லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம்
1. லகு
2. லலிதம்
3. லக்ஷணம்
4. லட்சியம்
5. லயம்
உலகத்தின் மிகப் பழமையான மதம் இந்து மதம்.
இந்து மதம் காட்டும் வாழ்க்கைப் பாதை அறப்பாதை. ஆன்மீகப் பாதை.
மக்களை வழிமுறைப்படுத்தி வாழ்வாங்கு வாழ வைக்கும் உன்னதமான மதம்.
வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்ற இந்து மதத்தின் கிளைகள் மக்களின் நல்வாழ்வுக்கு நல்வழிகாட்டுகின்றன.
அந்த இந்து சனாதன தர்ம மதம் – ஆறு உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சைவம், வைஷ்ணவம், சாக்தம், ஸௌரம், காணாபத்தியம், கௌமாரம்.
இதனுள் சாக்தம் என்பது, கடவுளை பெண்பால் வடிவத்தில் சக்தியாக வழிபடச்செய்வது.
அன்னைதான் உயிருக்குக் காரணியாக இருப்பது போல, அன்னை வடிவத்திலிருக்கும் தெய்வம் தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக விளங்குகின்றது என்பதை உணரவைப்பது சாக்தம் எனும் பிரிவு.
அன்னையை ஆதிபராசக்தியை வழிபாடு செய்ய வேதங்களும், உபநிஷதங்களும், புராணங்களும் பல வழிகளைக் காட்டுகின்றன.
அதில் மிகவும் மேன்மையானது, அன்னையின் அனைத்து லீலைகளையும் பகர்கின்ற லலிதா ஸஹஸ்ரநாமம் ஆகும்.
1.லகு :
இந்து தர்ம சாஸ்திரங்கள் சில மந்திரங்களை ஆண்கள் மட்டும், சில மந்திரங்களை பெண்கள் மட்டும் தான் சொல்ல வேண்டும் என்ற நியதிகளை வகுக்கின்றன.
ஆனால், லலிதா ஸஹஸ்ரநாமத்தினை ஆண், பெண் - எந்த நிலையிலிருந்தாலும் சொல்லப்படலாம் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன சாஸ்திரங்கள்.
(ஸ்ரீ ஹயக்ரீவரிடமிருந்து அகஸ்தியர் லலிதா ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டறிந்தார். அகஸ்தியரின் மனைவி லோபாமுத்திரை – அம்பாள் உபாஸகர்களில் மிக முதன்மையானவர். ஹாதி வித்யா என்ற ஸ்ரீ வித்யா உபாஸனையை மேற்கொண்டவர். கணவன் மனைவியாகிய அகஸ்தியரும் லோபாமுத்திரையும் தான் உலகத்திற்கு முதன் முதலில் ஸ்ரீ வித்யா உபாஸனை என்கின்ற அம்பாளின் மிக மேன்மையான மந்திரங்களைக் கேட்டறிந்தவர்கள். ஆகவே ஆண் & பெண் இருபாலாரும் மிக நிச்சயமாக இந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தைச் சொல்லி பேறு பெறலாம்.)
மிக எளிமையான வார்த்தைகள். அருமையான சொல்லாடல்கள். ஆழ்ந்த கருத்துக்கள். சிறந்த ஓசை நயம். இவையனைத்தையும் கொண்டது இந்த ஸஹஸ்ரநாமம். மிகவும் எளிமையாக இருப்பதால் லகுவான ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக அமைகின்றது.
பத்து ஸஹஸ்ரநாமங்களை சாக்த சாஸ்திரங்கள் மேலானவை என்கின்றன.
அவை, கங்கா, காயத்ரீ, ச்யாமளா, லக்ஷ்மீ, காளீ, பாலா, லலிதா, ராஜராஜேஸ்வரி, ஸரஸ்வதி, பவானீ.
அவற்றிலும் மேலான மேன்மை கொண்டது லலிதா ஸஹஸ்ரநாமம்.
