Sunday, January 14, 2018

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பாண்டிய நாயகர் கோயில் மஹா கும்பாபிஷேகம்


 ஸ்ரீ பாண்டிய நாயகம் மஹா கும்பாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள,
ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸ்ரீ ஷண்முக சுப்ரமண்ய ஸ்வாமி ஆலயம்,
சிறிய பாண்டிய நாயகர் மற்றும் ஸ்ரீ நவலிங்கம் ஆலய, அஷ்ட பந்தன, ரஜத பந்தன, மஹா கும்பாபிஷேகம்

நாள் : ஸ்வஸ்தி ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம், தை மாதம் 9ம் தேதி, 22.01.2018, திங்கட் கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி, உத்திரட்டாதி நக்ஷத்திரம், சித்த யோகம்,

நேரம் : காலை 09.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள், மீன லக்னம்.

நிகழ்ச்சி நிரல் :
19.01.2018, வெள்ளி, மாலை முதல் கால யாக பூஜை
20.01.2018,  சனிக் கிழமை, காலை & மாலை : 2 & 3ம் காலம்
21.01.2018, ஞாயிறு, காலை & மாலை : 4, 5 & 6 வது காலம்
22.01.2018, திங்கள், காலை 09.30 10.30 மஹா கும்பாபிஷேகம்
     மாலை : மண்டலாபிஷேக ஆரம்பம், பஞ்சமூர்த்தி வீதியுலா.

மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும், ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்ஷிதர்களின் மேலான வழிகாட்டுதலின்படி மிக மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

பக்தர்கள் அனைவரும் பங்கு கொண்டு தெய்வங்களின் பேரருளைப் பெறக் கோருகின்றோம்.


ஸ்ரீ பாண்டிய நாயகர் ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸ்ரீ ஷண்முக ஸுப்ரமண்யர் ஆலயம் :

முருகன். அழகன். தமிழ்க் கடவுள். குமரன். ஆறுமுகன். ஸ்கந்தன்.
முருகனையே முழு முதற்கடவுளாக வணங்க செய்யும் வகை கெளமாரம் ஆகும்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை அக்னி பகவான் கங்கையில் விட, கங்கை சரவணப்பொய்கையில் விட, அந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக, அந்த ஆறு குழந்தைகளுக்கும் கிருத்திகை முதலான நக்ஷத்ர தேவதைகள் பாலூட்ட, பார்வதி தேவியானவள் அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஸ்கந்தர் ஆக்கினள். (ஸ்கந்தம் என்பதற்கு சேர்த்தல் என்று பொருள்).

சிவபெருமான், முருகப் பெருமானிடம் பிரணவப் பொருள் கேட்டு உணர்ந்தார். பிரணவத்தை தந்தைக்கே உபதேசம் செய்தார். முருகப்பெருமான், அறிவிற்கும் - வயதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உலகிற்கு உணர்த்தியவர்.
வேத மந்திரங்களில் ஓம் எனத் தொடங்கி ஓம் என முடியுமாறு இரண்டு தெய்வங்களுக்கு மட்டுமே அமைந்துள்ளன.
ஒன்று, 'ஓம் ஈசான .... ஸதாசிவோம்' என்று அமைந்த, ஓங்காரத்தின் விளக்கத்தை முருகப் பெருமானிடமிருந்து கேட்டறிந்த சிவபெருமானுக்கு உரியது.
மற்றொன்று, 'ஓம் குமாரஸ்சித் பிதரம் .... ஸுப்ரஹ்மண்யோம்' என்று அமைந்த பிரணவத்தை உபதேசித்த முருகப் பெருமானுக்கு உரியது.

தேவர்களை வருத்திய சூரன் எனும் அரக்கனை தன் படைகள் கொண்டு வதம் செய்தவர். அதுவே சூரஸம்ஹாரம்.
தமிழ்க் கடவுளாக போற்றப்படுபவர் முருகப் பெருமான். தமிழ்ச் சங்கத்தினை காத்தருளிய கடவுள். காலக்கணக்கின் படி, நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் நூல்களை வகைப்படுத்திப் பார்த்தோமானால், சங்க இலக்கியங்களே முதல் வரிசையில் இருக்கின்றது. அதில் உள்ள அறநானூறு மற்றும் புறநானூறு போன்றவை காதல், வீரம், அறம் போன்றவற்றை இயம்பினாலும், தனிப்பட்ட முறையில் ஒரு தெய்வத்தினை போற்றி வழிபடும் வகையில் அமையவில்லை.
சங்க இலக்கியங்களுக்கு அடுத்தபடியாக, தமிழ் இலக்கிய கால வரிசையில் அமைவது பத்துப்பாட்டு எனும் தொகுப்பாகும்.
தமிழன்னையின் நெற்றிப் பொட்டு போல அமைந்தது பத்துப்பாட்டில் முதன்மையானதாக அமைவது திருமுருகாற்றுப்படை ஆகும். இந்தப் பத்துப்பாட்டு தொகுப்பிற்கும் கடவுள் வாழ்த்து போலவும் அமைந்திருக்கின்றது.
நக்கீரர் இயற்றியது திருமுருகாற்றுப்படை. தமிழிலக்கியத்தின், முதல் தனிப்பட்ட தெய்வத்தினைப் போற்றி அமைந்த தன்னிகரற்ற திருமுருகாற்றுப்படை - முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளைப் போற்றிச் சொல்வதாக அமைந்தது.
தமிழிலக்கியத்தின் முதல் காவியமாக, தமிழ்க் கடவுளான முருகனைப் பற்றி அமைந்திருப்பது என்னே பொருத்தமாக அமைந்துள்ளது  !
முருகப் பெருமானின் முழுமையான புராணத்தைப் பகர்வது, கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய, கந்த புராணம் ஆகும். ஸ்கந்த ஜனனம் முதல் வள்ளி & தேவயானியைத் திருமணம் செய்து, பக்தர்களைக் காத்திட்ட பாங்கு வரை மிக அழகாக விவரிக்கின்றது.

