நமசிவாய வாழ்க !
அண்டமெங்கும் நிறைந்திருக்கும் அருட்பெரும் சக்தியாக விளங்கும் சிவபெருமானை வழிபடும் வகை சைவம் ஆகும். அங்கிங்கெணாதபடி வியாபித்திருக்கும் சைவப்பெரும் பரம்பொருளை வழிபடுபவர்கள் சைவர்கள் என்று போற்றப்படுவார்கள்.
சைவர்களின் முக்கியமான கடமைகள் என சிவபுராணங்கள் கூறுபவை - விபூதி எனும் திருநீற்றினை நெற்றியில் எப்பொழுதும் தரித்திருப்பது.
ருத்ர அம்சமாக விளங்கும் ருத்ராக்ஷத்தை அணிந்திருப்பது.
பஞ்சாக்ஷரம் என்று போற்றப்படும் நமசிவாய எனும் மந்திரத்தை முப்பொழுதும் சொல்லிக்கொண்டிருப்பது.
(ருத்ராக்ஷம், விபூதி பற்றி முந்தைய பதிவுகளில் கண்டிருந்தோம். விபூதி பற்றி படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். ருத்ராக்ஷம் பற்றி படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்)
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் பொருளாம் ஈசனிடமிருந்து உலகங்கள் தோன்றின. உயிர்கள் தோன்றின. ஆகையால் அவருக்கு பசுபதி என பெயர். உலகத்திலிருக்கும் அனைத்திற்கும் ஆதாரம் பரமேசனே என்பது தான் பசுபதியின் அர்த்தம்.
பஞ்சபூதங்களையும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) தோற்றுவித்தவர் பரமானந்த நடனம் செய்யும் பரம்பொருள்.
நடராஜ மூர்த்தியின் டமருகம் எனும் உடுக்கையிலிருந்து ஒலி தோன்றியதாகவும், அதிலிருந்து எழுத்துக்களும், மொழிகளும் தோன்றியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. (மாகேச்வர சூத்ரம்)
வேதங்களும், உபநிடதங்களும், புராணங்களும் தெய்வங்களால் அருளப்பட்டவை. தெய்வ அருள் பெற்ற அடியார்கள், தெய்வங்களைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளனர்.
வேதங்கள் - மகேஸ்வரனின் மூச்சுக் காற்றிலிருந்து ரிஷிகளால் உணரப்பட்ட மந்திரங்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. வேதங்களே இந்து மதத்திற்கு ஆணிவேர்.
மனப்பூர்வமாக சொல்லப்படும் மந்திரங்களுக்கு தெய்வங்கள் கட்டுப்படுவார்கள் என்பது வேத வாக்கு.
தெய்வங்களுக்குரிய மந்திரங்களை மனமாரச் சொன்னால், தெய்வங்கள் மனமிரங்கி, நம் மனம் குளிர அருள்வார்கள்.
தெய்வ அருள் எளிதில் கிட்ட, அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை, மனதால் தியானிப்பது அல்லது சொல்வது - வழிவகுக்கும்.
தெய்வங்களைப் போற்றும் வேத மந்திரங்களை பிழையில்லாமல் சொல்ல மிகுந்த பயிற்சி வேண்டும்.
ஸ்லோகங்கள் அல்லது தெய்வத் திருப்பதிகங்களை படிப்பதற்கும் அல்லது மனனமாகச் சொல்வதற்கும் பயிற்சிகள் அவசியம்.
கஷ்டங்களை நீக்க வல்ல மந்திரங்களை, எளிதில் சொல்வதற்கு ரிஷிகள் போன்றோர்கள், எளிய மக்களும் மிக இலகுவாகச் சொல்ல ஏதுவாக மூல மந்திரங்கள் எனும் எளிய மந்திரங்களை வகுத்துள்ளனர்.
இந்த மந்திரங்கள் சொல்வதற்கு எளிதாகவும், ஆனால் மிக மிக வீரியம் நிறைந்தவையாகவும் அமைந்திருக்கும்.
இவை மிக எளிமையான வழிமுறைகள் கொண்டது. எப்பொழுதும் சொல்ல முடிவது.
