Tuesday, August 10, 2021

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் புதிய வரலாறு படைக்கும் பிரம்மாண்டமான முப்பெரும் விழா

 

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில்
புதிய வரலாறு படைக்கும்
பிரம்மாண்டமான முப்பெரும் விழா
 

1. ஸஹஸ்ர (1000) சண்டி பாராயணம் & சத (100) சண்டி ஹோமம்

(11.08.2021 – 19.08.2021, காலை & மாலை சண்டி பாராயணம்

20.08.2021 – காலை சதசண்டி ஹோமம், ஸ்ரீ துர்கை மஹாபிஷேகம்)

 

2. அதிருத்ர ஜபம் & மஹா யாகத்துடன் ஸ்ரீ நடராஜர் மஹாபிஷேகம்

(11.08.2021 – 20.08.2021, காலை வேளை,

ஸ்ரீருத்ர ஜபம் 14641 முறை  பாராயணம்,

21.08.2021, காலை மஹா யாகம், மாலை ஸ்ரீ நடராஜர் மஹாபிஷேகம்)

 

3. ஸ்ரீ முனீஸ்வரர் (ஜடாதரர்) ஆலய மஹா கும்பாபிஷேகம்

(18.08.2021 யாகசாலை முதல் காலம் ஆரம்பம்,

20.08.2021, காலை 06.00 – 07.30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம்)

 *****



கோயில் என்றாலே பொருள்படுவது சிதம்பரம் திருத்தலம். பல கலைகளின் அதி மேன்மையான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதும், மூர்த்தி தலம் - தீர்த்தம் என மூன்றினாலும் பெருமையும் பெற்ற அருட்தலம். பற்பல தெய்வ உருவ நிலைகளை உள்ளடக்கிய தெய்வத்தலம். தில்லை மூவாயிரவர் எனப் போற்றப்படும் தீக்ஷிதர்களால், காலம் காலமாக பூரணமான வைதீக நெறிமுறைப்படி வழிபாடு ஆற்றப்பட்டும்  வைதீகத்தலம்.

இங்கு, ஆடல்வல்லப் பெருமானாகிய ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்தி அனுதினமும் ஆடல்காட்சியை நல்கி ஆனந்தத்தை அளித்திடுகிறார்.

இக்கோயிலில் நடைபெறும் விழாக்கள் மிக பிரம்மாண்டமானதாக அமையும்.

மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளும் சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் எனும் ஸ்ரீ நடராஜர் கோயில் பொது தீக்ஷிதர்களால், மிகச் சிறப்பு வாய்ந்த முறையில் நடத்தப்படவுள்ளது.

*********************************************************************************************************

 1. ஸஹஸ்ர (1000) சண்டி பாராயணம் & சத (100) சண்டி ஹோமம்

(11.08.2021 – 19.08.2021, காலை, மாலை சண்டி பாராயணம்

20.08.2021 – காலை சதசண்டி ஹோமம், ஸ்ரீ துர்கை மஹாபிஷேகம்)

 

சிதம்பரம் ஆலய வழிபாட்டு வரலாற்றில் முதல் முறையாக ஸஹஸ்ர சண்டி பாராயணமும், சத சண்டி ஹோமமும் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

அம்பிகை வழிபாட்டு முறையில் மிக மேன்மையான வழிபாடாக அமைவது சண்டி ஹோமம் ஆகும்.

சண்டி பாராயணம் என்பது துர்கா ஸப்தசதி அல்லது தேவி பராக்கிரமம் எனும் பெயர் கொண்டதும், மார்க்கண்டேய புராணத்தின் மையமாக அமைந்ததும், அம்பிகையின் அனைத்து லீலைகளையும் பகர்வதும், தனது எதிர்ப்புகளை எப்படியெல்லாம் அம்பிகையானவள் தகர்த்தாள் என்பதையும் - மிக அருமையாகக் கூறும் ஸ்லோகங்களை பாராயணம் செய்வது ஆகும்.

துர்கா ஸப்தசதியானது 700 (பதின்மூன்று அத்தியாயங்கள்) ஸ்லோகங்களைக் கொண்ட அருமந்திரத் தொகுப்பு. இதனை ஒரு முறை பாராயணம் செய்தாலே பெரிய புண்ணியம் கிடைக்கப் பெறும். 

