Monday, August 20, 2018

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தினுள் அமைந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ மாம்பழ விநாயகர், ஸ்ரீ நவக்ரஹம், ஸ்ரீ சட்டநாதர், ஸ்ரீ சங்கூதிப் பிள்ளையார், ஸ்ரீ அர்த்தஜாம அழகர் ஆகிய தெய்வங்களுக்கான அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்


சிதம்பரம் ஸ்ரீ  நடராஜர் ஆலயத்தினுள் அமைந்து அருள்பாலித்துவரும் 
ஸ்ரீ மாம்பழ விநாயகர், ஸ்ரீ நவக்ரஹம், ஸ்ரீ சட்டநாதர், ஸ்ரீ சங்கூதிப் பிள்ளையார், ஸ்ரீ அர்த்தஜாம அழகர் 
ஆகிய தெய்வங்களுக்கான 
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
***********************************
நாள் : விளம்பி வருஷம், ஆவணி மாதம் 14ம் தேதி, வியாழக் கிழமை, 
                        30.08.2018, ரேவதி நக்ஷத்திரம்,
நேரம் : காலை 8.15 மணிக்கு மேல் 09.00 மணிக்குள்
                    ***********************************
27.08.2018, மாலை முதல் கால யாகம், 
28.08.2018 காலை இரண்டாம் கால யாகம், மாலை மூன்றாம் கால யாகம், 29.08.2018 காலை, மதியம், மாலை முறையே நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் கால யாகம்.
30.08.2018 காலை 08.15 மணிக்கு மேல் 09.00 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறும்.
மாலை 07.00 மணிக்கு மஹாபிஷேகமும், 
இரவு ஸ்ரீ விநாயகர் மற்றும் சிற்ப சாஸ்த்ர முறைப்படி மிக அற்புதமாக மிக அழகாக உருவாக்கப்பட்ட பஞ்சலோக புதிய நவக்ரஹ விக்ரஹங்கள் வீதியுலா நடைபெறும்.
மேற்படி ஒவ்வொரு நிகழ்விலும் வேதபாராயணங்களும், திருமுறை பாராயணங்களும் மிகச் சிறப்பாக நடைபெறும்.
*******************************************************************************
சிதம்பரம்.
கோயில் என்றாலே பொருள்படுவது. ஆனந்த நடராஜராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது. சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தரும் ஸ்தலம். சிதம்பர ரகசியம் விளங்குவது. அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்றும் தலமாக விளங்குவது.
அனைத்து தெய்வங்களும் இந்த ஆலயத்தில் குடிகொண்டதாக சிதம்பர புராணங்கள் பகர்கின்றன. காசி அன்னபூரணி முதற்கொண்டு, சபரிமலை சாஸ்தா, திருக்கடையூர் காலஸம்ஹார மூர்த்தி  என பல தெய்வங்களின் சிலா ரூபங்கள் இங்கே அமையப் பெற்றிருக்கின்றன.
ஒரு தினத்தின் ஆறாவது காலமாகிய, இரவு 10 மணிக்கு நடைபெறும் அர்த்த ஜாம காலப் பொழுதில், அனைத்து தெய்வங்களின் தெய்வக்கலைகளும், சிதம்பர அம்பலவாணரிடம் சேர்ந்து, பிறகு காலை அங்கிருந்து செல்கின்றன என்று சிதம்பர புராணத்தினைப் புகழும் குஞ்சிதாங்கிரிஸ்தவம் எனும் நூலின் 175வது ஸ்லோகம் விவரிக்கின்றது. (ஆஸேதோ ... பஜேஹம்).
ஆகவே, பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தெய்வ வடிவங்கள் சிதம்பர ஆலயத்தில் காணப் பெறலாம்.
அவ்வகையில், சிறப்புப் பெற்ற வகையில் அமைந்திட்ட மேற்கண்ட ஆலயங்களுக்கு, மிகச் சிறப்பான முறையில் தில்லை வாழந்தணர்கள் என போற்றப்படும் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்ஷிதர்களால் நடத்தப்படவுள்ளது.
உலகம் செழுமை பெறும் வகையிலும், ஒற்றுமை ஓங்கி, மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டுதல்கள் செய்யப்பட உள்ளது.

































ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆலயத்தினுள் அமைந்து அருள்பாலித்து வருகின்ற, பொன்னம்பலத்தை ஒட்டிய பிரகாரத்தினை அடுத்துள்ள கிழக்குப் புறப் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மாம்பழ விநாயகர், ஸ்ரீ நவக்ரகங்கள், ஸ்ரீ சட்டைநாதர், ஸ்ரீ சங்கூதிப் பிள்ளையார், ஸ்ரீ அர்த்தஜாம அழகர் ஆகிய தெய்வாலயங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஸ்ரீ மாம்பழ விநாயகர் :
புராண காலத்தில், ஒரு சமயம் தமக்குக் கிடைக்கப்பெற்ற மிக அரிய ஞானப் (மாம்)பழத்தினை கயிலை நாதனாகிய சிவபெருமானிடம் ஒப்படைக்க, அவர் தமக்காக எடுத்துக்கொள்ளாமல், தம் இரு குழந்தைகளான ஆனை முகத்தோனாகிய விநாயகருக்கும், அழகு முகத்தோனாகிய முருகப் பெருமானுக்கும் கொடுக்க விருப்பம் கொள்ள, இருவருக்கும் ஒரே பழத்தினை பிரிக்காமல் கொடுக்க எண்ணி, ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்து, இவ்வுலகை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவருக்கே இந்த ஞானமாம்பழம் என முடிவு செய்கிறார். முருகப் பெருமான் உலகை வேகமாக வலம் வர எண்ணி மயில் மீது ஏறி அகிலத்தை வலம் வரச் செல்கிறார். அது சமயம், விநாயகரோ தாயும் தந்தையும் தான் தன் உலகம் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, சிவ பார்வதியை வலம் வந்து, அகில உலகையும் வலம் வந்த பலன் கொண்டு, ஞான மாம்பழத்தைப் பெற்று  போட்டியில் வெல்கிறார்.

இதன் ஞாபகார்த்தமாக, கிழக்கு நோக்கிய கோலத்தில் அழகே உருவாக அருளே வடிவாக, கையில் மாங்கனி ஏந்தி, அருள்பாலிக்கும் வடிவம் அற்புதம் வாய்ந்தது. புராணத்திற்கு ஏற்ப, சிதம்பர ஆலயத்தில், இவரை வழிபட்டு, அடுத்து உள் சென்றால் அம்மையப்பனாக விளங்கும் சிவகாம சுந்தரி உடனாய ஞானமா நடராஜப் பெருமானை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்கப் பெறும். நடராஜர் அருளும் பொன்னம்பலத்தின் கீழ்ப்பகுதி கைலாய பர்வதம் என்றே போற்றப்படும்.
எண்ணிய செயல்கள் யாவும் எளிதில் ஈடேறவும், அனைத்திலும் வெற்றி காணவும் அருளும் ஸ்ரீ மாம்பழ விநாயகரைப் போற்றி வணங்கிடுவோம்.

நவக்ரஹங்கள் :
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராஹு மற்றும் கேது கிரஹங்களே நவக்ரஹங்கள் எனப் போற்றப்படுகின்றது. நவக்ரஹங்களின் சஞ்சாரப் படியே நமது வாழ்க்கை நடைபெறுகின்றது என்பதை ஜாதக அலங்காரம் எனும்  நூல் விவரிக்கின்றது.

மாம்பழ விநாயகருக்கு இடது பக்கத்தில், நவக்ரஹ ஆலயம் அமைந்துள்ளது. மிக மிக அற்புதமான வேலைப்பாடுகளோடு, நவக்ரஹ சிலைகள் காணப்படுகின்றன. முதன் முதலாக நவக்ரஹங்களுக்கான கல் சிலை வடிவங்கள் வழிபாடுகளில் கொண்டுவரப்பட்டது சிதம்பரத்தில் தான் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று.
பரமேஸ்வரனைப் பணிந்து, சனீஸ்வரன் எனப் பெயர் பெற்று, நவக்ரஹங்களுக்கு தென்மேற்கில் தனித்ததொரு கோஷ்டத்தில் கிழக்கு நோக்கி, தோஷங்களை நீக்கும் விதத்திலும், அருள்தரும் வடிவாகவும் வீற்றிருக்கின்றார்.
மற்றைய ஆலயங்களைப் போல் பக்தர்கள் இங்குள்ள நவக்ரஹங்களை வலம் வர இயலாது. ஏனெனில், நவநாயகர்களும் நடராஜப் பெருமானை வலம் வந்து கொண்டிருப்பதாக ஐதீகம்.
கண் சம்பந்தமான நோய்கள் நீங்க சூர்ய பகவானையும்,
அன்றாட வாழ்க்கை நல்லபடியாக அமைய சந்திரனையும்,
நிலம், வீடு சம்பந்தமான விஷயங்களில் வெற்றிபெற செவ்வாயையும்,
குழந்தைகளின் நற்கல்வி, தேர்வுகளில் தேர்ச்சி பெற புதனையும்,
கற்ற கல்வியினால் நல்வேலை வாய்ப்புக் கிடைத்திட குருவையும்,
குடும்ப வாழ்க்கை சுகமாக விளங்க சுக்ரனையும்,
நோயற்ற நீண்ட ஆயுளைத் தரவல்ல சனீஸ்வரரையும்,
நோய்கள் நீங்க வழி செய்யும் ராகுவையும்,
வம்ச அபிவிருத்தி பெற கேதுவையும் வணங்கி வழிபடுவோம்.