உடல் வலிமை பெற, உணவு உரம் போல அமைந்து, உடற்பயிற்சி செய்வது அவசியமானது. அது போல், மனம் திறன் பெற, மந்திரம் உரமாகி, மனப்பயிற்சி செய்வது இன்றியமையாதது.
இந்த மூல மந்திரங்கள், தெய்வங்களைப் போற்றும் பெரும் மந்திரத் தொகுப்பில் உள்ள சாராம்சங்களைச் சாறு பிழித்து எடுத்திருப்பதாக அமைந்திருக்கும். ஒரு பழத்தை முழுமையாகச் சாப்பிடுவதை விட அதன் சாற்றினை அருந்துவது எளிதானதல்லவா?
மூல மந்திரம் என்பது, தெய்வத்தினைப் போற்றும் சக்தி வாய்ந்த மந்திரங்களின் ஆரம்ப எழுத்துக்களை மட்டுமே, அதாவது அதன் மூல எழுத்துக்களை மட்டுமே கொண்டு சுருங்கச் சொல்வதாக இருக்கும். சுருக்கமும், விளக்கமும் தகுந்த குரு வாயிலாகவே கற்க வேண்டியிருக்கும்.
பல்வேறு தெய்வங்களுக்கு, பலவிதமான மூல மந்திரங்கள் உண்டு.
அவற்றில் மேலானதாகக் கருதப்படுவது, சிவபெருமானைப் போற்றக்கூடிய பஞ்சாக்கரம் அல்லது திருவைந்தெழுத்து எனப்படும் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மூலமந்திரம்.
இந்த ஐந்தெழுத்து மந்திரம் (நமசிவாய) சிவபெருமானே நமக்குச் சொல்லித் தருவதாக எடுத்துக்கொண்டு, எவர் வேண்டுமானாலும் எப்பொழுதும் சொல்லக் கூடியது.
உரு ஏறத் திரு ஏறும் என்பார்கள். மூல மந்திரங்களை எவ்வளவுக்கு எவ்வளவு ஜபிக்கின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு தெய்வத் திருவருள் கிடைக்கும்.
மற்ற மூலமந்திரங்களில் - எழுத்துக்கள் அதிகமிருக்கும். (முருகனைப் போற்றும் சடாக்ஷரம் - ஆறெழுத்து - சரவணபவ, மஹா விஷ்ணுவைப் போற்றும் அஷ்டாக்ஷரம் - எட்டெழுத்து - ஓம் நமோ நாராயணாய, அம்பிகையைப் போற்றும் சோடசாக்ஷரம் - 16 எழுத்து). மிகக் குறைந்த எழுத்துக்கள் - ஐந்தே எழுத்துக்களைக் கொண்ட - பஞ்சாக்ஷரம் - எளிதில் உருவேற்ற அதாவது ஜபிக்க ஏற்றது. மிக விரைவில் அதிக எண்ணிக்கையிலான ஜபங்கள் செய்ய இயலுவதால், இறையருள் மிக எளிதில் கிடைக்கும்.
வேதங்கள் நான்கு ; அவை ருக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம்.
இதில் இரண்டாவதாக அமைந்திருக்கும் யஜுர் வேதம், தெய்வங்களைப் போற்றி வழிபாடு செய்யக்கூடிய யாகங்களையும், பூஜைகளையும் - பெரும்பான்மையாகக் கூறுகின்றது.
யஜுர் வேத மந்திரங்களின் மையமாக அமைந்திருப்பது, சிவபெருமானைப் போற்றக் கூடிய ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரத் தொகுப்பு. யஜுர் வேத மையமான ஸ்ரீ ருத்ரத்திற்கும் நடுவாக அமைந்திருப்பது "நமசிவாய" எனும் ஐந்தெழுத்து மந்திரம். ('நம: சிவாய'ச சிவதராயச)
யஜுர் வேதத்திலுள்ள எழுத்துக்களையெல்லாம் ஒவ்வொரு எழுத்தாகக் கொண்டு, மாலை போன்று தொடுத்து, இறைவனுக்கு அர்ப்பணிப்பது போல் அமைத்தால், மாலையின் நடுநாயகமாக, நமசிவாய அமையும். (சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு, நமசிவய எனும் எழுத்துக்கள் பதித்த ரத்தினங்களால் ஆன பதக்கம் சாற்றப்பட்டிருப்பது - அவர் வேத நாயகன் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.)