ஸ்ரீ பாண்டிய நாயகர் ஆலயம் :
சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள்படுவது சிதம்பரம் ஆகும். முக்தியளிக்கும் தலம். வேண்டும் வரங்களை வாரி வழங்கிடும் ஆலயம். ஸ்ரீ நடராஜப் பெருமான் அனுதினமும் ஆடல்காட்சி  நல்கி ஆனந்தத்தை வழங்கிடும் திருக்கோயில்.
சுமார் 45 ஏக்கர் பரந்து விரிந்துள்ள ஆலயத்தில், பல்வேறு தெய்வங்களின் ஸன்னிதிகள் அமைந்துள்ளன.
ஒரு சிவாலயம் அமைந்தால், அதன் இரு புறங்களிலும் விநாயகர் மற்றும் முருகர் ஆலயங்கள் அமைப்பது மரபு.
அவ்வகையில், ஸ்ரீ மூலஸ்தானம் எனும் கிழக்கு நோக்கிய ஆதி மூலவர் ஆலயத்திற்காக, தெற்கு புறத்தில் கிழக்கு நோக்கிய ஆலயமாக ஸ்தல விநாயகராக, ஆனை முகத்தோனாக ஸ்ரீ முக்குறுணிப் பிள்ளையாரும், வடபுறத்தில், ஸ்தல சுப்ரமண்யராக  அழகு முகத்தோனாக பாண்டிய நாயக ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேதராக ஸ்ரீ ஷண்முக (ஆறுமுகம்) சுப்ரமண்யராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின், வடபுறத்தில், வடக்குக் கோபுரத்திற்கு அருகாமையில், வேறு எங்கும் காண முடியாத வகையில், ஒரு அற்புதப் பேராலயமாக, ஸ்ரீ முருகப் பெருமானுக்கு என்றே தனித்துவமான ஆலயமாக விளங்குவது ஸ்ரீ பாண்டிய நாயகம் ஆலயம் ஆகும்.

மிகப் பெரும் பரப்பில், சுற்றிலும் தோட்டங்கள் அமைந்து, சுற்றுப் பிரகார மண்டபங்களோடு, நடுநாயகமாக பாண்டிய நாயகப் பெருமான் அழகே உருவாக அருளே வடிவாக அனைவருக்கும் வரம் தரும் வள்ளலாக, மிகப் பெரும் வடிவில் அமைந்திருக்கின்றார்.

கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஷண்முகப் பெருமான், சிற்ப சாஸ்திர முறைப்படி, ஆறு அலகு உயரம் கொண்டு, ஒரே கல்லில் மயில் மீதமர்க் கோலத்தில் விளங்குகின்றார்.
(தென் புறத்திலிருக்கும் முக்குறுணிப் பிள்ளையார் சுமார் எட்டடி உயரம் கொண்ட பிரம்மாண்ட விநாயகர். அதற்கேற்றாற்போல், பாண்டிய நாயகப் பெருமான் பிரம்மாண்டமான சமமானவராக அமைவது சிறப்பிலும் சிறப்பானது.)

பாண்டிய நாயகர் ஆலயம் மிக அழகான அமைப்பைக் கொண்டது. யானைகளும், யாளிகளும் இழுக்கும் விதமாக அமைந்த தேர் போன்ற அமைப்பைக் கொண்ட கோயில். மண்டபத்தின் ஒவ்வொரு தூணும் சிற்பக் கலையைப் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.


