ஆடிப் பூரம் - வளையல் அலங்காரம்
ஆடி மாதம் - புண்ணிய காலம். வானியல் கணிதப்படி, சூரியன், ஆடி மாதத் தொடக்கத்தில் தான், தனது பாதையை தெற்கு நோக்கி (தக்ஷிணம்) செலுத்தும் (அயனம்) காலம். ஆகவே இது தக்ஷிணாயன புண்ணிய காலம் என்றழைக்கப்படுகின்றது. (தை மாதம் சூர்யன் வடக்கு (உத்தரம்) நோக்கி செலுத்துவதால் உத்தராயண புண்ணிய காலம் ஆகும்.)
ஆடி மாதம் - அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம்.
ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. (ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு).
ஆடி மாதம் - கோயில் திருவிழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்களின் துவக்க காலம். ஆடி மாதத்திற்குப் பிறகு வரிசையாக பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் நிறைந்திருக்கும். (ஆவணி - விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி - நவராத்திரி, ஐப்பசி - தீபாவளி, கார்த்திகை - மஹாதீபம், ......).
ஆடி மாதம் - காவிரி போன்ற ஆறுகளில் புதுப்புனல் பிரவாகமெடுத்து பெருகும் காலம். பருவமழை தொடங்கி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் தேங்கி, புது வெள்ளம் பாயும் காலம்.
வயல் வெளிகளில் தண்ணீர் பாய்ச்சி, விதை விதைக்கத் தொடங்கும் (ஆடிப் பட்டம் தேடி விதை) காலமும் ஆடி மாதத்தில்தான். இக்காலத்தில் தான் அகில நாயகியே, பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக்கொள்ளும் காலம்.
ஆடி அமாவாசை - சூரியன், சந்திர பகவானுக்கு உரிய ராசியாகிய கடக ராசியில் பிரவேசிக்கும் காலம். பித்ரு (தந்தை) காரகனாகிய சூரியன், மாத்ரு (தாய்) காரகனாகிய சந்திரனுக்கு உரிய கடக ராசி மண்டலத்தில், சந்திரனுக்கு நேராக ஒன்றிணையும் காலம் ஆடி அமாவாசை. ஆகையால் தான், இறந்துவிட்ட முன்னோர்களுக்கு உரிய காரியங்களை ஆடி அமாவாசையில் செய்வது, பித்ரு தோஷங்களை நீக்கியும், முன்னோர்களின் பூரண ஆசிகளையும் பெற்றுத் தரும்.
ஆடிப் பதினெட்டு - பதினெட்டாம் பெருக்கு - ஆடி மாதத்தின் பதினெட்டாவது தினத்தில் புது வெள்ளம் பூரணமாக பிரவாகமெடுத்து புகும் காலம். ஆடிப் பெருக்கு அன்று, கருக்கொண்ட பூமித் தாய்க்கு, நிலமும் நீரும் சேர்ந்த இடங்களில் (ஆற்றங்கரை, குளக்கரை) சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
தானிய அபிவிருத்தி (பயிர்கள் செழிக்க) அருளும் அம்பிகையை, பெண்கள் - வம்ச அபிவிருத்தி (நற்குழைந்தைப் பேறு) வேண்டி வழிபாடுகள் நடத்துவார்கள். குலம் விளங்க, நல்வாரிசுகள் அமைய அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தனை செய்வார்கள்.
கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்து, இல்லறம் நல்லறமாக விளங்க அம்பிகையை வேண்டிக்கொண்டு, மஞ்சள் கயிறு அணிவிப்பார்கள்.
திருமணமான பெண்ணுக்கு, தாலி கோர்த்துக் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாங்கல்யம் பெண்ணின் கழுத்தில் இணையும் சமயம், மூத்த சுமங்கலிகள், பெண்ணை,
இனி இக்கயிறு பிரியாமல் தீர்க்க சுமங்கலியாக வாழட்டும் என்றும்,
இழை பிரியாமல் இல்லறம் நல்லறமாகட்டும் என்றும்,
இணை (தம்பதிகள்) பிரியாமல் இருக்கட்டும் என்றும் வாழ்த்துவார்கள்.
லோகமாதாவான அம்பிகையே ஆடி மாதத்தில் கருவுற்றிருப்பதாக நினைந்து, ஆற்றங்கரைகளில், அகிலம் காக்கும் அம்பிகைக்கு தேங்காய், பழம், மங்கலப்பொருட்கள், காதோலைக் கருகமணி ஆகியவற்றைப் படைத்து மகிழ்வார்கள்.
கருவுற்ற பெண்கள் - மசக்கையால் - வகைவகையான உணவுகளை விரும்புவார்கள். அதை மனதில் கொண்டு, கருவுற்ற அம்பிகைக்கு, வகைவகையான வண்ண சாதங்களை (தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல்) ஆற்றங்கரைக்குக் கொண்டு வந்து, அம்பிகைக்கு படைத்துவிட்டு, குடும்பத்துடன் குதூகலமாக உண்டு களிப்பார்கள்.
