Thursday, July 1, 2010

காளியின் அருள்பெற்ற காளிதாசன் (பகுதி - 2)

காளியின் அருள்பெற்ற காளிதாசன் (பகுதி - 2)
கோவிந்தன் கேட்ட கீதம்
(கீத கோவிந்தம் (அ) ஜெயதேவரின் அஷ்டபதி)

காளிதாசன், காளியின் கருணையினால் அளவற்ற அறிவாற்றல் பெற்று, மொழியின் மீது தம் ஆளுமையைச் செலுத்தி, பல அற்புதமான காவியங்களை இயற்றினார்.அவை ஒவ்வொன்றும் தன்னிகரில்லாதவை. வடமொழி அன்னைக்கு கவிரத்ன காளிதாசன் இயற்றியவை விலைமதிப்பில்லாத ரத்தின ஆபரணங்களாக அமைந்தன.
குமாரசம்பவம், மாளவிகாக்னிமித்ரம், மேக தூதம் போன்ற காவியங்கள் காளிதாசனால் இயற்றப்பட்டன.
ஒரு சமயம், போஜராஜன் 'அறிவிற்சிறந்த புலவர் யாவர், விரல் மடக்குங்கள் பார்க்கலாம்' எனக் கேட்டார். அப்பொழுது அனைவரும் கையின் சுண்டுவிரலை மடக்கி, காளிதாசன் என்றனர். அடுத்த விரலை மடக்கி மற்றொருவரின் பெயர் சொல்ல எவருக்கும் தெரியவில்லை. எல்லோரும் காளிதாசன்...... என்று இழுத்து, அடுத்த பெயர் தெரிவிக்க முடியவில்லையே என்றனர்.
அதனால் தான், மோதிர விரலுக்கு "அநாமிகா" என்ற பெயர் வந்தது. (கட்டை விரல் - அங்குஷ்டம், ஆட்காட்டி விரல் - தர்ஜனீ, நடுவிரல் - மத்யமம், மோதிர விரல் - அநாமிகம், சுண்டுவிரல் - கனிஷ்டிகம்) அந்த அளவிற்கு காளிதாசன் அறிவிற்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
காளிதாசன், சாகுந்தலம் என்னும் அற்புத காவியத்தை அமைத்தார். அக்காவியம் துஷ்யந்தன் - சகுந்தலை - பரதன் - விஸ்வாமித்திரர் என்ற பாத்திரங்களோடு அமையும்.
இக்காவியம் பற்பல சிறப்பம்சங்களைக் கொண்டது. உபமா காளிதாஸஸ்ய என்றபடி, உவமைகளின் மேன்மைகளால் சாகுந்தலத்தை உருவாக்கியிருக்கின்றார்.
தனது மேதமைத் தன்மை அனைத்தையும் சாகுந்தலத்தில் வார்த்திருப்பார். அக்காவியத்தில் ஒரு வார்த்தையை எடுத்து மறு வார்த்தையை செருக முடியாதபடி அமைத்திருப்பார்.
(ஒரு சிறு அருமையான உதாரணம் : சகுந்தலையைப் பார்த்த கணத்தில், துஷ்யந்தன் சொல்கிறான், 'மான் வேட்டையாட வந்தேன், மான் (சகுந்தலை) கண்ணில் பட்டது, அந்த மான் விரித்த கண்ணியில் (வலை) சிக்கிக்கொண்டு, மீள முடியாமல் இருக்கின்றேன்.')
சாகுந்தலம் எனும் அற்புதக் காவியத்தை போஜ ராஜன் அரசவையில் காளிதாசன் அரங்கேற்றினார். அவையிலிருந்த ஒவ்வொருவரும் அற்புத காவியமான சாகுந்தலத்தைப் போற்றினர். காளிதாசனின் மேதமைத் தன்மையை வியந்தனர்.
களைப்புடனும், அனைவரும் வாழ்த்தியதால் ஏற்பட்ட சற்றே கர்வத்துடனும் இரவு இல்லம் வந்து சேர்ந்தார். ஓய்வு எடுக்கும் நேரத்தில் இளம் வயதை ஒத்த ஒருவன் காளிதாசன் இல்லம் வந்தான். வந்தவன், காளிதாசனையும், சாகுந்தலத்தையும் போற்றிப் புகழ்ந்தான். 'அவையில் தான் அனைவரும் புகழ்ந்தனரே, ஏன் அப்பொழுதே இப்புகழ்ச்சியை சொல்லவில்லை' எனக் கேட்டார் காளிதாசன். 'வயதில் சிறியவனான என்னை உங்களை வாழ்த்த அனுமதிப்பார்களா என்பதால் அரசவையில் சொல்ல இயலவில்லை. ஆகையாலே இங்கு வந்தேன்'.
சரி, மேலே என்ன சொல்லப் போகிறான் என்ற எண்ணத்தில் காளிதாசன் வந்தவனை நோக்க, அவன் 'சாகுந்தலம் அற்புத காவியம் தான். ஆனால், தாங்கள் இயற்றிய குமாரசம்பவம் போன்றெல்லாம் சாகுந்தலம் அமையவில்லை, அதிலே குறை இருக்கின்றது' என்று சொல்ல காளிதாசன் பெரும் அதிர்ச்சியும் கோபமும் கொண்டார்.