காலக்கணக்கின் படி பார்த்தோமானால், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 12, 13ம் நூற்றாண்டு), ஆலயத்தைத் தேர் போன்று அமைக்கும் கலை சிறப்புற்று, இவ்வாலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்றும், மூன்றாம் குலோத்துங்கனுக்குரிய பாண்டியர் தம்பிரான்   பெயரால் பாண்டிய நாயகம் என்ற பெயர் வந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (தில்லைப் பெருங்கோயில் வரலாறு, பக்கம் 40).
சுந்தர பாண்டியன் அமைத்தபடியால் இவ்வாலயத்திற்கு பாண்டிய நாயகம் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதும் ஆன்றோர் வாக்கு.
பங்குனி உத்திரத்தில் கொடியேற்றம் கண்டு பத்து தினங்கள் சிறப்பு உத்ஸவம் காணும் ஆலயமாக உள்ளது.

தமிழகத்தில், முதன் முதலாக, இவ்வாலய மேற்கூரையில் கந்த புராணத்தில் இடம்பெறும் முக்கிய கட்டங்களை, காட்சிகளாக அமைத்து, பெரும் படங்களாக வரைந்து, அதற்கு ஏற்றார்ப்போல், அழகு தமிழில் சிறு விளக்கம் அமைத்தது இந்த பாண்டிய நாயகர் ஆலயத்தில் மட்டும் தான்.

இவ்வாலய வளாகத்தின் முகப்பு வாயிலுக்கு அருகில், சின்ன பாண்டிய நாயகம் எனும் தனிக் கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயம் வடக்கு கோபுர புடைப்புச் சிற்பமாக அமைந்த தெற்கு நோக்கிய சுப்ரமண்யரைக் கருவறையில் கொண்டது. அறக் கடவுளாக விளங்கும் ஸ்ரீ எம பகவான் உடனுறைவது மிகச் சிறப்பு வாய்ந்தது.

ஸ்ரீ நவலிங்கம் கோயில் : முன்னொரு சமயம் தக்ஷன் செய்த யாகத்தில் பங்கு கொண்டமையால் ஏற்பட்ட சிவபாரத்தைப் போக்க வேண்டி,  நவக்ரஹங்கள்  தங்கள் திருநாமங்களுடன் பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து பெரும்பேற்றினைப் பெற்ற ஒன்பது சிவலிங்க மூர்த்தங்கள் அமைந்த அழகுமிகு ஆலயம் நவலிங்கம் ஆலயம்.
சுந்தர மூர்த்தி பெருமான் பாடிய திருத்தொண்டத்தொகையில் குறிப்பிடப்படும் தொகையடியார்கள் (தில்லை வாழந்தணர் முதல் அப்பாலும் அடிசார்ந்தார் வரை) பெயரில் அமைந்திட்ட ஒன்பது சிவ லிங்கம் அமைந்த நவலிங்கம் கோயில், திருத்தொண்டதொகையீச்சரம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவது முக்கியத்துவம் வாய்ந்தது.

உலக மக்கள் உய்யும் பொருட்டு, மேற்கண்ட ஆலயங்களில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மிகப் பெரும் பிரம்மாண்டமான வைபவமாகவும், புண்ணியங்களை ஒரு சேர நல்கும் நிகழ்வாகவும், ஆறு கால யாக பூஜைகளுடனும், இருபத்தொன்பது யாக குண்டங்களுடனும், பதஞ்சலி மஹரிஷி வகுத்த பூஜா ஸூக்தங்களின்படி, சதுர்வேத பாராயணங்களுடன், தில்லை மூவாயிரவர் எனும் த்ரிஸஹஸ்ர முனீஸ்வரர்கள் என்றும் வைதீக வழியில் பூஜைகள் நடத்தும் - பொது தீக்ஷிதர்களால் - மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது.

ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸ்ரீ ஷண்முகப் பெருமான், வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனே வரமளித்து, நற்குழந்தைப் பேறு, வம்ச அபிவிருத்தி, குழந்தைகளின் கல்வியில் மேன்மை, கற்ற கல்வியினால் நல்வேலை வாய்ப்பு, பதவிகளில் மென்மேலும் உயர்வு, நல்ல இல்லறத் துணை, எதிரிகளால் ஏற்படும் அனைத்து இடர்ப்பாடுகளையும் களைந்து நோய்கள் இல்லாத நீடித்த ஆனந்தமான நல்வாழ்வு என அனைத்தையும் அருளக்கூடியவர்.

பக்தர்கள் அனைவரும், இந்த மாபெரும் மஹா கும்பாபிஷேக நிகழ்வைக் கண்டு களித்து, ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸ்ரீ ஷண்முக ஸுப்ரமண்ய ஸ்வாமியின் தெய்வத் திருவருளைப் பெற்றிட வேண்டுமாய் கோருகின்றோம்.

நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்
Mobile : 94434 79572, 93626 09299.



*********************


தனித்தனியாக கட்டுரைகளை வாசிக்க, கீழேயுள்ள லிங்க்-களை க்ளிக் செய்தும் படிக்கலாம்.

**************************************************
**************************************************
**************************************************

&




No comments: