சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தினுள் அமைந்து அருள்பாலித்துவரும்
ஸ்ரீ
மாம்பழ விநாயகர், ஸ்ரீ நவக்ரஹம், ஸ்ரீ சட்டநாதர், ஸ்ரீ சங்கூதிப் பிள்ளையார், ஸ்ரீ
அர்த்தஜாம அழகர்
ஆகிய தெய்வங்களுக்கான
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
***********************************
நாள் : விளம்பி வருஷம், ஆவணி மாதம் 14ம் தேதி, வியாழக் கிழமை,
30.08.2018, ரேவதி நக்ஷத்திரம்,
நேரம் : காலை 8.15 மணிக்கு மேல் 09.00 மணிக்குள்
***********************************
27.08.2018, மாலை முதல் கால யாகம்,
28.08.2018 காலை இரண்டாம் கால யாகம்,
மாலை மூன்றாம் கால யாகம், 29.08.2018 காலை, மதியம், மாலை முறையே நான்காம், ஐந்தாம்
மற்றும் ஆறாம் கால யாகம்.
30.08.2018 – காலை
08.15 மணிக்கு மேல் 09.00 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறும்.
மாலை 07.00 மணிக்கு மஹாபிஷேகமும்,
இரவு ஸ்ரீ விநாயகர் மற்றும் சிற்ப
சாஸ்த்ர முறைப்படி மிக அற்புதமாக மிக அழகாக உருவாக்கப்பட்ட பஞ்சலோக புதிய நவக்ரஹ விக்ரஹங்கள்
வீதியுலா நடைபெறும்.
மேற்படி ஒவ்வொரு நிகழ்விலும் வேதபாராயணங்களும்,
திருமுறை பாராயணங்களும் மிகச் சிறப்பாக நடைபெறும்.
*******************************************************************************
சிதம்பரம்.
கோயில் என்றாலே
பொருள்படுவது. ஆனந்த நடராஜராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை
உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக
விளங்குவது. சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தரும்
ஸ்தலம். சிதம்பர ரகசியம் விளங்குவது. அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை
தொழுதெற்றும் தலமாக விளங்குவது.
அனைத்து தெய்வங்களும்
இந்த ஆலயத்தில் குடிகொண்டதாக சிதம்பர புராணங்கள் பகர்கின்றன. காசி அன்னபூரணி
முதற்கொண்டு, சபரிமலை சாஸ்தா, திருக்கடையூர் காலஸம்ஹார மூர்த்தி என பல தெய்வங்களின் சிலா ரூபங்கள் இங்கே அமையப்
பெற்றிருக்கின்றன.
ஒரு தினத்தின் ஆறாவது
காலமாகிய, இரவு 10 மணிக்கு நடைபெறும் அர்த்த ஜாம காலப் பொழுதில், அனைத்து
தெய்வங்களின் தெய்வக்கலைகளும், சிதம்பர அம்பலவாணரிடம் சேர்ந்து, பிறகு காலை
அங்கிருந்து செல்கின்றன என்று சிதம்பர புராணத்தினைப் புகழும் குஞ்சிதாங்கிரிஸ்தவம்
எனும் நூலின் 175வது ஸ்லோகம் விவரிக்கின்றது. (ஆஸேதோ ... பஜேஹம்).
ஆகவே, பிரசித்தி பெற்ற
ஆலயங்களின் தெய்வ வடிவங்கள் சிதம்பர ஆலயத்தில் காணப் பெறலாம்.
அவ்வகையில், சிறப்புப்
பெற்ற வகையில் அமைந்திட்ட மேற்கண்ட ஆலயங்களுக்கு, மிகச் சிறப்பான முறையில் தில்லை
வாழந்தணர்கள் என போற்றப்படும் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்ஷிதர்களால் நடத்தப்படவுள்ளது.
உலகம் செழுமை பெறும் வகையிலும், ஒற்றுமை ஓங்கி, மக்கள் வாழ்வாங்கு
வாழ்ந்திட வேண்டுதல்கள் செய்யப்பட உள்ளது.
ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆலயத்தினுள் அமைந்து அருள்பாலித்து வருகின்ற, பொன்னம்பலத்தை ஒட்டிய பிரகாரத்தினை அடுத்துள்ள கிழக்குப் புறப் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மாம்பழ விநாயகர், ஸ்ரீ நவக்ரகங்கள், ஸ்ரீ சட்டைநாதர், ஸ்ரீ சங்கூதிப் பிள்ளையார், ஸ்ரீ அர்த்தஜாம அழகர் ஆகிய தெய்வாலயங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஸ்ரீ மாம்பழ விநாயகர் :
புராண காலத்தில், ஒரு
சமயம் தமக்குக் கிடைக்கப்பெற்ற மிக அரிய ஞானப் (மாம்)பழத்தினை கயிலை நாதனாகிய
சிவபெருமானிடம் ஒப்படைக்க, அவர் தமக்காக எடுத்துக்கொள்ளாமல், தம் இரு குழந்தைகளான
ஆனை முகத்தோனாகிய விநாயகருக்கும், அழகு முகத்தோனாகிய முருகப் பெருமானுக்கும் கொடுக்க
விருப்பம் கொள்ள, இருவருக்கும் ஒரே பழத்தினை பிரிக்காமல் கொடுக்க எண்ணி, ஒரு
போட்டிக்கு ஏற்பாடு செய்து, இவ்வுலகை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவருக்கே
இந்த ஞானமாம்பழம் என முடிவு செய்கிறார். முருகப் பெருமான் உலகை வேகமாக வலம் வர
எண்ணி மயில் மீது ஏறி அகிலத்தை வலம் வரச் செல்கிறார். அது சமயம், விநாயகரோ தாயும் தந்தையும் தான் தன் உலகம் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, சிவ
பார்வதியை வலம் வந்து, அகில உலகையும் வலம் வந்த பலன் கொண்டு, ஞான மாம்பழத்தைப்
பெற்று போட்டியில் வெல்கிறார்.
இதன் ஞாபகார்த்தமாக, கிழக்கு நோக்கிய
கோலத்தில் அழகே உருவாக அருளே வடிவாக, கையில் மாங்கனி ஏந்தி, அருள்பாலிக்கும்
வடிவம் அற்புதம் வாய்ந்தது. புராணத்திற்கு ஏற்ப, சிதம்பர ஆலயத்தில், இவரை
வழிபட்டு, அடுத்து உள் சென்றால் அம்மையப்பனாக விளங்கும் சிவகாம சுந்தரி உடனாய
ஞானமா நடராஜப் பெருமானை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்கப் பெறும். நடராஜர் அருளும்
பொன்னம்பலத்தின் கீழ்ப்பகுதி கைலாய பர்வதம் என்றே போற்றப்படும்.
எண்ணிய செயல்கள் யாவும் எளிதில் ஈடேறவும், அனைத்திலும் வெற்றி
காணவும் அருளும் ஸ்ரீ மாம்பழ விநாயகரைப் போற்றி வணங்கிடுவோம்.
நவக்ரஹங்கள் :
சூரியன், சந்திரன்,
செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராஹு மற்றும் கேது கிரஹங்களே நவக்ரஹங்கள்
எனப் போற்றப்படுகின்றது. நவக்ரஹங்களின் சஞ்சாரப் படியே நமது வாழ்க்கை
நடைபெறுகின்றது என்பதை ஜாதக அலங்காரம் எனும்
நூல் விவரிக்கின்றது.
மாம்பழ விநாயகருக்கு இடது
பக்கத்தில், நவக்ரஹ ஆலயம் அமைந்துள்ளது. மிக மிக அற்புதமான வேலைப்பாடுகளோடு,
நவக்ரஹ சிலைகள் காணப்படுகின்றன. முதன் முதலாக நவக்ரஹங்களுக்கான கல் சிலை வடிவங்கள்
வழிபாடுகளில் கொண்டுவரப்பட்டது சிதம்பரத்தில் தான் என்பது வரலாற்று ஆய்வாளர்களின்
கூற்று.
பரமேஸ்வரனைப் பணிந்து,
சனீஸ்வரன் எனப் பெயர் பெற்று, நவக்ரஹங்களுக்கு தென்மேற்கில் தனித்ததொரு
கோஷ்டத்தில் கிழக்கு நோக்கி, தோஷங்களை நீக்கும் விதத்திலும், அருள்தரும்
வடிவாகவும் வீற்றிருக்கின்றார்.
மற்றைய ஆலயங்களைப் போல்
பக்தர்கள் இங்குள்ள நவக்ரஹங்களை வலம் வர இயலாது. ஏனெனில், நவநாயகர்களும் நடராஜப்
பெருமானை வலம் வந்து கொண்டிருப்பதாக ஐதீகம்.
கண் சம்பந்தமான நோய்கள்
நீங்க சூர்ய பகவானையும்,
அன்றாட வாழ்க்கை
நல்லபடியாக அமைய சந்திரனையும்,
நிலம், வீடு சம்பந்தமான
விஷயங்களில் வெற்றிபெற செவ்வாயையும்,
குழந்தைகளின் நற்கல்வி,
தேர்வுகளில் தேர்ச்சி பெற புதனையும்,
கற்ற கல்வியினால் நல்வேலை
வாய்ப்புக் கிடைத்திட குருவையும்,
குடும்ப வாழ்க்கை சுகமாக
விளங்க சுக்ரனையும்,
நோயற்ற நீண்ட ஆயுளைத்
தரவல்ல சனீஸ்வரரையும்,
நோய்கள் நீங்க வழி
செய்யும் ராகுவையும்,
வம்ச அபிவிருத்தி பெற கேதுவையும் வணங்கி வழிபடுவோம்.
ஸ்ரீ சட்டநாதர் :
ஸ்ரீ விஷ்ணு பகவான் தச
அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தை எடுத்தபோது கொண்ட கர்வத்தை அடக்கும் ஈஸ்வர
அம்சமாகப் போற்றப்படுபவர் சட்டநாதர். எலும்பு மாலையும், கதையும் கொண்ட பைரவ
அம்சமாக அழகுக் கோலம் கொண்டவர். சிதம்பரத்தை அடுத்த சீர்காழி தலத்தில் சிறப்பாக
வழிபாடு ஏற்பவர்.
ஸ்ரீ சட்டநாதர், சிதம்பரம்
ஆலயத்தில், தேவஸபை வாசலுக்கு வலது புறத்தில், தெற்கு நோக்கிய கோலத்தில்
அருள்பாலிக்கின்றார்.
வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் நீங்கவும், எதிரிகளால் ஏற்படும்
பில்லி, சூனியம் போன்ற ஏவல்கள் நீங்கவும் ஸ்ரீ சட்டநாதரை வழிபடுவதுண்டு.
ஸ்ரீ சங்கூதிப்
பிள்ளையார் :
நவக்ரஹ ஸன்னதிக்கு இடது
புறத்தில், தேவஸபை மண்டபத்தின் சுவற்றில், கோஷ்ட தெய்வமாக, மேற்கு நோக்கிய
வடிவமாக, அழகு கொஞ்சும் ஸ்ரீ சங்கூதிப் பிள்ளையார் அருள்கிறார்.
நற்குழந்தைப் பேறு கிடைக்கப் பெறவும், குழந்தைகளுக்கு நேரிடும்
பாலாரிஷ்ட தோஷங்கள் நீங்கவும், குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்கள் நீங்கவும்
சங்கூதிப் பிள்ளையாரை வழிபடுவது நலம் தரும்.
அர்த்த ஜாம அழகர் :
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர்
ஆலயத்தில், மேற்கண்ட சங்கூதிப் பிள்ளையாருக்கு வலது புறத்தில், அர்த்தஜாம அழகர்
கோயில் கொண்டுள்ளார்.
அர்த்தஜாம அழகர், ஈஸ்வர
அம்சம் என்றும், பைரவ அம்சம் என்றும், துவாரதேவதா அம்சம் என்றும், தர்மராஜர்
அம்சம் என்றும் பலவித கருத்துக்கள் உண்டு.
ஒரு நாளில் நடைபெறும் ஆறு
கால பூஜைகளில், நிறைவு பூஜையாக அமையும், இரவு பத்து மணி அளவில் நடந்தேறும்
அர்த்தஜாம பூஜையில் ஸ்ரீ நடராஜர், பள்ளியறை தீபாராதனைகளைத் தொடர்ந்து, நிறைவாக
அர்த்தஜாம அழகர் எனும் இத்திருக்கோலத்திற்கு மஹா தீபாராதனையோடு அன்றைய பூஜைகள்
நிறைவுறும்.
அமர்ந்த வடிவில், தூக்கிய இடது கையும், வலது கையில் கதை
ஆயுதமும், பெயருக்கு ஏற்றார்ப்போல் மிக மிக அழகிய வடிவினராக அருள்கிறார்.
அர்த்தஜாம அழகரை வழிபட்டால், களவு போன அல்லது தொலைந்து போன பொருட்கள்
திரும்பக் கிடைத்திடும், செல்வங்கள் நிலைத்து நிற்கும், கடன் தொல்லைகள் நீங்கும், செல்வங்கள்
சேர்ந்திடும்.
பொது தீக்ஷிதர்களின் சிறப்பான மேற்பார்வையில்,
பூரண வைதீக நெறிமுறைப்படி நடைபெறும், மேற்கண்ட தெய்வங்களுக்கான மஹா கும்பாபிஷேக
நிகழ்ச்சிகளை பக்தர்கள் அனைவரும் தரிசித்து தேவதா அனுக்ரஹத்தினைப்
பெறக்கோருகின்றோம்.
-
நி.த. நடராஜ தீக்ஷிதர்
-
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர்
ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜகர்
-
செல் : 9443479572,
9362609299
Thanks to SUDHAN for
Photos.
No comments:
Post a Comment