இதையே, ஸ்ரீ துர்கை அம்மன் சன்னதியில், ஆயிரம் முறை பாராயணம் செய்து (50 தீக்ஷிதர்கள், தினமும் இரு வேளை, பத்து தினங்களுக்குள்),  ஐந்து யாக குண்டங்கள் வாயிலாக, ஐம்பது தீக்ஷிதர்கள் கொண்டு, 100 முறை ஹோமம் செய்வது சதசண்டி மஹா யாகம் ஆகும். இது, அளவிடற்கரிய பலனைத் தரக்கூடியது.

நிறைவாக, ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பிகை ஆலயத்தின் அருகில் உள்ள ஸ்ரீ துர்கை அம்பிகைக்கு மஹா அபிஷேகம் நடைபெறும்.

 

பலன் : இந்நிகழ்வைக் காண்பதும், கேட்பதும், பங்கேற்பதும் மனதில் உள்ள அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றக் கூடியது. மங்கலமான வாழ்வைத் தரக்கூடியது. எதிரிகளால் ஏற்படும் அனைத்து இன்னல்களையும் அறவே நீக்கவல்லது.

**********************************************************************

2. அதிருத்ர ஜபம் & மஹா யாகத்துடன் ஸ்ரீ நடராஜர் மஹாபிஷேகம்

(11.08.2021 – 20.08.2021, காலை & மாலை

ஸ்ரீருத்ர ஜபம் 14641 முறை  பாராயணம்,

21.08.2021, காலை மஹா யாகம், மாலை ஸ்ரீ நடராஜர் மஹாபிஷேகம்)

 

அபிஷேக பிரியர் என்பது நடராஜருக்கு உரிய சிறப்பு பெயர். ஸ்ரீ நடராஜர் அபிஷேகத்தைக் காண்பது மனதைக் கொள்ளை கொள்வதாக அமையும். அதிலும், சிதம்பரத்தில் நடைபெறும் அபிஷேகம், வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் பெரும் நிகழ்வாக, அபிஷேகப் பொருட்கள் பெருமளவு கொண்டதாக  அமையும்.

வருடத்திற்கு ஆறு முறை நடராஜர் அபிஷேகம் நடைபெறும்.

அதில், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. இந்த மஹாபிஷேக வைபவத்தில் தான், சிறப்பம்சமாக, நடராஜ மூர்த்தியை, பிரம்மச்சாரி வடிவமாகக் கருதி, அனைத்து வைதீக சடங்குகளுடன் பூணூல் அணிவிக்கும் நிகழ்வு நடைபெறும்.

ஒவ்வொரு மஹாபிஷேகத்தின் போதும், முன்னதாக ருத்ராபிஷேகம் நடைபெறும். சில சமயங்களில், மஹா ருத்ர வைபவத்தோடு நடைபெறும்.

தற்போது, மேலும் சிறப்பாக, 121 தீக்ஷிதர்கள், 10 நாட்களில், காலை வேளையில், 14641 முறை ஸ்ரீ ருத்ரம் எனும் சிறப்பு  வாய்ந்த மந்திரத்தை பாராயணம் செய்வார்கள்.

ஸ்ரீ ருத்ர மந்திர சிறப்பு :

நமது இந்து சனாதன மதத்திற்கு ஆதாரமாக விளங்குவது ரிக், யஜுர், ஸாமம் மற்றும் அதர்வணம் எனும் நான்கு வேதங்கள். யஜுர் வேதத்தின் மையப்பகுதியாகவும்,  வேதத்தின் சாரமாகவும், சைவத்தின் மிக உயர் நிலை தெய்வமாக விளங்கும் சிவபெருமானையே முழுவதும் போற்றுவதும் ஆகத் திகழ்வது ஸ்ரீ ருத்ரம் ஆகும்.

ஸ்ரீருத்ரம் - யஜுர் வேத தைத்திரீய ஸம்ஹிதையின் நடுநாயகமாக அமைந்துள்ளது.

சிவநேயர்களின் இறைகோஷமாக எப்பொழுதும் சொல்லப்படுதும், சைவத் திருமறைகள் அற்புதமாக போற்றுவதும் (நமசிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க) ஆகிய 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்தை தன்னுள் கொண்டது ஸ்ரீ ருத்ரம். (நமசிவாயச)

21.08.2021 அன்று காலை ஸ்ரீ ருத்ர ஜப பாராயணங்களை நிறைவு செய்து, மஹா யாகம் நடைபெற்று, மாலை ஸ்ரீ சிவகாம ஸுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்திக்கு ஸகல திரவிய மஹா மஹாபிஷேகம் நடைபெறும்.