ஆகையினால், சிவப்பரம்பொருளை தொழுதிடும் அடியவர்கள் எக்கணமும் 'நமசிவாய' மந்திரத்தைச் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும் என சிவபுராணங்கள் வலியுறுத்துகின்றன.
நமசிவாய - என்று சொல்லும்போது, வேத முழுமையும் சொல்லிய பலன் கிட்டும்.
நாம் வேண்டும் விருப்பங்களை மிக விரைவில் கிடைக்க வழிசெய்யும். மனம் நிரம்பிய மணவாழ்வு பெறச்செய்யும். அனைத்து செல்வங்களையும் தரும். (சிவம் என்றால் மங்கலம் என்றே அர்த்தம்)
நமசிவாய எனும் ஐந்தெழுத்து மூல மந்திரத்தின் சிறப்பினை பல்வேறு புராணங்களும், அடியார்களின் வாழ்க்கை வரலாறுகளும் எடுத்து இயம்புகின்றன.
சிதம்பரம் மற்றும் பஞ்சாக்ஷரம் சம்பந்தமான - மிக முக்கியமான ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு காண்போம்.
இந்து மதத்தின் புகழ், வேத காலம் முதற்கொண்டு புகழ்பெற்று விளங்கியிருக்கின்றது.
ஆயினும், இடைப்பட்ட சில காலத்தில், மன்னராட்சி முறையால், அவர்கள் கொண்ட மதத்தை மக்களைப் பின்பற்ற உத்தரவிடுவதாலும், வேற்றுமத தலையீடு இருந்ததாலும், இந்து மதத்தின் புகழ் சரியத் தொடங்கியது.
புகழின் சரிவை, இறையருளால், அந்தந்த காலத்தில், மஹான்கள் பிறந்து, இந்து சமயத்திற்குப் பெரிதும் ஏற்றத்தைப் பெறத் தொண்டு ஆற்றியுள்ளார்கள்.
தமிழத்தில், இடைக்காலத்தில் சமணமும், பெளத்தமும் ஆதிக்கம் பெற்றிருந்த சமயத்தில், தமிழர்களும் பிறமத மோகத்தில் மூழ்கியிருந்தார்கள்.
இதனைப் பொடிப்பொடியாக்க, தெய்வாம்சம் பொருந்திய அடியார்கள் தோன்றி, வேற்றுமதத்தில் மூழ்கியிருந்த மக்களின் உறக்கத்தைத் தட்டியெழுப்பினார்கள்.
தமிழும், சைவமும், பக்தியும் தழைக்க அயராது பாடுபட்டார்கள். பக்தியை மிக எளிமையாக்கினார்கள். உதாரணமாக, சாதாரண மக்களும் எளிய முறையில் இறைவனை வழிபட வழிவகை செய்தார்கள். நமசிவாய எனும் எளிய மந்திரத்தை மக்களின் மனதில் ஆழ ஊன்றுவித்தார்கள். ஒரு பெரும் ஆன்மீகப் புரட்சியையே தோற்றுவித்தார்கள். அக்காலத்தில் அவர்கள் ஊன்றிய ஆன்மீக விதை இன்று மிகப்பெரும் ஆலமரமாக விரவியிருக்கின்றது.
அந்த அடியார்கள் சென்று பாடிய சிவத்தலங்கள் - பாடல் பெற்ற சிவத்தலங்கள் என்று போற்றப்பட்டு - சிவபக்தர்களால் பெரும் போற்றுதலுக்கு உள்ளாகியிருக்கின்றது.
மேற்சொன்ன அடியார்களில் மிக முக்கியமானவர்கள் நால்வர் பெருமக்கள் என்று போற்றப்படும், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் ஆகியோர்.