ஆடிப் பூரம் - அம்பிகை கருவுற்று இருப்பதை - முளைப்பயிற்றை அம்பிகையின் வயிற்றில் பிணைத்து, கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி பிரார்த்தனை செய்வார்கள்.
முளைப்பயிறின் வடிவமும், நுண்ணோக்கியில் தெரியும் உயிரணுவின் வடிவமும் ஒன்று போலவே இருப்பதைக் காணுங்கள்.
ஆன்றோர்கள், இவற்றை அறிந்திருந்ததால், இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்திருபார்களோ?
நூற்றுக்கணக்கான முளைப் பயிற்றை ஒரு துணியில் கட்டி, அதை அம்பிகையின் வயிற்றில் பிணைப்பார்கள். முளைப் பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காகவும், நற்குழந்தைப் பேற்றுக்காகவும் கட்டப்படுவது ஆகும்.
கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு செய்வது வழக்கமல்லவா?
அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தியும் வழிபாடுகள் நடைபெறும்.அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில், பூரம் நக்ஷத்திரம் இணையும் நாள் ஆகும்.
வளைகாப்பு நிகழ்ச்சி என்பது கர்ப்பமான பெண்ணுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, உறவினர்கள் புடைசூழ வாழ்த்துவார்கள்.
கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு எவ்வித (உடல் & மனம்) கஷ்டங்களும் உண்டாகதவாறு பார்த்துக்கொள்வார்கள்.
கருக்கொண்ட காலம் பிள்ளைப் பேற்றுக்கு பூர்வ (முந்தைய) காலம். ஆடி மாதத்தில், பூர்வ பல்குனி எனும் பூரம் நக்ஷத்திரம் இணையும் நாள் ஆடிப் பூரம்.
இந்த ஆடிப் பூர தினத்தில் தான் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள்.
அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் - அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது, ஆனந்தத்தை வழங்கக்கூடியது, வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.
ஆடிப் பூர தினத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய தமிழை ஆண்ட கோதை ஆண்டாள் இந்த ஜகத்தில் துளசிச் செடியின் கீழ் உதித்தாள்.
ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் விதைத்த ஆன்மீக விதை, பிற்காலத்தில் சமயம் காக்கும் பெரும் விருக்ஷமாக வளர்ந்தது.
ஆண்டாள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஆடிப் பூர தினத்தில் அம்பிகையை தரிசனம் செய்வோம் !
ஆனந்தமான நல்வாழ்வு பெற்றிடுவோம் !!
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
-சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜை
- செல் : 94434 79572, 9362609299
- செல் : 94434 79572, 9362609299
www.facebook.com/deekshidhar
21 comments:
அருமையான தகவல்கள். ஒவ்வொரு மாத ஆரம்பித்திலேயே அந்த மாத சிறப்புகளை கூறிவிடுங்கள், ஏனெனில் சில விசேசமான நாட்கள் கடந்து விடும். நன்றி.
ஆடிப் பூரம் பற்றிய தகவல்கள் அனைத்துக்கும் நன்றி.
அன்னையின் படம் மனத்திருக்கு நிறைவாக உள்ளது.
அகிலமெல்லாம் ஈன்ற அன்னைக்கு வளை காப்பு உற்சவம், அருமையான பல தகவல்களை கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி.
அம்பிகையின் அலங்கார விளக்கம் அற்புதமயிருந்தது. அன்னையின் அருள் வேண்டி ஆடிப் பூரத்தன்று அவளை கொண்டாடுவோம்.
நல்ல நல்ல தகவல்களை தந்தீர்கள். நன்றி!
காரணம் அறியாத காரியங்கள் அனைத்தும் தங்கள் பதிவுகளின் முலம் காரணம் அறிந்த காரியங்களாகின்றன. விளக்கங்கள்யாவும் மிக அருமை. நன்றி.
August 9, 2010 10:31 PM
அலங்காரவிளக்கம் நல்லா இருக்கு. ஆடி மாதம் முதல் மூன்று நாட்கள் எந்த நதிகளிலும் குளிக்கவும் கூடாது என்பார்கள் அல்லவா? நதிகளும் அப்போது மாதாந்திரத் தொந்திரவில் இருக்கும்னு சொல்வாங்க. அது முடிஞ்சு, அவங்களோட பூரணத்துவத்தைக் கொண்டாடத் தான் ஆடிப்பெருக்குனும் கேள்விப் பட்டிருக்கேன். முடிஞ்சா அதையும் விளக்குங்க. ஆதி சைவர் பச்சை வாழி அம்மனைப் பத்தியும் கேட்டிருந்தார். சாகம்பரியும் பச்சை வாழி அம்மனும் ஒருவரே தானா என்பதையும் சொல்லுங்கள். பச்சை வாழி அம்மன் பாண்டிச்சேரிப் பகுதிகளில் தான் பிரபலம் என்ற வரையிலும் கண்டு பிடிச்சேன். அப்புறம் ஒண்ணும் தெரியலை! :(
to continue
நன்றிகள் அனைவருக்கும்.
