Tuesday, November 16, 2010

கார்த்திகை தீபம் * சொக்கப்பனை

கார்த்திகை தீபம் * சொக்கப்பனை * 

06.12.2022 *  திருவண்ணாமலை தீபம்
07.12.2022 *  ஸர்வ ஆலய தீபம்

உலகமும் உயிர்களும் தோன்ற முழு முதற்காரணம் அக்னி தான் என ஆன்மீகமும், விஞ்ஞானமும் ஒத்துக் கொள்கின்றது.
"அக்னிர் ஆப:" உபநிஷதங்கள் உரைக்கும் வார்த்தை. ஆகாசம் எனும் பரந்த பால் வெளியில் இருந்து அக்னி தோன்றிய பிறகு தான் நீர் தோன்றியது. நீரிலிருந்து தான் உயிர்கள் தோன்றின.
இதே கருத்தை விஞ்ஞானமும் ஏற்கின்றது.
பெருவெடிப்பு (big bang) நடந்த பிறகு, ஒரு விசையிலிருந்து வெளியேறிய வாயுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி (மைய ஈர்ப்பு & விலகல் விசையால்) நெருப்புக் கோளமாகி, காலப் போக்கில் குளிர்ந்து கோள்கள் ஆகின. குளிர்ந்ததால் ஏற்பட்ட நீரிலிருந்துதான் ஒரு செல் உயிரினம் தோன்றி, பரிணாம வளர்ச்சி அடைந்து தற்போது மனிதப் பிறவி வரை வந்திருக்கின்றது.
ஆக, ஆதி காரணம் அக்னி எனும் உஷ்ணம் தான். பெருவெடிப்பின் தாக்கம் ஒவ்வொரு அணுவிலும் உள்ளது. உயிர்கள் அனைத்தும் உஷ்ணத்தைத் தன்னுள் கொண்டிருக்கின்றது. அந்த உஷ்ணம் அணைந்தால் உயிர் மரிக்கின்றது.
அகச்சிவப்புக் கதிர் (infra red camera) காமிரா கொண்டு பார்த்தால், உயிருள்ளவை அனைத்தும் ஒளிர்ந்து தெரியும். ஏனெனில், ஒவ்வொரு உயிர் கொண்ட உடலில் இருந்தும் வெளியேறும் உஷ்ணம் தான் அகச்சிவப்புக் கதிர் காமிராவில் பதிவாகின்றது.
ஆதி மந்திரமும், பழமையான வேதமும் ஆகிய ரிக் வேதத்தின் முதல் வார்த்தையே அக்னி என்ற வார்த்தை கொண்டே ஆரம்பிக்கின்றது. "அக்னிமீளே புரோஹிதம்".
வேதங்கள் நான்கும் அக்னியை பெரும்பான்மையான மந்திரங்களால் போற்றுகின்றன. ஆதி மனிதனின் முதல் கண்டுபிடிப்பு wheel எனும் உருளை தான் என்றாலும், அக்னியை மனிதன் கையாளத் தெரிந்தபின் தான் மனித வாழ்க்கை மென்மேலும் மேம்பட்டது.
மனிதன் முதலில் கண்டு பயம் கொண்டது இயற்கை நிகழ்வுகளைப் பார்த்து தான். அக்னியைக் கண்டு பயந்து பிறகு அதை எப்படி உருவாக்குவது என்றும் கற்றுக் கொண்டான். நெருப்பைப் பாதுகாப்பதே அக்காலத்து மனிதர்களுக்கு பெரும் வேலையாக இருந்தது. அதையே ஆராதனையும் செய்து பெரும் மதிப்பும் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
அக்னி வழிபாடே ஆதி வழிபாடு. அக்னி சுத்தமானது.
ஹோம அக்னி சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யவும் கூடியது. காற்றிலிருக்கும் கெட்ட வாயுக்களை அகற்றக் கூடியது. ஹோமம் செய்வதால் உண்டாகும் அக்னி குளோரின் போன்ற கெட்ட வாயுக்களை மேல் தள்ளக் கூடியது.
ஒவ்வொரு மனிதருள்ளும் ஒரு அக்னி இருக்கின்றது. உயிரின் உள்ளுக்குள் இருக்கும் அக்னியை மென்மேலும் தூய்மையாக்கி இறைநிலை அடைய முடியும் என்று யோக சாஸ்திரங்கள் வழிகாட்டுகின்றன.
வாழ்வினங்களுக்கு அக்னியே உயிர் போன்றது போல, இந்து மதத்திற்கு உயிர் போன்றது அக்னி வழிபாடு.
ஆலயத்தில் தீபம் ஏற்றுவது, ஹோமம் செய்வது, தீமிதி செய்வது, தெய்வங்களுக்கான தீப ஆராதனை செய்வது என்று நமது ஆன்மீக வாழ்க்கையில் அக்னி மிக முக்கியம் இடம்பெறுகின்றது.
அக்னி வழிபாட்டை வேதங்கள் பல விதங்களில் போற்றுகின்றன.
அதே போல், பண்டைய தமிழ் இலக்கியங்களும் தீப வழிபாட்டினை போற்றுகின்றன.
தமிழ்த் திருமுறைகள் அனைத்தும் ஒரே ஒரு கருத்தை அடிக்கடி சொல்கின்றன. அது இறைவன் ஜோதி வடிவானவன். ('சொற்றுணை வேதியன் சோதி வடிவானவன்', 'அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்')
வைணவ பிரபந்தங்களும் தீப வழிபாட்டைப் போற்றுகின்றன. ('வையந்தகளியா வார்கடலே நெய்யாக')
அனைத்து தேவர்களும், ரிஷிகளும், உயிரினங்களும் தீப வடிவில் (ஷோடச உபசார தீபங்கள்) வழிபாடு செய்வதாகக் கருதிதான் தெய்வங்களுக்கான தீப ஆராதனை நடக்கின்றது.
அக்னி வழிபாட்டில் மிக எளிமையானதும், பெரும் புண்ணியம் தருவதும் ஆவது தீப வழிபாடு.
ஆகவே தான் ஆலயங்களில் தீபம் ஏற்றுவது பெரும் புண்ணியத்தினையும், முக்தியையும் நல்குவதாக புராணங்கள் பகர்கின்றன.
பிரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடி காண முடியாத ஒரு பெரும் சோதியைத் தேடியதாகவும், சிவபெருமான் - தானே அந்த ஜோதி என்று பிரம்ம விஷ்ணுக்களுக்கு காட்சி அளித்ததாகவும் லிங்க புராணம் கூறுகின்றது.
ஒரு சமயம், சிவாலயம் ஒன்றில், அங்குள்ள எலி ஒன்று தன்னையும் அறியாமல் அங்குள்ள தீபவிளக்கில் திரியை மேலும் தீண்டி ஜோதியைப் பெரிதாக்குகின்றது.
இதன் பயனாகத்தான், அந்த எலி அடுத்தப் பிறவியில் மஹா பலி சக்ரவர்த்தியானதாகவும், பெருமாளின் பாதத்தால் முக்தி அடைந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
தான் என்ன செய்கின்றோம் என்பதையே அறியாத எலி ஆலய தீபத்தைச் சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்ததால் முக்தி அடைந்தது என்றால், மனதில் தெய்வ நம்பிக்கையுடன் ஆலயத்தில் ஏற்றச் செய்யும் விளக்கிற்கு மனிதர்களுக்கு பெரும் பாக்கியத்தைத் தரக்கூடியதாகும்.
தீபம் ஏற்றுவதால் அக்ஞான இருள் நீங்கி, மெய்ஞான வெளிச்சம் கிடைக்கின்றது. இதுவே உயிர்களுக்குப் பேரானந்தத்தைத் தரக்கூடியது.
தீபவழிபாடு பற்றி சங்க இலக்கியங்களில் இருந்து திருஞான சம்பந்தர் தேவாரம் வரை பல குறிப்புகள் கிடைக்கின்றன.
"மைம்மிசை யின்றி மலைவிளக்குப் போலோங்கிசெம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள்" - என்று தொல்காப்பியம் புறத்திணையும்,
"வானம் ஊர்ந்த வளங்கொளி மண்டிலம்நெருப்பெனச்சிவந்த உருப்பு அவிர் அம்கட்டு - என்னும் ஒளவையார் கூற்றும் (அகநாநூறு),
'தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே' என்று, மாணிக்கவாசகரின் மணிவாசகமும்,
ஒளிவளர் விளக்கே எனும் ஒன்பதாம் திருமுறையும்,
'கார்த்திகை விளக்கீடு காணாதே போதியோ' என்று திருஞானசம்பந்தர் தேவாரமும் தீப வழிபாட்டினைப் போற்றுகின்றன.
தீப வழிபாடு தமிழர்களின் வழிபாடு. அது பண்டைய காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்றது.
கார்த்திகை மாதம், கார்த்திகை (பெளர்ணமி) நக்ஷத்திரம் கூடிய நன்னாளின் மாலை நேரத்தில் வீடுகளில் தீப விளக்குகள் வரிசையாக ஏற்றிக் கொண்டாடப்படும்.
இந்த நன்னாளின் முக்கியத்துவத்தைக் காண்போம்.

கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசிப்பார்.
சூர்யன் அக்னிக் கோளம்.
விருச்சிக ராசி செவ்வாய் பகவானுக்கு உரியது. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்.
கிருத்திகை நக்ஷத்திரத்திற்கு உரிய தெய்வம் தெய்வம் அக்னி பகவான்.
சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பஞ்சபூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலம். அந்த ஆலயத்தில் கார்த்திகை தீபம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் கொண்டாடப்படுகின்றது. (அன்றைய தினத்தில் திருவண்ணாமலை க்ஷேத்ரத்தில் சிவனும் சக்தியும் இணைந்த வடிவாகிய அர்த்தநாரீஸ்வரருக்கு தீபம் ஏற்றிய பிறகு தான் மலை மேல் தீபம் ஏற்றப்படும்).
ஏனைய சிவாலயங்களிலும், முருகப்பெருமான் குடிகொண்ட ஆலயங்களிலும் - அந்தந்த ஆலய ஆகம மற்றும் காலம் காலமாக கடைபிடிக்கும்  வரைமுறைப்படி - ஸர்வாலய தீபமாகக் கொண்டாடப்படுகின்றது.
கார்த்திகை தீபத்தினை ஏற்றுவதும், காண்பதும் நம் வாழ்வில் ஏற்படும் இருள் எனும் துன்பங்களை நீக்கி, மகிழ்ச்சி எனும் ஒளிவெள்ளத்தை அளிக்கும் என்பது திண்ணம்.

சொக்கப்பனை :
திருக்கார்த்திகை தினத்தில் சொக்கப்பனை ஏற்றுவது வழக்கம்.
சொக்கப்பனை என்பது சொர்க்கப் பனை, சுவர்க்கப் பனை, சொக்கர் (சிவபெருமான்) பனை என்பனவற்றின் திரிபாக அறிஞர்கள் கூறுவார்கள்.
திரிபுரஸம்ஹாரத்தினையும், அடிமுடி தெரியாவண்ணம் பிரம்ம விஷ்ணுக்களுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக நம்பப்படுகின்றது.
சொக்கப்பனை - பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது.

வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது.

பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.
நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை பற்றிய முந்தைய பதிவில் மேலும் பல விஷயங்கள் தெரிவிக்க உள்ளன என்றாலும், தீபத் திருநாள் சம்பந்தமாக ஒரு அருமையான கருத்து அதில் அமைந்துள்ளது.
கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரம் அன்று புதுமணமகளைக் கொண்டு, புது தீபம் ஏற்றச் சொல்வதும், பால் காய்ச்சச் செய்வதும், மணல் படாத கார் அரிசியைக் கொண்டு செய்யப்படும் அவல் - வெல்ல இனிப்பைச் செய்து நிவேதனம் செய்வதும், தீபங்களை வீடுகளிலும், தெருக்களிலும் ஏற்றச் செய்வதும் பற்றி அகச் செய்யுள்களில் நக்கீரனார் குறிப்பிடுகின்றார்.
கார்த்திகை தினத்தன்று அவல் பொரி இனிப்பு செய்து நிவேதனம் செய்வது காலகாலமாக நடந்துவருவதை இந்தப் பழங்காலச் செய்யுள் அறிவிக்கின்றது.
தீபம் ஏற்றி சிவபதம் அடைந்தவர்களை பெரியபுராணம் (கணம்புல்ல நாயனார்) அற்புதமாக விளக்குகின்றது.
தீபம் ஏற்றுவோம் ! தீவினைகள் நீங்கப் பெறுவோம் !!
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜை
- செல் : 94434 79572, 936260299
www.facebook.com/deekshidhar
http://natarajadeekshidhar.blogspot.com

12 comments:

ர.செல்வராணி said...

//வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.// அருமையான விளக்கம்.

ர.selvarani said...

நெய் மற்றும் பிற எண்ணெய்யில் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன் பற்றி விளக்கம் அளித்தால் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

Geetha Sambasivam said...

நேத்திக்குத் தான் தெய்வத்தின் குரலில் இந்த பிக் பாங் பத்திப் பெரியவா சொல்லி இருப்பதைப் படிச்சேன். இங்கே வந்தால் நீங்களும், அதையே எழுதி இருக்கீங்க. நன்றி. உங்க வலைப்பக்கத்துக்கு என்னோட வலைப்பக்கத்திலே ஃபாலோயர்ஸ் லிங்க் கொடுக்கிறேன். உங்களை நான் ஃபாலோ பண்ணுவது உங்களுக்குத் தெரியும்.

Geetha Sambasivam said...

இது பின்னூட்டம் தொடர

buvanasankaran said...

கார்திகைதீபம் பற்றிய தங்களின் பதிவு ரொம்ப நன்னா இருந்தது.விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் கலந்து ரொம்பஅழகாகொடுத்திருந்தேள்.வேதங்கள்,உபநிடதங்கள,சங்கஇலக்கியங்கள்,தேவாரதிருவாசகங்கள் போன்றவற்றிலிருந்து மேற்கோள்காட்டி எழுதியிருந்தது ரொம்ப சிறப்பாக இருந்தது.தஙகளின் இந்தபணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

geethasmbsvm6 said...

thank you for the link.

ANGOOR said...

அருமை அருமை .....உங்களின் படைப்பை இன்ட்லி.காம் இல் பதிந்து அதிகம் பேர் படித்து பயன் பெற வேண்டுகிறேன் ....நன்றி

gv said...
This comment has been removed by the author.
gv said...

very nice details

Anonymous said...

Namaskarams Deekshidhar. Very interesting facts and quotes. I'm really amazed with your dedication on posting and sharing all these important information, sparing your time from your regular chores. My very best wishes to you to continue this.

Neyveli Ramalakshmi
(From New Jersey, USA)

baluchamy said...

thiruchitrambalam...padaippu arumai...

Unknown said...

Thank You very much sir