இந்த நால்வரில் காலத்தால் முந்தையவர் மாணிக்கவாசகர்.
அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் என தமிழ் மூவராகத்தான் அனேக காலம் கொண்டாடப்பட்டு வந்தனர். ஆயினும், காலத்தால் பிற்பாடுதான் நால்வராகச் சேர்க்கப்பட்டவர் மாணிக்கவாசகர்.
மதுரையில் அரசாண்டு கொண்டிருந்த பாண்டிய மன்னனிடம், மந்திரியாகப் பணியாற்றியவர் திருவாதவூரர். அரசாங்கத்தைப் பலப்படுத்த, குதிரைகள் வாங்க அரசனால் பணிக்கப்பட்டு, குதிரைகள் வாங்க வந்த வழியில், திருப்பெருந்துறை எனுமிடத்தில், குருந்த மரத்தடியின் கீழ் வீற்றிருந்த சிவபெருமானின் திருவடி ஒளியைக்கண்டு பணிந்து, அவரையே ஞான ஆசானாகக் கொண்டு, மனம் மாறி தாம் ஒரு அமைச்சர் என்பதை மறந்து, குதிரை வாங்க அரசன் கொடுத்த பணத்தையெல்லாம் கொண்டு, கோயில் கட்ட, இதை அறிந்து கோபம் கொண்ட அரசன், தூதனை அனுப்பி விபரம் கேட்க, குதிரைகள் வாங்காத அமைச்சரைத் அரசன் தண்டிக்க, தனது அடியவன் பெறும் கஷ்டங்களைப் பொறுக்காத சிவபெருமான், ஒரு திருவிளையாடலை நடத்தத் திட்டமிட்டு, நரிகளையெல்லாம் குதிரைகளாக்கி, திருவாதவூரர் அனுப்பியவன் என்று கூறி, குதிரைகளை அரசனிடம் சேர்ப்பிக்க, அன்றிரவே குதிரைகள் எல்லாம் நரிகளாக மாறி கூவி குதிரை லாயத்திலிருந்து தப்பித்து ஓட, இதை அறிந்த மன்னன் மறுபடியும் திருவாதவூரரை திரும்பத் தண்டிக்க, இம்முறை மதுரை வழிபாயும் வைகை நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய, இதனை சரிசெய்ய ஆற்றங்கரை ஓரத்திலிருக்கும் அனைவருக்கும் முறைவைத்து, ஆற்று உடைப்பை அடைக்கச் செய்ய உத்தரவிட, அதில் ஒரு முறை கொண்ட பிட்டு எனும் உணவை விற்கும், சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்ட வந்தி எனும் வயோதிகப் பெண்மணி மட்டும் அடைக்காமல் இருக்க, சிவபெருமான் ஒரு வேலையாளாய் வந்தியிடம் வந்து, தான் உடைப்பை சரிசெய்வேன் என்று கூறி அதற்குக் கூலியாக பிட்டு மட்டும் வாங்குவேன் என்று கூறி, பிட்டை மட்டும் அவ்வப்பொது உண்டு, உடைப்பை சரிசெய்யாமல் திருவிளையாடல் புரிய, மன்னவன் ஒரு இடத்தில் மட்டும் உடைப்பு அடையாமல் இருக்கக் கண்டு, கோபம் கொண்டு, அவ்விடத்திற்கு வந்து, வேலையாளாக இருந்த சிவபெருமான் மீது பிரம்பால் அடிக்க, அந்த அடி அண்டமெங்கும் உள்ள அனைத்து ஜீவராசிகளின் மீதும், அரசன் மீதும் விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற மன்னவன் திகைக்க, ஒரு கூடை மண்ணை எடுத்து உடைப்பில் போட்டு வைகையை அந்த ஏவலாள் சரிசெய்து, மறைந்தனர். மேலும் சிவபெருமான் அசரீரியாக, தனது அன்பைப்பெற்ற திருவாதவூரர் பெற்ற துன்பத்திற்காக தான் ஒரு திருவிளையாடல் புரிந்தேன் என்று கூற, மன்னன் மகிழ்ந்து திருவாதவூரரைப் பணிய, அவர் மந்திரிப்பதவி ஏற்க மறுத்து, சிவத்தொண்டே என் வாழ்நாள் தொண்டு என மன்னனிடம் கூற, அவர் விருப்பப்படியே, திருவாதவூரர் சிவத்தொண்டு புரிய உரிய உதவிகள் செய்தனன்.
