு ஏற்ப அமைய வேண்டி, சில அர்த்தமற்ற சப்தங்கள் அமைந்துவிடும். அவை, நாமாவளிகாக மாற்ற வேண்டிவரும்போது, அர்த்தமற்ற சப்தங்கள் (ஸ்தோத்திரத்தில் இருப்பவை) நாமாவளிகளில் வராது.

இது போன்று எந்தவொரு அர்த்தமற்ற சப்தங்களும் இந்த ஸஹஸ்ரநாமத்தில் கிடையாது. சொற்குற்றம், பொருட்குற்றம் இவையில்லாத, அப்பழுக்கற்றதாக லலிதா ஸஹஸ்ரநாமம் திகழ்கின்றது.

ஸஹஸ்ரநாமம் அமைவதில் மிக முக்கியமான மற்றொரு நிபந்தனை உண்டு. ஸஹஸ்ரநாமத்தில் ஒரு வார்த்தை இடம்பெற்று விட்டால், மறுபடியும் அந்த வார்த்தை வேறு எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது.

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இடம்பெறும் எந்தவொரு வார்த்தையும் மறுபடியும் அதனுள் வருவதில்லை.

சில வார்த்தைகள் இருமுறை வருவது போல தோன்றக்கூடும்.
உதாரணமாக,
வரதா வாமநயனா ...
விச்வகர்பா ஸ்வர்ணகர்பா வரதா வாகதீஸ்வரி ...

மேற்கண்ட வரதா எனும் வார்த்தை, மறுபடியும் ஒரு இடத்தில் வருவதைக் காண்கின்றோம்.
அதை எப்படி அர்த்தம் கொள்வது என்பதை அறிஞர்கள் பகுத்தாய்கின்றார்கள்.

முதலில் வருவது வரதா,
பின்னால் அமைவது அவரதா எனக் கொள்ளவேண்டும்.

ஸுமுகீ நளினீ ஸுப்ரு: சோபனா ஸுரநாயிகா ...
ஸுவாஸின்யர்ச்சனப்ரீதா சோபானா சுத்தமானஸா

இங்கு சோபனா எனும் வார்த்தை இரண்டாவது வரியில் அமைவதை, ப்ரீதா (ஆ)சோபனா எனக் கொள்ளவேண்டும்.

கடபயாதி சங்க்யை :
வடமொழி இலக்கணத்திற்கு மிகப் பெரும் பங்காற்றிய வரருசி என்பவர் கடபயாதி ஸங்க்யை என்ற நியதியை வகுத்தார்.
அது, க, ட, ப, ய என்ற எழுத்துக்களுக்கும், அதைத் தொடர்ந்து வரும் எழுத்துக்களுக்கும் எண்ணிக்கை மதிப்பைக் கொடுத்தார். ஆகவே அது க ட ப ய – என்னும் எழுத்துக்களை ஆதியாக, தொடக்கமாகக் கொண்ட ஒரு கணக்கு வழி – அதுவே கடபயாதி ஸங்க்யை.

க - 1, க(kha) – 2, க(ga) – 3, க(gha) – 4, ங – 5, ச - 6,
ச(cha) – 7, ஜ – 8, ஜ(jha) – 9, ஞ - 0
ட – 1, ட(tta) – 2, ட(da) – 3, ட(dda) – 4, ண – 5, த – 6,
த(ttha) – 7, த(dha) – 8, த(ddha) – 9, ந - 0
ப – 1, ப(pha) – 2, ப(ba) – 3, ப(bha) – 4, ம – 5,
ய – 1, ர – 2, ல – 3, வ – 4, ச – 5, ஷ – 6, ஸ – 7, ஹ - 8
எந்தெந்த எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள் (பெயர்கள்) அமையவேண்டும் என்பதை கடபயாதி ஸங்க்யை அறுதியிடுகின்றது.


உதாரணமாக, அருண எனத் தொடங்கும் பெயர்கள்.கடபயாதி ஸங்க்யை படி அருண எனும் வார்த்தைக்கு 12 எனும் மதிப்பு வருகின்றது. (கடபயாதி ஸங்க்யை – சற்றே கடினமான சூத்திரங்களைக் கொண்டது. எளிதில் புரிபடாதது. தகுந்த ஆசிரியர் கொண்டு கற்க வேண்டும்)
அருணன் என்றால் சூரியன் என்று பொருள்.
சூரியன் ஒரு வருடத்தில் 12 மாதங்களைக் கடந்து வருகின்றார்.


