Sunday, November 27, 2011

பாம்பு இயற்றிய பாடல் - பதவுரை

பாம்பு இயற்றிய பாடல் - பதவுரை

பாம்பு இயற்றிய பாடல் பற்றிய மேல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

மிகச் சிறப்பு வாய்ந்த இந்த ஸ்லோகத்தினை youtube videoவாக இங்கு க்ளிக் செய்து காணலாம்.

மஹா விஷ்ணுவை அனுதினமும் தாங்கும் ஆதிசேஷன் ஆயிரம் தலைகள் கொண்ட நாக அம்சம். மஹாவிஷ்ணு தான் கண்ட நடராஜர் ஆடிய ஆனந்த நடனத்தினை ஆதிசேஷனிடம் விளக்க, அதைத் தானும் காண அனுமதி வேண்ட, அதன்படியே விஷ்ணு வரம் அளிக்க, ஆதிசேஷன் சிவபெருமான் உறையும் கைலாயம் சென்று, ஆனந்தத் தாண்டவ தரிசனம் காண வரம் வேண்ட, தென்புறத்தில், தில்லை மரங்கள் சூழ்ந்த இடத்தில் ஆனந்த நடனம் நிகழ்த்த உள்ளோம் என்றும் அங்கு சென்று தவமிருப்பாயாக என்றும் அருளினார்.

அதன்படியே கைலாயத்திலிருந்து, ஆதிசேஷன் பதஞ்சலி எனும் நாக அம்ச உருக்கொண்டு, தில்லை மரங்கள் சூழ்ந்ததால் தில்லை எனும் பெயர் பெற்ற இடத்தில், புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதருடன் தவம் செய்ய, தை மாதத்துப் பூச நக்ஷத்ரம் கூடிய தினத்தில்,

தில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க, ஸகல தேவர்களும், அனைத்து கணங்களும் உடன் வர, இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.

அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.

காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னக பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவதும் பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.







இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.

பதஞ்சலி, தான் கண்ட இத்திருக்கோலத்தை என்றும் எப்பொழுதும் அனைவரும் காணவேண்டும் என நினைந்து - நடராஜப் பெருமானை பதஞ்சலியாமல் தாண்டவம் தில்லையில் நிகழ்த்திக்கொண்டிருக்க வேண்டும் என - பெருநோக்கில் வரம் பெற்றார்.

ஆதிசேஷன் நாக அம்சம். அவருக்குக் (பாம்புக்கு) கொம்பும் காலும் கிடையாது. அது போலவே, அவர் எழுதிய ஒரு அற்புத ஸ்லோகத்திற்கு 'ஆ'காரம் எனும் கால் கொண்ட நெடில் எழுத்துக்களும், 'ஒ'காரம் எனும் கொம்பு கொண்ட எழுத்துக்களும் இல்லாததாய் அமைத்தார். அது 'ஸ்ரீ சரண ச்ருங்க ரஹித நடேச ஸ்தோத்ரம்' எனப் புகழ் வாய்ந்ததாய் அமைந்தது.

அதற்கான முழுமையான அர்த்தம் - நண்பர்கள் பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இதுவரை இணையத்தில் வெளிவராத விளக்கம் - இங்கு கொடுக்கப்படுகின்றது.

Photobucket

ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம்

(ஸ்ரீ பதஞ்சலி க்ருதம்)

1. ஸதஞ்சிதம் உஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்ஜு கடகம்

பதஞ்சலி த்ருகஞ்சனம் அனஞ்சனம் அசஞ்சலபதம் ஜனன பஞ்சனகரம்|

கதம்பருசிம் அம்பரவஸம் பரமம் அம்புத கதம்பகவிடம்பககலம்

சிதம்புதிமணிம் புதஹ்ருதம்புஜ ரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

உரை :

ஸதஞ்சிதம் - ஸாது ஜனங்களால் பூஜிக்கப்படுபவர்

உதஞ்சித - மேலான பூஜைகளை உடையவர்

நிகுஞ்சித - அழகான வளைத்த

பதம் - கால்களை கொண்டவர்

ஜலஞ்ஜலித - ஜல் ஜல் எனும் ஓசை கொண்ட

மஞ்சுகடகம் - அழகான கால் அணிகளை அணிந்த

நடராஜப் பெருமான், பதஞ்சலியின் இமையில்லாத கண்களுக்கு (பாம்புகளுக்கு இமை கிடையாது) இணையற்ற காட்சி தந்தவரும், தோஷங்களை அகற்றுபவரும், நிரந்தரமானவரும், மோக்ஷத்தை அளிப்பவரும், அன்றலர்ந்த புஷ்பம் போன்று பொலிவானவரும், சிதம்பரத்தில் என்றும் வசிப்பவரும், மழையை சூல்கொண்ட கருமேகம் போன்ற கழுத்தை உடையவரும், ஞானக்கடலில் கிடைக்கும் ரத்னம் போன்றவரும், யோகிகள் தமது இருதயத்தில் என்றும் நிறுத்திவைக்கும் கோடி சூர்ய பிரகாச உத்தமராக விளங்கும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.