இவர் பல தலங்கள் வழியே சிதம்பரம் வந்தடைந்தார்.
இவர் பாடிய பாடல்களின் வார்த்தைகள் எல்லாம் மாணிக்கம் போன்று இருந்தமையால், இறைவனே இவருக்கு 'மாணிக்கவாசகர்' என்று பெயரிட்டார்.
இவரின் பாடல்கள் - திருவாசகம் ஆகும். பன்னிரு திருமுறையில் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. சிவானந்த ரசமாகிய திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பார்கள். அந்தளவுக்கு தெய்வத்தமிழால், இறைவனைப்பாடி, கேட்பவர் அனைவரும் உருகும்படி பாடல்கள் அமைந்திருக்கும்.
தனது உயிர்மூச்சாக நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தைக்கொண்டவர் மாணிக்கவாசகர். ஆகையினால் தான், 'நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க' என்று தொடங்கும் சிவபுராணம் எனும் பாடலைப் பாடியவர்.
தன்னை அடியார்க்கும் அடியாராகவும், மிக மிக எளிமையானவராகவும் தனது பாடல்கள் மூலம் அறிவித்தவர்.
இவர் ஒரு சமயம், சிதம்பரத்தில் தங்கியிருந்து, நடராஜப் பெருமான் மீது ஆரா அன்பு கொண்டு, சிவத்தொண்டு ஆற்றிவந்தார்.
அச்சமயம், சிவனடியார் ஒருவர் ஈழம் எனும் இலங்கை சென்று, எப்பொழுதும் பொன்னம்பலம், சிற்றம்பலம் என்று கூறிவந்தார்.
அதுசமயம், இலங்கையில் புத்தமதம் ஓங்கியிருந்தது. அரசவை வீரர்கள், அடியாரின் பிறமதச் சொல்கேட்டு, கோபம் கொண்டு, அரசன் முன் நிறுத்தினர்.
அரசன், அடியார் கூறிய வார்த்தைகள் கேட்டு, இதன் பொருள் என்னவென வினவ, சிதம்பரத்தின் சிறப்பையும், சைவத்தின் மேன்மையையும், நடராஜரின் புகழையும், பெருமை பொங்க பதில் கூற, தன் மதத்தின் மீது மதம் கொண்டிருந்த அரசன், சிதம்பரத்தில் தன் மதத்தை வேரூன்றச் செய்வேன் என்று சபதமிட்டு, தன் பரிவாரங்களுடனும், தனது மத துறவிகளுடனும் சிதம்பரம் வந்தான்.
சிதம்பரத்தில் தனது மத துறவிகளுடன் வந்து, எவர் மதம் உயர்ந்தது என்பதைப் பற்றி வாதம் செய்ய அழைப்பு விடுத்தான்.
புத்த மதத் துறவிகளுடன் வாதம் புரிய தகுந்த நபர் மாணிக்கவாசகர் தான் என்று அனைவரும் உணர்ந்து புத்தர்களுடன் வாதம் புரிய அவரை, ஆயிரங்கால் மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு, மாணிக்கவாசகரின் அருட்தோற்றப் பொலிவினைக் கண்ட புத்த துறவிகள், மன்னன் இவரைப் பார்த்துவிட்டால், மனம் மாறிவிடுவானோ என்றஞ்சி, ஒரு திரையமைத்துக் கொண்டு, மன்னவன் மாணிக்கவாசகரைப் பார்க்காவண்ணம், திரையின் ஒரு பக்கம் மாணிக்கவாசகரையும், மறு பக்கம் தாங்களும் நின்று கொண்டனர்.