அறிவிற்சிறந்த நவரத்தினங்கள் அடங்கிய புலவர் குழுவே எந்தக் குறையும் சொல்லவில்லை. இந்தச் சிறியவன் குறை சொல்கிறானே என்று கோபம் கொண்டார்.
அவனை நோக்கி காளிதாசன் எந்த விதத்தில் குற்றம் கண்டுபிடித்தாய் எனக் கேட்க, இளைஞன் 'சாகுந்தலம் அற்புதமான காதல் காவியம் தான். ஆனால், தங்கள் குமாரசம்பவம் காவியத்தில், இந்த ஸ்லோகம் சொன்னால் இந்த பலன் உண்டு என்பது போன்று பலஸ்துதிகள் அமைந்திருந்தன. ஆனால் சாகுந்தலத்தில் அப்படியொரு அருமையான பகுதி இல்லாமல் போய்விட்டது. சாகுந்தலத்தைப் படித்ததால் கிடைக்கக் கூடிய தெய்வ பலன் என்ன' என்று கேட்க, மேலும் அதிர்ந்து அமைதியானார்.
வந்தவன் சொன்னதில் உண்மை இருக்கின்றது என்று அறிந்து அவன் அறிவிற்சிறந்தவன் என்று தெரிந்துகொண்டு, காளிதாசன் 'இதற்கு மேல் நான் என்ன செய்யவேண்டும்' என்று கேட்டார்.
அதற்கு வந்தவனோ, மயக்கும் சிரிப்புடன் 'இதுவரை பல தெய்வங்களைப் போற்றி காவியங்கள் எழுதிவிட்டீர்கள். ஆனால், கிருஷ்ணரைப் போற்றி எதுவும் தாங்கள் இயற்றவில்லை. ஆகையால், சாகுந்தலத்திற்கு பிராயச்சித்தமாக கிருஷ்ணரைப் பற்றி ஏதேனும் எழுதுங்கள்' என்றான்.
அதற்கு காளிதாசன், 'சாகுந்தலத்திற்காக என் அனைத்து திறமைகளையும் கொட்டிவிட்டேன். என்னால் இப்பொழுது எதையும் சிந்திக்க இயலவில்லை. கிருஷ்ணரைப் பற்றி நீ சொல்லிய காரணத்தினால், கிருஷ்ணரைப் பற்றி எழுத நீயே ஒரு அடியெடுத்துக் கொடு, அதற்கு மேல் நான் எழுதுகின்றேன்' என்று கேட்டார்.
அதன்படியே, வந்தவன் ஒரு அடியெடுத்துக் கொடுத்தான். காளிதாசனை மறுபடியும் போற்றிவிட்டு கிளம்பிவிட்டான்.
காளிதாசன், இரவு முழுதும், அந்த வரியைத் தவிர மேற்கொண்டு எதுவும் எழுத முடியாமல், அதிகாலைப் பொழுதில் வந்தவனைத் தேட, அவன் தண்டி எனும் புலவர் குடிலில் இருப்பதாக அறிந்து, தண்டியின் ஆசிரமத்திற்குச் செல்ல, தண்டி தூங்கிக் கொண்டிருக்க, அவரின் கால்களைப் பிடித்து பணிவிடைகள் செய்து கொண்டிருந்தவன் தான் நேற்று இரவு தன்னிடம் வந்தவன் என அறிந்து மகிழ்வு கொண்டார்.
காளிதாசன் வருகையை உணர்ந்த தண்டி எழுந்து வரவேற்றார். தண்டியிடம் முதல் நாள் இரவு நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் காளிதாசன் சொன்னார். தண்டி, தன் அருகிருந்த இளைஞனைச் சுட்டிக்காட்டி, 'என் சிஷ்யன் என்னை விட்டு நேற்று மாலை முதல் பிரியவில்லையே. நேற்று மாலை முதல் எனக்கல்லவா பணிவிடைகள் செய்தான்' என்றும் தன் சிஷ்யனை நோக்கி 'நீ காளிதாசனின் இல்லம் சென்றாயா' என்று கேட்க, இளைஞன் 'இல்லை. குருவாகிய தங்களுக்கு பணிவிடை செய்வதே என் லட்சியம். நேற்று மாலை முதல் நான் வழிபடும் கிருஷ்ணர் மீது ஆணையாக, உங்களை விட்டு நான் பிரியவேயில்லை' என்று கூறினான்.
தண்டி, 'என் சிஷ்யன் மிகச் சிறந்த பக்திமான். பொய் சொல்லமாட்டான், கிருஷ்ணர் மேல் அளவற்ற பக்தி கொண்டவன்' என்று உரைக்க காளிதாசன் மேலும் குழப்பம் அடைந்தார்.
அப்போழுது அருகிலிருந்த கிருஷ்ணர் கோயில் மணி எழும்ப, காளிதாசனின் முகத்தில் பிரகாசம் ஏற்பட்டது.

