Sunday, November 7, 2010

ஸ்கந்த சஷ்டி

திருமுருகாற்றுப்படை * ஸ்கந்த சஷ்டி (02.11.2019 - சனிக் கிழமை)


முருகன். அழகன். தமிழ்க் கடவுள். குமரன். ஆறுமுகன். ஸ்கந்தன்.
முருகனையே முழு முதற்கடவுளாக வணங்க செய்யும் வகை கௌமாரம் ஆகும்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை அக்னி பகவான் கங்கையில் விட, கங்கை சரவணப்பொய்கையில் விட, அந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக, அந்த ஆறு குழந்தைகளுக்கும் கிருத்திகை முதலான நக்ஷத்ர தேவதைகள் பாலூட்ட, பார்வதி தேவியானவள் அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஸ்கந்தர் ஆக்கினள். (ஸ்கந்தம் என்பதற்கு சேர்த்தல் என்று பொருள்).

முருகப்பெருமான் ஆறுமுகமும், பன்னிரு தோள்களும் கொண்டு, படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாவிடம் பிரணவத்திற்குப் பொருள் கேட்க, அவர் அதை அறியாததால், பிரம்மாவை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார்.

சிவபெருமான், முருகப் பெருமானிடம் பிரணவப் பொருள் கேட்டு உணர்ந்தார். பிரணவத்தை தந்தைக்கே உபதேசம் செய்தார். முருகப்பெருமான், அறிவிற்கும் - வயதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உலகிற்கு உணர்த்தியவர்.
வேத மந்திரங்களில் ஓம் எனத் தொடங்கி ஓம் என முடியுமாறு இரண்டு தெய்வங்களுக்கு மட்டுமே அமைந்துள்ளன.

ஒன்று, 'ஓம் ஈசான .... ஸதாசிவோம்' என்று அமைந்த, ஓங்காரத்தின் விளக்கத்தை முருகப் பெருமானிடமிருந்து கேட்டறிந்த சிவபெருமானுக்கு உரியது.
மற்றொன்று, 'ஓம் குமாரஸ்சித் பிதரம் .... ஸுப்ரஹ்மண்யோம்' என்று அமைந்த பிரணவத்தை உபதேசித்த முருகப் பெருமானுக்கு உரியது.
தேவர்களை வருத்திய சூரன் எனும் அரக்கனை தன் படைகள் கொண்டு வதம் செய்தவர். அதுவே சூரஸம்ஹாரம். ஐப்பசி மாத வளர்பிறை ஆறாவது தினமாகிய ஸ்கந்த சஷ்டி அன்று முருகப் பெருமானுக்கு மிக உகந்த நன்னாள். அசுரரை வதம் செய்த, எதிர்ப்புகளை நீக்கிய, மகிழ்வை அளித்த பொன்னாள். முருகனை வழிபட்டால் முன்வினைகள் நீங்கி முழுமையான வாழ்வு கிட்டும்.

தமிழ்க் கடவுளாக போற்றப்படுபவர் முருகப் பெருமான். தமிழ்ச் சங்கத்தினை காத்தருளிய கடவுள். காலக்கணக்கின் படி, நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் நூல்களை வகைப்படுத்திப் பார்த்தோமானால், சங்க இலக்கியங்களே முதல் வரிசையில் இருக்கின்றது. (சங்க இலக்கியங்களுக்கு முன்னதான - குமரிக்கண்டம், பஃறுளியாறு காலத்திய - இலக்கியங்கள் கடல் கொண்டதாக தமிழறிஞர்கள் கூறுகின்றனர்.)

சங்க இலக்கியங்களில் உள்ள அறநானூறு மற்றும் புறநானூறு போன்றவை காதல், வீரம், அறம் போன்றவற்றை இயம்பினாலும், தனிப்பட்ட முறையில் ஒரு தெய்வத்தினை போற்றி வழிபடும் வகையில் அமையவில்லை.

சங்க இலக்கியங்களுக்கு அடுத்தபடியாக, தமிழ் இலக்கிய கால வரிசையில் அமைவது பத்துப்பாட்டு எனும் தொகுப்பாகும்.
அவை,
1. திருமுருகாற்றுப்படை, 2.குறிஞ்சிப் பாட்டு, 3.மலைபடுகடாம், 4. மதுரைக் காஞ்சி, 5. முல்லைப்பாட்டு, 6. நெடுநல்வாடை, 7. பட்டினப் பாலை, 8. பெரும்பாணாற்றுப்படை, 9.பொருநராற்றுப்படை, 10.சிறுபாணாற்றுப்படை
தமிழன்னையின் நெற்றிப் பொட்டு போல அமைந்தது பத்துப்பாட்டில் முதன்மையானதாக அமைவது திருமுருகாற்றுப்படை ஆகும். இந்தப் பத்துப்பாட்டு தொகுப்பிற்கும் கடவுள் வாழ்த்து போலவும் அமைந்திருக்கின்றது.

நக்கீரர் இயற்றியது திருமுருகாற்றுப்படை. தமிழிலக்கியத்தின், முதல் தனிப்பட்ட தெய்வத்தினைப் போற்றி அமைந்த தன்னிகரற்ற திருமுருகாற்றுப்படை - முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளைப் போற்றிச் சொல்வதாக அமைந்தது.

தமிழிலக்கியத்தின் முதல் காவியமாக, தமிழ்க் கடவுளான முருகனைப் பற்றி அமைந்திருப்பது என்னே பொருத்தமாக அமைந்துள்ளது !

சங்க இலக்கியங்களில் மிக முக்கியமான இலக்கியமாக விளங்குவது ஆற்றுப்படை என்பதாகும். (ஆறு – வழி, படை - காட்டுதல் = தெய்வத்திடம் வழிகாட்டும் பாடல்கள், அதாவது தான் பெற்ற இன்பத்தை மற்றோரும் பெறச்செய்யல்).

தமிழ்க் கடவுளான முருகனின் அருள் பெற்ற ஒரு புலவன், கந்தனருள் பெற விரும்புபவருக்கு நல்வழி காட்டும் வகையில் அமைந்தது.

திருப்பரங்குன்றம், பழமுதிர்ச் சோலை தலங்களின் இயற்கை வளம், முருகன் உருவச் சிறப்பு, ஊர்திகள், மாலைகள், கொடிகள் பற்றிய செய்திகளுடன் அமைந்துள்ளது. திருமுருகாற்றுப்படை, சுவாமிமலை முருகன் ஆலயத்தில் அர்ச்சகர் ஈரமான ஆடையுடன் மிக ஆசாரமாக பூசைகள் புரியும், வரலாற்றுச் செய்திகளைக் கூறுகிறது.

இந்நூலின் சிறப்பை "பத்துப்பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவரோ, எத்துணையும் பொருட்கிசையும், இலக்கணமில் கற்பனையே" என மனோன்மணியமும், "மூத்தோர் பாடியருள் பத்துப்பாட்டு" என தமிழ் விடு தூதும் போற்றுகின்றன.

பண்டை இலக்கியமான இதில், திருவேரகம், பழமுதிர்ச்சோலை போன்ற இடங்களில் உள்ள ஆலயங்கள் போற்றப் படுகின்றன. தமிழர்களின் தொன்று தொட்ட ஆன்மீக உணர்வை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது.

பழங்கால இலக்கியப் புலவரான நக்கீரர் ஒரு சமயம் தவத்திலிருந்த போது, அருகிலிருக்கும் சுனையிலிருந்து சலசலப்பு எழுந்தது. தவம் கலைந்து பார்த்தபோது, சுனையில் ஒரு வித்தியாசமான படைப்பாக, பறவையும், மீனும் இணைந்த பிணைப்பாக உருவைக்கண்டார். மீன் தான் வாழ, பறவையை நீருக்குள் இழுத்தது; பறவையோ தான் வாழ வானில் பறக்க சிறகடித்தது. இரண்டும் வெவ்வேறு வாழ்விடங்களைக் கொண்டவை. ஒன்று வாழ இன்னொன்று மடிய வேண்டிய படைப்பை கடவுள் படைத்தானே என்று எண்ணி, தவத்தை சிறிது மறந்தார்.

உடனே ஒரு பூதம், இவர் முன் தோன்றி, "இதைப் படைத்தது நானே, சிவ வழிபாட்டில் மனம் வேறானவர்கள் ஆயிரம் பேர்களை சிறைப் பிடித்து பலி கொடுக்கும் முயற்சியில் நீங்கள் ஆயிரமாவது மனிதர்" எனக் கூறி, நக்கீரரை சிறையில் அடைத்தது.

நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாட, முருகனின் வேல் வந்து இவருடன் சிறையிலிருந்த தவஞானியரையும் விடுவித்தது என்று புறப்பாடல் ஒன்று திருமுருகாற்றுப்படை தோன்றிய வரலாறைக் குறிக்கிறது.

திருமுருகாற்றுப்படையை படிப்பதனால் அறுபடை வீடுகளிலுள்ள முருகப் பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும். (திருமுருகாற்றுப்படை படிக்கவும், அதன் அர்த்தம் தெரிய விரும்பவும் அன்பர்கள் கீழ்க்கண்ட லிங்க் சென்று அறிந்து கொள்ளலாம்.  http://kaumaram.com/tmpadai/tmpadai01u.html

முருகப் பெருமானின் முழு திருவிளையாடல்களையும் அறிவிப்பது கந்தபுராணம் ஆகும்.

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஆதிசைவ குலத் தென்றல் ஆகிய கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றியது.

சிவபெருமான் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு 'தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என்றும், 63 நாயன்மார்களின் வரலாற்றைப் புகழும் பெரியபுராணம் எழுத சேக்கிழாருக்கு 'உலகெலாம்' என்றும் முதல் அடியெடுத்துக் கொடுத்தது போல,
முருகப் பெருமான் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு 'திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்று முதல் அடி எடுத்துக் கொடுக்க, கந்தபுராணம் முழுதும் எழுதப்பட்டது.

கந்தபுராணத்தை அரங்கேற்றும் செய்யும் நேரத்தில், திகடசக்கரம் என்ற முதல் வார்த்தையே தவறானது என்று அரங்கில் உள்ள ஆன்றோர்கள் ஆட்சேபம் தெரிவிக்க, திகைத்த கச்சியப்பர், முருகப் பெருமானை உளமார பிரார்த்திக்க, முருகப் பெருமான் ஒரு வேதியவர் வடிவில் வந்து, வீரசோழியம் எனும் தமிழிலக்கண நூலில் இருந்து, திகடசக்கரம் எனும் வார்த்தைக்கு திகழ் + தச + கரம் என பொருள் உரைக்க கந்தபுராணம் அரங்கேற்றப்பட்டு, உலகம்  முழுவதும் பரவியது. (திகழ் தச கரம் கொண்டவர் சிவபெருமான். ஐந்து தலைகளும், பத்து கரங்களும் கொண்ட சிவபெருமானின் மைந்தனாம் கந்தனின் வரலாற்றை உரைப்பது கந்தபுராணம்)

முருகப் பெருமான் ஒரு வரப்ரஸாதி.

"சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்" எனும் வழக்கு மொழிக்கு - சஷ்டி தினத்தில் விரதம் இருந்து முருகனை வழிபடும் மங்கையருக்கு, அகப்பையாகிய கருப்பையில் கரு வளர்ந்து வம்சம் விளங்கும் என்பது தான் முழு அர்த்தமாக விளங்கும்.

காவடிச் சிந்து எனும் பாடல் வகை முருகப் பெருமானுக்காகவே அமைந்தது.
முருகனைத் துதித்த 'வள்ளி கணவன் பேரை' பாடலை https://www.youtube.com/watch?v=zdZiGrEcBq0 லிங்க் சென்று  கேட்கலாம்.

அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய அற்புதமான காவடி சிந்து ஆகிய சென்னிகுல நகர் வாசன் எனத் தொடங்கும் பாடலை https://www.youtube.com/watch?v=BOzaOxeRKdE லிங்க் சென்று கேட்கலாம்.

முருகனை தரிசித்தால் கிடைக்கும் பலனை விவரிக்கும், கவி குஞ்சரபாரதி இயற்றிய  வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீ முத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ் பாடலின் கடைசி பாடல் :

பங்கயம் திகழ் தகு சரவணைப் பொய்கை மூழ்கில் பவத்திருளை நீக்கி வைக்கும்
படியில் நின் கிரியை பிரதட்சிணம் செய்திடில் பாக்கியங்கள் வந்தடுக்கும்
துங்கமிகு நின் பாத சேவை செய்வோர் மனத்துயரங்கள் தனை அகற்றும்
துய்ய வெண்பொடி நுதலில் இட்டிடில் பிரபஞ்ச தோஷ சங்கைகள் பறக்கும்
தங்கு கிருத்திகை விரதம் உற்றவர்கள்பால் பிணிகள் சற்றும் அணுகாது காக்கும்
சஷ்டி விரதம் ஓம்பும் மலடிக்கு உன்னருள் புத்திர சந்ததி தனைக் கொடுக்கும்
மங்கல கல்யாண சுகுணங்கள் என் சொல்லுகேன் மோகவள்ளி குஞ்சரி மணாளா
வனசமலரயன் மதனையருள் சரச கோபால மருக சரவண முருகனே.
(இதன் ஆடியோ மிக விரைவில் இப்பக்கத்திலேயே வலையேற்ற உள்ளோம்.)