புத்த மதத் துறவிகள் சிவனை நிந்தித்து வார்த்தைகளை வீச, அதைக் கேட்கப் பொறாத மாணிக்க வாசகர், தில்லையம்பலக் கூத்தனை மனதார நினைந்து, புத்தமதத் துறவிகளின் சொல் திறத்தை நீக்க, வாகீஸ்வரியாக விளங்கும் சரஸ்வதியை வேண்டிக்கொண்டு, துறவிகள் அனைவரையும் அக்கணமே ஊமையாக்கினார்.
திடுக்கிட்ட மன்னவனும், துறவிகளும் செய்வதறியாது திகைத்தனர்.
ஆயினும், மன்னவன் மாணிக்கவாசகர் மீது மதிப்பு கொண்டு, அவரை நோக்கி, 'வாக்குத் திறமையுள்ள எனது மத துறவிகளை ஊமையாக்கினீர்கள்.
எனக்கு ஒரு மகள் உண்டு. அவள் பிறவியிலேயே ஊமை. அவளையும் இங்கு அழைத்து வந்திருக்கின்றேன். அவளைப் பேச வைத்தால், நானும், எனது மதத் துறவிகளும் சைவ சமயம் சேருகின்றோம்' என்று கூறினான்.
மாணிக்கவாசகர் நட்டமாடும் நம்பிரானின் மேனியில் அமைந்திருக்கும், ஐந்தெழுத்து மந்திரத்தை, மனம் முழுக்க நிரப்பிக்கொண்டு, மன்னவனின் மகளுக்கு, ஐந்தெழுத்து மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் கற்றுக்கொடுத்தார்.
முதலில் 'ந' எனும் எழுத்தை மட்டும் சொல்லச் சொல்லிப் பழக்கப்படுத்தினார். அதை இளவரசி சொன்ன பிறகு, 'ம' என்கிற எழுத்தை மட்டும் பழக்கப்படுத்தி, தொடர்ந்து சி, வ, ய எனும் எழுத்துக்களைச் சொல்லக் கற்றுக்கொடுத்தார். இந்த ஐந்து எழுத்துக்களும் நன்கு சொல்ல பழகிய இளவரசியை, 'நமசிவய' என்று சொல்லுமாறு பணிக்க, அவளும் 'நமசிவாய' என்று சொல்லி முடித்ததும், இறையருளாலும், திருமந்திரமாகிய திருவைந்தெழுத்தை, பக்தியுடன் கூறியதாலும் - வாக்கு வன்மை பெற்று - பேசும் திறனைப் பெற்றாள்.
புத்த மதத் துறவிகள், சைவத்தை நிந்தித்து முன்னர் கேட்ட கேள்விகளுக்கான, தமது பதிலாக மாணிக்கவாசகர் - முன்னர் ஊமையாக இருந்தவளும், தற்போது தெய்வத் திருவருளால் பேசும் திறன் பெற்ற இளவரசியைக் கொண்டே - பதிலிறுத்தார். அது 'திருச்சாழல்' எனப்படும் அருமையான திருப்பதிகம் ஆகும்.
இதைக் கண்ட மன்னவன், மனம் மகிழ்ந்து, திரை விலக்கி, மாணிக்கவாசகரைப் பணிந்து, தானும், தன் மதத்தைச் சார்ந்த துறவிகள் அனைவரோடும் சைவ சமயம் சேர்ந்தான்.
மாணிக்கவாசகர், மறுபடி இறைவனை நினைந்து, துறவிகள் அனைவருக்கும் வாக்கு வன்மை கொடுத்தார்.
(சிதம்பரத்தில், மாணிக்கவாசகர் சொல்ல சொல்ல நடராஜ மூர்த்தியே - ஓர் அந்தணர் வேடம் கொண்டு - கைப்பட எழுதிய, திருவாசக ஓலைச் சுவடிகள், இன்றும் பாண்டிச்சேரி, அம்பலத்தாடி மடத்தில், திருமூலிகைக் காப்பிடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது.)
திருவாசகத்தின் பெருமையை ஆன்றோர்கள் அருமையாகக் கூறுவார்கள்.
