உ
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில்
ஸ்ரீ சிவகாம ஸுந்தரி ஸமேத ஸ்ரீமன் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்திக்கு
கோடி அர்ச்சனை, அதிருத்ர மஹா யாகம், லக்ஷ ஹோமம், மஹாபிஷேகம்
த்யாயேத் கோடி ரவிப்ரபம் த்ரிநயநம் சீதாம்சு கங்காதரம்
தக்ஷாங்க்ரிஸ்தித வாம குஞ்சிதபதம் சார்தூல சர்மாம்பரம்
।
வந்ஹிம் டோலகராபயம் டமருகம் வாமே சிவாம் ச்யாமலாம்
கல்ஹாரம் ஜபஸ்ருக் சுகாம் கடிகராம் தேவீம் ஸபேசம் பஜே ॥
- த்யான ஸ்லோகம், ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமம்
பூவ னூர்ப்புனி தன்திரு நாமந்தான்
நாவில் நூறுநூ
றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.
- - தேவாரம், திருநாவுக்கரசர்
கோடி அர்ச்சனை ஆரம்பம் :
ஸ்வஸ்திஸ்ரீ சோபகிருது வருஷம்,
மார்கழி மாதம் 12ம் தேதி,
28.12.2023, வியாழன்
அதிருத்ர ஜபம் :
ஸ்வஸ்திஸ்ரீ சோபகிருது வருஷம், மாதம் 25ம்தேதி, 08.02.2024, வியாழன் முதல்
மாசி மாதம் 6ம் தேதி, 18.02.2024, ஞாயிறு வரை,
தினமும் காலை 08.00 மணியளவில், 121 தீக்ஷிதர்களால் பத்து தினங்களில்
14,641 முறை ஸ்ரீ
ருத்ர ஜப பாராயணம் (அதிருத்ர ஜபம்) நடைபெறும்.
அதிருத்ர மஹாயாகம், லக்ஷ ஹோமம், ஸ்ரீ நடராஜர் மஹாபிஷேகம் :
ஸ்வஸ்திஸ்ரீ சோபகிருது வருஷம்,
மாசி மாதம் 10ம் தேதி,
22.02.2024, வியாழன்
லோக க்ஷேமத்திற்காகவும், உலக மக்கள் யாவரும் நோயற்ற நீடித்த நல்வாழ்க்கை வாழவும், அனைவரும் சுபிக்ஷமாக, மகிழ்வாக வாழவும் – நம்பெருமான் கருணாமூர்த்தி ஸ்ரீ சிவகாம ஸுந்தரி
ஸமேத ஸ்ரீமன் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தியை மனமுருக வேண்டி, பிரார்த்தனை செய்து கொண்டு, தில்லை
வாழந்தணர்கள் என தமிழ்த் திருமுறைகள் போற்றும் தீக்ஷிதர்களால் மேற்கண்ட நிகழ்வுகள்
அனைத்தும் மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படவுள்ளது.
கோயில் என்றாலே
பொருள்படுவது சிதம்பரம் திருத்தலம். பல கலைகளின் அதி மேன்மையான அம்சங்களைத் தன்னகத்தே
கொண்டதும், மூர்த்தி – தலம் - தீர்த்தம்
என மூன்றினாலும் பெருமையும் பெற்ற அருட்தலம். பற்பல தெய்வ உருவ நிலைகளை உள்ளடக்கிய தெய்வத்தலம். தில்லை மூவாயிரவர் எனப் போற்றப்படும் தீக்ஷிதர்களால், காலம் காலமாக பூரணமான வைதீக நெறிமுறைப்படி வழிபாடு ஆற்றப்பட்டும் வைதீகத்தலம்.
இங்கு, ஆடல்வல்லப் பெருமானாகிய ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்தி அனுதினமும் ஆடல்காட்சியை
நல்கி ஆனந்தத்தை அளித்திடுகிறார்.
அர்ச்சனை : இறைவனை வழிபடும் வகைகளில் மிக எளியதும், வரங்களை விரைவில் வழங்கக் கோருவதிலும், ஸ்தோத்திரம் எனும் வகையில் தெய்வத்தினை போற்றிடும் சிறப்பு அம்சமாக அர்ச்சனை கருதப்படுகின்றது. பல்வேறு மலர்களாலும், இலைகளாலும் தெய்வத்திடம் சேர்ப்பிக்கும் அர்ச்சனை அளவில்லாத பலன்களைத் தரக்கூடியது.
புராணங்களில் பல்வேறு இடங்களில்
தெய்வங்களே தெய்வங்களை அர்ச்சித்திருப்பது கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.
உதாரணமாக, திருவீழிமிழலையில் மஹா விஷ்ணு, மலர்க்கொண்டு அர்ச்சித்து, மஹா ஸுதர்சன
சக்கரத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்றதாக தலவரலாறு தெரிவிக்கிறது.
16 தெய்வப் பெயர்களைக் கொண்டு செய்யப்படுவது ஷோடச நாமாவளி என்றும், 108 கொண்டு செய்வது சதநாமாவளி என்றும், 300 கொண்டு அர்ச்சிப்பது த்ரிசதி என்றும், 1008 கொண்டு வழிபடுவது ஸஹஸ்ரநாமம் என்றும் அழைக்கப்படும்.