2. லலிதம் :
லலிதம் எனும் வார்த்தைக்கு மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது என்று அர்த்தம். இதைப் பாராயணம் செய்வதால் மனம் லகுவாக, லேசாக, கனமற்றுப் போவதாலும், கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதாலும், சந்தோஷம் பெருகும் என்பதாலேயே லலிதா என்ற பெயர் வந்தது.
லலிதா எனும் பதத்திற்கு கொஞ்சி விளையாடுவது என்றும் அர்த்தம். அம்பிகையானவள் அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கைகளையும் ஒரு சிறு குழந்தை விளையாடுவது போல மிக எளிதாகச் செய்பவள் என்ற அர்த்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இதைப் பாராயணம் செய்யும் போது, அம்பிகையை பாலையாக, வாலைக் குமரியாக, பாலா திரிபுரசுந்தரியாக மனதில் தியானித்தால் - சிறு குழந்தைகளிடம் விளையாடும் போது, அந்தக் குழந்தைகளின் வயதுடையவராகவே நாமும் மாறுவது போல - அம்பிகையின் அருளாடல்களை எளிதில் உணரமுடியும்.
3. லக்ஷணம் :
அம்பிகையின் அனைத்து லீலைகளையும் பகர்கின்ற இந்த லலிதா ஸஹஸ்ரநாமம், பதினெட்டு புராணங்களின் ஒன்றானதும், இறுதியானதும் ஆகிய பிரம்மாண்ட புராணத்தினுள்,
ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் அகஸ்தியர் இருவருக்கிடையேயான ஸம்வாதம் (உரையாடல்) எனும் ஸம்பாஷணை வடிவிலான லலிதோபாக்கியானம் எனும் பகுதியில் அடங்கியுள்ளது.
லலிதோபாக்கியானம் – மந்த்ர கண்டம், நியாஸ கண்டம், பூஜா கண்டம், புரஸ்சரண கண்டம், ஹோம கண்டம், ரஹஸ்ய கண்டம், ஸ்தோத்திர கண்டம் எனும் பல்வேறு பிரிவுகளை உடையது.
இதில் ஸ்தோத்திர கண்டத்தினுள் அமைந்தது லலிதா ஸஹஸ்ரநாமம்.
வேதங்கள் – பரமேஸ்வரனுடைய உச்வாசம், நிச்வாசம் எனும் மூச்சுக் காற்றிலிருந்து தோன்றியவை. மிகவும் புனிதமானவை.
இந்த லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பிகையின் வாக்கிலிருந்து தோன்றியவை. வைகரீ, மத்யமா, பச்யந்தி ஆகிய அம்பிகையின் வாக்கு (சொற்களுக்கு உரிய) தேவதைகளால் சொல்லப்பட்டவை. அம்பிகையின் ஆணைப் படி வாக்கு தேவதைகளால் சொல்லப்பட்டவை.
(வைகரீ முதலான வாக் வசினி தேவதைகள் எட்டு பேர். ஒவ்வொருவரும் ஒரு ஸ்வரத்திற்கு அதிபதியானவர்கள். ஸ ரி க ம ப த நி என்ற ஏழு ஸ்வரங்களுக்கு ஏழு பேரும், அதற்கும் மேலான (அனு) ஸ்வர நிலையைக் கொண்ட (மனிதனின் கேட்கும் திறனான 50 Hz – 50000 Hz எல்லைகளுக்கு அப்பாற்பட்ட) சப்தத்திற்கு ஒருவரும் என எட்டு பேரும் சொல்லியருளியது.
இந்த லலிதா ஸஹஸ்ரநாமம் ஒரு தனிப்பட்ட நபர் எழுதியது அல்ல. தெய்வமே அனுக்ரஹித்தது.