சூரியனுக்கு 12 பெயர்கள் உள்ளதாக ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.
(மித்ரன், ரவி, சூர்யன், பானு, ககன், பூஷன், ஹிரண்யகர்ப்பன், மரீசி, ஆதித்யன், ஸவித்ரு, அர்க்கன், பாஸ்கரன்)

அதே போல மற்றொரு பன்னிரண்டு பெயர்களையும் புராணங்கள் கூறுகின்றன. (1.தபினீ, 2.தாபினீ, 3.தூம்ரா, 4.மரீசி, 5.ஜ்வாலினி, 6.ருசி, 7.ஸுக்ஷும்னா, 8.யோகதா, 9.விச்வா, 10.போதிணீ, 11.தாரிணீ, 12. க்ஷமா)

அருண எனும் பதத்திற்கு 12 எனும் மதிப்புடையதால், லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அருண எனும் தொடங்கும் பெயர்கள் 12 தான் அமைந்திருக்கின்றன.

இதே போல பல நாமாக்களுக்கு கடபயாதி ஸங்க்யைபடி - எண்ணிக்கையின் மதிப்பும், அதனைச் சார்ந்த நாமாவளிகளின் எண்ணிக்கையும் ஒன்றாகவே அமைவது பெரும் ஆச்சர்யத்தைத் தருகின்றது.

மேலே சொன்னது போல, மற்றும் ஒரு வகையில் லலிதா ஸஹஸ்ரநாமம் பகுக்கமுடிகின்றது. அது, 3 எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள், 8 எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள் என்றும் பகுக்கப்படமுடிகின்றது.

சந்திரனை ஒப்பிடாத எந்தவொரு அழகியல் இலக்கியமும் இல்லை.
அதன்படி, சந்திரனை வர்ணித்து லலிதா ஸஹஸ்ரநாமத்தில் பல பெயர்கள் அமைந்துள்ளன.
அம்பிகையின் நெற்றியானது – அஷ்டமீ சந்த்ர விப்ராஜ... என்ற நாமத்தின் படி, எட்டாவது தினத்திய சந்திரனைப் போன்று அழகுற விளங்குகின்றது என்று லலிதா ஸஹஸ்ரநாமம் கூறுகின்றது.
அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை 15 கலைகள் உள்ளன. அதில் எட்டாவது நாள் சந்திரன் – அரை சந்திர (7 1/2க்கும் அதிகமாக) வடிவத்திற்கும் சற்றே கூடுதலாக – விளங்கும். அந்த அர்த்தசந்திர வடிவம் அம்பிகையின் நுதலாக, நெற்றியாக விளங்குகின்றதாம்.
அப்படி தலையின் மேல் பாகமாகிய நெற்றி அரைச் சந்திர வடிவமும், கீழ் பாகம் அம்பிகையினுடைய சுயமான ஒளி பொருந்திய வடிவத்தினால் மற்றும் ஒரு அரை சந்திரன் வடிவமாகவும் திகழ்கின்றதாம்.
அப்படியானால், முகம் – இரு அரை சந்திர வடிவங்களும் இணைந்த – பௌர்ணமி நிலவு போல் என்றும் பிரகாசிக்கின்றதாம். (ஆகையினால் தான் அபிராம பட்டருக்கு அமாவாசையிலும் பௌர்ணமியை அம்பிகைத் தோன்றச் செய்தாள்.)

எட்டு என்ற எண்ணிக்கை அம்பிகைக்கு மிகவும் உகந்தது.

அஷ்டமியில் செய்யப்படும் ஸஹஸ்ரநாம பூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தது என்று இதன் பலச்ருதி விளக்குகின்றது.

வேதங்களும் அம்பிகையின் புகழை எட்டு என்ற எண்ணிக்கை கொண்டு போற்றுகின்றன. (கௌரிமிமாய ஸலிலானி ... அஷ்டாபதி ... )

அம்பாள் வீற்றிருக்கும் ஸ்ரீ நகரத்தின் முதல் வாயிலில், அஷ்ட தேவதைகள் வீற்றிருப்பதாக ஸ்ரீ வித்யா பூஜை கூறுகின்றது.