நேற்று இரவு தன்னிடம் வந்தது, தண்டியின் சிஷ்யன் வடிவில் கிருஷ்ணனே வந்தான் என்று அறிந்து புளகாங்கிதம் கொண்டார்.எந்தளவுக்கு கிருஷ்ணன் மீது அந்த இளைஞன் பக்தி கொண்டிருப்பான், ஆகையாலேயே அவன் வடிவாகவே தன்னிடம் கிருஷ்ணன் வந்தான், எனவே நேற்று இரவு கண்ணன் வடிவில் வந்த இளைஞன் எடுத்துக் கொடுத்த அடியை (வாக்கியத்தை) தண்டியின் சிஷ்யனிடமே கொடுத்து, நீயே இந்த அடியைத் தொடர்ந்து ஒரு அற்புத காவியம் இயற்றவேண்டும் என்று வாழ்த்திச் சென்றார்.
அந்த சிஷ்யனும் கண்களில் கண்ணீர் மல்க, கிருஷ்ணன் அடியெடுத்துக் கொடுத்ததைத் தொடர்ந்து ஒரு அற்புதக் காவியம் செய்தான்.
அதுவே, ஸ்ரீ ராதா மாதவ கல்யாணம், பஜனைகள் போன்றவற்றில் முதன்மையாகப் பாடப்படும் "அஷ்டபதி" அல்லது "கீத கோவிந்தம்" (இக்கட்டுரையின் தலைப்பைக் காணுங்கள்) என போற்றப்படுகின்றது.
அந்த இளைஞன் தான் கிருஷ்ணபக்தியில் சிறந்த ஜெயதேவர்.
ஜெயதேவரின் 'அஷ்டபதி' அல்லது 'கீத கோவிந்தம்' சிருங்கார ரசம் ததும்பும் வடமொழிப் பாடல்கள். நாயகன், நாயகி பாவனையில் அற்புதமாக புனையப்பட்டது. கண்ணனை அடைய நாயகியானவள் சொல்வது போல அமைந்தவை. மிக அருமையான அர்த்தங்கள் கொண்டவை.
(கண்ணனை நினைந்து ஏங்குகின்றாள் ராதை, ஏங்கியதால் இடை மெலிந்தாள் பேதை, இடையில் அணிந்த அணிகலன் கனம் கூட தாங்காமல் மயங்கினாள் கோதை)
தமிழில் கோதை ஆண்டாள் இயற்றியவையும், ஜெயதேவர் வடமொழியில் இயற்றிய அஷ்டபதியும் மொழி ஆய்வாளர்கள் ஒப்புற நோக்க விரும்புகின்றார்கள்.
இரண்டிலும் கண்ணனை அடையும் வழியை ஒரு பெண் எனும் கோணத்தில் நின்று சொல்லப்பட்டவை. (ஆண்டாளைப் பற்றி மேலும் அறிய கூடாரைவல்லி எனும் அடியேன் எழுதிய பதிவைக் காணவும்.)

சரி, இனி காளிதாசனிடம் வருவோம்.