வாக்கு தேவதைகள் அனுக்ரஹித்ததால் இது ரஹஸ்யநாம ஸஹஸ்ரம் என்றே கொண்டாடப்படுகின்றது. ரஹஸ்யம் என்றால் உள்ளுக்குள் புதைந்திருப்பது என்றும் அர்த்தம். அள்ளக் அள்ளக் குறையாத அற்புதப் புதையல் போன்றது லலிதா ஸஹஸ்ரநாமம். வற்றாத ஜீவ நதி போன்று, ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதியதாகப் படிப்பது போன்று தோன்றச் செய்யும்.
அம்பிகையின் வாக்கிலிருந்து வந்ததால், இது வேதத்திற்கு சமமாக மதிக்கப்படுகின்றது.
வேதங்களுக்கு அர்த்தம் அந்த வேதபிதாவான பரமேஸ்வரனுக்கு மட்டுமே அறியப்பட்டது.
அதேபோல லலிதா ஸஹஸ்ரநாமத்தின் முழுமையான அர்த்தம் ஜகன்மாதாவாகிய அம்பிகை மட்டுமே அறிந்தது.
இதற்கான விளக்கங்களை பற்பல ஆன்றோர்களும், அறிஞர்களும் அளித்திருக்கின்றார்கள். அவர்கள் கூட இதன் முழுமையான விளக்கத்தைத் தர முடியவில்லை என்றே கூறியிருக்கின்றனர்.
உதாரணமாக, அபர்ணா என்ற ஒரு பெயர் கொண்டு அம்பிகை போற்றப்படுகின்றாள்.
அபர்ணா என்றால் கடன் இல்லாதவள் என்று அர்த்தம். பக்தர்கள் கேட்கும் கோரிக்கையை நாளை அல்லது அடுத்த நாள் அல்லது வேறொரு நாளில் வரம் தந்து, பக்தர்களின் கோரிக்கையைக் கடனாகக் கொள்ளாதவள் அதாவது பக்தர்களின் கோரிக்கையை உடனடியாக அருளுபவள் என்று பொருள்.
அபர்ணா என்றால், அம்பிகை ஒரு சமயம் பரமேஸ்வரனைத் திருமணம் செய்து கொள்ளத் தவமாய்த் தவமிருந்தாள். தவம் செய்யும் போது, ரிஷிகள் போன்றோர் காட்டில் கிடைக்கக் கூடிய கிழங்குகள் அல்லது பழங்களை உணவாகக் கொள்வது வழக்கம். ஆனால், அம்பிகை இலையைக் கூட உண்ணாமல் (அதாவது உபவாசம் இருந்து – பட்டினியாய்க் கிடந்து) ஊசி மேல் தவம் இருந்ததாக புராணங்கள் கூறும்.
அபர்ணா என்றால் விழி மூடாதவள் (பர்ணம் – விழுதல். இமையைக் கூட விழாமல் – அதாவது கண்ணிமைக்காதவள்) விழி மூடும் சமயம் பக்தன் வந்து விட்டால், வரம் கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ணி, பக்தர்களுக்காக இமைக்காமல் இருப்பவள் என்று அர்த்தம்.
இது போன்று பல அர்த்தங்களை ஆன்றோர்கள் அமைக்கின்றார்கள்.
ஆகையினால், இதற்கான அர்த்தங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம். (லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி மற்றும் ஸௌந்தர்ய லஹரி – இந்த மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி எழுத எண்ணம் கொண்டிருக்கின்றேன். அம்பிகையின் அருளால் விரைவில் கைகூட பிரார்த்தனை செய்கின்றேன்)
லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம் :
லக்ஷணம் என்றால் குறியீடு அல்லது இலக்கணம்.
ஸஹஸ்ரநாமம் – ஸஹஸ்ர (1000) + நாமம் (பெயர்கள்).
அம்பிகையை ஆயிரம் பெயர்களால் அழகுற துதிக்கச் செய்யும் மந்திரங்கள்.