கோடி என்ற சொல் நேரடியாகவே இந்த ஸஹஸ்ரநாமத்தில் இடம்பெறுகிறது. கோடி மன்மதர்களின் மொத்த அழகையும் கொண்டவர் என நடராஜரின் திருமேனியை வர்ணிக்கும் நாமாவளி அமைந்துள்ளது. கோடியின் அம்சம் கொண்ட ஸ்ரீ நடராஜரை கோடி முறை அர்ச்சனை செய்வது புண்ணியத்திலும் புண்ணியத்தை நல்குவதாக அமையும்.
செனனமூன் றிற்செய்த பாதகம் ஒழிக்குமுன் சென்ற குலம் எழு மூன்றையும்
சிவபுரத் துய்க்கும்ஐ யாயிரம் கரிகளொடு செப்ப ருங்கபி லைகோடி
வினவுசுப லட்சண மிகுந்தகன் னிகைகோடி வேண்டிய பயனு தவுமேன்
மேதகும் சாளக்கி ராமமா யிரமுதவல் விரிதட மீரைந் துகோடி
கனகமகம் ஆயிரம் கோடிபுரி பயனுநற் கதிபெற விரும்பி னுமெமைக்
கருதியுள் ளன்பொடொரு கூவிளம் சாத்தியே கசிந்தவர்க்கு எய்தும் என்றாய்
தினமுமுன தாயிரம் திருநாம அர்ச்சனைகள் செய்தூமூ வாயிர வர்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச செகதீ சநட ராசனே.
பொதுவாக, ஆண்டுக்கு இரண்டு முறை மஹோத்ஸவ காலத்திலும், பல்வேறு நிகழ்வுகளிலும் ஸ்ரீ நடராஜருக்கு லக்ஷார்ச்சனை நடைபெறுவதைக் காணமுடியும்.
கோடி ஸூர்ய ப்ரகாசராக இலங்கும் ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு, ஒரு கோடி எண்ணிக்கையிலான மாபெரும் அர்ச்சனை வைபவத்தைக் காண்பவர்கள், கேட்பவர்கள், பங்குபெறுபவர்கள் அனைவருக்கும் - பல கோடி நன்மைகளை நடராஜர் நல்குவார் என்பது உறுதி.
லக்ஷ ஹோமம் :
ஒரே நேரத்தில் நூற்று எட்டு தீக்ஷிதர்கள், ஒன்பது யாக குண்டங்கள் வாயிலாக நடேச ஸஹஸ்ரநாமாவளிகளை ஹோமம் செய்வது லக்ஷ ஹோமம் ஆகும்.
யஜுர் வேதத்தின் மையப் பகுதியானதும், நமசிவாய எனும் ஐந்தெழுந்து மந்திரத்தை தன்னுள் கொண்டதும், முழுவதும் சிவபெருமானையே போற்றுவதும் ஆகிய ஸ்ரீ ருத்ர மந்திரம் அளப்பரிய சக்தி கொண்டது. பரமேஸ்வரரின் பேரருளைப் பெற்றுத் தரக்கூடியது. மங்களங்களை வழங்கக் கூடியது. அதிருத்ர மஹா யாகம் என்பது ஸ்ரீ ருத்ரத்தினை 14641 முறை சொல்லப்பட்டு, அதில் பத்தில் ஒரு பங்கு ஹோமம் செய்யப்படுவது ஆகும்.
மஹாபிஷேகம் :
அபிஷேக பிரியர் என்பது நடராஜருக்கு உரிய சிறப்பு பெயர். ஸ்ரீ நடராஜர் அபிஷேகத்தைக் காண்பது மனதைக் கொள்ளை கொள்வதாக அமையும். அதிலும், சிதம்பரத்தில் நடைபெறும் அபிஷேகம், வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் பெரும் நிகழ்வாக, அபிஷேகப் பொருட்கள் பெருமளவு கொண்டதாக அமையும்.
கோடி அர்ச்சனை நிகழ்வின் பலன் :
நற்குழந்தைப் பேறு, பாலாரிஷ்ட தோஷ நிவர்த்தி (குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்குதல்), குழந்தைகளின் கல்வி மேம்பாடு, நல்ல ஞாபக சக்தி, தேர்வுகளின் நன்மதிப்பெண்கள்
பெறுவது, கற்ற கல்விக்கேற்ற
உத்யோகம், உத்யோக உயர்வு, வியாபாரத்தில் பெருலாபம், சுப திருமண யோகம், நல்ல இல்லற வாழ்க்கை, நோயற்ற நீடித்த நல்வாழ்வு, வம்ச அபிவிருத்தி, ஸகல ஸெளபாக்கியங்கள், பித்ரு (முன்னோர்களால் ஏற்படும்) தோஷ நிவர்த்தி, பித்ருக்களின் பூரண ஆசீர்வாதம், நவக்ரஹ ஜாதக தோஷ நிவர்த்தி
மற்றும் வேண்டும் வரங்களை மிக விரைவில் வழங்கிடும் இந்த மஹா மஹா வைபவத்தில்
பக்தர்கள் அனைவரும் பங்கு கொண்டு, ஸ்ரீ சிவகாம ஸுந்தரி ஸமேத ஸ்ரீமன் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தியின்
பரிபூரண அருளால் அனைத்து பயன்களையும் பெற வேண்டுகின்றோம்.
நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்
செல் : 9443479572,
9362609299.
Mail : yanthralaya@gmail.com
Visit us : http://natarajadeekshidhar.blogspot.com
2 comments:
சிவாய நம
சிவாயநம
Post a Comment