Wednesday, March 23, 2011

பார்வையற்றப் பாவலர்

பார்வையற்றப் பாவலர் அந்தகக்கவி வீர ராகவ முதலியார் இந்தப்பதிவுக்கு முந்தைய பதிவாகிய இணையில்லாத இணை – இரட்டைப் புலவர்கள் பதிவு கடந்த 15.03.2011 அன்று பதிவேற்றப்பட்டது.
அன்றைய தினம் உலக ஊனமுற்றோர் தினம். மாற்றுத் திறனாளிகள் கூட உலகை மாற்றியமைக்க முடியும் என்பதைக் காட்டவும், அவர்களுக்கு உற்சாகம் ஏற்றவும் இந்நாள் கொண்டாடப் படுகின்றது.
(பல அரிய கண்டுபிடிப்புகளைச் செய்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கும், இசைக் கலையில் பெரும் சாதனைகள் செய்த பீத்தோவனுக்கும் காது கேட்காது. இது போன்று பலர் அரிய சாதனைகள் செய்திருக்கின்றனர்.) மாற்றுத் திறனாளிகளாக விளங்கிய இரட்டைப் புலவர்களைப் பற்றிய கட்டுரை இந்த ப்ளாக்கில், உலக ஊனமுற்றோர் தினத்தில் வெளிவந்ததை நெகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திய நிலாப்ரியன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. இரட்டைப் புலவர்களைப் போல, தமிழாய்ந்த மற்றும் ஒரு மாற்றுத்திறன் கொண்ட ஒரு புலவரை தான் இங்கு காணவிருக்கின்றோம். இந்தப் புலவரைப் பற்றி, இரட்டைப் புலவர்கள் பதிவிலேயே ஒரே பதிவாக எழுத நினைத்திருந்தேன். நேரமின்மை காரணமாக பல நாட்கள் கழித்து பதிவிட வேண்டியதாகிவிட்டது.
பார்வையற்றப் பாவலர் அந்தகக்கவி வீர ராகவ முதலியார்
ஞானம் பெற ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்தவர்கள் அனேகம். அவ்வகையில் பிறவியிலேயே இரு கண்களும் தெரியாத நிலைகொண்ட ஒரு கவிஞர், கடல் கடந்தும் பயணம் செய்து, பெரும் புகழ் கொண்டார். அவர், அந்தகக்கவி வீரராகவ முதலியார். அந்தகம் – கண் பார்வை இல்லாதிருத்தல். கவி – பாடல்கள் எழுதும் புலமை பெற்ற புலவர். கண்களில்லாக் கவிஞர். இவர், செங்கல்பட்டுக்கு அருகிலான பொன்விளைந்த களத்தூரில் சைவ வேளாளக் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்குப் பிறவியிலேயே கண்கள் தெரியவில்லை. இருந்தபோதும் தனது அளவற்ற அறிவாற்றலால் தமிழைக் கற்றார். இளமையிலேயே அழகு தமிழில் கவி புனையும் திறனும் பெற்றார். இவரின் ஊனத்தைப் பெரிதாக எண்ணாமல், தமிழ் கற்றறிந்த பெண் ஒருவர், இவரைத் திருமணம் செய்துகொண்டார். பொருள் ஈட்ட வேண்டி, பல தேசங்களுக்கும் சென்று வர கிளம்பினார். அப்போது, தம் மனைவி தந்த கட்டுசாதக் கூடையை ஒரு இடத்தில் இருத்தி, உணவருந்த எண்ணி, கைகால் சுத்தம் செய்யும் போது, அங்கிருந்த நாய் ஒன்று சாதத்தினை எடுத்துச் சென்றது. இதை அவர் அறியவில்லை. அருகிலிருந்த ஒருவர் இந்நிகழ்ச்சியை எடுத்துச் சொல்ல, புலவர்களுக்கே உரிய நடையில், கவி ஒன்று பாடுகின்றார். சீராடையற்ற வயிரவன் வாகனஞ் சேரவந்து பாராளும் நான்முகன் வாகனந்தன்னை