Thursday, January 1, 2015

வளரும் வேலவன் வடிவம்

வளரும் வேலவன் வடிவம்


சிதம்பரம்.

உலக இயக்கத்திற்கான இயங்கு விசையை வழங்கிடும் ஆடல் நாயகனாகிய நடராஜப் பெருமான் திருநடனம் புரிம் உன்னதமானதும், சைவர்களுக்கு முக்கிய தலமாகவும் விளங்குகின்றது.

காலத்தால் பழமை வாய்ந்ததும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று அம்சங்களிலும் பெருமை கொண்டது சிதம்பரம் தலம்.

சிதம்பரத்தில் விளங்கும் நடராஜர் ஆலயம் தெய்வீகம் ததும்பும் கோயிலாக மட்டுமல்லாமல், பற்பல அற்புதங்களை தன்னுள் கொண்டதாகும். அங்கிருக்கும் ஒவ்வொரு கல்லும் ஒரு சரித்திரம் சொல்லும்.

பல கலைகளின் உன்னத அடையாளங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன. தலைசிறந்த  கருங்கல் கட்டிட அமைப்புகள், வடிவங்கள்ஓவிய நுணுக்கங்கள் மற்றும் பிற கலைகளின் உச்சகட்ட நிலையை இன்றும் காண இயலும்.

எந்த ஒரு கலையை எடுத்துக்கொண்டாலும், அந்தக் கலையின் மேன்மை தன்மை சிதம்பரத்தில் விளங்குவதை உணரலாம்.

அனைத்து தெய்வங்களும் இந்த ஆலயத்தில் குடிகொண்டதாக சிதம்பர புராணங்கள் பகர்கின்றன. காசி அன்னபூரணி முதற்கொண்டு, சபரிமலை சாஸ்தா, திருக்கடையூர் காலஸம்ஹார மூர்த்தி  என பல தெய்வங்களின் சிலா ரூபங்கள் இங்கே அமையப் பெற்றிருக்கின்றன.

ஒரு தினத்தின் ஆறாவது காலமாகிய, இரவு 10 மணிக்கு நடைபெறும் அர்த்த ஜாம காலப் பொழுதில், அனைத்து தெய்வங்களின் தெய்வக்கலைகளும், சிதம்பர அம்பலவாணரிடம் சேர்ந்து, பிறகு காலை அங்கிருந்து செல்கின்றன என்று சிதம்பர புராணத்தினைப் புகழும் குஞ்சிதாங்கிரிஸ்தவம் எனும் நூலின் 175வது ஸ்லோகம் விவரிக்கின்றது. (ஆஸேதோ ... பஜேஹம்).
ஆகவே, பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தெய்வ வடிவங்கள் சிதம்பர ஆலயத்தில் காணப் பெறலாம்.

அவ்வகையில், சிதம்பரத்தின் அற்புத அமைப்பின் ஒன்றான  (பழனி) பால தண்டாயுதபாணி ஆலயம் பற்றியும் அதன் சிறப்புகளையும், அதிசய அடிப்படையிலான விபரம் பற்றியும் இந்தப் பதிவில் காணலாம்.


குமரன். ஷண்முகன். அழகன். தமிழ்க் கடவுள். ஓங்கார ரூபமாக விளங்குபவர்.
தந்தைக்கே உபதேசம் செய்து அறிவிற்கு வயது ஒரு தடையல்ல என்பதை உலகிற்குக் காட்டிய உன்னத தெய்வம். தமிழில் முருகு என்றால் மிகவும் அழகு என்று பொருள்.

முருகனையே முழு முதற்கடவுளாக வணங்க செய்யும் வகை கௌமாரம் ஆகும்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை அக்னி பகவான் கங்கையில் விட, கங்கை சரவணப்பொய்கையில் விட, அந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக, அந்த ஆறு குழந்தைகளுக்கும் கிருத்திகை முதலான நக்ஷத்ர தேவதைகள் பாலூட்ட, பார்வதி தேவியானவள் அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஸ்கந்தர் ஆக்கினள். (ஸ்கந்தம் என்பதற்கு சேர்த்தல் என்று பொருள்).

சிவபெருமான், முருகப் பெருமானிடம் பிரணவப் பொருள் கேட்டு உணர்ந்தார். பிரணவத்தை தந்தைக்கே உபதேசம் செய்தார்.

வேத மந்திரங்களில் ஓம் எனத் தொடங்கி ஓம் என முடியுமாறு இரண்டு தெய்வங்களுக்கு மட்டுமே அமைந்துள்ளன.