காளிதாசன் போஜராஜனின் அரசவையை அலங்கரிக்கும் நவரத்தினங்களில் ஒருவர். போஜனுக்கும் காளிதாசனுக்கும் இடையே ஒரு அற்புத உறவு உண்டு. இருவரும் இணை பிரியவே மாட்டார்கள். இருவரும் மேதமை படைத்தவர்கள்.
ஆயினும், சில சமயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்துவிடும். அச்சமயங்களில் காளிதாசர் போஜனை விட்டுப் பிரிந்து எங்கேயேனும் சென்றுவிடுவார். தான் காளிதாசன் என்பதை எவருக்கும் தெரிவிக்காமல் வாழ்வார்.
பிரிவுத் துயர் தாங்கமாட்டாத போஜராஜன் அவரைக் கண்டுபிடிக்க, தான் எழுதிய கேள்வியை மக்களிடம் பறைசாற்றச் சொல்லி, மக்களில் எவரேனும் பதில் சொன்னால் பரிசுகள் உண்டு என அறிவிப்பான். (காளிதாசனை சிலர் மட்டுமே அறிவார்கள். படை வீரர்கள் அனைவரும் அவரை அறிந்திருக்க முடியாது) பதில் மிக நிச்சயமாக காளிதாசன் மட்டுமே அறிவார். இருவரின் மனோ நிலை சரிசமமாக இருந்தது. பதில் கூறியவரை (காளிதாசனை) வீரர்கள் போஜனிடம் அழைத்துச் செல்வார்கள். காளிதாசனும் பரிசுகள் பெற்று வாழ்ந்து வந்தார்.
ஒரு சமயம் வழக்கம் போல போஜனுக்கும், காளிதாசனுக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரிகின்றனர்.
காளிதாசன் போஜனின் நாட்டிலுள்ள கிராமத்தில் தாசி ஒருத்தியின் வீட்டில், தான் ஒரு சாதாரண புலவர் என சொல்லிக் கொண்டு வசித்துவருகின்றார்.
போஜராஜன் வழக்கம்போல, ஒரு கேள்வியை, மக்களிடம் பறை சாற்றச் சொன்னான்.
பறை சாற்றுபவனும் கேள்வியைச் சொல்லி, இதற்கு பதில் அளிப்போருக்கு மன்னர் பெரு வெகுமதி அளிக்க இருக்கின்றார் என்று சொல்கின்றான்.
அச்சமயம், தாசியும் இந்த செய்தியைக் கேட்டு, காளிதாசனிடம் வந்து, 'நீங்கள் ஏதோ புலவர் என்றீர்களே, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்' என்றாள்.
காளிதாசனும் உடனடியாக, பதிலை ஸ்லோக வடிவில் சொல்கின்றார். தாசி நன்றாகக் கேட்டுக்கொள்கிறாள்.
தாசி தான் அரசனிடம் சொல்வதற்குள், இந்தப் புலவன் (காளிதாசன்) சென்று மன்னனிடம் வெகுமதி வாங்கிவிடக் கூடாது என எண்ணி, ஒரு கொடும் பாதகச் செயல் புரிகின்றாள்.
எவருக்கும் தெரியாமல், நயவஞ்சகமாக, காளிதாசன் கழுத்தை வெட்டிவிடுகின்றாள். காளிதாசனின் உயிர் பிரிகின்றது.
தாசியும் அரசவை வந்து போஜனிடம் காளிதாசன் சொன்ன இரு வரிகளைச் சொல்கின்றாள். மன்னன் அதிர்ந்தே போகின்றான். போஜன் தாசியிடம் வேறு எதுவும் கேட்காமல் 'இந்த பதிலைச் சொன்னவனை உயிருடன் வைத்திருக்கின்றாயா அல்லது கொன்றுவிட்டாயா?' என்று கேட்கிறான். தாசி உண்மையை உரைக்கின்றாள்.
{அந்த கேள்வியும், பதிலும் : போஜன் கேட்டது : “குஸுமே குஸுமோத்பத்தி. ச்ரூயதே நச த்ருச்யதே(பூவின் மேல் பூ மலரும் என்பார்கள். ஆனால் பார்த்ததில்லையே? - பூவின் மேல் பூ மலர்ந்ததை யாரேனும் பார்த்திருக்கின்றீர்களா?)
காளிதாசன் இதற்கு மறுமொழியாக அந்த தாசியின் முகம் பார்த்து, "பாலே தவ முகாம்போஜத்ருஷ்டம் இந்தீவரத்வயம்" (பெண்ணே! உன் முகம் எனும் தாமரைப் பூவின் மேல் இரண்டு நீலோத்பலம் (இரண்டு நீல விழிகள்) பூத்திருக்கின்றதே - பூவின் மேல் பூப்பூத்திருபதைப் பார்க்கின்றேனே உன் முகத்தின் வடிவத்தில்)

