Tuesday, January 29, 2019


சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய வளாகத்தினுள் அமைந்தருளும்
ஸ்ரீ சிவகாம சுந்தரி ஆலய
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

நாள் : ஸ்வஸ்தி ஸ்ரீ விளம்பி வருஷம், தை மாதம் 28ம் தேதி,                          திங்கட் கிழமை, 11.02.2019
நேரம் : காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள், மீன லக்னம்
(மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

மாதங்க மேமணி யேஅணி யேநன் மரகதமே
வேதங்கள் போற்றுஞ் சிவகாம சுந்தர மென்கொடியே
பாதந் தருந்துக ளாற்புவி யாவும் படைத்தவம்மே
நீதங்கு மன்றத்துக் கூற்றமு தூட்டெற்கு நித்தமுமே.
-     சிவகாம சுந்தரி அம்மன் அந்தாதி
(http://natarajadeekshidhar.blogspot.com)




கோயில் என்றாலே பக்தர்களுக்குப் பொருள்படுவது சிதம்பரம் தலமே. பழமை வாய்ந்தது, பெருமை படைத்தது, தெய்வத் தன்மை நிறைந்தது. சிற்பக் கலை முதற்கொண்டு பல்வேறு கலைகளின் மிக உயர்தன்மைகளை தன்னுள்ளே கொண்டது, அனுதினமும் ஆடல் காட்சியை அருளி ஆனந்தமளிக்கும் ஞானமா நடராஜப் பெருமான் கோயில் கொண்டது, முக்தியை அளிப்பது, வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அருளுவது என பற்பல சிறப்பம்சங்களைப் பெற்றது.
சிதம்பரம் ஆலயம். சைவர்கள் போற்றும் ஆலயமாகத் திகழ்ந்தாலும், அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அனைத்துலகையும் ஈன்றெடுத்த அன்னையாக நினைந்து உருகி வழிபடும் வகையான சக்தி வழிபாடாகிய சாக்தம் எனும் முறையில் பூஜைகள் ஏற்கும் மிக மிக உயர்ந்த உன்னத தலமாகவும்  விளங்குகிறது.
சிவகாம சுந்தரி  அம்பிகை - தனது அருளாட்சியால் இவ்வுலகை படைத்து, காக்கும் தெய்வமாக,  அழகே உருவாக, அருளே வடிவாக, சாக்த வழிபாட்டின் அனைத்து அம்சங்களையும், தனித்ததொரு வழிபாட்டு முறையையும் தன்னகத்தே கொண்டு, சிவகாம கோட்டம் எனும் ஏகாந்தமான ஆலயத்தில், மஹா மஹாராணியாக, சக்ரவர்த்தினியாக, வேண்டுவனவற்றை விட மேலான வரங்களை அருளும் தாயுள்ளம் கொண்டவளாக பரிபாலனம் செய்வதன் காரணத்தினாலேயே, சிதம்பரம் சாக்த வழிபாட்டுக்கும் உகந்த கோயிலாக கொண்டாடப்படுகின்றது.
(http://natarajadeekshidhar.blogspot.com)
சிதம்பரம் கோயில் வரைபடத்தை தெற்கு வடக்காக, இரு பங்காக பிரித்தால், ஒரு புறம் சைவத்தின் பேராளுகை நாயகரான நடராஜப் பெருமான் ஆடல் காட்சி நல்கி அண்டங்களை ஆட்டுவிப்பதும், மறுபுறம் சாக்தத்தின் பேருயர் நாயகியான அம்பிகை சிவகாமி அருள் காட்சி தந்து உலகத்தினை ஆட்சி செய்வதும், லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்வது போல, சிவசக்தி ஐக்கிய வழிபாட்டிற்கும் முதன்மையான தலம் என்பதும், அம்மையப்பரின் அருளால் தான் அகிலம் அசைகிறது என்பதும் புலனாகும்.  
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின், சிவகங்கைக் கரைக்கு மேற்கே, நூற்றுக்கால் மண்டபத்திற்கும், பாண்டியநாயகம் எனும் முருகர் கோயிலுக்கும் நடுநாயகமாக சிவகாம சுந்தரி கிழக்கு நோக்கி பெருங்கோயில் கொண்டருளுகிறாள்.