ஒன்று, 'ஓம் ஈசான .... ஸதாசிவோம்' என்று அமைந்த, ஓங்காரத்தின் விளக்கத்தை முருகப் பெருமானிடமிருந்து கேட்டறிந்த சிவபெருமானுக்கு உரியது.
மற்றொன்று, 'ஓம் குமாரஸ்சித் பிதரம் .... ஸுப்ரஹ்மண்யோம்' என்று அமைந்த பிரணவத்தை உபதேசித்த முருகப் பெருமானுக்கு உரியது.


ஒரு சமயம் கைலாயத்தில், நாரதர் அளித்த ஞான மாம்பழத்தை தாய் தந்தையரிடமிருந்து பெற, உலகை எவர் முதலில் சுற்றி வருகின்றாரோ அவருக்கே இந்த ஞானப் பழம் கிடைக்கும் என்பதால் விநாயகருக்கும், குமரனுக்கும் போட்டி ஏற்பட, அதில் பெற்றோரை வலம் வந்தாலே உலகம் முழுதையும் வலம் வந்த பலன் என்று கூறி விநாயகர் பார்வதி பரமேஸ்வரனை வலம் வந்து மாம்பழம் பெற்றிட, தாமதமாக வந்த குமரன் தனக்கு பழம் கிடைக்கவில்லையே என்ற கோபத்துடன் குன்று ஏறி ஆண்டிக் கோலத்தில், பழநி ஆண்டவராக வடிவம் கொண்டு அமர்ந்ததாக பழனி புராணம் கூறும்.

முருகன் மயிலுடன் பழனிக் குன்றில் இறங்கிய பால முருகர் வடிவத்தினை, சிதம்பரத்தில், பால தண்டாயுதபாணியாக, நடராஜர் வீற்றிருக்கும் பிரகாரத்துக்கு அடுத்ததாக உள்ள, குலோத்துங்கச் சோழன் திருமாளிகை என்று வரலாறு போற்றும் பிரகாரத்தில், கொடிமரத்திற்கு மேற்கில் சில அடிகள் கடந்தால் - தரிசிக்க இயலும்.

வரலாற்றின் படி பார்த்தோமானால்மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178 - 1216) காலத்தில் இந்த சன்னிதி உள்ள  பிரகாரம் கட்டப்பட்டமையாலும், குலோத்துங்கச் சோழன் திருமாளிகை என்று அழைக்கப்பட்டமையாலும், கி.பி. 11 - 12 ம் நூற்றாண்டில் - இந்த சன்னிதி அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. (17 அல்லது 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதும் சில அறிஞ்ர்கள் கருத்து.)


இந்த சன்னிதி பற்பல சிறப்புகளைக் கொண்டது.

முதலாவதாக, இந்த சன்னிதியின் மூல வடிவம்  - தனியானதொரு சிலை வடிவமாக அல்லாமல்மேற்கூரையைத் தாங்கிக்கொண்டிருக்கும் தூண் என்ற அமைப்பில் அமைந்தது. தூணில் அமைந்த ஒரு புடைப்பு சிற்பம் தான் இந்த ஸன்னிதியின் மூலவர். ஆகவே, இவரை கம்பத்தடியார், கம்பத்து இளையனார் என்றும் பக்தர்கள் அன்புடன் அழைப்பதுண்டு. (கம்பத்து இளையனார் சன்னிதி - இங்கு இருப்பது போலவே திருவண்ணாமலையிலும் தூணில் முருகர் காட்சி அளிக்கின்றார்).

மயிலின் கழுத்தைக் கையால்  வாஞ்சையாய் வளைத்த கோலம்  கொண்டு காட்சி அருள்பவர்.

பழனி மலையை நினைவு படுத்தும் வண்ணம் சற்றே உயரத்தில் மேடான இடத்தில் அமைந்திருப்பவர்இவரை வலம் வர வேண்டும் எனில் பழனிப் படியை ஏறுவது போல சில படிகள் ஏறி, பிறகு சில படிகள் கீழிறங்கும் அமைப்பில் அமைந்தது.

விதானம் எனும் மேற்கூரையில் ஓவியங்கள் முருகப் பெருமானின் அருளாடல்களை அழகுற அறிவிக்கின்றன.

பால தண்டாயுதபாணி ஸ்வாமி தூணில் அமைந்து பகதர்களின் துயர் துடைப்பவர்குழந்தைச் செல்வம் அருளும் குமரனாக விளங்குபவர். இரு மனம் கூடும் திருமணம் அமைய அருள்பவர். நோய்களை நீக்கக் கூடியவர்இல்லறம் நல்லறமாக விளங்க அருள் பாலிப்பவர். உருவில் சிறிதானாலும் அருள்  அளிப்பதில் வள்ளலாக விளங்குபவர்.

சிதம்பரம் கோயிலில் மேலும் சில முருக வடிவங்கள் இருந்தாலும், இந்த சன்னிதிக்கு மட்டுமே பெரும்பான்மை மக்கள் காவடி எடுக்கும் வழக்கம் உள்ளது. (பழநியில் தான் முதன் முதலில் காவடி எடுக்கும் வழக்கம் வந்தது என்று பெரியோர்கள் கூறுவார்கள்.) அக்னி நக்ஷத்திர நிவர்த்தி நாளில் - கத்திரி காலம் முடியும் சமயம் - (மே மாதம்), இந்த சன்னிதிக்கு காவடி ஆடியபடி பக்தர்கள் வரும் காட்சி காணக் கிடைக்காத ஒரு அழகிய நிகழ்வாகும்.

இந்த சன்னதியின் சிறப்பம்சம் : தூணில் அமைந்த பால தண்டாயுதபாணியின் வடிவம் வருடாவருடம் வளர்ந்து கொண்டேயிருக்கினது.

இவருக்குச் சாற்றப்படும் வெள்ளி மற்றும் தங்கக் கவசங்கள் சில வருடங்களுக்குப் பிறகு அதை அணிவிக்க இயலாத வண்ணம் சிலையுடன் பொருந்தாமல் போய்விடுகின்றது. சிலை வடிவம் பெருத்து, கவசம் சிறுத்துப் போனதால் அணிவிக்க முடியாமல், பிறகு புதியதாக கவசம் செய்ய வேண்டியிருக்கின்றது

உலகில் பற்பல விஷயங்கள் மனித அறிவுக்குப் புலனாகாமலே உள்ளன. விஞ்ஞான அறிவிற்கு எல்லைகள் உண்டு. அனைத்தையும் விஞ்ஞானம் கொண்டு விளக்கிவிட முடியாது.

என்றாலும், வளரும் கல் சிலை பற்றி காண்போம்.

சிதம்பரத்தில் இருப்பது போன்ற தண்டாயுதபாணி வடிவம் வளர்வது போல, பாரத தேசத்தில் பல இடங்களில் தெய்வச் சிலைகள் வளர்கின்றன என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு உண்டு.

மதுரை ஆலயத்திலிருக்கும் அனுமன், நாமக்கல் ஆஞ்சநேயர், கர்நாடகாவில் உள்ள நந்தி, வட இந்தியாவில் உள்ள சிவ லிங்கம் முதலான வடிவங்கள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன என்பது பக்தர்கள் பலர் அறிந்தது.

பாரத தேசத்தின் வட எல்லையில் அமைந்துள்ள கைலாய மலைச் சாரலான இமயமலை வருடாவருடம் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. கல் எப்படி வளரும் ? மலை எப்படி வளரும் ? என்பன போன்ற கேள்விகளுக்கு நில இயலாளர்கள்  (geologists) - பூமிக்கு அடியிலிருக்கும் டெக்டானிக் ப்ளேட்கள் எனும் பாறை அடுக்குகள் இமயமலையைத் தொடர்ந்து கீழ்ப்பக்கத்திலிருந்து நெருக்குவதால், மலை வருடத்திற்கு 5 மி.மீ. உயர்ந்து வளர்வதாக  - பதில் அளிக்கின்றார்கள்.

கல் மலை வளர்வதற்கும் கற்சிலை வளர்வதற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

கல்மலை வளர்வதற்கு டெக்டானிக் ப்ளேட் காரணம். கற்சிலை வளர்வதற்கு காரணம் என்ன?

ஆன்றோர்கள், கல்லுக்குள் தேரை எனும் உயிரினம் இருந்தால் அது வளரும் போது கல்லும் வளரும் என்பார்கள்

ரொமானியாவில் காணக்கிடைக்கப் பெறும் வளரும் கற்களை ட்ரொவான்ட் என்று அழைக்கின்றார்கள்

சில குறிப்பிட்ட சிறப்பு  வகைக் கலலின் மேல் பரப்பானது, காற்று அல்லது அக்கல்லின் மீது படும் தண்ணீர் ஆகியவற்றில் உள்ள தாதுப் பொருட்களைத் தன்னுடனே ஒட்டிவைத்துக் கொள்கின்றது. நாளாக நாளாக அந்தப் படிமம் (அழுக்கு அல்ல) கல்லோடு சேர்ந்து கல்லாகின்றது. (மேலும் விளக்கப் போனாமானால் கால்ஷியம் கார்போனேட், ஹை-போரோஸ் சான்ட் என வேதியியல் பாடமாகப் போய்விடும்.)

(மரமே கல்லான அதிசயம் - திருவக்கரையில் காணலாம்.)

இங்கே குறிப்பிட்ட விஞ்ஞான விஷயங்கள், பால தண்டாயுதபாணி சிலை வளர்வதற்கான ஆய்வுக் கூறுகளே தவிர, இவை தான் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

நமது முன்னோர்கள்  ஆழந்த ஞானம் கொண்டவர்கள். கல்லையே ஆண் கல், பெண் கல், அலிக் கல் என்று பகுக்கத் தெரிந்தவர்கள். அவற்றைக் கொண்டுஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள், தரையில் அமைக்க வேண்டிய கற்கள் என அமைக்கத் தெரிந்தவர்கள். இந்த பகுப்பு முறையினால்தான், ஆயிரம் ஆண்டுகளானாலும், காலத்தைக் காட்டும் கண்ணாடியாக, ஆலயங்கள் விளங்குகின்றன.

இதிலும் மேலும் நுட்பமாக, ஸப்தஸ்வர ஒலியைத் தரும் கற்களைக் கண்டுகொண்டு சங்கீதத் தூண்களை அமைத்தவர்கள்.

அதிநுட்பமாக ஆய்வுகள் செய்ததன் பலனாக, வளரும் கற்களைக் கண்டறிந்து சிலைகளாக வடித்துள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் சிதம்பர ஆலயத்தில் அமைந்துள்ள - பால தண்டாயுதபாணி தெய்வம்..

இவ்வாலயத்தைப் பற்றி செவி வழிச் செய்திகள் பல உண்டு.

இந்த சன்னிதியில் உள்ள பால தண்டாயுதபாணியை வழிபட்டு, அபிஷேக ஆராதனைகள் செய்து பலன் பெற்றோர் பலர் உண்டு. இத்தெய்வத்தைக் குல தெய்வமாகக் கொண்டவர்களும் பலர் உணடு.

குழந்தைப் பேறு அருளும் குமரன், தள்ளிப் போகும் திருமண பாக்கியத்தை கூட்டுவிக்கும் வேலவன், குடும்பம் நல்லபடியாக நடக்க உதவும் ஸ்கந்தன், குழந்தைகளின் படிப்பில் மேன்மை அருளும் குகன் - சிதம்பர ஆலய பால தண்டாயுதபாணியை வழிபட்டு பெரும் பேறுகள் பல பெறுவோம்.

பி.கு. : சிதம்பர ஆலய அமைப்பில் பல சூட்சுமங்கள் உள்ளன
கிழக்கு கோபுரம் வழியாக, நடராஜர் ஆலயத்திற்குச் செல்லும் பாதையான 21 படிகள் என்னும் வாயிலைக் கடந்தால், முதலில் வருவது, தண்டாயுதபாணி சன்னிதி அமைந்த குலோத்துங்கச் சோழன் திருமாளிகை பிரகாரம் வரும்.
அங்கு, வலம் வரும் முன், நாம் முதலில் தரிசிக்க வேண்டியது - மாம்பழ விநாயகரைத் தான். கையில் மாம்பழம் ஏந்திய கோலத்தில் அழகிய உருவில் விநாயகப் பெருமான் அமைந்திருப்பார். (இவர் தான் பார்வதி பரமேஸ்வரை வலம் வந்து பழம் வாங்கியவர். ஆகையாலேயே, இந்த மாம்பழ விநாயகர், நடராஜர் சிவகாமி சன்னிதிக்கு வெகு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது. மாம்பழ விநாயகரும், பால தண்டாயுதபாணியும் - புராணங்களில் கூறப்பட்டுள்ள மாம்பழ சம்பவத்தை நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளது.)  அவரை தரிசித்து, பிரகாரம் வலம் வந்தால் கொடி மரம் - அதன் அருகே பால தண்டாயுதபாணி சன்னிதி - பிறகு பிரகார வலம் முடித்து, நடராஜரை தரிசிக்கச் செல்ல வேண்டும் என்பது மரபு.

- நி.. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி, பூஜா ஸ்தானிகர்
நெய்வேலி ஸத்சங்கம் - மணித்வீபம் ஆலய பூஜகர்
yanthralaya@gmail.com, yanthralaya@yahoo.co.in
www.facebook.com/deekshidhar

Mobile : 94434 79572, 93626 09299.

3 comments:

Geetha Sambasivam said...

முந்தாநாள் தான் சிதம்பரம் போனோம். :) நீங்க சொல்லும் பாலதண்டாயுதபாணியைப் பார்க்கவில்லை. இது குறித்து இன்றே அறிந்தேன். அடுத்தமுறை சிதம்பரம் செல்கையில் கட்டாயம் பார்க்கணும். :))) ராமலிங்க தீக்ஷிதர் உங்களை மிகவும் விசாரித்தார். :))))

பிரசன்ன குமார். மு said...

வணக்கம் அண்ணா

தொடங்கட்டும் தங்கள் பணி

எல்லாம் வல்ல அண்ணாமலையான் துணையிருப்பான்

நன்றி

கவிநயா said...

பாலமுருகன் பற்றிய அரிய செய்திக்கு மிக்க நன்றி.