2. ஹரம் த்ரிபுர பஞ்சனம் அனந்தக்ருத கங்கணம் அகண்டதயம் அந்தரஹிதம்

விரிஞ்சிஸுர ஸம்ஹதி புரந்தர விசிந்திதபதம் தருணசந்த்ர மகுடம்|

பரம் பத விகண்டித யமம் பஸித மண்டிததனும் மதன வஞ்சன பரம்

சிரந்தனம் அமும் ப்ரணத ஸஞ்சித நிதிம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

அனைத்துப் பாவங்களையும் நீக்குபவரும், திரிபுர ஸம்ஹாரம் செய்தவரும், பாம்புகளை நகைகளாக அணிந்தவரும், கருணைக் கடலும், தேவர்களால் பூஜனை செய்யப்பட்டவரும், சந்திரனைத் தலையில் சூடியவரும், அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவரும், யமனைக் காலால் உதைத்தவரும், விபூதியை மேனி முழுதும் தரித்திருப்பவரும், மன்மதனை விஞ்சுபவரும் (ஸம்ஸார ஸாகரம் எனும் பாசங்களை அகற்றுபவரும்), மோக்ஷத்தை அருளுபவரும், பக்தர்களின் இதயத்தில் என்றும் வாசம் செய்பவரும், அள்ள அள்ளக் குறையாத புதையல் போல வரங்களை வாரி வழங்குபவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

3. அவந்தம் அகிலம் ஜகத் அபங்க குணதுங்கம் அமதம் த்ருதவிதும் ஸூரஸரித்

தரங்க நிகுரும்ப த்ருதி லம்பட ஜடம் சமன டம்பர ஹரம் பவஹரம்|

சிவம் தச திகந்தர விஜ்ரும்பித கரம் கரலஸன் ம்ருகசிசும் பசுபதிம்|

ஹரம் சசி தனஞ்ஜய பதங்கநயனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

அகிலம் அனைத்தையும் காப்பவரும், மேலான குணங்களைக் கொண்டவரும், கடுந்தவத்தால் மட்டுமே காட்சி தருபவரும், சந்திரனைத் தலையில் சூடியவரும், ஆர்ப்பரித்து வரும் கங்கை பிரவாகத்தைத் தன் ஒற்றைச் சடையில் தாங்கிவரும், யமனை வெல்லக் கூடியவரும், இவ்வுலக பாசங்களை அறுப்பவரும், மங்கல குணங்களோடு, பத்து திசைகளிலும் வியாபித்து இருப்பவரும், அலைபாயும் மனதை ஒத்த மானைத் தன் கையால் அடக்கியவரும், அனைத்து ஜீவராசிகளுக்கும் நாயகரும், பாபங்களை தீய்ப்பவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் தன் கண்களாக உடையவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

4. அனந்த நவரத்ன விலஸத்கடக கிங்கிணி ஜலம்ஜலரவம்

முகுந்த விதி ஹஸ்தகத மத்தள லய த்வனி திமித்திமித நர்தன பதம்|

சகுந்தரத பர்ஹிரத நந்திமுக ப்ருங்கி ருஷி ஸங்க நிகடம்

ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

தாண்டவம் ஆடும்போது பொன்னார் மேனியில் மேலுள்ள மாணிக்கம், முத்து, பவழம், வைரம் ஆகிய நவரத்ன நகைகள் ஜல ஜல ஜல என ஓசை எழுப்பக் காரணமானவரும், மஹாவிஷ்ணுவின் மத்தளத்தின் திமி திமி என்ற சப்தத்திற்கு உரியவகையில் நடமிடுபவரும், ப்ரம்மா, நந்தி, முருகர், விநாயகர் ஆகியோர் உடனிருக்க ஆடியருளுபவரும், ஸனந்தர், ஸனகர், ஸனத்குமாரர் எனும் பிரம்ம புத்திரர்களால் என்றும் நினைவில் கொள்ளப்படுபவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

5. அனந்த மஹிமம் த்ரிதச வந்த்ய சரணம் முனி ஹ்ருதந்தர வஸந்தம் அமலம்

கபந்த வியதிந்த்வனி கந்தவஹ வந்ஹி மகபந்து ரவிமஞ்ஜு வபுஷம்|

அனந்த விபவம் த்ரிஜகதந்த ரமணிம் த்ரிநயனம் த்ரிபுர கண்டன பரம்

ஸனந்த முனி வந்திதபதம் ஸகருணம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