முன்பற்றிக் கௌளவி நாராயணணுயர் வாகனமாயிற்று நம்மை முகம் பாரான் மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே. வயிரவன் வாகனம் – நாய். நான்முகன் பிரம்மாவின் வாகனம் – அன்னம். நாய் வந்து அன்னத்தை எடுத்துச் சென்றது. நாராயணனின் வாகனம் – வெள்ளைக் கருடன். பசியினால் முகம் சுருங்கி, வெளுத்துவிட்டது. மை – ஆடு. ஆட்டினை வாகனமாகக் கொண்டவர் அக்னி பகவான். வயிற்றில் நெருப்புப் பற்றியது – பசி எடுத்தது. இந்நிகழ்ச்சியை வாகனம் எனும் வார்த்தையைக் கொண்டு விளையாடியிருக்கின்றார். சோழநாடு வந்து பல நாட்கள் தங்கியிருந்துவிட்டு, ஈழ நாடு சென்றார். அப்போது இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்தவர் பரராஜசேகரன் எனும் தமிழ் மீது மிகவும் பற்றுக்கொண்ட மன்னவன். தமிழ்ப் பாவலர்களுக்குப் பரிசுகள் பல ஈந்தவன். பார்வையற்றிருந்தாலும் பா(pa)வன்மை கொண்ட புலவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த மன்னன் அரசவைக்கு வரச் செய்திருந்தான். அரசவையிலிருந்த மற்ற புலவர்கள் பொறாமை எண்ணம் கொண்டு அந்தகக்கவி வரும் சமயம், மன்னவன் புலவரைக் காண இயலாத வகையில் திரை ஒன்றை அமைத்தனர். திரை இருப்பதை கவியின் சீடன் ஒருவன் ‘சிதம்பரம்’ என்று குறிப்பால் உணர்த்தினான். பலருக்கும் முன்னே இவர் பார்வையற்றவர் என்பதைச் சொல்ல எண்ணாமல், மன்னவனுக்கும் புலவருக்கும் இடையே திரை ஒன்று இருப்பதைக் குறிப்பால் உணர்த்தினான். சிதம்பரம் ஸ்தலத்தில், சிதம்பர ரகசியத்தைக் காண வேண்டும் எனில் திரையை அகற்றினால் தான் காண முடியும், ஆகையால் திரை இல்லாமல் இருதால் அரசனைக் காணலாம் என்பதை அழகுற உணர்த்தினான். சிதம்பரம் என்று சீடன் சொல்லக் கேட்டதும், நடந்ததை அறிந்த புலவர், மனம் முழுக்க கடவுளை வேண்டி, “திருவண்ணாமலை” என்றார். திருவண்ணாமலை – பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி – நெருப்புக்கு உரிய ஸ்தலம். இவர் திருவண்ணாமலை என்றதும், திரைத் தீப்பற்றி எரிந்தது. இவரின் தெய்வீகத் தமிழை மிக வியந்த மன்னன், அருகிலிருந்த வில்லினை எடுத்து நின்று, இக்கோலத்தைப் பாடுங்கள் என்றான். பார்வையற்றவர் எப்படி மன்னனைப் பார்க்க முடியும்? ஆயினும் தெய்வீகத் திறனால் அறிந்தார். உடன் மடை திறந்த வெள்ளம் போல், பாடலைக் கொட்டுகின்றார். வாழும் இலங்கைக் கோமானில்லை மானில்லை ஏழு மராமரமோ வீங்கில்லை – ஆழி அலையடைத்த செங்கை அபிராமா இன்று சிலையெடுத்தவாறு எமக்குச் செப்பு. மன்னன் வில்லோடு நின்ற கோலம் கொண்டதைக் காணும்போது, கோதண்டம் எனும் வில்லினை உடைய ராமரின் கோலத்தைக் கொண்டது போல் இருக்கின்றது என்று பாடுகின்றார். இலங்கைக் கோமானாகிய ராவணன் இல்லை ; வில்லையெடுப்பதற்கு சுக்ரீவனுக்குத் தன் திறமையக் காட்ட வேண்டி, ஒரே