முருகன் திருவடியைப் போற்றுவோம்!

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
http://natarajadeekshidhar.blogsopt.in
- mail : yanthralaya@gmail.com
cell : 94434 79572, 93626 09299.
www.facebook.com/deekshidhar

11 comments:

Anonymous said...

சரியான நேரத்தில் தமிழ் கடவுளான முருகப்பெருமானைப் பற்றிய பெருமைகளை விளக்கும் பதிவு.பதிவுக்கும் கருத்துக்கும் நன்றி

S.Muruganandam said...

//வேத மந்திரங்களில் ஓம் எனத் தொடங்கி ஓம் என முடியுமாறு இரண்டு தெய்வங்களுக்கு மட்டுமே அமைந்துள்ளன.
ஒன்று, 'ஓம் ஈசான .... ஸதாசிவோம்' என்று அமைந்த, ஓங்காரத்தின் விளக்கத்தை முருகப் பெருமானிடமிருந்து கேட்டறிந்த சிவபெருமானுக்கு உரியது.
மற்றொன்று, 'ஓம் குமாரஸ்சித் பிதரம் .... ஸுப்ரஹ்மண்யோம்' என்று அமைந்த பிரணவத்தை உபதேசித்த முருகப் பெருமானுக்கு உரியது//

இது போன்று பல அரிய தகவல்களைத் தருகின்றீர்கள் ஐயா மிக்க நன்றி. கந்தர் சஷ்டி வாழ்த்துக்கள். கந்தன் கருணை அனைவரையும் காக்கட்டும்.

ர.செல்வராணி said...

மிக அருமையான பதிவு. வேல்மாறல் பற்றியும் தெரிவித்தால் மிக நன்றாக இருக்கும்.

Geetha Sambasivam said...

அருமையான பதிவு. ஆறு படை வீடுகளையும், அதற்கு உரிய ஆறு ஆதாரங்கள் குறித்தும் விளக்கம் வருமா?

geethasmbsvm6 said...

ஏற்கெனவே கேட்டபடி அறுபடை வீடுகள், அவற்றுக்கான ஆதாரங்கள் குறித்தும் விளக்கவும். நன்றி பகிர்வுக்கு.

Anonymous said...

Jai sri matha

very satisfied me

siva chidambaram

Geetha Sambasivam said...

முடிஞ்சப்போ மறுபடியும் எழுத ஆரம்பிங்க. :))))

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன ?
ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு
ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம் (8 எழுத்து) ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.
ஓம் நம: ஸரவணபவாய என்பது குஹ தசாக்ஷரம் (10 எழுத்து).
ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம் (12 எழுத்து).
வடமொழியில் பீஜாக்ஷர மந்திரத்தில் அக்ஷரம் இரண்டு தடவை வரக் கூடாது என்பர். ஆகவே வடமொழியில் சரவணபவ என்பது ஷடாக்ஷரம். ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.
திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்
பழனி - மணிபூரகம்
சுவாமிமலை - அனாஹதம்
திருத்தணிகை - விசுத்தி
பழமுதிர்சோலை - ஆக்ஞை.
ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம்.
Thanks to: lakshmikanthan shankar

Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன் said...

பணத்தை நோக்கிய பயணம் செய்யும் மானிடப்பிறவியில், எந்த பிரதிபலனும் பாராமல் இப்படி சேவை செய்யும் தங்களை போன்றவர்களால்தான் இன்னும் இந்துமதம் வாழ்கிறது. வாழ்க நீங்கள், தொடரட்டும் தங்களின் சீறிய பணி

Geetha Sambasivam said...

thanks for sharing.

Unknown said...

Excellent write-up.A few lines about 'thiruppukaz' will add its glory.

Ramachandran C