ஸ்ரீ சட்டநாதர் :
ஸ்ரீ விஷ்ணு பகவான் தச அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தை எடுத்தபோது கொண்ட கர்வத்தை அடக்கும் ஈஸ்வர அம்சமாகப் போற்றப்படுபவர் சட்டநாதர். எலும்பு மாலையும், கதையும் கொண்ட பைரவ அம்சமாக அழகுக் கோலம் கொண்டவர். சிதம்பரத்தை அடுத்த சீர்காழி தலத்தில் சிறப்பாக வழிபாடு ஏற்பவர்.

ஸ்ரீ சட்டநாதர், சிதம்பரம் ஆலயத்தில், தேவஸபை வாசலுக்கு வலது புறத்தில், தெற்கு நோக்கிய கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.
வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் நீங்கவும், எதிரிகளால் ஏற்படும் பில்லி, சூனியம் போன்ற ஏவல்கள் நீங்கவும் ஸ்ரீ சட்டநாதரை வழிபடுவதுண்டு.

ஸ்ரீ சங்கூதிப் பிள்ளையார் :
நவக்ரஹ ஸன்னதிக்கு இடது புறத்தில், தேவஸபை மண்டபத்தின் சுவற்றில், கோஷ்ட தெய்வமாக, மேற்கு நோக்கிய வடிவமாக, அழகு கொஞ்சும்        ஸ்ரீ சங்கூதிப் பிள்ளையார் அருள்கிறார்.
சிறு குழந்தை ஒன்று சங்கூதும் வடிவத்தில் அமைந்த அதிசய வடிவம்.

நற்குழந்தைப் பேறு கிடைக்கப் பெறவும், குழந்தைகளுக்கு நேரிடும் பாலாரிஷ்ட தோஷங்கள் நீங்கவும், குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்கள் நீங்கவும் சங்கூதிப் பிள்ளையாரை வழிபடுவது நலம் தரும்.

அர்த்த ஜாம அழகர் :
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், மேற்கண்ட சங்கூதிப் பிள்ளையாருக்கு வலது புறத்தில், அர்த்தஜாம அழகர் கோயில் கொண்டுள்ளார்.
அர்த்தஜாம அழகர், ஈஸ்வர அம்சம் என்றும், பைரவ அம்சம் என்றும், துவாரதேவதா அம்சம் என்றும், தர்மராஜர் அம்சம் என்றும் பலவித கருத்துக்கள் உண்டு.
ஒரு நாளில் நடைபெறும் ஆறு கால பூஜைகளில், நிறைவு பூஜையாக அமையும், இரவு பத்து மணி அளவில் நடந்தேறும் அர்த்தஜாம பூஜையில்    ஸ்ரீ நடராஜர், பள்ளியறை தீபாராதனைகளைத் தொடர்ந்து, நிறைவாக அர்த்தஜாம அழகர் எனும் இத்திருக்கோலத்திற்கு மஹா தீபாராதனையோடு அன்றைய பூஜைகள் நிறைவுறும்.
அமர்ந்த  வடிவில், தூக்கிய இடது கையும், வலது கையில் கதை ஆயுதமும், பெயருக்கு ஏற்றார்ப்போல் மிக மிக அழகிய வடிவினராக அருள்கிறார்.
அர்த்தஜாம அழகரை வழிபட்டால், களவு போன அல்லது தொலைந்து போன பொருட்கள் திரும்பக் கிடைத்திடும், செல்வங்கள் நிலைத்து நிற்கும், கடன் தொல்லைகள் நீங்கும், செல்வங்கள் சேர்ந்திடும்.
பொது தீக்‌ஷிதர்களின் சிறப்பான மேற்பார்வையில், பூரண வைதீக நெறிமுறைப்படி நடைபெறும், மேற்கண்ட தெய்வங்களுக்கான மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பக்தர்கள் அனைவரும் தரிசித்து தேவதா அனுக்ரஹத்தினைப் பெறக்கோருகின்றோம்.

-     நி.த. நடராஜ தீக்‌ஷிதர்
-     சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜகர்
-     செல் : 9443479572, 9362609299

Thanks to SUDHAN for Photos.

Saturday, June 9, 2018

நள்ளிரவில் நடராஜ ஜோதி !

நள்ளிரவில் நடராஜ ஜோதி !

(சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயம், 04.01.2023, புதன் கிழமை, நள்ளிரவு 11.55 மணி முதல்)


சிதம்பரம்.
கோயில் என்றாலே பொருள்படுவதும், ஆனந்த நடராஜராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவதும், வேண்டும் வரங்களை உடன் அருளுவதும், தரிசித்தால் முக்தி தருவதும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவதும், சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தருவதும், சிதம்பர ரகசியம் விளங்குவதும், அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்றும் தலமாக விளங்குவதும் ஆகிய சிதம்பரம் தலம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது.