அன்னை சிவகாம சுந்தரி - கருணைக் கடலமுது, மக்களின் பிறவிப் பிணி தீர்க்கும் மலை மருந்து, எங்கும் தோன்றும் விளக்கொளி, கருணைப் பெருவெள்ளம், இமவான் அளித்த வனப்பேடை, மலை மன்னவன் பெற்ற துரைப்பெண், தில்லை வனமயில், தில்லைக்கரசி, தில்லைப் பெண்ணமுது, பச்சையிளந்தேன், அந்தப்புர பெருமாள், திருக்காமகோட்டமுடைய பெரிய நாச்சியார் என பற்பலப் பெயர்களால் போற்றப்படும் பெரும் தெய்வம்.
அம்பிகையின் ஆலயம் - முன் முகப்பு சொக்கட்டான் மண்டபம், ராஜ கோபுரம், அந்தப்புர பெருமாள் திருவாயில், அதனை சேர்ந்த இரண்டடுக்கு மாளிகை கொண்ட திருமாளிகை திருப்பத்தி அந்தபுர பிரகாரம், மிக அழகிய வடிவமைப்பு கொண்ட கொடி மண்டம்,  பரிவார தெய்வங்கள் அமைந்த உட்பிரகாரம், மஹா மண்டபம், அர்த்த மண்டபத்தோடு கருவறை எனும் வகையில் அற்புதமாக அமைந்துள்ளது.
(http://natarajadeekshidhar.blogspot.com)
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் இவ்வாலயம் மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்டதை,  அம்பிகை உறையும் வட இமய மலையையும் மறைக்கும் விதமாக அமைந்தது என்றும், கோயில் கட்டிய மன்னனை ஸ்ரீபீடம் கண்ட பெரிய பெருமாள் என்றும் ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் பாடுகின்றார்.
இக்கோயிலின் தென்புறத்தில் அமைந்துள்ள நூற்றுக்கால் மண்டபம் விக்கிரமசோழன் மண்டபம் என போற்றப்பட்டு, இவ்வம்பிகையின் வழிபாட்டிற்காக மட்டுமே அமைக்கப்பட்டது என்றும் சிவகாம சுந்தரி அம்பிகை திருவிழாக் காலத்தில் திருக்கோலம் (திருவோலக்கம்) அமைத்து வழிபடவும், திருமுறை விண்ணப்பம் செய்யவும் அமைக்கப்பட்டது என்பதைத் தெள்ளத் தெளிவாக மணவிற்கூத்தன் காலிங்கராயன் கல்வெட்டு கூறுகின்றது. (வரலாற்றில் சிதம்பரம் கோயில், பக்கம் -  93)
வேறெங்கும் காண முடியாத பேரழகுத் தோற்றத்தில், சமபங்கம் எனும் சிற்ப நிலையில், சுமார் ஆறடி உயரத்தில், திருமுடி தாங்கும் கிரீடத்துடன், என்றும் வற்றாத அருட்கடல் போன்ற இமைக்காத ஈடிணையற்ற திருக்கண்களும், எள் பூ போன்ற நாசியில் (மூக்கில்) நத்து, புல்லாக்கு, மூக்குத்தி ஆபரணங்கள் மின்ன, முக மண்டலமே முழு நிறைவு தந்திடும் வகையில் அமைந்திட, வலது மேல் கையில் ஜபமாலை, வலது கீழ் கையில் செங்கழுநீர்ப்பூ, இடது மேல் கையில் கிளி கொஞ்சிட, இடது கீழ்க்கை ஒய்யாரமாக தொடையின் மீது படும்படியாக அமைய, தேவர்களும், முனிவர்களும் தஞ்சமடைய வேண்டுகிற - பாடகமும், கொலுசும் அலங்கரிக்கும், திருப்பாதங்களும் கொண்ட அம்பிகையான ஞானமா சக்தியாக விளங்கிடும் சிவகாம சுந்தரி அம்பிகை, பக்தர்களின் கண்கள் கொண்ட தவப்பயனாகக் காட்சி நல்குகிறாள்.
(http://natarajadeekshidhar.blogspot.com)
பதஞ்சலி, வியாக்ரபாதர், சுக பிரம்ம மகரிஷி முதற்கொண்டு, ஆதிசங்கர பகவத்பாதர், மந்திரமூர்த்தி தீக்‌ஷிதர் உள்ளிட்ட பரம சாக்த பூஷணர்கள், ஒட்டியாண பீடம் என்று போற்றப்படும் இவ்வாலயத்தில்  வழிபட்டு பெரும் பேறு அடைந்துள்ளார்கள்.