 

பலன் : விரும்பிய வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும். நினைத்த காரியங்கள் ஈடேறும். ருத்ர ஜெபத்தால் எல்லா தெய்வங்களும் திருப்தி அடைகின்றனர் என்று ஸூம்ஹிதை கூறுகிறது.

**********************************************************************

 

3. ஸ்ரீ முனீஸ்வரர் (ஜடாதரர்) ஆலய மஹா கும்பாபிஷேகம்

(18.08.2021 - முதல் கால யாகம் ஆரம்பம்,

20.08.2021, காலை 06.00 – 07.30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம்)

 

ஸ்ரீ நடராஜர் கோயிலுக்கு நான்கு ராஜ கோபுரங்கள் உண்டு. ஒவ்வொரு கோபுரத்திற்கும் முன்பாக வருவோரை அருள்பெற வரவேற்கும் விதமாக விநாயகர் முதற்கொண்டு பல்வேறு தெய்வங்கள் அமைந்துள்ளன.

அதில், வடக்கு கோபுரம் - விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் (1509-1529) செப்பனிட்டுக் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

வடக்கு நுழைவு வாயிலுக்கும் (மணி மண்டபம்), வடக்கு கோபுரத்திற்கும் இடையில், வடக்கு கோபுரத்திற்கு மிக அருகில், கிழக்கு புறத்தில், ஸ்ரீ விநாயகரும், ஸ்ரீ முனீஸ்வரரும் கோயில் கொண்டுள்ளனர்.

வினைகளை வேரறுக்கும் விநாயகர், வளங்களை அருள்பவராக அமைந்துள்ளார்.

அருகில் ஸ்ரீ முனீஸ்வரர் அருட்காட்சி தருகிறார். இந்த ஸ்வாமி ஜடாதரர் என்று பெயர் கொண்டதாக கோயில் வரலாறு தெரிவிக்கிறது.

தீக்ஷிதர் மரபில் உதித்தவரும், சைவ சித்தாந்த நூல்களை இயற்றியவரும் ஆகிய உமாபதி சிவாச்சாரியார், தமது காலத்தில் செய்த பல திருப்பணிகளில் ஒன்றாக, இந்த ஜடாதர முனீஸ்வரரை, துஷ்ட சக்திகளை அடக்கவும், எதிர்ப்புகள் யாவும் நீங்கவும், அனைவரும் வழிபடும் வகையில் நிறுவினார் என அவர் வாழ்க்கை வரலாறு தெரிவிக்கிறது.

தற்காலத்தில், இக்கோயிலை மிக அழகாக புனரமைத்து, இரண்டு யாக குண்டங்கள், நான்கு கால பூஜைகளின் வாயிலாக மஹா கும்பாபிஷேகம், 04.08.2021 அன்று காலை 06.00 மணிக்கு மேல் 07.30 மணிக்குள் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

 

பலன் : ஸ்ரீ முனீஸ்வரர் குல தெய்வங்களுக்கெல்லாம் தலையாய தெய்வம்.

ஆகையால், குல தெய்வம் தெரியாதவர்கள், குலதெய்வ ஆராதனைகளை சரிவரச் செய்ய இயலாதவர்கள் இத்தெய்வத்தை வணங்கினால் முழுமையான அருளைப் பெற முடியும். வம்சம் அபிவிருத்தியாகவும், நல்ல திருமண வாழ்க்கையும் கிடைக்கப் பெறும்.

 

மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளையும் தரிசித்து, தெய்வங்களின் பரிபூரணமான அருளைப் பெறவேண்டுமாய்க் கோருகிறோம்.

 

நி.. நடராஜ தீக்ஷிதர்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் டிரஸ்டி & பூஜகர்

செல் : 9443479572, 9362609299.

Mail : yanthralaya@gmail.com

Please visit : http://natarajadeekshidhar.blogspot.com

 

                               

2 comments:

culture and construction said...

Nice work of you ji.

Anonymous said...

நமஸ்காரங்கள் 🙏🙏🙏👍