Saturday, February 28, 2015

முன்நின்று அருளும் முக்குறுணி விநாயகர்

முன்நின்று அருளும்
முக்குறுணி விநாயகர்

 சிதம்பரம் பெரிய பிள்ளையார்


ஸ்ரீ விநாயக மூர்த்தி :
அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.

மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் என்று வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.

விநாயகர் தோற்றத்தினைப் பற்றி பல்வேறு விதமான புராணங்கள் அழகுறப் பகர்கின்றன. (விநாயகர் தோற்றம், விநாயகர் சதுர்த்தி போன்ற விபரங்களை இந்த லிங்க் சென்று படியுங்கள். http://natarajadeekshidhar.blogspot.in/2010/08/11092010.html

முன் நிற்கும் முதற்கடவுள் :
எந்தவொரு சைவ ஆலயங்களிலும் விநாயகருக்கு என்றே தனி இடம் உண்டு. அவரை வழிபட்ட பின்பு தான் மற்ற கடவுளரை வழிபடவேண்டும் என்ற வழக்கமும் உள்ளது.

உலகெங்கிலும் உள்ள ஆலயங்களில் பல்வேறு விதமான வடிவங்களில், எண்ணிலடங்கா நிலைகளில் விநாயகர் அருள்பாலிக்கின்றார்.

அதில், மிகவும் பிரசித்தி பெற்ற, வரங்களை உடன் வாரி வழங்கக் கூடிய, தோற்றத்தினைப் போல பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விதத்திலும் பெரியோனாக விளங்கும், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பெரிய பிள்ளையார் என்று போற்றப்படும் முக்குறுணி விநாயகர் ஆலயம் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

முக்குறுணி விநாயகர் : 

(அருகிலிருப்பது அரிய பழைய புகைப்படம்)

சிதம்பரம் நடராஜர் கோயிலின் ராஜ கோபுரம் என போற்றக்கூடிய தெற்கு கோபுர வாயிலைத் தாண்டினோமானால், இடது பக்கம் தனியொரு அழகிய ஆலயம் கொண்டு ஸ்ரீ முக்குறுணி விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.


தெற்கு கோபுரத்திலிருந்து தரிசிக்க இருக்கும் முதலாமவர் என்பதால், பெரிய பிள்ளையாரான  இவரை முகக்கட்டணத்து விநாயகர் என்று போற்றியிருக்கின்றார்கள்.

(படம் : சற்றே பழைய படம், மூன்று வாசல்களில் கதவுகள் இல்லாத படம்.)

முகப்பு மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக்ருஹம் என்ற அழகியதொரு வரிசையில் ஆலயம் தனியாக அமைந்துள்ளது.

முகப்பு மண்டபத்தின் விதானத்தில் – மேற்கூரையில், விநாயகரின் 16 வடிவங்கள் (ஷோடச கணபதிகள்) எழில் கொஞ்ச வரையப்பட்டுள்ளன.


எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம், நெடிதுயர்ந்த தோற்றம், பெயருக்கேற்றார் போல் பெருத்த வடிவம், அழகியல் கொஞ்சும், பார்த்தவுடன் கண்களில் ஒற்றிக் கொள்ளும் விதத்தில், மூர்த்தியும் பெரிது, கீர்த்தியும் பெரிது என்ற வாக்கியத்திற்கு ஏற்றாற்போல் அமைந்த ஸ்ரீ முக்குறுணி விநாயகர் அருளே வடிவமாகக் காட்சி அளிக்கின்றார்.

பெரியதொரு தோற்றத்திற்கு ஸகல திரவிய அபிஷேகக் காட்சி ஆனந்தத்தை அளித்து, அளவில்லா பேறுகளை அள்ளித்தரும்.

(படம் : இன்றைய எழிலார்ந்த தோற்றம்)

அர்த்த மண்டபத்தின் தூணில், கல்வெட்டாக விநாயகர் அகவல் அமைந்திருப்பது, பக்தர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வசதியாக இருக்கும். (விநாயகர் அகவல் பற்றி தனியொரு பதிவாகவே எழுதவேண்டும். சைவத்திற்கு சித்தாந்த மார்க்கத்தில் அமைந்த தோத்திரம் - திருமந்திரம் போல, குமரனை வழிபடுவோருக்கு கச்சியப்பரின் கந்தபுராணம் & ஸ்கந்த குரு கவசம் (சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்) போல, காணாதிபத்யத்திற்கு விநாயகர் அகவல் ஒரு சித்தாந்த பெருந்தொகுப்பு ஆகும். அதுபற்றி பிறிதொரு பதிவில் காண்போம்.)

அர்த்த மண்டபத்தின் வாசலை விட பிள்ளையார் பெரியதாக இருப்பதால், விநாயகரை அமைத்து விட்டுப் பிறகு வாசல் படி அமைத்திருப்பார்களோ என தோன்றச் செய்யும்.