வரலாற்றின் படி பார்த்தோமானால், விக்கிரம சோழன் (கி.பி. அல்லது பொ.யு. 1122-1135) காலம் முதற்கொண்டு, கற்றளி திருப்பணிகள் தொடங்கப்பட்டு, சோழனின் படைத் தலைவனாக விளங்கிட்ட மணவிற்கூத்தன் காலிங்கராயன் காலத்திலே சிவகாம கோட்டம் என தனித்ததொரு ஆலயம் முற்றுப் பெற்றமையை 12ம் நூற்றாண்டுக்கு முன்பாகவே இவ்விடம் சாக்த பிரதேசமாக, பிரபலமாக அமைந்திருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வார்களின் கருத்து.
(http://natarajadeekshidhar.blogspot.com)
ராஜ கோபுரத்தின் முன்பாக விளங்கும் சொக்கட்டான் மண்டபம் (தாயக்கட்டை விளையாடும் கட்டம் போன்றதொரு அமைப்பில் விளங்கும் மண்டபம்) சாலிவாகன சகம் 1716க்குச் சரியான ஆனந்த வருஷம், ஆனி மாதம் 16ம் தேதியில், திருவண்ணாமலை  ஆதீன மாயூரம் வைத்திலிங்க தம்பிரான் என்பவர் புதுப்பித்தார் என்றும், கொடி மண்டபத்தினை ஒட்டிய அழகிய ஓவியங்களை வரையச் செய்தார் என்றும் அந்த ஆதீனத்து ஓலைகள் கூறுகின்றன. (1982ம் வருட கும்பாபிஷேக பத்திரிகை, பக்கம்-9).
அம்பிகை வழிபாட்டின் உச்சமாக விளங்கும் ஸ்ரீ வித்யா உபாஸனையை நினைவு கூறும் வகையிலும், அம்பிகையை வழிபட்டால் பதினாறு பேறுகளை கிடைக்கப் பெறலாம் என்பதை உணர்த்தும் கோயிலினுள் உட்புக வகை செய்யும் பதினாறு படிகள் அமைந்துள்ளன.
ஐந்து கலசங்கள் கொண்ட முகப்பு ராஜ கோபுரம் பரமேஸ்வரனின் ஈசான, தத்புருஷ, அகோர, வாமதேவ, ஸத்யோஜாத ஐந்து முகங்களின் சக்தி உருவை நினைவுறுத்துகிறது.
சிற்ப கட்டுமானக் கலைக்கு மிகப்பெரும் எடுத்துக்காட்டு சிவகாம சுந்தரி அம்பிகை ஆலயம். திருமாளிகைப்பத்தி எனும் இரண்டடுக்கு வெளிப் பிரகாரம் மிகமிக அழகியதென்றால், கொடிமண்டபம் அற்புதக் கலைத்திறனை வெளிக்காட்டுகின்றது.  இதன் கருங்கல் கூரையில், லலிதா ஸஹஸ்ரநாமத்தின் முக்கிய கருத்துக்களை மிக பிரம்மாண்டமான படங்களாக அமைந்திருப்பதை காலம் முழுக்க பார்த்துக் கொண்டே  இருக்கலாம்.
(http://natarajadeekshidhar.blogspot.com)
புண்டரீக மஹாத்மிய கருத்துக்களை எடுத்தியம்பும் நாயக்கர் கால மூலிகை ஓவியங்கள் தமிழர்களின் வரைகலைக்குச் சான்றாக விளங்கும். தூண்கள் ஒவ்வொன்றும் ஒரு காவியம் கூறும்.
அதிசயமான முறையில் இந்த அம்பிகைக்கு நேரெதிராக நந்தியெம்பெருமான், தங்கத் தகடு போர்த்திய கொடிமரம் அருகே வீற்றிருக்கிறார். நந்தி வித்யா நடேஸ்வரி எனும் லலிதா ஸஹஸ்ரநாம வாக்கியத்திற்கு ஏற்றார்ப்போல, இந்த அம்பிகையை நந்தி தேவர் முதன் முதலில் உபாஸித்தமையால் அம்பிகைக்கு எதிரில் அமைந்துள்ளார்.
(http://natarajadeekshidhar.blogspot.com)
முதற்பிரகாரத்தில், வேறெங்கிலும் இல்லாத வகையில் அமைந்த சித்திரகுப்தருக்கு தனியொரு ஆலயமும், சங்கடங்களை நீக்கும் நடுக்கம் தீர்த்த விநாயகரும், யந்திர வழிபாடுகளுக்கு எல்லாம் தலையாயதாக அமையும் சுகபிரம்ம ரிஷி வழிபட்ட சாளக்ராமத்தினாலேயே அமையப்பெற்ற ஸ்ரீசக்ரம் ஆலயமும் உள்ளன. இதன் அருகில், ஆதிசங்கர பகவத் பாதர் இங்கு வந்து வழிபட்டு, கேனோபநிஷத்திற்கு உரை இயற்றி, ஸ்ரீ சக்ரத்தை வழிபட்டமையால், அருள்பொங்கும் பார்வையோடு  வீற்றிருக்கின்றார்.