பொதுவாக, ஸஹஸ்ரம் என்ற வார்த்தைக்கு வேத பாஷ்யங்கள் – எண்ணற்றது என்று அர்த்தம் தருகின்றன. (ஸஹ்ஸ்ரசீர்ஷா புருஷ: .. ஸஹஸ்ரபாத் – யஜுர் வேதம் - புருஷ ஸூக்தம் – இங்கு ஸஹஸ்ரம் என்ற வார்த்தைக்கு எண்ணிக்கையற்றது என்றே பொருள்.)
அதேபோல் ஸஹஸ்ரநாமம் என்றால் அம்பிகை எண்ணற்ற நாமங்களை, பெயர்களைக் கொண்டவள் என்று பொருள்.
நாமாவளி என்றால் பெயர்களை வரிசையாக அமைத்தல் என்று அர்த்தம். (தீபாவளி – தீபங்களை வரிசையாக அமைத்தல்)
ஸஹஸ்ரம் என்றால் ஆயிரம் (1000) என்றும் அர்த்தம் உண்டு. ஆகவே, அம்பிகைக்குரிய ஆயிரம் பெயர்களை வரிசையாக அமைத்து வழிபடும் பிரார்த்தனைக்கு ஸஹஸ்ரநாமாவளி என்று பெயர்.
ஸஹஸ்ரநாமம் என்றால் எப்படியெல்லாம் அமையவேண்டும் என்று இலக்கண சூத்திரங்கள் (formula) அறுதியிடுகின்றன.
சலாக்ஷ்ர சூத்திரம் என்பது வடமொழி இலக்கணத்தில் மிக முக்கியமான ஒன்று.
அது, ஸஹஸ்ரநாமம் எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று நியதிப்படுத்துகின்றன.
அந்த வகையில் எல்லா விதங்களிலும் பரிபூரணமாக, மிகப் பொருத்தமாக அமைந்தது லலிதா ஸஹஸ்ரநாமம்.
எளிமையாகவும் (லகு), இனிமையாகவும் (லலிதம்), இலக்கணத்தின் முழுமை பெற்ற (லக்ஷணம்) வடிவமாகவும் லலிதா ஸஹஸ்ரநாமம் அமைந்திருப்பதனால் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றது.
லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணங்கள் பல உண்டு. அவற்றில், சிலவற்றை மட்டும் காண்போம்.
ஸஹஸ்ரநாமம் அமைய வேண்டும் என்றால் ஆயிரம் பெயர்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அவை அந்த தெய்வத்தின் புகழைக் கூறவேண்டும். அவற்றை இலக்கணப்படி ஸ்தோத்திரமாக்க வேண்டும். அப்படி ஸ்தோத்திரமாக ஆனது, சந்தஸ் எனும் சந்தம் அல்லது செய்யுள் தன்மை மாறாமல் அமைய வேண்டும்.
உதாரணமாக,
1. ஸ்ரீ மாத்ரே நம: (அன்னை வடிவான அம்பிகையை வணங்குகின்றோம்)
2. ஸ்ரீ மஹாராக்ஞ்யை நம: (அகில உலகிற்கும் மஹாராணியை வணங்குகின்றோம்.)
3. ஸ்ரீமத் ஸிம்ஹாஸநேஸ்வர்யை நம:
மேற்கண்ட மூன்று நாமாக்களையும் ஸ்தோத்திரமாக மாற்ற முடியவேண்டும்.
அது,
ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீமத் ஸிம்ஹாசனேஸ்வரீ
இப்படி ஸ்தோத்திரமாக மாற்றப்பட்டது எவ்விதத்திலும் சந்தங்களில் மாறாமல் அமைய வேண்டும்.
அதே போல மாற்றப்பட்ட ஸ்தோத்திரத்திலிருந்து நாமாவளிகாக மறுபடியும் பிரிக்க ஏதுவாக இருக்க வேண்டும்.
சில ஸஹஸ்ரநாமங்களில் ஸ்தோத்திரத்துனுள், சந்தங்களுக்கு, செய்யுள் தன்மைக்கு ஏற்ப அமைய வேண்டி, சில அர்த்தமற்ற சப்தங்கள் அமைந்துவிடும். அவை, நாமாவளிகாக மாற்ற வேண்டிவரும்போது, அர்த்தமற்ற சப்தங்கள் (ஸ்தோத்திரத்தில் இருப்பவை) நாமாவளிகளில் வராது.
அ எனும் எழுத்தில் 40 நாமாவளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆ எனும் எழுத்தில் 11 இ – 3 ஈ – 2 உ – 5 ஊ – 5 ஏ – 1 ஓ – 2 அம் – 4 க – 81 க(2) – 1 க(3) – 24 ச – 29 ச(2) – 1 ஜ – 18 ட(3) – 2 த – 46 த(3) – 37 த(4) – 14 ந – 75 ப – 81 ப(3) – 24 ப(4) – 37 ம – 112 ய – 13 ர – 38 ல – 14 வ – 79 ச – 59 ஷ – 5 ஸ – 122 ஹ – 11 க்ஷ – 9 நாமாவளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. (ஆக மொத்தம் ஆயிரம் நாமாவளிகள்) வடமொழியின் 51 எழுத்துக்களில் நாமாவளிகள் ஆரம்பிக்காத எழுத்துக்கள்: ஊ, ரு, ரூ, லு, லூ, ஐ, ஔ, அ:, க(4), ங, ஜ(4), ஞ, ட, ட(2), ட(4), ண, த(2), ப(2), ள – ஆகிய 19 எழுத்துக்களில் அம்பிகையின் பெயர்கள் ஆரம்பிக்கப்படவில்லை. ஆக, 51-19 = 32 எழுத்துக்களில் மட்டுமே நாமாவளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் ஒரு ஸ்லோகத்தின் உள்ள எழுத்துக்களும் 32 எண்ணிக்கையே. லலிதா ஸஹஸ்ரநாமம் மூன்று பகுதிகள் உடையது. 1. பூர்வ பாகம் 2. நாமார்ச்சனா பாகம் 3. பலச்ருதி பாகம் பூர்வ பாகம் – 51 ஸ்லோகங்களும், நாமார்ச்சனா பாகம் – 182 1/2 ஸ்லோகங்களும், பலச்ருதி – 86 1/2 ஸ்லோகங்களும் கொண்டதாக அமைந்திருக்கின்றது. ஆக, மொத்த ஸ்லோகங்கள் = 320 (32ன் பத்தின் மடங்காக அமைவதைக் காணுங்கள்) ஆதியந்தம் : லலிதா ஸஹஸ்ரநாமத்தின் ஆதி (முதல்) பதம் (வார்த்தை) – ஸ்ரீ மாதா ஆயிரமாவது நாமாவளி – லலிதாம்பிகா ஆதி அன்னையாக விளங்குபவள் லலிதா அம்பிகை என்பதையும், முதலும் முடிவுமாக உள்ளதையும் லலிதா ஸஹஸ்ரநாமம் உணர்த்துகின்றது. 4. லட்சியம் : அம்பிகையிடம் - வேண்டுதலை மனதில் நினைந்து, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை, மனமார பிரார்த்தனை செய்து, இத்தனை முறை சொல்ல வேண்டும் என்று லட்சியம் கொண்டு, பாராயணம் செய்து வந்தால், அம்பிகை அந்த பிரார்த்தனையை மிக நிச்சயமாக நிறைவேற்றுவாள் என்பது ஸத்யபூர்வமான உண்மை. அம்பிகை க்ஷிப்ர ப்ரஸாதினியாக விளங்குபவள். அதாவது எளிமையான பக்தியால் கூட விரைவில் திருப்தி அடைந்து விடுபவள். லலிதா ஸஹஸ்ரநாமத்தின் பலச்ருதி மிக அருமையாக பல விளக்கங்களைத் தருகின்றது. சிவ, விஷ்ணு ரூபிணியாக