விநாயகி :

(படம் : இந்த ஆலயத்தில் எடுத்தது அல்ல. இதைப் போன்றதொரு சிலையை ஆலயத்தின் முகப்புத் தூணில் காணலாம்.  நன்றி : கூகிள்)
கணபதியே அனைத்திற்கும் மூல காரணம் என போற்றும் வகையில், விநாயகி எனும் கணபதியின் பெண் வடிவம் – முகப்பு மண்டப முன் பக்கத் தூணில் அமைந்திருப்பது சாலச் சிறந்தது.

குறுணி – மூன்று குறுணி – முக்குறுணி :
பழந்தமிழர் அளவை அலகுகளில் குறுணி என்பதற்கு தற்காலம் நான்கு படி அல்லது 6 கிலோவுக்கு சமமானது. விசேஷ காலங்களிலும், வேண்டுதலுக்காகவும் –  மூன்று குறுணி அல்லது முக்குறுணி அளவு, அதாவது பதினெட்டு கிலோ அரிசிமாவினால் – ஒரே பெரிய கொழுக்கட்டை பிடிக்கும் வழக்கம் இருப்பதாலும், 12 படி அரிசி அன்னத்தினை நிவேதனம் செய்யும் வழமையாலும் – இந்தப் பெரிய பிள்ளையாருக்கு முக்குறுணி விநாயகர் என்ற பெயர் வந்தமையை அறிய முடிகின்றது.

பனிரண்டு படி அரிசி சாப்பிடுபவரின் வயிறு போன்றதொரு சரியான அளவில் விநாயகர் அமைந்திருப்பதாக சிற்பி ஒருவர் சிறப்பாகக் கூறுவார்.

மூன்று என்ற எண்ணுக்கும் முக்குறுணி விநாயகருக்கும் அநேக தொடர்புகள் உண்டு. முகப்பு வாசல் மூன்று. விநாயகரின் மேலே அமைந்திருக்கும் விமானத்திற்கு கலசங்கள் மூன்று. பிரம்ம விஷ்ணு ஈசன் எனும் மும்மூர்த்திகளின் அம்சமாக அமைந்தவர். படைக்கப்படும் குறுணியின் அளவு மூன்று.

சிதம்பர (வி)நாயகர் :
சிதம்பர பூஜை பத்ததியின் படி, முக்குறுணி விநாயகர் ‘த்ரிசிவாக்ய கணபதி’ என்று போற்றப்பட்டு வழிபடப்படுகின்றார். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் அம்சமாக இந்த விநாயகர் விளங்குவதால், இவரே படைத்தல், காத்தல், அழித்தல்  எனும் முத்தொழிலுக்கும் வித்தகனாகின்றார். விநாயகர் அகவல் போற்றுவது போல, மும்மதச் சுவடு – சைவத்தின் திருநீறு, சாக்தத்தின் குங்குமம், காணாபத்யத்தின் நம்பிக்கை தரும் தும்பிக்கை எனும் மூன்று மத அடையாளங்களைக் கொண்டவர்.

விடல் தேங்காய் வழிபாடு :
தொடங்கிய காரியத்தை தொய்வில்லாமல் நடக்க அருள்பவர் என்பதால், சிதம்பரம் கோயிலின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் இங்கு செய்யப்படும் கணபதி ஹோமம் தான் ஆரம்பம்.

இங்கு விடல் தேங்காய் வழிபாடு சிறப்புக்குரியது. செயல்கள் சிறக்கவும், வேண்டிய காரியம் நிறைவேறினாலும் – பக்தர்கள் இங்கு 1008 தேங்காய்களை விடல் தேங்காயாக உடைக்கும் வழக்கம் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்தக் கோயிலின் உத்ஸவமாக கடந்த பல்லாண்டுகளுக்கு முன்னராக, விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் உத்ஸவம் சிறப்புற நடைபெற்றதாகவும், தொடர்ந்து அன்னதானம் மிக விமரிசையாக நடந்ததாகவும் பெரியோர்கள் சொல்வார்கள்.

ஆலய இருப்பிட வரலாறு :
பொதுவாக சிவ ஆலயங்களில், விநாயகர் மற்றும் முருகர் கோயில்கள் சிவ பெருமானுக்கு இரு புறமும் அமைந்திருக்கும். அது, கோஷ்டத்திலோ அல்லது தனிக்கோயிலாகவோ அமையலாம். விநாயகர், பிரகாரம், முருகர் என வலம் வந்து சிவனை வழிபட்டால் அது மஹா பிரணவ பிரகாரம் என்பதாகும்.

அதன்படி, சிதம்பரத்தின் ஆதி மூலவராகிய, ஸ்ரீ மூலநாதர் எனும் கிழக்கு நோக்கிய தெய்வத்திற்கு, இரு மருங்கும் விநாயகரும், பாண்டிய நாயகர் கோயிலில் உறையும் முருகப் பெருமானும் அமைந்திருக்கின்றார்கள்.

வரலாற்றுக் குறிப்புகள் :
முக்குறுணி விநாயகரைப் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் நேரடியாகக் கிடைக்கவில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178 – 1218)  காலத்தினதாக இருக்கும் என நம்புகின்றார்கள்.