தாசியோ கல்வியறிவு இல்லாதவள். காளிதாசன் சொன்னதை, அப்படியே போஜராஜனைப் பார்த்து, "பெண்ணே! உன் முகம் எனும் தாமரையில் இரண்டு நீலோத்பலம் பூத்ததைப் போல இரு விழிகள் இருக்கின்றன" என்று சொன்னால், போஜன் நடந்ததைப் புரிந்துகொள்ளாமல் இருப்பானோ?}

போஜன், நெஞ்சமெல்லாம் கனக்க விரைந்து காளிதாசன் இருக்கும் இடம் வருகின்றான். போஜனிடம் ஒரு வரம் உண்டு. ஒரே ஒரு முறை இறந்தவர் ஒருவரை ஒரு முகூர்த்த நேரம் பிழைக்க வைக்க முடியும். அந்த வரத்தை காளிதாசனிடம் செயல்படுத்துகின்றான்.
காளிதாசனும் பிழைத்து, கவி நெஞ்சத்தோடு, 'நமக்கோ நேரம் மிகக் குறைவாக இருக்கின்றது. நான் எழுதிய 'ரகுவம்சம்' முடிக்கப்படாமல் இருக்கின்றது. அதற்கான குறிப்புகளைத் தருகின்றேன். அறிவில் வல்ல போஜனாகிய நீ, ரகுவம்சத்தை முடிப்பாயாக' என்று கூறி, குறிப்புகள் தந்து மடிகின்றார்.
கண்களில் நீர்வழிய, செயல்மறந்து, தம் உயிர்நண்பனை பிரிந்த துக்கத்தோடு திரும்புகின்றான்.
போஜராஜன், ரகுவம்சத்தின் பின் பகுதியை எழுதி முடிக்கின்றான். அதுவே போஜசம்பு என்றாகின்றது. (ரகுவம்சம் - ராமர் கதையோடு மட்டுமல்லாமல், ராமரின் முன்னோனாகிய ரகு என்பவரின் சரிதமும் கொண்டு, ராமருக்கு பின் வரும், ரகு வம்சத்தின் கடைசி (26வது) அரசனாகிய, அக்னிவர்ணன் என்பவனின் கதையோடு முடிகின்றது.)
உவமைக்கு ஒரு காளிதாசன் என்று ஏன் போற்றப்படுகிறான் என்பதற்கு ரகுவம்சத்தில் வரும் ஒரு பாடலில் உள்ள வசந்தகால வர்ணனையைப் பாருங்கள்.
மாமரத்தில் இளம் இலைகள் தோன்றி, வசந்தகால காற்றில் ஆடுவது, மரக்கிளை தனது இளம் இலைகள் எனும் விரல்களை அசைத்து காற்றை வரவேற்பதாகத் தோன்றுகின்றது. குயில்களின் இனிமையான குரல், வெட்கத்தால் இளம்பெண்கள் தம் காதலரிடம் மென்று விழுங்கிப் பேசுவது போல் இருக்கின்றது. மரங்களில் உள்ள மலர்களிடம் வண்டு வந்து ரீங்காரமிட்டு தேனை உறிஞ்சுகின்றது. இந்த ரீங்காரத்திற்கு தகுந்தாற்போல் காற்றில் மரங்கள் நடனம் புரிகின்றன.
காளிதாசனின் உவமைகளைப் பின்னாட்களில் பலரும் கையாண்டுகொண்டுதான் இருக்கின்றார்கள்.

காளிதாசன் வாழ்ந்த காலம் என்பது தெளிவுறத் தெரியாமல் போனாலும், அவரின் காவியங்கள் காலம் கடந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
- நி. த. நடராஜ தீக்ஷ¢தர்-
cell : 94434 79572-

11 comments:

gvsivam said...