எல்லைகளற்ற மகிமையுடையவரும், தேவர்கள் நமஸ்கரிக்கும் பாதக் கமலங்களை உடையவரும், முனிவர்களின் இதயத்தில் இடம்பெறுபவரும், பரிசுத்தமானவரும், ஜலம், ஆகாசம், சந்திரன், பூமி, காற்று, அக்னி, யாகம் ஆகியவற்றில் நீக்கமற நிறைந்திருப்பவரும், செல்வங்களை வழங்குபவரும், மூன்று உலகங்களுக்கும் நாயகரானவரும், திரிபுர ஸம்ஹாரத்தில் ஜயித்தவரும், ஸனந்தர் முதலான ரிஷிகளால் பாதபூஜை செய்யப்பட்டவரும், இரக்க குணம் உடையவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

6. அசிந்த்யம் அலிப்ருந்த ருசிபந்துர கல ஸ்புரதி குந்த நிகுரும்ப தவலம்

முகுந்த ஸுரப்ருந்த பலஹந்த்ரு க்ருதவந்தன லஸந்தம் அஹிகுண்டல தரம்|

அகம்பம் அனுகம்பித ரதிம் ஸுஜன மங்கல நிதிம் கஜஹரம் பசுபதிம்

தனஞ்ஜய நுதம் ப்ரணத ரஞ்ஜனபரம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்பவரும், வண்டுகளின் கூட்டத்தினைப் போன்ற கரு நிறக் கழுத்தையுடையவரும், மலர்ந்த முல்லைமலர் போன்ற வெள்ளை நிற மேனியை உடையவரும், விஷ்ணு, தேவர்கள், தேவேந்திரன் போன்றவர்கள் நமஸ்கரிப்பதால் பிரகாசமான முகம் கொண்டவரும், காதுகளில் பாம்புகளால் ஆன ஆபரணம் தரித்தவரும், நிலைத்த தன்மையுடையவரும், ரதி தேவியினால் பூஜிக்கப்பட்டவரும், ஸாதுக்களின் இருப்பிடத்தில் வசிப்பவரும், கஜாஸுரன் எனும் அசுரனின் தோலை உரித்து ஆடையாகத் தரித்தவரும், எல்லா உயிர்களுக்கும் நாயகரும், அர்ஜுனனால் துதிக்கப்பட்டவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

7. பரம் ஸுரவரம் புரஹரம் பசுபதிம் ஜனித தந்திமுக ஷண்முக ம் அமும்

ம்ருடம் கனக பிங்கல ஜடம் ஸனக பங்கஜ ரவிம் ஸுமனஸம் ஹிமருசிம்|

அஸங்க மனஸம் ஜலதி ஜன்ம கரலம் கபலயந்தம் அதுலம் குணநிதிம்

ஸநந்தவரதம் சமிதம் இந்து வதனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

எங்கும் பரவியிருப்பவரும், தேவர்களுள் சிறந்தவரும், திரிபுர ஸம்ஹாரம் செய்தவரும், ரிஷப வாகனம் எனும் விடையேறியவரும், விநாயகர், முருகர் முதலானோர்க்கு தந்தையானவரும், எப்பொழுதும் அருகில் இருப்பவரும், சுகத்தை அருள்பவரும், தங்கத்தினைப் போன்ற மின்னும் ஜடாமுடியை உடையவரும், ஸநக ரிஷிக்கு அருளியவரும், தாமரைப் பூவில் இருப்பவரும், சூர்ய பிரகாசம் உடையவரும், பனியைப் போன்ற வெண்மை நிறம் உடையவரும், ஆசையற்ற மனம் கொண்ட யோகியர் போன்றவரும், பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்தியவரும், கண்களின் பார்வைப் புலனைவிட மேலான ஒளித்தோற்றத்தை உடையவரும், அனைத்து மங்கல குணங்களை உடையவரும், ஸனந்த மகரிஷியின் வேண்டுதலைப் பூர்த்தி செய்தவரும், சாந்தமான குணத்தை உடையவரும், சந்திரனைப் போன்ற முகத்தை உடையவரும், உத்தம உத்தமராக விளங்குபவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

8. அஜம் க்ஷிதிரதம் புஜங்கபுங்கவ குணம் கனக ச்ருங்கி தனுஷம் கரலஸத்

குரங்க ப்ருது டங்க பரசும் ருசிர குங்கும ருசிம் டமருகஞ் ச தததம்|

முகுந்த விசிகம் நமதவந்த்ய பலதம் நிகம ப்ருந்த துரகம் நிருபமம்

ஸ சண்டிகம் அமும் ஜடிதி ஸம்ஹ்ருதபுரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