எட்டின் மடங்கில் உள்ள எண்ணிக்கையை லலிதா ஸஹஸ்ரநாமம் பெரிதும் முக்கியத்துவமாகக் கொண்டுள்ளது.

(மஹா சதுசஷ்டி கோடி யோஹினி ... 8X8 = 64 கோடி எண்ணிக்கை கொண்ட யோகினி எனும் தேவதைகளால் துதிக்கப்படுபவள்)

அம்பிகையின் நெற்றி - எட்டாவது நாளின் சந்திரனின் வடிவத்தினுடைய காந்தியைக் கொண்டுள்ளது என்றும், கீழ் முகம் மற்றும் ஒரு எட்டாவது சந்திரனுடைய ஒளியைக் கொண்டுள்ளது என்றும் புராணங்கள் கூறுகின்றன. (அதாவது 8 + 8 = 16 – பெளர்ணமி தினத்தை விட மேலான ஒரு ஒளியைக் கொண்டுள்ளவள் அம்பிகை)

16 என்னும் எண்ணிக்கையும், சாக்த உபாஸனையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஷோடச (16) அக்ஷரம் (எழுத்துக்கள்) – சோடஷாக்ஷரீ எனும் (16 எழுத்துக்களைக் கொண்ட) ஸ்ரீ வித்யா மந்திரமே அம்பிகையை வழிபட உகந்த மிக மிக மேன்மையான உபாஸனா மந்திரம் என்று சாக்த சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

அந்த 16ன் அம்சம் லலிதா ஸஹஸ்ரநாமம் முழுக்க விரவியிருப்பதைக் காணும்போது வியக்கத்தக்கதாக உள்ளது.

லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தின் ஒவ்வொரு வரியும் 16 எழுத்துக்களைக் கொண்டுள்ளன.

ஸ்ரீ மா தா ஸ்ரீ ம ஹா ரா க்ஞீ ஸ்ரீ மத் ஸிம் ஹா ச னே ச்வ ரீ –

இது லலிதா ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரத்தின் முதல் வரி.

இந்த வரியிலுள்ள எழுத்துக்களை எண்ணிவந்தால் 16 எழுத்துக்களில் அமையும். (புள்ளி வைத்த ஒற்றெழுத்துக்கள் இலக்கண விதிப்படி கணக்கில் வராது)

அது மட்டுமல்ல ஒவ்வொரு வரியுமே 16 எழுத்துக்களைக் கொண்டு தான் அமைகின்றது.
இரண்டாவது வரி,
சி தக் னி கு ண்ட ஸம் பூ தா தே வ கா ர்ய ஸ முத் ய தா – 16 எழுத்துக்கள்.

(ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தினைச் சொல்லிவந்தால் எண்ணற்ற முறை ஸ்ரீ வித்யா மந்திரத்தினை சொன்ன பலன் கிடைக்கும் என்பது உபாஸகர்களின் மேலான கருத்து)

இரண்டு வரிகள் சேர்ந்தது ஒரு ஸ்லோகம்.
ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீ மத் ஸிம்ஹாசனேஸ்வரி
சிதக்னி குண்ட ஸம்பூதா தேவ கார்ய ஸமுத்யதா

இரு வரிகளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 16+16 = 32.

வடமொழியில் உள்ள எழுத்துக்கள் 51. (அ முதல் க்ஷ வரை)
இதில்,


அ எனும் எழுத்தில் தொடங்கும் அம்பிகையின் பெயர்கள் – 40
(அகாந்தா, அகுலா, அக்ஷமாலாதிதரா, அக்ரகண்யா...)


அதே போல, மற்ற எழுத்துக்களில் தொடங்கும் நாமாவளிகளைக் கீழே காணலாம்.