ஸ்ரீ நடராஜ ராஜர் :  அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.

சிதம்பர ஸபாநாத ஆனந்த தாண்டவம் :
பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளின் பெருந்தவத்திற்கு வரம் தரும் விதமாக, கைலாயத்திலிருந்த வந்த பரமேஸ்வரன், முன்னர் கொடுத்த வாக்கின்படி, தில்லை ஸ்தலத்தில், இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.
அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.

காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னக பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவது பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.
இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்ணீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.
நடராஜராஜரின் அற்புத ஆனந்த நடனம் இன்றும் என்றும் நடக்கிறது.

உத்ஸவம் : 
சிதம்பரத்தில் இரு பெரும் உத்ஸவங்கள் காலம் காலமாக நடைபெறுகின்றது. ஒன்று ஆனித் திருமஞ்சனம் மற்றொன்று மார்கழி ஆருத்ரா தரிசனம். ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பெரியோர்கள் வகுத்திருக்கிறார்கள். 1. தக்‌ஷிணாயணம், 2. உத்தராயணம். இந்த இரு அயன காலங்களிலும் நடராஜப் பெருமான் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
(ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம் பற்றி மேலும் விபரங்கள் அறிய கீழ்க்கண்ட லிங்க் செல்லுங்கள். http://natarajadeekshidhar.blogspot.com/2010/06/blog-post.html
&;

மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் பற்றி மேலும் விபரங்கள் அறிய கீழ்க்கண்ட லிங்க் செல்லுங்கள்.

ஆறு கால பூஜைகள் : நடராஜப் பெருமானுக்கு நாள் ஒன்றுக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறும். 1. காலசந்தி, 2. மதிய வேளை இரண்டாம் காலம், 3. உச்சிகாலம், 4. மாலை சாயரக்‌ஷை, 5. இரவு இரண்டாம் கால பூஜை, 6. இரவு பத்து மணிக்கு அர்த்தஜாம பூஜை.

ஒவ்வொரு கால பூஜையிலும்,  நடராஜப் பெருமான் தனது சந்திர கிரணங்களில் இருந்து திரட்டிப் பெற்று, நித்திய ஆறு கால அபிஷேக பூஜைக்காக          தீக்‌ஷிதர்களிடம் தந்தருளிய ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். (நித்யம் ஷட்கால பூஜாம் .. எனும் 15ம் செய்யுள், குஞ்சிதாங்கிரிஸ்தவம், உமாபதி சிவம்)

முன்பொரு சமயம், பிரம்மா அந்தர்வேதி எனும் இடத்தில், பூஜைகளையும் யாகங்களையும் சிறப்புற செய்திடும் தீக்ஷிதர்களைக் கொண்டு, சிறப்பு வேள்வி செய்தார். இடைப்பட்ட நேரத்தில் உணவு அருந்த அனைவரையும் அழைக்க, தீக்ஷிதர்களோ அம்பலவாணரைக் காணாமல் அன்னம் புசிக்க மாட்டோம் என கண்டிப்புடன் சொல்லிட, ஹோமம் செய்திட்ட பலன் கிடைக்காமல் போய்விடுமே என்று அஞ்சி, தீக்ஷிதர்களுக்கு குறைவு வராமல் இருக்க வேண்டுமே என்பதற்காக, சிவபெருமானை வழிபட, வேண்டுவோருக்கு உடனடியாக வரமளிக்கும் வள்ளற்பிரானாகிய சிவமூர்த்தி, அந்த யாக வேள்வியில் தோன்றி தீக்ஷிதர்களுக்கு காட்சி அளித்ததோடு நில்லாமல், தனது அம்சமாக ரத்ன ஸபாபதி எனும்  அற்புத வடிவை வழங்கினார். பிரம்மாவின் அந்தர்வேதி யாகம் சிறப்புற நடந்தேறியது. அந்த ரத்ன ஸபாபதியை தமது நித்ய அபிஷேக ஆராதனைகளுக்காக தில்லை கொண்டு வந்தனர் தீக்ஷித பெருமக்கள். (அந்தர்வேத்யாம் மஹத்யாம்.. எனும் 16ம் செய்யுள், குஞ்சிதாங்கிரிஸ்தவம், உமாபதி சிவம்)

இந்த அமைப்பிற்கு பதஞ்சலி மஹரிஷி வகுத்த முறைப்படி, நடராஜர் நடனமிடும் பொன்னம்பலத்திற்கு  அடுத்த அழகிய மண்டபமாகிய கனகசபையில், ஒவ்வொரு நாளின் மதியம் இரண்டாம் வேளையில் அபிஷேகம் ஏற்பார்.
மரகத நடராஜர், மாணிக்க நடராஜர் என மக்களால் போற்றப்படும் ரத்ன ஸபாபதி வடிவம் மிக மிக அழகு வாய்ந்தது. சிறப்பு பெற்றது. நடராஜப் பெருமானின் அம்சமானதால் உலகின் மிக மிக மிக அரிய (மரகதமும் அல்ல மாணிக்கமும் அல்ல) ரத்தினத்தால்  ஆனது.