முதலாம் குலோத்துங்கன் காலத்து 44ம் ஆண்டு கல்வெட்டுப்படி, (சிவகாம சுந்தரி கும்பாபிஷேக மலர் 1972, பக்கம் 44) குந்தவையார் அமைத்த கருவறை கோபுர விமான செப்போடு திருப்பணிக்குப் பிறகு, புனரமைக்கப்பட்ட சிறப்பு செயல்பாடு, இவ்வூரில் விளங்கும் சிவபுரி மடத்தைச் சேரும் என்பது அந்த மடத்தின் 1632ம் வருட செப்பு பட்டய சாசனம் கூறும் என்பார்கள். (1982ம் வருட கும்பாபிஷேக பத்திரிகை, பக்கம் 8)
பரிவார தெய்வங்களாக ஸப்த மாதர்களும், அத்யயன கணபதி (1982ம் வருட கும்பாபிஷேக பத்திரிகை, பக்கம் - 10), ஆறுமுகம் கொண்ட சுப்ரமண்யரும், மிக அரிதிலும் அரிதாகக் கோயில் கொண்ட சண்டிகேஸ்வரியும், பிரத்யேக உத்ஸவ யாகசாலையும் கொண்டது உட்பிரகாரம்.
(http://natarajadeekshidhar.blogspot.com)
தமிழர்களின் இசை நுணுக்கத்தினை விளக்கும், நூற்றுக் கணக்கான வாத்தியக் கருவிகளை வாசிக்கும் நிலையில் உள்ள அற்புத சிலைகளும் கோயிலை அலங்கரிக்கின்றன.
சித்ரா பெளர்ணமி, நவராத்திரி உத்ஸவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
மிகச் சிறப்பாக, ஐப்பசி பூர உத்ஸவம் அம்பிகைக்கென்றே கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பத்து தினங்கள் கொண்ட உத்ஸவத்தில், அம்பிகை தேர் ஏறி நகரின் நான்கு வீதிகளிலும் வலம் வருவதும், திருப்புதியது (பட்டு வாங்கும்) நிகழ்ச்சியும், அற்புத விழாவாக அம்பிகை பூரச் சலங்கை காட்சியும், உத்ஸவத்தின் உச்சகட்டமாக திருக்கல்யாணப் பெருவிழாவையும் காண ஆயிரம் கண்கள் கொண்டால் கூட போதாது.
(http://natarajadeekshidhar.blogspot.com)

சிதம்பரம் நடராஜர் கோயிலின் மேலான உத்ஸவமான  ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் போது, ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து நடனமாடி வரும் காட்சியை ஆயிரக்கணக்கானவர்கள் காண்பதை தனிப்பெரும் கருணைக் கண் கொண்டு அம்பிகை தானும்  காணும் விதமாக, கோயிலுக்கும் ஆயிரங்கால் மண்டபத்திற்கும் இடையே உள்ள சிவகங்கை மண்டபத்தில் பலகணி அமைத்திருப்பது பெரும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
(http://natarajadeekshidhar.blogspot.com)
சிறப்பு நாட்களில் சிவகாம சுந்தரி அம்பிகை முழுமையாக தங்கக் கவசம் ஏற்று, இரு காதுகளிலும் ஸ்ரீசக்ர தோடுகள் அணிந்து தங்கமயமாக, பொன்னம்பலத்திலே பொன்னார் மேனியனாக விளங்கும் ஞானமா நடராஜப் பெருமானுக்கு நிகராக, தனியொளி காட்டி காட்சி தருவதை மிக நிச்சயமாக வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது.
பூரப்பேட்டை எனும் கிராமமே இக்கோயில் பூஜைக்காக வழங்கப்பட்டிருந்தது என்றும், அம்பிகைக்கு பூக்கள் கொண்டு அலங்கரிப்பதற்காக நந்தவனங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டிருந்தது என்றும் இக்கோயிலுக்கான மன்னர் கால திருப்பணிகள் நடந்தது பற்றியும்  பல்வேறு கல்வெட்டுகள் எடுத்து இயம்புகின்றன.