அ எனும் எழுத்தில் 40 நாமாவளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
ஆ எனும் எழுத்தில் 11
இ – 3
ஈ – 2
உ – 5
ஊ – 5
ஏ – 1
ஓ – 2
அம் – 4
க – 81
க(2) – 1
க(3) – 24
ச – 29
ச(2) – 1
ஜ – 18
ட(3) – 2
த – 46
த(3) – 37
த(4) – 14
ந – 75
ப – 81
ப(3) – 24
ப(4) – 37
ம – 112
ய – 13
ர – 38
ல – 14
வ – 79
ச – 59
ஷ – 5
ஸ – 122
ஹ – 11
க்ஷ – 9 நாமாவளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. (ஆக மொத்தம் ஆயிரம் நாமாவளிகள்)

வடமொழியின் 51 எழுத்துக்களில் நாமாவளிகள் ஆரம்பிக்காத எழுத்துக்கள்:
ஊ, ரு, ரூ, லு, லூ, ஐ, ஔ, அ:, க(4), ங, ஜ(4), ஞ, ட, ட(2), ட(4), ண, த(2), ப(2), ள – ஆகிய 19 எழுத்துக்களில் அம்பிகையின் பெயர்கள் ஆரம்பிக்கப்படவில்லை.

ஆக, 51-19 = 32 எழுத்துக்களில் மட்டுமே நாமாவளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் ஒரு ஸ்லோகத்தின் உள்ள எழுத்துக்களும் 32 எண்ணிக்கையே.

லலிதா ஸஹஸ்ரநாமம் மூன்று பகுதிகள் உடையது.
1. பூர்வ பாகம் 2. நாமார்ச்சனா பாகம் 3. பலச்ருதி பாகம்
பூர்வ பாகம் – 51 ஸ்லோகங்களும்,
நாமார்ச்சனா பாகம் – 182 1/2 ஸ்லோகங்களும்,
பலச்ருதி – 86 1/2 ஸ்லோகங்களும் கொண்டதாக அமைந்திருக்கின்றது.
ஆக, மொத்த ஸ்லோகங்கள் = 320 (32ன் பத்தின் மடங்காக அமைவதைக் காணுங்கள்)

ஆதியந்தம் :
லலிதா ஸஹஸ்ரநாமத்தின் ஆதி (முதல்) பதம் (வார்த்தை) – ஸ்ரீ மாதா
ஆயிரமாவது நாமாவளி – லலிதாம்பிகா

ஆதி அன்னையாக விளங்குபவள் லலிதா அம்பிகை என்பதையும், முதலும் முடிவுமாக உள்ளதையும் லலிதா ஸஹஸ்ரநாமம் உணர்த்துகின்றது.

4. லட்சியம் :
அம்பிகையிடம் - வேண்டுதலை மனதில் நினைந்து, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை, மனமார பிரார்த்தனை செய்து, இத்தனை முறை சொல்ல வேண்டும் என்று லட்சியம் கொண்டு, பாராயணம் செய்து வந்தால், அம்பிகை அந்த பிரார்த்தனையை மிக நிச்சயமாக நிறைவேற்றுவாள் என்பது ஸத்யபூர்வமான உண்மை.

அம்பிகை க்ஷிப்ர ப்ரஸாதினியாக விளங்குபவள். அதாவது எளிமையான பக்தியால் கூட விரைவில் திருப்தி அடைந்து விடுபவள். லலிதா ஸஹஸ்ரநாமத்தின் பலச்ருதி மிக அருமையாக பல விளக்கங்களைத் தருகின்றது.

சிவ, விஷ்ணு ரூபிணியாக விளங்குவதால், அம்பிகையை, துளசி, தாமரை, வில்வம் கொண்டு ஸஹஸ்ரநாமத்தினால் அர்ச்சிப்பது ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களை அகற்றக்கூடியது.

பூக்களைக் கொண்டு அர்ச்சிக்கும் விதத்தை பாஸ்கர ராயர் அருமையாக விளக்குகின்றார்.

ஆயிரம் நாமாக்களையும் ஒரே வகை பூ கொண்டு அர்ச்சிப்பது பெரும் பேறு அளிக்கும்.
பல வகை மலர்கள் இருந்தால் தனித் தனி வகையாக அர்ச்சிப்பது மனதால் வேண்டுவதை அருளக்கூடியதாக இருக்கும்.
மலரின் மலர்ந்த தன்மை மாறாமல் அர்ச்சிக்க வேண்டும். மலர் எப்படி செடி கொடியில் மலர்கின்றதோ அந்த வகையிலேயே அர்ச்சிக்க வேண்டும்.
உதாரணமாக, செம்பருத்திப் பூ. அர்ச்சனை செய்யும் போது கையில் காம்பு கீழிருக்க, பூ மேலிருக்க அர்ச்சிக்க வேண்டும். இவ்வகை செய்வதால் வாழ்வாங்கு வாழலாம்.
பலவிதமான புஷ்பங்கள் கலந்திருந்தால், அவற்றை எடுத்து, புஷ்பாஞ்சலியாக நினைந்து (காம்பு கீழ் மேலாக இருந்தாலும் தோஷமில்லை) அர்சிப்பது கோடி கோடி புண்யத்தினை நல்கக் கூடியது.