விசித்திரமாக, ஒளி உடுறுவும் தன்மை கொண்டது. இயற்பியல் விதியின் படி ஒரு பொருளின் மேல் ஒளியைப் பாய்ச்சினால் பொருள் ஒளிர்ந்து, ஒளி ஊடுருவும் தன்மை கொண்டால் மறு புறம் ஒளி காட்டும்.
ஆனால், இந்த ரத்ன ஸபாபதி தனிமம் விசித்திரம் வாய்ந்தது. அபிஷேகம் முடிந்து, பூஜை செய்யும் தீக்‌ஷிதர் தீபாராதனை காட்டும் போது முன்புறம் தீப ஒளிபடு இடம் கருப்பாகவும், பின்புறம் ஜோதி மயமாகக் காட்சி தரும். ரத்ன ஸபாபதிக்குப் பின்புறம் தீபாராதனை செய்யும்போது முன்புறம் ஜோதிர்மயமாகக் காட்சி தரும்போது, பக்தர்களின் ஹரஹர மஹாதேவா கோஷம் விண்ணைப் பிளக்கும்.


ஜோதிர்மயமான காட்சியே ரத்ன ஸபாபதி தரிசனக் காட்சியாகும். வார்த்தைகளால் விவரிக்கவே இயலாத காட்சி. இதனைக் காண்பவர்களின் வாழ்க்கை ஒளிபெறும். வளம் பெறும். எண்ணங்கள் ஈடேறும்.
இந்த ரத்ன ஸபாபதி தரிசனக் காட்சி ஒவ்வொரு நாளிலும்  மதிய வேளையில் மட்டுமே நடைபெறும்.
ஆனால், (ஆனி & மார்கழி) உத்ஸவ சமயத்தில், கால பூஜைகளை முறை தவறாமல் செய்யும் தகைமையால், எட்டாம் திருநாள் அன்றைய பூஜையின் அர்த்த ஜாம பூஜை நடைபெற்ற பிறகு, மறு நாள் தேருக்கு நடராஜர் எழுந்தருள இருப்பதால், அன்றைய அதாவது மறுநாள் பூஜைகள் (08.01.2020) இரவே நடந்தேறிவிடும்.
இரவு அர்த்தஜாம பூஜை முடிந்து, உடனடியாக மறுநாளுக்குரிய திருவனந்தல் எனும் பால் நிவேதன பூஜை, கால சந்தி பூஜை மற்றும் இரண்டாம் கால அபிஷேகங்கள் நடைபெறும். அந்த இரண்டாம் கால பூஜையில், ரத்ன ஸபாபதிக்கு நள்ளிரவில் பூஜைகள் நடக்கும்.
அபிஷேகங்கள் நடந்த பின், கனகசபையைச் சுற்றிலும் உள்ள செயற்கை விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, இருள் சூழ்ந்த இடத்தில், ரத்ன ஸபாபதிக்கு மஹா தீபாராதனை நடைபெறும்.
அதுவே நள்ளிரவில் நடராஜ ஜோதி தரிசனம். காணுதற்கரிய தரிசனம்.


ரத்ன ஸபாபதிக்கு தீபாராதனையைப் பின்புறமிருந்து பூஜக தீக்ஷிதர் காட்ட முன்புறம் நடராஜ ஜோதியாக காட்சி அளிப்பார். மூன்று முறை தீப ஜோதிக் காட்சி கிடைக்கப் பெறும்.
ஒருபுறம் பொன்னம்பலம் நிலவொளியில் பொன்னிறத்தில் தகதகக்க, கனகசபை நடராஜ ஜோதியில் ஜ்வாஜ்ஜல்யமாக நிறைந்திருக்கும். இறைஜோதியில் நாம் அனைவரும் கலக்க வேண்டும் என்கிற நியதியை பிரதிபலிப்பதே நடராஜ ஜோதியின் தாத்பர்யம்.
இந்த நள்ளிரவு நடராஜ ஜோதி தரிசனம் ஆனித்திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசன உத்ஸவ காலங்களில் நடைபெறும். வருடத்திற்கு இருமுறை நடக்கும் இந்நிகழ்வினைக் காண பக்தர்கள் பெருமளவு வருகை தருவார்கள்.

நடராஜ ஜோதியைக் காண்போம் ! நல வளங்கள் பெறுவோம் !!