விளங்குவதால், அம்பிகையை, துளசி, தாமரை, வில்வம் கொண்டு ஸஹஸ்ரநாமத்தினால் அர்ச்சிப்பது ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களை அகற்றக்கூடியது. பூக்களைக் கொண்டு அர்ச்சிக்கும் விதத்தை பாஸ்கர ராயர் அருமையாக விளக்குகின்றார். ஆயிரம் நாமாக்களையும் ஒரே வகை பூ கொண்டு அர்ச்சிப்பது பெரும் பேறு அளிக்கும். பல வகை மலர்கள் இருந்தால் தனித் தனி வகையாக அர்ச்சிப்பது மனதால் வேண்டுவதை அருளக்கூடியதாக இருக்கும். மலரின் மலர்ந்த தன்மை மாறாமல் அர்ச்சிக்க வேண்டும். மலர் எப்படி செடி கொடியில் மலர்கின்றதோ அந்த வகையிலேயே அர்ச்சிக்க வேண்டும். உதாரணமாக, செம்பருத்திப் பூ. அர்ச்சனை செய்யும் போது கையில் காம்பு கீழிருக்க, பூ மேலிருக்க அர்ச்சிக்க வேண்டும். இவ்வகை செய்வதால் வாழ்வாங்கு வாழலாம். பலவிதமான புஷ்பங்கள் கலந்திருந்தால், அவற்றை எடுத்து, புஷ்பாஞ்சலியாக நினைந்து (காம்பு கீழ் மேலாக இருந்தாலும் தோஷமில்லை) அர்சிப்பது கோடி கோடி புண்யத்தினை நல்கக் கூடியது. பழங்களைக் கொண்டு நிவேதனம் செய்யும் போது, பழங்கள் எப்படி மரத்தில் பழுத்திருக்கின்றதோ அதைப் போலவே தாம்பாளத்தில் அமைத்து நிவேதனம் செய்ய வேண்டும். உதாரணம் மாம்பழம் – மாம்பழத்தின் காம்பு மேலிருக்க, பழத்தின் நுனி கீழிருக்க நிவேதனம் செய்வது அனைத்து விதமான பாபங்களையும் நீக்கக் கூடியது. மேலும் பற்பல பலன்களை பலச்ருதி கூறுகின்றது. ஸகல விதமான நோய்கள் நீங்கும், வம்சம் விருத்தியடையும், பல அஸ்வமேத யாகங்களைச் செய்த பலன் முதலானவற்றை அடுக்கிக்கொண்டே போகின்றது. மிக விசேஷமாக பௌளர்ணமி அன்று இரவில், பௌர்ணமி நிலவை அம்பிகையாக மனதில் தியானித்து, ஐந்து வகையான உபசாரங்களோடு ஸஹஸ்ர நாமத்தினைக் கொண்டு அர்ச்சிப்பது மிக மேன்மையான பலனைத் தரக்கூடியது. பௌளர்ணமி பூஜையை மந்த்ர மூர்த்தி தீக்ஷிதர் முதலான பெரியோர்களும், தவ ஞானியரும் பௌர்ணமி பூஜையை மிக விசேஷமாகச் செய்திருக்கின்றனர். தவக்கனல், அருட்புனல், கனகாபிஷேகம் கண்ட காஞ்சி அருள்வள்ளல் ஸ்ரீ மஹா பெரியவர் பௌர்ணமி பூஜையை மிகவும் விருப்பமுடன் செய்தவர். இப்படிச் செய்வது பெரும் ஞானம் கிடைக்க வழி செய்யும் என்றவர். லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது அல்லது கேட்பது, பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று தந்த்ரராஜம் கூறுகின்றது. அனைத்து விதங்களிலும் பூரணமாக அமைந்த, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்வதால் அம்பிகையின் பரிபூரண அருள் கிடைத்திடும்.