பழங்களைக் கொண்டு நிவேதனம் செய்யும் போது, பழங்கள் எப்படி மரத்தில் பழுத்திருக்கின்றதோ அதைப் போலவே தாம்பாளத்தில் அமைத்து நிவேதனம் செய்ய வேண்டும். உதாரணம் மாம்பழம் – மாம்பழத்தின் காம்பு மேலிருக்க, பழத்தின் நுனி கீழிருக்க நிவேதனம் செய்வது அனைத்து விதமான பாபங்களையும் நீக்கக் கூடியது.
மேலும் பற்பல பலன்களை பலச்ருதி கூறுகின்றது.
ஸகல விதமான நோய்கள் நீங்கும், வம்சம் விருத்தியடையும், பல அஸ்வமேத யாகங்களைச் செய்த பலன் முதலானவற்றை அடுக்கிக்கொண்டே போகின்றது.

மிக விசேஷமாக பௌளர்ணமி அன்று இரவில், பௌர்ணமி நிலவை அம்பிகையாக மனதில் தியானித்து, ஐந்து வகையான உபசாரங்களோடு ஸஹஸ்ர நாமத்தினைக் கொண்டு அர்ச்சிப்பது மிக மேன்மையான பலனைத் தரக்கூடியது.
பௌளர்ணமி பூஜையை மந்த்ர மூர்த்தி தீக்ஷிதர் முதலான பெரியோர்களும், தவ ஞானியரும் பௌர்ணமி பூஜையை மிக விசேஷமாகச் செய்திருக்கின்றனர்.

தவக்கனல், அருட்புனல், கனகாபிஷேகம் கண்ட காஞ்சி அருள்வள்ளல் ஸ்ரீ மஹா பெரியவர் பௌர்ணமி பூஜையை மிகவும் விருப்பமுடன் செய்தவர். இப்படிச் செய்வது பெரும் ஞானம் கிடைக்க வழி செய்யும் என்றவர்.

லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது அல்லது கேட்பது, பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று தந்த்ரராஜம் கூறுகின்றது.

அனைத்து விதங்களிலும் பூரணமாக அமைந்த, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்வதால் அம்பிகையின் பரிபூரண அருள் கிடைத்திடும்.


5 .லயம் :
லலிதா ஸஹஸ்ரநாமத்தினுள் பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளன.

உடலில் உள்ள ஆறாதாரங்களை உயிர்ப்பித்து, ஆறாதாரங்களுக்கு உரிய தெய்வங்களை பஹிர்நியாஸமாக அமைத்துக்கொண்டு, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை பாராயணம் செய்வது, ஸாரூபம், ஸாமீபம், ஸாயுஜ்யம், ஸாலோக்யம், கைவல்யம் எனும் ஐந்து விதமான முக்தி நிலைகளையும் தருவதோடு, அம்பிகையோடு லயமாகிவிடும் (ஐக்கியமாகிவிடும்) மேலான வழிமுறையை லலிதா ஸஹஸ்ரநாமம் காட்டுகின்றது.

இதில் உள்ள அம்சங்கள் எத்தனை எத்தனை ?
அம்பிகைக்குரிய புஷ்பங்கள், நிவேதனங்கள், அம்பிகை உறையும் ஸ்ரீ நகரத்தின் விவரணை, தேவர்களைக் காத்திட்ட பாங்கு, தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வ நிலை, சிவ, விஷ்ணு, அம்பிகை – மூவரும் ஒன்று தான் என்னும் விளக்கம், யோக சாஸ்திர நிலைகள், ஞானம் அருளும் ஞானாம்பிகையாக, வேண்டுதல் அனைத்தையும் வரமளிக்கும் காமேஸ்வரியாக, புவனம் காக்கும் புவனேஸ்வரியாக அருள்பாலிக்கும் அம்பிகையைப் போற்றிச் சொல்லுகின்றது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்.

லலிதா ஸஹஸ்ரநாமம் கொண்டு அம்பிகையை என்றும் போற்றிடுவோம் !
அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவோம்.

***

லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதியவர்கள் பலர் இருக்கின்றார்கள். ஆனால், பாஸ்கர ராயர் எழுதிய பாஷ்யம் மிகவும் பிரபலமானது. பாஸ்கர ராயர் தனது பெயருக்கு ஏற்ப, முன்னர் கண்டது போல, பாஸ்கர எனும் சூரியனின் 12 பெயர்களைத் தலைப்புகளாகக் கொண்டு, லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கான பாஷ்யம் அமைத்துள்ளது பெரும் பாராட்டுதலுக்கு உரியதாகின்றது.
பாஸ்கரராயரின் பாஷ்யம், அம்பாளிடம் அவருக்கு இருந்த பக்தி, அந்த பக்தியால் அவர் செய்த சாதனைகள் (மஹா சதுசஷ்டி கோடி யோகினிக்கான விளக்கம் அளித்தது, ஒரு சன்யாசியின் கர்வத்தை அடக்கியது முதலான விபரங்களையும், அவர் வாழ்வில் நடந்த அதிசயங்களையும், அவர் மகள் லீலாவதி (இவர் ஒரு பெரிய கணித இயல் பேரறிஞர், பல கணித சூத்திரங்களை எழுதியவர்) பற்றிய விபரங்கள் போன்றவற்றையும் பிறிதொரு பதிவில் காண்போம்.
அதுமட்டுமல்லாமல், சிதம்பரம் ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பிகை ஆலயத்தில் அமைந்திருக்கும் சுகர் ரிஷியால் நிறுவப்பட்டதும், ஆதி சங்கரரால் வழிபாடு செய்யப்பட்டதும், மந்திர மூர்த்தி தீக்ஷிதரால் பூஜிக்கப்பட்டதும் ஆகிய மிகச் சிறப்பு வாய்ந்த ஸ்ரீசக்ரம் பற்றியும், அந்த ஆலயத்தின் விதானத்தில் (மேற்கூரையின் கீழ்பரப்பில்) லலிதா ஸஹஸ்ரநாமத்தின் படி அமைந்த அருமையான வரைபடங்கள் பற்றியும் விபரமாகப் பிறகு காண்போம்.

அடுத்த பதிவு,
ஸஹஸ்ரநாம ஸம்மேளனம்.
லலிதா ஸஹஸ்ர நாமத்தினையும், ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்தினையும் ஒருங்கே காண்போம். இரண்டிலும் உள்ள ஒற்றுமைகளையும், சிதம்பர ரஹஸ்ய தந்த்ரத்தின் மேலான பூஜை முறைகளில் ஒன்றான ஸம்மேளன முறையையும் காண்போம்.(லலிதா ஸஹஸ்ரநாமத்தினைக் கேட்க இங்கே க்ளிக் செய்யுங்கள்)- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- Mail : yanthralaya@yahoo.co.in, yanthralaya@gmail.com
- www.facebook.com/deekshidhar
- Cell : 94434 79572 & 93626 09299.

15 comments:

கீதா சாம்பசிவம் said...

சிதம்பரம் ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பிகை ஆலயத்தில் அமைந்திருக்கும் சுகர் ரிஷியால் நிறுவப்பட்டதும், ஆதி சங்கரரால் வழிபாடு செய்யப்பட்டதும், மந்திர மூர்த்தி தீக்ஷிதரால் பூஜிக்கப்பட்டதும் ஆகிய மிகச் சிறப்பு வாய்ந்த ஸ்ரீசக்ரம் பற்றியும், அந்த ஆலயத்தின் விதானத்தில் (மேற்கூரையின் கீழ்பரப்பில்) லலிதா ஸஹஸ்ரநாமத்தின் படி அமைந்த அருமையான வரைபடங்கள் பற்றியும் விபரமாகப் பிறகு காண்போம்.//

இந்தச் செய்தி முற்றிலும் புதியது. அடுத்த முறை சிதம்பரம் போகும்போது பார்க்கிறேன். நன்றி.