-    நி.த. நடராஜ தீக்ஷிதர்
-    சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பரம்பரை டிரஸ்டி & பூஜகர்
-    செல் : 9443479572, 9362609299
-    Mail : yanthralaya@gmail.com

Sunday, January 14, 2018

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பாண்டிய நாயகர் கோயில் மஹா கும்பாபிஷேகம்


 ஸ்ரீ பாண்டிய நாயகம் மஹா கும்பாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள,
ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸ்ரீ ஷண்முக சுப்ரமண்ய ஸ்வாமி ஆலயம்,
சிறிய பாண்டிய நாயகர் மற்றும் ஸ்ரீ நவலிங்கம் ஆலய, அஷ்ட பந்தன, ரஜத பந்தன, மஹா கும்பாபிஷேகம்

நாள் : ஸ்வஸ்தி ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம், தை மாதம் 9ம் தேதி, 22.01.2018, திங்கட் கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி, உத்திரட்டாதி நக்ஷத்திரம், சித்த யோகம்,

நேரம் : காலை 09.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள், மீன லக்னம்.

நிகழ்ச்சி நிரல் :
19.01.2018, வெள்ளி, மாலை முதல் கால யாக பூஜை
20.01.2018,  சனிக் கிழமை, காலை & மாலை : 2 & 3ம் காலம்
21.01.2018, ஞாயிறு, காலை & மாலை : 4, 5 & 6 வது காலம்
22.01.2018, திங்கள், காலை 09.30 10.30 மஹா கும்பாபிஷேகம்
     மாலை : மண்டலாபிஷேக ஆரம்பம், பஞ்சமூர்த்தி வீதியுலா.

மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும், ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்ஷிதர்களின் மேலான வழிகாட்டுதலின்படி மிக மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

பக்தர்கள் அனைவரும் பங்கு கொண்டு தெய்வங்களின் பேரருளைப் பெறக் கோருகின்றோம்.


ஸ்ரீ பாண்டிய நாயகர் ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸ்ரீ ஷண்முக ஸுப்ரமண்யர் ஆலயம் :

முருகன். அழகன். தமிழ்க் கடவுள். குமரன். ஆறுமுகன். ஸ்கந்தன்.
முருகனையே முழு முதற்கடவுளாக வணங்க செய்யும் வகை கெளமாரம் ஆகும்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை அக்னி பகவான் கங்கையில் விட, கங்கை சரவணப்பொய்கையில் விட, அந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக, அந்த ஆறு குழந்தைகளுக்கும் கிருத்திகை முதலான நக்ஷத்ர தேவதைகள் பாலூட்ட, பார்வதி தேவியானவள் அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஸ்கந்தர் ஆக்கினள். (ஸ்கந்தம் என்பதற்கு சேர்த்தல் என்று பொருள்).

சிவபெருமான், முருகப் பெருமானிடம் பிரணவப் பொருள் கேட்டு உணர்ந்தார். பிரணவத்தை தந்தைக்கே உபதேசம் செய்தார். முருகப்பெருமான், அறிவிற்கும் - வயதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உலகிற்கு உணர்த்தியவர்.
வேத மந்திரங்களில் ஓம் எனத் தொடங்கி ஓம் என முடியுமாறு இரண்டு தெய்வங்களுக்கு மட்டுமே அமைந்துள்ளன.
ஒன்று, 'ஓம் ஈசான .... ஸதாசிவோம்' என்று அமைந்த, ஓங்காரத்தின் விளக்கத்தை முருகப் பெருமானிடமிருந்து கேட்டறிந்த சிவபெருமானுக்கு உரியது.
மற்றொன்று, 'ஓம் குமாரஸ்சித் பிதரம் .... ஸுப்ரஹ்மண்யோம்' என்று அமைந்த பிரணவத்தை உபதேசித்த முருகப் பெருமானுக்கு உரியது.

தேவர்களை வருத்திய சூரன் எனும் அரக்கனை தன் படைகள் கொண்டு வதம் செய்தவர். அதுவே சூரஸம்ஹாரம்.
தமிழ்க் கடவுளாக போற்றப்படுபவர் முருகப் பெருமான். தமிழ்ச் சங்கத்தினை காத்தருளிய கடவுள். காலக்கணக்கின் படி, நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் நூல்களை வகைப்படுத்திப் பார்த்தோமானால், சங்க இலக்கியங்களே முதல் வரிசையில் இருக்கின்றது. அதில் உள்ள அறநானூறு மற்றும் புறநானூறு போன்றவை காதல், வீரம், அறம் போன்றவற்றை இயம்பினாலும், தனிப்பட்ட முறையில் ஒரு தெய்வத்தினை போற்றி வழிபடும் வகையில் அமையவில்லை.
சங்க இலக்கியங்களுக்கு அடுத்தபடியாக, தமிழ் இலக்கிய கால வரிசையில் அமைவது பத்துப்பாட்டு எனும் தொகுப்பாகும்.
தமிழன்னையின் நெற்றிப் பொட்டு போல அமைந்தது பத்துப்பாட்டில் முதன்மையானதாக அமைவது திருமுருகாற்றுப்படை ஆகும். இந்தப் பத்துப்பாட்டு தொகுப்பிற்கும் கடவுள் வாழ்த்து போலவும் அமைந்திருக்கின்றது.
நக்கீரர் இயற்றியது திருமுருகாற்றுப்படை. தமிழிலக்கியத்தின், முதல் தனிப்பட்ட தெய்வத்தினைப் போற்றி அமைந்த தன்னிகரற்ற திருமுருகாற்றுப்படை - முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளைப் போற்றிச் சொல்வதாக அமைந்தது.
தமிழிலக்கியத்தின் முதல் காவியமாக, தமிழ்க் கடவுளான முருகனைப் பற்றி அமைந்திருப்பது என்னே பொருத்தமாக அமைந்துள்ளது  !
முருகப் பெருமானின் முழுமையான புராணத்தைப் பகர்வது, கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய, கந்த புராணம் ஆகும். ஸ்கந்த ஜனனம் முதல் வள்ளி & தேவயானியைத் திருமணம் செய்து, பக்தர்களைக் காத்திட்ட பாங்கு வரை மிக அழகாக விவரிக்கின்றது.