(http://natarajadeekshidhar.blogspot.com)
மிகச் சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலுக்கு, தற்காலத்தில்             ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்‌ஷிதர்கள் முன்னிலையில், பல்வேறு கருங்கல் திருப்பணிகளை அரும்பெரும் முயற்சிகள் மேற்கொண்டு, கொடி மண்டப விதான கருங்கல் பலகைகள் பழுதானதை பலவற்றை புதியதாக மாற்றியமைத்து, புத்தோவியங்கள் கொண்டு அழகூட்டி, பக்தர்கள் யாவரும் நலம் கொள்ள, உலகம் உய்ய, மக்கள் வாழ்வாங்க வாழ வேண்டிக்கொண்டு, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது.
அன்பர்கள் யாவரும் இந்த மஹா வைபவத்தில் பங்கு கொண்டு, நற்குழந்தைப் பேறு, வம்ச அபிவிருத்தி, குழந்தைகளின் கல்வியில் மேன்மை, கற்ற கல்வியினால் நல்வேலை வாய்ப்பு, பதவிகளில் மென்மேலும் உயர்வு, நல்ல இல்லறத் துணை, எதிரிகளால் ஏற்படும் அனைத்து இடர்ப்பாடுகளையும் களைந்து நோய்கள் இல்லாத நீடித்த ஆனந்தமான நல்வாழ்வு என அனைத்தையும் பெறுவதற்கு சிவகாம சுந்தரி அம்பிகையை பிரார்த்தனை செய்து கொள்ளக் கோருகிறோம்.
(http://natarajadeekshidhar.blogspot.com)
ஞானகணேசனான அத்யயன கணபதியும், ஞானஸ்கந்தனான ஆறுமுகவேளையும் அருகமரக் கொண்டு, ஞானபிரசூனாம்பிகையாக வடிவம் கொண்டு வரமருளி, ஞானமே வாழ்விற்கான வழி எனக்காட்டும் ஞானமா நடராஜப் பெருமானின் தெய்வத்துணைக்காக ஞானபிரகாசம் குளத்திற்கு எழுந்தருளும் ஞானக் குமரியாக, ஞானசக்தியாக விளங்கும் சிவகாம சுந்தரி அம்பிகையை ஞாலத்தில் நாம் உள்ளவரை போற்றி வணங்கிடுவோம்.
..
(http://natarajadeekshidhar.blogspot.com)
நிகழ்ச்சி நிரல்
04.02.2019 07.02.2019 காலை வரை முதற்கட்ட பூஜைகள்
07.02.2019 மாலை - முதலாவது கால ஹோமம்,
08.02.2019 காலை & மாலை இரண்டு & மூன்றாவது கால யாகம்
09.02.2019 காலை & மாலை நான்கு & ஐந்தாவது கால யாகம்
10.02.2019 காலை, மாலை & இரவு 6, 7 & 8 வது கால யாகம்
11.02.2019 காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்கு பரிவார தெய்வங்கள் மற்றும் சிவகாம சுந்தரி அம்பிகைக்கான அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.
11.02.2019 மாலை மஹாபிஷேகமும், ஸ்வர்ணாபிஷேகமும், அம்பிகை வீதியுலாவும் நடைபெறும்.
11.02.2019 முதல் 30.03.2019 வரை மண்டலாபிஷேகம் நடைபெறும்.
30.03.2019 மண்டலாபிஷேக பூர்த்தி அன்று  ஏககால                           லக்ஷார்ச்சனையும், லக்ஷ தீபமும், அம்பிகை வீதியுலாவும் கோலாகலமாக நடைபெறும்.
(http://natarajadeekshidhar.blogspot.com)
.
மஹா கும்பாபிஷேக யாகசாலை காலங்களின் பொழுது, ரிக், யஜுர், ஸாமம் & அதர்வண வேத பாராயணங்கள், தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு   நாதஸ்வர இன்னிசை, ஓதுவார் மூர்த்திகளின் பண்ணிசை கச்சேரிகள் & திருமுறை பாராயணங்கள், வாய்ப்பாட்டு, சிறப்பு இசைக் கருவிகளின் கச்சேரிகள், உபந்யாஸங்கள், நாமஸங்கீர்த்தனங்கள், பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். (http://natarajadeekshidhar.blogspot.com)
சிறப்பு அன்னதானம் ஒவ்வொரு காலத்திலும் அளிக்கப்படும்.
மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் சிறப்பு யாக பூஜைகளுடனும், அபிஷேக ஆராதனைகளுடனும், ஸஹஸ்ர போஜனத்துடனும் சிறப்புற நடைபெறும்.
(http://natarajadeekshidhar.blogspot.com)

நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்
செல் : 9443479572, 9362609299
www.facebook.com/deekshidhar