ஆடி மாத முதல் மூன்று நாட்கள் நதி ரஜஸ்வலை தினங்கள் என்பார்கள். (பாம்பு பஞ்சாங்கத்தைப் பார்த்தால் தெரியும்.) ஆடி மாதத்திற்கு முன் ஆறுகளில் தண்ணீர் சிறிது தான் இருக்கும். மணலும் நீருமாக ஆறு தூய்மையாக இராது. புதுப் புனல் பிரவாகம் எடுக்கும்போது பலவற்றையும் சுத்தம் செய்து வரும். அதுசமயம் ஆறுகளில் குளித்தால் ஆகாது. மூன்று தினங்களுக்குப் பிறகு நதி புதுத் தூய்மை பெறும். (ஆடி) பதினெட்டு என்பது ஏன் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒரு பெண் 18 வயதில் தான் முழுமையான பெண்ணாகின்றாள். தாய்மைக்குத் தயாராகின்றாள்.
எல்லாவற்றையும் காரண காரியங்களுடன் தான் பெரியவர்கள் அமைத்திருக்கின்றார்கள்.
காதோலைக் கருக மணி போன்றவையெல்லாம் திருஷ்டி கழிக்கத்தான். இதுபற்றி நீண்ட விளக்கம் கொடுக்க வேண்டும்.
பச்சைவாழியம்மன் எனக்குத் தெரிந்து கடலூர் மாவட்டத்தில் தான் அதிகம் இருக்கின்றது. பம்பை அடிப்பவரிடமிருந்து பல தகவல்கள் பெற்றிருக்கின்றேன். அனைத்தையும் கோர்த்து மாலையாக்கி சமர்ப்பிக்கின்றேன்.
மீண்டும் நன்றிகள்.
பச்சைவாழியம்மன் குறித்து மீண்டும் நினைவூட்டுகிறேன். நன்றி. நான் ஒரு மாதிரித் தகவல்கள் திரட்டி எழுதி இருக்கிறேன். என்றாலும் நீங்களும் கூறவும். நன்றி.
ஆடிப்பூரம் வளையல் அலங்காரம் மிக உயந்த செய்தி மற்றும் நாம் முன்னோர்கள் ஒவ்வொரு சின்னசின்ன நிகழ்வுகளுக்கும் மிக ஆழமான காரணங்களை வகுத்துள்ளார்கள். அவர்கள் வழியில் நாம் பெருமை அடைகிறோம். நன்றி.
அறிவியல் விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி .....
thanks for your precious information
Thanks for the information aiyya
Thanks,
Maruthachalam.K
http://annanthanatarajar.blogspot.com
Namskarams & Greetings.Very glad to renew the in formations about Adipura magimai.it is highly appreciable that you could able to create more links inside and a main article and to give further details.in this occasion i would like to convey that last year My Mrs prayed Goddess sri Bhuvaneswari by providing valayals for our daughter to get a child and ambal has fulfiled our wishes and my Mrs is going to perform valaigappu to my daughter soon .we sincerely thank you for your good guidance and i appeal to all, Neyvelians in particular to get the blessings of Sri.Bhuvaneswari.
USEFUL INFORMATIONS. THANKS
நேத்திக்குப் பதிவு திறக்கவே முடியலை!:( இன்னிக்குச் சரியா இருக்கு. நன்றி. பச்சைவாழி அம்மன் குறித்த மேல் அதிகத் தகவல்கள் ஏதேனும் கிடைச்சதா? பதினெட்டின் முக்கியத்துவம் குறித்தும் சொல்லுங்க.
கருக்கொண்ட காலம் பிள்ளைப் பேற்றுக்கு பூர்வ (முந்தைய) காலம். ஆடி மாதத்தில், பூர்வ பல்குனி எனும் பூரம் நக்ஷத்திரம் இணையும் நாள் ஆடிப் பூரம்.
இதைப்பற்றி கொஞ்சம் கூடுதலாக விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
கருக்கொண்ட காலம் பிள்ளைப் பேற்றுக்கு பூர்வ (முந்தைய) காலம். ஆடி மாதத்தில், பூர்வ பல்குனி எனும் பூரம் நக்ஷத்திரம் இணையும் நாள் ஆடிப் பூரம்.
இதைப்பற்றி கொஞ்சம் கூடுதலாக விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
அருமையான பதிவு இது ஆன்மீகத்தேன்
thanks for sharing.
Post a Comment