ஸ்ரீ பாண்டிய நாயகர் ஆலயம் :
சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள்படுவது சிதம்பரம் ஆகும். முக்தியளிக்கும் தலம். வேண்டும் வரங்களை வாரி வழங்கிடும் ஆலயம். ஸ்ரீ நடராஜப் பெருமான் அனுதினமும் ஆடல்காட்சி  நல்கி ஆனந்தத்தை வழங்கிடும் திருக்கோயில்.
சுமார் 45 ஏக்கர் பரந்து விரிந்துள்ள ஆலயத்தில், பல்வேறு தெய்வங்களின் ஸன்னிதிகள் அமைந்துள்ளன.
ஒரு சிவாலயம் அமைந்தால், அதன் இரு புறங்களிலும் விநாயகர் மற்றும் முருகர் ஆலயங்கள் அமைப்பது மரபு.
அவ்வகையில், ஸ்ரீ மூலஸ்தானம் எனும் கிழக்கு நோக்கிய ஆதி மூலவர் ஆலயத்திற்காக, தெற்கு புறத்தில் கிழக்கு நோக்கிய ஆலயமாக ஸ்தல விநாயகராக, ஆனை முகத்தோனாக ஸ்ரீ முக்குறுணிப் பிள்ளையாரும், வடபுறத்தில், ஸ்தல சுப்ரமண்யராக  அழகு முகத்தோனாக பாண்டிய நாயக ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேதராக ஸ்ரீ ஷண்முக (ஆறுமுகம்) சுப்ரமண்யராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின், வடபுறத்தில், வடக்குக் கோபுரத்திற்கு அருகாமையில், வேறு எங்கும் காண முடியாத வகையில், ஒரு அற்புதப் பேராலயமாக, ஸ்ரீ முருகப் பெருமானுக்கு என்றே தனித்துவமான ஆலயமாக விளங்குவது ஸ்ரீ பாண்டிய நாயகம் ஆலயம் ஆகும்.

மிகப் பெரும் பரப்பில், சுற்றிலும் தோட்டங்கள் அமைந்து, சுற்றுப் பிரகார மண்டபங்களோடு, நடுநாயகமாக பாண்டிய நாயகப் பெருமான் அழகே உருவாக அருளே வடிவாக அனைவருக்கும் வரம் தரும் வள்ளலாக, மிகப் பெரும் வடிவில் அமைந்திருக்கின்றார்.

கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஷண்முகப் பெருமான், சிற்ப சாஸ்திர முறைப்படி, ஆறு அலகு உயரம் கொண்டு, ஒரே கல்லில் மயில் மீதமர்க் கோலத்தில் விளங்குகின்றார்.
(தென் புறத்திலிருக்கும் முக்குறுணிப் பிள்ளையார் சுமார் எட்டடி உயரம் கொண்ட பிரம்மாண்ட விநாயகர். அதற்கேற்றாற்போல், பாண்டிய நாயகப் பெருமான் பிரம்மாண்டமான சமமானவராக அமைவது சிறப்பிலும் சிறப்பானது.)

பாண்டிய நாயகர் ஆலயம் மிக அழகான அமைப்பைக் கொண்டது. யானைகளும், யாளிகளும் இழுக்கும் விதமாக அமைந்த தேர் போன்ற அமைப்பைக் கொண்ட கோயில். மண்டபத்தின் ஒவ்வொரு தூணும் சிற்பக் கலையைப் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.