நமஸ்காரம் தீக்ஷிதரே,
தங்கள் பதிவை இப்போதுதான் தரிசித்தேன்.தமிழில் இதுபோல் சத்விஷயங்களை எழுதும் பிளாக்கர் இருப்பது ஆஸ்சர்யமே!.பழைய இடுகைகளையும் படித்தேன்.மிக அருமை.சாக்தம் பற்றி அதிகம் எழுதுங்கள்.ஆன்மீகத்தில் மக்கள் கொன்டுள்ள பல மூட நம்பிக்கைகளை களையுங்கள்.பக்தர்களை உண்மையான ஆன்மீகப் பாதையில் அழைத்துச்செல்வது நம் கடமையள்ளவா.

Anonymous said...

மிக அருமையான பதிவு.நான் தங்களிடம் கேட்டபடி சண்டீ ஹோமத்தின் 13 அத்யாய தேவதைகள் பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

ஆதிசைவருக்கும், ஆகமக்கடலுக்கும் நன்றிகள் பல.
விரைவில் 13 அத்தியாய தேவதைகள் பற்றி எழுதுகின்றேன்.
மீண்டும் நன்றிகள்.

Anonymous said...

என்னுடைய பிளாக்கில் எழுதியுள்ள குருப்பெயர்ச்சி தக்ஷிணாமூர்த்திக்கா? என்ற இடுகையை படித்தீர்களா?அது பற்றிய தங்கள் கருத்து.படிக்கலன்னா இதோ லிங்க்
http://aagamakadal.blogspot.com

Anonymous said...

என்னுடைய பிளாக்கில் எழுதியுள்ள குருப்பெயர்ச்சி தக்ஷிணாமூர்த்திக்கா? என்ற இடுகையை படித்தீர்களா?அது பற்றிய தங்கள் கருத்து.படிக்கலன்னா இதோ லிங்க்
http://aagamakadal.blogspot.com

Anonymous said...

arumaiyana pathivu!mika nandri

tamizhil karuthu pathivu seivathu epadi?

--Selvarani

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

ஆகமக் கடல்,
உங்கள் பதிவிலேயே மறுமொழியிட்டுவெட்டேன்.
நன்றி.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

செல்வராணி,
முரசு அஞ்சல், இ-கலப்பை போன்ற செயலிகள் தமிழில் பதிவிட வசதியாக இருக்கும்.
மேலும் விபரங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
94434 79572.
கருத்துக்கள் கூறியமைக்கு மிக்க நன்றி.

Geetha Sambasivam said...

அருமையான பதிவு வழக்கம்போல். ஜெயதேவரின் பூர்வ கதையை இப்போத் தான் தெரிஞ்சுண்டேன். காளிதாசனால் ரகுவம்சம் முடிக்கப்படவில்லை என்பது தெரியும், ஆனால் போஜனால் காளிதாசனின் குறிப்புகளால் எழுதப்பட்ட விஷயமும் போஜ சம்பு என்ற பெயர் அதுக்கு என்பதும் இப்போத் தான் தெரியும், நன்றி.

வழக்கம்போல் பதிவு கொஞ்சம் பெரிசு தான். கூடிய மட்டும் இரு பதிவுகளாகப் போட்டால் இளைய தலைமுறைக்குப் படிக்க வசதியாக இருக்கும். எல்லாரும் துரித உணவு, துரித வாழ்க்கை என்று இருக்கிறார்கள் அல்லவா? இது என் தனிப்பட்ட கருத்து. :D

N.D. NATARAJA DEEKSHIDHAR said...
This comment has been removed by the author.
Anonymous said...

கீதா சாம்பசிவம் has left a new comment on your post "காளியின் அருள்பெற்ற காளிதாசன் (பகுதி - 2)":

அருமையான பதிவு வழக்கம்போல். ஜெயதேவரின் பூர்வ கதையை இப்போத் தான் தெரிஞ்சுண்டேன். காளிதாசனால் ரகுவம்சம் முடிக்கப்படவில்லை என்பது தெரியும், ஆனால் போஜனால் காளிதாசனின் குறிப்புகளால் எழுதப்பட்ட விஷயமும் போஜ சம்பு என்ற பெயர் அதுக்கு என்பதும் இப்போத் தான் தெரியும், நன்றி.

வழக்கம்போல் பதிவு கொஞ்சம் பெரிசு தான். கூடிய மட்டும் இரு பதிவுகளாகப் போட்டால் இளைய தலைமுறைக்குப் படிக்க வசதியாக இருக்கும். எல்லாரும் துரித உணவு, துரித வாழ்க்கை என்று இருக்கிறார்கள் அல்லவா? இது என் தனிப்பட்ட கருத்து. :D