இறைவன் இறைவனுக்குக் கூறியது ஓம் எனும் பிரணவம் (முருகப்பெருமான் பரமசிவனுக்குக் கூறியது)
இறைவன் மனிதனுக்குக் கூறியது பகவத் கீதை (ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறியது)
மனிதன் மனிதனுக்குக் கூறியது திருக்குறள் (திருவள்ளுவர் - மக்களுக்கு நல்வாழ்வு பெற நல்வழி காட்டியது)
மனிதன் இறைவனுக்குக் கூறியது திருவாசகம் (மாணிக்கவாசகர் - ஆடல்வல்லப் பெருமானாகிய தில்லையம்பலவாணருக்கு கூறி எழுதச் சொன்னது)
நடராஜருடன் இரண்டறக் கலந்த மாணிக்கவாசகரைப் போற்றும் வண்ணம், சிதம்பரத்தின் மஹோத்ஸவமாகிய மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் பத்து தினங்களிலும், மாலை வேளையில், நடராஜப் பெருமானுக்கு நேரெதிரே மாணிக்கவாசகரை நிறுத்தி, பக்தன் பதிகம் என்ற பெயரில், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பதிகங்களைப் பாடி 21 தீபாராதனைகள் காட்டப்பெறுவது கண்களைப் பனித்து, நெஞ்சத்தை நெகிழவைக்கும் நிகழ்ச்சி.
சிதம்பரத்தின் பொன்னம்பலத்தில், 21600 தங்க ஓடுகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இது நாம் ஒரு நாளில் நாம் உள்ளிழுத்து விடும் மூச்சுக்காற்றின் சராசரி எண்ணிக்கை. அந்தத் 21600 தங்க ஓடுகளிலும் நமசிவாய எனும் ஐந்தெழுத்துப் பொறிக்கப்பட்டிருக்கின்றது.
சைவத்தின் உயிர்மூச்சாகிய நமசிவாய எனும் பஞ்சாக்ஷரத்தை மனமார சொல்லிக்கொண்டு, நடராஜ மூர்த்தியை தரிசித்தால், கல்வியில் சிறப்பும், நாவன்மையும், வழக்குகளில் வெற்றியும், கலைகளில் புகழும் அடையமுடியும்.
கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே என்று உரைத்த அப்பர் சுவாமிகளுக்கும், ஐந்தெழுத்துக்கும் உள்ள தொடர்பையும்,
நமசிவாயத் திருப்பதிகம் பற்றியும்,
நாயன்மார்களில் ஐந்தெழுத்தை மட்டுமே ஓதி முக்தி பெற்றவரையும்,
திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறியுள்ள வாசியோகம் மற்றும் பஞ்சாக்கரத்தைப் பற்றியும்,
சிறப்பு வாய்ந்த பஞ்சாக்ஷர யந்திரம் பற்றியும்,
ஸூக்ஷ்ம பஞ்சாக்ஷரம் பற்றியும்,
விபரமாகப் பிறிதொரு சமயம் காண்போம்.
நல்லன யாவையும் நல்கும் நமசிவாய என்று நாளும் கூறி நற்கதி பெறுவோம் !
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com
-
- Pl. Visit to : www.facebook.com/deekshidhar
4 comments:
சுருக்கமாகச் சிதம்பர ரகசியத்தைச் சொல்லிட்டீங்க. நன்றியும், வாழ்த்துகளும், ஆசிகளும்.
(சிதம்பரத்தில், மாணிக்கவாசகர் சொல்ல சொல்ல நடராஜ மூர்த்தியே - ஓர் அந்தணர் வேடம் கொண்டு - கைப்பட எழுதிய, திருவாசக ஓலைச் சுவடிகள், இன்றும் பாண்டிச்சேரி, அம்பலத்தாடி மடத்தில், திருமூலிகைக் காப்பிடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது.)//
இந்தச் செய்தியை இன்றே அறிந்தேன். இது குறித்த மேலதிகத் தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். நன்றி.
தொடர
மீண்டும் ஓர் அருமையான பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி.
அருமையான தகவல் மிக்க நன்றி. என்னுடைய பிளாக்யில் கூட உங்கள் பெயர் கொடுத்துள்ளேன்
Post a Comment