பிறவாதத் தன்மை கொண்டவரும் (யாருக்கும் பிறவாதவரும்), உலகத்தையே தனது தேராகக் கொண்டவரும், பாம்பினை வில்லின் நாணாகக் கொண்டவரும், கைகளில் ஒளிபொங்கும் மான், பெரிய உளி, கோடாரி இவைகளைத் தரித்தவரும், டமருகம் எனும் வாத்தியத்தை வாசிப்பவரும், மஹாவிஷ்ணுவை அம்பாகக் கொண்டவரும் (திரிபுர ஸம்ஹாரத்திற்காக), தம்மை வணங்குபவர்களுக்கு தன்னிகரற்ற பலன்களை அருளுபவரும், வேதங்களைக் தன்னுடைய தேருக்கு குதிரைகளாகக் கொண்டவரும், உவமை இல்லாதவரும், உமையுடன் என்றும் கூடியவரும், திரிபுரங்களை ஒரு நொடியில் ஸம்ஹரித்தவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.


9. அனங்க பரிபந்தினம் அஜம் க்ஷிதி துரந்தரம் அலங்கருணயந்த ம் அகிலம்

ஜ்வலந்தம் அனலம் தததம் அந்தகரிபும் ஸததம் இந்த்ரஸுர வந்திதபதம்|

உதஞ்சத் அரவிந்தகுல பந்து சதபிம்ப ருசி ஸம்ஹதி ஸுகந்தி வபுஷம்

பதஞ்ஜலி நுதம் ப்ரணவ பஞ்ஜரசுகம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

மன்மதனை எரித்தவரும், பிறப்பில்லாதவரும், பூமியின் பாரத்தைத் தாங்குபவரும், அனைத்து ஜீவராசிகளையும் ரட்சிப்பவரும், தகிக்கும் அக்னியைக் கையில் ஏந்தியவரும், யமனுக்கு எதிரியாக இருப்பவரும், இந்திராதி தேவர்களால் நமஸ்கரிக்கப்படுபவரும், தாமரைப் பூக்களுக்கு அரசாகிய சூர்யனைப் போன்ற பிரகாசம் கொண்டவரும், நறுமணம் பொருந்திய தேகம் உடையவரும், பதஞ்சலியால் துதி செய்யப்பட்டவரும், ஓங்காரம் எனும் கூண்டினுள் உறையும் கிளியைப் போன்று - எங்கும் நிறைந்திருப்பவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

10. இதி ஸ்தவம் அமும் புஜக புங்கவ க்ருதம் ப்ரதிதினம் படதி ய: க்ருதமுக:

ஸத: ப்ரபு பதத்விதய தர்சனபதம் ஸூ லலிதம் சரண ச்ருங்க ரஹிதம்|

ஸர:ப்ரபவ ஸம்பவ ஹரித்பதி ஹரி ப்ரமுக திவ்யநுத சங்கர பதம்

ஸ கச்சதி பரம் ந து ஜனுர்ஜலநிதிம் பரம துக்க ஜனகம் துரிததம்||

|| இதி ஸ்ரீபதஞ்சலி மஹர்ஷிக்ருத ஸ்ரீசரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்||

இவ்விதம் பதஞ்சலி மஹரிஷியால் இயற்றப்பட்டதும், பொற்சபையில் என்றும் நடமிடும் நாயகரின் பாதக் கமலங்களைப் பார்க்க வழிசெய்யும் ஸ்தோத்திரமானதும், அர்த்தம் மற்றும் பதங்களில் மிக எளிமையானதாகவும், கால் மற்றும் கொம்பு எழுத்துக்கள் இல்லாததும் ஆகிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்பவர்கள், பிரம்மா, விஷ்ணு இந்திராதி தேவர்கள் கூட அடையாத சிவ பதத்தையும், மோக்ஷத்தையும் அடைவார்கள்.

(நன்றி : ஸ்ரீ நந்திகேஸ்வர ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் - புத்தகம். கிடைக்குமிடம் : N.T. கணபதி தீக்ஷிதர், 17, கீழ சன்னதி, சிதம்பரம் - 1. போன் : 04144 - 225215)

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

- செல் : 94434 79572

- mail : yanthralaya@yahoo.co.in &

yanthralaya@gmail.com

3 comments:

Geetha Sambasivam said...

விளக்கத்திற்கு நன்றி.

Geetha Sambasivam said...

தொடர

Savithri said...

A rare poem indeed!