அம்பில் ஏழி மரங்களைத் துளைத்தார் ராமர். அது போன்ற தருணம் இங்கில்லை ; வில்லையெடுப்பதற்கு, ஆழி அலை – கடல் மேல் பாலம் அமைக்க கடல்வேந்தனிடம் கோரிக்கை வைக்கின்றார் ராமர். நேரம் கடந்துகொண்டே போகின்றது. கோபம் கொண்ட ராமர் கடல் மேல் அம்பைப் போட வில்லை எடுக்கின்றார். இந்தத் தருணமும் இப்பொழுது இங்கில்லை; வில்லை எடுப்பதற்கு, பிறகு ஏன் வில்லை எடுத்தாய் சிவந்த கரங்களையுடைய (செங்கை) அழகிய தோற்றம் உடைய ராம பிரானே என்று கேட்கும் வகையில் பாடல் அமைகின்றது. இந்தப் பாடலால், அவரின் முழுத் திறனையும் அறிந்த மன்னவன் பெரும் பரிசுகள் தருகின்றான். இவர் ஒரு சமயம் ‘ராமன்’ என்ற செல்வந்தரைப் பாடினார். அகமகிழ்ந்த ராமன், அந்தகக்கவிக்கு யானையைப் பரிசாக அளித்து கௌளரவித்தார். கவியோ ஏழை. பொருள் ஈட்ட வேண்டி பல இடங்களுக்குச் செல்பவர். இவர் ஒருவருக்கே உணவு கிடைக்கப் போராட வேண்டியிருக்கின்றது. யானைக்கு எங்கே தீனி போடுவது. இருந்தும், யானையைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். மனைவி மதிபெற்றவர். வீட்டிலும் ஏழ்மை தாண்டவமாடுகின்றது. தமது வளமான வாழ்க்கைக்குக் கவி ஏதேனும் கொண்டு வருவார் எனக் காத்திருந்தார். கவி வருவதை பிறரால் அறிகின்றார். வீட்டினுள் சமையல் செய்து கொண்டிருந்தபடியே, வீட்டின் வெளியே இருந்த அந்தகக்கவியை நோக்கி, என்ன பரிசு பெற்றுவந்தீர்கள் என்று கேட்கின்றார். (வீட்டினுள் இருந்தபடியால் கவி வாங்கிய ‘யானை’ பரிசினை அறியவில்லை. கவிக்கு, நேரடியாக மனைவியிடம் ‘வேறு எந்தப் பரிசும் இல்லை, யானை மட்டுமே பரிசாகக் கொடுத்தார்கள்’ என்று சொல்லி மனம் நோகச் செய்ய விருப்பம் இல்லை. ஆகையால், வெளியில் இருந்தபடியே யானைக்கு உண்டான தமிழில் உள்ள பல்வேறு சொற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குகின்றார். அந்தச் சொல்லுக்கு மதிமிகு மனைவி வேறு பொருள் கொண்டு பதிலிறுக்கின்றார்.
இம்பர்வான் எல்லை இராமனையே பாடி என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி வம்பதாம் களபமென்றேன் பூசுமென்றாள் மாதங்க மென்றேன் நாம் வாழ்ந்தேம் என்றாள் பம்புசீர் வேழமென்றேன் தின்னும் என்றாள் பகடென்றேன் உழும் என்றாள் பழனம் தன்னை கம்பமா என்றேன் நல் களியாம் என்றாள் கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே!" *** கவி மனைவி : வள்ளல் ராமனைப் பாடி என்ன கொணர்ந்தீர்கள் ? கவி : வம்பதாம் களபம் (சீதக்களப செந்தாமரை – விநாயகர் அகவல். களபம் என்றால் யானை) கவி மனைவி : (களபம் – கந்தம் - சந்தனம் என்று பொருள் கொண்டு) மேனியில் பூசிக்கொள்ளுங்கள் கவி : மாதங்கம் (யானை – இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்) கவி மனைவி : பெரும் அளவிலான தங்க நகைகளோ ? (மா – பெரிய) கவி : பம்புசீர் வேழம் (நற்குணமுடைய யானை) கவி மனைவி : (கரும்பு என்று பொருள் கொண்டு) சாப்பிடுங்கள் கவி : பகடு கவி மனைவி : (எருமைக்கடா எனப் பொருள் கொண்டு) வயல்வெளிகளை வளம் செய்ய பயன்படுத்துவோம் கவி : கம்ப மா (எப்பொழுதும் அசைந்து கொண்டேயிருக்கும் யானை) கவி மனைவி : (கம்பு எனும் தானியத்தில் செய்யப்பட்ட மாவு எனப் பொருள் கொண்டு) களி செய்ய உதவும் கவி : கைம்மா (தும்பிக்கை எனும் கையை உடைய விலங்கு) கவி மனைவிக்கு இதற்கு மேல் உரைக்க வார்த்தை ஏதும் இல்லை. யானையைத் தான் கவி சொல்லுகின்றார் என்று அறிந்து கலங்கிவிட்டாள் என்று பாடல் விளக்குகின்றது. இவர் பல சந்தர்ப்பங்களில் பாடிய பாடல்கள், இவரின் தமிழ் அறிவையும், புராணங்களில் உள்ள புலமையையும், நகைச்சுவை உணர்வையும் பறை சாற்றுகின்றன.
இவரைப் பற்றி சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் பலர் பாராட்டிப் பாடியிருக்கின்றார்கள்.
அவர்களில் ஒருவர், தமிழில் கந்தபுராணம் எழுதிய ‘கச்சியப்ப சிவாச்சாரியார்’
பொங்குதமிழ் ... ... இங்கொருவன் பலகலை மானெய்திடப்போய் கவியினால் இசை பெற்றானே என்று பாராட்டியிருக்கின்றார்.
இவர் எழுதிய நூல்கள் : திருக்கழுக்குன்ற புராணம், சேயூர்க் கலம்பகம், திருவாரூர் உலா முதலானவை.
இவர் பல காலம் பா(pa)ரினில் வாழ்ந்து, பார்வையற்று இருந்தாலும், பாடல் திறமையால் பாராட்டுக்களைப் பெற்றார்.
இவர் சிவபதம் அடைந்ததைக் கேட்டு, அன்றைய கயிற்றாரு அரசன் முதல் பலர் இரங்கற்பா எழுதி அவரைச் சிறப்பித்துள்ளனர். (அபிதான சிந்தாமணி)
- நி.த. நடராஜ தீக்ஷிதர் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர் Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com Mobile : 94434 79572 & 93626 09299 www.facebook.com/deekshidhar
பி.கு. : சென்ற வருடத்தில் எழுதப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் காண (கடந்த 2010ல் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.) க்ளிக் செய்யுங்கள்.

7 comments:

Anonymous said...

வழக்கம் போல் பதிவு அருமை.ஆன்மீகம் மட்டும் இன்றி சகல துறைகளிலும் விளையாடுகிறீர்கள்.வாழ்த்துக்கள்

geethasmbsvm6 said...

தனிப்பாடல் திரட்டிலே ஏற்கெனவே படிச்சிருக்கேன் என்றாலும் அருமையான தகவல் தொகுப்பு. நன்றி.

geethasmbsvm6 said...

தொடர

K.SENGOTTUVELAN said...

SIR,

THIS ARTICLE IS ALSO A NICE ONE. THANK YOU.

இராஜராஜேஸ்வரி said...

அற்புதமான பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

நவீன கால விஞ்ஞானத்தை நமது ஆன்மிக வளர்ச்சிக்கு உபயோகிப்பதை நினைத்து மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்...மிக நன்று

சார்வாகன் said...

நன்றி.