தெற்கு திசையில் அமைந்த பிரம்மாண்ட விநாயகரைப் போலவே, வடக்கு திசையில் பிரம்மாண்ட – ஒரே கல்லினால் ஆன – பிரம்மாண்ட முருகர் – பாண்டிய நாயகர் சன்னிதி – மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டது என ஆய்வாளர்கள் அறுதியிடுகின்றார்கள். இந்த மூன்றாம் குலோத்துங்கன் தான், நடராஜர் அமைந்திருக்கும் கருவறைக்கு நேரெதிரே நிருத்த சபை எனும் பெரு மண்டபத்தைக் கட்டினான். இது தேர் வடிவில் இருக்கும். அதே போல பாண்டிய நாயகர் முருகர் கோயிலும் தேர் வடிவில் அமைந்திருப்பதை ஆய்வாளர்கள் சுட்டுகின்றார்கள்.
(சிதம்பரத்தின்  அருகில் இருக்கும் புவனகிரி எனும் ஊர் ‘புவனேச்சரம் கொண்டான்’ எனும் மூன்றாம் குலோத்துங்கன் பெயரால் அமைந்து, தற்போது புவனகிரி என்று வழங்கப்படுகின்றது. இம்மன்னன் காலத்தில் தான் கும்பகோணம் அருகில் இருக்கும் திருபுவனம் கோயில் பொலிவு பெற்றது. அங்கிருக்கும், சரபேஸ்வரரை தனது இஷ்ட தெய்வமாகக் கொண்டதால், நிருத்த ஸபையில் சரபேஸ்வரரை அமைத்தான் என்கிறது வரலாறு.)

ஆகையால், பிரம்மாண்ட விநாயகர், முருகர் சிலைகள் கொண்ட கோயில்கள் ஒரே காலத்தில் திட்டமிடப்பட்டிருக்கலாம்.
முக்குறுணி விநாயகர் ஆலய அமைப்பு பிற்காலச் சோழர்களின் கட்டிடக் கலையையே சார்ந்திருப்பதை பலரும் நிரூபித்திருக்கின்றார்கள்.

பொதுவாக பெரிய பிள்ளையார் சிலைகள் தென் தமிழகத்திலேயே காணப்படுகின்றன. பிள்ளையார்ப்பட்டி – குடைவரை கோயில்  ஏறத்தாழ 1600 ஆண்டுகள் பழமையானது என்கின்றார்கள்.
மூன்றாம் குலோத்துங்கன் பாண்டி நாடு வரை சென்று படையெடுத்து வென்றதன் நினைவாக – தென் தமிழகமான  பாண்டி நாட்டில் உள்ள (மதுரை, திருநெல்வேலி) பெரிய பிள்ளையாரைப் போன்றதொரு சிலையை சோழ நாட்டில் நிறுவ எண்ணியிருக்கலாம்.
(முக்குறுணி விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகர் ஏறக்குறைய உயரத்திலும், உருவத்திலும் ஒன்றுபட்டிருப்பதைக் காணலாம்.)

அதன் விளைவே, சிதம்பரத்தில் பெரிய பிள்ளையார் நமக்குக் காட்சி அளிக்கின்றார். சோழ சாம்ராஜ்யம் நலிவடைந்த பின் வந்த பாண்டிய மன்னர்களும் சிதம்பரத்திற்கு பெரும் தொண்டு ஆற்றியிருக்கின்றார்கள். ஆகவே, அவர்களும் இவ்வாலயங்களுக்கு தொண்டினைத் தொடர்ந்திருக்கலாம்.

வழிபடுவதால் வரும் வளம் :

சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகரை வழிபட்டு,

பிரம்ம, விஷ்ணு, சிவ மூர்த்திகளின் பரிபூரண கிருபையைப் பெற்று,
ஆணவம், கண்மம், மாயை எனும் மலங்கள் அறுபட்டு,
சூரியன், சந்திரன், அக்னி ஆகியோரைக் கண்களாகக் கொண்டதால், நவக்ரஹ தோஷங்கள் நீங்கப்பெற்று,
வாதம், பித்தம், கபம் எனும் நோய்கள் விலகப்பெற்று,
மனம், வாக்கு, காயம் எனும் முப்பொறிகளிலும் தூய்மை பெற்று,
உம்மை, இம்மை, மறுமை எனும் மூன்றிலும் புண்ணியம் பெற்று,
தூல, தூக்கும, காரண வடிவினராய் வழிபட்டு வரம் பெற்று,
யந்திரம், மந்திரம், தந்திரம் ஆகிய மூன்று ஸாதனை முறைகளாலும் திருப்தி பெறுபவர் என்பதனால்,
ஸத், சித், ஆனந்தம் – எனும் மூன்று பரமானந்த சக்திகளைப் பெற்று

வாழ்வாங்கு வாழ்ந்து, பெரிய பிள்ளையார் அருளும் பெரும் அருளும், செல்வங்களும் பெற்று, பெரிய பேறு பெறுவோமாக !

-         நி.த. நடராஜ தீக்‌ஷிதர்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
Mobile : 94434 79572, 93626 09299.








2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வு...

விளக்கங்களுக்கு நன்றிகள்...

Geetha Sambasivam said...

முக்குறுணி விநாயகர் குறித்த அரிய தகவல்களைப் படித்தேன். மிக்க நன்றி.