வழக்கம்போல் அருமையான பல செய்திகளைக் கொண்ட தொகுப்பு. பூ, பழங்களை எவ்வாறு வைத்து வழிபடவேண்டும் என்ற செய்தியை இன்றுதான் அறிந்துகொண்டேன். விரைவில் சஹஸ்ரநாம சம்மேளனத்தை எதிர்பார்க்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி மற்றும் ஸௌந்தர்ய லஹரி – இந்த மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி எழுத எண்ணம் கொண்டிருக்கின்றேன். அம்பிகையின் அருளால் விரைவில் கைகூட பிரார்த்தனை செய்கின்றேன்)
லலிதை,அபிராமி,பரம்சிவனின் பாதியாகிய பர்மேஸ்வரி -மூன்று தொடர்புகளையும் அமிர்தமாய் அருந்தக் காத்திருக்கிறோம்.

இராஜராஜேஸ்வரி said...

லிலிதா சக்ஸ்ரநாமத்தைப் பற்றி மிக அரிய கருத்துக்களை எளிய முறையில் தந்த தங்களுக்குப் பாராட்டுக்கள்.

blueshirt said...

simply excellent. an analysis in detail.
M.Subramanian.

Kailashi said...

//(லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி மற்றும் ஸௌந்தர்ய லஹரி – இந்த மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி எழுத எண்ணம் கொண்டிருக்கின்றேன். அம்பிகையின் அருளால் விரைவில் கைகூட பிரார்த்தனை செய்கின்றேன்)//

அடியேனும் சிவசக்தியிடம் பிரார்தித்துக் கொள்கின்றேன்.

ANGOOR said...

மிகவும் அருமை ....அம்பாளின் அருள் பூரணமாய் நம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் ....

ஆதிசைவர் said...

நமஸ்தே,
லலிதா சஹஸ்ரநாமத்தை பற்றிய இதுவரை கேள்விப்படாத தகவல்களை அளித்து வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள்.அதிலும் கடபயாதி சங்க்யைப்படி பல நாமாக்கள் அமைந்துள்ளது வியப்பின் உச்சம்.(ஆதிசங்கரருக்கு கூட கடபயாதி முறையில் தான் பெயர் வைத்ததாக நான் அறிந்தேன்.ஆனால் அக்காலத்தில் கடபயாதி பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது அக்காலத்தவரின் புலமையை காட்டுகிறது).
மேலும் மேலும் பல புதிய தகவல்களை எதிர்நோக்குகிறோம்........

Chidambaram Venkatesa Deekshithar said...

மிகவும் அருமையாக அமைந்துள்ளது இவ்வளவு செய்திகளை அதிக பக்கங்கள் இருந்தாலும் சுருக்கமாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி.

Anonymous said...

My neighbor and I had been simply debating this specific topic, he's normally looking for to show me incorrect. Your view on that is nice and exactly how I really feel. I just now mailed him this web page to show him your individual view. After trying over your website I e-book marked and might be coming back to learn your new posts!

VCTALAR said...

உங்கள் தமிழ் , வார்த்தை அமைப்பு , வரி அமைப்பு, பொருள் விளங்கக் கூறும் தன்மை , பத்தி அமைப்பு , படிக்க படிக்க மேலும் மேலும் படிக்க வேண்டும் என்கிற தாகம் எல்லாம் என்னை பேரின்பத்திற்கு கொண்டு சென்றது . நன்றி பல. தொடரட்டும் உங்கள் இறை சேவை!!

Ravi Chandar said...

Thank you very much..

Ravi Chandar said...

Thank you very much..

ayyappan Bhava.Bharu said...

அருமை

Ravikumar Jayaraman said...

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் லக்ஷணம்

மிகவும் அருமை - அழகிய நடை -- அம்பாளின் அருள் பெற்ற மூகராகத்தான் உங்களைப்பார்க்கிறேன் -- எவ்வளவு ஆராய்ச்சி ?- எத்தனை கடும் உழைப்பு ?- அம்பாளின் அருள் இருந்தால் மட்டுமே இப்படி ஒரு பதிவை எங்களுக்காக போட முடியும் - உங்கள் எல்லா பதிவுகளையும் பார்க்க படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்

Vijjaykumar M said...

Excellent. thank you so much for your explain about ambal sri lalithambigai.