காலக்கணக்கின் படி பார்த்தோமானால், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 12, 13ம் நூற்றாண்டு), ஆலயத்தைத் தேர் போன்று அமைக்கும் கலை சிறப்புற்று, இவ்வாலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்றும், மூன்றாம் குலோத்துங்கனுக்குரிய பாண்டியர் தம்பிரான்   பெயரால் பாண்டிய நாயகம் என்ற பெயர் வந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (தில்லைப் பெருங்கோயில் வரலாறு, பக்கம் 40).
சுந்தர பாண்டியன் அமைத்தபடியால் இவ்வாலயத்திற்கு பாண்டிய நாயகம் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதும் ஆன்றோர் வாக்கு.
பங்குனி உத்திரத்தில் கொடியேற்றம் கண்டு பத்து தினங்கள் சிறப்பு உத்ஸவம் காணும் ஆலயமாக உள்ளது.

தமிழகத்தில், முதன் முதலாக, இவ்வாலய மேற்கூரையில் கந்த புராணத்தில் இடம்பெறும் முக்கிய கட்டங்களை, காட்சிகளாக அமைத்து, பெரும் படங்களாக வரைந்து, அதற்கு ஏற்றார்ப்போல், அழகு தமிழில் சிறு விளக்கம் அமைத்தது இந்த பாண்டிய நாயகர் ஆலயத்தில் மட்டும் தான்.

இவ்வாலய வளாகத்தின் முகப்பு வாயிலுக்கு அருகில், சின்ன பாண்டிய நாயகம் எனும் தனிக் கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயம் வடக்கு கோபுர புடைப்புச் சிற்பமாக அமைந்த தெற்கு நோக்கிய சுப்ரமண்யரைக் கருவறையில் கொண்டது. அறக் கடவுளாக விளங்கும் ஸ்ரீ எம பகவான் உடனுறைவது மிகச் சிறப்பு வாய்ந்தது.

ஸ்ரீ நவலிங்கம் கோயில் : முன்னொரு சமயம் தக்ஷன் செய்த யாகத்தில் பங்கு கொண்டமையால் ஏற்பட்ட சிவபாரத்தைப் போக்க வேண்டி,  நவக்ரஹங்கள்  தங்கள் திருநாமங்களுடன் பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து பெரும்பேற்றினைப் பெற்ற ஒன்பது சிவலிங்க மூர்த்தங்கள் அமைந்த அழகுமிகு ஆலயம் நவலிங்கம் ஆலயம்.
சுந்தர மூர்த்தி பெருமான் பாடிய திருத்தொண்டத்தொகையில் குறிப்பிடப்படும் தொகையடியார்கள் (தில்லை வாழந்தணர் முதல் அப்பாலும் அடிசார்ந்தார் வரை) பெயரில் அமைந்திட்ட ஒன்பது சிவ லிங்கம் அமைந்த நவலிங்கம் கோயில், திருத்தொண்டதொகையீச்சரம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவது முக்கியத்துவம் வாய்ந்தது.

உலக மக்கள் உய்யும் பொருட்டு, மேற்கண்ட ஆலயங்களில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மிகப் பெரும் பிரம்மாண்டமான வைபவமாகவும், புண்ணியங்களை ஒரு சேர நல்கும் நிகழ்வாகவும், ஆறு கால யாக பூஜைகளுடனும், இருபத்தொன்பது யாக குண்டங்களுடனும், பதஞ்சலி மஹரிஷி வகுத்த பூஜா ஸூக்தங்களின்படி, சதுர்வேத பாராயணங்களுடன், தில்லை மூவாயிரவர் எனும் த்ரிஸஹஸ்ர முனீஸ்வரர்கள் என்றும் வைதீக வழியில் பூஜைகள் நடத்தும் - பொது தீக்ஷிதர்களால் - மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது.

ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸ்ரீ ஷண்முகப் பெருமான், வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனே வரமளித்து, நற்குழந்தைப் பேறு, வம்ச அபிவிருத்தி, குழந்தைகளின் கல்வியில் மேன்மை, கற்ற கல்வியினால் நல்வேலை வாய்ப்பு, பதவிகளில் மென்மேலும் உயர்வு, நல்ல இல்லறத் துணை, எதிரிகளால் ஏற்படும் அனைத்து இடர்ப்பாடுகளையும் களைந்து நோய்கள் இல்லாத நீடித்த ஆனந்தமான நல்வாழ்வு என அனைத்தையும் அருளக்கூடியவர்.

பக்தர்கள் அனைவரும், இந்த மாபெரும் மஹா கும்பாபிஷேக நிகழ்வைக் கண்டு களித்து, ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸ்ரீ ஷண்முக ஸுப்ரமண்ய ஸ்வாமியின் தெய்வத் திருவருளைப் பெற்றிட வேண்டுமாய் கோருகின்றோம்.

நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்
Mobile : 94434 79572, 93626 09299.



*********************


தனித்தனியாக கட்டுரைகளை வாசிக்க, கீழேயுள்ள லிங்க்-களை க்ளிக் செய்தும் படிக்கலாம்.

**************************************************
**************************************************
**************************************************

&